கோவையோடு ஞானியும்


கோவை புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். சந்தித்தவர்களில் - மேடையில் அவரின் பெயரைக் குறைந்தது பத்துப்பேராவது உச்சரித்திருப்பார்கள். கண்காட்சியில் மட்டும் என்றுகூடச் சொல்லமுடியாது. கோவையில் இருக்கும் இந்த இரண்டு மாதத்தில் நான் சந்திக்கும் பலரும் அவரது பெயரைச் சொல்வதும் அவரது தாக்கம் அவர்களுக்குள் எப்படி இருந்தது என்பதும் சொல்லப்படுகிறது. ஞானி கோவையின் இலக்கியமுகமாக இருந்துள்ளார் என்பதைத் திரும்பத்திரும்ப உணரமுடிகிறது.
நினைவில் இருக்கும் ஞானி


விசுவபாரதி நடுவண் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையும், பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தின் இந்திய மொழிகள் துறையும் சேர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் இணைய உரையரங்கத் தொடரின் 10 -வது உரையை இன்று( 22-07-2020) முற்பகல் 11.00 மணி தொடங்கி முகநூல் நேரலையில் கேட்டுக் கொண்டிருந்தேன். தமிழ் இலக்கியத் திறனாய்வு-இயக்கங்களும் கோட்பாடுகளும் என்ற தலைப்பிலான உரையைப் பஃறுளி பிரவீன் நிகழ்த்திக்கொண்டிருந்தார். அவரது பெயரைக் குறிப்பிட்டுத் தமிழ்த் திறனாய்வில் அவரது பார்வை மற்றும் பங்களிப்புகள் பற்றிப் பகல் 12 மணியளவில் பிரவீன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஞானியின் மரணம் நிகழ்ந்திருக்கும் என்றே நினைக்கிறேன். எப்போதாவது இப்படிச் சில மரணங்களுக்குத் தற்செயலான இணைநிலைகள் ஏற்பட்டுவிடுவதுண்டு. அப்படியான அனுபவங்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். எனக்கு இன்று மட்டுமல்ல; இதற்கு முன்னும் சில மரணங்களின் போது அவர்களின் பெயரைக் காதில் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன்.

அந்நியமாதலை மையப்படுத்திய மார்க்சியத்திறனாய்வுப்பார்வையை முன்வைத்ததோடு எஸ் என் நாகராஜனோடு இணைந்து இந்தியத்தன்மை கொண்ட மார்க்சியம் பற்றியப் பார்வையைத் தமிழில் முன்னெடுத்தவர் என்பதாக உரை போய்க் கொண்டிருந்தது. அந்த உரை முடிந்தபின்பு முகநூல் நேரலையை விட்டு விலகி ஷூம் வழியாக விவாதத்திற்குள் நுழையலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதற்குள் முகநூலில் ஞானியின் மரணம் குறித்த ஒன்றிரண்டு பதிவுகள் கண்ணில் படத் தொடங்கிவிட்டன. உரைக்குப் பின், விவாதமும் முடிந்தபின்பு நேரலையிலேயே அதில் கலந்துகொண்ட இலக்கியத் திறனாய்வில் ஆர்வம் கொண்டிருந்த தமிழ்க்கல்விப்புல ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் தங்களின் மௌன அஞ்சலியைச் செலுத்தி விட்டுக் கலைந்தார்கள்.

பட்டப்படிப்புக்காலத்தில் (1977-80) அறிமுகமாயிருந்த கணையாழி வழியாக அறிமுகமாயிருந்த ஞாநி என்ற பெயரோடு வேறுபட்ட பெயராக ஞானி என்ற பெயரைத் தாமரை, தீபம் போன்ற இதழ்களில் வாசித்திருந்தேன். தீபத்தில் வல்லிக்கண்ணன் எழுதிக்கொண்டிருந்த புதுக்கவிதை பற்றிய தொடரில் இந்தப் பெயர் அவ்வப்போது வந்துகொண்டிருந்தது. ஆனால் அவருடைய முழுமையான கட்டுரைகளை வாசித்துக் கோவை ஞானி என்ற திறனாய்வு ஆளுமையை உள்வாங்கிக் கொண்டது முதுகலை முதலாம் ஆண்டில் தான். பாடத் திட்டத்தின் பகுதியாகப் புதுக்குரல்களும் வெளிச்சங்களும் இருந்தன. வெளிச்சங்கள் தொகுதிக்கு ஞானியின் முன்னுரை. அதைத் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்ட பின்பே கவிதைகளை வாசிக்கத் தொடங்கிப் புரிந்துகொண்டேன். அதன் பின்பு புதுக்கவிதை தொடர்பான வாதங்களும் எதிர்வாதங்களும் என ஒவ்வொன்றையும் விளங்கிக் கொள்ள அடித்தளமாக அந்தக் கட்டுரை இருந்தது.

அந்தக் காலகட்டம் சிறுபத்திரிகைகள் பெருத்த கால கட்டம். படிகள் பெங்களூரிலிருந்து வந்து கொண்டிருந்தது. விழிகள், நிஜங்கள், தேன்மழை போன்றன மதுரையிலிருந்தே வந்துகொண்டிருந்தன. அதன் வழியாக ஞானியின் இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் (1975), மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு (1976) என்ற நூல்களைப் பற்றிய அறிமுகம் கிடைத்ததால் மு.ராமசுவாமியிடம் (நிஜநாடக இயக்கம்) அந்த நூல்களை வாங்கிப் படித்த நினைவிருக்கிறது. அவர் தான் பரிமாணம் இதழ்களின் சில பிரதிகளைத் தந்தார். அதேபோல் அவரது ஆலோசனையின் வழி இயங்கிய புதிய நம்பிக்கை இதழ்களும் கூட மாணவர்களிடையே சுற்றில் இருந்தது. கோயம்புத்தூரிலிருந்து மொழியியல் படிக்க வந்திருந்தவர் கொண்டுவருவார். இவ்விதழ்களையெல்லாம் வாங்கிப் படிக்கும் எங்களுக்குள் புதிய கிளர்ச்சியிருந்த காலகட்டம். அந்தக் கிளர்ச்சியை இளமையின் கிளர்ச்சி என கட்சி அரசியல் சார்ந்த விமரிசகர்களும் இட துசாரிப் பேராசிரியர்களும் கிண்டல் செய்வார்கள். இவையெல்லாமே அமெரிக்க நிதியுதவியோடு – என். ஜி.ஓ. அரசியலை முன்னெடுக்கும் நோக்கம் கொண்ட இதழ்கள் என்ற குற்றச்சாட்டைச் சொல்வார்கள். பின்னாளில் என்னுடைய முனைவர் பட்டத்த்திற்கு நெறியாளராக இருந்த பேரா. தி.சு. நடராசன் கடுமையான விமரிசனங்களைச் சொல்வார். மார்க்சியம் உலகத்தொழிலாளர்களின் விடுதலைக்கான அரசியலைப் பேசும் தத்துவம். அதனை இந்தியமயமாக்கும் முயற்சி என்பது இந்துமதத்தையும் சாதிப்பிரிவினைகளையும் ஏற்கும் நிலைக்கே நகர்த்திச் செல்லும் என்று சொல்லும்போது மறுக்க முடியாது. எஸ் என் நாகராஜனின் கட்டுரைகள், சில நேர்காணல்களை வாசித்தபோது அந்த வாதம் சரியென்றே தோன்றியதுண்டு. மு.ராமசுவாமியின் நிஜநாடக இயக்கத்தில் சேர்ந்து வீதிநாடகங்களில் இயங்கியதில் எல்லாம் அவருக்கு உடன்பாடே கிடையாது; கிண்டல் செய்வார்; என்றாலும் அனுமதிப்பார். மார்க்சியத்திற்குள் இருக்கும் பல்வேறுபட்ட உள் முரண்பாடுகளை விவாதிக்கும் வாய்ப்புகள் கிடைத்ததால் ஞானியின் இடம் நெருக்கமும் விலகலும் இல்லாத இடமாகவே எனக்குள் இருந்தது. ·

அந்த ஆண்டிலேயே ஞானியைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. கோவையில் படிகள் இதழ் சார்பில் இலக்கு அமைப்பு உருவாக்கப்பட்டு பெரும் கருத்தரங்கொன்று நடத்தப்பெற்றது. அக்கருத்தரங்கில் மதுரை நிஜநாடக இயக்கம் வீதி நாடகங்களை மேடையேற்றவேண்டும் என்று அழைப்பு இருந்தது. மு.ராமசுவாமிக்குத் படிகளின் ஆசிரியர் குழுவில் இருந்த தமிழவன் ஆசிரியர் என்பது மட்டுமல்லாமல் புதிய இடது சாரியியம் (New - left ) மீது அவருக்கு ஈடுபாடு உண்டு.படிகள், இலக்கு போன்றவற்றோடு உடன்பாடில்லாத நண்பர்களும் நிஜநாடக இயக்கத்தில் உண்டு. முழுக்க இடதுசாரிக் கொள்கையை அறியாத - விரும்பாத நண்பர்களும் நாடகம் என்னும் கலைசார்ந்து அதில் ஈடுபாடு காட்டியதுண்டு.பெரும் விவாதத்திற்குப்பின்பு கலந்து கொண்டு நாடகம் போடுவதென்று தீர்மானித்தோம். முதல்நாளே அங்கு போய் ஒத்திகைகள் நடத்திக் கொண்டிருந்தோம். ஒத்திகையின் இடைவேளையில் மு.ராமசுவாமி ‘நான், ஞானியைப் பார்க்கப் போகிறேன்; வர விரும்பினால் வரலாம்’ என்று அழைத்தார். அடுத்த நாள் கூட்ட த்தில் பார்த்துக்கொள்ள லாம் என்று சிலர் சொன்னபோது, நான் அவரோடு போனேன். இன்னொருவரும் வந்தார். அது ந.முருகேசபாண்டியனா? என்பது இப்போது நினைவில் இல்லை. ஒருமணி நேரத்துக்கும் மேலாக அவரது வீட்டில் இருந்து பேசிக் கொண்டிருந்தோம். அதற்கு முன்பு சந்தித்த எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள், அறிவுஜீவிகள் ஆகியோரிலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக உரையாடினார். நிதானமும் உயர்த்தாத குரலுமாகப் பேசிக்கொண்டே இருந்தார்.

கோவையில் நடந்த இலக்குக் கருத்தரங்கம் தமிழக அறிவுவரலாற்றில் முக்கியமான கருத்தரங்கு. ஏறத்தாழத் தமிழ்நாட்டின் எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் மொத்தமாகக் குவிந்தார்கள் என்றே சொல்லலாம். சுந்தர ராமசாமியின் ஜெ.ஜெ.சில குறிப்புகளுக்குத் தனியான அரங்கெல்லாம் இருந்தது. அதற்கெதிரான விமரிசனத்தைத் தனித் துண்டாக அச்சிட்டு சாருநிவேதிதா அங்கு வழங்கிய நினைவுகூட இருக்கிறது. அந்தக் கருத்தரங்கு கோவையில் நடப்பதற்கு ஞானியும் முக்கியக் காரணம். அவரிடம் அனைவருமே நெருங்கிவந்து பேசிப் போனார்கள். ஒவ்வொருவரையும் பெயர்சொல்லி அழைத்துப் பேசியதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். பல்வேறு சிறுபத்திரிகைகளையும் நூல்களையும் அங்குதான் பார்த்தேன். எனது வாசிப்பின் – அரசியல் பார்வையின் – இலக்கியப் பார்வையின் கருத்து நிலைகளில் திடமான ஒன்றை உருவாக்கிய நிகழ்வு என்றே அதனைச் சொல்லலாம்.

அந்தச் சந்திப்பிற்குப் பின்னால் மு.ராமசாமியைப் போலவே அ.ராமசாமியையும் ஞானி நினைவில் வைத்திருந்தார். மதுரையில், தஞ்சையில், சென்னையில் என்று பல இடங்களில் நடந்த கருத்தரங்குகள், திறனாய்வுக் கூட்டங்கள் எனச் சந்தித்துக் கொள்வோம். கண்பார்வை மங்கிய பிறகு உதவியாளரோடு வருவார். சில கூட்டங்களின் போது இரவுத்தங்கலில் நீண்ட விவாதங்கள் நடக்கும். மதுரைப் பல்கலைக்கழக வளாகத்தில் அன்னை தெரேசா பல்கலைக்கழகம் நடத்திய கருத்தரங்கிற்கு வந்து தங்கியிருந்தபோது காலை நடையில் இணைந்து நடந்து கொண்டே பேசிய நினைவுகள் இருக்கிறது. பின்னர் தொடங்கிய நிகழ் இதழில் எழுதும்படி கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் ஏனோ நான் எழுதாமலேயே தள்ளிப்போட்டேன். புதுவையில் நிறப்பிரிகை ஏற்பாடு செய்த கூட்டு விவாதங்களின் போது சந்தித்திருக்கிறேன். புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை அழைத்தபோது நாடகத் துறையிலிருந்தேன். நீங்கள் இலக்கியத்துறையிலும் வகுப்புகள் எடுக்கலாம் தானே என்று கேட்டார். நான் தயார் தான்; அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று சொன்னபோது சிரித்துவிட்டுச் சொன்ன காரணங்களை இப்போதும் சொல்லமுடியாது. பார்க்கும்போதெல்லாம் என்ன படிக்கிறீர்கள் என்று கேட்பார். பிறகு சினிமா, நாடகம், அரசியல், இலக்கியம் என என்னென்னவோ எழுதுகிறீர்களே என்பார்.

திருநெல்வேலிக்கு வந்தபிறகு எங்கள் துறைக்கே இரண்டு முறை அழைத்திருக்கிறோம். சமூகவியல் துறைக்கும் இரண்டுமுறை அழைக்கக் காரணமாக இருந்ததுண்டு. சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் துறையின் நிகழ்வுகளுக்கும் வந்திருக்கிறார். கோவையின் பாரதியார் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும்போது சில நேரங்களில் நேரடியாகவும் தொலைபேசிவழியாகவும் பேசிக் கொள்வோம். தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு கருத்தாழம் மிக்க உரைகளை வழங்கியவர். அவருக்கு ஏதாவதொரு பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியிருக்க வேண்டும். அவரது ஊரான கோவையின் பாரதியார் பல்கலைக்கழகமே அதைச் செய்திருக்கலாம்.

அவரது இலக்கியம் குறித்த, அரசியல் பார்வைகள் குறித்த நிலைப்பாடுகள் அவ்வப்போது நகர்ந்துகொண்டே இருந்தது. மார்க்சியம் சார்ந்த பார்வையில் ஆழங்கால் பட்டவராகத் தொடங்கிய அவர், பின்னர் தமிழில் எல்லாவகைப் பார்வையும் வரட்டும் என்ற நெகிழ்ச்சியான நிலைக்கு நகர்ந்துவிட்டாரோ என்று நினைக்கும் வகையில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இடது, வலது என்ற முரண்நிலையை அழித்தவராகக் கூட அவர் மீது விமரிசனங்கள் உண்டு. இந்தியாவிற்கேற்ற மார்க்சியம் என்பதைக் கைவிட்டுவிட்டுத் தமிழ்த் தேசியத்திற்கான மெய்யியல், தமிழ்நிலம் என நகர்ந்தவராகவும் இருந்தார். ஆனால் அதில் எல்லாம் ஏற்கத்தக்க கருத்துரைகளைத் தந்துவிடவில்லை. பெண்ணியம், தலித்தியம், பெரியாரியம் எனப் பல்வேறு போக்குகள் வரத் தொடங்கியபோது அவற்றை வரவேற்றுப் பேசும் பெரியவராகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டார்.

தொடர்ந்து வாசித்துக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தவரால் தொடர்ச்சியாக வாசிக்க முடியாத நிலையிலும் பிறரை வாசிக்கச் சொல்லிக் கேட்டு இதழ்களையும் நூல்களையும் இற்றைப்படுத்திக் கொண்டிருந்தார். கருத்துரைகளை எழுதிக் கொண்டிருந்தார். இளைஞர்களை உள்வாங்கி வளர்த்தெடுக்கும் நோக்கம் அவருக்கு எப்போதும் உண்டு. அவரால் உருவாக்கப்பட்ட புனைவெழுத்தாளர்கள், விமரிசகர்கள் எனப் பட்டியல் உண்டு. ஆண்டுதோறும் பெண்கள் எழுதிய கதைகளைத் தொகுத்துப் பத்துக்கு மேற்பட்ட தொகுப்புகளைக் கொண்டுவந்தவர். அதன் பின்னணியில் லண்டனில் இருக்கும் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இருந்தார். ஞானியின் திறனாய்வுப்பங்களிப்பையும், பெண்கள் கதைகளின் தொகுப்பையும் எம்பில் பட்டத்தலைப்புகளாக எனது மாணவிகள் ஆய்வு செய்திருக்கிறார்கள். கவிதைகள் குறித்தும் நாவல்கள் குறித்தும் ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஆய்வு மாணவர்கள் ஆய்வைத் தொடங்குவதற்கு முன்னர் வாசிக்க வேண்டிய நூல்களாக அவரது நூல்களைத் தந்து சோதித்துப் பார்ப்பதுண்டு. தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும் , மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் ,தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் படைப்பியல் நோக்கில் தமிழிலக்கியம் போன்றன முக்கியமான திறனாய்வு நூல்கள். வானம்பாடிகளின் ஆசிரியர் குழுவில் இருந்தவர் என்றபோதிலும் அதன் கவிதைத்தனத்திலிருந்து விலகியனவாக அவரது கல்லிகை, தொலைவிலிருந்து, கல்லும் முள்ளும் வெளிப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியத்தை மையப்படுத்தி அவர் தொகுத்துள்ள தமிழின் அறவியலும் அழகியலும், தமிழ் மெய்யியல் - அன்றும் இன்றும் போன்றன குறிப்பிடத் தக்க தொகுப்புகள். அதேபோல் படைப்பிலக்கியம் சில சிகரங்களும் வழித் தடங்களும் மார்க்சியத்தின் புதிய பரிமாணங்கள் விடுதலை இறையியல் இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம் போன்றனவும் வாசிக்க வேண்டிய நூல்கள் எனலாம். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுவதற்கு அவரது விமரிசனக் கட்டுரைகளும் கருத்துரைகளும் பெரும்பங்களிப்புச் செய்யக்கூடியன.

சாகித்திய அகாடெமி விருதைத் தீர்மானிக்கும் கட்டத்துக்கு முந்திய பட்டியலில் அவரது பெயரைப் பரிந்துரைக்கும் வாய்ப்பு ஒருமுறை கிட்டியது. ஆனால் அவருக்குக் கிடைக்கவில்லை. திறனாய்வாளர்களை ஏன் சாகித்திய அகாடெமி பரிசீலனை செய்வதில்லை என்று கட்டுரை எழுதியிருக்கிறேன். அதனை வாசித்து விட்டுத் தொலைபேசியில் பேசியிருக்கிறார். செம்மொழி நிறுவனத்தில் கலைஞர் மு.கருணாநிதி நிறுவியுள்ள செம்மொழி விருதுகளுக்குப் பரிந்துரைகள் கேட்டபோது உள்நாட்டு அறிஞராகக் கோவை ஞானியின் பெயரையும் அயலகத்து அறிஞராக கலாநிதி கா.சிவத்தம்பியின் பெயரையும் பரிந்துரைத்து விரிவான காரணங்களையும் முன்வைத்திருந்தேன். அதற்காக அவரது வாழ்க்கைக் குறிப்பை அனுப்பமுடியுமா? என்று கேட்டபோது ‘ வேண்டாம் ராமசாமி’ என்றுதான் சொன்னார். என்றாலும் நானே ஒருவாறு தயாரித்து அனுப்பினேன். அதுவும் பரிசீலனை செய்யவில்லை. இப்போதும்கூட சாகித்திய அகாதெமி இந்த ஆண்டுக்கான விருதை அவருக்கு – மறைவுக்குப் பின் வழங்கும் விருதாக வழங்கலாம். அதன் அமைப்பாளர்களும் தெரிவுக்குழுவும் மனசு வைக்கவேண்டும்.

எந்த ஊர் என்னுடையது? எவரெல்லாம் கேளிர்?

ஒவ்வொரு துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் ஆளுமைகளின் பெயரால் வாழிட வெளிகள் அறியப்படு கின்றன.கோவைக்கு வந்து இரண்டு மாதங்கள் முடிந்து விட்டன. கோவை நகரம் பெருந்தொழில் குழுமங்களின் பெயரால் அறியப்படும் உலகமாக இருக்கக்கூடும். உயர்கல்வி நிறுவனங்கள் நிரம்பிய நகரமாக இருக்கிறது. சொந்தமாகத் தொழில் செய்யத்தயங்காத மனிதர்களைக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது கலை, இலக்கியக் கூட்டங்கள் நடக்கும் நகரமாகவும் இருக்கிறது. அலைபேசி வாட்சப் வழியே அழைப்பிதழ்கள் வந்துகொண்டே இருக்கின்றன. சிலவற்றிற்குச் செல்கிறேன். போக்குவரத்துக் காரணமாகப் பலவற்றைத் தவிர்க்கிறேன்.
கலை, இலக்கியம் என நான் இயங்கும் உலகத்திற்குள் உச்சரிக்கப்படும் பெயராக கோவை ஞானியும் கவிஞர் சிற்பியும் புவியரசுவும் இருக்கிறார்கள். இந்தப் பெயர்கள் தமிழ்க் கவிதையில் பரப்புநிலைக் கவிதை வடிவத்தைத் தமிழுக்குத் தந்த வானம்பாடிகள் இயக்கத்தோடு தொடர்புடைய பெயர்கள். வானம்பாடிகளின் செல்வாக்கும் நீட்சியும் இப்போது இல்லையென்ற போதிலும் வரலாறு அந்தப் பெயர்களைத் தக்க வைத்திருக்கிறது.

தெருவுக்கும் ஊருக்கும் கிராமத்திற்கும் நகரங்களுக்கும் முகமாக இருக்கும் பெயர்கள் எப்போதும் இருக்கின்றன. புதுவைக்குக் குடிபோன போது மதுரையின் இலக்கிய ஆளுமைகளாலும் தொடர்புகளாலும் அறிந்துகொண்டு நண்பர்கள் ஆனவர்கள் உண்டு. புதுச்சேரி பெரிய நகரமல்ல. மிதிவண்டியில் ஏறிப்பிரபஞ்சன் வீட்டிற்குப் பல தடவை போய்ப்பேசிக் கொண்டிருந்திருக்கிறேன். இலாசுப்பேட்டையில் புதுச்சேரியின் பல எழுத்தாளர்கள்/ பேராசிரியர்கள் இருந்தார்கள். கால்நடையாகவே போய் விடுவதுண்டு.

அங்கிருந்து நெல்லைக்குப் போனபோது புதுவையின் பெயர்களைச் சொல்லி விசாரித்து நட்புக் கொண்டவர்கள் உண்டு. இப்போது என்னை நெல்லைக்காரனாக நினைத்து விசாரிக்கிறார்கள். நெல்லையில் இருந்த காலத்தில் திகசியையும் தோப்பிலையும் வீட்டிற்குப் போய்ச் சந்தித்ததுண்டு. அவர்களது முதுமை காரணமாக அப்படி நடந்ததாக நினைத்துக்கொள்கிறேன். மற்றவர்களைப் பெரும்பாலும் இலக்கிய நிகழ்வுகளிலோ, பல்கலைக்கழகத்திற்கு அழைக்கப்பட்ட நாட்களிலோ தான் சந்தித்துப் பேசியிருக்கிறேன். கோவையிலும் அதே நிலைதான் தொடர்கிறது. அதே நேரம் சுற்றியிருக்கும் பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சத்தியமங்கலம் போன்ற சிறுநகரங்களில் நடக்கும் இலக்கியக்கூட்டங்களுக்கும் போய்வரவேண்டும் என மனம் விரும்புகிறது.

வார்சாவில் எனக்கு இரண்டு அடையாளங்கள். நாட்டடையாளம் இந்தியா; மொழி அடையாளம் தமிழ். என்னை இந்தியனாகவும் தமிழ்நாட்டுக்காரனாகவும் நினைத்தே பேசினார்கள் எல்லா ஊரும் நமது ஊர்தான். யாவரும் கேளிர்தான் எனச் சொன்ன கணியன் பூங்குன்றன உடன் வந்துகொண்டே இருக்கிறான்.

தமிழ் இலக்கியக் கல்வியில் புதிய பாய்ச்சல்களை முன்னெடுக்க விரும்பித் தொடங்கப்பட்டிருக்கும் ”இலக்கியக்கல்வி- படைப்பாக்கம் ” என்ற படிப்பைப் பற்றிச் சொல்வதற்காகவே புத்தகக் கண்காட்சியில் ஒரு விளம்பரப்பதாகை அரங்கை அமைத்துள்ளது குமரகுரு பன்முகக் கல்லூரி . அங்கே அது குறித்த சிற்றேடு வைக்கப்பட்டிருக்கிறது. மொழி, இலக்கியப்படிப்பைப் பொறியியல் படிப்பின் வாய்ப்புகளைப் போல விரிவாக்கும் நோக்கத்தில் திட்டமிட்டுத் தந்திருக்கிறேன். மரபான வகுப்பறைப் பேச்சுகள் என்ற நிலையைத் தாண்டிய கற்பித்தல் முறைகளைச் சோதனை செய்து பார்க்க உள்ளோம். தமிழ்நாட்டிலும் உலக நாடுகள் பலவற்றிலும் வாழும் தமிழர்கள் தமிழ்மொழியையும் இலக்கியத்தையும் பயன்படுத்தாத காலம் ஒன்று வந்துவிடுமோ என்ற அச்சம் உருவாகிக்கொண்டிருக்கிறது. அப்படியொரு காலம் வந்துவிடக்கூடாது என்பதில் கல்வியாளர்களும் கலை இலக்கியவாதிகளும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மொழியின் பயன்பாடு என்பது இன்று ஊடகங்களின் பெருக்கத்தால் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. அதே நேரம் அதன் அழகுகளும் நுட்பங்களும் சிதைக்கப்படுவதும் நடக்கிறது. முடிந்த வரை தடுத்து நிறுத்தப்படவேண்டும். அதற்கும் மேலாக மொழியின் பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும். நவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும்போதும், ஊடகங்களைக் கையாளும்போதும் தாய்மொழியைப் பயன்படுத்த வேண்டுமென நினைக்கவேண்டும்.

***********************


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்