தன் அனுபவமாதலும் தலைப்பிடலும்
இரண்டு சிறுகதைகள்
நவம்பர் மாத இதழ்களில் படித்த கதைகளில் ஒன்று 'படிகள்'. எழுதியவர் அரவிந்தன் (அம்ருதா ) இன்னொன்று 'மதி'. எழுதியவர் பெருமாள் முருகன் (உயிர்மை). இவ்விரண்டு கதைகளை வாசித்து முடித்தவுடன் இரண்டு காரணங்களுக்காக நல்ல கதைகள் என்று தோன்றியது. முதல் காரணம் அந்தக் கதைகளுக்குக் கதாசிரியர்களுக்கு வைத்துள்ள தலைப்பும், அதன் பொருத்தப்பாடும். இரண்டாவது காரணம், அந்தக் கதைகளின் நிகழ்வுகளும் விவாதங்களும் எழுப்பிய உணர்வுகள் எனது அனுபவங்களோடு பொருந்திப்போனதும் எனலாம்.அரவிந்தனின் கதைத் தலைப்பான படிகள் என்பது, கதையின் தொடக்கம் முதல், முடிவுவரை வாசிப்பவர்களின் நினைவுகளில் பயணத்திற்கொண்டே இருக்கிறது, படிகள், படிகளில் ஏறுதல், படிகளைத் தாண்டுதல், இவ்வினைகளின்போது இருக்கும் சாகச மனநிலை, ஆபத்துகள், தேவைகள் என விவரிக்கின்றது. இவ்விவரிப்பிற்காக விளையாட்டு வீரனொருவனும் (நீலகண்டன்), நடனமங்கை ஒருத்தியும் (மாலதி) கதையின் மையப்பாத்திரங்களாக ஆகியிருக்கிறார்கள்.
இருவருக்கும் தனியடையாளத்தை உருவாக்குவது அவர்களின் கால்கள். கல்லூரியில் எல்லாவகை விளையாட்டுகளிலும் பங்கேற்பவன் நீலகண்டன். ஆபத்தில் இருப்பவருக்கு உதவும் பொருட்டுத் தனது கால்களைப் பயன்படுத்திக் கராத்தே போன்ற சாகசத் தாக்குதலை நடத்தியவன். இப்போது சிறிய கவனமின்மையால் கால்களைப் பயன்படுத்த முடியாதநிலை உருவாகிறது. அப்படியொரு நிலை உண்டாகும் நிலையில் அவனுள் ஏற்படும் எண்ண ஓட்டங்களுக்குள் படிகளைக் குறித்துப் பல நிலைகளை எழுதும் அரவிந்தன் வாசிப்பவர்களின் அனுபவங்களோடு பொருந்தச் செய்யும் மொழிநடையை உண்டாக்கியிருக்கிறார். அவனுள் தனது உடல் எடை அதிகரிப்பால் இயங்க முடியாமல் போன மாலதியின் சந்திப்பும், மனநிலையும் நீலகண்டனின் நினைவுக்குள் வருகிறது.
தொடர்ந்து அரங்கேற்றங்கள், பங்கேற்புகள், விருதுகள் எனப் பயணித்த நடனமங்கையின் உடல் பருமனாகும்போது ஏற்படும் மன உளைச்சலும் இயலாமையும் கழிவிரக்கமும் ஏறத்தாழ நீலகண்டன் கால் பிசகோடு பொருந்திப் போவதாக இருக்கிறது. படிக்கட்டுகளின் பக்கத்தில் கைப்பிடிகள் இல்லாத அரங்கொன்றில் படி ஏறும்போது மூச்சு வாங்கி ஏறி இறங்குவதை உணர்ந்து அவள் பேசுவதும், அந்த இடத்தில் அவன் உதவியதையும் நினைவுபடுத்திச் சொல்கிறாள். புதிய தலைமுறை இளைஞர்களில் இப்படி உதவுபவர்களைப் பார்க்கமுடியவில்லை என்று சொல்லிவிட்டு, அவளின் இத்தகைய மாற்றத்திற்கான வாழ்நிலையைச் சொல்கிறாள். இத்தகைய நினைவுகள் வழியாகக் கதையாக்கம் சிறப்பாகிறது என்பதைவிடவும் வாசிப்பவர்களுக்கும் அத்தகைய அனுபவம் ஏற்பட்டிருந்தால், அதனை நினைவுகொள்ளச் செய்கிறது என்பதே கதையின் ஆக்கத்திறன் சிறப்பு..
அரவிந்தனின் கதைக்கு மாறானது பெருமாள் முருகனின் கதை.
பெருமாள் முருகன் கதையின் தலைப்பான 'மதி' கதைக்குள் வரும் பாத்திரம் ஒன்றின் சுருக்கம். அந்தப் பாத்திரத்தின் முழுப்பெயர் மதியரசு. இன்னொரு மையப்பாத்திரத்தின் பெயர் முருகேசு. இருவரும் அரசு ஊழியர்கள். முருகேசுx மதியரசு என்ற எதிர்வில் முன்னவர் அலுவலகத்தில் அதிகாரி நிலையில் இருந்தவர். பின்னவர் அவரால் பாதிக்கபட்ட அடுத்த நிலை ஊழியர். இருவரின் பணி ஓய்வுக்குப் பின் -சில ஆண்டுகளுக்குப் பின் நடக்கப்போகும் சந்திப்புதான் கதையின் நிகழ்வுகள். மதியரசு தனது வீட்டுக்கல்யாணத்திற்கு தனது அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற முருகேசுவை அழைக்க வருகிறார். பணிக்காலத்தில் தன்னை மதிக்காத -பணியாற்றும்போது குற்றங்கள் கண்டுபிடித்துச் சிக்கல்கள் உண்டாக்கிய மதியரசு, வீடு தேடி வரும்நிலையில் அதனையெல்லாம் மறந்து வரவேற்கத் தயாராக இருக்கிறார் முருகேசு என்பதைக் காட்டுகிறார் பெருமாள்.
மதியரசுவின் வருகை என்ற தகவலுக்கு முன்பு முருகேசுவின் அன்றாட நிகழ்வுகள் அவரது மனைவி வசந்தியின் எரிச்சலூட்டும் செயல்களால் விவரிக்கப்படுகிறது. பணிக்காலத்தில் எதனையும் கண்டுகொள்ளாமல் வேலைக்கு அனுப்பிவைத்த முருகேசுவின் மனைவி. ஓய்வுக்குப்பின் ஒவ்வொன்றிலும் குறை காண்பவளாக மாறுகிறாள். காலையில் குளியலறைக்குப் போவதிலிருந்து அவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறாள். பணி ஓய்வுக்குப் பின் தனது மனைவி வீட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்ட அலுவலக அதிகாரியாகத் தெரிகிறாள் முருகேசுக்கு .பணியின் போது தன்னை அவமதித்த மதியரசுவின் வருகைக்குத் தனது கணவர் இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டியதில்லை என்பதைத் தனது நடவடிக்கைகளில் காட்டுகிறாள்.
மதியரசு, தனது மனைவியோடு வந்து பத்திரிகை வைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. முருகேசு அதிகாரிக்கான பணிவையும் மரியாதையையும் காட்டுகிறார். அவர் வரும்போது வீட்டிலிருக்கும் நாயில் தொல்லை இருக்கக் கூடாது என்று ஒதுக்குப்புறமாகக் கட்டி வைத்திருக்கிறார். பத்திரிகை வைத்துக்கிளம்பும்போது, நாயின் குரைப்பொலி கேட்கிறது. அப்போது நாய் வளர்ப்பு பற்றிப் பேச்சு திரும்புகிறது. அந்தப் பேச்சின் உரையாடல் இது:
அருகில் வந்த மதியரசு சாரின் மனைவி, ‘டேய், உம் பேரு என்ன? என்று நாயைப் பார்த்துக் கேட்டார். அது ‘லொள்’ என்று ஒற்றைக் குரைப்பொலியைப் பதிலாகக் கொடுத்தது.
‘அவன் பேரு மதி. அதத்தான் அப்படிச் சொல்றான் என்றார் வசந்தி.
‘என்ன பேரு?’
‘மதி’
‘ஏங்க.. இந்த நாய் பேரு மதியாமுங்க’ என்று சொல்லிக்கொண்டே கதவை நோக்கிப் போனார் மதியரசு சாரின் மனைவி.
இரும்புக் கதவை நன்றாகத் திறந்தார் முருகேசு.
கதை அத்துடன் முடிகிறது. கதையின் முடிவில் தலைப்புக்கான ஒரு பொருத்தத்தை உருவாக்கி அங்கத உணர்வை உண்டாக்குகிறது. அலுவலகத்தில் மதியரசுவால் உருவாக்கப்பட்ட மனச்சிடுக்கினால் ஏற்பட்ட வன்மத்தை -வலியைத் தீர்க்க முருகேசு உருவாக்கிக் கொண்ட ஒன்று நாய்வளர்ப்பு. அந்த நாய்க்கு அவர் இட்ட பெயர் மதி. மதியரசு என்ற அதிகாரத்தைக் காட்டிய பெயரைத் தனது நாய்க்குச் சூட்டியதின் மூலம் தனக்குள் இருந்த பழி தீர்த்தலை நிறைவேற்றியிருக்கிறார் முருகேசு. இயலாமையில் தவிக்கும் மனிதர்களின் மனதில் தங்கும் -உள்ளுறையும் கொந்தளிப்பைப் பதிவு செய்வதின் வழியாகக் கதையாக்கம் நன்றாக நிகழ்ந்துள்ளது.
இவ்விரு கதைகளையும் வாசிக்கும் போது கதையின் நிகழ்வுகள் சிலவற்றோடு எனது இருப்பும் அனுபவங்களும் பொருந்திப் போனதை நினைத்துக் கொண்டதையும் இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது. பெருமாள் முருகனின் கதையில் வரும் முருகேசுவின் ஓய்வுக்கால நடவடிக்கைகளோடு எனது நடவடிக்கைகளும் பெருமளவு ஒத்துப்போனது. எனது செயல்களால் மனைவியின் பொறுமை சோதிக்கப்படுவதை உணர்ந்துள்ளேன். அதனால் எனக்குள் ஏற்பட்ட குற்றவுணர்வுகளோடு முருகேசுவின் நடவடிக்கைகள் உண்டாக்கியவற்றைப் பொருத்திப் பார்த்துப் புரிந்துகொண்டேன். அதே போல அரவிந்தனின் கதையில் வரும் நீலகண்டனின் மனநிலையைச் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சிறு விபத்து எனக்குள் உண்டாக்கியது. குளியலறையிலிருந்து வெளியேறியபோது ஏற்பட்ட சறுக்கலில் இடது முழங்காலில் தசைச்சிதைவு ஏற்பட்டது. அது ஒரு உள்காயம். அதனால் நடப்பதில் பெரிய சிக்கல் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது வலியை உணர்ந்தேன். அதனைப் பொருட்படுத்தாமல் டெல்லிக்குப் பயணம் சென்றுவிட்டு வந்தேன். அதன் பிறகு கால் வலி அதிகமாகி இரண்டு மாதங்கள் பிசியோ தெரபி பயிற்சிகளில் இருந்தேன். கேரளாவுக்கும் சென்னைக்கும் சென்று வரும் பயணத்திட்டங்கள் எல்லாம் தள்ளிப் போடப்பட்டுள்ளன. இந்த நிலையால் எனக்குள் உருவாகியிருக்கும் மனநிலை பெருமளவு படிகள் கதைகளில் வரும் நீலகண்டனின் மனநிலையை ஒத்ததாகவே உணர்ந்தேன்.
நாம் வாசிக்கும் புனைவு எழுத்துகளின் புனைவாக்கத்திறன் என்பது நமது அனுபவங்களோடும் இருப்போடும் ஒத்துப்போகும் நிலையில் கூடுதல் வாசிப்பு ஈர்ப்பை உண்டாக்கிவிடுகின்றன. பெருமாள் முருகனின் மதியும், அரவிந்தனின் படிகளும் அப்படியொரு அனுபவத்தையும் எனக்குள் உருவாக்கின என்பதும் உண்மை.
A COLLAGE PERFORMANCE AS CAMPUS EVENT
எழுத்தாளர் ஒருவரின் புனைவுகளிலிருந்தோ, புனைவல்லாத பனுவல்களிலிருந்தோ, எழுத்தாளரின் தன்னிலையையும் எதிர்காலம் பற்றிய பார்வையையும் நோக்கங்களையும் கண்டறிய முடியும். அவற்றைத் தன்வரலாற்றுத் தொனியில் - தனிமொழியாக (monologue ) எழுதிக் கொள்ளலாம். அத்தகைய தனிமொழியோடு, எழுத்தாளரின் புனைவுகளை நிகழ்வுகளாக்கி எழுத்தாளரின் வாழ்க்கைக்கதையின் சில கீற்றுகளை நிகழ்த்திக் காட்ட முடியும். தமிழில் அப்படியான முயற்சிகளை ஆவணப்படங்கள் சிலவற்றில் பார்த்திருக்கிறேன். ஆனால் மேடைநிகழ்வில் - நாடக நிகழ்வாகப் பார்த்ததில்லை.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த அம்பை -80 நிகழ்வையொட்டி அம்பையின் வாழ்க்கை நோக்கையும் இலக்கியப்பயணத்தையும் மேடை நிகழ்வாக நடத்தினார்கள். அதற்கு அவரது புனைவல்லாத எழுத்துகளான நேர்காணல்கள், கட்டுரைகள் ஆகியனவற்றோடு வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான், சிறகுகள் முறியும், பயணம் சார்ந்த கதைகள் போன்றவற்றிலிருந்து நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டன. மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் எனப்பல நிலையில் இருப்பவர்களையும் இணைத்து இயக்கியிருந்தார் இயக்குநர். ஒரு நிகழ்வு ஆங்கில உரையாடல்களைக் கொண்ட காட்சியாகவும் இருந்தது.
கதை நிகழ்வுகளை இணைக்கும் விதமாகக் கிரேக்க நாடகங்களில் குழுவினர் பயன்படுத்தப்படுவார்கள். அதே உத்தியைப் பயன்படுத்தி வெவ்வேறு கதைகளின் நிகழ்வுகள் இணைக்கப்பட்டன. அவ்விணைப்பு இசையோடு கூடிய அசைவுகளாலும் கைப்பொருள்களோடு கூடிய நடனக் கோர்வைகளாலும் உருவாக்கப்பட்டிருந்தது. அவை பார்வையாளர்களுக்கான ஈர்ப்பைத் தக்கவைப்பவை. அவற்றோடு அக்கல்லூரியின் செங்கல்கட்டிடம் என்ற பின்னரங்கச் சுவர்களைக் காட்சிக்கேற்பப் பயன்படுத்தியதுடன், தரைத்தளத்தையும் முதல் மாடிப் பால்கனிகளையும் பயன்படுத்தினார்கள். அதற்குத் தேவையான ஒளியமைப்பும் இசையும் உணர்வூட்டுவன இருந்தன.
பெரும்பாலான பாத்திரங்களை மாணவ, மாணவிகள் ஏற்றுச் செய்தனர். அம்பையாகத் தமிழ்த்துறையின் ஆசிரியர் முனைவர் கலைவாணி நடித்திருந்தார்.
நிகழ்வை இயக்கிய அ.ராஜன் இலக்கியத்தோடு நாடகக் கல்வியையும் முறையாகக் கற்றவர் என்பது நிகழ்வை ஒருங்கிணைத்ததில் வெளிப்பட்டது. நீண்டகாலமாக ஆங்கிலத்தில் நாடகங்களை மேடையேற்றும் பாரம்பரியம் கொண்டது அமெரிக்கன் கல்லூரியின் ஆங்கிலத்துறை. அதன் தாக்கத்தோடு அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையும் கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழ் நாடகங்களை மேடையேற்றி வருகிறது. சில ஆண்டுகளில் மேடையேற்றங்கள் இல்லையென்ற போதிலும் பயிற்சிகளுக்கான பட்டறைகளை நடத்துவதும் சின்னச் சின்ன நிகவுகளை நிகழ்த்துவதும் என்பது தொடர்கிறது. அதன் நீட்சியில் அம்பை -80 ஒட்டி நிகழ்ந்த -A PENCIL'S SILENT REVOLUTION என்ற நிகழ்வு முக்கியமானதொரு நிகழ்வு. மதுரையின் நாடக விரும்பிகள் இதுபோன்ற நிகழ்வுகளின் பார்வையாளர்களாக மாறுவதின் மூலம் அமெரிக்கன் கல்லூரியின் முயற்சிகளுக்கு உற்சாகம் ஊட்டமுடியும்.
கருத்துகள்