மழையும் மழைசார்ந்தனவும் -7


61

மழை நின்றபின் போயேன்
என்றாள் மறுபடியும் அம்மா
நிற்பதாயில்லை மழை
இருப்பு கொள்ளாமல்
இங்கும் அங்குமாய் வீட்டுக்குள் உலவினேன்
துளியில் தொடங்கி துளியில் முடிக்கும்
எளிய கலையை
களைப்பின்றி மேற்கொண்டிருந்தாள்
மழைத்தேவதை
நெடுநேரத்துக்குப் பின்
போய்வருவதாய்க் கூறி
வாசலுக்கு வந்தேன்
மழை நின்றபின் போயேன்
என்றாள் மறுபடியும் அம்மா
சொல்லாமல் கொள்ளாமல்
வெளியேறத் தெரியாத
பிள்ளையாய் இருப்பதை எண்ணி
ஆத்திரமடைந்தேன்
விருட்டென்று எழுந்து வெளியேறியபோது
ஸ்தம்பித்தார்கள்
மழையும் அம்மாவும்
அம்மாவின் கண்களில்
வளர்ந்தது ஆகாய நீலம்
கருவிழிகளில் கார்மேகத்திரள்
மழை.
அரவமின்றி இடம் மாறியிருந்தது.
துளித்துளியாய் அடுத்த பாட்டம்
பொழியத்தொடங்கியது
என் வயதுகள் கரைந்து
வாசலில் வழிந்தன
இறுதித்துளியை நோக்கி
உருகும் பனிக்கட்டியாய்
என் சரீரம் குலுங்கியது
மழை நின்றபின் போயேன்
என்றாள் மறுபடியும் அம்மா
சுவரில் மாட்டியிருந்த
புகைப்படமொன்றில்
அடைமழையைப் பார்த்து
விடாது சிரித்துக்கொண்டிருந்தார்
அப்பா.

ஜெ.பிரான்சிஸ் கிருபா/ கொங்குதேர் வாழ்க்கை/ தமிழினி/ 395



62/நீரின்றி அமையாது உலகு

 
மழைத்துளிகளெனக் கண்களிரண்டும்
உருண்டுகொண்டிருக்கின்றன
அருவியெனக் கூந்தல்
வழிந்துகொண்டிருக்கிறது
நதியென உடல்
வாழ்வைக் கடந்துகொண்டிருக்கிறது
கடலடைந்த கணத்தில்
எல்லையற்றதாகிச் சுழல்கிறது
உடலுலகு
====================================
மாலதி மைத்ரி/ கொங்குதேர் வாழ்க்கை/ தமிழினி/ 404


63/அவள் ஒன்றுக்கும் அசையாள்

வானமே கிழிந்ததுபோல்
வாரிவாரி மழை பெய்தது
காவலரணையும் மேவி வெள்ளம்
கால்பரப்பி நடந்தது
கடும்பயிற்சி எடுப்பதால்
தேய்ந்து நைந்து கிழிந்த
கால்சட்டை ஒன்றை
தைத்தவாறிருந்தாள் ஒருத்தி
ஊசியில் நூல் கோர்த்தவாறு
அவள் மெல்லச் சொன்னாள்,
வானமும் பீத்தலாய்ப் போச்சுது.
இது முடிய அதையும் நான்
பொத்தித் தைக்கப்போகிறேன்.

நிலமெல்லாம் ஊறி தடியெல்லாம் பாறி
பொறிந்து விழப்போன
கொட்டிலுக்கு முட்டுக்கொடுத்த
அடுத்தவள் முணுமுணுத்தாள்,
சனமெல்லாம் பாவம்
நனையப்போகுதுகள்

சாக்குத்தொப்பியில் மழைநீர் ஊறி
தலையெல்லாம் கனக்க,
கருவியோடு தானும் நனைந்தே
குளிரில் பல்கிடுக்க,
மரத்தின் மறைவிலிருந்து
பகைத்தளம் நோக்கித்தன்
விழிவிரித்த விரி ஒருத்தி
சற்றும் அசைந்தாளில்லை
மழை வெள்ளமென்ன
பகை வெள்ளம் வந்தாலும்
அவள் அசையாள்! வெல்வாள்!

=================================================
மலைமகள், 2001/ பெயல் மணக்கும்பொழுது/201,201



64/முதல் மழைக்கு
 
வெள்ளி வளையங்கள் வீசி விளையாடும்
அந்திதொட்டு வெண்புள்ளியிட்டு
அறியாக்கோலங்கள் விரியும்
படிகளில் பளிங்கு நடனம்;

பாதையில் கண்ணாடிச்சித்திரம்
செடிகளில் முத்துத் தோரணம்
ஜன்னலில் மின்மினி வரிசை
இன்னும் பிறக்காத சிசுத்துள்ளல்
உள்ளங்கையில்
வடிந்தடங்கும் வானம்.

உச்சந்தலையில் பொழிந்திறங்கி
உடலழிந்து உயிர் திருத்தும்
முத்த ஆவேசம்.
சொர்க்கம் தொடும் என்னை
சொட்டுச்சொட்டாக,
குளிர்விரல்கள் கூந்தல் கோதும்.

தாய்ப்பால் காலமும்,
தடுமாறும் மழலையும்
தந்தது மறுபடி
இந்த மழை.
==================================
உமா மகேஸ்வரி / கொங்குதேர் வாழ்க்கை/ தமிழினி/ 242



65/ யார் யாரோ வற்றவைத்த என்கிணறு
 
மழை பெய்தால் நிரம்புவதும்
கோடை காலத்தில் வற்றுவதுமாக
இருந்துவந்தது என் எளிய கிணறு.
நதிகளின் பெயர்களைச் சொல்லிக்கொண்டு
நீர் இறைத்துக்குளிக்கும் பாட்டி,
‘கங்காதேவி வந்துவிட்டாள்’ என்பாள்
புதுத்தண்ணீரைப் பார்த்து
மொத்தமாக வற்றிப் போய்விட்டது இப்போது.
லக்ஷ்மிபுரம் ஏரியைப் பிளாட் போட்டு
விற்றுவிட்டதுதான் முக்கிய காரணமாம்.
ஸ்கூல் ஏரியும் குப்பை கொட்டும் இடமாகிவிட்டது.
பூமிக்கு அடியில் நீரோட்டம் நின்று போயிற்றாம்.
நியு காலனியில் நிறைய போர்வெல்
போட்டுவிட்டார்களாம்.
இருக்கிற தண்ணீரை எல்லாம்
அது உறிஞ்சிவிடுகிறதாம்.

என் கிணறு வற்றிப்போனதைவிடவும்
வருத்தம் தந்தது
யார்யாரோ எங்கிருந்தோ என் கிணற்றை
வற்றவைத்துவிட முடியும் என்பது.
====================================
முகுந்த் நாகராஜ்/ கொங்குதேர் வாழ்க்கை/ தமிழினி/ 432



66/
===

மாரி பொய்த்தது இம்முறையும்
இளகாத நெஞ்சம்போல்
இறுகிக்கிடந்த தரையில்
இறங்க மறுத்தது ஏர்

பசிவயிற்றை உழுகிறது.
கிடப்பில் இருக்கும் விதைத்தானியம்
ஒருமுறை குலுங்கிக் காட்டியதில்
இன்றைய வாட்டம் தீரும்தான்.
விதைப்புக்கு நாளை?
பசிநோக்கான்
மண்ணின் உழவன்
இன்னும் காத்திருப்பான்.

இருண்டு வந்தது வானம்;
படைதிரண்டு வந்ததென்னக்
கார்முகில்கள்;
பாட்டம் பொழியும் என்றிருக்க
எலிமுக்கிப் பெய்த சிறுநீராட்டம்
சிந்தின சிலதுளிகள்.

வயல்களில் தூங்கிய களைகளுக்கு
இது வாய்ப்பாய்ப்போச்சு
எழும்பி ஆடின ஆட்டம்;
பூத்திருந்த விழிகளில்
விரல் புகுத்தி ஆடின.

எனினும்,
ஏர்பிடிக்க, விதைவிதைக்க
களைபிடுங்க,
இன்னும் கையில் வலுவிருக்குதென்ன
காத்திருப்பான் எங்கள் மண்ணின் உழவன்
முளைத்திறன் மிக்க தானியம் போல.
=====================================
சு.வில்வரத்தினம்/28-01-1969/உயிர்த்தெழும் காலத்திற்காக / ப.156



67/மழை
 
அவசரமாய் வெளியே புறப்பட்ட
ஒரு காலைப்பொழுதில்
பெய்துகொண்டிருந்தது
மழை..
அவசரமாய் புறப்பட்ட
செய்தி மறுக்கப்பட்டு
மழைபற்றியதான
செய்திகள்
மனதில் அமர்ந்து
கொண்ட(ன)து.
வானத்திலிருந்து
விழும் தண்ணீரை
பிடித்து வைக்க
நினைத்து
தோற்று
போகிறேன்
எனக்கு கிடைக்காத
அதன் விடுதலையை
அர்த்தமில்லாமல்
ஆக்குவதில்
எனக்கொன்றும்
கிடைத்துவிடப் போவதில்லை

மழை நின்ற பிறகும்
புறப்பட தோன்றவில்லை
இப்போது என் மனதில்
மழை பிடித்துக்கொண்டது
அவசரமாய் புறப்பட்ட
செய்தியை நல்லவேளை
யாருக்கும் சொல்லவில்லை.
=============================================
குழலி வீரன்/ பொம்மைகள் கூடப் பேசிக்கொண்டிருக்கலாம்



68/ மழை பற்றிய பகிர்தல்கள்
 
1.
சீக்கிரமே இன்றைக்கு
சாயங்காலம் வந்துவிட்டது

வெயிலைத் தீர்த்துவிட்டு
சூரியனும புறப்பட்டு விட்டான்

அசந்து தூங்கும் அக்காவை
அசைத்தெழுப்ப மனமின்றி
சில பழுப்புக் காகிதங்களுடன்
உனக்கெழுத அமர்கிறேன்

இந்த காலம் தப்பின கோடை மழை
என்னை என்னவெல்லாம் செய்கிறது
என எழுதிக் கொண்டிருக்கையிலேயே
சில தாள்களை காற்றிழுத்து
மழையில் போடுகிறது
......................... .................. ......
சாரலுடைத்த
என் மழை வார்த்தைகளை
அப்படியே உறையிலிட்டு
அனுப்புகிறேன் -

மங்கின
கலங்கல் வார்த்தைகள் தாண்டி
மழையை உணர், மண்வாசமாய்
2
ஜன்னல் கம்பியில்
ஜில்லென்று கன்னம் பதிய
மழை பார்க்கையில்
கண்ணில் இடறின
என் பற்றிய லஜ்ஜையற்று
பறந்தபடி புணர்கிற
பட்டாம் பூச்சிகள்

மறுபடி என்று வாய்க்குமோ
இதுபோல மழையும்
இயல்பான சரசமும்

3
மழை நாளின் போது
மட்டுமே அவளது
வருகை நிகழும்

என்னவோ
எப்பவும் அப்படித்தான்
தூக்கிப் பிடித்த சேலையும்
மெல்லிய சிரிப்புமாக
குடைக்காக வருவாள்

என்
கவிதையின் பக்கங்கள்
நீண்டு போகும்

அவள் தனக்கென்று
ஒரு குடை வாங்கின பிறகு
இன்னும் நீள்கிறது
அவளையே நிறைத்துக் கொண்டு

==========================================

சே. பிருந்தா / 'மழை பற்றிய பகிர்தல்கள்' (1999) தொகுப்பிலிருந்து



69/ஒரு மழைப்பூச்சியை அறிதல்
 
பழைய அலமாரியிலிருந்தெடுத்த
ஒரு கனத்த தத்துவப் புஸ்தகத்தினடியில்
நசுக்கிக் காய்ந்திருந்தது மழைப்பூச்சியொன்று
அருகே சென்று பார்த்தபோது தான்
அதற்கு ஒரு மண்டை இருப்பது தெரிந்தது
அதில் இரண்டு உணர்கொம்புகள் நீண்டிருந்தன
அதன்கீழே இரு பொடி கன்னங்கருவிழிகள்
வரிவரியாயிருந்த அதன் இரப்பை புடைந்த பொற்பொதியென மினுங்கியது
சற்று எதிர்பார்த்திராதது
அதற்கு தன் உடலைப்போல் இருமடங்கு நீளமான சிறகுகள் இருக்குமென்பது
ஒளிகொள் சிறகுகள்
நின்று பார்வை அகலும்
கணத்தில் காண்கிறேன்
அதற்கு உயிர் இருக்கிறது.
=======================================

சபரிநாதன்/ களம்-காலம்- ஆட்டம்/புதுஎழுத்து/ ப.1

 

70/அர்த்தமோன இருப்புகள்

 
வெள்ளம் பொழிந்து
மழை ஓடியது
நேருக்கு நிகர் மாறாய்
எல்லாமே
நாய்கள் அலறிக் குரைக்கின்றன
நெருப்பு வாடையுடன் தீய்கிறது
பெட்டைச்சிக்கு என்ன துணிச்சல்!
வெளியே
வீசுகிறது புயல்
யார் துணிவு கொடுத்து
யார் வாழ்வது?
புரியாத புதிர்தான்
யன்னல் சட்டகத்துடன்
ஒட்டி
மோன நிலையில் என்
இருப்பு.
சட்டகம் முளை விடுமா?
ஆயின்
நானும் சட்டகமே,
யாருக்குத்தான் புரிகிறது
இருப்பின் அர்த்தங்கள்?

================== ================
ஆகர்ஷியா/தம்மைப்பற்றிய கவிதைகள்/ ப.21

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்