தொடரும் இ.பா.வின் விமரிசனங்கள்
இந்திரா பார்த்தசாரதிக்கு இன்று வயது 92 முடிந்துவிட்டது. இப்போதும் எழுதிக்கொண்டே இருக்கிறார். இம்மாத உயிர்மையில் அவர் எழுதிய கதையின் தலைப்பு: பிரிவு. இரண்டு மாதங்களுக்கு முன்னால் மே மாதத்தில் இதே உயிர்மையில் எழுதிய கதையின் தலைப்பு : பொய்க்கடவுள்.
இந்திய மனங்களையும் வாழ்க்கையின் தருணங்களையும், அமைப்புகளையும் எப்போதும் விவாதப்படுத்தும் கதைகளை எழுதிக் கொண்டே இருப்பவர் இ.பா. என்பதை இவ்விரண்டு கதைகளும் உறுதி செய்துள்ளன. இம்மாதத்தில் அச்சாகியுள்ள பிரிவு கதையில் இந்தியக் குடும்ப வாழ்க்கையின் உள்ளார்ந்த இருப்பினை விவாதப்படுத்தியிருக்கிறார். பொய்க்கடவுள் என்ற முந்திய கதையில் நிகழ்கால அரசியலைக் குறியீடாக வைத்து விமரிசனம் செய்திருந்தார்.
நவீன வாழ்க்கையில் தர்க்கம் தனது ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. ஆனால் முந்திய வாழ்க்கையில் நம்பிக்கையே ஆதாரமாக இருந்தது. தர்க்கத்தின் மேலும் அறிவியல் பார்வைகளின் மேலும் தங்கள் குடும்ப வாழ்க்கையை அமைப்பதாக நம்பும் நவீன மனிதர்கள் குடும்ப வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். ஆனால் தர்க்கமற்ற நம்பிக்கையின் மேல் வாழ்க்கையைக் கட்டியெழுப்பிக்கொண்ட பழைய தலைமுறை எந்தச் சிக்கலும் இல்லாமல் வாழ்ந்து முடித்தார்கள் எனக் கதை அமைக்கப்பட்டுள்ளது. கேள்விகளற்று வாழ்ந்துவிட்டுப் போகும் இந்திய மரபான குடும்ப அமைப்பின் மீது கரிசனம் காட்டும் கதைதான் என்றாலும் இரண்டையும் ஒரே கதைக்குள் இரண்டு அடுக்குகளாக எழுதியிருக்கும் விதம் சிறப்பாக உள்ளது.
டைவர்ஸ் போன்ற புதிய நடைமுறைகளின் தேவைக்கான காரணத்தையும் தனிநபர் விருப்பங்களையும் விமரிசனப் பார்வையோடு அணுகும் இந்திரா பார்த்தசாரதி, மரபான இந்தியக் குடும்ப வாழ்க்கையில் கணவனும் மனைவியும் தங்களுக்குள் காட்டும் சார்புநிலையின் மேன்மையைக் கேள்விகளற்று ஏற்றுக் கொள்ளும் விதமாக எழுதுகிறார்.
“நான் இருக்கிறதா நீங்க நம்பறதும், நீங்க இருக்கிறதா நான் நம்பறதும் எல்லாமே நம்ம நம்பிக்கையைப் பொறுத்துத்தான்”.
”இது என்ன லாஜிக்”
“லாஜிக்க்குக்கும் நம்பிக்கைக்கும் சம்பந்தமேயில்லை. ‘லாஜிக்’கின் மரணந்தான் நம்பிக்கையின் ஜனனம்”
விவாகரத்து வழியாக உருவான பிரிவு -டைவர்ஸ்- என்னும் ஓரடுக்கையும், மனைவியின் பிரிவை -மரணத்தை - ஏற்றுக்கொள்ளாமல் அவளோடு இன்னும் வாழ்வதாக நம்பிக்கை கொண்டு அதே நினைவில் இருந்து கொண்டிருக்கும் முதியவரின் பிரிவாற்றாமையை இன்னொரு அடுக்காகவும் இணைவைத்து எழுதப்பட்ட முறையால் கதையை ஏற்கும்படி தூண்டுகிறார் இ.பா.
*******
மே மாதத்தில் வந்த ‘பொய்க்கடவுள் கதை’ அரசியல் விமரிசனத்திற்கான குறியீட்டுக்கதை.குறியீட்டுக் கதையை எழுதும் எழுத்தாளர்கள் பலரும் கதையின் நிகழ்வெளியைக் குறியீடாக மாற்றுவதின் வழியாக எல்லா நிகழ்வைகளையும் பாத்திரங்களையும் நடப்பில் இருக்கும் பாத்திரங்களாக இல்லாமல், குறியீட்டின் வழியாக நடப்பு மனிதர்களோடு பொருந்திப் போகும் பாத்திரங்களாக ஆக்கி விடுகிறார்கள். ஒரு நாட்டை விலங்குப் பண்ணையாக உருவகம் செய்வதின் வழியாக அந்தப் பண்ணையில் இருக்கும் விலங்குகள் நாட்டில் இருக்கும் வெவ்வேறு மனிதக்குழுக்களின் குறியீடாகவும், தனிமனிதர்களின் குறியீடாகவும் ஆகியிருப்பதை வாசித்திருக்கலாம்.
தமிழில் சமகாலத்து நிகழ்வுகளைக் குறியீடாக்கி நாடகங்களை எழுதியிருக்கும் இந்திரா பார்த்தசாரதி, புனைகதைகளிலும் அப்படியான எழுத்துகளைத் தந்திருக்கிறார். இம்மாத உயிர்மையில் வந்துள்ள ‘ பொய்க்கடவுள்’ அப்படியான குறியீட்டுக்கதையே. சபிக்கப்பட்ட குகை என நிகழ்வெளிக்குப் பெயரிட்டு அதனைக் குறியீட்டு வெளியாக வாசகர்களிடம் விரிக்கிறார். குகைக்குள் இயற்கைக்கு மாறான ஒவ்வொன்றையும் விரும்பி ஏற்றுக்கொண்டு கிடக்கும் சபிக்கப்பட்ட மனிதர்களுக்குத் தேவை அவர்கள் சபிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் விழிப்புணர்வுதான். அந்த விழிப்புணர்வு குகைக்குள்ளேயே இருந்தால் கிடைக்கப்போவதில்லை. சபிக்கப்பட்ட குகையிலிருந்து வெளியே அழைத்துவந்து இயற்கையான காற்றை, வெளிச்சத்தை, தாவரங்களின் அசைவை, பூவின் நறுமணத்தை உணர்வதற்கான பயிற்சியைத் தருவதின் வழியாகத்தான் சாபத்திலிருந்து விடுதலையைப் பெற வைக்கமுடியும்.
தங்களை வழிநடத்துபவர்களாக நினைத்துக்கொண்டு அவர்களின் போதனைகளைச் சாபங்கள் என்றறியாமல் ஏற்றுக்கொண்டு குகைக்குள் வாழ்பவர்களாக மனிதர்கள் மாறிக் கிடக்கிறார்கள். சமயப் போதகர்கள் தங்களைக் கடவுளாகவும் கடவுளின் பிரதிநிதிகளாகவும் சொல்லிக்கொண்டு நம்பிப் பின்பற்றும் மனிதர்களைச் சபிக்கப்பட்ட குகைகளுக்குள் அடைப்பதையே அன்றாட வேலையாகச் செய்கிறார்கள். சமயப் போதகர்களின் இடத்தில் புனிதர்களாகக் கட்டமைக்கப்பட்ட அரசியல் தலைவர்களைப் பொருத்திப் பார்க்கவும் கதையில் இடம் இருக்கிறது. நாட்டின் பிரதமரைக் கூடக் கடவுளாக மாற்றிக் கட்டமைக்கும் சூழல் நடந்து கொண்டுதானே இருக்கிறது.
கதைக்குள் உருவாக்கப்பட்டுள்ள ‘சபிக்கப்பட்ட குகை’ ”சாபம் தந்த கோபக்கார தெய்வம்” என்ற இரண்டுக்கும் வாசிப்பவர்கள் ஒரு குறியீட்டுப் பொருத்தம் தந்து கொண்டு வாசித்துப் பாருங்கள். மனிதர்களின் விடுதலை வாழ்வை மறுதலிக்கும் நிகழ்கால நிறுவனங்கள் ஒவ்வொன்றின் மீதும் தீவிரமான விமரிசனத்தை முன்வைக்கும் கதையாக மாறிக்கொண்டே இருக்கும் தன்மையை நீங்கள் உணரமுடியும். அந்த வகையில் அண்மையில் வாசித்த நல்லதொரு குறியீட்டுக் கதை ‘ பொய்க்கடவுள்’
நாடகமாக மாற்றி மேடையேற்றுவதற்குரிய கதை
கருத்துகள்