புதுவையின் கடலோரத்திலிருந்தேன்


பாண்டிச்சேரியைப் புயல் தாக்கப் போகிறது என்று செய்திகள் வரும்போதெல்லாம் இந்தப் பதற்றம் உண்டாகிவிடும். புதுச்சேரியின் வழியாகவும் அதனையொட்டியிருக்கும் தமிழ்நாட்டின் பகுதிகள் வழியாகவும் புயல் கரையைக் கடந்து மழையாகக் கொட்டித் தீர்த்துள்ளது. புதுச்சேரி வாழ்க்கையின் தொடக்கத்தில் அடிப்படையான உணவுப்பொருட்களை கோட்டகுப்பத்திலிருந்துதான் பெற்றுக்கொள்வேன்.
கோட்டக்குப்பத்தின் பக்கமாக இருந்த சோலைநகர் கடற்கரையிலிருந்து மீனும் கோட்டக்குப்பம் இறைச்சிக் கடைகளிலிருந்து ஆட்டுக்கறியும் கோழிக்கறியும் வாங்குவேன். இசுலாமியர்கள் அதிகம் வாழும் அந்தப் பகுதியில் இந்தவகைக் கடைகள் அதிகம் உண்டு. இப்போது அந்தப் பகுதி மொத்தமும் பெருமழை நீருக்குள் இருப்பதைத் தொலைக்காட்சியில் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னாலும் அப்படியொரு பதற்றம் இருந்தது. ஏனென்றால் , "இன்றிரவு நிவர் புயல் கரையைக் கடக்கும்" எனத் தொடர்ச்சியாக வானிலை அறிக்கைகள் சொல்லிக்கொண்டிருந்தன. அப்போதும் புயலின் இருப்பையும் சுழற்சியையும் பற்றிய குறிப்புகளிலும் விவரணைகளிலும் புதுச்சேரியென்னும் பாண்டிச்சேரி உச்சரிக்கப்பட்டது.
மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே கரையைக் கடக்கும்போது கடலோர நகரங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகலாம். அப்படியான பெருநகரங்களில் ஒன்றாக இருக்கிறது புதுச்சேரி. அதனை அடுத்த பெருநகரம் கடலூர். இந்தமுறை கடலூருக்குப் பெரும்பாதிப்பு இல்லை. ஆனால் புதுச்சேரி தப்பவில்லை.
கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுநிலை கரையை நோக்கி நகரும்போது ஏற்படுத்தும் ஒலியின் ஓசையையும் மரங்களின் சுழற்சியையும் எழுத்திலும் சொல்லிலும் உணர்த்த முடியாது. நேரடியாக அனுபவித்தால் தெரியும். அப்படியொரு அனுபவத்தைப் பாண்டிச்சேரி எனக்குத் தந்தது. பாண்டிச்சேரி பல்கலைக்கழகப் பணிக்காக1989 இல் சேர்ந்தபோது பார்த்த வீடு கடலோரத்தில் தான் இருந்தது. முத்தியால் பேட்டையில் அங்காளம்மன் நகர் என அதன் முகவரி இருந்தாலும் உள்ளூர்க்காரர்கள் அதனை அங்காளங்குப்பம் என்றுதான் சொல்வார்கள்.
பாண்டிச்சேரியின் குப்பங்கள் எல்லாம் மீனவர்களின் வெளி.பிள்ளையார் குப்பத்தில் தொடங்கிக் கடற்கரையோரத்தில் கோட்டக்குப்பம் வைத்திக்குப்பம், அரியாங்குப்பம், என நீண்டு மஞ்சக்குப்பம் எனக் கடலூர் வரை குப்பங்கள் உண்டு. வங்கக் கடலோரப் பகுதியான அங்காளங்குப்பம் என்னும் அங்காளம்மன் நகர், மீனவர்களோடு ஷொல்தாக்களும் வாழும் பகுதி. முழுமையான பிரெஞ்சியர்கள் வாழும் பாண்டிச்சேரியின் வெள்ளை நகரம் போன்றதல்ல அங்காளம்மன் நகர். பிரெஞ்சியர்களின் மனநிலை கொண்ட இந்தியர்களான ஷொல்தாக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. ஷொல்தாக்கள் ஒரு விதத்தில் இரட்டைக்குடியுரிமை பெற்றவர்கள்

வாடகை வீடுகளில் அதிக நாட்கள் குடியிருந்த வீடு என்றால் 46, அங்காளம்மன் நகர் வீடு தான். பாண்டிச்சேரி கடலோரக் கிராமங்களில் ஒன்றாக இருந்த முத்தியால் பேட்டையின் ஓரத்துத்தெரு ஒன்றின் மாடி வீடு. முத்தியால் பேட்டை, அங்காளம்மன் நகரை, நகரத்தின் பகுதி என்று சொல்ல விடாமல் தடுத்தவை அங்கிருந்த தென்னந்தோப்புகளும், எருமைக் கூட்டங்களும், மீன் வாடையும் தான். காலையில் நடைப்பயிற்சிக்காக இரண்டு கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதற்குள் ஐந்து தென்னந்தோப்புகள் வந்துவிடும். எப்போதாவது கொஞ்சம் பாதை விலகிச் சென்றால் மீனவர் குப்பங்களுக்குள் நுழைந்து கருவாட்டை மிதிக்காமல் செல்லப்படாதபாடு படவேண்டும்.
கடற்கரை மணலையும் கடல் அலைகளையும் ரசிக்கலாம் என்றால் அதுவும் முடியாது. கடலோர குப்பத்து வாசிகள் கடற்கரை மணல் பரப்பைத் தான் தங்கள் கழிப்பிடங்களாகக் கருதிக் குந்தியிருப்பார்கள். பூட்டிய கக்கூஸில் காலைக் கடன் கழித்துப் பழகிப் போன நடுத்தர வர்க்க மனத்திற்குப் பரந்த வெளியில் மலஜலம் கழிப்பது சட்ட விரோதமாகத் தோன்றுவது ஆச்சரியமான ஒன்றல்ல.
கீழே வீட்டுச் சொந்தக்காரரும் மாடியில் நாங்களும் இருந்தோம். வீட்டின் முன்னால் போகும் மண் சாலையைத் தாண்டினால் 100 தென்னை மரங்களும் 25 எருமை மாடுகளும் கொண்ட பள்ளம் ஒன்று உண்டு. அந்தத் தென்னந்தோப்பு மறைக்கவில்லை என்றால் கடலில் படகுகள் போவது தெரியும். அமைதியான நாட்களில் 10 மணிக்கு மேல் கடலின் இரைச்சலும் காலையில் மீனவர்கள் வந்து இறங்கும்போது படகைத் தள்ளும் ஐலேசா ஐலேசா ஓசையும் கேட்கும். நேரடியாக அவர்களிடமே மீன் வாங்கலாம் என்று நினைக்கும் போது காலை நடையை அங்கே திருப்பி விடுவதும் உண்டு.
பாண்டிச்சேரிக்குப் போன இரண்டாவது ஆண்டு -1991, நவம்பரில் புயலால் தாக்கப்படும் அபாயம் இருப்பதாக மூன்று நாட்களுக்கு முன்பே வானொலிச் செய்திகள் கதற ஆரம்பித்து விட்டன. நாகப்பட்டினத்திற்குக் கிழக்கே புயல் மையம் கொள்ளத் தொடங்கி வடமேற்காக நகர்ந்துகொண்டிருப்பதாக அறிவிப்புகள் வந்துகொண்டே இருந்தன. இப்போது சொல்வதுபோல கடலூர், பாண்டிச்சேரி, சென்னை என கடலோர நகரங்கள் தாக்கப்படும் பட்டியலில் இருந்தன. அறிவிப்பு வரத்தொடங்கிய நாளிலிருந்தே கடலைப் பார்க்கும் ஆசையும் கூடிக்கொண்டே இருந்தது.
காலையும் மாலையுமாக நடையைக் காந்தி சிலைக்கு அருகில் நடந்துவிட்டு அடுத்தநாள் அங்காளங் குப்பத்தைத் தாண்டி மீனவர்கள் குடியிருக்கும் வைத்திக்குப்பத்திற்குள் நுழைந்து கடலோர மணலில் நடக்கத் தொடங்கும்போது செருப்புகளைக் கையில் தூக்கிக் கொள்ளவில்லை. ஈரமண்ணில் கால்கள் பதியவில்லை. காற்று பலமாக வீசியது. மேகங்கருத்துத் தொங்கியது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை இல்லை.
அப்போது புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை நகரின் மையத்தில் ரங்கப்பிள்ளை வீதியில் இருந்தது. சைக்கிளில் கிளம்பும் போதே மழை ஆரம்பித்துவிட்டது. நனைந்தபடியே போக வேண்டும். வேட்டியைக் கட்டிக் கொண்டு சைக்கிளில் போய் தலையைத் துவட்டி விட்டுப் பையிலிருந்த உடைகளை மாற்றிக்கொண்டு மதியம் வரை இருந்தேன். மதியத்திற்குப் பிறகு துறைக்கு வரவேண்டியதில்லை எனத் துறைத்தலைவர் இந்திரா பார்த்தசாரதி சொல்லிவிட்டார். திரும்பவும் வேட்டிக்கு மாறி வீடுவந்து சேருவதற்குள் படாதபாடாகி விட்டது. சைக்கிளை மிதிக்கவே முடியவில்லை. மழையின் வேகம் கல்லெறிபோல விழுந்தது. இரண்டு கிலோமீட்டர் தூரம். அஜந்தா தியேட்டரிலிருந்து உள்சந்து வழியாகச் சைக்கிளை உருட்டியபடி நனைந்தபடி வீடுவந்து சேர்ந்தேன்.
மாடியின் பால்கனியில் உட்கார்ந்து கிழக்கே பார்த்தால் 100 தென்னை மரங்களும் நூறுவிதமாய் ஆட்டம் போட்டன. எருமை மாடுகளின் கதறல் கூடி விட்டது. தோப்பைச் சுற்றிக் கம்பி வேலி இருந்ததால் அறுத்துக் கொண்ட மாடுகள் வெளியே போயிருக்காது. ஆனால் மாட்டுக்காரர் கோணிச் சாக்கைப் போட்டுக்கொண்டு சுற்றிச்சுற்றி வந்தார்.
காற்றின் வேகம் இருட்டோடு சேர்ந்து கூடியது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருட்டின் தீவிரத்தைத் தென்னை மரங்களின் ஆட்டம் கூட்டின. இரவெல்லாம் மாடுகளின் காட்டுக் கத்தல். சாளரங்கள் மரக்கதவுகள் என்பதால் கெட்டியாக அடைத்துக் கொண்டன. என்றாலும் இடுக்குகள் வழியாக நுழைந்த காற்று விசிறியடித்து விசில் போட்டது. அரிசியை வறுத்துப் பாட்டிலில் வைத்திருந்து பிள்ளைகளுக்குத் தந்தார் மனைவி. குளிருக்கு இதமான சூட்டில் மென்று கொண்டிருந்தோம்.
மின்சாரம் இல்லாததால் மெழுகுவர்த்தியும் டார்ச் விளக்கும் மட்டுமே பயன்பாட்டில். அன்றிரவும் கரையைக் கடக்கவில்லை. ஆனால் பாண்டிச்சேரியைக் கடந்து வடக்கே நகர்ந்து விட்டது. சென்னைக்கு ஆபத்து என்று செய்திகள் மாறின, என்றாலும் அடுத்தநாள் பகலும் இரவும் மழை நிற்கவில்லை. மூன்றாவது நாள் கரையைக் கடந்தது. திசைமாறித் திசைமாறி ஆந்திராவின் நெல்லூரைத் தாக்கியது. வங்கக்கடலில் 600 கிலோமீட்டருக்கு அப்பால் ஆரம்பிக்கும் பெரும்பாலான புயல்கள் தமிழ்நாட்டுக்கு மழையையும் ஆந்திராவிற்குக் காற்றையும் சூறாவளியையும் தரும் என்று பேசிக்கொண்டார்கள். அந்தச் சோதிடம் எப்போதும் உண்மையாக இருப்பதில்லை.
2004 இல் கடலூரைத் தாக்கிய 'தானே' புயலின் போது நான் அங்கு இல்லை. ஆனால் கடலூரைத் தாக்கிய தானே புயலுக்குப் பின்னால் அந்த நகரத்திலும் அதனைச் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் பயணம் செய்து பார்த்த நாட்கள் நினைவில் இருக்கின்றன.
இயற்கையின் போக்கை என்ன செய்யமுடியும்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எழுத்தாளர்களின் உளவியலும் தன்னிலையும் : இமையம் - தி.ஜானகிராமன்- ஜெயகாந்தன்

பிக்பாஸ் -8. ஐம்பது நாட்களுக்குப் பின் ஒரு குறிப்பு

தங்கா்பச்சான்: சொல்ல விரும்பாத கதைகள்