அரசுத்துறைகள் கவனிக்க வேண்டிய ஒன்று
இப்போது நான் பணியிலிருக்கும் கோவை குமரகுரு கல்லூரியின் ஆசிரியர்கள் அனைவரும் மேற்குத் தொடர்ச்சி மலைக் காட்டுக்குள் இருக்கும் ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.இந்த ஆண்டின் கல்லூரிக்கான இலக்குகள், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடங்கள், பாடங்களைத் தாண்டிய வாய்ப்புகள், நடத்தவேண்டிய விழாக்கள், கொண்டாட்டங்கள் குறித்த திட்டமிடல்களைக் கல்லூரி முதல்வரோடு கலந்தாலோசித்து துறையின் தலைவர்கள் செய்தார்கள். இரண்டாம் நாள் கல்லூரியின் அனைத்து ஆசிரியர்களும் சேர்ந்து கொள்ள முதல் நாள் திட்டமிடலை அனைவருக்கும் கடத்தி அதற்குள் ஒவ்வொருவரின் பங்கும் பணியுமெனக் கலந்தாலோசித்துக் கல்லூரியை முழுமையாக வளர்த்தெடுத்து அடுத்த ஆண்டுக்குக் கொண்டு போவது எப்படி என்ற உரையாடல்கள் நடந்தன.
இரண்டு முழுநாளிலும் திட்டமிடல்களும் விவாதங்களும் நடந்த நேரங்கள் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும். மற்ற நேரங்களில் -அந்தக்கூட்டத்திற்கு முன்னும் பின்னும் தங்கியிருந்த இடத்தைத்தோடு பொருத்திக் கொள்ளும் விதமாக நடை, இயற்கையை ரசித்தல், சின்னச்சின்ன விளையாட்டுகள், இரவில் நெருப்புக்காய்தல், பாட்டு, ஆட்டம், சாப்பாடு என நகர்ந்தன. இரண்டு நாளுக்கான செலவையும் கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது. இத்தகைய கூட்டங்கள் சங்கிலித்தொடர்ச்சி கொண்ட தகவல் தொழில் நுட்பத்தின் - கார்ப்பரேட் குழுமங்களின் வரவுக்குப்பின் தனியார் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் செயல்படுத்துகின்ற ஒன்று. இதனை அரசுத்துறைகள் ஏற்றுச் செயல்பட வேண்டுமெனச் சொன்னால் பொதுத்துறையையும் அரசுத் துறையையும் ஆதரிக்கும் பலரும் என்னை நோக்கிப் பாயவும் கூடும். எனது அனுபவத்தில் இம்மாதிரியான கூட்டங்கள் எல்லாவகை நிர்வாகத்திற்கும் பணியாற்றுதலுக்கும் தேவை என்றே சொல்வேன்.
நேற்றும் அதற்கு முந்திய நாளும் கல்லூரியின் ஆசிரியர்கள் வயது, பாலினம், பாடங்கள், மொழி என்ற வேறுபாடுகளைக் கடந்து பழகும் வாய்ப்புகள் இருந்தன. கல்லூரி வளாகத்திலிருந்து கிளம்பித் திரும்பி வளாகத்திற்கு வரும்வரை எல்லோரும் மாணவப் பருவத்து மனநிலையோடு இருந்தார்கள். இந்த மனநிலையில் இருக்கும் மாணாக்கர்களைப் பிரித்துப் பார்க்காமல் நண்பர்களாகப் பார்க்கும் நினைப்போடு ஆண்டுத் தொடக்கத்தைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை அதற்குள் இருக்கிறது.
இந்தியாவிற்குள் கார்ப்பரேட் குழும நடவடிக்கைகள் வராதபோதே இதனை நான் அனுபவித்திருக்கிறேன். 1987 இல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தற்காலிக ஆசிரியராகச் சேர்ந்தபோது கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முந்திய வாரம் ஆசிரியர்களைக் குடும்பத்தினரோடு கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று தங்கவைத்துக் கல்லூரியைப் பற்றியும் கல்வி ஆண்டு நடவடிக்கைகள் பற்றியும் கடவுளைப் பற்றியும் வேதாகமத்தின் இலக்கிய நயத்தைப்பற்றியும் அறியச் செய்ததை உணர்ந்தவன் நான். அப்படியான ஆரம்பம் எனது 30 ஆண்டுப் பணி அனுபவத்தில் அரசுத்துறைப் பல்கலைக்கழகங்களில் கிடைக்கவில்லை. மைய அரசுப்பல்கலைக்கழகமான புதுவைப்பல்கலைக் கழகத்தில் ஆயுதப்பூஜைக் கொண்டாட்ட நிகழ்வுகள் தான் அறிமுகமாகின. மனோன்மணியத்தில் அதனோடு ரம்ஜான், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சேர்ந்துகொண்டன. இவற்றோடு கிடாய் வெட்டிப் பலிகொடுக்கும் கோயில் ஒன்றும் வளாகத்தையொட்டி நிறுவப் பெற்று விருந்துகள் நடப்பதுண்டு. சமயச் சடங்குகள்உயிர்பெற்ற போது, தமிழ்த்துறை பொங்கல் விழாக் கொண்டாட்டத்தை முன்னெடுத்தது.
ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களின் நடைமுறை வேறானவை. சில ஆயிரம் பேருக்கும் அதிகமான எண்ணிக்கையில் இருக்கும் ஆசிரியர்களை ஒன்றாகத் திரட்டிக் கொண்டு ஆண்டைத் தொடங்குவதற்கான திட்டமிடல்களைச் செய்வதற்குப் பதிலாக ஒவ்வொரு கல்விப்புலமும் - Faculties- தனித்தனியே திட்டமிடல் கூட்டங்களை நடத்திக்கொள்ளும்
கருத்துகள்