பறவைகளின் பாடுங்காலம் -சுகிர்தராணி



மக்களின் இயங்குவெளியாகவும் புழங்குதளமாகவும் இருப்பது மொழியே. அம்மொழி பேசும் மக்களின் அறிவு ஊற்றாகவும் அதன் வழியே செயல்படுதளத்தை அமைத்துக் கொள்ளும் வாயிலாகவும் விளங்குவது மொழியே. நம் கருத்துகளை பிறர்க்குத் தெரிவிப்பதற்கும், பிறர் கருத்தைத் நாம் அறிந்து கொள்வதற்கும் உதவும் மொழியில், மக்களின் வாழ்க்கை, வாழ்வியல் முறைகள், வாழ்வில் பின்பற்றப்பட வேண்டிய அறங்கள், காதல், காமம், வீரம் போன்றவற்றை வெளிப்படுத்த வேண்டி, மன மகிழ்ச்சிக்காகவும் சமூக நோக்கிற்காகவும் இலக்கியங்கள் படைக்கப்பட்டன. ஆரம்பத்தில் அவை செய்யுள்களாக எழுதப்பட்டன. நீண்ட நெடுங்காலமாக அவை செய்யுள் மரபாகவே தொடர்ந்து வந்தன. அந்த வகையில் தமிழில் சங்க இலக்கியம் என்பது மிகப்பெரிய கொடை. உலகம் முழுமைக்கும் அறத்தை, வீரத்தை, காதலைப் போதித்த மிகப்பெரிய வாழ்வியல் இலக்கியம் அது. அதைப் படைத்தவர்கள் பெரும்பான்மையோர் ஆண்கள். அதில் பத்தில் ஒரு பங்கினர் பெண்கள் என்பது ஆய்வுகள் மூலம் வெளிப்படையாக அறியப்பட்டாலும் இன்னும் கூடுதலாக இருந்திருக்கலாம் அல்லது இருந்திருக்க வேண்டும் என்பதே நம் பெருவிருப்பமாக இருக்கிறது.
சங்க இலக்கியத்தில் தமக்கான பங்கீட்டில் அல்லது தமக்கான வெளியில் பெண்பாற்புலவர்கள் நாற்பத்தியிரண்டு பேரும் தமக்கான அக உணர்வுகள், காதல், காமம், புறவாழ்வு போன்றவற்றைப் பற்றி மட்டுமல்ல ! அவற்றைப் பிற பெண்களுக்கானதாகவும் பொருத்திப் பார்க்கின்ற படைப்புகளை அப்போதே எழுதியிருப்பது மிகச் சிறப்பானது. ஒளைவயார். வெள்ளிவீதியார். நன்முல்லையார். காக்கைப் பாடினியார், ஒக்கூர் மாசாத்தியார் என நீளும் பெண்பாற்புலவர்களின் பட்டியல், பெண் எழுத்துகளின் அல்லது பெண்ணிய எழுத்துகளின் பட்டியலாகவும் துவங்கியிருப்பது கண்கூடு.

பெண்ணியம், பெண்ணிலைவாதம், பெண் உரிமை, பெண் விடுதலை போன்ற சொற்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முன்பே - சில நாற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றி வளர்ந்து வந்தவையே. ஆனால் அவற்றின் நிழலோ சாயலோ, எவையுமே இல்லாத சங்க காலத்தில் சங்கப் பெண்பாற்புலவர்கள், பெண்ணியச் சிந்தனையோடும் எழுதியது வியப்பளிக்கிறது. 'முட்டுவேன் கொல், தாக்குவேன் கொல்' என வெளிப்படையாகக் காதலின் துயரத்தைச் சொல்வதிலிருந்து, ‘அல்குல் அவ்வரி வாடத் துறந்தோர்' என்பதுவரை தம் கருத்துகளைப் பெண்பாற்புலவர்கள் வெளிப்படையாகவே பதிவு செய்து வந்திருக்கின்றனர். முழுமையாகப் பெண்ணியம் என்பதை உள்வாங்கிக் கொண்டு எழுதவில்லை என்றாலும் அதன் தோற்றுவாயாக அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

சங்க இலக்கியத்தில் பொதுத்தன்மையோடு பார்க்காமல். பெண்களின் பங்களிப்பு என்ன? அவர்கள் எதைக் குறித்து எழுதியிருக்கிறார்கள்? அதற்கான தேவை என்ன என்று நாம் வகைப்படுத்தும்போதே பெண் எழுத்து ' என்பது நம் முன்னால் வந்து விழுந்து விடுகிறது. அதன் தொடர்ச்சியாகப் பெண் எழுத்து, பெண்ணிய எழுத்து, பெண்கள் எழுதும் எழுத்து எனப் பல வகைப்பாடுகள் தோன்றிவிட்டன. எவை எப்படி இருந்தாலும் இவை அனைத்துமே பெண்களுக்கானவை என்பதையே நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

இவற்றை ஒட்டியே எழுத்துகளில் பெண் எழுத்து' என்ற ஒன்று தேவையா? என்ற விவாதமும் இன்றுவரை நடந்து கொண்டிருக்கிறது. உலகில் ஒடுக்கப்பட்ட இனம், அல்லது மையத்திலிருந்து விளிம்பை நோக்கித் தன்ளப்பட்ட மக்கள், அதிகாரமற்ற மக்கள், இவர்களின் குரல்கள் கறுப்பு இலக்கியமாக, தலித் இலக்கியமாக, புரட்சி இலக்கியமாக மாறும்போது அவர்களின் சரிபாதி எண்ணிக்கைக்கையில் இருக்கக் கூடிய பெண்களின் வாழ்வையும், வெளியையும் தெரிவிக்கும் எழுத்துகளைப் பெண்கள் இலக்கியமாக -பெண் எழுத்துகளாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கணக்கில் கொள்ள வெண்டும். அதுதான் நியாயமாக இருக்க முடியும்.

இப்படித் தம் விடுதலைக்காக, அதிகாரத்தை உடைப்பதற்காக எழுதப்படும் பெண் எழுத்து என்பது ஆண்களால் எழுதப்படுவதா? அல்லது பெண்களால் எழுதப்படுவதா? என்னும் கேள்வியும் இன்றுவரை எழுந்து கொண்டே இருக்கிறது. இதுவரை எழுதப்பட்ட எல்லா இலக்கியங்களின் நோக்கம் என்பது உலகம் முழுமைக்கும் பொதுவானது, பொருந்தக்கூடியது. மானுட மாண்பு, உயிரிரக்கம், இயற்கை நேசிப்பு, சமத்துவம்,சுதந்தரம் போன்றவையே! மானுட இனம் உய்ய, யார் வேண்டுமானாலும் எழுதலாம். இவர்தான் எழுத வேண்டும் என்ற நிபந்தனையில்யை. நிபந்தனை இருந்த காலம் மலையேறிப் போய்விட்டது.

எனவே பெண்களுக்காக ஆண்களும் எழுதலாம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, ஒடுக்கப்படும் அதிகாரத்திலிருக்கிறவர்களும்கூட தன் அத்தனை அதிகாரங்களை, சாதியை, மதத்தை உதறித் தள்ளிவிட்டு முழு நிர்வாண மனதோடு ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று எழுதினால், அது ஏற்றுக் கொள்ளக்கூடியதே. அதுபோலப் பெண்களுக்காக ஆண்களும் எழுதலாம். ஆனால் பெண் எழுத்துகளைப் பெண்களே எழுதும்போது அது நூறு சதவீதம் உண்மையானதாகவும் அனுபவித்ததை அப்படியே வெளிப்படுத்தக்கூடியதாகவும் அமையும்.ஆகவே பெண்களுக்காகப் பெண்களே எழுதும் எழுத்துகளே பெண் எழுத்து எனத் துணியலாம். ஏனெனில் ஒடுக்குமுறையை அடிமைத்தனத்தை அனுபவிப்பவர்களிடமிருந்து வரும் எழுத்துகள் விடுதலை வேட்கையுடன் உத்வேகத்துடன் வெளிவரும். அவைதான் பெண்களை அடுத்தபடிக்கு அழைத்துச் செல்லும் நகர்வுகள்.

இப்படிப் பெண் எழுத்து என்பது சங்க இலக்கியத்திலிருந்து சமகால இலக்கியம் வரை கடந்து வந்த பாதை நீண்டது; நெடியது. சங்க இலக்கியத்தில் துவங்கி பக்தி இலக்கியத்தில் பயணித்து சமகால இலக்கியமான பாலினச் சமத்துவம், பெண் உரிமை, பெண் விடுதலையில் நிற்கிறது.செய்யுள் மரபு என்பதிலிருந்து விடுபட்டு நாவல், சிறுகதைகள்,நவீன கவிதைகள், அரசியல் சமூகக் கட்டுரைகள் எனப் பெண் எழுத்துகளின் பாய்ச்சல் அபாரமானது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து அரசியலில் அடியெடுத்து வைத்த பெண்கள், அரசியல் உள்நுழைவு தந்த வெளிச்சம், சமூகப் பார்வை,பெண் உரிமைகள், பெண்கல்வி குறித்த புரிதல்கள் போன்றவற்றைக் கொண்டு நாவல்கள், சிறுகதைகள் புதுக்கவிதைகள் என எழுத ஆரம்பித்தனர். எழுத இயலாத பெண்களுக்கு இவர்களின் எழுத்துகள் ஓர் ஆசுவாசத்தைத் தந்தன. நம்பிக்கையையும் தைரியத்தையும் தந்தன. அது பெண்ணிய எழுத்தா? பெண் எழுத்தா? என்பதைக் காட்டிலும் பெண்கள் எழுதும் எழுத்துகள் என்பதே அக்காலக்கட்டத்தில் மிகப்பெரிய திறப்பாக இருந்தன. பெண்களின் எழுத்துகள் என்பவை பெண்களின் அன்றாடச் சிக்கல்களை, வாழ்வியலைப் பேசக்கூடியவையாக இருந்தன. அவை இலக்கியத் தரமானதா இல்லையா என்பதைவிடப் பெண்களின் இன்னொரு உலகத்தைக் காட்டக்கூடியதாக இருந்தன என்பதையே நாம் கண்ணுற வேண்டும்.

இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து எழுதப்பட்ட பெண் எழுத்துகளில் தெரிந்தோ தெரியாமலோ பெண்ணியக் கூறுகள் நிறைந்து காணப்படுகின்றன. தொண்ணூறுகளில் அவை இன்னும் கூர்மையடைந்து பெண் விடுதலை, உடல் அரசியல், உடல்மொழி, பாலினச் சமத்துவம்,பெண் விடுதலை பெறுதல் போன்ற இடங்களில் வந்து நிற்ககின்றன.

இப்படி எழுதப்படும் பெண் எழுத்துகளை ஆண் எழுத்துகளோடு ஒப்பிடுவதும் பேசுவதும் நியாயமானதாக இருக்காது. ஏனெனில் தொடக்கக்காலத்திருந்தே ஆண்களுக்குக் கிடைத்த வெளியும் சுதந்தரமும் வெளிப்பாட்டுத் தன்மையும் பெண்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே கிடைத்த இடங்களைப் பற்றிக் கொண்டு எழுத ஆரம்பித்த சங்கப் பெண்பாற்புலவர்களின் வழித்தடங்களில் பெருவாரியான பெண் எழுத்தாளர்கள் இன்றுவரை பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே பெண் எழுத்துகள் என்பவை தனித்துவமானவை,  தனித்து அடையாளம் காணப்பட வேண்டியவை, தனித்து அடையாளப்படுத்தப்பட வேண்டியவை.

பரந்துபட்ட வாசிப்புத் தளத்தில் மட்டுமல்ல! அரசியல்,சமூக,பொருளாதாரப் பண்பாட்டுத் தளத்திலும் பெண் எழுத்துகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கின்ற தேவை இருக்கிறது. ஏனெனில் இந்த நிறுவனங்கள்தான் பெண்களின்மீது செல்வாக்கையும் அதிகாரத்தையும் செலுத்தி வருகின்றன. இவற்றைக் கட்டுடைக்கவும், ஆண்மைய நிறுவனங்களின் அதிகாரத்தைச் சிதைக்கவும் பெண் எழுத்துகள் பரவலாகச் சென்று சேர வேண்டும்.

இத்தகையப் புரிதல்களோடு பெண் எழுத்துகளைப் பல பதிப்பகங்கள் வெளியிடுகின்றன. அவற்றை வாசித்துவிட்டுப் பாராட்டுகளும் விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. வாசகர்களை உருவாக்குகின்றன. எனினும் அதிகமாக வாசகர்களை அடைந்து எழுத்தின் நோக்கம் நிறைவேறுமானால் அதைவிட மகிழ்ச்சி வேறில்லை. என்றாலும் பெண் எழுத்துகள் வாசிப்பாக மட்டுமே நின்றுவிடாமல் அவற்றின் பின்னுள்ள அரசியல்கள் அல்லது அரசியலற்றவை, அவற்றோடு அப்படைப்புகள் கொண்டு செல்லப்படுமானால் அவை பேசும் அரசியலுக்கு நியாயம் செய்வதாக இருக்கும்.

தமிழில் வெகுசிலரே இப்படியான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓர் ஆய்வு நோக்கில் பெண் எழுத்துகள் பார்க்கப்படும்போது, அவற்றுக்குள்ளிருக்கும் வாழ்வின் சாரம்சங்கள் ஒவ்வொன்றும் பழுத்த கனியிலிருந்து வெளியேறும் விதைகளைப்போல வெளிப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் ஓராயிரம் கதைகளையும் ஓராயிரம் வாழ்வியல் அறங்களையும் நமக்கு உணர்த்துகின்றன. ந.முருகேச பாண்டியன், பா. ஆனந்த குமார், சுந்தர் காளி, தமிழவன், க.பஞ்சாங்கம், கரிகாலன், அ.ராமசாமி என வெகுசிலரே பெண் எழுத்துகளை அதன் அத்தனை ஒளியோடும் வலியோடும் அணுகி எழுதியிருக்கிறார்கள். பெண்களில் அரங்க.மல்லிகா, அம்பை,குட்டிரேவதி ஆகியோரும் பெண் எழுத்துகளை எழுதுகிறவர்களைப் பற்றி எழுதுகிறார்கள்.

பெண் எழுத்துகளைப் பற்றி எழுதும் இவர்களை விமர்சகர்களாகப் பார்க்காமல், அவற்றை முன்னகர்த்திச் செல்கின்ற சாரதிகளாகவே நான் பார்க்கின்றேன். அந்த வகையில் இவர்களுள் குறிப்பிடத்தக்கவரான பேராசிரியர் அ.ராமசாமி, ‘ பெண்ணிய வாசிப்புகள்- எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்' என்னும் நூலை எழுதியிருக்கிறார். இதன் தலைப்பே இந்நூலின் தேவையை அவசியத்தை அது பேசும் அரசியலைச் சொல்லி விடுகிறது.

அ.ராமசாமி, பாண்டிச்சேரி பல்கலைக்கழக நிகழ்கலைப்பள்ளியில் விரிவுரையாளராகவும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணிபுரிந்தவர். தாம் பணிபுரிந்த காலத்தில் சமகாலத்தமிழ் இலக்கியம், பெண்கள் இலக்கியம், தலித் இலக்கியம் குறித்த பல்வேறு கருத்தரங்குகளை நடத்தியவர். அதனூடாகப் பல்வேறு எழுத்தாளர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, எழுத்தாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே விரிவான உரையாடலைச் சாத்தியமாக்கியவர். எழுத்தாளர்கள் என்றால் வாசகர்களுக்கு இருக்கும் பிரமிப்பைத் தகர்த்தெறிந்து, அவர்களின் கைகளைப்பற்றி இயல்பாக உரையாடும் ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்தவர். இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவள் நான். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அனைவருக்கும் இது சாத்தியப்படாது. சங்க இலக்கியத்தின்பாலும் சமகால இலக்கியத்தின்பாலும் தீராக் காதலும், அவை முன்வைக்கும் விழுமியங்களை, மதிப்புகளை, தற்கால வாழ்வியல் நிலைகளின்மீது பொருத்திச் சமநிலையாக அணுகும் பார்வையும் கொண்டவர் அ. ராமசாமி என்பதால், அவருக்கு எளிதாக இது சாத்தியப்பட்டிருக்கிறது.

போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்ததோடு அங்கேயும் சில ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்தவர். ஆய்வுத்தளத்திலும், அறிவுத் தளத்திலும் இவர் இயங்குவதால் படைப்புகளைக் குறித்த மதிப்பீடுகளை, திறனாய்வுகளை மிகச் சிறப்பாக வழங்கக்கூடிய மனமும் ஆற்றலும் கொண்டவர்.

திறனாய்வு என்பதற்கும், விமர்சனம் என்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. நம்மிடையே இருக்கின்ற திறனாய்வு முறைகளும், விமர்சனக் கோட்பாடுகளும் ஒரு படைப்பின் பரப்பை, அது பயணிக்கும் காலத்தை மிக விரிவாகச் சொல்லிச் செல்லும். இது அடிப்படையானது. ஆனால் திறனாய்வு என்பது கொள்கைகளின் அடிப்படையில் அறிவுத்தளத்தில் படைப்பைப் படையலிடுவது; விமர்சனம் என்பது உணர்வுகள் தளத்தில் நின்று படைப்யை அணுகுவது. இது சரி,இது தவறு என்றில்லாமல், படைப்பைப் படைப்பாக அணுகும் ஒரு உணர்ச்சித் தளும்பலும் உண்டு.ஒரு படைப்புக்கு இவை இரண்டுமே தேவை.

இத்தகைய ஆய்வு முறைகளோடு இருபத்தாறு பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் பற்றி எழுதப்பட்டக் கட்டுரைகளை நூலாகத் தொகுத்திருக்கிறார் அ.ராமசாமி. கு.ப. சேது அம்மாளின் குலவதி சிறுகதையிலிருந்து துவங்கி ஆர். சூடாமணி, புதிய மாதவி, லறீனா எனப் பயணித்து பிரமிளா பிரதீபனின் கதையோடு முடிவடைகிறது இந்நூல். தமிழகத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்கள் மட்டுமின்றி புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள், ஈழ எழுத்தாளர்கள், சிங்கப்பூர் எழுத்தாளர்கள் எனப் பல்வேறு சமூக, பண்பாட்டுச் சூழலில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற எழுத்தாளர்களின் சிறுகதைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

தனித்தனியே இந்தக் கட்டுரைகளை வாசித்ததைவிட ஒட்டுமொத்தமாக வாசிக்கிற போது சிறுகதைகளின் வழியாக பெண்களின் உலகம் எவ்வாறு பயணித்துச் சமகால இடத்தை வந்தடைந்திருக்கிறது என்பதைக் காடுமலை மேடுபள்ளப் பயணமாக விவரித்திருக்கிறார். உண்மையில் மிக பிரமிப்பாக இருக்கிறது. இதுதான் பெண்ணியம், இதுதான் பெண் எழுத்து என்று எந்த வரையறையும் முன்முடிவோடு ஏற்படுத்திக் தொள்ளாமல், சிறுகதையின் போக்கோடு பெண்சிந்தனையை இணைத்தும் பிணைத்தும் கொண்டு செல்வது சிறப்பு. அடர்ந்த காட்டுவழியே பயணிக்கும்போது நாம் எதிர்கொள்ளும் குளிர்ச்சியும், இருட்டும் அமைதியும்போல, இக்கட்டுரைகளை வாசிக்கும்போது மேற்காண் சொற்களின் பொருளை உணர முடிந்தது.

இந்தியக் குடும்ப அமைப்பு என்பது பெண்களுக்கு வேறு எந்தச் சிந்தனையும் எழாமல், குடும்பம், உறவுகள் என்ற சிறைக்குள் சிறைப்படுத்தி, அவர்களைப் புனிதர்களாக்குவதன் மூலம் ஆணின் அதிகாரத்தை அவர்களின்மீது செலுத்துவதற்கு அது காரணமாக இருக்கிறது எனக் கு.ப. சேது அம்மாளின் குலவதி சிறுகதையை ஆய்வு செய்கிறார்.

இலக்கியம் இயற்றப்படுவதன் நோக்கம் என்பது மனமகிழ்ச்சிக்கோ காட்சிப் பொருளாக எண்ணுவதற்கோ அன்று, முதன்மை என்பது வாழ்கிறவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் அது நம்பிக்கையை ஊட்ட பேண்டும். 'இத்தனைக்குப் பிறகும் ஒரு பூ மலரத்தானே செய்கிறது' என்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் வரிகள் நம்முள் ஒரு சிறு புன்னகையை நம்பிக்கையை ஏற்படுத்துவது போலவே லட்சுமியின் எழுத்துகள் செய்வதாக, அவரின் ஒட்டுமொத்த சிறுகதைகளின் சாரமாக குறிப்பிடுகிறார்.அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்விடாமல் தடுப்பன சமூக விதிகளே. அந்த சமூக விதிகளை மீறுவதற்கான முன்னெடுப்புகளே விடுதலையின் பாடுகளாக இருக்கின்றன என்பதைப் பாமாவின் சிறுகதை தாலியே வேலி சிறுகதை மூலம் முன்வைக்கிறார்.

இப்படி இருபத்தாறு பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை எடுத்துக் கொண்டு, அக்கதைகளின் பாத்திரங்கள் வாயிலாக நம்பிக்கை, பெண்விடுதலை, பெண் உரிமைகள், பெண்களுக்கான சமூக விதிகளைக் கேள்வி கேட்கத் துணியும் தெளிவு, பெண்ணுக்கான வெளி, தம்முடலை தாமே உணர்தல் என்னும் உடல் அரசியல், பெண்களின்மீது போர்த்தப்பட்டிருக்கும் புனிதப் போர்வையை உடைத்தல், முடிவெடுக்கும் திறனைக் கைக்கொள்ளும் வழிகள், ஆண்களின் அதிகாரத்தை அசைத்தல், காதலை மட்டுமல்ல காமத்தையும் அறிவித்து நிறைவேற்றிக் கொள்ளுதல், தம்மீது செல்வாக்கினைச் செலுத்தக்கூடிய நிறுவனங்களை எதிர்த்துக் குரல் எழுப்புதல், பெண் என்பவளும் ஆணைப்போல ஓர் உயிரி என சமத்துவத்தைக் கோரும் குரல் என முன்வைப்பதை மிகச்சிறப்பாகத் திறனாய்வு செய்து இக்கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

முன்னர் பொதுவுடைமைச் சமூகத்திலிருந்த பெண் சுதந்தரமும் உரிமையும் மீண்டும் காண விழையும் ஆவலையும், பெண்கள் தம் வெளியை உணரும் தருணங்கள் கனியவும் எழுதப்பட்டிருக்கும் இப்பெண் எழுத்துகளைச் சரியாக உள்வாங்கிக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகள், ஆணாதிக்கச் சமூகத்திற்கும், தந்தைவழிச் சமூகத்திற்கும் ஒரு மாற்றுச் சிந்தனையைக் கையளிக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. இந்நூலைப் பெண்களைவிட ஆண்கள் அதிக எண்ணிக்கையில் வாசிக்க வேண்டுமென்பதே என் விருப்பம். பெண்களின் சிறுகதைகளைத் தொடர்ந்து பெண் கவிஞர்களின் படைப்புகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளையும் விரைவில் நூலாசிரியர் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன். ஏனெனில் கவிதைதான் நம் மொழியின் உச்சமல்லவா? அவரின் கவிமனமும் பெண்கவிதைகள் குறித்து அமையுமானால் மட்டற்ற மகிழ்ச்சி. அ.ராமசாமி அவர்களுக்கு அன்பும் வாழ்த்துகளும்.

அன்புடன்

சுகிர்தராணி, இலாலாப்பேட்டை

23.12.2023





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்