காசி மாரியப்பன் என்னும் கருத்தியல் கடத்தி
நண்பர்கள், உடன் பணியாற்றியவர்கள், அவரால் உருவாக்கப்பட்டவர்கள் எனப் பல தரப்பினருக்கும் ஒருவர் தந்துள்ள அன்பு, மரியாதை, உறவுநிலை, வழிகாட்டுதல் எனப் பல தளத்தைச் சொல்லும் கட்டுரைகள் அடங்கிய ‘காசி ஐயா’ தொகுப்பை வாசிக்க வாசிக்க எனக்கு முதலில் தோன்றியது ஆசிரியத் தொழிலில் மதிப்புமிக்க பக்கங்களை வாசிக்கிறோம் என்ற மனநிலை. நண்பர் காசி.மாரியப்பன் அளவுக்கு மாணாக்கர்களின் மரியாதையும் அன்பையும் பெற்ற ஆசிரியராக நான் இருந்ததில்லை என்ற எண்ணம் அடுத்துத் தோன்றியது.
கல்விப்புலத்தில் பணியாற்றிய பேராசிரியராக இருந்த போதிலும் இவ்வளவு எண்ணிக்கையில் நான் மாணக்கர்களைச் சந்தித்ததில்லை.ஐந்து மாணாக்கர்கள் என்ற குறைந்த எண்ணிக்கையிலிருந்து இருபத்தைந்து மாணாக்கர்கள் என்ற அதிக அளவு எண்ணிக்கை வரை எனது வகுப்புகளில் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் அனைவருமே முதுகலையும் ஆய்வுநிறைஞர் பட்டப்படிப்புக்கும் வந்தவர்கள். பின்னர் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் ஆனவர்கள். அதனால் எனக்கு இத்தகைய வாய்ப்புகளின் நெருக்கமான உறவுகளும் ஏற்படும் சூழல் உறவாகவில்லை என்ற மனம் காரணங்களைக் கற்பித்துக் கொண்டது. என்றாலும் என்னிடம் பயின்றவர்களுக்குப் பொருளாதார நிலையில் உதவிய நாட்களும், மாணவிகளின் குடும்பக்கதையைக் கேட்டு வழிகாட்டிய கதைகளும், விளிம்புநிலைக் குடும்பத்து மாணாக்கர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளை உருவாக்கிய நினைவுகளும் வந்துபோய்க்கொண்டே இருக்கின்றன. அவரைப்போலவே நானும் நாட்டுநலப்பணித்திட்டம், நூலகம், பதிப்புத்துறை, பல்கலைக்கழகக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் எனக் கூடுதல் பணிகள் காரணமாகக் கிடைத்த அனுபவங்களையும் அசைபோட முடிந்தது. என்றாலும் இப்படியொரு தொகுப்பைக் கொண்டுவரும் வேலையைச் செய்ய ஒரு மாணவப் பட்டாளத்தை உருவாக்கவில்லையே என்ற இயலாமையும் பொறாமையும் இருக்கவே செய்கின்றது.
காசி.மாரியப்பன் எனது நீண்ட நாள் நண்பர். அவர் முதுகலை படிப்பதற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு வந்தபோது அங்கே நான் ஆய்வாளர். எனது ஆய்வு நெறியாளர் தி.சு.நடராசனிடம் முதுகலை மாணவ நிலையிலிருந்து நண்பராக இருந்தவன். என்னைப்போலவே காசி.மாரியப்பனும் மாணவப்பருவத்திலேயே அவரோடு நண்பராகப் பழகினார். வகுப்புத் தோழமைகளைத் தாண்டி ஆய்வாளர்களோடு விவாதிக்கத்தக்க வாசிப்பைக் கொண்டிருந்தார். அப்போது தொடங்கிய நட்பில் எனது பாண்டிச்சேரி காலம் (1989-97) ஏற்படுத்திய இடைவெளி நேர்ச்சந்திப்பில்லாத இடைவெளியே என்பது நான் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்குப் போனபோது உறுதியானது.
அவர் தூயசேவியர் கல்லூரி தமிழ்த்துறையில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருந்தார். பல்கலைக்கழகம் எனக்கு ஒதுக்கியிருந்த இடம் அக்கல்லூரிக்கு அருகில் இருந்தது. நேரடியாகக் கற்பிப்பதற்கென மாணாக்கர்கள் இல்லாத ஆசிரியராக இருந்ததால், பிற்பகல் நேரங்களில் சேவியர் கல்லூரி தமிழ் ஆய்வாளர்கள் அறையில் தான் இருப்பேன். அவர்களின் ஆய்வுகள் தொடர்பாக உரையாடுவதும் வாசிக்கும் முறையைச் சொல்வதும் ஆய்வுநோக்கத்தை உருவாக்குவதும் அந்த நேரத்துப் பொழுதுபோக்கு. அங்கிருந்த மற்ற ஆய்வாளர்கள் எல்லாம் நான் சொல்வதைக் காதால் கேட்டுக்கொண்டு புதிதாக வாசிக்கத்தொடங்குபவர்களாக இருந்தார்கள். ஆனால் காசி.மாரியப்பன் மட்டுமே எனது எழுத்துகளை வாசித்தவராக இருந்தார்.
எனது எழுத்து ஆர்வங்களான நாடகம், சினிமா போன்றவற்றை வாசிக்கவில்லை என்றாலும் இலக்கியவியல் கட்டுரைகளை வாசித்தவராக இருந்தார். தலித் நாவல்களைத் தனது முனைவர் பட்ட ஆய்வுக்கான பொருண்மையாகக் கொண்டிருந்ததால் நான் எழுதிய தலித்திலக்கியம், நாவல் இலக்கியம் குறித்த கட்டுரைகளை ஆழமாக வாசித்திருந்தது புரிந்தது. அதனால் அவரோடு கூடுதலான சந்திப்புகளும் விவாதங்களும் நடந்தன. அவரோடு நடந்த விவாதங்கள் அவருக்கும் எனக்கும் பயனுடையதாக இருந்தன. இலக்கியவியலின் அடிப்படைகளான காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றின் இணைவுத்தன்மையும் அவற்றை இணைக்கும்போது இந்திய சமூகத்தில் நிலவும் சாதியத்தின் வேறுபாடுகள், படிநிலைகள், கருத்தாக்கங்கள் ஆகியவற்றை அவற்றின் இயங்குதளங்களோடு சேர்த்து வாசிப்பதையும் ஆய்வின் பகுதியாக மாற்றுவதையும் குறித்து அதிகமும் விவாதித்தோம். அவற்றைச் சரியாகவே உள்வாங்கித் தனது ஆய்வை நிறைவு செய்தார்.
முனைவர் பட்டத்திற்காகக் கற்றுக் கொண்ட அந்தக் கருத்தியலைப் பின்னரும் தொடர்ந்து உள்வாங்கி எழுதவும் செய்தார். தான் எழுதியது மட்டுமல்லாமல் தனது மாணாக்கர்களின் ஆய்வுப்போக்கிலும் உள்வாங்கச் செய்துள்ளார் என்பதை இந்தத் தொகுப்பிலுள்ள பல கட்டுரைகள் காட்டுகின்றன. காசி.மாரியப்பன் போன்றவர்கள் பல்கலைக்கழகத்துறைகளில் பணியாற்றியிருந்தால் அவர்களின் ஆய்வாகப் புதிய நூல்கள் தமிழியல் பரப்புக்குக் கிடைத்திருக்கும். அத்தோடு அவர்களது நெறியாள்கையில் புதிய ஆய்வாளர்கள் பலர் உருவாகியிருப்பார்கள் என்ற எண்ணத்தோடு, ஏதாவது பல்கலைக்கழகத்துறைக்கு விண்ணப்பித்து மாறுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். பணம் கொடுக்காமல் அல்லது பரிந்துரைக்கத்தக்கப் பெரும் சக்தியாக ஒருவர் இல்லாத நிலையில் எந்தவொரு பணி வாய்ப்பையும் பல்கலைக்கழகங்களில் பெற்றுவிட முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. அதனால் பல்கலைக்கழகத்துறைகளிலும் தேடிக்கற்பிக்கும், நெறிப்படுத்தும் தீவிரத்தன்மை அற்றவர்களே நிரம்பினார்கள். பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றிலும் அப்படி நடந்தபோது மறுத்துரைக்கவோ, செயல்படவோ முடியாமல் ஓய்வுபெற்று வந்து விட்டேன். இப்போது ஆய்வு நிறுவன வல்லுநர்கள், பல்கலைக்கழகத் துறையின் ஆராய்ச்சி விருப்ப ஆசிரியர்கள், கல்லூரியில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் எனப் பணிநிலைகளில் இருந்த வேறுபாட்டுத் தன்மைகள் அழிந்துவிட்டன.
இந்தப் போக்கை முன்னுணர்ந்தவராகத் தான் பணியாற்றிய கல்லூரிகளிலேயே அவரளவில் முயற்சிகள் செய்து, தீவிரமான மாணவர்களை உருவாக்கியிருக்கின்றார் என்பதை இந்தத் தொகுப்பின் பல கட்டுரைகள் உறுதி செய்துள்ளன. எனது பணிக்காலத்தில் சில கருத்தரங்குகளில் பங்கேற்கும் வல்லுநராகப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்தபோது, இளைமைக்காலத்தில் அவரிடம் இருந்த கலகத்தன்மை கொண்ட விவாதிக்கும் முறை தொலைந்து போகாமல் இருந்தது என்பதைக் கண்டிருக்கின்றேன். குறிப்பாக தமிழ்ப்புனைகதை எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், இமையம், சோ.தர்மன் ஆகியோரின் புனைவுகளை மையப்படுத்தி நடந்த இருநாள் கருத்தரங்கில் அந்தப் பொறி பறந்தது என்பதை இப்போது நினைத்துக் கொள்கின்றேன்.
ஊதியம் சார்ந்த பணி ஓய்வுக்கு வயது காரணமாக இருக்கின்றது. ஆனால் ஆய்வு செய்யவும் எழுதவும் இளையோர்களை நெறிப்படுத்தவும் வயது காரணமாக இருப்பதில்லை. அதனைத் தொடர்ந்து செய்வார் என்ற நம்பிக்கை இருக்கின்றது. தனது சிந்தனையையும் முறையியலையும் உள்வாங்கிய மாணாக்கர்களை உருவாக்குவதை விடப் பெரிய சொத்து ஓர் ஆசிரியருக்கு வேறொன்றில்லை. காசி மாரியப்பன் அத்தகைய சொத்துக்களைப் பலப்பலவாகப் பெற்றுள்ளார். அது அவரின் முன்னோடிகளிடமிருந்து வழிவழியாக வந்த சொத்தின் மதிப்பைக் கடத்தியதால் கிடைத்த பேறு. அவருக்கு எனது வாழ்த்தும் அன்பும்.

கருத்துகள்