சிறார்களுக்கான நாடகங்கள் -ஒரு குறிப்பு


தமிழில் நாடகக் கலையின் இருப்பே கேள்விக்குரியதாக இருக்கிறது. நவீன நாடகங்கள் என்ற அறிமுகம்கூடத் தமிழில் அதன் சரியான அர்த்தத்தில் வெளிப்படவில்லை. ஒரு செய்தியை அல்லது ஒரு கேள்வியை நிகழ்வாக்கிப் பார்வையாளனை நோக்கிக் காட்சிப்படுத்திய நிகழ்வுகள்தான் நவீன நாடகங்களாக அறிமுகப்பட்டன. அந்தப் போக்கிலிருந்து மாற்றங்களை உருவாக்கிப் பல்வேறு வகைப்பட்ட நாடகப்பிரதிகளும் மேடையேற்ற முறைகளும் உள்ளன என்ற தகவலே பொது வாசகனுக்கு அல்லது பார்வையாளனுக்கு இன்னும் எடுத்துச் செல்லப்படவில்லை.
நாடகக் கலைக்குள் தொழிற்படும் பல்வேறு வகையான நாடகங்களின் இருப்பையும் வளர்ச்சியையும் தேடினால், அடைவது அயற்சியும் வருத்தமும்தான். கலை இயக்கங்கள் சார்ந்து நடப்பியல், மிகை நடப்பியல், அபத்தவியல், குறியீட்டியல், குரூரவியல் நாடகங்கள் எழுதப்படுவதும் மேடையேற்றப்படுவதும், ஒன்றிலிருந்து ஒன்றை வித்தியாசப்படுத்திப் பார்ப்பதும் இங்கு நடைபெறவில்லை. மேடையில் நிகழ்ந்த நிகழ்வுகளுக்கு மாற்றாக வீதிகளிலும், பூங்காக்களிலும், கடற்கரையிலும் நடந்த நிகழ்வுகளே நவீன நாடகத்தின் அடையாளங்கள் ஆகிவிடாது என்பது சொல்லப்பட வேண்டும். உணர்த்தப்பட வேண்டும்; உணரப்பட வேண்டும்.
உணர்த்துதல், உணருதல் என்ற பரிவர்த்தனை முழுமை பெற ரசனை வளர்க்கப்பட வேண்டும். தீவிர சினிமா, மாற்று சினிமா, இணை சினிமா என்றெல்லாம் பேசுகிறவர்கள் திரைப்பட ரசனை வகுப்புக்களும் , பயிலரங்குகளும் ஏற்பாடு செய்வது போல நாடக ரசனை வகுப்புக்களும் இங்கு நடத்தப் பட வேண்டும் என்றே தோன்றுகிறது. நாடகக் கலைஞர்களை உருவாக்குவதற்குப் பயிற்சிப் பட்டறைகள் ஏற்பாடு செய்வது போலப் பார்வையாளர்களைத் தயாரிப்படுத்துவதற்குப் பயிலரங்குகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் நடந்த நாடக விழாக்கள் அத்தகைய பயிலரங்குகளாக இருந்தன என்பது ஒரளவு உண்மை.ஆனால் 21 -ஆம் நூற்றாண்டுப் பயிலரங்குகளும் நாடகவிழாக்களும் அதில் கவனம் செலுத்தவில்லை.
நகரவாழ்வின் விரிவில் தொலைக்காட்சிப் பெட்டிகள் மாயாஜாலப் பெட்டிகளாக மாறி நமது வீட்டின் அறைகளில் தங்கி உள்ளன. நமது விருப்பங்களை நிறைவேற்றும் அலாவுதீனின் அற்புத விளக்காக இருக்கிறது எனக் கருதி நமது காலத்தை அதனிடம் கொடுத்துவிட்டு அதன் போக்கில் நமது பொழுதுகள் கழிந்து கொண்டிருக்கின்றன. பெரியவர்களின் பொழுதுகள் இப்படிக் கழிந்தாலும் அன்றாட வாழ்வின் நெருக்கடி தரும் சிந்தனையின் ஊடாக அதிலிருந்து விடுபட்டுப் பணியிடங்கள் என்னும் நடப்பு உலகத்திற்குள் நுழைந்து விடுகிறார்கள்.அதன் காரணமாக அவர்களின் தப்பித்தல்கள் சாத்தியமாகிவிடுகிறது.
ஆனால் குழந்தைகள் மன உலகம் அப்படிப் பட்டதல்ல. பதிவுகளை ஆதாரங்களாக்கி அதன் வழியே பயணம் செய்யக்கூடியன. எவை இருப்பு அல்லது நடப்பு என்று புரிந்து கொள்ளும் நிலையைத் தாண்டாத நிலையில் எல்லாவற்றவையும் பதிந்து கொண்டே இருக்கும். புனைவுகள் எவை? புனைவற்றவை எவை ? எனப் பிரித்துப் பார்க்க முடியாத நிலையில் எல்லாமும் அவர்களின் முன் விரியும் உலகம்தான். எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளவே விரும்புவார்கள். இந்த நிலையில் அவர்களுக்குத் தர வேண்டியவை எவை? தவிர்க்கவேண்டியவை எவை ? எனப் பிரித்துப் பேண வேண்டிய பணி பெற்றோர்களுக்கும் சமூகத்திற்கும் உள்ளது. ஆனால் நமது சமூகமோ எல்லாவற்றையும் ஊடகங்களிடம் - தொலைக்காட்சி ஊடகம் என்ற மாயப் பெட்டியிடம் - தந்துவிட்டு ஒதுங்கி நிற்கிறது.
ஒட்டுமொத்த கலையின் நிலை இதுவென்றால் நாடகக் கலையின் நிலையும், அதற்குள் செயல்படும் குழந்தைகள் நாடகத்தின் நிலையும் வேறுவேறாக இருக்கும் என்று கருத வேண்டியதில்லை. தொலைக்காட்சிகளில் காலை 9 மணிமுதல் அரைமணிநேர நிகழ்வுகளாக வெட்டிவெட்டித் தரப்படும் பால்வேறுபாட்டை முன்வைக்கும் -குரூரமான பெண்களின் வெளிப்பாட்டைத் தொடர்ச்சியாக முன்வைக்கும் குடும்பக்கதம்பங்கள் நாடகங்கள் என்ற பெயரில் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து குழந்தைகள் விடுவிக்கப்படவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்