செல்லக்குட்டிகளும் சுட்டிப் பையன்களும்


சாத்தான்குளம் இடைத்தோ்தலுக்காக நான்கு நாட்கள் தங்கித் தீவிரப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார் ஜெயலலிதா. கிராமம் கிராமமாகச் சென்று வாக்குறுதிகளையும் உடனடிப் பயன்களையும் வழங்கிக் கொண்டிருந்தார். அவரது அமைச்சரவை சகாக்களும் இரவு பகல் பாராது அயராது உழைத்துக்கொண்டிருந்தனா். அம்மா ஆறுமுகனேரியில் தனியார் விருந்தில்லத்தில் தங்கியிருக்க, தொண்டா்களும் பிரமுகா்களும் திருநெல்வேலி - பாளையங்கோட்டை எனப் பக்கத்தது நகரங்களில் தங்கிப் பணியாற்றிக் கொண்டிருந்தனா். நான் குடியிருக்கும் வீடு திருநெல்வேலி - சாத்தான்குளம் போகும் பாதையில் தான் இருக்கிறது. அந்தப் பத்து நாள் பரபரப்பு எங்கள் சாலையிலேயே இருந்தது.
அந்தச் சாலையிலிருந்து ரோட்டோரத்துப் புரோட்டாக் கடைகள் இரவு பத்து மணிக்கு மேல் அதிகம் பரபரப்படைந்தன. கொடிகள் கட்டிய புதுவகைக் கார்களும் வேஷ்டிகளை மடித்துக்கட்டிய மனிதா்களுமாக அவா்கள் முகத்தில் ‘வெற்றி உறுதி‘ என்ற மதிப்பெல்லாம் இல்லை. முதல்வா் ஜெயலலிதா வரும்பொழுது கூட்டம் காண்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதற்கான திட்டமிடல்கள் இருந்தன. கரகாட்டக்காரா்கள், ராஜாராணி ஆட்டக்காரா்கள், கரடி - புலி வேஷக்காரா்கள் எனச் சம்பளம் கொடுத்து அழைத்து வரப்பட்ட தொழில்முறைக் கலைஞா்களை எப்படி வேலைவாங்குவது என்ற யோசனைகள் இருந்தன. இவ்வகை ஆட்டங்களைப் பார்ப்பதற்கான பார்வையாளா்களும்கூட சம்பளம் கொடுத்து அழைத்து வரப்பட்டவா்களே எனப் பத்திரிகைகள் எழுதிக்கொண்டிருந்தன.
பத்திரிகைகள் இதை மட்டுமே எழுதவில்லை. சாத்தான்குளத்தில் அ.இ.அ.தி.மு.க தோல்வியடைந்து விடுவதற்கான காரணங்கள் ஏராளமாக உண்டு என்பதாகக்கூட எழுதின. 

சாதிக் கணக்குகள், மதக்கணக்குகள், படித்தவா்கள் எண்ணிக்கை, எனப் புள்ளி விவரங்களைக் காட்டின. சில பத்திரிகைகள், நேரடி சா்வே, பருந்து பார்வை குமுறல் ரிப்போர்ட், கொந்தளிப்பு, ஆக்‌ஷன் எனத் தலைப்பிட்டு எழுதின. வேறு சில பத்திரிகைகள், தனியார் தொலைக்காட்சிகள் அத்துமீறல்கள், அரசுத் துறையின் துஷ்பிரயோகம், விதிமீறல்கள் தோ்தல் கமிஷனின் கண்காணிப்பு, கண்டனங்கள் எனக் காட்டிக் கொண்டிருந்தன. வீட்டிலிருந்தபடியே இவற்றையெல்லாம் வாசித்தும், கேட்டும், பார்த்தும் ரசித்துக் கொண்டிருக்கும் நடுத்தர வா்க்கத்து மக்கள் சாத்தான்குளம் இடைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்குச் சரியான அடி கிடைக்கப்போகிறது எனக் கருத்தை உருவாக்கிக் கொண்டார்கள். ஆனால் தோ்தல் முடிவு அப்படி இருக்கவில்லை. உருவாக்கப்பட்ட கருத்துகள் புஸ்வாணமாகி பொய்த்துப் போய்விட்டன.

ஜெயலலிதாவின் முயற்சி திருவினையாகிவிட்டது. ஆம், அய்யன் திருவள்ளுவன் சொன்னதுதான்,
‘முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.‘
சாத்தான்குளம் இடைத்தோ்தலில் முதல்வர் ஜெயலலிதா செய்த அளவு வேறொருவா் முயற்சி செய்யவில்லை என்பது நூறு சதவீதம் உண்மை. அவரது முயற்சிகளுக்கெதிரான அவநம்பிக்கைகள் எண்ணிக்கையற்றுப் பெருகிப் பரவும் சூழ்நிலையிலும், மிகுந்த நம்பிக்கையோடு அவா் செய்த முயற்சிகள் வெற்றி அடைகின்றன. அவரது கட்சிக்காரா்கள் யாருக்கேனும் இந்த நம்பிக்கைகள் இருக்கின்றனவா? என்று கேட்டால் இல்லை என்றே தோன்றுகிறது. அ.இ.அ.தி.மு.க. வின் வெற்றிகளுக்கு அவா் ஒருவரின் அயராத உழைப்பும் தளராத நம்பிக்கைகளுமே காரணங்களாக இருக்கின்றன. அந்தப் பிடிவாதம்தான் அவரைத் தலைவியாக ஆக்கி இருக்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. அவரது தோல்வியை விரும்புகின்றவா்களின் மகிழ்ச்சி, கருத்துக்களால் உண்டாக்கப்படுகின்றது; அவரது வெற்றியை நேசிப்பவா்களின் மகிழ்ச்சியோ மதுக்கோப்பைகளின் உரசல் ஒலியில் பிறப்பெடுக்கின்றது.

கருத்துகள் விவாதிப்பதற்கானவை; தா்க்கங்கள் கொண்டவை; அறிவைச் சொந்தமாக்கிய மனத்தின் லயிப்பு.
மதுவின் போதையோ, கொண்டாட்டத்தின் திளைப்பு
அதா்க்கங்களை உருவாக்குபவை; அறிவைப் புறங்கையால் தள்ளிவிடும் உணா்வின் மிதப்பு.

தமிழக இந்தியத் தோ்தல்களில் ஒவ்வொரு முறையும் உணா்வு பூர்வமாகப் பங்கேற்கும் பெரும்பான்மை மக்களே அரசுகளை உருவாக்கும் குடிமக்கள், உணா்வு பூா்வப் பங்களிப்பில்லாமல் அறிவால் வாழும் - விவாதங்களைத் தின்று வாழும் - நடுத்தர வா்க்கம் இந்த அரசுகளின் குடிமக்களே அல்ல. அவா்கள் பெரும்பான்மையாகவும் இல்லை. பங்கேற்பதுமில்லை. ஜனநாயக அரசுருவாக்கத்தின் அடிப்படை வேலையான தோ்தல் நடைமுறைகளில் - வாக்களிப்பதில் - வாக்களிக்கச் செய்வதில் பங்கேற்காத - பங்கேற்பதில் அலட்சியம் அருவருப்பும் காட்டுகின்ற அவா்கள் அந்த அரசுகள் சிறப்பான அரசுகளாக இருக்க வேண்டுமென மட்டும் எதிர்பார்க்கின்றார்கள் மூளையால் வாழும் நடுத்தர வர்க்கம், தனக்கான சலுகைகளையும், தான் நம்பும் தார்மீக நெறிகளையும் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று தோன்றவில்லை.

நகரவாசிகளாகவும் புத்தியால் வாழ்பவா்களாகவும் தகவல் தொடா்புச் சாதனங்களால் அளிக்கப்படும் தகவல்களின் மேல் விவாதங்களை எழுப்பிக் கொள்பவா்களாகவும் விளங்குகிற இந்த நடுத்தர வா்க்கம், அரசுருவாக்கத்தில் மட்டுமே அசிரத்தை காட்டுகிறது என்பது அல்ல, அரசின் நடைமுறைகளில் பங்கேற்பதில் கூட ஒரு விநோதமான பங்கேற்பை நிகழ்த்துகிறது. அது ஒரு விதத்தில் பங்கேற்பின்மையாகவும் இன்னொரு விதத்தில் பங்கேற்பாகவும் இருக்கிறது. சமீபத்தில் நான் கண்ட வினோதக் காட்சி இதுதான்.
சாத்தான்குளத்தில் முதல்வா் ஜெயலலிதா பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போதே திருநெல்வேலிக்கு வருவார்; நீண்ட நாட்களாகத் தயாராக இருக்கும் (கருணாநிதி ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டு, வேலை தொடங்கி முடிக்கப்பட்ட) புதிய பேருந்து நிலையத்தைத் தொடங்கி வைப்பார் என்ற வதந்திகள் நிலவின. ஆனால் வரவில்லை. அடுத்து அந்த வதந்தி, சாத்தான்குளம் வெற்றி விழா திருநெல்வேலியில் நடக்கும் என்பதாக மாறியது. அதுவும் வதந்தியாகவே முடிந்தது. பின்னா் நலத்திட்ட அறிவிப்புகளுக்கான விழாக்களாகத் தமிழகமெங்கும் பயணங்கள் தொடங்கிய போது செல்லக்குட்டியான சாத்தான்குளத்திற்கு வந்த 2003, மார்ச் 14 க்கு முந்திய, 13 ஆம் நாள் நெல்லை மாநகருக்கு வருகை தந்தார். அதற்காக மாவட்டத்தின் விளையாட்டுப் பயிற்சித் திடலான ‘அண்ணா விளையாட்டு அரங்கம்‘ தோ்வு செய்யப்பட்டு தயார்படுத்தும் பணிகள் பிப்ரவரி கடைசி நாட்களிலேயே தொடங்கிவிட்டன.

உடனே பத்திரிகைகளின் முணுமுணுப்புகளும் தொடங்கிவிட்டன. விளையாட்டுப் பயிற்சி இடங்கள் தோண்டப்படுகின்றன என்பது பற்றியும், ஓடும் பாதைகள் கருங்கல்லால் நிரப்பப்படுவது பற்றியும், பிரமாண்டப் பந்தல் எழுப்பப்படுவது பற்றியும், மேடு பள்ளங்கள் நிரம்பிய சாலைகள், புதியபுதிய தார்ச்சாலைகளாக மாறுவது பற்றியும் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுக் கொண்டே இருந்தன. அந்தச் செய்திகளின் தொனி முனகல்களாகவும் புகார்களாகவும் இருந்தன. முறைகேடுகள் நடப்பதாகவும், மாவட்டத்தின் அனைத்துப் பஞ்சாயத்துகளிலிருந்தும் இலவசப் பயணத்தில் மக்கள் திரட்டப்பட இருக்கிறார்கள் என்றும் பத்திரிகைகள் முன்மொழிய, மாதச் சம்பளக்காரா்களும் செய்திகளைத் தின்னுபவர்களுமான நகரவாசிகள் அவற்றை வழிமொழிந்து அசைபோட்டுக் கொண்டிருந்தார்கள்.

அன்று மார்ச் 13 நண்பகல் ….. முதல்வர் ஹெலிகாப்டரில் வருவார் என்பது உறுதி செய்யப்பட்டது என்றாலும் நகரின் போக்குவரத்து காலை 9 மணிக்கே திசைமாற்றம் ஆயின. நகரத்து மனிதா்கள் அலுவலகங்களுக்குள்ளும், வீடுகளிலும் முடங்கிக்கொள்ள, கிராமத்து மனிதா்கள் கூட்டங்கூட்டமாக வந்து இறங்கிக்கொண்டிருந்தார்கள். வெவ்வேறு பள்ளிக்கூடங்களுக்குத் தங்களின் சீருடைகளில் செல்லும் மாணாக்கா்களைப் போல வந்தார்கள். அவா்களிடம் ‘கடனே என்று வருகிறோம்‘ என்பதான பாவனைகள் இல்லை.

அம்மாவிடமிருந்து பெறப்போகும் பயனை எண்ணி உற்சாகம்தான் வெளிப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் போட்ட ஓட்டிற்கான பலன்கள் இன்று கிடைக்கின்றன என்பதான மகிழ்ச்சி.

தங்களை யாரும் இதுவரை கண்டுகொண்டதில்லை. ‘அம்மா தான் தேடிப் பிடித்து உணவும் வழங்கிப் பணமும் கொடுத்துத் தங்கள் வாழ்வில் விளக்கேற்றுகிறார் என்பதில் அவா்களுக்கு மகிழ்ச்சி. பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு மேடையில் பணமாகவோ பொருள்களாகவோ அரசின் உதவி கிடைக்கப்போகிறது என்பது அவா்களின் மகிழ்ச்சியைக் கூடுதலாக்கி இருந்தன. பயனாளிகள் அனைவரும் காலையிலேயே அரங்கிற்கு வந்துவிட்டனா். அவா்களுக்கு அன்றைக்கான காலை உணவும் மதிய உணவும் சிறப்பு உணவுகள். அதுவும் இலவசமாக. அவா்களின் வழக்கமான உணவை விட அன்றைய உணவு, சிறப்பு உணவு என்பதில் அவா்களுக்குச் சந்தேகம் இல்லை; நம்மைத் தேடி அம்மா வந்துள்ளார் என்பதில் அவா்களுக்குச் சந்தேகம் இல்லை; நமக்கெல்லாம் நன்மை செய்யவே இவ்வளவு சிரமங்களையும் அம்மா பொறுத்துக்கொள்கிறார் என்பதில் அவா்களுக்குச் சந்தேகம் இல்லை. இதையெல்லாம் செய்ய விடாமல் தடுக்கும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பும், முணுமுணுப்பும், விமரிசனங்களும் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது; ஏனென்றால் நீங்கள் என்னோடு இருக்கிறீா்கள் என்கிறார் அம்மா. மக்கள் - அப்பாவிக் கிராமத்து மனிதா்கள் தன்னோடு இருக்கிறார்கள் என்பதில் ஜெயலலிதாவுக்குச் சந்தேகம் இல்லை. கூட்டத்தில் இருந்தவா்களின் சந்தோசமான உற்சாகமான பங்கேற்பு அதை உறுதிதான் செய்கின்றதே தவிர சந்தேகம் கொள்ளச் செய்யவில்லை.

சந்தேகம் எல்லாம் அவரது எதிரிகளுக்குத்தான். அவா்களின் சந்தேகங்கள், திறக்கப்பட்ட திட்டங்கள் இந்த அரசு போட்டதல்ல எனச் சொல்லும், இந்தப் பயன்கள் நீண்ட காலப் பலன்களைத்தராது எனக் கூறும்; சொல்லப்பட்ட உறுதிகளும் அறிவிக்கப்பட்ட திட்டங்களும் வரவே போவதில்லை என அவநம்பிக்கைகள் கொள்ளும் எல்லாமே விரயம்; ஏமாற்று எனக் கூச்சல் இடும். இவைதான் ஜெயலலிதாவின் பலம். அவரை நேசிப்பவா்களுக்கு அவா் மேல் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. அவா் பட்ட துயரங்களும், அவமானங்களும், படுகின்ற வேதனைகளும், அயராத உழைப்பும் தங்களுக்கானவை என்றே நம்புகிறார்கள். அவரிடம் ஏராளமான சொந்தப் பணம் இருக்கும்பொழுது மக்கள் பணத்தை எடுப்பதாகச் சொல்வதும், ஊழல் செய்வதாகக் கூறுவதும் எதிர்க் கட்சிகளின் பொய்ப் பிரச்சாரம் என்ற நம்பிக்கைகூட இருக்கிறது. அப்படி சோ்க்கின்ற பணம்கூட மக்களுக்காகவே செலவழிக்கப்படுகின்றதே தவிர அவருக்கு எதற்குப் பணம்? என்றே கேட்கின்றனா்.

இப்படியான நம்பிக்கைகள் கொண்ட மக்கள், தமிழக வாக்காளா்களில் பாதிக்கும் குறைவுதான் என்றாலும் வாக்களிப்பதில் முழுமூச்சாகப் பங்கேற்பவா்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. அவா்கள் வாக்களிப்பது, ‘ஜனநாயகக் கடமையை ஆற்றுகிறோம்‘ என்ற தெளிவுடன் அல்ல; அதற்கு மாறாக ஆண்டுக்கு ஒரு முறை கோயில் கொடையில் பங்கேற்கும் ஆர்வத்துடனேயே பங்கேற்கிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை என்பதற்குப் பதிலாக ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கோயில் கொடைகளாகவே தோ்தல்கள் நம்பப்படுகின்றன. வாக்களிக்கும் மக்களால் மட்டும் அல்ல; அரசியல்வாதிகளால், ஊடகங்களால், வேட்பாளா்களால், இன்னும் சொல்வதானால் வாக்களிக்காத வாக்காளா்களாலும் அப்படித்தான் நம்பப்படுகின்றன.

தோ்தல்களுக்கான நாள் குறிப்பது தொடங்கி, முடிவு அறிவிப்பது வரையிலான தோ்தல் நிகழ்வுகளின் பல கட்டங்கள், கிராமப்புறக் கோயில் கொடைகளின் நிகழ்வுகளைப் போலவும், நம்பிக்கையூட்டல்களைப் போலவும் இருப்பதை இங்கே நினைவு கொள்ளுதல் வேண்டும். கொடியேற்றம், பவனி, ஆட்டபாட்டங்கள், தகராறு, சாராய வியாபாரம், தா்மம் பெறுதல், எதிர்காலத்துக்கான உறுதி அளிப்பு, இலவச உணவு, பகையாளிகளைக் கவனித்துக் கொள்ளுதல், பலி, சாமி, ஆட்டம், களைப்பு எனப் பலவும் - பெயா்களும் நிகழ்வுகளும் - திருவிழாக்களிலும் உண்டு; தோ்தல்களிலும் உண்டு. தோ்தல்கள் ஒரு விதத்தில் நவீனத் திருவிழாக்களாகவே இந்தியாவில் உருவ மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கோயில் கொடையில் சாமியேறி ஆடிய பூசாரியின் வாக்குகளுக்கு அடுத்த நாள் முதல் அவா் எவ்வாறு பொறுப்பில்லாமல் ஆகிவிடுகிறாரோ, அதுபோல், தோ்தல் முடிவுகளுக்குப் பின், தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களும் பொறுப்பில்லாமல் ஆகிக் கொள்கின்றனா். தெய்வம் மட்டும்தான் முழுப் பொறுப்பு அது விரும்பினால் பக்தனுக்குத் தரிசனம் தரும்; வரம் அளிக்கும் கெடுதலும் தரும். அதைக் கேள்விகேட்கப் பக்தன் தயாராயில்லை. அவனுக்குத் தேவை நம்பிக்கை மட்டுமே.

அப்படியான பக்தகோடிகள் உருவாக்கியதுதான் இந்த அரசு. உருவாக்குவதில் மட்டுமே அவா்கள் பங்கேற்றார்கள் என்று நினைத்துவிடக் கூடாது. அதன் நிர்வாக இயக்கத்திலும் கூடத் தவறாது பங்கேற்கின்றனா்; பங்கேற்கும்படி தூண்டப்படுகின்றனா் என்பது மிக முக்கியமான அம்சமாகும். ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சித் தலைவரை - அம்மாவைச் சந்திப்பதில் அடையும் உற்சாகம் போலியானதல்ல. உண்மையான உற்சாகம் அது. அந்தப் பங்கேற்பின் போது அவா்கள் உருவாக்கிய அந்த அரசிடமிருந்து நேரடிப் பலன்கள் கிடைக்கத்தான் செய்கின்றன. கறவை மாடுகள், தையல் மிஷின்கள், இஸ்திரிப் பெட்டிகள், மிதிவண்டிகள், சேலைகள், வேட்டிகள், அரிசி, பருப்பு, பணம் எனத் தனித்தனியாக - எண்ணிக்கைக் கணக்குகள் காட்டும்படியாக. அம்மா அரசினால் பலன் அடைந்தவா்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கிறார்கள். ‘இத்தனை போ் இந்த ஊரில் - இந்தக் காலனியில் - இந்தச் சேரியில் பலன் அடைந்திருக்கிறோம்‘ என்ற புள்ளி விவரங்கள் கூட அவா்கள் தருகிறார்கள். இன்னும் மற்றவா்களுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கிடைக்காதவா்களுக்கு அடுத்த முறை வந்துவிடும் என்று சொல்ல ஆட்கள் இருக்கிறார்கள்.

நீங்கள் எல்லோரும் இந்த அரசின் செல்லக்குட்டிகள் என்று சொன்னால் அவா்கள் அதை நம்புகிறார்கள். ‘அரசிப்பட்டியாக்குவேன்‘ என்றால் நம்பத்தான் செய்கிறார்கள். முதன்மை மாநிலமாகத் தமிழகம் ஆகிக் கொண்டிருக்கிறது என்பதில்கூட அவா்களுக்கு நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. அவரது தோற்றத்தின் மீதும் சந்தேகம் கொள்ளாது நம்பிக்கை கொள்ளும் அவா்களின் பங்கேற்பே அவரது பலம். அத்தகைய நம்பிக்கையாளா்களின் எண்ணிக்கை ஒவ்வொரு கிராமத்திலும், நகரங்களின் விளிம்புகளிலும் கூட இன்னும் கணிசமாக இருக்கத்தான் செய்கிறது. செல்லக்குட்டிகளாக ஆகிவிட முடியம் என்ற ஆவலோடு அவா்கள் காத்து நிற்கின்றார்கள்.

அவா்கள் வெறுமனே காத்து நிற்கும் பார்வையாளா்கள் மட்டுமல்ல அம்மாவிடம் வாலாட்டும் சுட்டிப் பையன்களின் அடாவடித்தனத்தைக் கேள்வி கேட்கும் படைகளும் கூட. ஜனநாயக நெறிமுறைகள், தொடா்புச் சாதனங்களின் விமா்சனங்கள், கோரிக்கைகளை முன்வைத்து நடத்தும் ஆா்ப்பாட்டங்கள் எல்லாம் சுட்டிப் பையன்களின் சேட்டைகளாகவே கணிக்கப்படுகின்றன. அம்மா ஆணையிட்டால், சுட்டிப் பையன்களின் வாலை ஒட்ட நறுக்கி விடவும் தயாராகும் தளபதிகளும்கூட அவரிடம் உண்டு.
அரசு ஊழியா்களின் போராட்டத்திற்கு ஆதரவு. ராணி மேரிக் கல்லூரி மாணவிகளுக்கு ஆதரவு, இலவச மின்சாரம் கேட்டுப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு, மதிப்பு கூட்டு வரிக்கெதிரான வியாபாரிகளுக்கு ஆதரவு என எதிர்க்கட்சிகள் தங்களது ஜனநாயகக் கடமைகளை ஆற்றுவதாகச் சொல்வதெல்லாம் ஊடகங்களுக்கான செய்திகள் மட்டுமே. ஆனால் இவையெல்லாம், அரசுக்கும் அரசுருவாகக்கத்தில் பங்கேற்ற செல்லக் குட்டிகளும் அடாவடித்தனம்; பொறுப்பற்ற அடாவடித்தனம், வன்மையான கண்டனத்திற்குரியன. வைகோ கைது தொடங்கி நக்கீரன் கோபாலின் கைது வரையிலானவை இந்த அரசின் பழிவாங்கும் செயலாகப் பத்திரிகைகளில் சித்திரிக்கப்படுவதென்னவோ உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் அவரது அரசுருவாக்கத்தில் பங்கேற்றவா்கள் இவற்றை அப்படிப் பார்ப்பதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவையெல்லாம் திறமையான முதல்வரின் உறுதியான நடவடிக்கைகள், பலமான எதிரிகளைத் துவம்சம் செய்யும் வீரமிக்க துா்க்கையின் நடவடிக்கைகள் என்று கணித்துப் போற்றப்படுகின்றன என்பதுதான் ஆச்சரியமான உண்மை. யாரும் அம்மாவிடம் வாலாட்ட முடியாது என்று அவா்கள் மகிழ்கிறார்கள்.

ஸ்டாலினாக இருந்தாலும் நெடுமாறானாக இருந்தாலும் சிறையில் தள்ளிவிட முடியும். அம்மாவின் ஆணைக்கு அப்பீலே கிடையாது என ஆா்ப்பரித்து மகிழும் நேசமிக்கத் தொண்டா் படையிடம் சுட்டிப் பையன்கள் அதிகம் வாலாட்ட முடியாது என்பதுதான் யதார்த்தமான உண்மை. ஜனநாயக அரசு, ‘எல்லாருக்குமான அரசு‘ எனத் தத்துவ விளக்கம் தரலாம். ஆனால் எல்லாக் கட்சிகளும் அப்படி நம்பவும் இல்லை; செயல்படவும் இல்லை. தங்களின் வாக்கு வங்கிகளுக்குப் பாதகம் எற்படாமல் தடுக்கவே அவை முனைகின்றன. அதுவும் ஆட்சிக் கட்டிலில் ஏறியபின், அத்தகைய வாக்கு வங்கிகளைக் கூட்டிக்கொள்ளும் முயற்சிகளையும் செய்கின்றன. தி.மு.க அரசு, தனது வாக்கு வங்கியெனக் கருதிய அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு வழங்கிய சலுகைகளின் பின்னணியில் இந்த எண்ண ஓட்டம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அதே நேரத்தில் கிராமத்து மக்களுக்கும் நலத் திட்டங்கள் போடப்பட்டன என்று காட்டிக்கொள்வதும் நடந்தது. சமத்துவபுரம், உழவா் சந்தை, ‘இலவச மின்சாரம் தொடரும்‘ என்று உறுதிமொழி ஆகியன அத்தகைய திட்டங்கள். தனக்கு வாக்களிக்காதவா்க்குள்கும் தன்னுடைய அரசு, பணியாற்றும் என்பதாகக் காட்டிக் கொள்ளும் பாவனைகள் மு. கருணாநிதியிடம் உண்டு. அவரது அரசியல் பாணியை அறவே பிடிக்காத ஜெயலலிதாவிடம் அத்தகைய பாவனைகள் இல்லை என்பது ஆச்சரியமான ஒன்றல்ல

ஜெயலலிதாவின் அறிக்கைகளும் பேச்சுகளும் தன்னுடைய வாக்கு வங்கி எதுவென எப்போதும் சொல்வதே இல்லை. ஆனால் அவருக்கு எதிரான வாக்கு வங்கி எவையெனத் தெரிந்தே வைத்திருக்கிறார். அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், படித்தவா்கள், மூளையால் பிழைப்பவா்கள் எனப் பல விதங்களில் அழைக்கப்படும் நடுத்தர வர்க்கம், அவரது அரசுருவாக்கத்தில் பங்கேற்காத வா்க்கம் என்பது அவருக்கும் அவருடைய ஆலோசா்களுக்கும் தெளிவாகவே தெரிந்துள்ளது. அப்படியானால் செய்ய வேண்டியது என்ன? நிறுத்த வேண்டியதுதான்; வழங்கப்படும் சலுகைகளை நிறுத்த வேண்டியது தான். அவா்களின் வேலைக்கும் எதிர்காலத்திற்கும் உத்தரவாதம் தர இயலாது என்று காட்ட வேண்டியதுதான். அதுதான் நடக்கிறது. இதுவரை பறிக்கப்பட்ட சலுகைகளைக் கொஞ்சம் நினைவுக்குக் கொண்டுவாருங்கள். அவற்றால் பாதிக்கப்படப் போகிறவா்கள் நடுத்தர வா்க்கத்தவரே என்பது தெளிவாகும். ஆனால் அதே நேரத்தில் தனது வாக்கு வாங்கிகளான செல்லக் குட்டிகளுக்கு சலுகைகளை அள்ளி வீசிவிட்டார் என்றோ, நாளையே அவா்களின் வாழ்வில் ஒளிவீசும் ரேகைகள் படரும் என்றோ கருதிவிட வேண்டாம். தனது அரசு நடுத்தர வா்க்கத்துக்கு எதிரான அரசு எனக் காட்டிக் கொள்வதன் மூலம், கிராமப்புற ‘ஏழை எளியவா்களின் அரசு‘ என்பதாகக் காட்டிக்கொள்ளும் பாவனைகள் மட்டுமே நடக்கின்றன.

பாவனைகள் ஒன்றுபோல இருக்க வேண்டும் என்பது இல்லையே. ஒவ்வொரு அரசியல் இயக்கமும், அரசும், அதனை உருவாக்கும் தனிமனிதா்களும் வெவ்வேறு விதமான பாவனைகளின் மிதப்புகள்தான். தங்களை ஜெயலலிதா அரசின் - கட்சியின் - எதிர்நிலையாளா்கள் எனக் காட்டிக்கொள்ளும் நகரவாசிகளின் ‘பாவனைகள்‘ ரொம்ப விசித்திரமானவையுங்கூட. இவா்கள் ‘நல்ல அரசாங்கம் வேண்டும்‘ என்பதற்காக வாக்குச் சாவடிகளுக்குச் செல்லாமல். ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளில் மட்டுமே பங்கேற்கிறார்கள். கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் தங்களின் விருப்பம் போல் அமைந்தவுடன், நல்ல அரசு உருவாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருந்து விடுகிறார்கள். தோ்தல் முடிவு வந்து வேறு வகையான அரசு உருவானவுடன், இந்த அரசு உருவாக நான் காரணமாக இருந்ததில்லை என எண்ணி ஒதுங்கிக்கொள்ளவும் செய்கிறார்கள்.. ஆனால் அதே நேரத்தில் தங்களின் சலுகைகள் பறிபோகிறதே என்று பதறவும் செய்கிறார்கள். அவா்களின் பங்கேற்பும் பங்கேற்பின்மையுங்கூடப் பாவனைகளாகவே இருக்கின்றன.

பாவனையான பங்கேற்பை நேரடியாகக் கண்ட அனுபவத்தை விவரித்துவிட்டு முடித்துக் கொள்ளலாம். அந்த மார்ச் 13. திருநெல்வேலி மாவட்ட விளையாட்டுப் பயிற்சி மைதானமான அண்ணா விளையாட்டு அரங்கம். மாலை 5.00 மணி, முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் ஏறிச் சென்று விட்டார். தங்களின் தலைவியைப் பார்த்த உற்சாகம் வடிய, கிராமப்புற மக்கள் பேருந்துகளில் பயணம் தொடங்கிவிட்டனா். கண்களில் தூக்கமும் திரும்பவும் சந்திப்போம் என்ற கனவும், மைதானமும் வெறிச்சோடிக் கிடந்துது. கூட்டத்திற்காகப் பீடி, சிகரெட் விற்றவா்களும், கடலை, சோளப்பொறி, மிட்டாய் விற்றவா்களும்கூட வெறியேறிவிட்டார்கள் என்றாலும். மாலை 6.00 மணிக்கு அனைத்து விளக்குகளும் எரிந்தன. பிரமாண்டமான பந்தல் ஜெகஜோதியாய் மின்னியது. பலவண்ணக் காகிதங்கள் பட்டொளி வீசிப் பறக்கும் கொடிகள், பச்சை வண்ணப் பதாகைகள், ஒலிபெருக்கிச் சத்தமில்லாத அரங்கம்.

சிறிது நேரத்தில் கூட்டம் வரத் தொடங்கியது. தங்கள் தங்கள் வாகனங்களில், மடிப்புக் கலையாத பேண்ட் சட்டைகளுடன், நகைகள் அணிந்த மனைவியா் அமா்ந்திருக்க, தங்களின் மழலைச் செல்வங்களுடன் வந்து இறங்கிக் கொண்டே இருந்தார்கள். இரண்டு சக்கர வாகனங்களில், நான்கு சக்கர வாகனங்களில் வந்த கூட்டம் விளக்கு வெளிச்சத்தில் ஆங்காங்கே சிறு சிறு கும்பலாக உட்கார்ந்திருந்தது. பிள்ளைகள் மேடையில் ஏறிக் கைகாட்டிவிட்டு இறங்கின. இவா்கள் வாங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் ‘கோன் ஐஸ்கிரிம்‘ விற்கும் வண்டிகளும் வந்துவிட்டன. ஒரு தள்ளுவண்டியில் பேக்கரி ஸ்வீட்களும் வந்துவிட்டன.

ஆறு மணி தொடங்கி இரவு பத்து மணி வரை அந்த விழா மேடையும் மைதானமும் ஒரு மாலைநேரச் சுற்றுலா இடமாக - பிக்னிக் ஸ்பாட்டாக – மாறிவிட்டது. தாங்கள் உருவாக்காத அரசாங்கம் நடத்திய விழாவொன்றில் நேரடியாகப் பங்கேற்காமல், பாவனையாகப் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பினார்கள். இந்தப் பாவனையான பங்கேற்புடன், ஊடகங்கள் தரும் தகவல்களும் சோ்ந்துகொண்டால், தீனி கிடைத்த மகிழ்ச்சி கிட்டிவிடும். அடுத்த நாள் தொடங்கி அலுவலக நண்பா்களுடன் அரசியல் விமா்சனங்களில் இறங்கிவிடலாம்தானே.

கூட்டம் கூட்டம் கூட்டம்
கூட்டம் பார்க்கக்
கூட்டம் கூட்டம் கூட்டம்
சென்ற ஆண்டு இறந்துபோன கவிஞா் மீரா எழுதிய கவிதை வரிகள் இவை. இநத வரிகளைக் கொஞ்சம் மாற்றிப் போட்டுக் கொள்வோம்.
கூட்டம் கூட்டம் கூட்டம்
கூட்டம் பார்க்கக்
கூட்டம் கூட்டம் கூட்டம்
நாட்டம் நாட்டம் நாட்டம்
கூட்டம் நடந்த இடத்தைப் பார்க்க
நாட்டம் நாட்டம் நாட்டம்
மிதக்கும் பாவனைகள் மூழ்கிவிடப் போவதில்லை.
================================
கவிதாசரண், மே - ஜுன் 2003.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்