மழையும் மழைசார்ந்தனவும் -6


 மழையை நினைத்துக்கொள்ளுதல் என்பது மழையின் காலத்தை நினைத்துக்கொள்ளுதல் தான். மழையின் காலம் என்பது ஈரத்தின் காலம் . ஈரத்தை விரும்புவதும் வெறுப்பதுமான மனநிலையில் மழை பெய்யத்தொடங்குகிறது. இது ஆறாவது பத்து. இப்பத்தில் யாழன் ஆதி மண்குதிரை சித்தாந்தன் அப்பாஸ் குமரகுரு பூமா ஈஸ்வரமூர்த்தி பொன்.தனசேகரன் மனோமோகன் அன்பழகன் செந்தில்வேல் கோ.நாதன் ஆகியோரின் மழைக்கால நினைவுகள் குறித்து வாசிக்கலாம்
51/நீரோவியம்

நீர்சுமந்துவரும்
மேகமென நீ
வரும்போதெல்லாம்
எந்நகரத்தில் மழை வருகிறது

மழைத்துளிகளைப்
பூக்கள்
சூடிக்கொள்கின்றன
மண்குழைந்து
மிருதுவாகிறது
தார்ச்சாலைகள்
கருஞ்சுத்தமாய்
ஒளிர்கின்றன

விரல்களாய்
நீண்டிருக்கும்
மரங்களடர்ந்த
என் மலைகள்
மிகவும்
மகிழ்ச்சியடைந்தவைகளாகின்றன

நீரற்ற ஆற்றின் பரப்பு
குளிர்ந்து விடுகிறது
கரும்பச்சை இலைகளில்
நீர்த்திவலைகள்
சேகரித்து
நிலம் சொரிகிறது என்
சிறுகாடு
செம்மண் நிறத்தில்
நுரைதள்ளும் நீரோட்டி
உயிர்க்கிறது கானாறு
நீரின்மேல் நீண்ட
நாட்களுக்குப்பிறகு
பறக்கின்றன

கண்காணாமலிருந்த பறவைகள்
நனைந்த உடைகளுடன்
ஈர முடியினைப்
பின்தள்ளி
தன் கப்பலை நகர்த்துகிறாள்
கயல்விழி மகள்
நீயும் நானும் செல்லும்
அந்தக் கடைக்கு
வெளியே
குடையை வைத்துச்
செல்கிறோம்

வாங்கிய மழைநீரை
நம்மிருவரின்
ஓவியமாய்த்
தேக்கியிருக்கிறது அக்குடை
செவ்வண்ணம் கூடிய
தரையில் தளும்பும்
அவ்வோவியத்தில் நீ
எனக்கு முத்தம்
தருகிறாய
ஈரமாகிக் கொண்டேயிருக்கிறது
ஆகாயமும் பூமியும்.
================
யாழன் ஆதி
===================




52/வடக்கே கனமழை பெய்கிறது


மழை பெய்வதாகக் கூறி
சிதறி ஓடுகிறார்கள்
வீடு திரும்பும் பள்ளிக்குழந்தைகள்

தூறல் ஆரம்பித்துவிட்டதாகத்
தப்பி
வெளியேறிக்கொண்டிருக்கிறேன்

விருப்பப் பாடலை
ஒலிபரப்பும்
பண்பலைத் தொகுப்பாளினி
வடக்கே கனமழை பெய்வதாகச்
சொல்லிக்கொண்டிருக்கிறாள்

ஆயிரம் துளிகள்
விழுகின்றன
பல்லாயிரம் துளிகள்
விழுகின்றன
என் வீட்டிற்குச் செல்லும்
சாலையை அடைவதற்குள்
லட்சம் துளிகள்
விழுந்து தெறிக்கின்றன

‘அடர்த்தியான மழை’ என்னும்
பத்திரிகைச் சொல்
நினைவுக்கு வருகிறது

ஒரே ஒரு துளியை மட்டும்
உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு
பாதுகாப்பாக வீட்டிற்குள்
அடைந்துகொள்கிறேன்
இனி என் தனிமை தீர
பேசிக்கொண்டிருப்பேன்
அந்த ஒரு துளியோடு
=============================================
மண்குதிரை / 'புதிய அறையின் சித்திரம்' - பக்: 17



53/பாறைகளுக்கிடையில் விழித்திருப்பவனின் இரவு

இந்த இரவு
பிணமாய் விறைத்துக்கிடக்கிறது
காற்று உருகி இலைகளில் வழிகிறது
மழை இருளிலேறித் தாண்டவமாடுகிறது.
உரசும் தீக்குச்சியை உரச மூண்ட தீ
பெருங்காடாய் எரிகிறது.

திசைகளின் முரண்களிலிருந்து
ஈனத்தில் பிறப்பெடுக்கும் வனமிருகங்களின்
ஒழுங்கற்ற ஒலிக்குறிகளை
வாசித்தபடி புணரத்தொடங்கினோம்
ரூபங்களின் இணைவில்
பெருகிய மோகத்தின் உச்சத்திலிருந்து
வடிந்து வற்றத்தொடங்கியது பசி.

தீயற்ற வெளி என்மீது கவிகையில்
எம் அந்தரங்கங்களில்
இதழுதிர்த்த காதல் சருகின் படபடப்பு

மழை தாண்டவமாடுகின்றது
இரகசியக் கால்வாய்களில் பெருகும் வெள்ளம்
பாறைகளை இழுத்துச் சுழிக்கிறது
எம் படுக்கையின் கீழ் கடல்
நீ உன் கடலில் இறங்கி நடக்கலானாய்
நான் என் கடலில் இறங்கி நடக்கத்தொடங்கினேன்

வெறும் படுக்கைதான்
தெப்பமாக மிதந்துகொண்டிருக்கிறது.
====================================
சித்தாந்தன்/ துரத்தும் நிழல்களின் யுகம்/ 46



54/மழை
 
1.
மழையின் போதை
விரட்டுகிறது.
தன் பிரக்ஞைக்கு
வழியெங்கும்
பெருகி ஓடும் தண்ணீரில்
மிதக்கிறது
எனது சுவாசம்
2
கனவில்
ஆப்பிள் பழத்தைக்
கடித்துத் திரிகிறேன்
கீழே விழுந்த
ஆப்பிளின் சிகப்புநிற
புஸ்தகத்தில்
நடந்து திரிகிறான்
துப்பாக்கி ஏந்திய
மனிதன்
3
மழை பெய்து கொண்டிருக்கிறது
குளிரில் நனைந்தபடி
மழையின் வாசனை கையில்
போர் விமானங்களின்
வார்த்தைகளைப்
பத்திரமாய்
ஒளித்து வைத்திருக்கிறேன்
உனக்கு வேண்டாம்
அவைகள்
பிச்சிப்பூவின் வாசனையில்
உறங்கிக் கொண்டிருக்கிறது
 
அப்பாஸ்/முதலில் இறந்தவன்/உயிர் எழுத்து/ 62


55 / மழைத் தொட்டி
================
மழையைப் பிடித்து
தொட்டியில் ஊற்றி வளர்க்கிறேன்
நான் வளர்க்கும்
மழை தின்று வளர்கிறது பாசி
மழை தின்ற பாசியைப்
புசித்து வளர்கின்றன மீன்கள்
"மீன்களை ஏன் தொட்டியில்
வளர்க்கிறாய் அப்பா?
அவை கடல் குளம்
குட்டை ஏரி போன்ற
நீர் காடுகளில் அல்லவா
வளர வேண்டும்"
என்று கேட்கிறான் மகன்
நான் வளர்ப்பது
மழையை என்றும்
மழை புசிக்க மீன்கள்
என்றும் சொன்னால்
அவனுக்குப் புரியுமா?
============================
குமரகுரு/மணல் மீது வாழும் கடல்/ அகநாழிகை /ப.65



56/
===

மொத்த
வானமும் இருண்டு
இடிமின்னலை சேர்த்துக்கொண்டு
ஆசைதீர மழைபெய்தது
கடல்மீது

சிறிது
நேரத்திலேயே காற்று
சுழன்று சுழன்று

பெருங்காற்றாய்
அலைகளோடு ஆரவாரம்
கொண்டது

வலது இடது பக்கமாய்
சாய்ந்து சாய்ந்து
மூச்சுத் திணறிய கப்பல்
விளக்கெல்லாம்
ஒரே கணத்தில் நின்றுபோக

கட்டுமானங்கள் கலைய
பெருங்கூக்குரலோடு
ஆழந்து மூழ்கியது கடலுக்குள்

ஒரு கரையிலிருந்து
மறுகரைக்கு நகர
தீர்மானித்தவர்கள்
ஒருவர் கூட மீதமில்லாமல்
================================================
பூமா ஈஸ்வரமூர்த்தி/ தினசரி கொஞ்சமாவது/ ப.9-10


57/விடியல்
 
இரவிலும்
விழித்திருக்கும் மரங்களினூடே
மெல்லச் சிலிர்த்தது காற்று
கரையேறத் துடிக்கும் அலைகள்
குளத்தில் கலங்கியது நிலவு
தூரத்தில் முழக்கம்
கண் சிமிட்டியது மின்னல்
ஓடி விளையாடிய கருமேகங்கள்
வியர்த்துக் கசிந்தன
நனைந்த பூமியை
மெல்லத் துவட்டி எழுந்தது
காலையில் சூரியன்
===================================
புகையும் காலம்/ பொன் தனசேகரன்/




58 /கூழாங்கல்
 
மழை ஓய்ந்த மரத்தடியில்
கிளை உலுக்கி விளையாடுகையில்
இன்னொருமுறை மழை பெய்கிறது

தூக்கம் முழுக்க
கனவுகளெனப் பெய்துவிட்டு
அதிகாலை மொட்டைமாடி வடிகுழாயில்
இன்னொருமுறை மழை பெய்கிறது.

பேருந்துச் சக்கரத்தில்
நசுக்கும் மழையின் குருதிக்கறை
அவ்வப்போது ஆடையெங்கும்

சிமெண்ட் ஓடுகளில் பெய்யும்போது மட்டும்
கூழாங்கல் ஆகிவிடுகிறது மழை
 
மனோமோகன்/ பைத்தியக்காரியின் பட்டாம்பூச்சி/ 46/ புதுஎழுத்து


59
==


ஆயிரம் கால்களுடன் நகர்ந்து வரும்
கருப்பு சிவப்பு நிற மரவட்டைகளை
சிறு குச்சியினால் தொட்டு
சும்மாடு போலாக்கி மகிழ்கின்றனர் சிறுவர்கள்

வயிற்றினால் நடந்து வரும்
நத்தைகள் இழுக்கும் கோடு
இதயத்தில் நீள்கிறது

என் கவலைகளை எல்லாம்
தட்டான் பூச்சிகளின்
மெல்லிய சிறகுகளில் ஏற்றி
அனுப்புகிறேன்

வளையில் வெள்ளம் புக
வயலில் திரியும் பாம்புகளை கொத்த
இறக்கைகளை அசைக்காமல்
வானத்தில் வட்டமிடுகிறது பருந்து

ஆற்றில் சீறும் புது வெள்ளத்தை எதிர்த்து
உற்சாகத்துடன் நீந்தும் மீன்கள்
அகத்தி வேம்பு பசுந்தழை கரைந்த
இந்த தொழி வாசம் என் நாசிக்கு
எத்தனை இதமாய் இருக்கிறது

இந்த கூதிர் காலத்தில்
உன் அணைப்பு என்னுள்
சூரியன்களை கடத்துகிறது தோழியே ....
இந்த மழை எப்படி
எனக்கு மிகவும் பிடிக்காமல் போகும் ?

வான் பார்த்து
சில நொடிகள் இமைக்க மறந்து
வந்து விழும் மழைத் துளிகளை
விழிகளில் ஏந்திக் கொள்கிறேன்
-------------------------------------------------------
அன்பழகன் செந்தில்வேல்



60 /காடுகள் நகருக்கு திரும்புகின்றன.
 
பெருமழைக்கு பின் எனது வீட்டு
முற்றமெல்லாம் வெள்ளக்காடு சுற்றி வளைக்கின்றன

கதவுகளின் வாசல் வழியே நதிகள்
சீமெந்து தரைகளில் தெளிந்து ஓடுகிறது
மேல் தளம் அறைகளில் நிறையும் நீர்ச்சுனை
சுவர் மீது இறங்கி சாளரத்தின்
கம்பிகளில் அருவிகளாகவே கசிகிறது.

எனது குழந்தைகளின் கரங்களிலிருந்து
நீர்ப் பாம்புகள் உயிரில் அசைகின்றன.
பாடப்புத்தகங்களிலிருந்து பிரிந்த காகிதம்
பள்ளிக்கூடம் மறந்து படகாய் அலைகின்றன.

வேரோடு பிடுங்கப்பட்ட தாவரங்கள்
வீடெங்கும் காடுகளைத் தோற்றுவிக்கிறது.
மீன்களும் வலை விரிக்கப்படாமல்
கறி சட்டியில் துள்ளிக் குதித்து நிறைகின்றன.

வனத்தின் மணல் குவியல் தெருக்களில்
வேலிகளை உடைத்து விரிகின்றன
வனம் விட்டகன்ற பறவைகள்
எனது கட்டிலின் பஞ்சில் சயனம் கொள்கிறது.

ஒவ்வொரு மழை நீரும் கடலாகலாம்,
ஒவ்வொரு மழை நீரும் குளமாகலாம்,
ஒவ்வொரு மழை நீரும் நதியாகலாம்,
ஒவ்வொரு மழை நீரும் வீடாகலாம் ? நகராகலாம் ?
=======================================================
கோ.நாதன் /காலத்தின் யாக்கை நிணம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்