சிலப்பதிகாரம் என்னும் நாடகப்பனுவல்
தமிழில் எழுதப்பட்டுள்ள பனுவல்களில் உலகப்பரப்பிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பனுவல் சிலப்பதிகாரம். சிலப்பதிகாரத்தை அப்படியே மொழிபெயர்த்துத் தருவதோடு அதன் மீதான விமரிசனங்களும் உலகத்திற்குச் சொல்லப்படவேண்டும். இங்கே சிலப்பதிகாரத்தை நாடகப்பனுவலாக எப்படி வாசிக்கவேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலக்கிய விமரிசனம்
மூன்று பெருந்துறைகளை உடையது.
1. நூலின் நயங்களை அறிவித்து மகிழ்விப்பது
2. நூலின் பகுதிகள்,
கோர்வை,
தொகுப்பு,
ஆகியனவற்றைப் பேசி
அவற்றின் பொருத்தங்களை விளக்குவது
3. இலக்கியவரலாற்றில் அந்நூலின் இடம்,
ஒரு மொழியின் கலை வளர்ச்சியில்
அது ஆற்றும் பங்கு, அதன் வழியாக உலக இலக்கிய
வரலாற்றில் அதற்கான இடத்தைப் பெற முயலும் பாங்கு என அவற்றைச் சொல்லலாம். இம்மூன்றையும்
தனித்தனியாக நயம்பாராட்டும் திறனாய்வு, பகுப்புமுறைத் திறனாய்வு,
வரலாற்றுமுறைத் திறனாய்வு
எனப் பேசவும் செய்யலாம். ஆனால் சிறந்த திறனாய்வு ஒன்று இம்மூன்றையும் செய்யும் போதே
சிறப்படைகிறது.
1)
ஒரு சிறந்த தலைவனுடைய
சரித்திரத்தை முற்றிலும் கூறி ,
2)
இழுமென் மொழியால் இயன்று,
3)
இசைவு சிறந்து ,
4)
அளவால் நீண்டிருப்பினும்
படிப்பவர்க்கு கதையின் முதல், நடு,
இறுதிகள் இலகுவில்
பிடிபடும்படி அமைந்து கிடக்கும் நூல்
என்று கருதுகிறார்
அரிஸ்டாடில்
1)
கவி கூற்றுக்கு இடமில்லாமல்
பாத்திரங்களின் பேச்சுகளாலேயே கதையைக் கூறுவதாய்
2)
காவியங்களைப் போலன்றி
அளவாற் சிறியதாய்
3)
அச்சத்தை அல்லது அருவருப்பைத்
தோற்றுவிக்கக் கூடிய நிகழ்ச்சிகளைச் சித்திரிக்காமல் ,
பேச்சால் உணர வைப்பதாய்
4)
காரணகாரியத் தொடர்புள்ள
5)
ஒரு நாளெல்லைக்குள்
நிகழக் கூடிய நிகழ்ச்சிகளையே சித்திரிப்பதாய் இருக்க வேண்டும் என்பது அரிஸ்டாடிலின்
கருத்து,
நாடகக்கட்டமைப்பு
1. தோற்றுவாய் அல்லது ஆரம்பம் (Introduction)
2. சிக்கல் அல்லது போராட்ட வளர்ச்சி (Crisis of Action) (போராட்டம் இரண்டு வகைப்படும். வெளிப்படைப் போராட்டம், உள்முகப் போராட்டம்
3. திருப்புமையம் அல்லது போராட்டத்தின் உச்சி
(Turnig point or Conflict)
4. போராட்டத்தின் எதிர் வளர்ச்சி அல்லது இறக்கம்
(Falling Action)
5. வீழ்ச்சி அல்லது அழிவு (End)இறுதி இரண்டு பகுதிகளும் இணைந்து விளைவு (Dénouement) என்றும் அழைக்கப்படும் நாடகக் கட்டமைப்புக்குத் தேவை போராட்டம் தான். இதுவே நவீன மொழியில் முரண் என அழைக்கப்படுகிறது.
போராட்டத்தின் தொடக்கத்திற்குத்
தேவையான சூழ்நிலையை உருவாக்கும் இடத்தையே ஆரம்பம் அல்லது தோற்றுவாய் எனக் கூறுகிறோம்.
அந்த இடம் தான் போராட்டத்தில் பங்கெடுக்கும் பாத்திரங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறது.
அப்பாத்திரங்களின் நிலை, இயல்புகள்,
வாழ்க்கை குறித்த பார்வைகள்
முதலியவற்றை விளக்குவதன் வாயிலாக அப்பாத்திரங்கள் சந்தித்துக் கொள்வதால் உண்டாகும்
விளைவுகள் எத்தகையதாயிருக்கும் என்று வாசிக்கிறவனைச் சிந்திக்க வைக்கிறது. அதன் வழியாக
உருவாக்கப்படும் ஆவலே வாசிப்பவர்களை போராட்டத்தை விருப்பத்தோடு கவனிக்கத் தூண்டுகிறது.
போராட்டம் ஒன்று நிச்சயமாய் ஏற்படப்போகிறது என்ற உறுதியை உண்டாக்குவது நாடக ஆரம்பம்
ஆகும்.
தோற்றுவாய் அல்லது
ஆரம்பம் - நல்ல தோற்றுவாய் என்பது போராட்டம் ஒன்று தொடங்கும் என்பதைக்
காட்டுவதாய் அமைய வேண்டும் . அத்துடன் போராட்டத்தில் பங்கெடுக்கும் பாத்திரங்களின்
அறிமுகமும் சிறப்பாக அமையும். அப்பாத்திரங்களின் முறை,
குணம்,
நிலைப்பாடு போன்றன
வெளிப்படும்
மாநகர்க் கீந்தார்
மணம்,
காதலர்ப் பிரியாமல்
கவவுக்கை நெகிழாமல் தீதறுக.
யாண்டு சில கழிந்தன.
ஆரம்பம் சிறிதாகவோ,
பெரியதாகவோ இருக்கலாம்;
அதன் முடிவு படிப்பவர்க்கும்
பார்ப்பவர்க்கும் அடுத்து ஒரு சிக்கலை அடையப்போகிறது என்ற ஆர்வத்தைத் தரவேண்டும். நாடக
ஆரம்பத்தை அடுத்து அமையும் போராட்டத்திற்கும் ஆரம்பத்திற்கும் இடையே கால இடைவெளியைக்
கூறி நகர்த்துவது சிறந்த நாடகங்களின் இயல்பு - சேக்ஸ்பியரின் லியர் நாடகத்தில் நாடு
பிரிக்கப்பட்ட பதினைந்து நாட்களுக்குப் பின் லியரின் போராட்ட வாழ்க்கை தொடங்கும். ஹாம்லெட்டில்
இரண்டு மாதங்கள் கழிந்தது என்பார் நாடகாசிரியர். இளங்கோ “
யாண்டு சில கழிந்தன”
எனக் கூறுகின்றார்.
பெரும் பகையுடைய இரு
குடும்பத்துப் பிள்ளைகள் விருந்தில் சந்தித்து மனம் பரிமாறிக் கொள்ளுதல் நல்ல உதாரணம்.
- சேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியட்டும்
உதயணன் மறுமணம் செய்ய
இருக்கும் பத்மாவதியிடமே முதல் மனைவியை அடைக்கலமாக யௌகந்தராயன் விடுவது இன்னொரு உதாரணம்
-பாஸனின் வாசவத்தையின் கனவு
போராட்டம் அல்லது முரண்
நாடக ஆரம்பம் உருவாக்கிக்
காட்டும் சிக்கலைப் பெரிதாக்கிக் காட்டுவது போராட்டத்தின் அல்லது முரணின் இலக்கணம்.
நாடகத்தைப் பார்க்கும் போது வாசகர்களின் மனம் முழுவதும் ஈர்க்கப்படுவதற்குக் காரணமாக
இருப்பது பாத்திரமுரண் தான். பாத்திரங்களுக்கிடைய நடக்கும் போராட்டம் வெளிப்படை முரண்
எனப்படும். இதற்கு மாறாக ஒரு பாத்திரத்தின் மனத்திற்குள்ளேயே போராட்டம் இருப்பதாக அமைப்பது
அகநிலை முரண் எனப்படும். மேற்கத்திய நாடகங்களின் இருவகைக்கும் ஏராளமான எடுத்துக்காட்டுகள்
உள்ளன.
இப்சனின் பெரும்பாலான
நாடகங்கள் வெளிப்படை முரண்பாட்டைக் கொண்டவை. மக்கள் பகைவனில் ஸ்டாக்கோம் சகோதரர்களிடையே
நடக்கும் போராட்டம் வெளிப்படை முரண் தன்மையது. மக்கள் நலம் பேண வேண்டிய மேயர்,
மக்கள் நலனில் அக்கறை
கொண்ட மருத்துவர் எனப் பிரிந்து நிற்கும் சகோதரர்களிடம் முரண்பாடு வெளிப்படையாகத்தெரியும்.
தமிழ் உதாரணம் வேண்டுமென்றால்
அண்ணாவின் வேலைக்காரியையும், இந்திரா பார்த்தசாரதியின் ஒளரங்க சீப்பையும் சொல்லலாம். பணக்காரர் -
ஏழை என்ற முரண்பாட்டில் மேல் வேதாசலத்தையும் அமிர்தத்தையும் படைத்துக் காட்டியிருப்பார்
அண்ணா. தனயனை தாராவைக் கொன்று, தந்தை ஷாஜஹானைச்ச்
சிறையிலடைத்து ஆட்சியைக் கைப்பற்றியதைக் கொண்டு
கொடுங்கோலனாக வரலாற்றாசிரியர்களால் சுட்டப்படும் அவுரங்கசீப் எளிய வாழ்க்கை மீதும்
, மதக் கொள்கை மீதும், மக்களின் வாழ்க்கை
மீதும் அக்கறை கொண்டிருந்தான் எனக் காட்டுவதன் மூலம் முரண்பாட்டை உருவாக்கியிருப்பார்
இந்திரா பார்த்தசாரதி.
அகநிலைப் போராட்டங்கள்
அமையப் பெற்ற நாடகங்களாக சேக்ஸ்பியரின் லியர் மன்னனை உதாரணமாகக் காட்டலாம். காளிதாசனின்
சாகுந்தலம், கிரிஷ் கர்னாடின் யயாதி, பாதல் சர்க்காரின்
ஏவம் இந்திரஜித் போன்றன இந்திய உதாரணங்கள். நவீனத்தமிழ் நாடகங்கள் சிலவற்றை இதற்கு
உதாரணமாகச் சுட்டலாம். மு.ராமசுவாமி எழுதி இயக்கிய சாபம் விமோசனம் ஓர் உதாரணம். அதைவிடவும்
நல்ல உதாரணம் சிலப்பதிகாரம் தான்.
கண்ணகி ஊழ்வினையோடு
போராடுகிறாள் எனக் காட்டப்பட்டாலும் ஒவ்வொரு நிகழ்விலும் யாராவது ஒருவரை முன் நிறுத்திக்
கொண்டு தனக்குள்ளேயே போராட்டம் நடத்துகிறாள்.
அவளை விட்டுப் பிரிந்தாலும், கோவலன் அவளுக்கு எதிராக
இருக்கும் முரண்பாத்திரம் அல்ல. கோவலனைப் பிரித்தெடுத்துப் போன மாதவியும் எதிர்நிலைப்
பாத்திரமாகப் படைக்கப் படவில்லை. சிலம்புள
கொண்ம் என்று சொன்னவளிடம், மதுரைக்கு போகலாம்
என்று சொன்ன கோவலனோடு கிளம்பும் போது அவளுடைய மனதிற்குள் போராட்டம் நடக்கிறது. பாண்டியனின்
தீர்ப்பால் கோவலன் கொல்லப்பட்டாலும், அரசனைத் தனது எதிரியாக
நினைக்கவில்லை. அப்போதும் அவள் மனதில் போராட்டம் நடக்கிறது. அப்போராட்டமே ஊழின் காரணமாக
இது நடந்தது என வாளா இருக்கச் செய்யவில்லை.
முரண் நாடக அமைப்பில்
முக்கியமான ஓர் இயல்பு. அவல நாடகக் கதைகளின் முதலும் முடிவும் முரண்பட்டே இருக்கும்.
மணவாழ்க்கையில் தொடங்கிய - மனையறம்படுத்தலில் வளர்ந்த சிலம்பதிகாரம் கொலையிலும் ஆதரவற்ற
நிலையிலும் முடியும் அற்புதமான அவல நாடகம்
திருப்பு மையம் அல்லது
உச்சநிலை நோக்கிய விசை
ஒரு முரண்பாட்டின்
வளர்ச்சியில் உச்சநிலையை நோக்கிச் செல்வதற்கான சக்தி வெளிப்பட வேண்டும். அவற்றையே திருப்பு
மையம் அல்லது உச்சநிலை நோக்கிய பயணம் எனக் குறிப்படுவர். இதற்குக் காப்பிய ஆசிரியர்களும்
நாடக ஆசிரியர்களும் சில உத்திகளைப் பயன்படுத்துகின்றனர். முன் குறிப்புகள் சிலவற்றைத்
தருவதன் மூலம் வாசகர்களின் கவனத்தை அதனை நோக்கித் திருப்புகின்றனர். சேக்ஸியரின் மேக்பெத்தில்
இடம் பெறும் சூனியக்காரிகள் அதனைச் செய்கின்றனர். சிலம்பில் இடம் பெறும் கனவுகள் இந்தப்
பணியை நிறைவேற்றுகின்றன. கனாத்திறம் உரைத்த காதையிலும்,
மதுரைக்குப் போய்ச்
சேர்வதற்கு முன்பும் பல குறிப்புகளைத் தருகிறார் இளங்கோ.
உச்சநிலையே நாடக ஆசிரியனைத் திறமையானவனாகக்
காட்டும் கருவி. அதே நேரத்தில் வாசகர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்பாராத நிகழ்ச்சியை
உச்சநிலையாக அமைப்பதும் விரும்பத்தக்கதல்ல. கோவலனின் மரணமே சிலம்பின் உச்சநிலை. கோவலனுக்குத்
தீங்கு நேரும் என்னும் குறிப்புகள் முதலில் தரப்பட்டிருந்தாலும் கள்வன் எனக் குற்றம்
சுமத்தப்பட்டுக் கொல்லப்படுவான் என்பதை யாரும் முன்னரே யூகிக்க முடியாது. அதைத் தந்ததன்
மூலம் இளங்கோ தேர்ந்த நாடகாசிரியராக வெளிப்பட்டுள்ளார்.
முடிவு: நாடகம் உச்சநிலையை அடைந்தவுடனேயே அதன் முடிவு எத்தகையது என்பதை
அறியும் ஆவல் வாசகர்களுக்கு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. கதை படிக்கும் வாசகர்களில்
சிலர் முடிவை வாசித்து விட்டு விளைவைப் படிப்பது கூட உண்டு. அண்மைக்காலங்களில் தொலைக்காட்சித்
தொடர்களில் முடிவு என்னவாக இருக்கும் என்ற ஆவலை அதன் பார்வையாளர்கள் அறிந்து கொள்ள
ஆர்வமாயிருப்பதை நாம் அறிவோம். அதற்காகவோ முன்னோட்டங்களை முன்னரே காட்டுகின்றனர். கோவலன்
உடல் உயிர் பெறுவதும், மதுரை எரிவதும்,
கண்ணகி விண்ணுலகு செல்வதும்,
தெய்வமாக்கப்படுவதும்
முடிவு.
வீழ்நிலை: இம்முடிவு நோக்கிய வீழ்நிலைப் பயணத்திலும் முன் குறிப்புகள் இடம் பெறும். சூரியன் சான்று சொன்னது எதிர்வளர்ச்சியின் ஆரம்பம். மதுரைத் தெருக்களில் கண்ணகி நிலை கண்டு பலர் இரங்கியதும், சில முன் குறிப்புகள். அதே போல் பாண்டிமாதேவி கண்ட துர்நிமித்தங்கள் சில குறிப்புகள். அதே போல் மதுராபதித் தெய்வம் கூறும் பாண்டியர் வரலாறும் என முடிவுக்கு முன்னர் பலவிதமான வீழ்ச்சிக் குறிப்புகளை எழுதிக் காட்டியுள்ளார் இளங்கோ.
சிலப்பதிகாரத்தில்
நிகழ்ச்சிகள்
- கோவலன் - கண்ணகி திருமணம்
- கோவலன் கண்ணகியை விட்டுப்பிரிந்து மாதவியை அடைதல்
- மாதவியிடம் மனக்கசப்பு கொண்டு திரும்பவும் கண்ணகியை அடைதல்
- இருவரும் பொருளீட்டும் பொருட்டு மதுரைக்குப் பயணம் செய்தல்
- கோவலன் அங்குக் கள்வன் எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கொலை
செய்யப்படுகிறான்
- கண்ணகி, தன் கணவன் கோவலன்
கள்வனல்லன் என வாதிட்டு வென்று உயிர்விட்டாள்
நாடகக் காப்பியம்
கதைத்தலைவன் அல்லது
தலைவி யார் என்பதை முன்னிறுத்தாமல் திருமணத்தில் ஆரம்பிப்பதே காப்பியத்திலிருந்து சிலப்பதிகாரம்
வேறுபட்ட வகையான இலக்கியம் எனக் காட்டுகிறது.
நாடகத்தொடக்கம் போன்றது. எனவே தான் சிலப்பதிகாரத்தை நாடகக் காப்பியம் எனச் சுட்டுகின்றனர்.
மணிமேகலையும் கூட இப்படித்தான் தொடங்குகிறது. ஆனால் நாடகத்தின் மற்ற கூறுகள் எதுவும்
அதில் இல்லை. ஆனால் சிலப்பதிகாரம் பல வழிகளிலும் நாடகக் கூறுகளோடு அமைந்துள்ளது.
நாடகத்தின் மிக முக்கியமான
கூறு காலம். குறைவான காலத்தைக் கொண்டதாக இருப்பது நாடகத்திற்கு முக்கியம். ஒருநாள்
எல்லைக்குள் நடக்கும் நிகழ்வுகளை நாடகமாக்க வேண்டும் என மேனாட்டு நாடகக் கொள்கை கூறுகிறது.
ஆனால் வடமொழி மரபு காலவரையறை ஓர் அங்கத்திற்குரியது எனக் கூறுகிறது. அங்கங்களுக்கிடையே
கால விரிவு இருந்தால் சிக்கல் இல்லை .ஒவ்வோர் அங்கமும் ஒரு நாள் எல்லை என்பதைப் பின்பற்ற
வேண்டும் என வரையறை செய்கிறது.
காலம் பற்றிய பிரக்ஞை
இளங்கோவிற்கு உண்டு என்பதற்குப் பல குறிப்புகள் கிடைக்கின்றன. மனையறம் படுத்தலுக்கும் மாதவியை அடைந்ததற்குமிடையே
ஆண்டுகள் சில உண்டு. மாதவியோடு அவன் இருந்தா காலமும் ஆண்டுகள் சில கொண்டவை. புகார்க்காண்ட
நிகழ்ச்சிகள் எட்டாண்டு கால நிகழ்ச்சிகள் என்பதை நுட்பமாகப் படித்தால் உணரலாம்.
மதுரைக்காண்ட நிகழ்ச்சிகள்
ஒருபருவத்தில் - முதுவேனிற்பருவத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்புகள் உள்ளன. ஆனால் சில
நாட்களில் நடந்தது போல எழுதி வேகப்படுத்தியுள்ளார்.
செம்மொழி நிறுவனத்துடன்
இணைந்து உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள சிலப்பதிகாரம் பற்றிய பத்துநாள்
(23-11-2010-02-11-2010) பயிலரங்கிற்கான குறிப்புகள்
நாள்:26-11-2010
==========================================================================
குறிப்புகள்
கருத்துகள்