மழையும் மழைசார்ந்தனவும்-8



71/ நீர்


1.
கண்கள் கலங்கி
முகமே குளமான
நீர்நிலை
ஆழம் காண மூழ்குகிறேன்
இரவில் அமிழ்ந்து தரைபடிந்த நிலாவில்
பாதம் பதிய
வசதியாகத் தியானத்தில்
அமர்ந்து விடுகிறேன்
தியானவெளியாகவும் மையப்போதமாகவும் குளம்
ஆனால் இது
அந்தரத்தில் மிதக்கிறது.
2
மழையைப்போல நீ
எனக்கு எல்லாம் தந்தாய்
3
தூறலாய்த் தொடங்கி
படிப்படியாக வலுத்து
ஒவ்வொரு இழையாக இணைத்து
சலசலவென ஓடோடி
தியானத்தின் உச்சியிலிருந்து உன்னை
அவிழ்த்துக் கொண்டிருக்கிறாய்
அருவி
4.
நீ நடந்துசெல்லும் பாதையெல்லாம்
ஈரம்
அது உனது பண்பு
என் உடலெங்கும் பலவாகி ஓடுவது
ஒரேவொரு அறு
5
கடலைப்போல ஒரு
உடல் நீ
கவிதையைப்போல ஒரு
கடல்நீ
6.
குளம் மழை அருவி ஆறு கடல்
எல்லாம் நீ
இப்பெயர்களில் பொருந்தும்
வடிவம் நான்
7
குளம் தியானம்
மழை குதூகலம்
அருவி கொண்டாட்டம்
ஆறுதிருவிழா
கடல்கலவி எல்லாம்
மனசெனச் சுழலும் ஒரு துளி
8
மழையைப்போல நீ
எனக்கு எல்லாம் தந்தாய்
==================================================
ரமேஷ் -பிரேம் /கொங்குதேர் வாழ்க்கை/ தமிழினி/ 262

72
 

அடைமழையின் அமைதி
பெருமழையின் ஆக்ரோஷம்
அடிமனத்தின் ஆழத்தில்
ஆனந்தத்தின் ஆக்கிரமிப்பு
பள்ளிப்பருவத்தில்
பத்து வயதுச் சிறுமியாய்
துள்ளி வீடுவருகையில்
சில்லிடும் மழைத்துளிகள்
சிரம் நனைத்து முகம் வழிய
எங்குமிலாச் சந்தோசம்
பொங்கிவரப் பொங்கிவர
அம்மாவின் அதட்டலால்
சடங்கு மறுக்கும் ஆசைகள்
முடங்கிக் கிடக்க மனமின்றி
தடைகள் பல தகர்த்தெறிந்து
தண்ணீரில் குதித்தாடிக்
கண்ணீரின் சுவடின்றி
காலங்கள் சென்றன.

நேற்றைய மழையில்
முற்றிலும் நான் நனைந்து
வீட்டினுள் நுழைந்தேன்.
அம்மாவின் நினைவு
அடிமனதில் துக்கம்
முந்தானை கொண்டு
முகந்துடைத்த அம்மாவின்
அடிவயிற்றில் முகழ் அழுத்தி
அணைத்து அந்தச் சுகம்

கலைந்த முடி விரித்து
கவனமுடன் துடைத்து
கதகதப்பை ஊட்டும்
வெதுவெதுப்பை ஏற்றும்.

முந்தானை முகர்கையில்
சந்தனமாய் மணக்கும்
அம்மாவின் வாசம்
அம்மாவின் சேலைக்கொரு
அலாதியான வாசமுண்டு
இரவுகளில் உறங்கையிலே
இதமாக அவள் சேலை
முகத்தோடு மோதவிட்டு
முத்தமிட்டு முத்தமிட்டு
நித்திரைக்குச் சென்றதுண்டு
நிம்மதியைக் கண்டதுண்டு.
நான்கு பத்து வயதெனக்கு
ஈன்றபிள்ளை இரண்டு
இருந்தபோதும் இன்றும் என்
அருகில் அம்மா வேண்டும் அவள்
சேலை வாசம் தேடும்
எந்தன் ஏக்கம் நாளும் கூடும்

அவள்
சுவாசம் நின்றபோதும்
அவள்
வாசம் என்னுள் வாழும்
===================================
பாமா/ மை -ஊடறு கவிதைகள்/44,45

73
 
மழைவேண்டி
கூழ் ஊற்றச் செல்லும்
இளம்பெண்களில் ஒருத்தியாவது
திருவிழா சந்தடியில்
ஒவ்வொரு ஆண்டும்
காதல் வயப்படுகிறாள்.
எல்லாக்கிராமத்திலும்
இதற்காகவேனும்
பூமிக்கு மிக அருகில்
அடிக்கடி வரவேண்டும் சூரியன்
================================================
கே.ஸ்டாலின்/ கொங்குதேர் வாழ்க்கை/ தமிழினி/ 384

==================================================



74/நட்சத்திரங்களின் மழை

 
மழை துமித்துக்கொண்டிருந்தது
ஒரு சிறுவன்
வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்
மழைத்துமிகள்
அவன் மேலே விழுகின்றது

சூரியன் மறையத் தொடங்கினான்
சிறுவனைத் தவிர
எல்லோரும் அவரவர் வீடுகளில் இருந்தார்கள்
அவனோ ஒரு பொழுதும்
வானத்தைப் பார்த்திராததுபோல
பார்த்துக்கொண்டிருந்தான்

திடீரென்று
அவன் தலையில் ஏதோ விழுந்தது
அவன் வலியால் கத்தினான்
நட்சத்திரங்களின் மழை
அவன் மேல்
விழுந்துகொண்டிருந்ததனால்

====================================================
மீரா பாலகணேசன், 2007/ பெயல் மணக்கும்பொழுது/205



75/மழைவெயில்

================
மணலின் நறுமணம்
காற்றில் வெதுவெதுப்புடன்
பரவிக்கொண்டிருக்கும் அதிகாலையின் கூட்டில்
பூமியின் இருப்பு கைக்குழந்தைபோல்
வெகு பத்திரத்தோடிருக்கிறது
நறுமணத்தை முகர்ந்து கடப்பவன்
நேற்றைய மழை சுமந்து செல்கிறான்
அல்லது
ஆதிகாலத்தின் முதல் வெயிலை
இன்னும் கொஞ்ச நேரத்தில்
தர்ஸித்துவிடுவான்

==================================================
பாலை நிலவன்/ கொங்குதேர் வாழ்க்கை/ தமிழினி/ 361



76/கனவுக்குள் மழையுள்ளவர்கள்

====================== =========
கனவுக்குள் மழையுள்ளவர்கள் மட்டும் அவளைச்
சந்திக்கலாம். இமைகளை மூடிய மறுகணமே
கனவைக்கொண்டுவரக்கூடியவர்கள்
அவள் ஆடை மாற்றுவதையும்
காணலாம். சற்றுத்தாமதித்து கனவைக்
கொண்டுவந்தால், ஆடையின்றி
மழையில் நனைவதைத்தான் பார்க்கமுடியும்.
நீங்கள் கனவைக்
கொண்டுவரும்வரை ஆடைகளுடன் காத்திருக்கமாட்டாள்.
ஆடைகளோடு
அவள் தனது உடலையும் கழற்றிவைத்துவிட்டு
மழைக்குச் செல்வதுதான் வழக்கம். துளிகளின்
இரைச்சலோடு
அவளுடைய மனமும் குதித்துக்கொண்டிருக்கும்
தப்பித்தவறி ஓய்ந்தாள்
வேறொரு மழைபெய்யும் கனவைத்தேடி
புறப்பட்டுவிடுவாள். மழை
பெய்யத்தொடங்கினால், வெள்ளம்பற்றிய அச்சம்
நமக்குத்தான். இந்தக்
கவிதையைப் படிக்கும் பெண்கள் கனவுக்குள்
மழையுள்ளவர்கள்
அவளைச் சந்திக்கலாம் எனத் தொடங்கவும்.
=============================================
ரியாஸ் குரானா / ரியாஸ் குரானா கவிதைகள்/ புதுஎழுத்து/24



77
====
மழைக்கேன் தயக்கம்?
பெய்யவேண்டியது தானே.
இல்லையேல்
பேசாமல் காற்றோடு
இரவோடு இரவாக
ஓடிப்போய் விடலாமே
விண்மீன் கண்சிமிட்டி
கோணல் மின் சிரிப்புதிர்த்து
கெக்கலித்த வானோடு
கூடி இலை அலர் தூற்ற
எண்டிசையும் முகங்கறுத்து
எங்கும் இதே பேச்சன்றி

===============================
ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன்/ கொங்குதேர் வாழ்க்கை/ தமிழினி/ 156





78
===
இரவில் வந்தது மழை
யாரும் அதன் அழைப்பை
ஏற்கவில்லை
சன்னல்களும் கதவுகளும் சாத்திக்கிடந்தன
துக்கம் அதிகமாகி மாரடித்துப் புலம்பியது அது
இருட்டின் ஒரு துளியைக்கூட
கரைக்க முடியவில்லை அதனால்
இரவெல்லாம் சபித்தபடியும்
முணுமுணுத்தபடியும் இருந்தது.
காலையில் வாசலில்
தேங்கியிருந்த மழையின் கண்ணீரில் நின்றபோது
முறுக்கிக்கொண்ட சிறுமிபோல்
கால்களைக் கிள்ளியது
அதன் குளிர்ந்த கோபம்

=====================================================
அழகிய பெரியவன்/ கொங்குதேர் வாழ்க்கை/ தமிழினி/ 353



79/ எதிர்கொள்ளல்
==================
முழங்கால் குத்தியிருந்து
ஒரு மழை ஒழுகிய இரவில்
அகதியானதைப்பற்றி
கண்கலங்கினால் உம்மா
பின்னருமென்ன காலையும்
சூரியன் மறைந்து போதலும்
கலங்கிய கண்களுடன்
காத்திருந்தாள் என் உம்மா.
அது ஓலைக்குடிசையாய் இருக்க
வசதியாய் இருந்த உனக்கு
அது இழக்கப்பட்டது
முகாம் வாழ்க்கை..
தூக்கணாங்குருவிக்கும்
காக்கையும்கூட வல்லபமாய்
கூடுகட்டி அந்த முகாமருகில்
வாழ்ந்ததைக் கண்டாய்.
உன் ஈழை வியாதிக்கும்
உப்புக்காற்றுக்கும் இடையில்
இரண்டாவது போராட்டமாரம்பித்தாய்
வழிநெடுக உன் நினைவுகளினூடு
கால் இழைக்க என்னால்
நடக்கமுடிகிறது உம்மா
உன்னால்....
அந்த நிலாவைப்பார்த்துச்
சிரித்தாய்
வடக்கின் புகைமேகங்களுக்கு
மேலால் இன்னும் நிலவாக
இருக்குமா அது?
சிக்கல்பட்டது வாழ்க்கை.
விதிக்கு நீ ஏசாமலிருப்பதற்காக
உன்னை நேசிக்கத்
தூண்டுகிறது.
உம்மா எட்டு வருஷங்கள்
மணல் கோடுகளை கீறுவதும்
அழிப்பதுமாய் ஓடிஓடி
மறைகின்ற வாழ்க்கை
இனி என்னவேண்டும் தாயே
என் நாடி நிமிர்த்தி நீ சொல்
அதுவே வேண்டும்.
எங்களுக்கும் பரம்பரை பூமி
வேண்டும்
விலகியிரா வரம்வேண்டும்

========================================================
இளைய அப்துல்லாஹ்/ வேற்றாகிநின்றவெளி/ ஈழத்துக்கவிதைகள்/ விடியல்/45-46


80/ உயிர்ப்பு
===========
நேற்றைய மழை முழுதையும்
சுவடற்றுக் குடித்தேன்
உடல் ஊறிய வெப்பத்தை
வாசனையாக்கி வெளியேற்றினேன்
என்னுள் தவிப்பாய் படரும்
வேர்களுக்கு முலை காட்டினேன்
ஆற்றின் மணல் பரப்பை
சிறிது ஈரமாக்கினேன்
குளம் குட்டைகளில்
கொஞ்சம் தேக்கிக் காட்சிப்படுத்தினேன்
உயிர் நீரை உறிஞ்ச
உடலெங்கும் இட்ட துளைகளுக்கும்
நீர் வார்த்தேன்.
பாறைகளில் ஈரப்பசை ஒட்டினேன்
பழுப்பான என் குழந்தைகளைப் பச்சையாக்கினேன்
இயல்பாகிப் போனது
மழைவரும் நாளில் நான்
மண்ணின் உடலாகிக்கொண்டிருப்பது.

====================================================
ந.பெரியசாமி/ தோட்டாக்கள் பாயும் வெளி/ புதுஎழுத்து/ 18
=====================================================

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்