உயிர்மைச் சிறுகதைகள்.

இணைய இதழாயினும் அச்சிதழாயினும் முதல் வாசிப்புக்கான விருப்பம் அவற்றில் வரக்கூடிய சிறுகதைகளே. அதன் பின்னரே கவிதை, கட்டுரை என நகர்வேன். மாதந்தோறும் நான்கைந்து கதைகளை வெளியிடும் உயிர்மையில் ஒவ்வொரு மாதமும் ஒன்றிரண்டு கதைகள் முக்கியமான கதையாக – புத்தம் புதுக்கதையாக இருக்கும் என்பதால் கடந்த ஆறுமாதமாக வாசிக்காத கதைகளையும் வாசிக்கவேண்டும். ஆனால் இரண்டு நாட்களாக வாசித்த கதைகள் இந்த மாதத்தில் வந்துள்ள கதைகளை. 2026, ஜூன் இதழில் 5 சிறுகதைகளை அச்சிட்டுள்ளது.
1. எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் - இந்திரா பார்த்தசாரதி (17-19)
2. தேர்தல் - கலாப்ரியா (25-28)
3. வௌவால் வேட்டை- கவியோவியத்தமிழன் (33-45)
4. நாக்குகள் - சுப்ரபாரதிமணியன் (66-71)
5. கடைசி வெளிச்சம் - ஆமிரா கார்த்திக் (80-83)

இடைநிலை இதழ்களில் தனது இலக்கிய அடையாளத்தைக் தக்கவைத்துக்கொள்வதில் கவனத்துடன் இருக்கும் உயிர்மை எப்போதும் புனைவிலக்கியத்திற்கும் விமரிசனத்திற்கும் செம்பாதிப்பக்கங்களை ஒதுக்கிக்கொண்டே இருக்கின்றது. இம்மாதத்தில் கதைகளுக்கும் கவிதைக்குமென மூன்றில் ஒருபங்கு இடத்தை அளித்திருக்கின்றது. அச்சிட்டுள்ள 5 சிறுகதைகளுக்கு 30 பக்கங்களையும் இரண்டுபேரின் கவிதைகளுக்கு 3 பக்கங்களையும் தந்துள்ளது. எப்போதும் போல உணர்ச்சிகளின் கொந்தளிப்போடு மனுஷ்யபுத்திரனின் 3 கவிதைகளும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் -இருத்தலியக் காட்சிகளையும் அசைவுகளையும் எழுதும் தேவதச்சனின் நான்கு கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

****

மூத்த எழுத்தாளர்களான இந்திரா பார்த்தசாரதி, கலாப்ரியா, சுப்ரபாரதி மணியன் ஆகியோரோடு இளம் அல்லது புதிதாக எழுதும் கவியோவியத்தமிழனும் ஆமீரா கார்த்திக்கும் எழுதியுள்ள கதைகளை வாசித்து முடித்த நிலையில் எனது முதல் பரிந்துரையாகக் கவியோயத் தமிழனின் வௌவால் வேட்டை கதையை இம்மாதத்தின் முத்திரைச் சிறுகதையாகப் பரிந்துரைக்கின்றேன். தமிழில் எழுதப்படும் புதிதான கதைவெளி, கதைவெளிக்குள் எழுதப்படாத கதாமாந்தர்கள், அவர்களின் உணர்ச்சிகளின் திரட்சி, குடும்ப உறுப்பினர்களாகத் தந்தை, தாய், மகன் ஆகியோருக்குள் நிலவும் உறவின் பிணைப்புகள், வறுமையிலும் வாழ்தலில் காட்டும் தீராத வேட்கையையும் எழுதிக்காட்டியுள்ள வௌவால் வேட்டை சில மாதங்களில் நான் வாசித்த கதைகளில் அசலான தமிழ்க்கதையாக வந்திருக்கின்றது.

சிறுகதை வடிவத்தின் மீது தீவிரமான ஈடுபாடும் வாசிப்பதில் விருப்பமும் கொண்டவர்கள் கவியோவியத்தமிழனின் வௌவால் வேட்டை கதையை வாசித்துப் பேசவேண்டும்; விவாதிக்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றேன்.அந்தக் கதை உருவாக்கியிருக்கும் புனைவு வெளி தமிழுக்குப் புதிதான ஒன்றாக இருக்கின்றது. விவரிக்கும் முறையும் எழுதப்பட்ட நிகழ்வுகளும், நிலப்பரப்பின் வெப்பதட்பமும் தமிழ்நிலத்திற்குள் திட்டுத்திட்டாக இருக்கும் கானக வெளியாகவும் இரவின் பாடல்களாகவும் நகர்கின்றன. ஆஸ்துமா நோயாளியான அம்மாவுக்கான மருத்துவப்பண்டமான வௌவால் இறைச்சியைத் தேடும் வேட்டையைக் களனாகக் கொண்ட கதை கிராமப்புற வேட்டைகளின் அடுக்குகளையும், அரசின் – காவல்துறையின் நெருக்கடிகளைச் சந்தித்துக் காணாமல் போய்க்கொண்டிருக்கும் வேட்டைப் பண்பாட்டின் அழிவையும் வாசிப்பவர்களுக்குக் கடத்துவதில் முழுவீச்சுடன் மொழியைப் பயன்படுத்தியுள்ளது. தனது நோயைத் தீர்க்கமுடியாத வௌவாலாக வந்து தன் குடும்பத்திற்குள் தொங்கிக் கொண்டிருக்கும் மனைவியாக உருமாறும்போது வேட்டையைக் கைவிட்ட வேட்டைக்காரனின் மனமாற்றத்தோடு கதை நிறைவடைந்துள்ளது.

கவியோவியத்தமிழனின் இந்தக் கதையை வாசித்து முடித்தவுடன் அண்மையில் எழுத்தாளர் சோ.தர்மன் எழுதிய முகநூல் பதிவொன்று நினைவுக்கு வந்தது. வேட்டையோடு தொடர்பு கொண்ட அலைகுடிகளான நரிக்குறவர்களின் வாழ் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விவரித்துவிட்டு, தமிழ்நாட்டுக் கிராமப்புறக் காடுகளில் நடக்கும் சிறுவிலங்குகளை வேட்டையாடும் தொழிலுக்குப் புதிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் பதிவொன்றை எழுதியிருந்தார். மரபான வேட்டைகளால் சிறிய விலங்கினங்களும் பறவைகளும் முற்றுமுழுதாக அழிந்துபோவதில்லை எனச் சொன்னதோடு, இயற்கை ஒவ்வொரு விலங்கினத்தின் அழிவுக்கேற்ப மறு சுழற்சியைச் செய்துகொள்ளும் என்று சொல்லியிருந்தார். தமிழ்நாட்டுக் கிராமிய வாழ்க்கையை முற்றுமுழுதாக நேசிக்கும் ஒரு எழுத்தாளராகச் சோ.தர்மனின் கோரிக்கையில் இருந்த நியாயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வதில் கருத்துவேறுபாடுகள் உண்டு. இயற்றப்பட்ட வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டங்கள் மீது மறுபரிசீலனையைக் கோரும் அந்தப் பதிவுக்கு இன்னொரு பரிமாணத்தைத் தந்துள்ளது கவியோயத்தமிழனின் வௌவான் வேட்டை.

வௌவால் வேட்டைக்குப் பின் எனது பரிந்துரை ஆமீரா கார்த்திக்கின் ‘கடைசி வெளிச்சம்’ கதையும் இ.பா.வின் ‘எல்லாரும் இன்புற்றிருக்கவேண்டும்’ கதையும் எடுத்துக்கொண்ட உரிப்பொருளை (content) விவாதிக்கும் முறைக்காக வாசிக்கப்பட வேண்டிய கதைகள் என்பேன். மரணத்தை வெல்லும் நோக்கம் கொண்ட நிசிகேதனின் தொன்மத்தை நினைவுபடுத்தியுள்ள அந்தக் கதை,ஞானத்தின் தேடலை மட்டும் வாழ்க்கையின் இலக்காகக் கொள்ளும் பிராமணர்கள், லௌகீக வாழ்க்கையில் தோற்றுப் போய்விடும் நெருக்கடிகள் உணரப்படும் சூழலைக் கடப்பதை மறந்து நிற்கின்றார்கள் என்பதும் விவாதமாகியிருக்கின்றது. இந்திய/இந்து ஞானமரபில் ஆழமாகத் தன்னைப் பிணைத்துக்கொள்ள நினைப்பவர்களும் கூட உலகியல் நெருக்கடிகளை – உடலின் தேவைகளைத் தாண்ட முடியாமல் தவிக்கும் விவாதமொன்றைத் தீவிரமாகப் பாத்திரங்கள் வழியாகவும் நிகழ்வுகள் வழியாகவும் கதையாக்கியிருக்கின்றார் ஆமீரா கார்த்திக். இந்த விவாதங்களுக்காக அந்தக் கதையை வாசிக்கலாம். அதேபோல் இ.பா.வின் கதை சமகால அரசியல் சொல்லாடல் ஒன்றை விவாதப்படுத்தி வாசிக்க வைத்துள்ளது.

 சமகாலப் பெரிய மனிதர்களின் அரசியல் ஈடுபாடு என்பது கொள்கைசார்ந்த – வாழ்வியலில் பின்பற்றும் நோக்கத்தோடு கூடிய அரசியல் ஈடுபாடாக இல்லை. அரசியலைப் பயன்படுத்தித் தனது இருப்பை -வாழ்க்கை வசதிகளை – அதிகார நிலையைத் தக்கவைக்கும் நோக்கம் கொண்டது என்று விவாதத்தை முன்வைக்கின்றது. அத்தோடு அவரவர் சாதிசார்ந்த ஆளுமைகளின் கொள்கைகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லாதபோதும் அவர்களின் அரசியல் நிலைபாட்டைப் பின்பற்றும் மனிதர்களாக – சாதி மனிதர்களாகக் கொள்கைகளைப் பின்பற்றுகின்றார்கள் என்ற கடுமையான விமரிசனத்தை இந்திரா பார்த்தசாரதி எல்லாரும் இன்புற்ற வேண்டும் என்ற கதையில் வைத்துள்ளார். அவரது விமரிசனம் ஒளிவு மறைவில்லாமல் பெரியாரைப் பின்பற்றுவதாகக் காட்டிக்கொள்ளும் ‘சாதி மனிதர்’ ஒருவரைக் காட்டியுள்ளது. இந்தக் கதையில் வரும் தெலுங்கு பேசும் பாத்திரத்தைப் போல, தனக்கு உடன்பாடில்லாத நிலையிலும் மார்க்சியவாதியாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் பிராமணப் பாத்திரம் ஒன்றை எழுதிக் காட்டிய கதையொன்றையும் இந்திரா பார்த்தசாரதியே எழுதியிருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.

ஐந்தில் மூன்று கதைகள் பழுதில்லை என்பதில் மகிழ்ச்சி. மற்ற இரண்டு கதைகளும் கலாப்ரியாவின் தேர்தலும், சுப்ரபாரதி மணியனின் நாக்குகளும் சமகால நிகழ்வுகளை நினைவூட்டினாலும் ஆழமான விவாதங்களையே, முரண்பாடுகளையே முன்வைக்காமல் வெளிப்பட்டுள்ளன. நடந்து முடிந்த கதையைப் பேசப்போவதுபோலத் தொடங்கிய கலாப்ரியாவின் கதை முற்றிலும் கடந்து காலத்திற்குள் போய் இளம்பருவத்துக் காதலொன்றுக்குள் நின்றுவிடுகின்றது. சுப்ரபாரதி மணியனின் கதை பாதிக்கு மேல் புனைவு மொழியைக் கைவிட்டுவிட்டுக் கட்டுரை மொழிக்குள் நகர்ந்துவிட்டது.

*************

பின் குறிப்பாக உயிர்மை பற்றி

அமெரிக்கப் பயணத்தால் ஆறுமாதங்களாக அச்சிதழ்களை வாசிக்க முடியவில்லை. சந்தா கட்டியதாலும் கட்டாமலும் வரும் அச்சிதழ்களை வாசிப்பதில் வரிசை முறை எதையும் பின்பற்றுவதில்லை. மனம்போன போக்கில் வாசிப்பு நடக்கும். கோவிட் அடைப்புக்ககுப் பின்னால் அச்சிதழ்களை விடவும் இணைய இதழ்கள் அதிகம் வாசிப்புக்குரியனவாக மாறிவிட்டன. அச்சிலும் இணையத்திலும் கிடைக்கும் இதழ்களில் இணைய இதழ்களுக்குச் சந்தா கட்டியிருப்பதால் அச்சிதழ்களின் வரவு குறைந்துவிட்டது. சில அச்சிதழ்களுக்கு இணைய வடிவமும் இருப்பதால் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு அவற்றை வாசிக்க முடிகின்றது. ஆனால் உயிர்மை மட்டும் அச்சில் தான் வாசிக்கக் கிடைக்கின்றது. தமிழ் இலக்கியம் உலக இலக்கியமாக மாறிய சூழலில் உயிர்மை எல்லாம் பத்தாண்டுகளுக்கு முன்பே இணையத்திலும் கிடைக்கும் இதழாக ஆகியிருக்கவேண்டும்.

தொடர்ந்து வருகின்ற இடைநிலை இதழ்களில் இலக்கியத்திற்கும், கலை, பண்பாட்டு நிகழ்வுகளுக்கும் தொடர்ச்சியாக இடமளித்துக்கொண்டிருக்கும் இதழ் உயிர்மை என்பதால் அதற்கான வாசகர்கள் உலகம் முழுவதும் இருக்கவே செய்கின்றார்கள். எனது பயணங்களில் எங்களுக்கெல்லாம் உயிர்மை வாசிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை என்று சொன்ன நண்பர்கள் இருக்கின்றார்கள். உயிர்மையின் ஆசிரியர் மனுஷ்யபுத்திரனின் அரசியல் சார்போடும்,இதழில் இடம்பெறும் அரசியல் சார்புக் கட்டுரைகளோடு உடன்பாடில்லாதவர்கள் கூட, அதில் வரும் கதைகளுக்காகவும் கவிதைகளுக்காகவும் வாசிக்கும் விருப்பத்தில் இருக்கின்றார்கள். குறைவான எண்ணிக்கையில் அச்சிட்டுச் சந்தாதாரர்களுக்கும் நூலகங்களுக்கும் வழங்குவதோடு, இணைய இதழ்களுக்குத் தனிச்சந்தா தொகை வைக்கலாம். அப்படிச் சந்தா செலுத்தும் வாசகர்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கவே செய்யும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருமங்கலம் தொகுதி வாக்களிப்பும் சேடபட்டி இரா.முத்தையாவும்.

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

தங்கர் பச்சானின் சொல்முறையும் கருமேகங்கள் கலைகின்றன என்ற அண்மை சினிமாவும்