வெளிப்பட வேண்டும்; வெளிப்படுத்த வேண்டும்: போலந்து கல்வி முறை பற்றி ஓர் அறிமுகம்.

கல்விச் சாலைகளில் பிள்ளைகளைச் சேர்ப்பது தொடங்கி ஒவ்வொரு கட்டத்தையும் இந்தியப் பெற்றோர்கள் தவிப்போடு தான் கடக்கிறார்கள். தவிப்பிலேயே பெரிய தவிப்பு பள்ளிப்படிப்புக்கு முந்திய பாலர் வகுப்புகளை நடத்தும் நிறுவனங்களில் இடம்பிடிப்பதாக இருக்கிறது. பாலர் பள்ளியைத் தொடர்ந்து தங்கள் மனம் விரும்பும் ஒரு பள்ளியில் இடம் கிடைக்கும் என்றால் இந்திய நடுத்தரவர்க்கமும் மேல் நடுத்தர வர்க்கமும் அசையும் அசையாச் சொத்தையெல்லாம் விற்றுக் கட்டிவிடத் தயாராக இருக்கிறார்கள். முந்தின நாள் இரவிலேயே பள்ளிவாசலில் படுத்து வரிசையில் நின்று விண்ணப்பப் படிவம் பெற்றுப் பணத்தைக் கட்டிவிட்டால் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கவனிக்கும் பொறுப்பைத் தக்காரிடம் ஒப்படைத்துவிட்டதாக நம்பும் மனோவியாதியைப் போக்கும் மருந்து இந்தியாவில் கிடைப்பது அரிது. அதைவிடக் கூடுதலான மனத்திருப்தியைத் திருப்தியான கல்லூரி ஒன்றில் தன் பிள்ளையைச் சேர்த்துவிட்ட பெற்றோர்களிடம் காண முடிகிறது.

இந்தியப் பள்ளிக் கல்வியும் கல்லூரிக்கல்வியும் கானல் நீர் என்பதை நமது பெற்றோர்கள் உணரவே மாட்டார்கள். எந்த அறிமுகமும் விருப்பமும் இல்லாத பாடங்களிலும் கல்வி வளாகங்களிலும் தான் நமது இளைய சமுதாயத்தை அடைத்து வைக்கிறோம். அடைத்து வைக்கப்படும் அவர்களுக்கு அந்த வளாகங்கள் பல நேரங்கள் சிறைக்கூடங்களாகவும், வந்து போகும் ஆசிரியர்கள் வெறுக்கத்தக்க எதிரிகளாகவும் ஆகிறார்கள். புதிதாக அறிமுகமாகும் எதிர்பாலினர் காமம் கொள்ள வேண்டிய கருப்பொருளாக ஆகிப்போகிறார்கள். அப்படியான தவிப்புகள் இல்லாமல், இளையோர்கள் தங்கள் எதிர்காலத்தை- கல்விமுறையைத் திட்டமிடுகிறார்கள் என்பதை ஐரோப்பியக் கல்விமுறை உணர்த்திக் கொண்டே இருக்கிறது. இரண்டு ஆண்டுகள் நேரில் பார்த்த அனுபவத்தைக் கொண்டு இதைச் சொல்லிவைக்கிறேன்.

2012- 2013 ஆம் கல்வி ஆண்டில் மாணாக்கர் சேர்க்கை நடந்த போது அங்கிருந்தேன். ஆனால் அதற்கான முன்னேற்பாடுகளை நடந்த விதத்தை அந்த ஆண்டிலும் அதற்கடுத்த ஆண்டிலும் நேரில் பார்த்தேன். பள்ளிச்சேர்க்கைகளோடு எனக்கு நேரடி அனுபவம் எனச் சொல்ல முடியாது. ஆனால் எனது மாணவிகளோடும் ஆசிரியர்களோடும் உரையாடியும் சில பள்ளிகளை நேரில் பார்த்தும் அறிந்ததையே சொல்கிறேன். போலந்து வாழ்க்கையை அல்லது நிகழ்வை நான் அறிந்து கொள்ள விரும்பினால் அந்த வாரத்தின் பாடமாக அதையே எடுத்துக் கொள்வேன். கல்வி நிலையங்கள் என்ற பொருளில் ஒருவாரம் முழுவதும் பேசுவோம். தரவு சேகரித்தலை வீட்டுப் பாடமாக ஆக்குவேன். அடுத்த வகுப்பில் இந்திய/ தமிழக நிலைமைகள் பற்றிச் சொல்வேன். சாதக பாதகங்களை உரையாடல் பயிற்சியாக ஆக்கிக் கொள்வேன். அவர்களுக்கு அது பயிற்சி; எனக்கு அது கல்வி. அப்படித்தான் பலவற்றைக் கற்பித்தேன்; நானும் கற்றுக் கொண்டேன்.

ஐரோப்பியநாடுகள் அனைத்திலும் பள்ளிக் கல்வி கட்டாயக் கல்வியாக இருக்கிறது. ஆறுவயது முதல் 12 ஆண்டுகள் - 18 வயதுவரை அனைவருக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தில் ஒரே மாதிரியான கல்வியையே தருகிறார்கள். தனியார் பள்ளிகள் என்ற பேச்செல்லாம் அங்கு இல்லை. நேரடியான அரசுப் பள்ளிகள் இல்லையென்றாலும் அரசு நிர்வாக அமைப்புகள் வழியாகவே அவை நடத்தப்படுகின்றன. பள்ளிப்படிப்புக்கு முன்பு பாலர் பள்ளிகள் கட்டாயமானவை அல்ல. வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் வசதிக்காக குழந்தைகள் காப்பகங்களாகவே அவை இயங்குகின்றன. விளையாட்டின் வழி தங்களை அறிந்து கொள்ளும் முறையை - பழக்கவழக்கங்களை உருவாக்கிக் கொள்ளும் முறையைக் கொண்டிருக்கின்றன கற்பித்தல் முறை. வகுப்பறை என்ற கட்டுப்படுத்தப்பட்ட இடம் குறைவாகவும் புதுப்புது வெளிகளுக்குள் நுழையும் வாய்ப்புகளை அதிகமாகவும் கொண்ட சிறார் கல்விமுறை அது. சிறார் கல்வியையும் இணைத்துப் பணமாக்கும் வித்தைகள் அங்கு இல்லை. பாலர் வகுப்புகளை இணைத்த பள்ளிகள் என எந்தப் பள்ளியும் கிடையாது. அதனால் பாலர் பள்ளியில் சேர்ப்பதற்காக வரிசையில் நிற்கும் பெற்றோர்களின் கூட்டங்களும் அங்கு இல்லை.

ஒவ்வொரு சிறு நாடும் அந்தந்த நாட்டுக்கான தேசிய மொழியிலேயே பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை கற்பிக்கிறார்கள். பயிற்றுமொழியாக இன்னொரு தேசத்து மொழியை வைத்திருப்பதை அவமான நினைக்கிறார்கள். போலந்து நாட்டில் போல்ஸ்கி தான் பயிற்றுமொழி. பள்ளிக் கல்வியிலேயே போல்ஸ்கியோடு இன்னொரு ஐரோப்பிய மொழியைக் கற்பிக்கும் வாய்ப்பு உள்ள பாடத்திட்டம் இருக்கிறது. பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம், ஸ்பானிஷ், லத்தீன் போன்ற முக்கியமான ஐரோப்பிய மொழிகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். சோவியத் யூனியனின் நட்பு நாடாக இருந்த 1990 வரை ரஷ்யன் கற்றுத் தரப்பட்டுள்ளது. இப்போது ரஷ்யன் கற்போர் எண்ணிக்கை மிகவும் குறைவாகிவிட்டது. அதை ஆதிக்கத்தின் மொழியாகக் கணித்து ஒதுக்கிவிட்டார்கள். அந்த இடத்தை ஆங்கிலம் பிடித்துக் கொண்டிருக்கிறது.

சோசலிசக் காலகட்டத்தில் 8 ஆண்டுகள் பொதுக் கல்வியாகவும் 4 ஆண்டுகள் தொழில் கல்வியாகவும் இருந்ததாகச் சொல்கிறார்கள். இப்போது அந்த நிலை இல்லை. ஆனால் பத்தாண்டுகளுக்குப் பின் பள்ளிக் கல்வியிலேயே தொழில்சார் படிப்புகளைத் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு இப்போது தரப்படுகிறது. அப்போதிருந்த கட்டாயப் பள்ளிக்கல்வி என்பதை இப்போதும் விட்டுவிடத் தயாராக இல்லை. பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்ப முடியாத பெற்றோர்கள் அரசுக்குத் தண்டத்தொகை செலுத்த வேண்டும். இந்தியாவில் இருப்பது போன்ற கல்லூரிக் கல்வி அங்கு இல்லை. எல்லாமே பல்கலைக்கழக வகையான உயர்கல்விமுறைதான். போலந்தின் பெருநகரங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறது. பொதுவான அடிப்படைப் பாடங்களை எல்லாப் பல்கலைக்கழகங்களும் வழங்குகின்றன. அதே நேரத்தில் சில பல்கலைக்கழகங்களில் மட்டும் சில சிறப்புத்துறைகள் இருக்கின்றன. தென்ஆசிய மொழிகளின் - பண்பாட்டின் சங்கமமாக இருக்கும் தென்னாசியவியல் புலம் இருக்கும் வார்சா பல்கலைக்கழகத்தில் 30 -க்கும் மேற்பட்ட புலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு புலத்திற்குள்ளும் ஐந்துக்கும் குறையாமல் துறைகள் இருக்கின்றன.

நான் விருந்துநிலைப் பேராசிரியராக இருந்த வார்சா பல்கலைக்கழகம் தலைநகரத்தில் இருக்கும் மிகப்பெரிய பல்கலைக்கழகம். அதன் மாணாக்கர் எண்ணிக்கை 27000 -க்கும் மேல். ஆசிரியர் எண்ணிக்கை 1600 -க்கும் மேல். வார்சா நகரெங்கும் அதன் வளாகங்கள் பரவிக் கிடக்கின்றன. பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டத்திற்காக நுழையும் மாணாக்கர்கள் விரும்பினால் இன்னொரு பட்டத்திலும் சேர்ந்து கொள்ள முடியும். இரண்டு பட்டங்கள் முடிக்க வேண்டுமானால் 4 ஆண்டுகள் பயில வேண்டும். ஒரு பட்டம் போதும் என்றால் 3 ஆண்டுகளே போதும். பல்கலைக்கழகத்தின் எல்லா வளாகங்களும் 07.30 முதல் 19.30 வரை வேலைசெய்யும் விதமாக இயங்கிக் கொண்டிருக்கும். இரவு - பகல் என்ற பிரிவுகள் பாராமல் 12 மணிநேரம் திறந்திருக்கும் வாசல்களில் மாணாக்கர்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருப்பார்கள். வார்சா பல்கலைக்கழகம் 2016 இல் 200 ஆவது ஆண்டைக் கொண்டாட இருக்கும் முக்கியமான பல்கலைக்கழகம். 800 ஆண்டுப் பழைமையான க்ராக்கோ நகரத்து ஜெக்லோனியப் பல்கலைக்கழகம் பல போப்பாண்டவர்களையும் உலகப்புகழ் பெற்ற தத்துவம் மற்றும் இறையியலாளர்களையும் மாணவர்களாக வைத்திருந்த பல்கலைக்கழகம். ஹிட்லரில் ஆணவத்தையும் அணைபோட்டுத் தடுத்த நிறுவனம்.

பல்கலைக்கழக வளாகத்தில் அல்லாமல் சில தனிப்பட்ட பயிற்சிகளில் சேர்ந்து பெறும் திறனைக் கூடப் பல்கலைக்கழகப் பட்டத்திற்குள் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன. என் மாணவிகளில் ஒருத்தி மெஹந்தி போட்டுவிடுவதில் ஆர்வம் வந்து கற்றுக் கொண்டு தேர்ச்சி பெற்றுள்ளாள். இன்னொருத்தி வாலிபால் ஆடுவதில் சிறப்புப் பயிற்சியை ஓரிடத்திலிருந்து பெற்றுள்ளாள். அவை அனைத்தும் பாடத்தின் பகுதியாகக் கணக்கிட்டு அவள் படிக்க வேண்டிய - பெற வேண்டிய மதிப்புப்புள்ளிக் கணக்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் மாணாக்கர்களின் கற்கும் திறனைக் கவனிப்பதைவிட வெளிப்படுத்தும் திறனையே கவனித்து மதிப்புப்புள்ளிகள் அளிக்கிறார்கள். இந்திய ஆசிரியர்கள் கவனிப்பது கற்றுத் தனக்குள் வைத்திருக்கும் திறனை மட்டுமே. தனக்குள் வைத்திருக்கும் பாடங்களைத் திரும்பவும் தேர்வுத்தாளில் நிரப்பித் தர வேண்டும். இந்த வேலை அங்கு இல்லை. வெளிப்பட வேண்டும்; வெளிப்படுத்த வேண்டும்.

தான் சேரவேண்டிய உயர்கல்வி நிறுவன வாசலைக் கூடப் பார்த்தறியாமல் தான் இந்திய இளைஞர்கள் கல்லூரிகளின் வாசலில் விண்ணப்பம் வாங்க நுழைகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கல்விகள் தரும் விளம்பரங்கள் மட்டும்தான். ஆனால் அங்கு நிலைமை முற்றிலும் வேறாக இருக்கிறது. வாழும் நகரத்தில் இருக்கும் பல்கலைக்கழகம் பற்றிய அறிமுகம் அங்கு மாணாக்கராகச் சேர்வதற்கு முன்பே படிப்படியாகக் கிடைக்கிறது.

பள்ளிக்காலச் சுற்றுலா வரைபடத்தில் ஒன்றாகப் பல்கலைக்கழக வளாகங்கள் உள்ளன. சின்ன வயதிலிருந்தே ஒவ்வொரு பள்ளி மாணவனும் பல்கலைக் கழகத்திற்குள் வந்து போவது போலச் சுற்றுலாக்கள் அழைத்து வருகிறார்கள். ஆகப் பெரும் நூலகங்கள் இருக்கும் மைதானம், பூங்காக்களில் ஓடித்திரிந்துவிட்டு நூலகத்திற்குள் இருக்கும் சிற்றுண்டிச்சாலைகளில் சாப்பிட்டுவிட்டுச் செல்கிறார்கள். அங்கே படித்துக் கொண்டிருக்கும் இளையோர்களைப் பார்த்துப் பதித்துக் கொள்ளும் சிறுவர்களுக்குள் தாங்கள் வர வேண்டிய இடங்களில் ஒன்றாகப் பதிந்து போகிறது அந்த வளாகம். அக்டோபர் முதல் ஜூன் வரை கல்வி ஆண்டு. ஆனால் பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் தங்கள் துறையை வந்து பார்க்க வேண்டும் என்பதற்காக ஜூன் தொடங்கி ஆகஸ்ட் வரை ஒவ்வொரு துறையும் அறிமுக விழாக்களை வார இறுதி நாட்களில் நடத்தும். துறையின் பேராசிரியர்களும், அப்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளும் வரும் மாணவர்களை அழைத்துச் சென்று வளாகத்தின் வசதிகளையும் துறையின் கற்பித்தல் முறையையும், கற்பதால் கிடைக்கும் அறிவு மற்றும் வேலை வாய்ப்புகளையும் பற்றி எடுத்துச் சொல்வார்கள். தனது உயர்கல்வியைத் திட்டமிட விரும்பும் ஒரு மாணாக்கர் குறைந்தது மூன்று நான்கு துறைகளின் அறிமுக விழாக்களில் பங்கேற்று நிலவரங்களை அறிந்து கொண்ட பின்பே அந்தத்துறைகளுக்கான விண்ணப்பத்தை வாங்கிப் போகிறான்.

தேசத்தின் அறிமுகம் கிடைக்கும் இன்னொரு நாள் பற்றியும் குறிப்பிட வேண்டும். நாடு முழுவதும் இருக்கும் அருங்காட்சியகங்களை இலவசமாகப் பார்க்கும் வாய்ப்பு ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் வழங்கப்படுகிறது. இதுவும் கல்விக்கூடங்கள் அறிமுகம் கொள்ளும் வாய்ப்பாக இருக்கிறது எனச் சொல்வேன். ஒருநாளின் மாலையில் 18.00 மணிக்குத் தொடங்கும் அனுமதி, அடுத்த நாளின் பகல் மற்றும் இன்னொரு இரவு என 36 மணிநேரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது. அந்த 36 மணிநேரத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக ஏறி இறங்கி ஒவ்வொன்றைப் பற்றியும் கேட்டும், பேசியும் அறிந்து கொள்ளும் காட்சியை நான் பார்த்துப் பிரமித்தேன். காட்சியக நாள் தேசத்தின் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்க்க அனுமதிக்கப்படும் காட்சியகங்களின் பட்டியலுக்குள் கல்விநிலையக் காட்சியகங்களும் உள்ளன. தேசத்தின் அருங்காட்சியகங்கள் மட்டுமல்ல, தொழிற்சாலைகள், வானொலி நிலையங்கள், தொலைக்காட்சிக் கூடங்கள், திரைப்பட நகரங்கள் என அனைத்துமே சுற்றுலா வரைபடத்திற்குள் இருக்கின்றன. பார்வையாளர் அனுமதிக்கான நாட்கள் என்பதோடு குழந்தைகளையும் இளைஞர்களையும் அனுமதித்துக் கற்றுத் தருவதற்கெனச் செலவு செய்கின்றன. அவர்கள் வெறும் வழிகாட்டிகள் அல்ல; ஆசிரியர்கள்

விண்ணப்பித்த அனைவரும் அந்தந்தத் துறையின் நுழைவுத்தேர்வு முறைக்கு உட்பட்டுத் தேர்ச்சி அடிப்படையில் வாய்ப்பளிக்கப்படுகிறார்கள். ஒரு துறையில் நுழைந்தபின் அடுத்த ஆண்டு அடுத்த துறையில் பதிவு செய்து இரண்டு பட்டங்களுக்குமான வகுப்புகளுக்கும் சென்றுவரலாம். ஒரு பட்டத்தின் பாடங்களை இரண்டு வருடம் படித்தபின்பு கூட விட்டுவிட்டுப் பிறதுறையின் பாடங்களைப் படித்து முடித்துவிட்டு வந்து இங்கே தொடரலாம். தொடர்ச்சியாக ஒரு பட்டத்தை படித்து முடித்து விட்டுத் தான் போக வேண்டும் என்பதில்லை. ஆறுமாதத்திற்கு ஒரு சிறப்பு வகுப்பு வாய்ப்பு ஓரிடத்தில் கிடைக்கிறது என்றால் துறைக்கு அளிக்கப்படும் ஒரேயொரு கடிதம் மூலம் விடுபட்டுப் போய்விட்டுத் திரும்பவும் வந்துவிடலாம்.

கல்வி முழுமையும் மாணாக்கரை மையமிட்டதாகவே இருக்கிறது. எல்லா ஆசிரியர்களின் வகுப்புக்கும் வர வேண்டும் என்பதில்லை. ஒரு ஆசிரியரிடம் கெட்ட பெயர் வாங்கிய மாணவனை ஒட்டுமொத்தத் துறையும் கரித்துக் கொட்டும் வழக்கமெல்லாம் அங்கு எடுபடாது. ஒருபாடத்தில் நல்ல மதிப்பெண் வாங்கும் மாணவிதான் எல்லாப்பாடங்களிலும் நல்ல மதிப்பெண் வாங்குவாள் என்ற நம்பிக்கையெல்லாம் ஆசிரியர்களிடத்தில் இருப்பதில்லை. மதிப்பெண்கள் சான்றிதழ்களில் இடம் பெறுவதில்லை. மதிப்புப்புள்ளிகள் மட்டுமே.

தனியார் மயம், தாராளமயம், உலகமயம் எனத் தங்கள் பொருளாதாரக் கட்டமைப்பைத் திறந்து விட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் பொதுப்
போக்குவரத்து, பொதுமருத்துவம், பொதுக்கல்வி போன்றவற்றை அரசின் கட்டுக்குள் வைத்திருப்பதையே விரும்புகின்றன. போலந்து தேசத்தில் இருக்கும் அனைத்துப் பள்ளிகள் மட்டுமல்ல; அனைத்துப் பல்கலைக்கழகங்களும் அரசுப் பல்கலைக்கழகங்களே. கல்வி பயிலும் மாணாக்கர்களுக்குத் தரும் சலுகைகளும் அனைவருக்கும் பொதுவானவையே. ஒருவர் 28 ஆண்டுகள் வரை கல்வி கற்றுக் கொண்டே இருக்கலாம். அதுவரை அரசின் கல்விசார்ந்த சலுகைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.


==========================



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்