மழையும் மழைசார்ந்தனவும் -4



ஐப்பசி, கார்த்திகை தமிழ்நாட்டின் மழைக்காலம். ஐப்பசி பேஞ்சு பொறக்கணும்; கார்த்திகை காஞ்சு பொறக்கணும் என்பது சின்ன வயசில் கேட்ட சொலவடை. காலமாற்றத்தில் மார்கழி  கொட்டும் மழையோடு பிறக்கிறது. நிலவெளியையும் அதன் இருப்பையும் அங்கு வாழும் மனிதர்களின் நெருக்கடிகளையும் எழுதும் எழுத்துகள் எப்போதும் கவனத்துக்குரியன. மழையும் மழைசார்ந்தனவும் கவனத்துக்குரியனவாக இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.


31 /மழை

1
அந்த நாள்போல
இந்த நாளிலும் மழை
அந்நாளும் இன்றும் ஒன்றல்ல
எனினும்
பெய்யும் மழை
புள்ளியாகிப் போன அந்நாளை
இன்றோடு இணைக்கின்றது
தெளிந்து முறிந்த கம்பிமின்னல்களை விடவும்
வெள்ளையாய் ஒரு புன்னகை
காலத்தின் உதடுகளில்

2
மீண்டும் மழை
வராதென எண்ணியிருந்த வினாடியில்
ஆகாயம் பிளந்து பொழிய
இரவு நீர்த்துளிகளெனத் தாரைகளெனச் சொட்டுகிறது.
விட்டுவிட்டு ஒளிரும் மின்னல்கள்
உயிர்வரை ஒளிர
காதுகளைத் திருகும் இடியோசையில்
யாருடையதோ அழுகைகள் அடங்கி விடும்.
இன்று பெருகிய குருதியைப் பொழியும் மழை
கழுவி விட சுயம் தொலைத்து நடப்போம்
3
மூக்கு நுனியில் விழுந்ததொரு துளி
பின்
முகமெங்கும் ஈரம் தந்து
வந்தது மழை
நீர்த்திரை பிளந்து விரைகையில்
கடலுக்குள் பயணித்த உணர்வு
என்முன் விரிந்த வெளியில்
நானும் காற்றும் நீரும்
குளிர்ந்து சிலிர்த்த
என்னுடலில் பட்டு வழிந்த நீரின் அதீதம்
நமது நேசம் போல
மழைக்கோட்டை மீறி
மார்பில் வழிந்த ஒரு துளியால்
ஈரம் கசியும் உன் விரல் தொடுகையுணர்ந்தேன்
4.
கருநிறம் முகில் நிறம்
வெண்ணிறம் மழை நிறம்
மென்னீலங் குறுமின்னல் நிறம்
இடியின் நிறம் ஒலி நிறம்
இன்றெனது நிறம் மழையின் நிறம்
என் கனவுகளின் நிறம் ஈர நிறம்
5.
ஓவியம் ஒன்று அதில்
மழையில் நனையும் வீடு
வீட்டின் யன்னலூடு தெறிக்கும் சாரலில்
நனைந்துகொண்டிருந்தது யாருமற்ற அறையொன்று.
=================================================
வினோதினி/ முகமூடி செய்பவள்/காலச்சுவடு/ 85- 86



32/மழைநாள்
 

கவனிப்பாரற்ற உப்புமூடை
சுமக்கும் முற்றத்து மழை

வாசல் அடைபட்ட
ஜலதாரை தடுக்கும்
வெளியேறும் பிணம் ஒன்றை

வடிவம் அழிந்து
நீராய்க் கலக்கும் தெருவெள்ளத்தில்
கோலம் ஒன்று

தவறிவந்த பிள்ளைப்பூச்சிகள்
சிமெண்டுத் தரையை முண்டிப்பார்க்கும்
மண்ணென நினைத்து

சுவற்று வெண்மையை
அசிங்கப்படுத்த
இடுக்கு வழியாய் இறங்கிப் போகும் கூரைத்தண்ணீர்
=============== ================= ===============
ஜனகப்ரியா/ மரணம் எதுவென/ நிகழ்வெளியீடு/ ப.6


33 / எனக்கான ஆகாயம்

 

மழைக்கால மாலைகளில்
தவறாமல்
மழை வந்துவிடுகிறது

குடைபிடித்துச் செல்வோர்
சாலைகளில் கடக்கின்றனர்
வாகனங்களின் விளக்குகள்
மங்கலாக ஒளிர்கின்றன

நிலவற்ற வானம்
எனக்கு மேலே விரிந்திருக்கிறது
மழையில் நனைந்த
அதன் சிறகுகளை உலர்த்திக்கொண்டு

காற்றில் அலையும்
என் ௬ந்தல்
ஆகாயத்தை வருடியபடி
மயங்கிக் கிடக்கிறது .

இந்த மழைக்கால
வானம்
வசந்தத்தை தரையில் இறக்கியபடி இருக்க

கிளையில் அமர்ந்திருக்கிறது
ஒரு பறவையென
என் காதல்

சூல்கொண்ட மேகம்
மெல்ல விலக
மழைக் காற்றில் நனைந்த
என்
சிறகுகள் அசையத் தொடங்குகின்றன

நான் மிதந்து கடக்கின்றேன்
எனக்கான வானத்தை.
============================
சக்தி ஜோதி / சொல் எனும் தானியம் -2014



34 /பிறிதும் ஒரு நாள்

 
இல்லை -
இப்போதிங்கு மழை பெய்யவில்லை

வானைக் கூறிடவோ! மின்னல்
வெட்டிக் கண்கள் கூசிக் கணமொன்றில்
குருடர்களில்லை

புழுதி புகையாய்க் கிளம்பி
ஊர் மணக்கவுமில்லை

முழுக்கச் சாத்தப்பட்ட யன்னலூடு
தூவானந்தட்டி மெய்
சிலிர்த்தல் நிகழவுமில்லை.

கூரைத் தகரக்குழிவுகளில் வழிந்து
நீர்த் தாரை ஓடி
வாசலில் தேங்கவில்லை

மாரி பெய்ய நிறம் வெளித்த இலைமுதுகின்
பச்சையின் பல்வகைமை அறிந்திலேன்.

விறைத்த அரக்கர்களின் கேசங்களாய்
ஓலைகள் பறக்க
தென்னையொன்றும், மழையின் காற்றோடு
மல்லுக்கு நிற்கவில்லை

தேங்கிய பள்ளத்தில் குளித்தொரு காகம்
தலைகெழித்துஉடம்பதிரச் சிலும்பி
வெள்ளை நரைதெரிய நீருணத்தி - தெத்தி
இளகிய ஈரத்தின் பாரத்தோடு மெல்லென வானில்
எழும்பி மிதந்தததா - இல்லவேயில்லை.

நனைந்து கொடுகிப்போய்
தாவரத்தில் ஒடுங்கி ஒதுங்கிய செவலைக்
கோழியின் கபில் அசூசை
நாற்றம் எடுக்கிறது என்ன?

என்னிரு செவிச்சோணைகளையும் பொத்தி
உள்ளங்கையால்- விலத்தி பொத்தி, பொத்தி விலத்தி
மறுத்தும், அநுமதித்தும் காற்றை
மழையின் ‘சோ’ வொலியில் நனைய
விரும்பி விழைகிறவனாய் நானில்லை.

மழையகழ்ந்த குழிகள் தோறும்
எழுதி கரைந்து, புதுநிறத்தை வெறித்தபடி
பார்வைக்கும் புலனுக்குமான
மிக்க குறைந்தபட்சத்தொடர்பும் அற்றவனாய்
நானென்ன நின்றேனா?

இல்லையே, யில்லையே-
இப்போதிங்கே
மழையே பெய்யவில்லை என்றல்லவா சொல்கிறேன்.

நாங்கள் இன்னும் நடந்துகொண்டிருக்கிறோம்.
மகளிர்க்கான அந்தச் சிறிய கறுப்பு கறுப்பு ஒற்றைக் குடைக்குள்
(என்னது தோள்பையினுள் பத்திரமாய் இருக்கிறது)
ஒருத்தருள் ஒருத்தர் ஒதுங்கி
தோளுரசப் பின் தொடையிரண்டும் தான் உரசிக்
கூச்சம் தலையெடுத்துத் தோற்க,
கணச்சூட்டின் பொறிபறக்க
நாகரிகங்களின் எல்லைக்கும் வெகுஅப்பாலாகி
பலவீனமே பலமாக எக்கணத்திலும் -
கரங்களைப்
பற்றிவிடுவேனோ என நானும்
பற்றிவிடானா என அவளுமாய்
தகிப்புற்று நடக்கிறோம்.

ஒரோயொரு கணம்போதும்
ஆனாலும் இன்னும் நடக்கிறோம்
இன்னும்... .
இ...ன்..னு... ம்
=====================================
றஸ்மி/ ஈதேனின் பாம்புகள்/ பக்.76-77


35/ஜூலை மாதத்தில்

===================
ஜூலை மாதப் பகலொன்றில்
பெய்த மழையில்
முற்றிலும் நனைந்த
ஈரம் இன்னும் காயவில்லை.
இனி என்றுமே காயாதிருக்கும்.

கடலாய் விரியும் காதலில்
வீழ்ந்து கிடக்கிறேன்
சுற்றி மற்றொரு உலகமும்
நிழற்படமாய்
இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
பைக்குள் பொத்தியிருந்த பூவை
கொடுத்துவிட முடியாமல்
மேகத்தினூடாய் மறைந்து சென்றாய்.
இன்னொரு நீர்ச்செடிக்குள்
எந்த மலருமற்றுப்
புதைந்து கிடைக்கிறேன்
ஆயினும்
நிகரற்ற ஒரு படகாய்
காத்திருப்பேன் அன்பே...
பெருமழையை
ஒளிந்து வைத்திருக்கும்
கருமுகில்களின் ரகசியங்களால் ஆனவை
புதுப்பயணங்களின் சாலைகளின்
எல்லா வழிகளிலும்
தேடிக்கொண்டே இருப்பேன்
வீட்டின் முற்றத்தில் தினமும்
வாடும் நித்தியமால்லிப் பூக்களை
முகர்ந்தறிகிறேன்.

உனது தேநீர்க்கோப்பையிலிருந்து சிந்திய
ஒரு துளியை என் உதடுகள் சுவைக்கிறது.
காட்டுப் பூக்களின் வாசனையாய்
ஆண்மையின் நறுமணம்
கிளர்த்த, மீள சிதைகிறேன்
மீண்டும் மழை பொழுகிறது


இதுவும் ஜூலைமாதம்தான்!.
==================================
உமாசக்தி/பனிப்பாலைப்பெண் / 58



36 /இரசமற்ற பூமி


நான் என்றது கடவுளின் குரல்.


மழைக்காலத்தில் தவறி விழுந்த சிறுமணிகள்

முளைவிட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆழ்ந்த பள்ளத்தாக்கின் மேகம்

தன் கனிவான பயணத்தைத் துவக்கியிருந்தது.

மீண்டும் பாறைகள் மௌனிக்கின்றன.

துல்லிய வானத்தைத் துலக்கலாய்ப் பிரதிபலிக்க

இரசமின்றிச் சிதைந்து கிடந்தது பூமி.

நீர் நிலைகள் எதிர்விரியும் ஸ்தூலத்தை

அழிக்கழித்தும் காட்டிக் கொண்டன.

தன் எச்சிலின் வழியே எதிலும் பிடிமானமற்று

இறங்கிக் கொண்டிருந்தது சிலந்தியின் கரிசனம்.

உயிர் வாழ்ந்துகொண்டிருப்பதாக எல்லோரிடமும்

சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்; போய்க்கொண்டிருந்தவர்கள்.



எதையும் நம்பவில்லை நான்.

சிகரெட்டின் சாம்பல்களை ஓர் எறும்புக்குழியில்

தட்டிவிட்டுக்கொண்டிருந்தேன்..



ஒரு பெருவனத்தின் நூற்றாண்டு மரத்திலிருந்து

சில பறவைகள் ஏதோ அபாயத்தைச் சுமந்து வந்தன.

உடனே நான் இறக்கவேண்டுமென நினைத்தேன்

தன் புகைப்பானுக்காய் தோளைத் தட்டி

நெருப்புக் கேட்டவனோடு

எழுந்து போய்க்கொண்டிருப்பது நானா..

===================================

யவனிகா ஸ்ரீராம்/ கடவுளின் நிறுவனம் /6235


37 / காட்டில் பெய்த மழை

 கங்குல் விலகாத காலைப்பொழுதில்
இருள் தேங்கிய வானில்
மின்னற்கோடுகள் ஓடுவதான ‘சேட்’டில்
இரு சூரியரைக் கண்ணாடி வில்லைகளால்
முகத்தில் மறைத்துக்
கம்பீரமாய் - நீ
தினமும் ஆழம் தேடி
உள் நுழையும் இரு வாசல்களையும்
இமைக்குள் தாழ்த்தி
ரோசா வண்ண உடையில்
பிரியம் மலர்ந்திட
உன்னுடன் ஏறிக் கொண்டேன்

மழை முகில்கள் தொங்கிக் கிடந்த
அதிகாலையில்
நெடுந்தூரம் கடந்தோம்
உடனிருந்த சிறுவர்களின் சேட்டைகளில்
ஒருவரையொருவர்
எண்ணிப் பயணிக்கும்
கனவுகளில் இருந்து மீண்டோம்

சீதனம் செறிந்த அடர் இருள் வனத்தினும்
புகுந்த வேளை
இடி முழக்கத்துடன் ”சோ”வென இறங்கியது
கிளைகள் பணிந்து பெருமழை

இறுதி யன்னலையும் மூடி
இசை தவழ்ந்த வாகனத்துள்ளே
ஒளியையும்
வாசனை கமழும் குளிரையும் பரவவிட்டால்
மஞ்சள் ஒளியுடன்
ஆடைகளில் படியத் தொடங்கியது.

உனது சுகந்தத்துடனான ஈரவளி
வழி நீளப் பேரிடிகள் முழங்கி அச்சுறுத்தச்
சிறியவர் எதிரே
உனது தைரியம் எனையும் தொற்றியது
மலையை ஏந்தும் வல்லமையுடன் நீ
வீழ்ந்து கொண்டிருக்கும்
மழைத்துளியொன்றன்றி வேறேது நான்>
நீர்ச்சுமையில் முறிந்து சரியும்
கிளைகள் குறித்த பயம்
அடவியைத் தாண்டியதும் விலகிப் போயிற்று
பெய்தல் தின்ற வானத்திலிருந்து
வந்தடைந்த முதல் கிரணம்
பிள்ளைகளின் முகங்களில்
புன்னகையைத் தீட்டியது.

ஓய்ந்திருந்த இசையும் ஓசையும்
மீள வலுத்தது.
நுழைவாயிலிருகே
எனை விடுவிக்கும் வேளையில்
ஆழ்ந்த ஊடுருவுமொரு பார்வையை எறிந்தால்
இப்போது
அடர் வனத்தினுள்ளே பெரு மழையாய் நீ
எனதான்மாவினுள் நுழையத் தொடங்குகையில்
ஆண்டாண்டு காலம் போர்வைக்குள் கொண்டு
எனை மூடிப்போகிறேன் நான்,
 
ஃபஹீமா ஜஹான்/ ஆதித்துயர்/காலச்சுவடு82-83


 
38 /உலகின்றி நீர்
 

பேய் மழையின் விரல்பிடித்து
ஊரோரம் ஓடும் நதி
ஊர்ப் பார்க்கும் வெறி கொண்டு கிளம்புகிறது
ஊழிக் காற்றின் ஓசையில்
ஊருக்குள் பாய்கிறது வெள்ளம்
எதிர்கொள்ள எதுவுமின்றி
மனிதர்கள் கைப்பிசைந்தோம்
காற்றுப் புகும் இடங்களெல்லாம்
வெள்ளம் பெருகுகிறது
பெருவிரல் கணுக்கால் முட்டளவு மார்பு
கழுத்தென வளரும் ஆலகால விஷநீர்
பிரிக்கும் மதில்கள் இணைக்கும் சாலைகள்
அனைத்துமழித்து பெருக்கெடுக்கிறது வெள்ளம்
மரண ஓலத்தோடு ஓலம் மோதி மின்னல்
மழை பூமி தொடும் தேவையற்று
தன்னைப் பெய்து பெய்து கொண்டாடுகிறது
வரத்து அதிகரிக்க உயர்கிறது வெள்ளம்
வெள்ளம் பெருவெள்ளம்
மொட்டை மாடிகளுக்கும் மேலே
ஓடியாடி நெழிகின்றன பாம்புகள்
சற்றே நேரத்தில்
மலைகளும் மூழ்கிச் சாகும்
கடல் கொள்கிறது
கடல் காவு கொள்கிறது
நீர் வானம் இடையே காற்று
உலகின்றி அமைகிறது நீர்

========================== =============================
ஜி.எஸ். தயாளன்- 'சுவர் முழுக்க எறும்புகள் பரபரக்கின்றன ' 2002- 53


39/ வியர்க்கும் மழை

 
நனைந்த சுகம் உலர்ந்து கிடக்கும்
பாதியில் நின்றுவிட்ட பள்ளி
மழைநாளில்
சொதசொதக்கும் சேறுபோல் மனம்.

வீட்டின் மூலையை மனம் வருட...
அவசர வேலைக்கு
மாட்டைப் பட்டியில் அடைக்க
கொட்டும் மழையில் குடிநீர் எடுக்க
அரவணைக்கும் தாயைப்போல உதவியாயிருந்தது.
பூனையாய் மனதில் தூங்கும்
தலை கவ்விய குடலை

மழையால் குளிக்கும் கூரையும் சுவரும்
சுருண்டு கிடக்கும் இடமும்
சுதிமாறி அல்லாடும்போது
வானம் பார்த்தக் கண்கள்
மழை நீரால் ததும்பி வழியும்

கழுத்தளவு நீரில் கல்லோடை இழுப்பில்
அக்கரையில் படுத்திருக்கும் சுடுகாடு செல்ல
மாமாவின் பிணம்
மாரடித்துச் சலித்ததும்
ஒரு மழைநாளில்தான்

விழும் பிணங்கள்
ஓடைப்பாலமின்றி ஒவ்வொரு ஆண்டும்
மயானத்தவமிருக்கும் சலிப்பின்றி நனைந்தபடி

அதிகார வாக்குறுதி
மறியல் தோறும் மழையில் கரைந்தபடி

குடலைக்குப் பதிலாக
குடைவிரித்து நடந்தாலும்
கனவின் ஓட்டம்போல்
ஒரே இடத்தில் சுழன்று கண் விழிக்கும்

=====================================
பி. மதியழகன்/ வியூகம் கொள்ளும் காய்கள்/ 43/ காலச்சுவடு


40/மழைநீரில் பூ ஆய்ந்து
 

மழைநீரில் பூ ஆய்ந்து
மழைநீரில் பூ ஆய்ந்து
நிற்கின்றேன் தெருவொன்றில் தழைத்தபடி

பிறகென்ன
வீட்டிற்குப் போகவேண்டும்
மழை விடுகின்றபாடில்லை
கொழுக்கிறது
நீர்த்தடியர்கள் குதித்து
மண் அதிர்வதுபோல்
வெடிச்சத்தம் கேட்க

யுத்தம் ஓய்ந்துவிட்ட நாடு இது
என்று சொன்னேன் எனக்குள்ளே

சத்தம்போட்ட ஆகாயம்
சமாதானப்புறா ஒன்றை
என் கண்ணெதிரே பறக்கவிட்டதைப் போல
ஒரு மின்னல்
பாட்டுப்பாடியது காற்று.

கொழுப்புக் கரைந்த மழை நூல்கள்
சிக்கி ஒரு காகம்
சிறகடிக்க

நான் புறப்பட்டபோது என்னில் உதிர்த்த துளிர்
தின்ன
வருகிறது மாடு
அதன் மேய்ச்சலுக்கு என்று துளிர் ருசியா

மனிதனாகிவிட்டது கறுத்த மிருகம்
=================================
சோலைக்கிளி/பகல் தண்டவாளத்தில் ரயில்.13/ காலச்சுவடு








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்