எம்.கோபாலகிருஷ்ணன்: இயற்பண்பியல் எழுத்தின் வலிமை

ஒடக்காடு பெரியப்பா வீட்டில் ஓர் இரவு- இப்படியொரு தலைப்பில் ஒரு சிறுகதையை இம்மாத (டிசம்பர்/24) அந்திமழை வெளியிட்டுள்ளது. எழுதியவர் எம்.கோபாலகிருஷ்ணன் இந்தக் கதையை வாசித்து முடித்தவுடன் கடந்த மாதம் -நவம்பர் - காலச்சுவடுவில் வந்திருந்த அவரது கதையை வாசிக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. அந்தக் கதையின் தலைப்பு: சுழல் .அந்தக் கதையையும் வாசிக்கவேண்டும் என்று தோன்றியது. அப்படித் தோன்றியதற்கு ஒரு காரணம் இருந்தது. இரண்டுமே எனது மாணவப்பருவத்தைக் காலப்பின்னணியாகக் கொண்டிருந்தன என்பது.   அத்தோடு இயற்பண்புவாத எழுத்து நுட்பத்தைக் கைவிடாதவர் எம்.கோபாலகிருஷ்ணன் என்பதும் இன்னொரு காரணம்.
கலை,இலக்கிய இயக்கங்கள் அல்லது போக்குகள் ஒவ்வொன்றும் எல்லா இலக்கிய வடிவத்திற்கும் பொருத்தமானவை என்று சொல்வதற்கில்லை. ஓவியத்திலும் சிற்பக்கலையிலும் எல்லாவகை வெளிப்பாடுகளும் உள்ளன. இலக்கியப்பனுவல்களிலும்கூடக் கவிதை என்னும் வெளிப்பாட்டு வடிவத்தில் எல்லாவகையான இலக்கியப்போக்குகளும் செயல்பட்டுள்ளன. அதே நேரம் வேறுபாடுகளும் உள்ளன. மரபுக்கவிதைகளில் அதிகம் செயல்பட்டவை. செவ்வியலும் புனைவியலும். இயற்பண்பியலும் நடப்பியலும் முதன்மையான போக்காக மாறியபோது மரபுக்கவிதை வடிவம் பின்னுக்குப் போய், புதுக்கவிதை வடிவம் முன்னுக்கு வந்தது. அதற்குள்ளும் நவீனத்துவக்கூறுகளை எழுதத்தொடங்கிய புதுக்கவிதை, நடப்பியல் அல்லாத இலக்கியப்போக்குகளுக்குரியதாக மாறியது. மிகைநடப்பியல், இருத்தலியல், அபத்தவியல், குறியீட்டியல் போன்றன கவிதையில் செலுத்திய ஆதிக்கம் அதிகம். இயற்பண்பியல்வாதத் தன்மை அரங்கக்கலையில் சாத்தியமே இல்லையென உடனே கைவிடப்பெற்றது, புனைகதை வடிவம் அதிகமும் வெளிப்பட்ட கலை, இலக்கியப்போக்குகள் எவையென்றால் இயற்பண்பியல்வாதமும் நடப்பியல்வாதமும் தான். எல்லாவகையான நடப்பியல்வாதப் போக்கிலும் புனைகதைகள் எழுதப்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. இவ்விரண்டு போக்கிலும் சிறுகதைகள், நாவல்கள் இப்போதும் எழுதப்படுகின்றன.

“நாமென்ன செய்துவிட முடியும்; அவை அப்படி நடந்துவிடுகின்றன” என்ற விசாரமும் விளக்கமும் கிடைக்கக்கூடிய எழுத்துமுறை இயற்பண்பியல்(NATURALISM). இதிலிருந்து வேறுபட்டது நடப்பியல் (REALISM ) எழுதப்படும் நிகழ்வுகளின் வழியாகப் பாத்திரங்களுக்கு ஒருவித லட்சியத்தன்மையும் விமரிசனப் பார்வையும் உருவாக்கித் தருகிறது. உண்டாக்கப்படுவதால், இயற்பண்பியல்வாத எழுத்தைவிட, நடப்பியல் வாதம் நமது காலத்தின் எழுத்து முறையாகவும் அதிகமான எழுத்தாளர்களால் கைக்கொள்ளப்படும் போக்காகவும் இருக்கிறது. அதனாலேயே அதிகக் கவனம் பெறுவதாக இருக்கிறது.

இரண்டு போக்குமே மனிதர்களின் பண்புகளையும் நடத்தைகளையும் அன்றாட நிகழ்வுகளை எழுதிக்காட்டும் வெளிப்பாட்டு வடிவத்தையே பின்பற்றுகின்றன. ஆனால் நடப்பியல் நிகழ்வுகளைத் தேர்வு செய்து தருகின்றது. ஆனால் இயல்பண்பியல், வரிசைமாற்றாமல் எழுதிக்காட்டுகிறது. இடவருணனையில் கூட உருவகம், உவமம் போன்றனவற்றைப் பயன்படுத்தாமல் எழுதுவதால், கற்பனை இல்லாத - வறட்சித்தன்மை கொண்ட எழுத்தாகக் கருதப்படுகிறது. ஆனாலும் அதில் எழுதப்படும் காலத்தின் வழியே நுட்பம் ஒன்று உண்டாக்கப்பட்டுக் கதைத் தன்மையை உருவாக்கிவிடுகின்றனர் இயற்பண்பியல் எழுத்தாளர்கள். நடப்பியல் எழுத்தாளர்கள், அவ்வெழுத்துமுறையின் வழியாக உலக நடப்பிற்கான காரணங்களையும், அதனை மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையையும் உண்டாக்கப் பார்க்கின்றனர். அந்த நம்பிக்கை உண்டாக்காத எழுத்தைத் தொடர்ந்து எழுதிக் காட்டுபவராக எம். கோபாலகிருஷ்ணன் தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறார். ஏனெனில் அவர் தன்னை இயல்பண்புவாத எழுத்தாளராகக் கருதிக்கொள்கிறார்.

இப்போது வாசித்த ஒடக்காடு பெரியப்பா வீட்டில் ஓர் இரவு, சுழல் ஆகிய இரண்டு கதைகளில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களின் செயல்களும், பங்கேற்புகளும், அவை நடக்கும் வெளிகளும் புனைவற்ற மொழியில் விவரிக்கப்படுகின்றன. ஆனால் காலம் சார்ந்து ஒரு விவாதமும் விசாரணையும் எழுப்பப்பட்டுக் கதையை வாசிப்பவர்களிடம் அவை சார்ந்த உள்ளார்ந்த எண்ணங்கள் தூண்டப்படுகின்றன.

ஒரு சிறிய விடுமுறையில் பெரியப்பா வீட்டிற்குப் போய் இரண்டு நாட்கள் தங்கிப் புது அனுபவங்களைப் பெற்றுத் திரும்பலாம்; இங்கே போல அங்கே வேலையெல்லாம் செய்ய வேண்டியதில்லை என எதிர்பார்ப்போடு சென்ற சிறுவர்கள் போன வேகத்தில் – 24 மணி நேரத்திற்குள் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் திரும்ப நேரிடுகிறது என்பதுதான் கதை. கதையின் தொடக்கம் இப்படி எழுதப்பட்டிருக்கிறது:

அரையாண்டுத் தேர்வு விடுமுறையின்போது தான் முதன்முதலாக நானும் தம்பியும் ஒடக்காடு பெரியப்பா வீட்டுக்குச் சென்றோம். நான் ஒன்பதாம் வகுப்பிலும் தம்பி ஐந்திலும் படித்துக் கொண்டிருந்தோம். சாயங்காலம் ஐந்து மணிவாக்கில் அப்பாதான் சைக்கிளில் வைத்து அழைத்துச் சென்றார். அவருக்கு அத்தனை விருப்பம் இல்லையென்றாலும் வற்புறுத்தலால் ஒப்புக்கொண்டார். வீட்டையும் கண்ணகி நகர், நெசவாளர் காலனி எல்லைகளைத் தாண்டாத எங்களுக்கு புதிய இடத்துக்குச் செல்லும் ஆர்வமிருந்தது.

‘அம்மாவோ அப்பாவோ உடனில்லாமல் சொந்தங்களின் வீடுகளுக்குச் சென்று இரவு தங்கியதில்லை என்பதால் கொஞ்சம் பயமுமிருந்தது. இரண்டு நாள் இருந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் வந்துவிடலாம் என்பதுதான் திட்டம்

இந்தத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஒரு பகல் மட்டும் இருந்தவர்கள் யாரிடம் சொல்லிக் கொள்ளாமல் நடந்தே திரும்பிவந்துவிடுகிறார்கள். அதைக் கதையின் முடிவு சொல்கிறது.

சிறிது நேரங்கழித்து மெல்லக் கண்ணைத் திறந்து பார்த்தேன். யாருமில்லை. ஓசைப்படாமல் எழுந்து தலையை மட்டும் நீட்டி வெளியே பார்த்தபோது பெரியப்பா சைக்கிளைப் பிடித்தபடி அப்பாவிடம் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவசரமாய் ஓடிவந்து பாயில் படுத்துப் போர்வையைப் போர்த்திக் கொண்டேன்.

இரண்டு நாள் இருப்பதற்காக வந்த சிறுவர்கள், காணாமல் போனதால் அவர்களைத் தேடிவந்து பார்க்கும் பெரியப்பாவின் நிலையைச் சொல்லும் அந்தக் கூற்றோடு கதை முடிகிறது.

இரண்டு நாட்கள் தங்கல் என்பது ஒருநாளுக்கும் முன்பே ஏன் நிகழ்ந்தது என்பதில் அந்த வீட்டு உறுப்பினர்கள் உண்டாக்கிய களேபரங்கள் அடுக்கப்பட்டுள்ளன. வீட்டின் நிகழ்வுகளில் பெரியப்பா, பெரியம்மாவின் உழைப்பு இருக்கிறது; வாடகைக்காகவும் கடனுக்காகவும் வீட்டுச் சொந்தக்காரரின் கெடுபிடி இருக்கிறது. எதையும் பகிர்ந்து உண்ணாமல் பறித்துக்கொண்டோடும் அடாவடித்தனம் இருக்கிறது. பெற்றோர்களின் கட்டுப்பாடில்லாமல் தன் விருப்பம் போல் வேலைக்குப் போதல், போகாமல் இருத்தல் என்ற அலட்சியும் இருக்கிறது; வீட்டின் வறுமையைப் புரிந்துகொள்ளாத நிலை இருக்கிறது. உச்சமாகக் குடியும் அடிதடியும் வன்முறையுமாக ஒவ்வொரு நாளும் கழிகிறது என்பது சொல்லப்படுகிறது. அப்படிச் சொல்லும்போது பாத்திரங்களின் குணநலன்களைக் குறித்த பார்வையை எழுத்தாளரின் மொழியின் வழியாகச் சொல்லவில்லை உரையாடல்கள் வழியாகக் காட்சிப்படுத்துகிறார். அதில் உச்சமான ஒன்று:

‘விறகுக் கட்டைய எடுத்து அடிக்கிறயா? வா நீ வந்து அடி பார்க்கலாம். பெரியம்மாவின் கையிலும் மஞ்சள் துலங்கும் விறகுக்கட்டை’

இந்த உச்சநிலைக்காட்சி தான் அவர்களைக் கிளம்பச் செய்கிறது.

“புஷ்பா தியேட்டரில் ‘எங்க பாட்டன் சொத்து’. பெரியப்பாவின் கையில் எட்டு டிக்கெட்டுகள். தம்பிக்குப் பிடித்த ஜெய்சங்கர் படம். அதைப் பார்க்கும் ஆசைகூட இல்லாமல் கிளம்புகிறார்கள். “இந்தக் களேபரத்துக்குள் நான் முன்வாசலுக்கு வந்திருந்தேன். எனக்கு முன்னால் நடுங்கியபடி தம்பி நடந்தான். மங்கலான வெளிச்சம். யாரும் பார்க்கவில்லை. பின்னால் திரும்பிப் பார்த்தேன். கூச்சலும் அமளியுமாய் அவர்கள் நால்வரும் இன்னும் ஓய்ந்திருக்கவில்லை” என்று சொல்லிவிட்டுக் கிளம்பி வீட்டுக்கு வந்து சேர்கிறார்கள்.

ஒடக்காடு பெரியப்பாவின் வீட்டுக்குச் சைக்கிளில் போன சிறுவர்கள், நடந்தே வரும் காட்சியை எந்தக் கூடுதல் குறைவும் இல்லாமல் தனது இயல்பான மொழியில் எழுதுகிறார்., பெரியப்பாவின் வீட்டில் தங்கியிருந்தபோதும், அவர் வேலைபார்க்கும் மில்லின் காட்சிகளையும் அந்தச் சிறுவர்கள் பார்த்த நிகழ்வுகளாக - அவர்களின் பார்வையில் வாசிப்பவர்களுக்குக் காட்சியாக்கியிருக்கிறார். இந்த விவரணையிலும் காட்சிப்படுத்துதலிலும் இயல்புக்கு மீறிய சொற்களோ, வர்ணனைகளோ, உவமைப்படுத்துதலோ, உணர்ச்சியைத் தூண்டும் விதமான வியங்கோள் சொற்களோ இல்லை. அப்படி எழுதுவதுதான் எம்.கோபாலகிருஷ்ணனின் எழுத்துக்கலையாக இருக்கிறது.

காலச்சுவடில் வந்துள்ள சுழல் கதையிலும் இந்த எழுத்துக்கலையை வாசிக்க முடிகிறது. அந்தக் கதையின் களம் கிரிக்கெட் மைதானம். விளையாட்டுக்காகவும் பயிற்சிக்காகவும் வந்து பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர்களே பாத்திரங்கள். தனக்குக் கிடைக்காத வாய்ப்பைத் தன்னிடம் பயிற்சி பெறும் ஒருவனுக்காகவது பெற்றுத் தந்துவிட நினைக்கும் சுழற்பந்துப் பயிற்சியாளர் சுதாகரின் தோற்றுப்போன வாழ்க்கைச் சுழலே கதையின் முக்கியமான விவாதம். இந்திய அணியில் ஆகச்சிறந்த சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவராக இடமளிக்கப்பட்டிருக்க வேண்டியவர் சுதாகர்; ஆனால் இடமளிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டார் . அவரால் உருவாக்கப்பட்ட சுதீப்புக்கும் அப்படியொரு நிலை ஏற்படும்போது உடைந்து போகின்றார். அவனது கிரிக்கெட் ஆர்வம், நடுவராகவாவது மைதானத்தில் இருக்கவேண்டும் என நினைக்கிறது. ஆனால் அவனைக் கிரிக்கெட்டை விட்டே வெளியேறிவிடு என அறிவுறுத்துகிறார் சுதாகர்..

கிரிக்கெட் என்றில்லாமல், எல்லாவிதமான போட்டிகளிலும் தேர்வு செய்யப்படுகிறவர்கள், தகுதியானவர்கள் என ஏற்றுக்கொள்வதின் வழியாக மனித மனம் தன்னையே தேற்றிக்கொள்கிறது. அப்படித் தேற்றிக்கொள்ளும் மனம் சிக்கிக்கொள்வது ஒருவிதச் சுழலில். ஒரு மட்டையாளனின் இருப்பும் வெளியேற்றமும் நடுவரின் கை உயர்த்துதல் இருக்கிறது. அதேபோல் ஓர் அணியில் இடம்பிடிப்பதும் ஒதுக்கப்படுவதும் அணித்தேர்வாளர்களின் விருப்பு, வெறுப்பில் அல்லது மனச்சாய்வில் தான் இருக்கிறது. இந்த உண்மையை ஏற்கெனவே அறிந்திருந்தவர் சுதாகர், அந்த அனுபவத்தைத் தனது சீடன் சுதீப்புக்குச் சொல்லும்போது அவரிடம் வெளிப்படும் கசப்புணர்வைக் கடுமையான சொற்கள் எதுவுமின்றி, ஒரு புகைப்படத்தைக் காட்சிப்படுத்துவதின் வழியாக எழுதிக்காட்டியுள்ளார் எழுத்தாளர்.

சுழல் பந்து வீச்சுக்கானக் கடும் பயிற்சிகளை எடுத்துவிட்டு ஆட்டக்கள நடுவராகத் தொடரும் சுதீப்பின் ஒருநாள் நிகழ்வுகள் தான் கதை. நடுவராக இருப்பதற்குக் கூட ஒத்துழைக்காக உடலாக அவனது உடல் மாறிவிட்ட நிலையைக் கதையின் ஆரம்ப வரிகள் காட்டுகின்றன.

வட்டத் தொப்பியைச் சரி செய்தபடி கால்களை மடக்கிப் பாதங்களை ஊன்றி உட்கார்ந்தார் சுதீப். சுட்டெரிக்கும் வெயில். கண்ணுயர்த்திப் பார்க்க முடியவில்லை. மட்டையாளர்கள் இருவரும் தலைக்கவசத்தைக் கழற்றிவிட்டுத் தண்ணீர் பருகிக்கொண்டிருந்தனர்.

இயலாமையோடு அந்த விளையாட்டின் ஒரு பகுதியாக இருப்பதில் கிடைக்கும் சிறிய சந்தோசத்தோடு வெளியேறும் சித்திரத்தைக் கதையின் முடிவில் எழுதிக்காட்டுகின்றார்:

நிமிர்ந்து பார்த்தார் சுதீப். கூடாரத்திலும் வெளியேயும் நின்றுகொண்டிருந்த வீரர்களை ஏறிட்டார். “தெரியல. ஆனா, என்னவோ கெடைச்ச மாதிரி இருக்கு.” நிதானமாகச் சொல்லிவிட்டு வண்டிகளின் வரிசையில் பரிதாபமாய் நின்ற தன் பழைய ஸ்கூட்டியை நோக்கிச் சென்றார்.

இந்தத் தொடக்கத்திற்கும் முடிவுக்கும் இடையில் சுதாகர் என்ற தோற்றுப்போன சுழல் பந்து வீரரின் மனக்கசப்பும், தான் விட்டதைத் தனது சீடன் சுதீப்பைக் கொண்டு பிடித்துக்காட்ட நினைத்த வீறாப்பும் பயிற்சியின் காட்சிகளாகக் கதையின் காட்சிகளாக விரிக்கப்பட்டுள்ளன. சுதீப்பிற்கு வாய்ப்பில்லாமல் போனது, அவனது திறமையின்மையால் அல்ல; வாய்ப்புக் கிடைக்காததால் என்பது ஒரு உரையாடலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது

“அவன் ஆடினான். நீ ஆடலை. ஆட வாய்ப்பு இல்லை. அவனுக்கு காட் ஃபாதர் இருக்காங்க. உனக்கு இல்லை. அவ்வளவுதான்.”

சுதீப் கசப்புடன் சிரித்தான்.

“அந்தப் படத்தைப் பாத்தியா?” சுவரைக் காட்டினார். நால்வர் தோளணைத்து நிற்கும் பழைய கருப்பு வெள்ளைப் படம். எழுந்து உற்றுப் பார்த்தான் “இந்தப் படத்துல நீங்க இல்லியே.”

“ம். இந்தியாவின் நான்கு சுழல் மன்னர்கள். பிரசன்னா, ராகவன், சந்திரசேகர், பிஷன் சிங் பேடி. கிரிக்கெட் உலகையே சுழலில் வெற்றி கொண்டவர்கள்.”

“ஆமா கோச். கொஞ்சம் அடையாளம் தெரியுது. ஆனா கடைசில யாரோ இருக்காங்க. பாதி உடம்பு மட்டுந்தான் தெரியுது.”

  இயற்பண்புவாதக் கதைசொல்லிகள் கதை நிகழ்வுகளை ஒரு காமிராவின் பார்வையில் காட்சிப்படுத்துவதோடு, பாத்திரங்களின் மன உணர்வைச் சொல்லும் உரையாடல்களின் இயல்பான சொற்கள் வழியாகவும் அந்த அழகியலை உருவாக்குகிறார்கள். நீண்ட காலமாகத் தமிழில் நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதிவரும் எம்.கோபாலகிருஷ்ணனின் எழுத்துமுறை, இயற்பண்புவாத அழகியலில் வெளிப்படும் எழுத்துமுறை. அதை இந்த இரண்டு கதைகளை வாசித்தபோது உணரமுடிகின்றது.











கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சம்ஸ்க்ருதம் : செவ்வியல் மொழியாகவும் ஆதிக்கமொழியாகவும்

தங்கலான்: விடுதலை அரசியலின் கருவி

திறனாய்வாளர் ராஜ்கௌதமனின் நினைவின் ஊடாக....