முதல் மரியாதை :மகிழ்ச்சியின் தருணங்கள்


கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ச் சமூகத்தின் செவிகளுக்கு விருந்தளித்த இசை அமைப்பாளர் இளையராஜா இந்திய அரசின் ராஜ்யசபாவின் நியமன உறுப்பினராகப் பொறுப்பேற்க உள்ளார். வாழ்த்துகள். மகிழ்ச்சி.

இன்று காலை நடையின்போது -ஸ்பாட்டிபையைத் தட்டிவிட்டு நடக்கத்தொடங்கும்போது கூடவே அவரது இசையும் சாரலாக நனைத்துக்கொண்டே வந்தது. அவரது இசை கேட்காத நாட்கள் இல்லை என்னுமளவுக்கு உடன் இருப்பவர். கணினியில் தட்டச்சுச் செய்யும்போது கூடவே ஓடிக் கொண்டிருக்கின்றன அவரது இசைதழுவிய கவிதை வரிகள். வாசிக்கும் கதையில் சிறுதடங்களின் போது இசையின் உலகத்திற்குள் இழுத்துப்போய்விடுவார் ராஜா..
அவர் இசையமைத்த பாடல்களைக் கேட்டு வளர்ந்தது எனது இளமைப்பருவம். பள்ளிப்பருவம் தொடங்கிக் கிராமத்தை விட்டு- குடும்பத்தினரை விட்டுத் தூரமாக இருக்க நேர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு அவரது இசையோடு கூடிய பாடல் வரிகள் கிராமத்தைப் பதிலீடு செய்துகொண்டே இருந்தன. சாகச நாயகர்களுக்குப் பின்னணி இசைக்கோர்வைகளை உருவாக்கித் தந்து தமிழ் வெகுமக்களின் - இளைஞர்களின் இயலாமைகளுக்கு வடிகால்களை உருவாக்கித் தந்தது அவரது இசைதான். பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா, மணிரத்னம் போன்றவர்களின் இயக்கத்தில் உருவான வெளிசார் அடையாளங்களுக்குக் கூடுதல் வண்ணங்களைத் தனது இசைக் கோலங்களால் அடிக்கோடிட்டுக் காட்டியவர் அவர். எண்பதுகளின் திருவிழாக்களில் ஒலிபெருக்குக் குழல்களின் வழியாகக் கேட்கத் தொடங்கிக் கையடக்க வானொலி, வானொலியும் ஒலிப்பதிவு நாடாக்களின் இசைப்புமென மாறிய 1990 களில் அலமாரியில் புத்தக அடுக்குகளில் ஓரடுக்கு இசைப்பதிவு நாடாக்களின் அடுக்காக இருந்தன. அவற்றில் முக்கால் பங்கு இளையராஜா இசையமைத்த படங்களின் பாடல்கள். படங்களுக்காக இல்லாமல் ‘ எப்படிப் பெயர் வைக்கலாம்? காற்றைத்தவிர வேறில்லை....
மேற்கத்திய சிம்பொனிக் கோலங்கள்’ என வந்தபோது அவைகளும் அடுக்கில் இடம்பிடித்துக்கொண்டன.
சொந்தவீடு கட்டியபோது, நாலு மூலையிலும் இசைபெருக்கும் ஒலிப்பெட்டிகளைக் கொண்டு முன்னறையை இளையராஜாவின் இசையால் நிரப்பிக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்கினார்கள் மகனும் மகளும். என்னைவிடக் கூடுதலாகத் தென்பாண்டிச் சீமையிலேயையும் தென்றல்வந்து தீண்டும்போது பாடலையும் கேட்பவர்கள். பேரன்களுக்கும் பேத்திக்கும் தாலாட்டும் இசையே அவரது மெல்லிசைக்கோலங்கள் தான். துல்லியத்தன்மைகொண்ட ஒலிக்கலவைக் கருவிகள் தொடங்கி விதம்விதமான இசை பெருக்குக் கருவிகள் வழியாகக் கேட்டுக்கேட்டு உள் நுழைந்த இசைக் கோலங்கள் ராஜாவின் இசைப் படைப்பாக்கங்கள்.
கலையின் வேலைகள் எனப் பட்டியலிடப்படுவதில் பதிலீடு செய்தல், நினைவுகளுக்குள் ஆழ்த்துதல், இன்னொரு உணர்வுக்குள் அமிழ்த்துக் கரைத்தல், கழிவிரக்கத்திலிருந்து உற்சாகத்திற்கு நகர்த்துதல், நம்மையொத்த பாத்திரங்களின் உணர்வுகளை நமதாக்குதல், பல நேரங்களில் எல்லாவற்றிலிருந்தும் விலக்கிவிட்டுத் தனித்தலையும் உயிரியாக்கிக் காட்டுதல் எனப்பலவும் சொல்லப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் இளையராஜாவின் இசை எனக்குத் தந்திருக்கிறது. அவருக்குத் தரவேண்டிய கடன்கள் ஏராளம். நான் பட்ட கடனை என் சார்பில் எனது அரசாங்கம் அவருக்கு அளிக்கும் மரியாதைகள் மூலமாக - விருதுகள் மூலமாக - தகுதியளிப்புகள் மூலமாகத் தரும் என்றால் மகிழ்ச்சியே
.
மகிழ்ச்சியளிக்கும் அறிவிப்பாக இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தனக்கான பலனை எதிர்பார்த்தே இந்தியாவின் அரசுகள் இருந்துள்ளன. புரவலர் மனநிலையில் தான் மக்களாட்சிக்காலத்திலும் அரசுகளின் இயக்கம் இருக்கிறது.
***********
இந்தியாவிற்கான அரசியல் அமைப்பை உருவாக்கியவர்கள் கலை,இலக்கியம், விளையாட்டு, சமூகநலன், பொருளியல், அறிவியல் போன்ற துறைசார் வல்லுநர்களின் நேரடி ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் விவாதிக்கும் களமாக உருவாக்கப்பட்டது ஒன்றிய அரசின் ராஜ்யசபா. அதில் இடம்பெறுபவர்கள் மக்களால் வாக்களித்துத் தேர்வு செய்யப்படாமல், நியமன வழியில் பதவி பெறுபவர்களாக இருக்கிறார்கள். மாநிலங்களின் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்பக். கட்சிகளின் நியமனங்களால் செல்பவர்கள் கட்சி அடையாளங்கொண்ட உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள். கட்சி அடிப்படை இல்லாது நேரடியாகக் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யும் துறைசார் வல்லுநர்கள் கட்சி அடையாளம் இல்லா உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள். இளையராஜா அப்படியொரு உறுப்பினராகத் தனது காலத்தை நீட்டிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நம்பிக்கை பொய்த்துப்போனாலும் வருத்தப்பட எதுவும் இல்லை. ஏனென்றால் அவருக்குத் தரவேண்டிய பட்டங்களும் விருதுகளும் தரப்படவேண்டிய காலத்தில் தரப்படவில்லை. அவர் செயல்பட்ட இசைத்துறைக்கான விருதுகளையும் பட்டங்களையும் பரிந்துரைக்க வேண்டிய சங்கீத் நாடக் அகாடெமி எப்போதும் சனாதனப் பார்வையோடு இயங்கிய ஓர் அமைப்பாகவே இருந்துள்ளது. சாகித்திய அகாதெமியைப் பற்றிய விமரிசனங்களை எப்போதும் எழுப்பும் அறிவுஜீவிகளும் பத்திரிகையாளர்களும் சங்கீத் நாடக் அகாடெமி பற்றிக் கவனம் செலுத்தியதே இல்லை. அதன் தொடக்கம் முதல் இன்றுவரை சங்கீத் நாடக் அகாதெமி பரிந்துரை செய்து பெற்றுத்தந்த பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரதரத்னா, பெல்லோஷிப் போன்ற விருதுகளின் பட்டியலில் எத்தனை பேர் எந்தெந்த வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பிரித்துப் பார்த்தாலே தெரியும்.
நடிப்புக்கென ஒரே குடும்பத்தில் நான்குபேர் பட்டங்களும் விருதுகளும் வாங்கியபோது இங்கே சிவாஜிகணேசனும் இளையராஜாவும் விருதுகளின் வாசனை இல்லாமல்தான் இருந்தார்கள் என்பதை மட்டும் நினைவில் கொண்டால் போதுமானது.
சிறப்புத்துறைகளில் சாதனை செய்தவர்களின் ஓய்வுக்காலப் பதவியாக ராஜ்யசபா உறுப்பினர் பதவி கருதப்படுகிறது. ஆனால் இசையோடு தனது வாழ்வைப் பிணைத்துக்கொண்ட இளையராஜாவின் இசைக் கோலங்களின் ஆக்கங்களுக்கு ஓய்வு வயது இருக்க வாய்ப்பில்லை. அவரது சங்கதிகளைக் கேட்கும் காதுகள் இருக்கும் வரை அவரது இசையாக்கமும் உருவாக்கித் தந்த இசைக்கோலங்களும் இருக்கப் போகின்றன.
மேற்குத்தொடர்ச்சி மலையின் பருவக்காற்றோடு ஈரமான ரோஜாவின் இதமான வருடல் தழுவிக் கொண்டிருக்கிறது. உங்களுக்குக் கிடைத்த அங்கீகாரத்தை எந்தத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுங்கள் ராஜாவே..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்