பேராசிரியர் அ. ராமசாமியின் பெண்ணிய வாசிப்புகள்

"அறிவு ஒவ்வொருவருக்கும் வேறுவேறாய் இருக்கிறது. வேறுவேறு அளவுகள் தானே வந்ததில்லை. இருப்பாலும் சூழலாலும் உருவாவது. இருப்பு என்பதும் உருவாக்கம் என்பதும் நிகழ்கால இருப்பு மட்டுமல்ல. கடந்த கால வாய்ப்புகளும் பயன்படுத்திக்கொண்டு வளர்ந்ததும் பற்றியதுதான்."

'பெண்ணியம்' என்கிற ஒரு முக்கியமான சொல் பல இடங்களில் பலவிதமாகப் பேச்சுகளிலும் எழுத்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலே கூறப்பட்ட கூற்று ராமசாமி அவர்களின் 'பெண்ணிய வாசிப்புகள்' நூலின் முதல் அத்தியாயத்தில் வருகிறது. பெண்ணியத்தை மையமாகக் கொண்ட எழுத்துகள் மீது எனது இருப்பும் சூழலும் உருவாக்கிய எனக்கிருந்த அபிப்பிராயத்தை இந்தப் புத்தகத்தை வாசித்த சூழ்நிலை மாற்றியது என்று சொல்லலாம். ராமசாமி அவர்களின் எழுத்தை நான் முகநூலில் பெரும்பாலும் வாசித்து வருகிறேன். விமர்சன நோக்கில் இவரின் எழுத்தை என்னால் ஆராய முடிந்ததில்லை. அறிதலுக்கான வாசிப்பாகவே எனது படித்தல் இருக்கிறது. இது ஒத்துப்போகிற கருத்தினால் அல்லது புதிய தகவலை மெய்யான முறையில் தெரிந்து கொள்ள முடிவதினால் அமைந்ததாக இருக்கலாம்.

ஆயினும் பெண்ணிய எழுத்துகள் பற்றித் தனியாக எடுத்து நோக்க வேண்டுமா என்கிற கேள்வி இருந்தது. முன்னுரை எழுதிய சுகிர்தராணி அவர்களும், முதல் அத்தியாயத்தில் ராமசாமி அவர்களும் இதன் தேவை பற்றித் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். பிரச்சனைக்கு உட்பட்ட சமூகங்களைப் போல பெண்களும் ஒரு பிரிவினரே என்பதையும், ஆண் எழுதுகிற பெண் மைய எழுத்திலிருந்து பெண் எழுதுகிற எழுத்தைப் பிரித்து நோக்க வேண்டிய அவசியத்தையும் புரிய வைத்திருக்கிறார்கள்.

நூலாசிரியர் தருகிற முன்னுரை, அந்த நூல் தரப்போகிற விடயம் பற்றிய புரிதலை ஏற்படுத்தும். இந்தத் தொடக்கம் ஆர்வமூட்டுவதாக இருப்பது நன்று. இங்கு முன்னுரை வழங்கிய சுகிர்தராணியின் எழுத்து, ஆசிரியர் முன்னுரை போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்துமளவிற்கு, ஆசிரியரின் கருத்தை வழிமொழிவது போலச் சிறப்பாக இருக்கிறது. இதனாற்கூட இருக்கலாம், ஆசிரியர் உரை என்றிராமல், நூலின் முதல் அத்தியாயம் ஆசிரியர் முன்னுரை போல அமைந்திருக்கிறது. அல்லது முன்னுரை தவிர்த்து வாசிக்க ஆரம்பிப்பவர்கள் தவற விடாமல் இருத்தற் பொருட்டு அது முதலாவது அத்தியாயமாகவே வைக்கப்பட்டிருக்கலாம். நவீனத் தமிழ் இலக்கியத்தில் பெண்களால் எழுதப்படுகிற பெண் இலக்கியம் பற்றிய தனிப் பார்வையின் அவசியம் பற்றி விளக்குகிற இந்த முதல் அத்தியாயத்தை உள்வாங்குவதன் மூலம், ஒவ்வொரு எழுத்தாளர்களினதும் படைப்பை ஆராய்கிற மிகுதி அத்தியாயங்களுக்குள் நுழைவதற்கு தெளிவான அடித்தளம் அமைந்து விடுகிறது.

இருபத்தியாறு பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இங்கு ஆராயப்பட்டுள்ளன. இவற்றில், தமிழ்நதியின் 'நித்திலாவின் புத்தகங்கள்' எழுதப்பட்ட 'மாயக்குதிரை' தொகுப்பு வாசித்திருக்கிறேன். பாத்திமா மாஜிதாவின் இன்னொரு நாவலான 'பர்தா'வும் அம்பையின் வேறொரு சிறுகதைத் தொகுப்பும் படித்திருக்கிறேன். இவர்களுடைய படைப்புகள் தவிர, நான் மிகுதி எழுத்தாளர்களினது புத்தகங்கள் இன்னும் வாசித்ததில்லை. அறிமுகமில்லாத கதைகள் பற்றிய கருத்தினை ஆர்வமாக அறிவது எங்கனம் என்கிற கேள்வி என்னுள் இருந்தது. ஆனால் ஒவ்வொரு எழுத்தாளரின் படைப்பைப் பற்றிய திறனாய்வின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கருத்தை முன்வைக்கும் விளக்கக் கட்டுரையாக எழுதப்பட்டு, அப்படியே அது அந்தக் கதையில் எப்படி எடுத்தாளப்படுகிறது எனக் கொண்டு செல்வது வாசிப்பவருக்கு உபயோகமாக இருக்கிறது. படைப்புகளைப் பற்றிய ஒரு திறனாய்வு நூல் என்று மட்டுமில்லாமல், சில அறிதல்களைப் பெறவும், சில விடயங்களைப் பற்றிய ஆசிரியரின் பார்வையைப் புரிந்து கொள்ளவும், அந்தந்தப் படைப்புகளின் அறிமுகமாகவும் இப் புத்தகத்தை எடுத்துக் கொள்ளலாம்.

இங்கு பேசப்படுகிற சிறுகதைகளையும், அவை பற்றிய ராமசாமி அவர்களின் கருத்துகளையும், 'இந்திய, தமிழ் குடும்பங்களின் வழக்கு', 'பெண் காமம்' என்ற இரு விடயங்களின் அடிப்படையில் நான் உள்வாங்கிக் கொண்டேன். காமம் மையப் பேசு பொருளாகத் தென்படும் கதைகளும் கூட, குடும்ப அமைப்பின் முறைமையின் பாற்பட்ட பிரச்சனையாகவே இருக்கிறது. அதாவது ஒட்டுமொத்த அடிப்படை நிலைமை என்பது குடும்ப அமைப்பின் அல்லது அதை உருவாக்கிய சமூகத்தின் வழக்காக இருக்கிறது. அதிலிருந்து உருவாகிற ஒரு முக்கிய அம்சம் பெண் காமம் சந்திக்கும் சவால்கள்.

முற்குறிப்பிட்டது போலப் பெரும்பாலும் தகவல் சேகரிப்பாகவே எனக்கு இவ் வாசிப்பு இருந்தது எனினும், என் சிந்தனையின் படி சில வேறுபட்ட கருத்துகளும் எனக்குத் தோன்றின.

சிறுகதைகள் ஒவ்வொன்றிலுமிருந்து, அவை பெண்களின் எவ்வகையான அழுத்தங்களைக் காட்சிப்படுத்துகின்றன என்பதை எமக்கு முன்வைக்கிறார் ஆசிரியர்.

கு.ப. சேது அம்மாளின் 'குலவதி' கதையில் படிப்பு, அறிவு நிலையில் மேம்பட்ட நிலை இருப்பினும் புகுந்த வீட்டுப் பெண்களிடம் நல்ல பெயர் வாங்குவதையே பெருமையாகப் பெண் மனம் நினைக்குமளவுக்கு ஆணதிகாரம் திணிக்கப்பட்ட வாழ்வு முறைமையைப் பெண்களே நடைமுறைப்படுத்துவதைக் காட்டுகிறார். இதே மனநிலைதான் ஆர். சூடாமணியின் 'அந்நியர்கள்' காட்டுகிற பிறந்தகம் வருகிற அக்கா, தங்கையின் மாறிப்போன சிந்தனை முரணின் அடிப்படையாக இருக்கிறது. ஜோதிர்லதா கிரிஜாவின் 'தலைமுறை இடைவெளிகள்' மற்றும் தமிழ்நதியின் 'நித்திலாவின் புத்தகங்கள்' இவற்றில் வரும் அம்மா பாத்திரங்கள், மாஜீதா பாத்திமாவின் 'உம்மாவின் திருக்கை மீன்வால்' சொல்லுகிற ஆணதிகார மையத்திலேயே இறுதிவரை சிந்திக்கும் உம்மா பாத்திரம் என்பவையும் இந்த வகையே. பாமாவின் 'தாலியே வேலி'யில் சமூகம் சார்ந்த கனியம்மாவின் பயத்தின் அடிப்படை கூட, இந்தக் குடும்ப அமைப்பின் வழக்குகளைப் பெருமையாகச் சுமக்கும் பெண்களின் சமூகத்தால் ஒதுக்கப்படுவதை மையப்படுத்தித்தான் அமைகிறது. 'மனிதர்களை ஒடுக்கிப் பரவசம் அடையும் சமூக விதிகளை மீறுவதன் முன்னெடுப்புகளே விடுதலையின் பாடுகளாக இருக்கின்றன' என ஆசிரியர் குறிப்பிடுவது ஆண்களால் அன்று உருவாக்கப்பட்ட விதிகள் பற்றியது எனினும் அவற்றை எடுத்து நிறைவேற்றும் படியாகப் பெண்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

முந்தைய தலைமுறையினரே அடுத்த தலைமுறையினருக்கு சட்டங்களைத் திணிக்கும் போக்கிலிருந்து வேறுபட்டதாக, சுஜா செல்லப்பனின் 'ஒளிவிலகல்' கதையில் மகள் என்கிற பாத்திரம் விளைவுகளை யோசிக்க, மூத்த தலைமுறையான தாய் என்கிற பாத்திரம் தந்தையிலிருந்து பிரிவதைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார். இங்கு, அம்மாவை ஒரு பெண்ணுக்கான உணர்வுகள் மட்டும் அடங்கியவளாக வைத்துப் பார்க்கிற மகளின் மகிழ்வைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் இன்றைய தலைமுறைப் பெண்களின் மாறிவருகிற புரிதலை ஆசிரியர் காட்டுகிறார்.

ஆண் சட்டங்களை உருவாக்குபவனாகவும்பெண் கடைப்பிடிப்பவளாகவும் சமுதாயம் உருவாக்கம் பெறத் தொடங்கியது சத்திரியர் எனப்படுகிற அரச ஆட்சி காலத்திலிருந்து என நினைக்கிறேன். அதனடிப்படையிலேயே இதிகாசங்களும் உள்ளன. இதை உருவாக்கிய கோட்பாடுகளை மறுத்து மறுவிளக்க கோட்பாட்டை எழுதிக் காட்டிய எம். ஏ. சுசீலாவின் 'ஊர்மிளை'யை ஆய்வதன் மூலம் பெண் எழுத்தாளர்களின் தன்னிலையைக் காட்டுகிறார் எழுத்தாளர். பண்டைய காலம் தொட்டு இன்று வரை அதிகாரம் ஆணின் கையிலேயே இருக்கிறது என்பதற்கான இன்னொரு கதை திலகவதியின் 'போன்சாய் பெண்கள்'. இன்றைய நாட்களில் இது மாறிவிட்டதாகத் தெரிந்தாலும் பல குடும்பங்களில் இது ஒரு மென் போக்கிற்குள் மறைக்கப்பட்ட ஆணதிகாரமாக இருக்கிறது. இந்த நுணுக்கத்தை நூலாசிரியர் புரிந்து கொண்டு விமர்சித்திருக்கிறார்.

ஆண் சட்டங்களை அமைப்பதன் இன்னொரு வெளிப்பாடு போர். இதன் பாதிப்புக் குறித்த கதை பாவையின் 'திறவி'. எல்லாவிடத்திலும் போரின் பாதிப்பு ஒன்றே. வயதாகும் போது நிகழ்காலத்தை மறக்கிற நோயும், கடந்த காலத்தின் போரினால் ஏற்பட்ட நினைவுத் தாக்கங்களும் ஆண், பெண் என்ற வேறுபாடின்றியே பாதிக்கின்றன. ஆயினும் பெண்ணுக்கே இதனால் இழப்பின் கனதி அதிகம் என்பதைக் கதை ஆய்வில் விளக்குவதன் மூலம் பெண்ணுக்கான தவிப்பை வேறுபடுத்தி நோக்குகிற பெண் மைய எழுத்தாகக் காட்டப்படுகிறது.

திரைப்படங்களிலும் உண்மை சம்பவங்களாகவும் கேள்விப்பட்டிருந்தும் நான் மேலோட்டமாகக் கடந்துவிட்ட நிகழ்வு பேய் பிடித்தலும், பேய் ஓட்டுதலும். எல்லோருக்கும் சிறுவயதில் ஊரின் பேய் கதைகளின் ஞாபகங்கள் இருக்கும். தாதி வேலை என்பதால் இன்றும் கூட எனக்கு இங்குள்ள வேலை செய்யுமிடங்களின் பழைய கட்டடங்களில் கேள்விப்படுகிற அனுபவமாக பேய் கதைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. இந்தியக் கலாசாரத்தில் பேய் பிடித்தலும் ஓட்ட வேண்டி இருத்தலும் பெண்ணின் மீதே செய்யப்படுகின்றன என்கிற கோணத்தை நான் இவ்வளவு நாளும் சிந்தித்ததில்லை. லறீனாவின் 'புளியமரத்துப் பேய்கள்' பற்றிய திறனாய்வில்தான் பெண்ணை அடிமை செய்தலின் ஒருவகை அதிகாரமிது என்பதை விளங்கிக் கொண்டேன். 'கொட்டுக்காளி' திரைப்படம் பார்த்த போது கூட அது பெண் விருப்பிற்கு எதிரான திருமணத் திணிப்பிற்கான தந்திரமாகத் தெரிந்ததேயொழிய, பெண்களில் மட்டுமே தான் பெரும்பாலும் பேய் ஏறுவதாக ஏன் சொல்லப்படுகிறது என்பதை நான் யோசித்ததில்லை.

அ. ராமசாமி அவர்கள் ஈழப் போராட்டம், அதன் அடிப்படை, முரண்கள், போரின் பிந்தைய தாக்கம், அவை சார்ந்த அரசியல், மக்களின் எண்ணங்கள் இவை பற்றிய தெளிவான பார்வை உடையவர். ஈழவாணியின் 'வெண்ணிறத்துணி' மிக வித்தியாசமாகப் போரின் தாக்கத்துக்குள்ளான பெண் மனதைப் பேசும் கதை. முதலிரவில் வெண்ணிறத் துணி விரிக்கிற, பின்பு அந்த இரத்தத்தை மாமியார் நோக்குகிற சிங்களப் பொண்ணடிமை முறையை நான் எனது நெருங்கிய சிங்களத் தோழி மூலம் முன்னர் கேள்விப்பட்டிருக்கிறேன். பெண் புனிதம் என்கிற வழிமுறை கொண்ட அதே சிங்கள இனத்தின் இராணுவத்தால் சிதைக்கப்பட்ட தமிழ் பெண்களைப் பற்றிய நினைப்புக்கு இந்தக் கதையின் தலையங்கம் மிகப் பொருத்தமானது. ஆய்வு செய்த ஆசிரியர் ஏற்கனவே போரின் பின்னான இலங்கை பற்றிய விளக்கம் உள்ளவர். அதே வகையில் இந்தக் கதை பற்றிய கருத்தையும் தந்திருக்கிறார். இது பற்றிய வாசிப்பும் கூட நான் இதுவரை நினைத்திராத, போர் நிலத்தில் வாழ்ந்து, எதிரிப் படை என அறியப்பட்ட குழுவில் இருந்தவனையே கணவனாக வரித்துக்கொண்ட பெண்ணின் உணர்வுச் சிக்கலை எனக்குச் சொல்லியது. இங்கு நான் என்னைப் பொருத்திப் பார்த்தேன். இவ்வளவு நீண்ட காலம் கடந்தும் இலங்கை போகும்போதெல்லாம் கண்டி வீதியால் செம்மணி வெளியைக் கடக்கும் போது, கைது செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டு புதைக்கப்பட்ட நண்பி பற்றிய நிகழ்வும், படிக்கும் காலத்தில் செம்மணியை துவிச்சக்கர வண்டியில் கடந்துசெல்லும் போதெல்லாம் எதிர்கொண்ட அல்லல்களும் என்னை மீண்டும் மீண்டும் சூழ்ந்து நடுக்கமும் கோபமும் கண்ணீரும் வர வைக்கின்ற ஒருவித உணர்விலிருந்து மீள முடிந்ததில்லை. இக்கதையின் நிர்மலிக்கான வாழ்க்கையை நான் மேற்கொண்டு இருந்திருப்பேனாயினும், இதே உணர்வுச் சிக்கலை வெளிப்படுத்தியிருக்கக் கூடும் என்றே தோன்றிற்று.

சங்க காலத்தில் பெயர் மறைத்துப் பாடிய கவிகள் தவிர, பெண்ணாகத் தம்மை வெளிப்படுத்திப் பாடிய பெண் கவிகள் இருந்திருக்கிறார்கள் என்பது பற்றி ராமசாமி அவர்கள் ஆரம்பத்தில் பேசியிருக்கிறார். பிற்காலத்தில் அவ்வளவு வெளிப்படையாக உணர்வைப் பேசுகிற பெண்ணெழுத்து அதிகளவில் உருவாகவில்லையோ என்கிற நினைப்பு எனக்குண்டு. பெண்களின் காமம் சார்ந்த உணர்வையும் அதன் இயற்கையான அடிப்படை பற்றியும் பெண் எழுத்தாளர்கள் வெளிப்படையாகவே எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது இந்தத் திறனாய்வு நூலின் மூலம் நானறிந்து கொண்ட வரவேற்கத்தக்க தகவல். பெண்களை இரண்டாம் நிலையில் வைக்கும் நியாயத்தின் மீது முதல் கேள்வியை எழுப்பும் பெண்களைத் தனது கவிதைகளில் உலவ விட்டவன் பாரதி என்பதாக ஆசிரியர்இங்கு குறிப்பிடுகிறார். இவ்வாறிருந்தும் பின்னைய காலங்களிலும் ஆண் எழுதுகிற பெண் மைய எழுத்து ஏதோவொரு வகையில் பெண்ணைக் கொஞ்சமாகவேனும் ஆணுக்கு கீழான படிநிலையில் வைத்துக் காட்டுவதாக அமைந்து விடுகையில், பெண்கள் இன்று பெண்ணுணர்வைச் சமமாகக் காட்டும் படிக்குச் சரியான முறையில் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது சிறப்பு. பெண் என்கிற நிலையிலிருந்த படி இவ்வெழுத்தாளர்கள் எழுதுகிற காமம் சார்ந்த உணர்வைப் பேசுகிற கதைகளுக்கு, அந்நிலையைப் புரிந்து கொண்டு கருத்துரை வழங்கியிருக்கிறார் ராமசாமி அவர்கள்.

தமிழ்க்கவியின் 'சிலுவையள்', உமாமகேஸ்வரியின் பெண்ணுடலை உணர்வது சார்ந்த கதைகள், சந்திராவின் 'மருதாணி', கறுப்பு சுமதியின் 'முகில்கள் பேசட்டும்' படைப்புகள் பற்றி ஆசிரியரின் ஆய்வை வாசிக்கும் போது, பெண் எழுத்தாளர்கள் காமம் சார்ந்த பெண்ணின் உள உடல் உணர்வுகளைப் பூசி மெழுகாமல் மிக வெளிப்படையாக இவற்றில் எழுதியிருக்கிறார்கள் என்பது புரிகிறது.

'மருதாணி'யை சிலாகிக்கும் போது, ஆண்களுக்கு சமனாகக் குற்றவுணர்வற்ற முழு ஈடுபாட்டுடன் குடும்ப அமைப்பைத் தாண்டி உடலைத் தருகிற பெண்களை எழுதுகிற பெண் எழுத்தாளர்கள், ஆண் எழுத்தாளர்களை விட அரிது என்பதாகக் குறிப்பிடுகிறார். இதற்குக் காரணமாக இப்புத்தகத்தில் கூட ஆங்காங்கே குறிப்பிட்டுக் காட்டியபடி தொல்காப்பியம், திருக்குறள் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் வலியுறுத்தப்பட்ட பெண்ணடிமைத்தனம், கற்பு நிலை, ஆணதிகாரம் என்பனவற்றின் இன்று வரையான வீச்சும், பிற்கால ஆண் எழுத்தாளர்கள், வழக்கை மீறுகிற பெரும்பாலான பெண் பாத்திரங்களை குற்றவுணர்வை சுமப்பவர்களாகக் காட்டியதும் (உ.ம்.: "ஆண்களின் கருணை அல்லது இரக்கத்தைத் தாண்டி பெண்கள் வாழ வேண்டும் என்ற நம்பிக்கையூட்டும் எழுத்துகளின் தேவையை ஆண்கள் உணரவில்லை. அதை உணருமிடத்தில் ஆண்கள் இல்லை" - லட்சுமியின் ஏனிந்த வேகம்), காலங்காலமாக இத்தகைய இயல்புக்குப் பழக்கப்பட்ட பெண் சமூகமும் கூட வெளிப்படையாக உணர்வைக் காட்டுகிற பெண்ணெழுத்துக்கு எவ்வாறான எதிர்வினையை ஆற்றுமோ என்கிற தயக்கமும் காரணங்களாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

மேலும், இயற்கையில் பொதுவாகப் பெண்ணுக்குக் காமம் என்பதன் அடிப்படை மனம் சார்ந்ததாகவும், ஆணுக்கு உடல் சார்ந்ததாகவும் இருக்கிறது என்றே நான் கொள்கிறேன். பெண்களுக்குத் தேவைப்படுகிற ஆழ்ந்த அன்பு சார்ந்த நம்பிக்கை சமூகம் உருவாக்கிய முறையென்று மட்டும் கொள்ளாமல், இயற்கையாக அமைந்த மனநிலையும் கூட எனலாம். 'ஏன் இந்த வேகம்' பற்றிய எழுத்தில் ஆண்கள் தாம் செய்யும் தவறுகளையும் குற்றங்களையும் எளிதில் மறந்து விட்டு இன்னொன்றில் நுழைந்து விடுகின்றனர் ஆனால் பெண்கள் தாங்கள் அறியாமல் செய்த சிறு தவறுக்கும் தண்டனையாக தற்கொலை முடிவுகளை எடுக்கின்றனர் என்பதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். சமூக அழுத்தம் தவிர, ஆணைப் போல் சுலபமாகக் கடந்துவிட முடியாத பெண் மனதின் பிரிவுத் தவிப்பையும் காரணமாக நான் சொல்வேன். ஹேமாவின் 'இரண்டாவது ஆண்' கதையில் வருகிற சரயு, "அவன் கால்களை பிடிக்க தயாரான மனதை வலுக்கட்டாயமாக இழுத்து நிறுத்தி.." என வருவது இந்த மிகு வேதனையின் வெளிப்பாடே. பெரும்பாலான இவ்விரு ஆண், பெண் நிலைகளிலிருந்து வேறுபட்டதான ஆண்களும் பெண்களும் உள்ளனர். மிகுந்த மனத் தவிப்புக்கும், குற்றவுணர்வுக்கும் உள்ளாகிற ஆண்களும் இருக்கிற அதேவேளை, முன் திட்டமிடாத, உடல்கள் அவாவுகின்ற அடிப்படையில் மட்டும் விருப்பங்களைத் தெரிவு செய்கிற பெண்களும் உள்ளனர். 'முகில்கள் பேசட்டும்' பெண் பாத்திரம் இதற்கான உதாரணம். 'மருதாணி'யில், மருதாணியின் விளைவின் பூரண நிலை காம வேட்கையாகத் தெரிந்தாலும், வாசித்த புரிதலில் அது காதலின் அடிப்படை சேர்ந்ததே என்பதாகவே நான் எடுத்துக்கொண்டேன்.

தீபு ஹரியின் 'மித்ரா', தமிழ்நதியின் 'நித்திலாவின் புத்தகங்கள்', அழகுநிலாவின் 'பெயர்த்தி' இவை சொல்கிற பிரதான கதைப் பாத்திரத்தின் சிக்கல் அல்லது எதிர்நோக்கும் பிரச்சனை என்பது பெண் என்பதால் மட்டுமல்ல, ஆண் மையப் பாத்திரமாயிருப்பினும் இதே விளைவே ஏற்பட்டிருக்கும் என்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

"ஆணாயினும் பெண்ணாயினும் அவர்களின் ஒவ்வொரு நடத்தைகளின் பின்னணியிலும் எதிர்பால் மீதான ஈர்ப்பு காரணமான பாலியல் விளைவுகளும் அதன் தொடர்ச்சியான பாலியல் நடவடிக்கைகளுமே மனிதர்களை இயக்குகிறது என்பது உளவியல் அடிப்படைப் பாடம். அவ்வியக்கம் எப்போதும் பொதுத்தல கருத்தியல் கட்டமைப்புகளை மீறுவதை மறைமுக நடவடிக்கையாக செய்கிறது. செய்துவிட்டுப் பின்னர் அதனை குற்ற நடவடிக்கையாக நினைத்துக் குழம்புகிறது. அக்குழப்பத்தின் வெளிப்பாடுகளே குற்றமனம் சார்ந்த தனிமனிதச் சிக்கல்களாக மாறுகின்றன என நீட்டிப்பதும் உளவியல் புரிதல்களே" என்கிறார் ஆசிரியர். பெண் உளவியலைத் தனியாகப் பரிசீலிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை உள்வாங்கிச் சில பெண் எழுத்தாளர்களும் எழுதியிருக்கிறார்கள் என்பதன் அடிப்படையை விளக்குகிறார். ஆயினும் 'மித்ரா'வில், ஒருவேளை ஆண் பாத்திரமாயிருந்தாலும் கூட போதையால் ஏற்படுகிற உச்சநிலை, குற்றவணர்வு, இணையால் கண்காணிக்கப்படுகிறோம் என்கிற சந்தேகம் இதே போல் இருந்திருக்கவே செய்யும்.

நூலாசிரியர் குறிப்பிட்டது போல கலைகள், வாசிப்பு இவற்றில் மிகுந்த ஆர்வமுள்ள பெண் சமூகத்தின் பொதுப் பாத்திரத்திலிருந்து விலக்கப்பட்டே பார்க்கப்பட்டிருக்கிறாள். 'நித்திலாவின் புத்தகங்கள்', தன் பெண்ணைச் சமூகம் அங்கீகரிக்கும் திருமண வாழ்க்கைக்குத் தயார்படுத்தும் தாயின் போக்கை உணர்த்தினாலும், கதையின் நாயகி நித்திலாவின் அளவுக்கு முழுமையாகப் புத்தகங்களில் மட்டும் போதையாக ஒரு ஆண் மூழ்கி இருந்திருந்தாலும் கூட இதே வாழ்வுச் சிக்கல் ஏற்பட்டிருக்கும்.

'பெயர்த்தி' கதையின் கருத்தைப் பெண்ணுக்கான பாதிப்பைச் சொல்லும் கதையாகக் கொள்ளாமல் காதல் திருமணம் மீது சமூகம் கொடுக்கிற அழுத்தத்தையும், இன நிறப் பாகுபாட்டையும் ஆராய்வதாக எடுத்துக்கொள்கிறேன்.

மேலைத்தேயக் கலாசாரத்தில் குடும்பம் சம்பந்தமான வாழ்வு பற்றிய மதிப்பு பெரிதாக இல்லை என்பதும், பிரிந்து வாழ்தல் சுலபமானதாக இருக்கிறது என்பதுமான கருத்து இலங்கை, இந்திய மனநிலையில் பெரும்பாலும் இருக்கிறது. இது தவறு. இவ்வாறு இல்லை என்பது என் சொந்த அனுபவமும் கூட. இதனை அ. ராமசாமி அவர்களும் புரிந்து எழுதியிருக்கிறார். "தனித்திருத்தலின் சுதந்திரத்தைக் கொண்டாடும் மேற்கத்திய வாழ்க்கையில் - அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் கூட சேர்ந்து வாழும் கணவன் மனைவிக்குத் தரப்படும் மரியாதைகளும் மதிப்பும் அதிகம் என்பதைப் பார்த்து இருக்கிறேன்" எனக் குறிப்பிடுகிறார். இந்திய சமூகத்தை உள்ளடக்கிய கீழ்த்திசை நாடுகளின் கூட்டுக் குடும்ப அமைப்பைச் சிறந்ததாகக் கருதும் மனப்போக்கே, தன்னிலைப்படி வாழுகிற முடிவை எடுக்கும் பெண்ணுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும் என்பதைத் தெரிவிக்கிறார். எழுத்தாளரின் இந்தப் புரிதல், எடுத்ததெற்கெல்லாம் மேற்கத்திய நடைமுறை எனக் காரணம் காட்டும் பெரும்பாலான நம்மவர்களிலிருந்து வித்தியாசப்பட்டது.

நான் பார்த்த வரை, இங்கு பெண் விடுதலை என்பது பற்றி ஆராய்கிற பெண் பேச்சாளர்களாயிருக்கட்டும் அல்லது பெரும்பாலான திரைப்படங்களாயிருக்கட்டும், பேராசிரியர் சுட்டிய இந்தக் குடும்ப வழக்கு என்கிற முறைமை சிதையாமல் தான் பெண் முன்னேற்றம் பற்றிப் பேசுகின்றனர். அதாவது கோழியின் சிறகுகளைப் பொருத்தினால் போதுமானது, பருந்தின் இறக்கைகள் தேவையில்லை, எப்படியோ வானம் பார்க்க முடிகிறதுதானே என்பது போலவே சமாதானங்கள் இருக்கின்றன. அல்லது, கோழியின் சிறகுகளை வைத்துக்கொண்டு, பருந்து போல நடிப்பதை விடுதலை என நம்புகின்றனர்.

உதாரணத்திற்குச் சொல்வதானால், அன்றைய பாலச்சந்தர் படங்கள் மேற்பார்வைக்குப் பெண் விடுதலையைக் காட்டுவதாக இருக்கும். ஆனால் அது பெண் விடுதலை இல்லை. 'மனதில் உறுதி வேண்டும்' திரைப்பட நாயகி தனது வீட்டிற்குப் பணம் அனுப்பி உதவ வேண்டும் என்பதற்காகத் தனது கணவனோடு கூடி பிள்ளை உண்டாகாமல் இருக்கும்படி உடன்படிக்கை செய்வது நகைப்புக்குரியது. பெண் கல்யாணம் செய்து துணையுடன் வாழ்கையில் ஆண் செய்வதைப் போலத் தனது குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள முடியாது, அதனால் தீர்வு என்பது தனித்திருத்தல் என்பதாக இதில் காட்டுவது இன்னொரு வகைப் பெண்ணடிமைத்தனம் தான். இன்று வரை பெண் உணர்வைச் சொல்லும் திரைப்படங்களில் பெரும்பாலானவைகளில் காதலில் இருந்து கல்யாணம் ஆகிக் கணவனின் அமைப்பிற்குள் போவதையும், பாடல்களில் இந்த மருமகள் தகுதியை உயர்த்தி எழுதுவதையும் காண முடியும். இந்த குண்டுச் சட்டிக்குள்ளேயே பெண் விடுதலை என்கிற குதிரை ஓட்டப்படுகிறது.

அல்லது பெண் அடிமையாக இருக்கிறாள் என்கிற ரீதியில், காமம் முக்கியமாக ஆணுக்கான ஆசை, பெண் ஆணுக்காகவே உடன்படுகிறாள், பல சிரமங்களைச் சுமக்கிறாள் என்பதாகவே இவர்கள் பூசி மெழுகுகிறார்கள். இன்றுவரை பல பெண் பேச்சாளர்கள் காட்டுகிற பார்வையும் கூட இதேதான். பெண்ணுக்குத் தியாக பிம்பத்தைப் பூசி, அதை ஒரு அல்லலாகக் காட்டுவதன் மூலம் பெண் வலிகளைப் புரிந்து கொள்வதாகத் தப்பித்துக் கொள்கிறார்கள்.

மெய்யான பெண் விடுதலை என்பது, ஆண், பெண் இருவரும் குடும்ப அமைப்பு என்கிற நடைமுறைக்குள் நுழையாமல் ஒன்றுசேர்ந்து வாழ்க்கை நடத்தியபடி, இருவருமே இருதரப்புக் குடும்பங்கள் சார்ந்த உதவி தேவைப்படுமிடத்தில் பக்கபலமாக இருந்து நிறைவேற்றுதல். அதாவது 'வட்டமும் சதுரங்களும்' கதை விவரணையில் தடைகளும் எல்லைகளும் கொண்ட அமைப்பாகவே குடும்பம் இருக்கிறது என்றும் அது பற்றிய விசாரணையாகக் கதாசிரியரின் எழுத்துகள் வெளிப்படுபவை எனவும் ராமசாமி அவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய புதிய மாதவியின் குரலாக இன்னுமின்னும் சிந்தனைகள் உருவாக வேண்டும்.

பெண், ஆண் இருபாலருக்கும் அவரவரின் தனிப்பட்ட உணர்வுகள், உடற் தேவைகள், இயல்புகள் என்றிருக்கின்றன. சமத்துவம் என்பது ஒருவர் உணர்வை ஒருவர் புரிந்து கொண்டு மதிப்பளித்துத் துணை செய்வதேயாகும். பெண் சமத்துவத்தையோ, ஆண் நிலையையோ இன்னின்னவை இவ்வாறு இருக்க வேண்டும் என முற்றுமுழுதாகப் பொதுமைப்படுத்துதல் பொருந்தாது. இது தனி நபரின், அவருக்கான விடுதலை என்பது என்னவென்கிற தீர்மானத்துக்குட்பட்டது. புரிந்துணர்வுடன் கூடிய மதித்தலிலிருந்து வெளிப்படுகிற அன்பு பரிமாறப்பட வேண்டும். முதலில், ஆணதிகாரம் அல்லது பெண்களே பெண்களை இவ்வதிகார வழக்கத்துக்கு உட்படுத்துதலை இல்லாமற் செய்தல் அவசியம். இதற்கு இந்தியக் குடும்ப வழக்கில் இருக்கிற பிறந்த வீட்டிலிருந்து பெண்கள் சீர்வரிசை சகிதம் புகுந்த வீடு செல்கிற அடிப்படை வழக்கமும், இலங்கையில் பெண்ணுக்கு வீடும், காசும் சீதனமாக எதிர்பார்க்கிற நடைமுறையும் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். சொத்துரிமை என்பது பெண் பிள்ளை, ஆண் பிள்ளை என்பதன்றி அவரவர் எதிர்காலத் திட்டம், நலன்களுக்கமையப் பாகுபாடின்றிப் பிரிக்கப்பட வேண்டும். ஆழமாக வேரூன்றி விட்ட குடும்ப வழக்கு என்கிற அடிப்படையானதும் முக்கியமானதுமான நடைமுறை ஒழியாமல், மிகுதி சாத்தியமில்லை.

அறிவு ஒவ்வொருவருக்கும் வேறுவேறாய் இருக்கிறது. வேறுவேறு அளவுகள் தானே வந்ததில்லை. இருப்பாலும் சூழலாலும் உருவாவது. இருப்பு என்பதும் உருவாக்கம் என்பதும் நிகழ்கால இருப்பு மட்டுமல்ல. கடந்த கால வாய்ப்புகளும் பயன்படுத்திக்கொண்டு வளர்ந்ததும் பற்றியதுதான். இக்காலத்தின் சமத்துவம் பற்றிய சிந்தனை, வளரத் தொடங்கியுள்ள பெண்களின் முன்னேற்றம், அவர்களின் வெளிப்படையான பேச்சு, எழுத்து, ஆண்களுக்கு ஏற்படத் தொடங்கியுள்ள புரிதல் என்பன இனிவரும் வாழ்வு முறைகளை மாற்றி அமைக்கும். எப்போது இன்றளவும் பின்பற்றப்படுகிற குடும்ப வழக்கு முழுமையாக இல்லாமல் ஆகிறதோ, அன்று பெண்ணியம், பெண் சுதந்திரம், பெண்ணெழுத்து என்று வேறுபடுத்தி நோக்குகிற அவசியமும் இல்லாமற் போகக்கூடும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

தொல்காப்பியத் திணைக்கோட்பாடும் அகநெடும்பாடல்களும்