இவை ஒரு நகரத்தின் கவிதைகள்
தாமிரபரணி, நெல்லை மாவட்டத்தின் ஊர்ப்பெயர்கள், சைவப் பெருங் கோயில்கள், திருவிழாக்கள், அவை சார்ந்த பண்பாட்டு நடவடிக்கைகளின் விவரிப்பு போன்றவற்றின் வழியாகக் கவி கலாப்பிரியா தனது கவிதைக்கு வட்டாரத்தன்மையை உருவாக்கியிருக்கிறார். ஆனால் அக்கவிதைகளுக்குள் உலவும் மாந்தர்களின் காதல், காமம், தவிப்பு, அதன் வழியெடுக்கும் முடிவுகள் போன்றன வட்டார எல்லைகளைத் தாண்டி விரியக்கூடியன.கலாப்பிரியாவைப் போலல்லாமல் தனது கவிதையின் வெளிசார்ந்த பின்னணியில் வாழும் குறிப்பிட்ட சாதியினரின் வாழ்க்கை சார்ந்த அன்றாட நடைமுறைகள், அவை உண்டாக்கும் அகமுரண்களைக் குறைவாக எழுதுவதாகவும் புறமுரண்களை அதிகமாக எழுதுவதாகவும் முயன்ற பழமலை தனது கவிதைகளுக்கு வேறொருவிதமாத வட்டாரத் தன்மையை உருவாக்கினார். கலாப்ரியாவைப் போலப் பெருங்கோயில் நிகழ்வுகளைக் கவிதைக்குள் எழுதிக் காட்டாமல் நாட்டார் தெய்வங்களின் இருப்பு, வழிபாட்டு நடைமுறை, பலியிடல்கள்,சாதிய இணக்கமின்மை, உணவு முறைகள், உறைவிடங்கள், போன்றனவற்றை எழுதியதின் வழியாகப் பழமலையின் கவிதைகள் வட்டாரக் கவிதைகளாக அடையாளப்பட்டன.
கலாப்ரியாவைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட வட்டார அடையாளத்தைக் கவிதைக்குள் முயன்றவர்கள் குறைவு. ஆனால் பழமலையைப் பின்பற்றிக் கரிகாலன், தவசி போன்றவர்கள் மணிமுத்தா நதிதீரம் என்னும் பெண்ணையாற்றின் அடையாளங்களைக் கவிதைக்குள் கொண்டு வந்துள்ளனர். இவ்விரு வட்டார அடையாளங்களைத் தாண்டிக் கவிதைகளில் வட்டார அடையாளத்தை உருவாக்க நினைத்தவர்கள் குறைவு. ஆனால் புனைகதைகளில் வெவ்வேறு வட்டார எழுத்துகள் சாத்தியமாகியுள்ளன. நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் வட்டார அடையாளங்களும் திணை அடையாளங்களும் கூடப் புனைவுகளில் எழுதப் பெற்றுள்ளன. வட்டார அடையாளத்தை எழுதிய புனைவுகளைப் போலக் குறிப்பிட்ட நகரத்தின் கதைகளும் கூட அதிகமாக எழுதப்பட்டுள்ளன. நாகர்கோவில், நெல்லை, மதுரை, கோவை, தஞ்சை, புதுச்சேரி, சென்னையெனப் பெருநகரங்களின் வாழ்க்கையைச் சொல்லும் புனைகதைகள் ஏராளமாக இப்போது எழுதப்படுகின்றன. ஆனால் கவிதை வடிவம் அந்த முயற்சியைச் செய்யவில்லை. நூற்றுக் கணக்கான கவிதைத் தொகுதிகள் அச்சிடப்பெற்ற போதிலும் குறிப்பான இடப்பின்னணியைத் தவிர்க்கும் தன்மைகளே கவிதைகளில் இருக்கின்றன.
இந்தப் பெரும்போக்கிலிருந்து ஒரு விலகலாக - ஒரு சோதனை முயற்சியாக இந்த மாத உயிர்மையில் அச்சிடப்பெற்றுள்ள -சதீஷ் குமார் சீனிவாசனின் இரண்டு கவிதைகளும் வெளிப்பட்டுள்ளன. ஒரு நகரத்தின் மொழி என்பதாகக் கவிதைக்குள் எந்தச் சொற்களும் இடம்பெறவில்லை. ஆனால் இரண்டு கவிதைகளிலும் ‘திருப்பூர்’ என்ற நகரின் பெயர் சுட்டல் இடம்பெற்றுள்ளது. இப்படிப்பெயர் சுட்டப்பட்டதாலேயே அந்நகரின் கவிதை என்றாகி விடவில்லை. அதற்கு மாறாக தொழில்மயமான திருப்பூருக்குள் வந்து குவியும் உள்நாட்டு அகதி வாழ்க்கையின் அலைவுகளும் இடப்பெயர்வுகளும் அந்நகரத்தை வெம்மையாக்கும் அதே சூட்டோடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் நகரில் கடும் உடல் உழைப்பாளிகளாக வாழ நேர்ந்துள்ள இளம்பெண்களின் உடலுக்குள் தங்கியிருக்கும் தொடுதலுக்கான ஏக்கமும், காதலாக மாறும் தகிப்பையும் “ஆகா” என்ற சொல்லின் மூலம் பதிவு செய்துள்ளார் கவி சதீஷ்குமார் சீனிவாசன். இவரது கவிதைகள் எதனையும் இதற்கு முன்னால் வாசித்ததில்லை. ஆனால் இவ்விரண்டு கவிதைகள் புதிய கவிதை முயற்சிக்கான விதைத்தூவலாக வெளிப்பட்டுள்ளன. சிக்கலாக எதனையும் சொல்லாமல் திருப்பூர் என்னும் நவீனப் பெருநகரின் - பின்னலாடை வலைவிரிப்புக்குள் அலையும் மனிதக் கூட்டத்தின் சில உணர்வுகளை எழுதியதின் மூலம் ’ ஒரு நகரக்கவிதை’ யின் அடையாளமொன்றைத் தொடங்கி வைத்துள்ளார். கவி சதீஷ்குமார் சீனிவாசனுக்கு வாழ்த்துகள்.. புதுவகைக் கவிதையை அடையாளம் கண்டு அச்சிட்டுள்ள உயிர்மை ஆசிரியருக்குப் பாராட்டுகள்.
ஆகா என்றொரு அசைவு
----------------------------------
சரியாக அதை சொல்லனும் எனில்
ஆகா என்றுதான் சொல்ல முடியும்
இந்தப் பத்து வருடத்தில்
திருப்பூரில் நான் கண்ட முதல் அசைவு போல இருந்தது அது
வளர்மதி ஸ்டாப்
பாலம் கடக்கும் போது
சரியாகப் பின்னாலிருந்து அவளைத் தொட்டான் அவன்
மீனை நீர் தொடுவது மாதிரி
ஒரு கணம் திரும்பி
தலையை இரு கைகளாலும் தாங்கி அதிசயித்தாள்
இந்த நகரத்தில் இப்போதைக்கு அவள் தான் அழகு என மலர்ந்தாள்
எனக்கு அதை கண்டதும்
’ஆகா’ என்று இருந்தது
இந்த ஆகா இல்லாமல்தானே
இதெல்லாம் சீரழிந்தது
இந்த ஆகாவுக்காகத்தானே
கனவுகள் துடித்தன
இந்த ஆகா இல்லாமல்தானே
உடல்கள் உடல்களாக மட்டுமே
அறை திரும்பின தனித்திருந்தன
அவர்களுக்குள் என்ன என்று கூட
எனக்குத் தெரியாது
இப்போது சொற்களுக்குள் நடக்க ஆரம்பித்திருந்தார்கள்
ஆனால்
அவளுடைய இன்றைய அற்புதம் அவன் தான்
இந்த நகரத்தின் இன்றைய அசைவு அந்த ஆகா தான்
********
கே. என். பி. சுப்பிரமணியன் நகர்
திருப்பூர் 641608
------------------------------------
கே. என். பி. சுப்பிரமணியன் நகரில்தான்
பத்து வருடமாக என் உடல் சுற்றிக்கொண்டிருக்கிறது
என் மூதாதையர்கள் போர்கள் இல்லாமலே
அகதிகளானவர்கள்
தற்செயலாகவோ
வரலாறாகவோ
எப்போதும் ஒரு வறுமை
என் நினைவின் நாளிலிருந்து எரிகிறது
நூறு தெருக்கள் உள்ள இந்த நகரில்
இந்தப் பத்தாவது வருடத்தில் ஏழாவதாக மாறிய மூன்றாவது மாடி வீட்டில் வசிக்கிறோம்
கே. என். பி. சுப்பிரமணியன் நகரில்
மரங்களே இல்லை
இந்த நகரத்திலும்
மரங்களே இல்லை
மஞ்சள் அரளி மரங்கள் மட்டுமே உண்டு
அவைகளில் பெரிதாக நிழல்கள் இல்லை
ஆனால் எல்லா மாலையிலும்
இந்த திருப்பூரில்
தான் மட்டும்தான்
ஒரே அழகனெ
ஒரே மலரென பொலிவு காட்டும்
கே என் பி சுப்ரமணியன் தெருவில்
பத்தாண்டுகளாக சுற்றிக் கொண்டிருக்கும்
என்னுடலில்
இதுவரை
போயும் போயும் இந்த மஞ்சள் அரளியில்
ஒரு அரளி கூட கனவாக வந்ததில்லை
செத்த பிறகு பேயாகத் தலைகீழாகத் தொங்க அத்தனை வலுவான கிளைகளும் இல்லை இந்த மலர் மரத்தில்
எத்தனை பத்து வருடங்களாக அத்தனை உடல்கள் இப்படி அலையணுமோ
========== சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்

கருத்துகள்