இவை குறியீட்டு உத்திகள்
நமது காலம் ஊடகங்களின் காலம். ஊடகங்களுக்குப் பெருந்திரள் போராட்டங்களைவிடக் குறியீட்டுப் போராட்டங்கள் வசதியானவையாக இருக்கின்றன. ஒத்திகைப் பார்த்த காட்சிகளோடு கூடிய குறியீட்டுப் போராட்டங்களைப் பல கோணங்களில் காட்சிப்படுத்த முடிகிறது. நேர்நிலையிலும் எதிர்நிலையிலும் விவாதங்களை உருவாக்க முடிகிறது. அதன் வழியாக உருவாகும் அரசியல் சொல்லாடல்களைப் பெருந்திரளிடம் - வாக்காளர்களிடம் நீண்டகாலத்திற்குப் பதிய வைக்க முடிகிறது. அந்த வ'கையில் அண்ணாமலையின் 'சாட்டையடிப்போராட்டம்' காலத்திற்கேற்ற வடிவம் என்றே சொல்வேன்.
பகுத்தறிவோடும் நவீனத்துவப் பார்வையோடும் அரசியல் இயங்க வேண்டுமென நினைப்பவர்களுக்குப் பா.ஜ.க.வின் மாநிலத்தலைவரின் போராட்ட வடிவங்கள் நகைப்புக்குரியனவாகத் தோன்றலாம். இந்தியாவின் தேர்தல் அரசியலைச் சமகாலப்புரிதலோடும் நவீன வாழ்க்கையின் அர்த்தத்தோடும் அந்தக் கட்சி அணுகவில்லை. எப்படியும் வெற்றி என்ற கீதையின் உபதேசப்படியும் சாணக்கிய நீதியின்படியும் தேர்தலை அணுகுகிறது .
பா.ஜ.க.வின் தேர்தல் நகர்வுகள் வாக்கு வங்கியின் பொது உளவியலைச் சரியாகத் திட்டமிட்டுக்கொண்டு அதற்கேற்ற உத்திகளைத் தேர்வு செய்வதாக இருக்கிறது. தேசியக்கட்சியாக இருந்தபோதிலும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் பரப்புரைகளை மாற்றுகிறார்கள். ஒரு மாநிலத்திற்குள்ளேயே மாவட்ட எல்லைக்குள்ளும் ஒரு தொகுதிக்குள்ளும் வேறு உத்திகள் பின்பற்றப்படுகின்றன. அதன் பின்புலத்தில் இருப்பது சாதியவாதக் கணக்கும் மதவாதக் கணக்குகளும் மட்டுமே.
தமிழ்நாட்டில் வெற்றி பெறுவதற்கான அரசியலை முன்னெடுப்பதைத் தவிர்த்துவிட்டு, இரண்டாமிடம் நோக்கிய நகர்வுகளே இப்போது அதன் இலக்குகள்.
தனது வாக்குவங்கியின் பொதுமனம் சடங்குகள், நம்பிக்கைகள், சாதிப் பெருமைகள், மதப் பெரும்பான்மை வாதம் கொண்டவர்களால் ஆனது என்பதைத் திட்டவட்டமாக அறிந்து செயல்படுகிறார்கள். அத்தோடு தமிழகம் பகுத்தறிவு பேசும் கட்சிகளின் வெளி அல்ல என்பதை நிரூபிப்பதும் பா.ஜ.க.வின் முதன்மையான இலக்கு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இந்தியச் சாதிய மனம், தன்னை வருத்திக்கொண்டு கடவுளிடம் மன்றாடினால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கையில் இயங்கும் தன்மை கொண்டது. கிராமியத் தெய்வங்களை வணங்குபவர்களின் நம்பிக்கையோடு தொடர்புடையவை இந்த அடையாளங்கள். செருப்பணியாமல் நடத்தல், சாட்டையால் தன்னையே அடித்து வருத்திக்கொள்ளுதல் போன்றன இயல்பான வடிவங்களாக உள்ளன. சாட்டையால் மட்டுமல்ல இதைவிடக் கூடுதலாக வருத்திக்கொள்ளும் சடங்குகள் எல்லாம் உள்ளன. பெருந்திரளாகச் சௌடாம்பிகைக்கு முன்னால் கத்தியால் மார்பிலடித்துக் காயப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் வரிசையாக நிற்க வைத்துத் தேங்காயைத் தலையிலடித்து உடைக்கும் வழிபாடுகள் இருக்கின்றன.
பொதுமனத்தின் போக்கோடு மட்டுமல்லாமல், தனித்தனி சாதிகளின் நம்பிக்கைகளை உள்வாங்கிப் போராட்ட வடிவங்களைத் தேர்ந்தெடுத்துக் கட்சிக்காரர்களுக்குப் பயிற்சி அளித்துக் களம் இறக்கும் பணியைத் திருவாளர் அண்ணாமலை செய்யக்கூடும். பகுத்தறிவுப் பார்வையோடு வைக்கும் விமரிசனங்களை அவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள். இவையெல்லாம் அண்ணாமலையின் தேர்தல் உத்திகள்
கருத்துகள்