மழையும் மழைசார்ந்தனவும் -10

மழை 100 என முடிக்க நினைத்த இந்தத் தேடல் 102 உடன் முடிந்துள்ளது. வசனகவிதை, புதுக்கவிதை, நவீனக்கவிதை என அறியப்பட்டுள்ள வடிவத்திற்குள் இப்படியான 100, 100 ஆக வெவ்வேறு தலைப்புகளில் வகைப்பிரித்துக் காட்டுவதின் மூலம் தமிழ்க்கவிதைகளை வாசிக்கமுடியும். கடைசிப்பத்தில் சுகுமாறன், ஈழவாணி,செல்மா பிரியதர்ஸன், அய்யப்ப மாதவன், பெருமாள் முருகன், எஸ்.செந்தில்குமார், ஸர்மிளா செய்யித், வா.மணிகண்டன், இளங்கோ கிருஷ்ணன், பொன்.வாசுதேவன், நிலா ரசிகன், சுகிர்தராணி ஆகியோரின் 12 கவிதைகள்.

91/ மழையில் திளைக்கும் பெருநிலம்
 
கோடைமேகம்போலப்
போகிறபோக்கில் பொழிந்து நகர்கிறாய்.

தகித்துக்கிடந்த விரகநிலம்
உன் அரைகுறைத்தூறலால்
முன்னைவிடக் கொதிக்கிறது.

ஈரஸ்பரிசத்தால் நீ கோதிய
கந்தல்கொடி கலைந்து
சிக்குவிழுகிறது

வானவில் நிறங்களுடன்
விழிகளில் சொட்டிய துளிநீர்
பார்வையில் படர்ந்து வெண்ணிருளாகிறது

தாகத்துடன் பிரியும் மண்ணிதழ்களில்
பதிந்த நீர்மை
நொடியில் வறண்டு வெடிப்புகள் மிஞ்சுகின்றன

இலைமூடிய கற்பழங்கள்
நீ குளிர்ந்து வருடியதில் குழைந்து நிமிர்ந்து
நீ பெயர்த்ததும் இறுகுகின்றன.

ஆழங்களில் கிடக்கும் வேட்கையின் அடுக்குகளில்
பரவிக்கசியும் தண்மைக்காகத் திறந்த
நாபிச்சுழல் அடைபடுகிறது.

==================================================
சுகுமாரன்/ நீருக்குக் கதவுகள் இல்லை/ உயிர்மை/ ப.11



92/ ஒரு மழைநாளும் நிசிதாண்டிய ராத்திரியும்.
...
 
இந்த ஒரு மழைநாளும்
நிசி தாண்டிய ராத்திரியும்
மனித சஞ்சாரங்களுடனான
பிரமாண்டமான இந்தத் தனிமை
அறையில் பொருத்தப்பட்ட
விஞ்ஞாபமற்ற விசனங்கள்
கொன்று வென்று துரத்துமென
நினைத்திருக்கவில்லை

மழையில் சிலநிசிகடக்க
நிசத்த நிகழ்வுகள்
நிகழ்ந்துபோயிருப்பதாகத்தான்
நினைவுறுகிறேன் உன்னோடு

மழையின் ரகஸ்ய நீளத்தில்
விண்படைகளை மண்பாணர்கட்காய்
தூதனுப்பும் காமம்
தனிமையின் கூறுகளோடிருக்க
நீண்டுகொண்டே நீண்டுகொண்டே
நின்றுவிட்ட இந்த அறை
துயரத்தை மாற்றிப்பிரிவை யோசிக்கிறது.

தெரிந்ததும் பல
விளக்கங்களை விளம்ப
வியந்தனிக்க யாருமில்லை
இந்த அறையின் விஸ்தாரம்
எமக்கான விரிசலை
விஸ்தரித்துச் செல்ல
மெல்ல வேகம் குறைந்து
மழை சாரலோடு மட்டுமே நிற்க

ஒரு ராத்திரியும் ஒரு பகலும் மாறி
தனிமை பெருகிச் செல்லும்..

===========================================================
ஈழவாணி/ஒரு மழைநாளும் நிசிதாண்டிய ராத்திரியும்/ உயிர்மை/ ப.29



93/ மழைக்குள் மறையும் சித்திரங்கள்

=====================================
எல்லாவற்றின்மேலும் பொழிகிறது மழை
குன்றுகளின் மேல் மரங்களின் மேல்
வீடு திரும்புகிறவர்களின் மேலும்
மேய்ச்சல் மைதானங்களிலிருந்து அகலும் கால்நடைகளின் மேலும்
மேலும் பெய்கிறது மழை

ஈசல்களின் இறகுகளைக் கரைத்து
கூடுகளில் நுழைந்து முட்டைகளை மூழ்கடித்து
குன்றுகளை குளத்தின் மீதும்
ஆறுகளைக் குடியிருப்பின்மீதும்
நிசப்தத்தை இரைச்சலின் மீதும்
மேலும் எல்லாவற்றின் மீதும் நின்றாடுகிறது மழை

கன்றுகளை காம்புகளிடமிருந்து
பறவைகளை மரங்களிடமிருந்து
குடியிருப்புகளை ஞாபகங்களிடமிருந்து
பாதைகளைப் பயணங்களிடமிருந்து
புதுப்பிக்கிறது மழை

வெளியெது திசையெது
இடமெது காலமெது
எல்லாமும் மங்கிக் கானலுற
வெட்டவெளிமீது
ஒருவேளை எல்லோரும் கூடுகிற பாதைகள் மீது
அங்கு கைவிடப் பட்டவர்களின்மீது
மற்றும் சுடுகாட்டுப் பிணங்கள் மீதும்
புகைப் படலம் போல் பெருகுகிறது மழை
இம்முறை
பட்டுப் போன மரச் சித்திரத்தின் மீது
இரத்தமாய் உறைந்திருந்தது மழை.

===============================================
செல்மா பிரியதர்ஸன்/தெய்வத்தை புசித்தல்/2007/



94/ சஞ்சலத்தில் பெய்யும் மழை
 
வேதனையாலும் துக்கத்தாலும் அழவேண்டும் போலிருக்கிறது
கொடிய வெயில் நகரை எரிக்கிறது
என் தனிமையில் மிகப்பெரிய சோகம் மண்டிக்கிடக்கிறது
திடீரென பெரியமழை அவளுக்கு ஏன் அப்படி நிகழ்ந்தது
என்னால் தாங்க முடியவில்லை

கூரைப்பொத்தலில் ஒழுகும் நீர்
என் தலை வெடித்துவிடும்போலிருக்கிறது
வானத்தில் இடி இடிக்கிறது
நாளின் வெப்பத்தில் குளிர்ந்த இரவில்
நீர் முட்டிய விழிகளைத் துடைக்கிறேன்
நீர் வழிவது நிற்கவிலை
இன்னும் மேகங்கள் பொழிகின்றன

இதயம் பலவாறு அழைக்கழிகிறது
அது நித்திரைக்குச் செல்ல மறுக்கிறது
என் சிறு உலகம் கண்ணீரால் பின்னப்பட்டிருக்கிறது
மூடிய வானம் திறக்கப்படவில்லை

சுகமென்பது சிறிதும் என்மனதில் எழுவதே இல்லை
ஒவ்வொரு நாளும் நான் அமைதியை
உணரமுடிவதே இல்லை
ஆகாயத்தில் மின்னல் வேறு வெட்டுகிறது

எப்போதும் பீதியூட்டும் கணங்கள்
எப்போது என்ன துயரம்
கைகூடுமென அறியமுடியவில்லை.

வாஞ்சைகொள்கிற அகமிருந்தும்
ஆட்கொள்ளும் சஞ்சலங்களைத்
தவிர்க்கவியலவில்லை
பொழியும் முகில்கள் இருக்கின்றவரை
மழை நின்றுவிடபோவதில்லை.
=========================================== ============
அய்யப்ப மாதவன்/ ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்/ உயிர்மை/ 38



95/ மழைத் திரை
 
தற்சமயம் இந்த இடத்தைவிட்டு
வெளியேற முடியாதபடி மழை வலுத்துள்ளது
நாங்கள் மழையைப்
பார்த்துக் கொண்டிருக்கிறோம்
இருக்கைகள் என ஏதுமில்லை
நின்றுகொண்டே மதுவைக் குடித்துக்
கொண்டிருப்பவன் மழைத்திரையை
விலக்கிப் பார்க்கிறான்.
அவன் சென்றடைய வேண்டிய
அறையை
அதன் சாலையை
அங்கு செல்லும் பேருந்தை
பேருந்தில் இடமற்று நின்றுவரும் பயணிகளை
மழையில் நனையாமல் வீட்டுக்குப்போ
என்று சொல்லி அனுப்பினோம்.
சாலையில் இறக்கி நடக்கிறான்
எங்கள் மேல் மழை பெய்யத் தொடங்கியது
திரையை விலக்கிவிட்டு நடப்பதுபோல
நடக்கிறான்.
காலியான பிளாஸ்டிக் டம்ளர்
கையில் ஏந்தி மழை நீரைப் பிடித்துக்கொண்டே
====================================== ===============
எஸ். செந்தில்குமார்/ முன் சென்ற காலத்தின் சுவை/ காலச்சுவடு/ ப.28



96/ ஒருபோதும் மழை
 
எங்கள் ஊருக்கு
எப்போதாவது வந்துபோகும் விருந்தாளி
மழை

நாங்கள் எந்தத் தயாரிப்பும் செய்திராத
எதிர்பாராத தருணத்தில்
திடுமென வந்து அச்சுறுத்திவிட்டுச்
சுவடு தெரியாமல் ஓடிவிடுவதுண்டு
அதிசயமாய்ப் பேசிக் கொண்டிருப்போம்.

வரவேற்பு ஏற்பாடுகள் எல்லாம்
தடபுடலாகச் செய்து வைத்திருக்கும் நாளில்
கொட்டு முழக்குடன்
புது மருமகன்போல வந்திறங்கும்
சிலநாள் விருந்தாடிவிட்டுப்
பிரியும் விடைபெற்றுச் செல்லும்
அதன் பணிவையும் மரியாதையையும்
வியந்து போற்றுவோம்

சிலசமயம் பெருங்கோபத்துடன் ஆவேசமாய் வந்து
தொடர்ந்து தங்கிக்கொள்ளும்
எந்த விரட்டலுக்கும் மசியாது
திட்டித் தீர்ப்போம் சட்டை செய்யாது
சுவர்களை இடிக்கும் பள்ளங்களை நிறைக்கும்
உன்மத்தம் கொண்டாடும் உயிர் பறிக்கும்
அழிச்சாட்டியம் செய்துவிட்டுப் பின்
நிதானமாகத் திரும்பிச் செல்லும்

எந்தப் புதையிருட்டில் போய் மூழ்குமோ
கடல் மலை கடந்து
கிளி உயிரில் போய் முடங்குமோ
சில வருசம் வரவே வராது
வருந்தி அழைப்போம்
ஒப்பாரி பாடி அழைப்போம்
மனமிரங்காத குரூர விளையாட்டு
துயர் கண்டு
கண்ணாமூச்சி காட்டிச் சிரிக்கும்

என்ன செய்தாலும்
எப்படி இருந்தாலும்
எப்போதும் நாங்கள் எதிர்பார்க்கும் விருந்தாளி
நினைத்துக்கொண்டேயிருக்கும் விருந்தாளி
மழை

ஏனெனில்
ஒருபோதும் மழை
வெறுங்கையோடு வருவதில்லை
====================================================
பெருமாள்முருகன்/ வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன் செவ்வாய் / காலச்சுவடு/ ப/45



97/ நான் மழை
 
காணாமல் போனோரின் பட்டியலில்
என் பெயர் கிடையா
இனிச்சேர்க்கவும் இயலா
இனந்தெரியாதோர், வெள்ளை வான்
பாகுபாடெதுவும் கிடையா எனக்கு

அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கோ
எதிர்க்கட்சிகளின் அறிக்கைகளுக்கோ
அச்சமில்லை
அடங்கிப்போகவும் மாட்டேன்
கைது செய்தென்னைக் கட்டுப்படுத்தவோ
தேசத்துரோகக் குற்றப்பெயரில்
நீதிமன்றில் நிறுத்தித்
தண்டனையளிக்கவோ முடியா

விசாரணைக்கழைத்தென்னைப்
பூட்சுகளால் மிதிப்பது
நகங்களைப் பிடுங்கி
நாடியுடைய அடிப்பதெல்லாம்
என்னிடம் நடக்கா

தலைகீழாய்க் கட்டித்
தொங்கவிட்டென்னை
இடித்தும் இடிக்காததுமான
மிளகாய்ச் சாத்தினுள்
முகத்தைப் புதைப்பது
ஆண்குறியின் முன் தோலைச்
சீவிப்பிதுக்கிச் சிரிப்பது
இது எதையும்
நிகழ்த்த முடியாதென்னிடம்

பதின்மூன்றாம் திருத்தமாகட்டும்
நிறைவேற்று அதிகாரம் ஆகட்டும்
என்னிடம் பிடுங்க முடியாதெதுவும்

நான்.. மழை

ஆட்டுத்தொழுவத்திலும் வீழ்வேன்
அரச மாளிகைகளிலும் வீழ்வேன்
என்னைக் கண்டு ஒதுங்கியேயாகணும்
ஆளுநர்
அரசாங்கத்தலைவர் அனைவரும்
குடைபிடித்தாகணும் எனக்கு

நான் .. மழை
வேறுபாடின்றி நனைப்பேன்.

=====================================================
ஸர்மிளா ஸெய்யித்/சிறகுமுளைத்த பெண்/ காலச்சுவடு




98/ கொட்டும் மழையில்
 
கொட்டும் மழையில்
எங்கொதுங்கி தப்பிக்க
எங்கொதுங்கி தப்பிக்க
ஓடும் ஒரு லாரியின்
சக்கரத்தினடியில்
======================= =============
இளங்கோ கிருஷ்ணன்/ பட்சியின் சரிதம்/ காலச்சுவடு/ப.33



99/ மழையை நிராகரிப்பவனின் குறிப்புகள்
 
காற்றின் வெற்றிரைச்சல்
ரகசியக் கதைகளைச்
சொல்லிக் கடக்கும்
இரவின் வெறுமையில்
பொழிகிறது பேய்மழை

தவளைகளின்
ஈரச்சமிக்ஞை புரிந்த பிச்சைக்காரி
ஒதுங்கிய
சாராயக்கடை வாசலில்
மௌனமாய் ஒடுங்குகிறது
கருநாயும்

மரங்களின் விசிறலில்
இடம் மாறும்
தெருவிளக்கின் சோடியச் சிதறல்கள்
ஜன்னல் திரையசைவில்
நுழைகின்றன

தனிமையில் கசங்கிக் கிடக்கும்
அவன்
மழையை ரசிப்பதில் விருப்பமின்றி
திரும்பிப் படுக்கிறான்

மழைக்கும் அவனுக்குமான
பந்தம் அறுந்துபோனது
தீராத காமமும்
ஓயாத மழையும்
பொய்
என்று அவள் சொன்னபோது.
=======================================================
வா.மணிகண்டன்/ என்னை உருவாக்கிய தவிட்டுக்குருவி/ காலச்சுவடு/ ப.61



100/ மழைக்காலம்
 
தளிர் கவ்வியச் செம்புறாவெனத்
தொடங்குகிறது மழைக்காலம்
முதல் துளி பட்டதும்
முன்னர் நிகழ்ந்ததை
பின் எப்போதும் நிகழாததை
எவற்றையெல்லாம்
நினைவுபடுத்துகிறது அது.
மரமல்லிகை மரத்தினடியில்
மழைக்கு ஒதுங்கியபொழுது
கண்ணிமைக்கும் நேரத்தில்
என் புறங்கழுத்தில் ஒத்தியெடுத்த
உன் முதல் முத்தம்
யாருமற்ற நீள் தெருவில்
தூணென இறங்கும் மழையோடு
நீயும் நானும் குதித்தாடி
நனைந்த ஆடையைப் பிழிந்து
உன் தலையைத் துவட்ட
உன்னுடைய வாசனை வீசும்
கைக்குட்டையால்
நீ என் முகம் துடைத்த
மிக நெருக்கமான தருணம்.
காய்ச்சலால் நான் கண்மூடிப்
போர்வைக்குள் சுருண்டிருக்க
சன்னலில் தெறித்த மழைநீரை
உன் உள்ளங்கையில் ஏந்தி
எனக்குப் புகட்டிய காதல்வலி
மூச்சுக் காற்றில் உடல் பறக்க
உன் மென்மையை கனத்தை
ஒருசேர உணர்ந்த நம் காமம்
எல்லாவற்றையும்
நினைவுபடுத்துகிறது மழைக்காலம்
நீ பிரிந்து சென்ற பின்
நான் கடக்க வேண்டிய
கோடை காலத்தையும்.
==============================
சுகிர்தராணி/ காமத்திப்பூ/ காலச்சுவடு/ ப.18-19



101/ மழை ருசித்துக்கொண்டிருக்கும்
 
மழை ருசித்துக்கொண்டிருக்கும்
விசித்திரமான இரவு இது
ஒவ்வொரு துளியாய்
பீமழையின் குருதியைப் பருகி
நினைக்கிறது இரவு
இரவின் கண்கள் ஓர்
ஓநாயின் குரூரத்தைக் கொன்றிருக்கின்றன
புலன்கள் ஒடுங்கிய அறைக்குள்
கனவுகளின் மரணச்சத்தம்
மௌனமாக ஒலிக்கும் தருணம்
மழையின் ஈரத்தில்
சில்லிடுகிறது உடல்.
ஒரு நீண்ட மௌனத்தின்
நடுவே இரவாக நீயும்
மழையாக நானும் அமர்ந்திருக்கிறோம்
========================================
நிலாரசிகன்/வெயில் தின்ற மழை/ உயிர்மை/ப.52



102 /தொடர்மழை
 
சிறு மழை பெரு மழை
அடை மழை இடி மழை
புயல் மழையென
அடிக்கடி பெய்துகொண்டுதானிருக்கிறது
உனக்கு எனக்கு எல்லோருக்குமாக

மழை பெய்வதைக் குறித்து
கவலையோடும்
கவலையேதுமற்றும்
நனைந்து மகிழ்ந்தும்
கவனமாய் தனையாமலும்
சென்று கொண்டிருக்கின்றோம்
நீ நான் எல்லோரும்

உனக்கு எனக்கும் எல்லோருக்கும்
சேருமிடமொன்று இருக்கின்றது

பிரிக்காத பரிசுபோல்
இறுக்கிய கைகளுக்குள்
தனையாமல் பத்திரமாய்
என்விரல்களை எடுத்துச்
சென்று கொண்டிருக்கிறேன் நானும்.
=====================================================
பொன்.வாசுதேவன்/ ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை/ உயிர்மை/ ப.104

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்