கவி சல்மா

நண்பர் சேரனோடு கீழடிக்குப் போகும் திட்டத்தில் அம்பை -80 நிகழ்வில் உரையாற்றுவதற்கு வந்திருந்த கவி. சல்மாவும் சேர்ந்துகொண்டார். காலடி அருங்காட்சியகம் திராவிட முன்னேற்றக்கழகத்தின் முக்கிய சாதனைகளில் ஒன்றாகக் கீழடியைத் திமுகவினர் கருதுகின்றனர் என்பதால் அவரது விருப்பம் ஆச்சரியம் ஊட்டவில்லை.

எப்போதும் எங்கள் சந்திப்பில் பயணங்கள் பற்றிய பேச்சு தவிர்க்க முடியாததாக இருந்துள்ளது. அன்றும் அப்படித்தான் உரையாடல்கள் நிகழ்ந்தன. வாகனத்தில் போகும்போதும் வரும்போதும் கீழடியில் தேநீர்க்கடையில் அமர்ந்திருந்தபோதும் என்னோடு பேசியதெல்லாம் பயணங்களைப் பற்றித்தான்.
இலக்கிய விழாக்களில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குச் சென்றவர் அவர். அதேபோலப் பலநாடுகளில் நடக்கும் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் உறைவிட எழுத்துக் கூடுகைகளுக்கும் சென்றவர். அவரளவுக்கு எனது பயணங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இலங்கைக்குள் எனது பயணங்கள் விரிவானவை. எனது உள்நாட்டுப் பயணங்களும் அயல்நாட்டுப் பயணங்களும் பெரும்பாலும் கல்விப்புலம் சார்ந்த பயணங்கள். கருத்தரங்குகளில் பங்கேற்க, தேர்வுக்குழுக்கள், பாடத்திட்டங்கள், தேர்வுகள், வினாத்தாள் முறைப்படுத்துதல் போன்ற வேலைகளை ஒட்டித் திட்டமிடும் பயணங்களே முன்பு அதிகம். மகனும் மகளும் கனடாவிலும் அமெரிக்காவிலும் இருப்பதால் அந்நிலப்பரப்புகளில் விரிவான பயணங்களைச் செய்திருக்கிறேன். இதுபோன்ற வேலைகளோடு நண்பர்களைச் சந்திப்பதற்காகக் கூடுதல் நாட்கள் தங்கிய நாடு இலங்கை. அடுத்த பயணத்தை இலங்கைக்குச் செல்லும் பயணமாகத் திட்டமிடுங்கள் என்று சொல்லிப் பயண வரைபடம் ஒன்றைச் சொன்னேன். பயணங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும்போது அவர் எழுதிய பயணம் பற்றிய கவிதையின் வரிகள் நினைவில் ஓடிக்கொண்டிருந்தன . மாலையும் இன்னொரு மாலையும் தொகுப்பிலிருக்கும் அந்தக் கவிதையத் தேடியெடுத்து வாசித்தேன்:
பயண நேரம்
================
பயணம் நிகழ்கையில்
ஜன்னலோர இருக்கை வாசிகள்
அதிர்ஷ்டசாலிகள்
சீறும் காற்று
முடியைக் கலைக்கவும்
கண்ணில் தூசு விழவுமாய்
அசௌகர்யங்கள் இருந்தாலும் கூட
மனிதருள்,
இயற்கையுள் நுழைய
வேண்டும் ஜன்னலோர இருக்கைகள்
பாதையோரத்தில்
இடிந்து கிடக்கும்
ஒற்றைச் சுவர்
என்னவாய் இருந்திருக்கும்?
அது ஓர்
அச்சம் தரும் நினைவு
முடிவு நேரம் அறிவிக்கப்படாத
பயணம் துரிதப்படுத்துகிறது
எல்லாவற்றையும் முடிக்க
ஏதொன்றுமே
முடிவடைவதில்லை.
பயணம் முடியும் வேளை
தகிக்கும் நிறைவின்மை
அச்சுறுத்துகிறது அனைவரையும்
சமயத்தில் எரிக்கிறது
எல்லாவற்றையும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எழுத்தாளர்களின் உளவியலும் தன்னிலையும் : இமையம் - தி.ஜானகிராமன்- ஜெயகாந்தன்

பிக்பாஸ் -8. ஐம்பது நாட்களுக்குப் பின் ஒரு குறிப்பு

தங்கா்பச்சான்: சொல்ல விரும்பாத கதைகள்