பல்துறை வாசிப்பினூடாக இந்தப் பயணம்.. -கவி.கருணாகரன்


இலக்கிய வாசிப்பும் விமர்சனமும் என்ற அடிப்படையில் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் சமகால ஆளுமையாளர்களில் முக்கியமானவர் பேராசிரியர் அ. ராமசாமி. அ.ரா, தொழில் மற்றும் கற்கை ரீதியாக நாடகம், மொழி,இலக்கியம் ஆகிய துறைகளைக் கொண்டவராக இருந்தாலும் அவருடைய ஈடுபாட்டுப் பரப்பானது சினிமா, அரசியல், சமூகவியல், பண்பாடு, இலக்கியம், வரலாறு, நாடகம், மொழி எனச் சமூகத்திலும் வரலாற்றிலும் கலந்து ஊடாடிச் செல்லும் துறைகளோடும் விரிந்தது. இன்னும் நுணுகிப் பார்த்தால் இந்த எல்லை மேலும் விரிந்து பெண்ணியம், தலித்தியம், திராவிடவியல், பெரியாரியல் எனவாகச் செல்வதையும் காணலாம். அடிப்படையில் இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்தவையே. ஒரு வட்டத்திலிருக்கும் பல்வேறு பகுதிகள். ஒன்றின் மீது ஈடுபாடும் ரசனையும் பரிச்சயமும் வந்து விட்டால், பிறகு அனைத்தின் மீதும் அது பரவிக் கொள்ளும்.
அ. ராவின் விமர்சனக் கட்டுரைகள் அவருடைய ஈடுபாட்டுப் பரப்பைப் போலப் பன்முகமுடையவை. இதில் கவனிக்க வேண்டிய சிறப்பான பக்கங்கள் உண்டு. அதிலொன்று, உலகளாவிய தமிழிலக்கிய வரைபடத்தைப் பற்றிய சிந்தனைப் புள்ளிகள் இந்தக் கட்டுரைகளில் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதாகும். திணைக் கோட்பாடு பற்றிய புதிய சிந்தனையை இது கோருகிறது. இது தொடர்பாக மேலும் விவாதிக்கவும் விரிவாகப் பார்க்கவும் வேண்டிய அவசியமுண்டு. அதை நாம் உணருமாறும் அதை நோக்கிச் சிந்திக்குமாறும் செய்திருக்கிறார் அ.ரா.

‘இரண்டாவது, இலக்கியமும் பண்பாட்டு நிலவியலும்’ பற்றிய அறிவார்ந்த உரையாடலொன்று சிறிய அளவில் அ. ரா.வினால் நிகழ்த்தப்பட்டுள்ளது. மூன்றாவது, ஈழப்போராட்டம், அது உண்டாக்கிய போர், அதன் பின்னரான நிலைமைகள் என்பவற்றில் உருவாகிய இலக்கியப் பிரதிகளில் ஒரு தொகுதியை எடுத்து அவற்றின் குணவியல்புகளைப் பற்றிப் பேசப்பட்டிருக்கிறது. அதனூடே கற்பனைகளைப் புறமொதுக்கி நிற்கும் யதார்த்த நிலையையும் இவை மறைபொருளாகச் சுட்டுகின்றன.

அ.ரா, கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக ஈழ (புலம்பெயர்) எழுத்துகளையும் அதற்கப்பால் மலேசிய, சிங்கப்பூர் கலை, இலக்கிய வெளிப்பாடுகளையும கரிசனையோடு கவனித்து எழுதி வருகிறார். அதற்கு முன்பே அவருக்கு ஈழ அரசியலைப் பற்றிய, ஈழப்போராட்டத்தைப் பற்றிய அவதானமிருந்திருக்கிறது. இதனால் ஈழ அரசியலையும் அதன் வரலாற்றுப் போக்கையும் இலங்கை நிலவரத்தையும் ஆழமாகப் புரிந்தும் வைத்திருக்கிறார். ஈழம், புலம்பெயர் சூழல், தமிழகம் ஆகிய தமிழ்ப்பரப்பில் ஈழப்போராட்டத்தையும் இலங்கை அரசியலையும் ஆழமாகப் புரிந்திருப்போர் குறைவு. உணர்ச்சிகரமாகவும் அதீத கற்பனையோடும் இதை அணுகுவோரே அதிகம். ஆகவே இத்தகைய நிலையில் நிதானமாக இதை அணுகும் அ.ராவுக்கு முக்கியத்துவமுண்டு. கூடவே, ஈழ நிலப்பரப்பில் தொடர்ச்சியாகப் பயணங்களைச் செய்திருக்கிறார். மட்டுமல்ல, ஈழ அரசியலும் ஈழ அரசியலின் நிமித்தமாகப் புலம்பெயர்ந்தவர்கள் வாழ்கின்ற நாடுகளிலும் பயணித்துக் கொண்டிருக்கிறார். அந்த மக்களின் வாழ்க்கையை அவதானித்து வருகிறார். இவற்றினடியாகவே அவர் உலகத் தமிழிலக்கிய வரைபடத்தைப் பற்றிச் சிந்திக்கிறார்.

ஆறாந்திணையாக கவிஞர் சேரன் உணர்ந்ததை விரித்து இந்த உலகத் தமிழிலக்கிய வரைபடச் சிந்தனையை அ.ரா முன்வைக்கிறார் போலும். அ.ராவின் பரந்த வாசிப்பின் வழியே, அறிதலின் வழியே உணர்ந்தது இதுவெனலாம்.

ஈழ அரசியல், ஈழப்போராட்டம், ஈழ இலக்கியம் ஆகியவற்றோடு அவரவருக்குரிய ஈடுபாடு, புரிதல், பரிச்சியம் போன்றவற்றின் அடிப்படையில் இவற்றை நோக்குவோரும் உண்டு. ஆதரிப்போரும் உண்டு. அதைப்போல எதிர்ப்போர், விமர்சிப்போரும் உண்டு. இதற்கேற்பத் தனித்தனியான அணிகளும் உண்டு. தனியன்களும் விலகிகளும் உண்டு. தனியன்கள் சிறப்புக் குணம் படைத்தவர்கள். பார்வையினாலும் நிலைப்பாட்டினாலும் அவர்கள் வேறுபட்டவர்கள். சுயாதீனமுடையோர். அ.ராவும் ஒரு தனியனே. அவர் எந்தச் சாய்வுக்கும் உள்ளாகாமல் அறிவார்ந்த தளத்தில், ஒரு இலக்கிய விமர்சகருக்குரிய அடிப்படைகளோடு தன்னுடைய தேடலை மேற்கொள்கிறார். பார்வையை முன்வைக்கிறார். தீர்மானங்களைச் சுயாதீனமாக எடுக்கிறார்.

இதற்கான அடிப்படையை உருவாக்கியது, உலக நாடகாசிரியர் பெர்டோல்ட் பிரெக்ட். இதை அ.ரா வே குறிப்பிடுகிறார், “பொதுவாகவே எந்தப் பிரதியிலிருந்தும் விலகி நின்று வாசிப்பவன் நான். இந்த விலகலின் தேவையை என்னுள் உருவாக்கியவர் கவியும் நாடகாசிரியருமான பெர்டோல்ட் பிரெக்ட்” என்று. மேலும் அவர் குறிப்பிடும்போது, “அதன் நீட்சியாகவே போர்க்கால - போர்க்களப் பிரதிகளையும் வாசிக்க வேண்டும் என உணர்ந்தே இலங்கைத் தமிழ் எழுத்துகளை வாசித்து வருகிறேன்” என்கிறார். இந்த விலகல் மனநிலை ஏன் அவசியமாக இருக்கிறது என்பதை வேறிடங்களிலும் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார் அ.ரா. பார்க்க - தமிழினியின் கூர்வாளின் நிழலில் – போர்க்களத்திலிருந்து எழுத்துக் களத்துக்கு என்ற கட்டுரையை.

இந்த மூன்றாவது கண்ணுடைய பார்வைதான் வரலாற்றுக்குத் தேவையானது. இந்தப் பார்வையின் அடிப்படையில் சமகால ஈழ இலக்கியத்தை ஆழ்ந்து நோக்கும் 33 கட்டுரைகள் உள்ளன. ஈழப்போரின் முடிவுக்குப் பிறகு, அந்த அனுபவங்களோடும் அதற்கு முன்னான காலச் சித்திரிப்புகளோடும் எழுதப்பட்ட இலக்கியப் பிரதிகளைப் பற்றிய விமர்சனங்களும் பார்வைகளும் இவை. இந்த விமர்சனங்கள் தனியே பிரதியை மட்டும் நோக்காமல், அவை எழுதப்பட்ட அல்லது உள்ளடக்கப்பட்டுள்ள அல்லது மையம்கொண்டுள்ள வரலாற்றுப் பின்னணியையும் அதனுடைய உளவியற் கூறுகளையும் விரிந்த தளத்தில் சேர்த்துப் பார்க்கின்றன. சில இடங்களில் அவற்றை எழுதியோரையும் இணைத்துப் பார்க்கின்றன. இந்தப் பார்வை தவிர்க்க முடியாதது. ஏனென்றால் ஈழ இலக்கியம் பெரும்பாலும் அரசியல் சார்ந்ததாகவே இருக்கிறது. சில பிரதிகள் நேரடியான அரசியலைத் தீவிர நிலையில் முன்வைக்கின்றவை.

“என்னுடைய எழுத்து அரசியல் அறிக்கையே” என்று இதை வெளிப்படையாகவே ஷோபாசக்தி சொல்கிறார். இதை வெளிப்படையாகச் சொல்லாது விட்டாலும் குணா கவியழகன், தமிழ்நதி, தமிழ்க்கவி, தமிழினி, தீபச்செல்வன் போன்றோருடைய எழுத்தும் நிலைப்பாடும் கூட ஏறக்குறைய இதுதான். ஷோபாசக்தி புலிகளையும் இலங்கை அரசையும் கடுந்தொனியில் விசாரணைக்கும் விமர்சனத்துக்கும் உட்படுத்துகிறார். ஏனையவர்கள் இலங்கை அரசை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகின்றனர்.

ஆகவே, ஈழ அரசியலையும் இலங்கை – புலம்பெயர் தமிழரின் நிலவரத்தையும் புறமொதுக்கிவிட்டு இந்தப் பிரதிகளைப் பற்றிப் பேசவோ இவற்றைக் குறித்த விமர்சனங்களை முன்வைக்கவோ முடியாது. ஈழ அரசியலும் புலம்பெயர் சூழலும் மிக அதீத உணர்ச்சிகரமானவை. யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் கடந்த பிறகும் இந்த உணர்ச்சிரமான நிலையில் மாற்றம் நிகழவில்லை. கடந்த காலத்தைப்பற்றிய மீள்பார்வையோ – மறுபரிசீலனைகளோ நிகழாதிருக்கும் கொதிப்பரப்பிது. இதில் மூன்றாவது கண் கொண்டு விமர்சனத்தைச் செய்ய முற்படும்போது பெரும்பாலும் சாய்வுத்தன்மை ஏற்பட்டு விடும். தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த இலக்கிய வாசிப்பாளர் ஒருவர் இதிலிருந்து தப்புவது கடினம். பெரும்பாலான தமிழ் இலக்கிய வாசகர்களும் விமர்சகர்களும் சார்பு அல்லது எதிர்ப்பு என்ற ஏதாவதொரு நிலைப்பாட்டிலிருந்து கொண்டே பிரதிகளை அணுகுவதுண்டு. பிரதியின் வழியே பயணிப்பதற்குப் பதிலாகத் தம்மை நோக்கிப் பிரதியை இழுக்க முயற்சிப்பர். இது தமிழ்ச் சூழலில் உள்ள பொதுவான குணவியல்பு. ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அல்லது புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் நிற்க வேண்டும் என. ஈழ ஆதரவு – ஈழ எதிர்ப்பு என்ற வகையாகவும் இதிருக்கும். இதேவேளை ஈழ ஆதரவு எல்லாம் புலிகளுக்கு ஆதரவு என்றாகியும் விடாது. அதைப்போல ஈழ எதிர்ப்பு என்பது புலி எதிர்ப்பு என்றும் பொருள் கொள்ள வேண்டியதில்லை. இவற்றுக்கிடையில் வேறுபாடுகளுண்டு. ஆனால், அ. ரா, தனியே இலக்கிய வாசிப்பாளராக மட்டுமல்லாமல் இங்கே ஒரு விமர்சகராகவும் செயற்படுவதால் இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டு இந்தப் பிரதிகளை அணுக முற்படுகிறார். இதனால் தவறியும் அ.ரா எந்தச் சாய்வையும் கொள்ளவில்லை. வரலாற்று நிகழ்வுகளையும் அதன் போக்கையும் விளைவுகளையும் விலகிநின்று, மூன்றாவது பார்வையாளராகச் சுட்டிச் செல்கிறார். இந்த மூன்றாவது பார்வை நெற்றிக் கண்ணாகக் கொள்ளக் கூடியது. அறிவின் நோக்கென.

02

பேராசிரியர்கள் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, எம்.ஏ. நுஃமான் போன்றோர், இலக்கிய விமர்சனத்தை சமூக அரசியல், பண்பாட்டு, வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து உணர்ந்து அறிவுபூர்வமான ஒரு ஆய்வுச் செயற்பாடாக மேற்கொண்டனர். இவர்கள் கல்வித்துறையைச் சேர்ந்த கலை, இலக்கிய விமர்சகர்கள் என்பதால் தமது ரசனை, பார்வை, திறனாய்வு போன்றவற்றைத் தம்முடைய மாணவர்களிடத்திலும் பகிர்ந்து வந்தனர். அ.ரா வும் தன்னுடைய மாணவர்களுக்கு எழுத்தாளர்களையும் இலக்கிய எழுத்துகளையும் அறிமுகம் செய்யும் தொடர்ச்சியைப் பேணுகிறார். இன்றைய தமிழ்க் கல்விச் சூழலில் இது அபூர்வமானது. ஆக தனக்கு அடுத்த தலைமுறையிடத்திலும் இந்த ஊடாட்டப் பணி நிகழ்த்தப்படுகிறது. அத்தகைய பார்வையை, செயல்முறையை ஒத்ததாக, அதன் புதிய பரிமாணத் தொடர்ச்சியாக பேராசிரியர் அ.ராமசாமி தன்னைச் செயற்படுத்தி வருகிறார்.

இதனால், இவை தனியே இந்தப் பிரதியாக்குநர்களான தனி ஆளுமைகளின் வெளிப்பாடுகள், உளக் கூறுகள் என்பவற்றுக்கு அப்பால் அவர்களுடைய சமூக, அரசியல், வரலாற்றுப் பிரதிகளாக இருக்கின்றன என்பது அ.ராவினால் சுட்டிக் காட்டப்படுகிறது. உண்மையும் அதுதான். என்பதால், இந்த விமர்சனங்கள் தனியே பிரதிகளுக்குள் மட்டும் நின்றுவிடாமல், அவை சுட்ட முயற்சிக்கின்ற அல்லது உள்ளடக்க முனைகின்ற காலவெளி, சமூகவெளி, நிலவெளி போன்றவற்றையும் இணைத்துப் பேசுகின்றன. இப்படிப் பேசுவதால் இங்கே பேசப்படும் பிரதிகளுக்கு அப்பால், இந்த விமர்சனங்களே தனித்து ஈழப் போராட்டத்தையும், அதனுடைய வரலாற்றுப் பின்புலம், ஈழப்போர், அதன் பரிமாண நிலை போன்றவற்றையும் அறியச் செய்கின்றன. சற்று விரிவாகச் சொன்னால், இலங்கை அரசியலின் தன்மை என்ன? ஈழப்போராட்டம் உருவாக்கிய சமனிலைக் குலைப்புகள் எவ்வாறிருந்தன? அவற்றின் பின்னணியில் எத்தகைய சக்திகளின் செல்வாக்கிருந்தது? மக்களின் வாழ்க்கை எப்படியிருந்தது? போருக்குப் பின்னர் எப்படியான சூழல் நிலவுகிறது என்பதையெல்லாம் இலக்கியப் பிரதிகளின் வழியே உன்னிப்பாகக் கவனித்துத் தொடர்ந்து தன்னுடைய விமர்சனங்களை – எழுத்துச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த விமர்சனங்களில் எழுத்தாளப்படுகின்ற பிரதிகளை இதுவரையில் வாசிக்காதவர்களும் கூட ஈழப்போராட்டத்தையும் போரையும் போருக்குப் பிந்திய சூழலையும் புலம்பெயர் தமிழர்களின் வரலாற்றையும் வாழ்க்கையையும் அறிய முடியும். மேலும் இந்தப் போராட்டத்திலும் போரிலும் ஈடுபட்ட தரப்புகளான விடுதலைப்புலிகள் தொடக்கம் ஏனைய இயக்கங்கள் மற்றும் இலங்கை, இந்திய அரசுகள் எனச் சகலவற்றினதும் அரசியலையும் பேசுகின்றன. அப்படிப் பேசும்போது குறித்த பிரதிகளை – பனுவல்களைத் தேடத் தொடங்குகிறது நம்முடைய மனம். ஏற்கனவே பிரதிகளை வாசித்திருந்தால் அவற்றை மீளாய்வு செய்யக் கோருகிறது.

ஈழ இலக்கியத்தையும் ஈழப்போராட்டத்தையும் அ.ரா வைப் போல சுந்தர ராமசாமி, பேராசிரியர் அ. மாக்ஸ், ஜெயமோகன், யமுனா ராஜேந்திரன், எஸ்.ராமகிருஸ்ணன், இந்திரன் போன்றோர் தொடர்ச்சியாகக் கவனித்து எழுதியுள்ளனர். உலகளாவிய இலக்கிய அறிதலோடும் அனுபவங்களோடும் ஈழ இலக்கியத்தையும் இணைத்துப் பார்க்கின்ற போக்கு இவர்களுடையது. ஈழத்துக்கு அப்பாலான வாழ்களத்திலிருந்து நோக்குகின்றவர்கள் என்ற அடிப்படையில் இவர்களுடைய விமர்சனங்களுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆனால் இதில் சிலரிடம் சாய்வுத்தன்மையுண்டு. குறிப்பாக யமுனா ராஜேந்திரனிடம். இன்னொரு எல்லையில் ஜெயமோகன். பிரதி முன்வைக்கின்ற அரசியலை மட்டும் கணக்கிற்கொள்ளாமல், அந்தப் பிரதியின் இலக்கியத் தன்மை, அதனுடைய கலைப்பெறுமானம் போன்றவற்றையும் நோக்குவது அவசியம். இத்தகைய நோக்கையே சுந்தர ராமசாமி, அ. ராமசாமி போன்றவர்கள் கொள்கின்றனர் என்பதால் இந்த விமர்சனங்கள், இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன எனலாம்.

இங்கே முன்வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பிரதியைக் குறித்த பார்வையும் அதன் பின்னணியும் தனியே பிரதிகளிலிருந்து உருவாக்கப்பட்டவை அல்ல. பிரதிகளிலிருந்து உருவாகியவையும் உண்டு. அதற்கப்பால் பிரதியாக்குநருடனான உறவாடலில் இருந்தும் உருவாகியிருக்கிறது. குறிப்பாக தமிழினி ஜெயக்குமாரனின் ‘கூர் வாளின் நிழலிலிருந்து’ என்ற பிரதியைக் குறித்த விமர்சனத்தோடு, தமிழினிக்கும் அ.ராவுக்கும் இடையில் ஏற்பட்ட அறிமுகமும் உறவும் அதன் மூலம் ஏற்பட்ட உரையாடலும் இணைந்திருப்பது உதாரணமாகும். இந்த உரையாடல் முக்கியமான ஒன்று. ஏனென்றால், இதொரு முக்கியமான சாட்சியம்.

‘கூர்வாளின் நிழலிலிருந்து’ நூல் வெளியான பிறகு, அது முன்வைத்த விமர்சனங்களால் தமிழினியைப் பற்றிய பார்வையைப் பலரும் மாற்றிக் கொண்டனர். அதற்கு முன்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெண்போராளித் தலைவர்களில் ஒருவராகத் தமிழினியைக் கொண்டாடியவர்கள், தமிழினியைச் சந்தேகிக்கவும் எதிர்க்கவும் தொடங்கினர். சிலர் இன்னும் அதற்கும் மேலே சென்று அந்தப் பிரதி, தமிழினியோடு அவருடைய கணவர் ஜெயக்குமாரனும் இணைந்து எழுதப்பட்டது என்றனர். இந்த இருவரோடும் வேறு சிலருடைய கைகளும் சம்மந்தப்பட்டது என்று கூறியவர்களும் உண்டு. தமிழினி எழுதிய பிரதியை அவருடைய மரணத்துக்குப் பிறகு உருமாற்றி வெளியிட்டிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டதும் உண்டு. இவையெல்லாவற்றையும் மறுக்கக் கூடிய மெய்ச் சாட்சியங்கள் உண்டு. அதிலொன்று அ. ரா வினுடையது. அதை அவர் இங்கே துணிவுடன் நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார். அந்தச் சந்தர்ப்பத்தில் இவற்றோடு தொடர்புபட்ட ஓவியர் ஞானப்பிரகாசம் ஸ்தபதி, பதிப்பாளரும் இலக்கியச் செயற்பாட்டாளருமான எம். பௌசர் ஆகியோரையும் ஆதாரங்களோடு அ.ரா முன்னிறுத்துகிறார்.

இத்தகைய அடிப்படைகளைப் பின்பற்றுவது இலக்கிய விமர்சனத்துக்குப் பொருத்தமாக இருக்குமா? என்று யாரும் கேட்கக் கூடும். ஆனால், தவறான அபிப்பிராயங்களும் பொய்களும் கட்டமைக்கப்படும்போது தானறிந்த உண்மையைச் சொல்லாதிருப்பது தவறாகுமல்லவா. அந்தத் தவறைச் செய்ய அ.ரா விரும்பவில்லை. அதனால் தன்னுடைய சாட்சியத்தை முன்வைக்கிறார். அது தன்னுடைய பொறுப்பு என்பதே அ. ரா வின் நிலைப்பாடு.

அடுத்தது, உலகம் முழுவதும் சிதறிப் பரவியிருக்கும் ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட தமிழ்ச் சமூகத்தின் அடையாளங்களை இந்த விமர்சனங்களின் வழியாகவும் தன்னனுபவங்களின் வழியாகவும் எழுதிச் செல்கிறார். அதிலொன்று ஆ.சி.கந்தராஜாவின் ‘ஓர் அகதியின் பெர்ளின் வாசல்’ நாவலைப் பற்றியது. இன்னொன்று செல்வம் அருளானந்தத்தின் ‘எழுதித்தீராப் பக்கங்களை’ க் குறித்தது.

மற்றொன்று சற்று வேறான முறையில், தெய்வீகனின் கதைகளைப் பற்றியது. புலம்பெயர்ந்து வாழ நேர்ந்த தமிழரின் வாழ்க்கைப் பரப்பிற்கு வெளியே உலகளாவிய ரீதியில் உற்பத்தியாக்கப்படும் பல்வேறு நாட்டு அகதிகளைப் பற்றிய தெய்வீகனின் கதைகளை அதன் அரசியல் பார்வையோடு கலையாக்கத்தைக் கவனித்துப் பேசுவதாகும். ‘ரம்போ’ கதையைக் குறித்த விமர்சனம் இதற்குச் சான்று. மேலும் கலாமோகன், அனோஜன் பாலகிருஸ்ணன், மாஜிதா, தாமரைச்செல்வி, உமையாழ், சயந்தன் எனச் சமகாலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் பலருடைய புனைவுகளைப் பற்றியும் எழுதிக் கவனப்படுத்தியுள்ளார். இதில் அநேகர் இளையோர். சிலருடைய முதற்படைப்புகளையே அ.ரா கவனித்து வாசித்துக் கவனத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார். ஒரு விமர்சகர் என்ற வகையில் இத்தகைய பன்முக வாசிப்பும் தொடரியக்கமும் உண்டாக்கும் பயன்கள் மொழிக்கும் சமூகத்துக்கும் கூடிய பயனைத்தருபவை.

புனைவு, அபுனைவு மட்டுமல்ல, கவிதைகளைக் குறித்த அ.ராவின் அவதானிப்பும் விமர்சனங்களும் கவனித்து உரையாடப்பட வேண்டியவை. என்னுடைய மத்தியூ கவிதைகள் (மத்தேயு கவிதைகள் என்றே அ.ரா இவற்றைக் குறிப்பிட்டுள்ளார்) மருத்துவமனைக்குறிப்புகள், தூக்கமில்லாதவனின் இரவு போன்றவற்றின் மீதான அவருடைய வாசிப்பு அந்தக் கவிதைகளை எழுதிய எனக்கே வேறான திறப்புகளை உண்டாக்கியவை. அவருடைய அவதானம், அணுகுமுறைகளுக்குப் பின்னர் என்னுடைய பார்வையிலும் உணர்தலிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இலக்கியப் பிரதியாக்குநர்களைப்போல, இலக்கிய விமர்சன முறையியலையும் ஒவ்வொரு விமர்சகரும் உருவாக்குகிறார்கள். அ.ரா வின் விமரிசன முறையியல் தனியான ஒன்று. இலக்கியத்தை வரலாற்றியல், பண்பாட்டியல், சமூகவியல், மொழியியல், புவியியல், அரசியல், அறிவியல், மானுடவியல் போன்றவற்றுடன் இணைத்துப் பார்ப்பதே அதுவாகும். இத்தகைய அணுகுமுறையைப் பெரும்பாலும் மாக்ஸிஸ இலக்கியத் திறனாய்வாளர்கள் செய்வதுண்டு. ஆனால், அ. ரா அவர்களிலிருந்து வேறுபடுகிறார். இங்கே அ. ரா பல நிலைப்பட்ட பிரதிகளையும் வாசிக்கிறார். அவற்றின் மீது தன்னுடைய பார்வைகளை முன்வைக்கிறார். அந்தப் பார்வைகள் கவனித்துப் பேச வேண்டியவையாக உள்ளன. அவை எந்த வரையறைகளுக்குள்ளும் நிற்காத படியால்.

சமகாலத்தில் ஈழ இலக்கியத்தை இத்தனை கூர்மையோடு, தொடர்ச்சியாக அவதானித்துப் பேசும் ஈழத்துக்கப்பாலான விமர்சகர்கள் குறைவு. அவருடைய இணையத்தளத்தில் https://ramasamywritings.blogspot.com/ மாதம் இரண்டு கட்டுரைகளேனும் ஈழ இலக்கியத்தைப்பற்றியதாக இருக்கும். இதற்கப்பால் சரவணன் மாணிக்கவாசகம் போன்ற சிலர் இப்பொழுது கவனித்து வாசிக்கிறார்கள். அவர்கள் பரிந்துரைகளையே அதிகமும் செய்கின்றனர். ஆனாலும் அது பாராட்டப்பட வேண்டியதே. விமர்சனங்களாக முன்வைப்பவர்கள் குறைவு. அ.ரா அந்தக் குறையை நீக்கும் ஒருவர்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்