மழையும் மழைசார்ந்தனவும் -2


இரண்டாவது தொகையாக பத்துக் கவிகளின் - குட்டி ரேவதி, ராஜசுந்தரராஜன்,சமயவேல், ஆதவன் தீட்சண்யா, மகுடேசுவரன், தீபச்செல்வன், நேசமித்திரன், பா.செயப்பிரகாசம், ரியாஸ் குரானா, திருமாவளவன்-   கவிதைகளை வாசிக்கலாம். 

11

 காலத்தின் மீதான சந்தேகம் வலுத்த அன்றுதான்
கருணையின் முகத்துடன் பிறந்து வந்தது மழை
இரத்த ஓலங்களுக்கும் பிரிவுகளுக்கும் தேற்றுதலாய்
திருமணமாகிச் சென்ற தோழியின் நினைவுகளோடு

மழைநாளில் அறை
தனது விரல்களை அறியாது மிதித்ததைப் பொருட்படுத்தாத
நெருக்கமானதொரு நபராகிவிடுகிறது

ஜன்னல் வழியாக மழைத்துளியின் கண்கொண்டு 
நோய்மையை அவிக்கும் ஒரு புன்னகையைத் தேடுகிறேன்

உழைப்பின் வாசனையையும்
இளங்காற்று நிறைக்கும் தாவரவேதனையையும் வீசி,
அடங்குகிறது மழை.

ஈரத்தின் காலடிகள் நிலமெங்கும் பதிந்திருக்கின்றன
பாதங்களுக்கு நிழல் அளிக்கின்றன
புத்தகங்களாய் வெளிச்சம் பெறுகின்றன
பெண்களின் முகங்களும் வீதிகளும்

சூரியனின் பக்கம் திரும்பி பூக்கள் புன்னகைக்கின்றன
நாமும் ஒருவர் மற்றவரைப் பார்த்து
புன்னகை பெறுவதற்கு எளிதான வஸ்துவாகிறது


============= 
குட்டிரேவதி/முலைகள்
/34


12 /அந்நியம்


கல்த்தூண் முள்க்கம்பி வேலிக்கும் 
அப்பால் விரிந்து கிடக்கிறது 
ஒரு வெள்ளக்காடு.

மழை ஓய்ந்தாலும் இன்னும் 
வெறித்தபாடில்லை.

கருப்புவானத்தில் 
மின்னல்
அடிக்கடி எதையோ அவசரஅவசரமாய் 
எழுதிஎழுதிக் காட்டுகிறது;
தவளைகளுக்குப் புரிகிறது போலும்
உரக்க ஒப்பிக்கின்றன!

ஈரத்தில் வெட்கிய இலைகளைத் தொட்டு, 
தூறல்
எதையோ கிசுகிசுக்கிறது;
காற்றுக்கு என்ன புரிந்ததோ
ஒரேயடியாய் கிளுகிளுக்கிறது!

கல்த்தூண் முள்க்கம்பி வேலிக்கும் 
இப்பால், ஒரு கூரையின் கீழ்,
ஒன்றும் புரியாத நான்.


------------------------- 
ராஜசுந்தரராஜன்/ முகவீதி/19


13 /இரவு மழை
 
இந்த இசை
வானத்திலிருந்து அல்லது
பெருவெளியிலிருந்து

இந்தத் துளி, துளிகள், சிறுதுளிகள்
கோர்க்கப்பட்ட துளிகள்
கனத்த துளிகள்
உக்கிரத்துளிகள்
துளிகளின் மழை

இரவு மழை
முழு இரவும் மழை
முழு இரவும் குளிர்
முழு இரவும் மின்னல்
முழு இரவும் குமுறும் இடிகள்
முழு இரவும் கறுப்பிருட்டு
முழு இரவும் கோர்க்கப்பட்ட இசை
முழு இரவும் வெதுவெதுப்பு
முழு இரவும் கோதுமை நிறக்காதல்

=============== சமயவேல்/பறவைகள் நிரம்பிய முன்னிரவு/12



14 /வேறு மழை


மிஞ்சிப்போனா என்ன
சொல்லிற முடியும் உன்னால
இந்த மழையைப் பத்தி.

ஓதமேறுன கொட்டாய்ல
கோணில மொடங்கியும்
குளுர்ல நடுங்கியிருக்கியா.

உங்கூட்டுப் பொண்டுக
நமுத்த சுள்ளியோட சேந்தெரிஞ்சு
கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா
கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க.

ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்து
செத்த சொந்தத்த எடுக்க வக்கத்து
பொணத்தோட ராப்பகலா
பொழங்கித் தவிச்சதுண்டா.

ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு
உயிர்ப் பதற அழுதிருக்கா உங்குடும்பம்

எதுக்கும் ஏலாம
உஞ்செல்லப்புள்ளையோட
சிறுவாட்டக் களவாண்டு
சீவனம் கழிஞ்சிருக்கா

தங்கறதுக்கு வூடும்
திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா
சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே
ஒண்ணு தெரிஞ்சுக்கோ
மழை ஜன்னலுக்கு வெளியதான்
எப்பவும் பெய்யுது உனக்கு
எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே. 
 ===============  
ஆதவன் தீட்சண்யா


15.
 
கூரை பெய்த மழை 
தாரை வழிவுற்று 
வடிநீர் வாய்க்காலாய்க் 
குடிநீர்க் குளமாகி

நிறைந்துவிடும் நிலையில் 
வழிந்து பெருக்காகி 
வங்கக் கடல்வாய் 
தேடிச் செல்லாமல்

கூடத்திற்குள் வந்து 
குந்திக்கொண்டதோ ? 
குடியிருப்போரை எழுப்ப 
குறுக்குவழி கண்டதோ ?

ஏரி குளமென்றால் 
எறும்பே புற்றெழுப்ப 
எண்ணாது என்றிருக்க 
எப்படித் தவறிழைத்தோம் ?

கட்டிய எட்டடுக்கில் 
கீழடுக்கு நீரடுக்கோ ? 
கார்நிறுத்தும் இடமெல்லாம் 
நீர்நிறுத்தம் ஆயிற்றோ ?

ஆழிப்பேரலைபோல் 
ஆழ்கடல் பொங்காமல் 
வானத்தூற்றாகி 
வாசலில் நிற்கிறதோ ?

சாலையில் நீர்வழியும் 
கால்நனைத்துச் செல்வோம்தான். 
நீர்மூழ்கிக் கப்பல்விடும் 
நிலைவருமென்றறிவோமோ ?

வேறு இடங்கண்டு 
வீடு எழுப்பாமல் 
ஆறு குளங்கண்டு 
அடிக்கல் நடலாமோ ?

கட்டியதும் விற்றவனின் 
கடப்பாடு முடிந்துவிடும் 
கட்டடத்தை வாங்கியவன் 
காலமெல்லாம் அழுவதுவோ ?

மண் தரையே இல்லாமல் 
மாடி கட்டிவிட்டால் 
மழைவீழும் துளியெல்லாம் 
மண்ணிறங்க வழியுண்டோ ?

நீரோடும் நிலமெல்லாம் 
நிறுத்திக் குறுக்காட்டி 
ஊராக்கிக் கொண்டால் 
ஊறு விளையாதோ ?

இயற்கைக்கு வழிவிட்டு 
இருக்கப் பழகாமல் 
செயற்கைக்கு அடிமைகளாய்ச் 
சீரழிதல் இனி தகுமோ ?

 ============= கவிஞர் மகுடேசுவரன்



16 . மழைக்கிராமத்தில் நனைந்து ஊறிப்போன சொற்கள்
 

சொற்கள் விறைத்துப்போயிருக்க
மழை சனங்களில் குளித்துக்கொண்டிருக்கிறது.

மலக்குழியில் புதைந்து இறந்த
சிறுமியின் உடலை
மீட்டு வைத்திருக்கிறர்கள்
கல்லாற்றில் மிதந்துகொண்டிருக்கிறது
தண்ணீர் நிரப்பும் கலன்கள்
முழுமையாக நிவாரணக் கிராமத்தை
நனைத்துக்கொண்டிருக்கிறது மழை
கூடாரங்களுக்குள் தண்ணீர் நிறைய
குழந்தைகள் மிதந்துகொண்டிருக்கின்றன.

மழைக்காடாகிறது
ஒதுக்குப்புறமாக இருக்கிற கிராமம் எனப்படும் காடு
அள்ளுண்டு போகின்றன முட்கம்பிகள்.
களைத்த முகத்தில்
நிரப்பிக்கொண்டிக்கிறது பெருமழை.

திறந்த வெளியில் விளையாடிக்கொண்ருந்த
சிறுவர்கள்
மழையில் ஒதுங்கி நிற்கிறார்கள்.
குளித்துக்கொண்டிருக்கின்றன கூடாரங்கள்.
சோற்றுப்பானை உடைந்து விழ
அடுப்பு கரைந்து முடிகிறது.

விறைத்துப்போயிருக்கிறது மனம்.
பள்ளத்தை நோக்கிச் செல்லுகிறது கூடாரம்.
கால்வாயில் போகும் பாத்திரங்களுக்கு
பின்னால்
ஓடிச்செல்லும் அம்மாவின் கால்கள்
மணலில் புதைகின்றன.

நிலத்தை கழுவிய நீர்
முட்கம்பிகளுக்குள் அலைந்து
கிராமத்தை குளமாய் நிரப்பியது
சொற்கள் நனைந்து நீருரிப்போய்க்கிடக்கிறது
சேற்றில் புதைந்துகொண்டிருக்கிறது
ஆறு கிராமங்கள் எனப்படும் காடு.


========  
தீபச்செல்வன் /2009 செப்டம்பர்/கூடாரநிழல்/உயிர்மை



17 
 
அப்பா 
இவ்வளவுக்கும் பிறகு
இப்பொழுது நம் கடலில்
சாரம் குறைந்திருக்கிறதா
கூடி இருக்கிறதா
பரிசோதித்த கோவில் யானையின் பிரேத வயிற்றில்
எடுத்த பாலித்தீன் சுருளை 
ஒத்து மினுங்கும் எம் நகர் வீதி வெறித்தபடி நடுக்கம் மீதமுள்ள
கரம் பொதியக் கேட்டான் லிபி.

இருதய அறுவை சிகிச்சைக்கு
நரம்பெடுத்த தடமாய்
சுவர்களெங்கும் நீர் வடிந்த
ரேகைகள் 
சின்னவன் தூசு அப்பிய இடம்
கண்டு தன் ஆசிரியையின்
கையெழுத்தென்றான்
ஆமென்

நதியின் விடாய்பஞ்சாய்
கனத்துக் கிடக்கின்றன
நூலகங்கள்
கருவழி திறக்காமல் மூச்சுத் திணற சுழன்ற சிசு
வெளியேறிக் கிடக்கிறது
மெல்லிய முனகல்களோடு
வீதியெங்கும்.

முலை முளைத்த தகப்பன்மார்
ஈராயிரம் கரங்கள் கிளைத்த
தாய்மார்கள்
நட்சத்திர இமைகளை கவிழ்த்த
படகுகளில் துடுப்பசைத்த இரவல்சாமிகள்.
செவிலித்தனமே இவ்வூழி காத்த செதிள்
மகனே கடல் 
இ்ன்னும் கொஞ்சம் நீலம் 
கூடி இருக்கிறது
மண்ணில் இன்னும் கொஞ்சம்
சாரம் ஊறி இருக்கிறது


=====================  
நேசமித்திரன்


18 /கிராமத்து நெருப்பு
 
பத்துநாள் பேய்மழை
கண்மாய் பிடுங்கி
கரை, தரை, தெரியாமல்
காடெல்லாம் வெள்ளம்

அத்தோடு மேகங்கள் எச்சம் காட்டி
மேல்மழை அத்தது

கண்மாய்க்குள் கிடைத்தால்
நெல்காயப்போடலாம்
கேடு காலத்திற்கு
கிரிக்கெட் ஆடலாம்

முந்தின விதைப்பு
வெள்ளத்தில் போனது
பிந்தின விதை
புழுதியில் மருளுது

மண்ணுக்குள்ளிருந்து
ஆகாயம் பார்த்து மயங்கும் முளை;
மண்ணுக்கு மேலிருந்து
ஆகாயம் பார்த்து
மயங்குவான் சம்சாரி.

சேலை பிழியற அளவு சிந்தினாப் போதும்
ஜீவனை முடிஞ்சி வச்சிக்கிருவோம்
என்பாள் செண்பகம் அத்தை.

உப்பங்காற்றுக்கு என்ன அவசரம்?
உரத்து வீசுது
உப்பங்காற்றின் 
மழைக்கு அதிகாரம் இல்லை!
சொல்லிச்சொல்லி மாய்வார் அய்யா.

சூரியனிலிருந்தும்
சூழ்ந்த வானிலிருந்தும்
கோடி கோடி காலமாய்
வீசும் காற்றிலிருந்தும்
வழிகிறது இருள்
ஈரல்குலை கருகும்வரை 
பாய்கிறது நெருப்பு.
ஆன்மாவின் 
ஆழத்தைத் தொடுகிறது
வறட்சி.
======  
பா.செயப்பிரகாசம்/ எதிராக/23-24



19  நான் குளிக்கவில்லை  


கிட்டத்தட்ட 60 தொடக்கம் 100 வரையான 
மழைத்துளிகள்தான் பொழிந்தபடி இருக்கின்றன 
ஒவ்வொன்றும் 
சுமார் இரண்டடி இடைவெளியில் 
பெரும் துளிகளாக விழுந்து 
உடைந்து தெறித்தவண்ணமிருக்கின்றன.

நிலத்தில் சிதறிவிழும் துளிகள் கைரேகையளவு நதியாய் வீதியெங்கும் பெருகியபடி இருக்கையில், அதனூடாக பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நான் இருக்கிறேன்
நனைந்துவிடாமல் இருக்க நதியினை எட்டிக் கடந்து நடப்பதும் துளிகளுக்கிடையிலான இடைவெளியில் ஒழிந்து மறுக்கி மறைந்து பயணிப்பதும் பெரும் சவாலாகவே இருக்கிறது
தலைக்கு மேலாக இரைந்துகொண்டு வரும் பெரும் துளிக்கு இடம்விட்டு மறுதுளி வருவதற்குள் பாய்ந்து பா..... அதுவொரு போராட்டம்

இத்தனை சிரமத்திற்கும் மத்தியில் கொஞ்ச தூரம்போய் திரும்பிப் பார்க்கையில்தான் அறிந்தேன் மழை என்னை மட்டுமே குறிவைத்து பின்தொடரந்து வருவதை
எவ்வளவு வேகமாகச் செல்கிறேனோ அவ்வளவு வேகமாக என்னைத் துரத்திக்கொண்டுவருகிறது
இனித் தப்பிக்க வழியில்லை ஆதலால், நனைந்தேன் என்று சொல்லலாமா என்று யோசிக்கிறேன்
அருகிலிருக்கும் வீடொன்றில் நுழைந்தேனென்று சொல்லலாமென பார்த்தால் அந்த வீட்டுக்குள் நுழைந்ததும் அங்கும் மழை பொழிந்தது
மழையே கொஞ்சம் நில்.. எனக்கொரு சந்தேகம் இன்று காலை நான் குளிக்கவில்லை என்று யாருனக்குச் சொன்னதெனக் கேட்டேன்
அக்கணமே மறைந்துபோனது துரத்திக்கொண்டிருந்த மழை

================== ரியாஸ் குரானா 

20 யமன் இசை
 

மழை இரவு

இருள் பாதி
மழையின் ஈரம் மீதி
துளித்துளியாய் தூங்குகிறது
மரக்கிளைகளில்

இரவெல்லாம் மின்னல் முழக்கம்
மழை 
பெருங்காற்று
அச்சம் விரவ கிடுகிடுக்க நடுக்கம்

மழைவிட்ட காலை அசாத்திய அமைதி
முகில் துண்டால் ஈரம் உலர்த்திய
வானம்

வேலிக் கிளுவையிலே
சிறகை அகல விரித்து வெய்யில் காய்கிறது
மஞ்சள் குருவி
நாயொன்று
ஏதோ ஒன்றை இழுத்துச் செய்கிறது
காகங்கள் பின்தொடர.

முற்றத்திரை எங்கும் புள்ளிகளைப் பரப்பி
ஒவ்வொன்றாய் அடைத்து 
அவள் வரைந்து கோலம்
கலைத்து
இன்று மழை வரைந்த கோலம்
அலையலையாய்
புதிது.

சூரியப்பெட்டை
நீர் சொட்டும் ஈரக்கூந்தலை அள்ளி முடிந்தபடி
புள்ளிகளை அடைக்கத் தொடங்குகிறான்
புதியதொரு நாளுக்காய்

அன்றைய நாளில்தான்
ஊரிழந்து துயர் சுமந்து
விழி ஒழுகக்
காட்டுவழி நடந்தோம்

யமன் திசையில்

இன்னும் துளித்துளியாய் தூங்குகிறது
என் நரை மயிர்களில்
துயரில் பாதியும் நினைவில் மீதியும்.    


 == திருமாவளவன்/ அஃதே இரவு அஃதே பகல்/ 8-10/ இலையுதிர்காலம், 2001

 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்