பண்பாட்டு அரசியலை முன்வைத்த மறுபேச்சுகள் -ந.முருகேசபாண்டியன்.


1981 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் எம்.ஃபில் படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பு இடைவேளையின்போது துறை அலுவலகத்திற்குப் போய்க், கடிதம் எதுவும் எனக்கு வந்திருக்கிறதா என்று பார்த்தேன். அப்பொழுது தற்செயலாகப் பார்த்த அஞ்சலட்டையில் கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும் மாதந்திரக் கூட்டத்திற்கான அறிவிப்பைப் பார்த்தவுடன் வியப்பாக இருந்தது. அதுவும் அந்தக் கடிதம் முதலாமாண்டு படிக்கிற அ. ராமசாமி என்ற மாணவர் பெயருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இடதுசாரிப் பின்புலத்தில் இளம் மாணவரா? என்று யோசித்தவாறு அஞ்சலட்டையை எடுத்துக்கொண்டு முதலாமாண்டு வகுப்பிற்குப் போனேன். ”யாருங்க ராமசாமி?” என்ற எனது கேள்விக்கு நான்தான் என்று எழுந்து வந்த மாணவர் பின்னர் எனக்கு நெருக்கமானார். அவர், மதுரை, அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பயிலும்போதிலிருந்து இலக்கிய அமைப்பில் சேர்ந்து செயலாற்றியதாக அறிந்தேன். எனது அழைப்பினால் அவர் மு.ராமசாமியின் நிஜ நாடக இயக்கத்தில் சேர்ந்து தேர்ந்த நடிகரானார். அவர் தீர்க்கவாசகன் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தார். பல்கலைக்கழக வளாகத்தில் எப்பொழுது சந்தித்தாலும் சமூக, அரசியல், பண்பாட்டு விஷயங்களைக் குறித்த பேச்சு, எங்களிடம் நிலவும். அப்பொழுது மார்க்சிய லெனினியக் கோட்பாட்டின் மீது இருவருக்கும் நம்பிக்கை இருந்தது. 

 இலக்கியப் படைப்புகள் உருவாக்கத்தில் அரசியல், பொருளாதாரம் சார்ந்த கீழ்க் கட்டுமானம் எப்படி மேல்க் கட்டுமானமான கலை, இலக்கியம், பண்பாடு போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை ஆராய்ந்திட சிற்றிலக்கியப் படைப்புகளை முன்வைத்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளலாம் என்ற எனது ஆலோசனையை ராமசாமி ஏற்றுக்கொண்டார். நாயக்கர் கால இலக்கியமான சிற்றிலக்கியப் படைப்புகளைத் தேடியெடுத்து மார்க்சிய நோக்கில் ஆய்வு மேற்கொண்டார். வழமையான முனைவர் பட்ட ஆய்விலிருந்து மாறுபட்டுக் காத்திரமாக விளங்கிய அந்த ஆய்வு. பின்னர் புத்தகமாக வெளியானது. எங்கள் இருவருக்கும் ஆசான் பேராசிரியர் தி.சு. நடராசன். எங்களுக்குள் கருத்து முரண்கள் இருப்பினும் ஒரு சாலை மாணாக்கர் என்ற நிலையில் கடந்த 42 ஆண்டுகளாக எங்களுடைய தோழமை தொடர்வதற்கு அடிப்படை அரசியல்தான். கல்லூரி மாணவராக இருக்கும்போதே இடதுசாரி அரசியல் பின்புலத்தில் செயல்படுவதற்கான வாய்த்த மனநிலை இப்பவும் தொடர்வதன் அடையாளம்தான் அ.ராமசாமி சமூக அக்கறையுடன் தொடர்ந்து எழுதுகின்ற கட்டுரைகள். இன்று அச்சு ஊடகம் மட்டுமின்றி, மின்னணு ஊடகத்திலும் வெளியாகின்ற ராமசாமியின் சமூகம், பண்பாடு சார்ந்த கட்டுரைகள், சமகால அரசியல் பின்புலத்தில் காத்திரமாக விரிந்துள்ளன. வறண்ட கிராமியப் பின்புலத்திலிருந்து வந்த ராமசாமி, பல்கலைக்கழகப் பேராசிரியராகிப் புதுச்சேரி, வார்சா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றாலும் தொடர்ந்து சமூக அக்கறையுடன் எழுதிக் கொண்டிருக்கிறார். காத்திரமான தமிழ்ப் பேராசிரியர்களுக்கு ஒருபோதும் ஓய்வில்லை என்பதற்கு அவர் அடையாளமாக விளங்குகிறார். தமிழர்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை முன்வைத்து ராமசாமி எழுதுகின்ற கட்டுரைகள், அவருடைய சமூக அக்கறையின் விளைவாகும்.

’பண்பாட்டு வாசிப்புகள்’ என்ற தலைப்பில் இந்த நூலில் இடம் பெற்றுள்ள 23 கட்டுரைகள், சமகால அரசியலை முன்வைத்துச் சமூக விசாரணையாக விரிந்துள்ளன. கீழடி அகழ்வாய்வு தொடங்கி, பிக்பாஸ் நிகழ்ச்சி வரை எழுதப்பட்டுள்ள கட்டுரைகளில் ராமசாமியின் கருத்தியல் சார்ந்த தேர்வுகள் வெளிப்பட்டுள்ளன. குறிப்பாகத் திராவிட மாதிரி என்ற சொல்லாடல் பின்னர் பொதிந்திருக்கிற அரசியல் பற்றிய விவரிப்பு, கவனத்திற்குரியது. மனு; சில சொல்லாடல்கள், சம்ஸ்கிருதம் என்னும் பண்பாட்டாதிக்கம், இந்து சமயத்தைப் புதுப்பித்தலும் இறைப்படுத்துதலும், மொழி அரசியல்: மதவாத அரசியல்-இணைதலும் விலகுதலும் போன்ற கட்டுரைகள் வைதிக, சநாதன அரசியல் பின்புலத்தில் முடிவற்ற கேள்விகளை எழுப்புகின்றன. வெறுமனே மொழி, மதம் என்று எளிதில் கடந்து செல்ல இயலாமல் ஒவ்வொரு சொல்லிற்குப் பின்னர் பொதிந்திருக்கிற பண்பாட்டு அசைவுகளைக் கேள்விக்குள்ளாக்கியிருப்பதில் ராமசாமியின் துல்லியமான அரசியல் புரிதலும் பார்வையும் வெளிப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் ஜல்லிக்கட்டு உருவாக்கிய தமிழ்/ தமிழர் அடையாளமும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சநாதனம் என்ற சொல்லும் ஊடகங்களில் ஏற்படுத்திய பேச்சுகளும் ஆளுகை செலுத்துகிற தமிழ்நாட்டுச் சூழலில் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்திட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ராமசாமி தன்னுடைய கட்டுரைகளின் மூலம் பிரச்சினைகளின் மறுபக்கத்தைக் கண்டறிந்திட முயன்றுள்ளார்

பொதுவாகத் தமிழ்ப் பேராசிரியர் எனில் இலக்கியப் படைப்புகளை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதுவது வழமையாக உள்ளது. சில பேராசிரியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் மரபிலக்கியம், இலக்கணம் என்ற வரம்பினுக்குள் விமர்சனம் எழுதுகின்றனர். இத்தகு சூழலில் முற்றிலும் மாறுபட்ட பார்வைக் கோணத்தில் இயங்குகின்ற ராமசாமியின் எழுத்தில் அரசியலும் பண்பாடும் தோய்ந்துள்ளன. பண்பாட்டு நோக்கில் சமகால வாழ்க்கையைப் பற்றி, ராமசாமி எழுதியுள்ள அரசியல் விமர்சனக் கட்டுரைகள், இன்றைக்கு மிகவும் அவசியமானவை. அவை வாசிப்பில் சமநிலையைச் சிதலமாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வல்லமையுடையன. ராமசாமியின் கட்டுரைகள் சமூகத்துடன் ஊடாடிப் பிரச்சினைகளின் பன்முகத்தன்மைகளை அலசி ஆராய்கின்றன. ராமசாமிக்கு ஏன் இந்த அரசியல் ஆவேசம் என்ற கேள்விக்கு வரலாற்றின் பக்கங்களைப் புரட்ட வேண்டியுள்ளது.

இந்தியா முழுவதும் ஆர் எஸ் எஸ் அமைப்பு, பிஜேபி கட்சியை முன்னிறுத்தித் திட்டமிட்டு நகர்த்துகின்ற காய்களை எளிதாகக் கருதிப் புறக்கணித்திட முடியாது. கார்ப்பரேட்டுகளுடன் கைகோர்த்துள்ள இந்துத்துவா அமைப்புகள் மீண்டும்மீண்டும் முன்வைக்கின்ற மத அடிப்படைவாதச் சொல்லாடல்கள், ஒருவகையில் பாசிசத்திற்கான ஒத்திகையும் முன்னறிவிப்பும் என்று தோன்றுகின்றது. இந்தியா என்றால் வேதங்களின் நாடு என்று புல்லரிப்புடன் சிலாகிக்கிற குரல், அண்மையில் எங்கும் பரவலாக ஒலிக்கிறது. வேள்வி தொடங்கி எல்லாவிதமான சநாதனக் செயல்பாடுகளையும் புனிதமாகக் கருதிடும் செயல், வலுவாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ள சூழலில் ’காசி சங்கமம்’ என்று ஒலிக்கின்ற காவிகளின் திட்டமிட்ட காய் நகர்த்துதல் பொதுப்புத்தியில் ஏற்படுத்திடும் இந்து என்ற பிம்பம், முக்கியமானது. இதுவரை ஆளுகை செய்கின்ற வைதிக சநாதனத்தையும் மனு தருமத்தையும் மறக்கடிக்க இந்து என்ற சொல் போதையாகியுள்ளது. இன்னொருபுறம் யோகா, தியானம் என்ற விளைபொருளை முன்வைத்துக் காரப்பரேட் சாமியார்கள் உருவாக்கிடும் ஆன்மீகப் பிராண்டுகளுக்கு இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் வரவேற்பு இருக்கிறது. சிவராத்திரி இரவில் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் புனைந்திருக்கிற வேடமும் ஆடுகிற ஆட்டமும் ஆன்மீகத்தின் வெளிப்பாடு என்ற நம்பிக்கை, நிச்சயம் போதைதான். நாடெங்கும் இருக்கிற சங்கர மடங்களும், வைணவ ஜீயர்களின் மடங்களும் சைவ மடங்களும் ஏதோ ஒருவகையில் மக்களின் சமயக் கருத்தியல் உருவாக்கத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இன்றைக்கு அறிவியல் தொழில்நுட்பம், பகுத்தறிவு போன்றன பரவலான பின்னரும் மதங்களின் ஆதிக்கம் எவற்றின் அடிப்படையில் நடைபெறுகின்றது என்ற கேள்வி தோன்றுகிறது. 

ஏதோவொரு தத்துவத்தின் பின்புலத்தில் உருவாக்கப்படும் சமூக அமைப்பு, மத நிறுவனத்தின் அதிகாரத்தை வலுப்படுத்துகிறது. பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்கும் தத்துவங்களுக்கும் தொடர்பு இல்லை என்று மேலோட்டமாகத் தோன்றுகிறது. யதார்த்தத்தில் நிலவுகிற ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு அடிபணிகின்ற அடிமை உடல்களைத் தயாரிக்கிற பணியை மத அடிப்படைவாதத் தத்துவங்கள் செய்கின்றன. பிரம்மம், ஆன்மா, சுயம், சூன்யம், துக்கம் போன்ற சொற்களை முன்வைத்துத் தத்துவ விளக்கங்கள்மூலம் வைதிக சநாதன நிறுவனம் கட்டமைக்கிற அரசியல் சாதாரணமானது அல்ல. இன்னொருபுறம் ’தலையெழுத்து’, ’பிறந்த நேரம் சரியில்லை’, ’எல்லாம் விதி’, ’நம்ம கையில் எதுவுமில்லை’, ’எல்லாம் தலை விதி’ போன்று சுருக்கமான அளவில் கேப்ஸ்யூல் தத்துவங்கள் ஆழமாக ஊடுருவியுள்ளன. இதனால் ஆட்சியாளர்களின் அதிகாரத்திற்குச் சார்பான சநாதனக் கருத்தியல் பாமரரிடமும் பரவியுள்ளது. எல்லாம் மாயை என்ற சிந்தனை, உழைப்பாளர்களிடமும் செல்வாக்குடன் விளங்குவதற்குக் காரணம் வைதிகத் தத்துவம்தான். புறநிலையில் ஐந்து புலன்களை ஒடுக்குவதை உன்னதமாகப் போதிக்கிற வைதிக மதம், எல்லாக் காலகட்டங்களிலும் சாதிய நிறுவனத்துடன் கைகோர்த்துக்கொண்டுள்ளது. நிலவுகிற வருணாசிரமச் சாதிய முறையைப் பிரம்மம் உள்ளிட்ட வைதிகத் தத்துவங்கள் ஆதரிக்கின்றன என்பதுதான் உண்மை. சரி, இருக்கட்டும்.

ராமசாமி எழுதியுள்ள பெரும்பான்மையான கட்டுரைகள் விவாதத்தை முன்னிறுத்திப் பேச்சுகளை உருவாக்குகின்றன. அவை, வெறுமனே கட்டுரைகள் என்று எளிதில் கடந்து செல்லாமல் வாசகனைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. அவருடைய கட்டுரைகளில் நறுக்குத் தறித்தாற்போலப் பதிவாகியுள்ள சில கருத்துகள் பின்வருமாறு:

  • எல்லாவிதக் கருத்தியல்களையும் அடையாளங்களையும் தனதாக்கிச் செரிக்கும் இந்துத்துவம் தமிழையும் செரித்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.
  • கீழடி அகழ்வாய்வு கி.மு. ஆறாம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் நகரமயமாக்கம் உருவாக்கிவிட்டதை நமக்கு உணர்த்துகிறது.
  • கீழடிச் சான்றுகளைச் சங்கம் என்ற சொல்லோடு இணைக்காமல் பேசுவதே சரியானது.
  • மானுடரே காதல் செய்வதற்குக்கூட இங்குத் தடைகள் வருகின்றன. கவனமாக இருக்க வேண்டும்; இல்லையேல் உங்கள் கனவைக்கூட அரசாங்கம் திட்டமிடக்கூடும்.
  • மனு என்ற சொல்லும் அதன் வழியான கருத்தியலும்தான் பிராமணர்களுக்கு உடல் உழைப்பை உடமையாக்காமல் மூளையை மட்டும் பயன்படுத்துபவர்கள் என்ற தகுதியைத் தந்தன.
  • தமிழ்மீது தமிழர்கள் வைத்திருக்கும் மதிப்பும் காதலும் உண்மையானது. எனவே தொடர்ச்சியறுபடாமல் அவர்கள் பாதுகாக்க முனைவார்கள்.
  • பழக்கமும் வழக்கமும் மண்மூடிப் போவதாக என்று சொன்னால் எங்கள் மனதைப் புண்படுத்தி விட்டாய் என்று கூக்குரல் எழுப்பும் கூட்டங்களும் அதிகரித்து விட்டன.
  • கலாச்சாரத் தேசியம் பேசும் இந்துத்துவ அடிப்படைவாதிகளுக்கு வேத நூல்களே ஆதர்ச நூல்கள்; மனுஸ்மிருதியைச் சட்ட நூலாக அங்கீகரித்த குப்தர் காலம்தான் பொற்காலம். அதைத் திரும்பக் கொண்டுவருவதே அவர்களின் லட்சியக் கனவுகள். அதற்குத் தடையாக இருக்கும் பிற மதத்தினரும் ஜனநாயகவாதிகளும் ஒழித்துக் கட்ட வேண்டியவர்கள். அல்லது இந்த நாட்டைவிட்டுத் துரத்தப்பட வேண்டியவர்கள்.
  • கிராமத்து நாட்டாண்மையின் தீர்ப்பு தொடங்கி, சமூக ஊடகங்களில் பெரும்போக்குப் பதிவுகள்வரை வெளிப்படும் இரட்டை எதிர் மனநிலைகள் பெரும்பாலும் எல்லாவற்றையும் கறுப்பு வெளுப்பாகப் பார்க்கும் தன்மை கொண்டன… ஒரு நிகழ்வு அல்லது ஒரு நபர் அல்லது ஒரு செய்தி போன்றவற்றை இரட்டை எதிர் மனநிலைகளில் நின்று பார்ப்பது எப்பவும் நல்ல முடிவுகளைத் தராது.

மேனாள் பேராசிரியர் ராமசாமி, ஏற்கனவே இங்கு நிலவுகின்ற அரசியல் அமைப்பையும் சமூக நிறுவனங்களையும் கேள்விக்குள்ளாக்கி, வாசகர்களிடம் வாசிப்புமூலம் விழிப்புணர்வு அல்லது மாற்றத்தை உருவாக்கிட முடியும் என்று நம்புகின்றார். அதேவேளையில் முதலாளித்துவ உற்பத்தி முறையின் விளைவான ஜனநாயகமும்கூட இந்துத்துவா என்ற பெயரில் மறுக்கப்படுகின்ற நிலையைக் கண்டறிந்ததன் வெளிப்பாடுதான் என்றும் கட்டுரைகளை மறுவாசிப்புக்குபடுத்த முடியும். எல்லாவற்றையும் பண்பாட்டு நோக்குடன் அணுகி விமர்சிக்கின்ற கட்டுரைகள், ராமசாமியின் அரசியல் வெளிப்பாடுகளாக விளங்குகின்றன. தமிழ்ப் பேராசிரியர் பணி என்பது வெறுமனே ஊதியத்திற்கானது என்ற பொதுப்புத்திக்கு மாறாக இரண்டாயிரமாண்டு வரலாற்றுச் சிறப்புடைய தமிழ் மொழி/ தமிழர்களின் பண்பாடு பற்றியது என்ற புரிதலை உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றுகின்ற தமிழ்ப் பேராசிரியர்கள் அறிந்திட வேண்டுமென்பதுதான் ராமசாமியின் பிரதி முன்வைத்துள்ள சேதி. அது, இன்றைக்கு மிகவும் அவசியமானதும்கூட.

 

ந.முருகேசபாண்டியன்,மதுரை





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்