கிறிஸ்துமஸ் நினைவுகள்

2023,டிசம்பர். 25 / ஒலியும் வழியுமாக இருக்கும் ஆலயமணி

ஏஜி சர்ச் என்பதைச் சொல்லியே என் வீட்டின் அடையாளத்தைத் தொடங்குகிறேன். அதன் விரிவு அசெம்பிளிஸ் ஆப் காட்ஸ் ( ASSEMBLIES OF GODS) என ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படும் பெத்தேல் ஏசு சபை. சிலுவையின் உச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் மணிக்கூண்டில் ஆலயமணியெல்லாம் இல்லை. மின்கலத்தில் நகரும் பெரியதொரு கடிகாரம் இருக்கிறது. ஒவ்வொரு மணிக்கும் அதன் எண்ணிக்கையில் மணி அடித்து ஓய்ந்தபின் பைபிள் வாசகம் ஒன்றைச் சொல்லி முடிக்கும். இரவு 11 மணிக்குப் பிறகு இந்த நடைமுறையை நிறுத்திக் கொண்டு, அடுத்த நாள் காலையில் ஐந்து தடவை அடித்துத் துயில் எழுப்பி ஒரு வாசகத்தைச் சொல்லும் ஆரம்பத்தையும் முடிவையும் காதுகொடுத்துக் கேட்டுக்கொள்கிறேன். இடையில் அடித்துமுடிக்கும் மணியோசைகளை நான் செவிமடுப்பதில்லை. வசனங்களைக் கேட்டுக்கொள்வதுமில்லை.

திருமங்கலத்தில் நானிருக்கும் இடத்தின் நகர்ப்பகுதிக்கு முகமதுஷாபுரம் என்று பெயர். அதன் மேற்குப் பகுதியில் ஒரு மசூதி இருக்கிறது. கிழக்குப்பகுதியில் தேவாலயம் இருக்கிறது. தெற்கிலும் வடக்கிலும் சின்னச்சின்னதாகக் கோயில்கள் இருக்கின்றன. என் வீட்டைத் தேடி வருபவர்களுக்குப் பெரும்பாலும் இந்தத் தேவாலயத்தின் வழியாகவே வழிகாட்டுகிறேன்.

அலைபேசிகள் வந்தபிறகு இந்தப் பழக்கம் எல்லாரையும் தொற்றிக் கொண்டுவிட்டது. கையில் முகவரி இருந்தாலும் அதனைத் தேடி வருவதற்குப் பதிலாக எங்காவதொரு இடத்தில் நின்றுகொண்டு எப்படி வரவேண்டும் எனக் கேட்கிறார்கள். ஒரு தடவை அல்ல; இரண்டு மூன்று திருப்பங்களின்போதும் கேட்கிறார்கள். பாதையைக் கேட்டுக் கொண்டுதான் வருகிறார்கள். ஆள் அஞ்சல் நடைமுறைக்கு வந்த புதிதில் கடிதங்கள் மட்டுமே வந்துகொண்டிருந்தன. இப்போது வணிகச் செயலிகள் வழியாகத் தேவையான பொருட்களை வாங்கத் தொடங்கிவிட்டதால் அவ்வப்போது அலைபேசியில் வழிசொல்ல வேண்டியிருக்கிறது. இருசக்கர வாகனங்களில் பொருட்களைக் கொண்டுவரும் எவரும் எழுதப்பட்ட முகவரியைத் தேடிவந்து கொடுப்பதில்லை. கூகிள் செயலியின் வரைபடத்தைத் தேர்வுசெய்து முயற்சி செய்தால் முகவரியின் துல்லியமான இடத்திற்குக் கொண்டுவந்து சேர்க்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருப்பதில்லை. அதனால் அலைபேசியில் கேட்டுக்கேட்டு வருகிறார்கள். கேட்பவர்களுக்கு அந்தத் தேவாலயத்திலிருந்தே எனது அடையாளத்தைச் சொல்லத் தொடங்குகிறேன். காலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைத் தாண்டிப்போனபோது கூட்டமாய் இருந்தது. இப்போது கூட்டம் எதுவும் இல்லை வண்ணமயமான ஒளியோடு ஜ்வலித்துக் கொண்டிருக்கிறது.

எனது வாழ்நாளில் மூன்றில் இரண்டு பங்கு ஆண்டுகளின் வாழ்நாள் நகரம் பாளையங்கோட்டை கிறிஸ்துவுக்குள் ஐக்கியமான நகரம். டிசம்பர் தொடங்கி விட்டாலே வண்ணவண்ணமாய் நட்சத்திரங்கள் வீடுகளின் முகப்பில் தொங்க ஆரம்பித்துவிடும். கிறிஸ்துமஸுக்கு முந்திய இரவு 12 மணிக்கு முன்பே தெருக்களில் இறங்கி நடக்க ஆரம்பித்து விடுவார்கள். 12 மணிக்குப் பிறகு நள்ளிரவு ஜெபங்கள் ஆரம்பமாகும். 2016 இல் கிறிஸ்துமஸ் நாளின் இரவில் பாளையங்கோட்டையை வலம் வந்தேன். பனியிலிருந்து பாதுகாக்க ஒரு குல்லாவும் சூடுகிளம்பும் பனியனும் அணிந்துகொண்டு கிளம்பியபோது 10 மணி முக்கியசாலைகள் வழியாக இருசக்கர வாகனத்தில் 2 மணிநேரப் பயணம். பேராலயங்கள் கிறிஸ்துமஸுக்குத் தயாராகும் நிலையைப் பார்த்து வரலாமெனக் கிளம்பினேன்.

நானிருந்த கட்டபொம்மன் நகரில் தொடங்கி சாந்திநகர், ரஹ்மத் நகர், சமாதானபுரம், ஊசிக் கோபுரம் வரை போய்த் திரும்பிப் பாளையங் கோட்டை, பெருமாள்புரம், தியாகராஜநகர் வந்தபோது தேவாலயங்களுக்குள் மக்கள் வர ஆரம்பித்து விட்டனர். திரும்பவும் வந்த பாதையில் திரும்பியபோது ஆராதனைகளும் சங்கீதங்களும் வாசிப்புகளும் கேட்கத்தொடங்கின. அப்படியொரு முயற்சியைத் திருமங்கலத்தில் செய்யவில்லை. ஏழாண்டுகள் இருந்த புதுச்சேரியின் தேவாலயங்களைக் கிறிஸ்துமஸ் நாட்களில் பார்ப்பதை விரும்பிச் செய்ததுண்டு. வார்சாவில் இரண்டு ஆண்டுகளும் கொட்டும் பனிக்கட்டிகளினூடாகத் தேவாலயங்களுக்குள் நுழைந்து வெளியேறியிருக்கிறேன்.
 
இது வரை நான் பார்த்த கோயில்களின் எண்ணிக்கையைவிடத் தேவாலயங்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன். ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் கட்டிடக்கலையின் வேறுபாடு களைக் காட்டிய தேவாலயங்கள் விதம்விதமானவை. வாழிடங்களில் வேறுபாடுகளை அதிகம் காட்டிக் கொள்ளாத அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் தேவாலயங்களின் வடிவங்களை விதம்விதமாகக் கட்டியெழுப்புகிறார்கள்.
 
நான் நுழைந்த தேவாலயங்களில் இப்போதும் நினைவில் இருக்கும் ஆலயங்களில் மறக்கமுடியாதது இலங்கையின் மன்னார் மாவட்ட மடுக்கோயில் ஆலயம் தான். வவுனியாவுக்கும் மன்னாருக்கும் இடையில இருக்கும் மடுக்கோயில் - ஆவே மரியா கதாதோலிக்க ஆலயம். ஆடி .2, ஆவணி. 15 நாட்களில் மாதாவுக்கு விழா எடுக்கும் முதன்மையான நாட்கள். வழக்கமான கிறிஸ்தவமப் பண்டிகை நாட்களல்லாமல் இந்நாட்களில் இங்கு மட்டும் விழா நடக்குமாம். 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை சனங்கள் திரளும் இடம். 5500 பரப்பளவில் விரிந்த காட்டு நிலப் பகுதிக்குள் சின்னச்சின்னக் கிராமங்கள் இருக்கின்றன. 

உலகப்பரப்பிற்குள் இயங்கும் கிறித்தவத்தின் கிளைபோல அல்லாமல் , தமிழ்க்கிறித்தவமாக மன்னார்ப் பகுதியில் கிறித்தவ ஆலயங்கள் இருக்கின்றன. எண்ணிக்கையில் கிறித்தவர்களே அதிகம். பெரும் குளமொன்றும் விரிந்து கிடக்கின்றது. நீர்ப்பரப்பும் கடல்போல. மன்னார் குடாவிலிருந்து தலைமன்னார் 25 கிலோமீட்டர்தான். தலைமன்னார் போய் நின்று கலங்கரை விளக்கம் பார்த்துவிட்டுக் கொஞ்சம் எட்டிப் பார்த்தால் ராமேஸ்வரம் கோயில் கோபுரம் தெரியும் என்றார்கள். மன்னாருக்குள் நுழையும்போது மொத்தமாகப் புதைக்கப்பட்ட சவக்குழிகள் சாலைக்குப் பக்கத்திலேயே இருப்பதும் மறைக்கப்பட்டிருப்பதும் காட்டப்பட்டது; சொல்லப்பட்டது. அதைக் குறித்து விரிவாக எழுதிய கட்டுரையொன்று பின்னூட்டத்தில் உள்ளது.
*******
தேவாலயத்தின் முதல் மணியோசையைக் கேட்டபோது வயது 14. ஒன்பதாம் வகுப்புப்படிப்பதற்காகத் திண்டுக்கல் டட்லி உயர்நிலைப்பள்ளியில் சேர்வதற்கு முன்னால் எனக்குத் தெரிந்த கடவுளர்களும் கோயில்களும் கிராமப்புறக்கோயில்கள் தான். பெருங் கோபுரங்களைக் கொண்ட கோயில்களாக இருந்தன அழகர்கோவிலும் மதுரையின் மீனாட்சி அம்மன் கோவிலும் தான். டட்லி உயர்நிலைப்பள்ளியின் வளாகத்தில் இருந்த வெள்ளைச்சுவர்த் தேவாலயம் இப்போதும் நினைவில் இருக்கிறது. அந்தத் தேவாலயத்தின் வாசலுக்கு முன்னால் மிகப்பெரிய பெரியார் சிலையும் இருந்தது. தேவாலயம் அறிமுகமான அதே நாட்களில் தான் பெரியாரின் நாத்திகமும் அறிமுகம். மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தேவாலயத்திற்குள் கிறிஸ்துமஸ் இசைப்பாடல்களைப் பாடல்களைப் பாடும் முதுநிலை மாணவிகளின் குரல்களையும் முகங்களையும் கேட்பதற்காகவும் போய் அமர்ந்திருந்த தினங்களும் நினைவில் இருக்கின்றன.
விடுதியின் விழிப்பு நேரமான காலை 5 மணி தொடங்கி தூங்கும் நேரமான இரவு 10 மணி வரை பைபிளை வாசித்துவாசித்து நன்றி சொல்லும் காட்சிகள் நடந்து கொண்டே இருக்கும். விடுதிக்காப்பாளரான சாமுவேல் பைபிள் கதைகளைச் சொல்லித் தேவனுக்குள் ஐக்கியம் காட்டுவார். ஆனால் ஒன்பதாம் வகுப்பின் தமிழாசிரியர் அந்தோனி வாரத்திற்கொருநாள் பெரியாரை முன்வைத்து நாத்திகம் பேசுவார். ஐந்து மணிக்கு எழும்பும் நல்ல பழக்கத்தையும் அறிவார்ந்து சிந்திப்பாயாக என அந்தோனி ஐயா சொன்ன நாத்திகமும் அங்கிருந்துதான் பின் தொடர்கிறது.
தேவனே! நீயே ஒலியாக இருக்கிறாய்;
துயில் எழுப்புகிறாய்;
நீயே ஐரோப்பிய அறிவுவாதத்தின் கடவுளாக இருக்கிறாய்..


2021 /டிசம்பர்/25/கொண்டாடும் நண்பர்களுக்கு நல்வாழ்த்துகள்

====================================
நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்; உப்பு அதன் சுவையை இழந்தால், அதற்கு எப்படி மீண்டும் சுவை சேர்க்க முடியும்? வீட்டுக்கு வெளியே கொட்டப்பட்டு, மனிதர்களால் மிதிக்கப்படுமே தவிர வேறு எதற்கும் அது உதவாது. நீங்கள் உலகத்துக்கு ஒளியாக இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கிற நகரம் மறைந்திருக்க முடியாது.

மக்கள் விளக்கைக் கொளுத்தி அதைக் கூடையால் மூடி வைக்க மாட்டார்கள், விளக்குத்தண்டின் மேல்தான் வைப்பார்கள்; அப்போது, வீட்டிலிருக்கிற எல்லாருக்கும் அது வெளிச்சம் தரும். அதைப் போலவே, உங்கள் ஒளியை மனிதர்களுக்கு முன்னால் பிரகாசிக்கச் செய்யுங்கள்.


2020/ டிசம்பர்/25கொண்டாட்டங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.
==========================================
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களோடு கொண்ட உறவு மிக நீண்டது. ஒன்பதாம் வகுப்புப் படிப்பதற்காகத் திண்டுக்கல டட்லி உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தது தொடங்கிக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைப் பார்த்து வருகிறேன். அங்கே இருந்த மூன்றாண்டு விடுதி வாழ்க்கையும் அமெரிக்கன் கல்லூரியின் நான்காண்டு விடுதி வாழ்க்கையும் கிறிஸ்துவை நெருங்கிய தேவக்குமாரனாக அறிமுகம் செய்தன.
 
பாண்டிச்சேரி வாழ்க்கையில் கொஞ்சம் விலகல். திரும்பவும் நெல்லையில் நெருக்கம். குடியிருந்த வாடகை வீடுகள் எல்லாம் கிறித்தவர்களின் வீடுகளே. இடையில் சென்று வந்த போலந்து கத்தோலிக்கக் கிறித்தவ நாடு. பல்கலைக்கழகத்திலும் வெளியிலுமாக இரண்டு ஆண்டுகளும் கொட்டும் பனியில் கொண்டாடிய கொண்டாட்டங்கள் நினைவில் இருக்கின்றன.
இப்போதிருக்கும் கட்டபொம்மன் நகர் வீடும் கிறித்தவ ஆலயங்களின் ஆராதனைகளைக் கேட்கும் தூரத்தில் தான் இருக்கின்றன. இரண்டு தெரு தெற்குப் பக்கம் தாண்டினால் ஆத்மநேசர் ஜெப ஆலயம். மேற்கே நான்கு தெரு தாண்டினால் சி எஸ் ஐ ஆலயம். நேற்று மாலை கிழக்குப் புறவழிச்சாலையில் பாலத்தின் மேலேறிப் பார்த்தபோது எங்கும் வண்ணக்கோலங்கள் . பாளையங்கோட்டை கிறிஸ்துவுக்குள் ஐக்கியமான நகரம். டிசம்பர் தொடங்கிவிட்டாலே வண்ணவண்ணமாய் நட்சத்திரங்கள் வீடுகளின் முகப்பில் தொங்க ஆரம்பித்துவிடும். கிறிஸ்துமஸுக்கு முந்திய இரவு 12 மணிக்கு முன்பே தெருக்களில் இறங்கி நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். 12 மணிக்குப் பிறகு நள்ளிரவு ஜெபங்கள் ஆரம்பமாகும்.
 
நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் 24 ஆம் தேதி இரவு பனியிலிருந்து பாதுகாக்க ஒரு குல்லாவும் சூடுகிளம்பும் பனியனும் அணிந்துகொண்டு கிளம்பியபோது 10 மணி முக்கியசாலைகள் வழியாக இருசக்கர வாகனத்தில் 2 மணிநேரப்பயணம். பேராலயங்கள் கிறிஸ்துமஸுக்குத் தயாராகும் நிலையைப் பார்த்து வரலாமெனக் கிளம்பினேன். நானிருக்கும் கட்டபொம்மன் நகரில் தொடங்கி சாந்திநகர், ரஹ்மத் நகர், சமாதானபுரம், ஊசிக்கோபுரம் வரை போய்த் திரும்பிப் பாளையங்கோட்டை, பெருமாள்புரம், தியாகராஜநகர் வந்தபோது தேவாலயங்களுக்குள் மக்கள் வர ஆரம்பித்துவிட்டனர். ஆராதனைகளையும் சங்கீதங்களும் வாசிப்புகளும் தொடங்கியபோது நகரம் குழுப்பாடல்களால் நிரம்பியது. இந்த ஆண்டு அப்படிச் செல்ல நினைத்ததைத் தடுத்துவிட்டது கரோனா அச்சம்.

2027/டிசம்பர்/ 25/ விசுவாசிகளுக்கும் கொண்டாடுபவர்களுக்கும் வாழ்த்துகள்

=================================================
எழுவதற்கும் உண்பதற்கும் தூங்குவதற்கும் ஏங்குவதற்குமென எல்லாவற்றிற்கும் பைபிளின் ஓரதிகாரத்தை வாசித்துவிட்டுப் பிரார்த்திக்கும் கட்டாயம் எனது பள்ளிப்பருவத்தில் ஏற்பட்டது. கறுப்பு அட்டைக்குள் ரோஜா வண்ணம் தடவிய விளிம்புகள் கொண்ட தாள்களில் எழுதப்பெற்ற சங்கீதங்களும் சுவிசேஷங்களும் என் இளமையின் நினைவுப்பொக்கிஷங்களாக என்னுள் அலையடிப்பவை. ஒருநாளில் ஆறுமுறை வாசிக்கப்பட்ட வசனங்களில் திரும்பத்திரும்ப நினைவுக்குவரும் வசனம். ஒன்று கொரிந்தியர்: 13 ஆம் அதிகாரம். அதன் மூலமொழியில் எப்படியிருக்குமோ தெரியாது. தமிழில் கவிதையின் சாயைகளைப் பூசிக்கொண்டிருக்கின்றன

கிறிஸ்துமஸுக்குத் தயாராகிறது./ 2016/டிசம்பர் 24 நள்ளிரவு

பாளையங்கோட்டை கிறிஸ்துவுக்குள் ஐக்கியமான நகரம். டிசம்பர் தொடங்கி விட்டாலே வண்ணவண்ணமாய் நட்சத்திரங்கள் வீடுகளின் முகப்பில் தொங்க ஆரம்பித்துவிடும். கிறிஸ்துமஸுக்கு முந்திய இரவு 12 மணிக்கு முன்பே தெருக்களில் இறங்கி நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். 12 மணிக்குப் பிறகு நள்ளிரவு ஜெபங்கள் ஆரம்பமாகும்.

பனியிலிருந்து பாதுகாக்க ஒரு குல்லாவும் சூடுகிளம்பும் பனியனும் அணிந்துகொண்டு கிளம்பியபோது 10 மணி முக்கியசாலைகள் வழியாக இருசக்கர வாகனத்தில் 2 மணிநேரப்பயணம். பேராலயங்கள் கிறிஸ்துமஸுக்குத் தயாராகும் நிலையைப் பார்த்து வரலாமெனக் கிளம்பினேன்.

நானிருக்கும் கட்டபொம்மன் நகரில் தொடங்கி சாந்திநகர், ரஹ்மத் நகர், சமாதானபுரம், ஊசிக்கோபுரம் வரை போய்த் திரும்பிப் பாளையங்கோட்டை, பெருமாள்புரம், தியாகராஜநகர் வந்தபோது தேவாலயங்களுக்குள் மக்கள் வர ஆரம்பித்துவிட்டனர். இனி ஆராதனைகளையும் சங்கீதங்களும் வாசிப்புகளும் தொடங்கிவிடும்.
 
னக்குப் பிடித்த பைபிளின் பகுதி
====================================

1 கொரிந்தியர், 13 ஆம் அதிகாரம்
=================================
1 நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.
2 நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.
3 எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.
5 அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,
6 அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
7 சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
8 அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோம்.
9 நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ்சொல்லுதலும் குறைவுள்ளது.
10 நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
11 நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.
12 இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.
13 இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.
=================================
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேடிப்படித்த நூல்கள் அல்லது பழைய புத்தகக் கடையில் கிடைத்த நூல்கள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

சென்னைப் புத்தகக்கண்காட்சிப் பரிந்துரைகள்