மழையும் மழைசார்ந்தனவும்- 3


மழைக்குப் பால் வேறுபாடு உண்டா? கவிதை எழுதும் பெண்கள் வேறுபட்ட மனநிலையையே வெளிப்படுத்துகிறார்கள். இந்த மூன்றாவது பத்தில் 4 பேர் பெண்கள். அவர்களின் கவிதைகளில் வெளிப்படும் உணர்வுகள் வேறானவை.  சுஜாதா செல்வராஜு, கடங்கநேரியான், வெயில், கலாப்ரியா, போகன் சங்கர், தர்மினி, அனார், தமிழச்சி, சிபிச்செல்வன், ரமேஷ் பிரேதன் கவிதைகளுக்குள் மழையை வாசித்துப்பாருங்கள்

21

மழை -1

இரக்கமின்றிப் பொழிகிறது
இந்த மழை

முரட்டுக்கோபக்காரனைப்போல
சீறிக்கொண்டுவரும்
வெயிலை
நெஞ்சோடு அணைத்துக்கொள்வதில்
யாதொரு அச்சமும் இல்லை

காதோரம் கிசுகிசுத்து
கள்ளப்புன்னகையில் கிறங்கச்செய்து
உயிரைத்தின்று உருக்குலைக்கும்
மழையை
அஞ்சி ஒடுங்குகிறேன்

உன் ஈரத்தைப்
பொறுக்கிக்கொண்டு
வெளியேறு.
வாள் ஏந்தி வருவான்
ஒரு தணல் வீரன்
எரிந்து தழைக்கட்டும்
என் உப்பு மேனி.
================
மழை.2
------------.
இங்கு மழைபெய்கிறது.

சன்னல் திரைசீலையை அசைத்து காற்று அழைக்கிறது.

மழைப்பார்க்க வாவென்று. நான் அசையாமல் அமர்ந்திருக்கிறேன்.

என் பிரியமழையே உன் குரல் என் இதயத்தை அறுக்கிறது.

உன் ஈரம் சுமந்துவரும் காற்று என் மயிர்க்கால்களெங்கும் நீர்த்துளி நிரப்புகிறது.

அன்று நீ நனைத்துத் திரும்பிய ஈரத்தின் எச்சங்கள் என் விழியோரம் திரள்கிறது.

என் பிரியமழையே கறுத்துத்திரளும் உன் மேகத்தின் பாரத்தை நான் முற்றாக வெறுக்கிறேன்.

இனி என்றைக்கும் என் சன்னல் வராதிரு.
===========================================================
சுஜாதா செல்வராஜ்/ காலங்களைக் கடந்து வருபவன்/புது எழுத்து/ ப.74,75


22 துயரத்தின் வாசனை :
 
கேந்தி
வாடாமல்லி
ரோஜாப் பூக்கள்
உதிர்ந்து கிடக்கும் சாலை
தத்தனேரியை நோக்கி நீள்கிறது .
வேலை நாளின் மத்திமத்தில்
மழை கரைத்த கசடுகளை
காலுறையில் சேகரித்தவன்
இரவுவரை
சுமந்து திரிய வேண்டும் . (ப.42)
***
தூது :
-------
மாலையில்
மொட்டை மாடியில்
நீ இட்ட தானியங்களை
கொத்திய அலகில் தான்
எனக்கான மேகத்தை இத்தனை தூரம் சுமந்து வந்திருக்கிறது
அப் பெயரறியாப் பறவை.( ப.53)
***
இப்படி
எத்தனை மழையிரவுகளைத்தான்
மதுக் கோப்பைக்குள்
ஏந்திக் குடிப்பேன் .
வந்து சேர்
மழையாக முடியாவிட்டாலும்
மதுவாகவாவது ..(ப.54)
=======================================
கடங்கநேரியான்/ யாவும் சமீபித்திருக்கிறது/


23 / மழைச்சொற்கள்

உள்ளங்கையில் விழுந்த
துளிமழையோடு
நி(ர)றம்பிற்று என் கடல்

*
அந்த பறவை வந்தமர
உதிர்ந்தன மழைப்பூக்கள்
வேர்களின் நாவில்
*
அந்த தொழுநோயாளி
தன் போர்வையை
தாயற்ற நாய்க்குட்டிக்கு தருவான்
என மழைக்குத் தெரியும்.
*
எல்லோரையும் முத்தமிட்டுக் கொண்டிருக்கிறது
மழை
வெகுதூரத்திலிருக்கும் காட்டில்
தாவரங்களின் வேர்களோடு
மகிழ்ந்திருக்கும்
என் தகப்பனின் எலும்புக்கூடு
 
வெயில்/ குற்றத்தின் நறுமணம்/ 11


24 / மற்றாங்கே
 
மழை
உக்கிரமாய்த் தகரத்தில் பெய்யும்
குச்சு வீட்டு
ஞாயிறுத் தாம்பத்யம்
நெருக்கம் காண

தூங்கின
குழந்தை எழுந்து
விரைத்த குறியோடு
அரை இருளில்
அழும்
ஜன்னலைத் திறக்க
அப்பன் அனுமதியான்

அம்மை புணர்ச்சி
மறந்து
பிள்ளையை
முலைக்காய்க் கூப்பிட்டுச்
சுரப்பாள்

பௌருஷம்
முனகலுடன்
குப்புறப் படுக்கும்

வெளியே
ஜனங்களுக்கான
மழை
தகரத்தில்
உக்ரமாய்
 கலாப்ரியா கவிதைகள்/- சந்தியா பதிப்பக வெளியீடு. ப.120/

25 /

 
மழைப் பள்ளம் தாண்டி
பறக்கும் முத்தம் வீசும் பையன்
என
சின்னமீசை பூக்கத் துவங்கியிருக்கும்
செய்தித்தாள் சிறுவனைப் பற்றி
அவள் புன்னகையுடன் நினைத்துக் கொள்கிறாள்

மலைச் சாலையில்
அவன்
இரண்டு மைல் தூரம்
இதற்காக சைக்கிளேறி வந்திருக்கிறான்

பணி முடிந்தபிறகும்
அவன்
ஒருகணம்
அங்கேயே சற்றுநேரம் தேங்கி நிற்பான்
மற்றுமொரு மழைப்பள்ளம் போல

நாளை
அவன் வரும் முன்பு
குளித்து முடித்து
மார்மீது
நீர்சொட்டும் கூந்தலுடன்
நிற்கவேண்டும் என்றும் நினைத்துக் கொள்கிறாள்

அடிவயிற்றில்
சட்டென்று
ஒரு பூ அசைவது போல
கிளர்ச்சி ஒன்று ஏற்படுகிறது

ஏறிட்டுப் பார்க்கையில்
மலையுச்சிகளின் மீது
இன்னும் நிறைய மழை மிச்சமிருக்கிறது.

போகன் சங்கர்/ தடித்த கண்ணாடி போட்ட பூனை/ உயிர்மை/ /ப.78


26 / வடிவில்லாத மழை
 
குளிர்ச்சியான மாலைப்பொழுதொன்று ஆரம்பிக்கும் அறிகுறி
வெற்று வானத்தில்
சாம்பல் முகில்கள் ஓடியும் கூடியும்
உலவிக்குலவின
காற்று மரங்களைச் சிலுப்பி வீச
வெக்கை தணிந்து
மெதுவாகத் துளிகள் வீழ்ந்து
வேகமெடுத்துப் பெய்தது
சன்னற் திரை விலக்கி
அந்திமழை பொழிகிறது...முணுமுணுத்து அதை இரசித்தாள்
மகனடித்த பந்து முதுகிற்பட்டுத் திடுக்கிட்டு
'ஓடிவா.... ஓடிவா... மழை பெய்யுது மகனே...'

சன்னற் கண்ணாடியால் பார்த்தவன்
சற்றும் பிந்தாமல் கேட்டான்,
'எல்லோரும் வேலை முடித்துக் குடைபிடித்து வீடு போக
என் அப்பா இன்னும் ஏன் வரவில்லை?'

துளிகளைத் தூவி முடித்தது மழை.

தர்மினி / சாவுகளால் பிரபலமான ஊர் (ஆகஸ்ட் 2010) ப - 44


27 / மின்னல்களைப் பரிசளிக்கும் மழை

மழையாய் பெய்து குளிர்ந்தன
எனக்குள் உன்பேச்சு
மழைதொடும் இடங்களிலெல்லாம்
ஈரச்சிதறல் தெப்பம்
புதிர்மையை மொழிபெயர்ப்பது போன்று பொழிகின்றாய்

ஓயாத பரவசமாய்
கோடை மழை
பின் அடைமழை
அளவீடுகளின்றி திறந்துகிடக்கும் இடங்கள் எங்கிலும்
பித்துப்பிடித்து பாட்டம் பாட்டமாய்

மழை திட்டங்களுடன் வருகின்றது
ஒவ்வொரு சொல்லாகப் பெய்கின்றது
தாளமுடியாத ஓர் கணத்தில் எனக்கு
மின்னல்களைப் பரிசளிக்கின்றது
அது அதன் மீதே காதல் கொண்டிருக்கிறது
எப்போதும் மழையின் வாடை உறைந்திருக்கும்
ராஜவனமென
பசுமையின் உச்சமாகி நான் நிற்கிறேன்

வேர்களின் கீழ் வெள்ளம்
இலைகளின் மேல் ஈரம்
கனவுபோல் பெய்கின்ற உன் மழை

அனார்/ எனக்குக் கவிதை முகம்/ காலச்சுவடு


28 /


வேப்பம் பூ கோடை

தகிக்கும் வெட்கையின்
உக்கிரம் உண்டு
செரிக்க முடியாமல்
பொறுமிக் கிடக்கிறது ஊர்.

மழைத் தண்ணீரில்
வாய் கொப்பளித்த
வசந்த காலம், செம்பு சொல்லும்
செவிவழிச் செய்தி மட்டுமே.

உலைத் தண்ணீருக்கே
உப்புக் கரிக்கும்
உள்ளங்கை அளவு ஊருணிதான் தற்சமயம்.

மரவட்டையாய்ச் சுருண்டு
வெடித்துக் கிடக்கும்
கண்மாய்ப் பாளத்தில்
பொதிந்து கிடக்கும் மயிலிறகாய்
கேவிக்கிடந்த உன் நினைவு
கூடும் கருமேகமாய்த் திரளுகையில்
காற்று வந்து கலைத்துப் போகிறது
கரிசலின் மழை கண்ணீர் தானென்று

தமிழச்சி/ வனப்பேச்சி/


29


வெளியில் பொழிகிற மழைக்கு எதுவும் தேவையில்லை
அறை உள்ளே இருக்கிற இவனுக்கும்
ஒன்றும் தேவையில்லை
சுவரில்
அருவியில் வழிகிறது நீர்
உள்ளேயிருந்தவன்
தத்தளித்துக்கொண்டிருக்கிறான்
••
எப்போது வருமெனத் தெரியாது
அவளைப் போலவே சொல்லாமல் வருகிறது
அவளைப் போலவே சொல்லாமல் போகிறது
இந்த மழை.

ஒருமுறை வருவேன் வருவேன் என அறிவிப்புகளை கொடுத்துவிட்டு வராமல் போனது
இப்போதோ
சொல்லாமல் வந்து பேயாட்டம் போட்டு
கொட்டிக்கொண்டிருக்கிறது
இந்த மழையும் அவளைப் போலதான்


சிபிச்செல்வன்/ மலைகள் இணைய இதழில்/


30 / மழையும் கொஞ்சம் கொலையும்

1.
அவள் உடம்பின் வீச்சத்தை ஞாபகப்படுத்தி
அடர்த்தியாய்த் தூறிக்கொண்டிருக்கிறது மழை.
ஒதுங்காமல் நனைகிறேன்.
நடு இரவு யாருமற்ற சாலை
ஆடைகள் அனைத்தையும் களைந்துவிடுகிறேன்
கண்ணாடி வளையல்கள் அணிந்த நீர்க்கரங்கள் என்னைத் தழுவி
நனைந்த முந்தானையைக் கழுத்தில் சுற்றி இறுக்குகின்றன.
இது அவளேதாந் மழையால் கொலை செய்பவள்

2.
மாதவிடாய் நாட்களில் ரத்தக் கவிச்சையை மோப்பமுற்று
அவளையே வளையவரும் பூனைகளுக்குத் தெரியும்
அவளை மோப்பமுற்று நான் வருவேன்
அவள் கையால் கொலைப்பட வேண்டி நிற்பேனென்று.

விதம் விதமான மழை அவளுக்குத் தெரியும்
நகம் முளைத்த மழையில் நனையும்போது
என் உடம்பில் ரத்தம் துளிர்ப்பதைச் சுவைத்திருக்கிறேன்.
சூடான குருதியை மழையுடன் கலந்து பருகுவதில்
அலாதியான போதையைக் கண்டறிந்து
உலகிற்குச் சொன்னவள் அதை
எனக்கும் மட்டும் தெரியாமல் மறைத்தாள்.

3.
மழையுடன்றித் தனியாக அவளைப் பார்த்ததில்லை.
ஆண்பால் ரத்தத்தைப் பருகுவதில் பெண்பாலுக்கும்
இதேபோல் பால் மாற்றிப் பருகுவதில் ஆண்பாலுக்கும்
போதை தலைக்கேறும் எனினும் மழைக்குப் பாலில்லை.

ஆண்மழை பெண்மழை என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
அவள் மழை என்பதைத் தவிர வேறில்லை
நனைந்தால் முளைத்துவிடுவேன்
அவள் உடம்பின் ஈரத்தில் முளைத்தவன் நான்
அந்த வண்டலில் வேர் பதித்தவன்

தமிழுக்கு அமுதென்று பேர் - ஆம்
அவளுக்கும் மழையென்று பேர் - அந்த
மழை எந்தன் உயிருக்கு நேர்.

4.
அந்த இரவு காவுகேட்டது
நனைந்து கொண்டிருந்தேன்
ஈரச்சேலைத் தலைப்பால்
கழுத்தைச் சுற்றி இறுக்கிக் கொன்றாள்
நீரின்றி அமையாது உலகு - அதுபோல்
அவளின்றி அமையாது வாழ்வு
கொலையைப்போல் தெய்வீகச் செயல் வேறெது நண்பா.

ரமேஷ் பிரேதன்/ அயோனிகன்/ 36-37




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்