உச்சநட்சத்திரப் போட்டியும் பேரங்காடிச் சந்தையும்


வெகுமக்கள் ஊடகங்களுக்குத் தேவை “உச்சநட்சத்திரங்கள் ( SUPER STARS)” சாகசங்கள் வழி முன்னுக்குவரும் ஒற்றை நபர்களைத் தெரிவுசெய்து கொண்டாடும் பண்பாடு ஊடகப் பண்பாட்டின் விருப்பங்களில் ஒன்று. இருசக்கர வாகனத்தில் அதிவேகச் சாதனையாளர் டி,டி.எப். வாசன் ( TTF.VASAN ) அண்மையக் கண்டுபிடிப்பு நட்சத்திரம். வளர்ந்துவரும் சமூக ஊடகங்களுக்குத் தேவையான ஓற்றை நட்சத்திரம்.

இப்படிச் சொல்வதால், நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு துறைசார்ந்தும் உச்சநட்சத்திரங்களை உருவாக்கும் போட்டியை ஊடகங்கள் நடத்துமென நினைக்க வேண்டியதில்லை. பெருந்திரளான மக்களைத் திரட்டிக் காட்டும் துறைகளில் மட்டுமே உச்ச நட்சத்திரங்களை உருவாக்கும் போட்டியும் நடக்கும். பெருந்திரளுக்கும் பேரங்காடிப் பண்பாட்டுக்கும் உள்ள தொடர்போடு இணைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று இது. வெகுமக்கள் ரசனையைக் கட்டமைக்கும் சினிமா, திரையிசை, கிரிக்கெட், நாட்டார்/ விளிம்புநிலை இசை, போன்றவற்றில் ஏற்கெனவே உச்சநட்சத்திரங்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது மாறுகின்றார்கள். ஆனாலும் உச்சநட்சத்திரப் போட்டிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவ்வப்போது அந்த இடத்தை இன்னொருவர் பிடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

நம்காலத்து இளைஞர்களின் உளவியலையும் சந்தை மனநிலையையும் இருசக்கர வாகனங்களைக் கொண்டு நிரப்பவும் கட்டமைக்கவும் நினைக்கும் சூழலில் டி டி எப் . வாசன்கள் தேவைப்படுகிறார்கள். காதல் கவிதைகளும் கையறு நிலைப்பாடல்களும் வெகுமக்கள் உளவியலைக் கட்டமைப்பதை முகநூல் பங்கேற்பாளர்கள் உணர்ந்திருக்கக் கூடும். அதை வெகுமக்கள் ஊடகங்களான தொலைக்காட்சிகளும் அச்சு ஊடகங்களும் உணர்ந்துவிட்டால், ஓர் உச்சநட்சத்திரக் கவிஞரைத் தேடும் போட்டியை ஊடகங்கள் நடத்திடத் தயங்கப்போவதில்லை. போட்டியில் பங்கேற்கக் கவிகள் தயாராக வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்