மழையும் மழைசார்ந்தனவும் -1


2023 நவம்பர் கடைசி வாரத்தில் தொடங்கியது மழை. மழை, பெருமழையாகி, தொடர்மழையாக, கடும் தாக்குதலை நடத்திவிட்டுக் கடந்தபோது சென்னையின் பாதிப்பைக் கணக்கிட முடியாத நிலை. இப்போது தென்மாவட்டங்களில் மழை பெய்யத்தொடங்கியுள்ளது. இதேமாதிரியான தொடர்மழையைத் தமிழகத்தின் வடபகுதியும் தென்பகுதியும் 2015 இல் சந்தித்தன.  
சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருந்த 2015, டிசம்பர் முதல் வாரத்தின் கடைசி நாளில் -டிசம்பர் 7- கடலும் மழையும் கனவாகவும் நினைவாகவும் மாறிக் கொண்டிருந்தன. கடலால் மழையா? மழை போய்ச்சேருமிடம் கடலா? என்ற எண்ணம் எனக்கு மட்டுமல்லாமல் தமிழகத்தின் எண்ணமாக மாறியது. சுந்தரராமசாமியின் 107 கவிதைகள் தொகுப்பையெடுத்து வாசித்துக் கொண்டிருந்தபோது அந்தக் கவிதையைத்தாண்டிப் போகமுடியவில்லை. கவிதையின் தலைப்பு: கடலுக்குத் தெரியாது.
அந்தத்தொகுப்பை வைத்துவிட்டு இன்னும் சிலரது கவிதைத் தொகுப்புகளை எடுத்தேன். ஆத்மநாம்,சேரன், தேவதேவன் எனக் கவிகள் முன்வைத்த கடலும் மழையும் என்ற நினைவு தடம் மாறியது. தமிழகத்தை அச்சுறுத்திய தொடர்ச்சியான பெருமழையின் காரணமாகக் கடல் பின்வாங்கிக் கொள்ள மழையால் நிரம்பியது மனம். அடுத்தடுத்த நாட்களில் எனது நூலகத்திலிருந்த கவிதைத் தொகுப்புகளில் மழையைத் தேடி வாசித்துக் கொண்டேயிருந்தேன். வாசித்தவைகள் பதிவுகளாக மாறின. முகநூலில் நண்பர்களாக இருக்கும் கவிகளுக்கும் வேண்டுகோள்களையும் அனுப்பினேன். வேண்டுகோளை ஏற்று அனுப்பியவர்கள் எண்ணிக்கை அதிகம் இல்லை. அனுப்பியவர்கள் எனது தேர்வுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக ஒன்றிற்கு மேற்பட்ட கவிதைகளை அனுப்பினார்கள். வந்த இரண்டு மூன்றில் எனது தேர்வு இருந்தது. இப்போது 100 கவிகளின் 100 கவிதைகள் பதிவுகளாக மாறிவிட்டன.

பதிவுகளாக மாறியுள்ள அக்கவிதைகளை யார் யாரெல்லாம் வாசித்திருப்பார்கள் என்ற கேள்வியெல்லாம் எனக்கில்லை. ஒவ்வொரு கவிதைக்கும் 20 முதல் 75 வரை விருப்பங்கள் -லைக்-தெரிவிக்கப்பட்டன. விருப்பங்கள் தெரிவிப்பவர் மட்டுமே அவற்றை வாசித்தவர்கள் என்பதில்லை. எல்லாப் பதிவுகளையும் வாசித்து விட்டு விருப்பம் தெரிவிக்காமல் கடந்து போகிறவர்களும் முகநூலில் இருக்கிறார்கள்; வாசிக்காமலேயே முகதாட்சண்யத்திற்காக விருப்பம் தெரிவிப்பவர்களும் இருக்கிறார்கள். முகநூல் மரபு அது. எல்லாக் கவிதைகளுக்கும் விருப்பம் தெரிவித்த நண்பர்களும் இருக்கிறார்கள். 

மாமழை-100 எனத் தொகுப்பாக்கிவிடலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன். மழையைப் பற்றிய மரபான பார்வைக்கு மாறாக நவீன மனத்தோடு மழையைப் பேசும் இந்தக் கவிதைகளின் தொகுப்புக்கு ஏனந்த மரபைப் பின்பற்றவேண்டும் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. அதனால் 100 என்ற எல்லை மாறுகிறது. தலைப்பும் இனிமேல் தான் வைக்கவேண்டும். டிசம்பர் 7 இல் தொடங்கிய மழைக்கவிதைகள் சில வாரங்கள் தொடர்ந்தன. கடல் கவிதைகள் நீக்கப்பட்டு மழைக்கவிதைகளைத் தொகுப்பாக்கலாம் என நினைத்தேன்.  ஒரு நண்பர் நான் பதிவேற்றம் செய்த எல்லாக் கவிதைகளையும் தனது பக்கத்தில் இணைத்திருந்தார் ஈரோடு அகிலன் எத்திராஜ். அவர் பக்கத்தில் வாசித்த பல கவிதை வாசகர்கள் வந்து நன்றி சொல்லியிருக்கிறார்கள். லண்டன் தீபம் தொலைக்காட்சியின் இளைய அப்துல்லாஹ் தனது வளமான குரலால் இந்த மழைக்கவிதைகளை ஒலியலைகளாக மாற்றி ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வழங்கினார்.   ஒவ்வொரு தடவையும் 5 க்கும் குறையாமல் வாசிக்கப்பட்டன.  
தொகுப்பில் ஒரு பகுதியாக மழைக்கவிதைகளை முன்வைத்து தமிழின் கவிதையியலைப் பேசலாம் என்ற ஆசையும் இருந்தது.ஆனால் அனுமதி கேட்டு எழுதிய கடிதங்களுக்குப் பதில் எதுவும் வராத நிலையில் அப்படியே நின்றுபோய் விட்டது. இப்போது அந்த மழையைத் தாண்டிய அளவு மழை பெய்துகொண்டிருக்கிறது. அதனால் பத்துப்பத்துக் கவிதைகளாக இங்கே வாசிக்கத்தருகிறேன். முதல் பத்தில் பசுவய்யா, ஆத்மநாம், சேரன்,  தேவதேவன், மனுஷ்யபுத்திரன், கருணாகரன், வ.ஐ.ச.ஜெயபாலன், செழியன், பழமலய், ரவிக்குமார்

1.கடலுக்குத் தெரியாது
 
மனிதனின் சகல இருள்களும் ஒளிகளும் கடல் அறியும்
தன் உதரத்தில் தோன்றிய ஜீவனைத் தாய் அறிவாள்

எனினும் சூல்கொண்டபோது
களி நடனங்கள்
சாகசங்கள்
அதிசாமர்த்தியங்கள்
கரையில்
இப்படித்தாண்டித் தெறிக்கும் என்பது
அவளுக்குத் தெரியாது.

இப்போது அலை உறுமலின் எச்சரிக்கைக் காலம்.
கரையைக் கடலாக்குவது அவளுக்கு ஒருபொருட்டல்ல.

==============    பசுவய்யா

******

2

பொய்த்த மழை
இரவு பெய்துவிட்டது.
காற்றைத் தண்மையாக்கிய மழை
உடலை மென்மையாக வருடுகிறது.
சாலையின் சிறுசிறு பள்ளங்களில்
நீர் தேங்கியுள்ளது.
எங்கள் பூமி செம்மண் ஆனதால்
மழைநீரும் காவியேறியுள்ளது.
காற்று வீச
சிறுஅலைகளும் மெல்லத் தழைகின்றன.
கிணற்றிலும்
கொஞ்சம் நீர் பாய்ந்துள்ளது
அதன் ஸ்படிகத் தெளிவு
என் கண்களைக் கூசச் செய்கிறது.
ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்த
சூல் கொண்ட மேகங்கள்
மண்ணுடன் காதல் கொள்கையில்
மழை பிறக்கிறது.
அதன் ஒவ்வொரு துளியும்
எங்களுக்கு உணவு
மழையைத்தியானித்து
சொற்கள் மூலம் வேண்டுதல் விடுக்கிறோம்

மழை
நீ நான் இவ்வுலகம் முழுவதும்

இன்றைக்கு மழைதான் எம் சிந்தனை
இன்றைக்கு மழைதான் எம் கடவுள்.
========================= ஆத்மநாம் படைப்புகள்/ 92/

******


3.   கடலோரம் மூன்று குறிப்புகள்
 
1.
அலைகளாய் உயரே உயரே
எழுந்து
நுரைகளாய் மரித்தது
நீர்.

2. கரையேறிப்போகிறாள்
இன்னும் நான்
அலைகளுக்குள்

3
சூரியனை விழுங்கியது கடல்
பிளந்து சிவப்பாய்க் குருதி
தெறித்தது முகில்களில்

4
கரையில்
உலர்கிறது பகல்
மெதுவாய்
உதிர்கிறது இரவு
அலைகளோ சோகமாய்
இன்னும் இரையும்.
==============================
சேரனின் இப்பொழுது இறங்கும் ஆறு /22

******

 
 

கடல் கொண்டுபோன நிலப்பரப்பு
வற்றி மறைந்துபோன ஆறு
அழிந்துபோன நாகரிகங்கள்
தரைமட்டமாகிப்போன கட்டடங்கள்
மறக்கடிக்கப்பட்டுவிட்ட தொழில் நுட்பங்கள்
சேகரிக்கப்படாது அழிந்துபோன நூல்கள்
இவைதாம் நம் துயருக்குக் காரணமா?

இன்றைவிடப் பண்டே நம்நிலைமை
மாண்புமிக்கதாய் இருந்ததாய்
எண்ணி எண்ணி மாய்வதேனோ?

இயற்கைச் சீற்றத்தாலும்
பகைவர் படையெடுப்பாலும்
வேற்றவர் கலப்பாலும்
போட்டி பொறாமைகளாலும்
அழிந்து போனவையே
அபூர்வமான நம் பண்பாட்டுச் செல்வங்கள்
என்பது உண்மையெனில்
அரற்றுவதை விடுத்துப்
பேணுமொரு காதலினாலன்றோ
பூக்க வேண்டும் பண்பாடும்
பண்பாடுசார் தொழில்நுட்பங்களும்

உழக்குக்குள் கிழக்கு மேற்கா
என்கிறது பிரம்மாண்டம்
எல்லா ஊற்றுகளையும்
தன்னுள் கொண்டதுவாய்
எப்போதுமிருக்கிறது
வற்றாத பேரியற்கை
காணலையும் கற்றலையும்
தொலைத்துவிடா மனிதன் முன்னே
ஒளிர்ந்துகொண்டுதானிருக்கிறது பூமி

ஒருசர்வதேசப் பல்கலை
மாணவப்பார்வையில்.
======================================
தேவதேவன் கவிதைகள்/ 830

******

5
இந்த மழை நாட்களில்
இந்த மழை நாட்களில்
இந்த ஏக்கம்
ஒரு விஷ முள்

இந்த குளிர் நாட்களில்
இந்த வேட்கை
ஒரு விஷப் பல்

அவ்வளவு சீக்கிரம்
அது நம்மை
கொன்றுவிடாது.
நாம் நடக்க நடக்க
முதலில் அது
நம் கண்களை இருள வைக்கும்
பிறகு
நம் பாதைகளும் இருண்டு போகும்
==========================================
மனுஷ்யபுத்திரன்/ அந்நிய நிலத்தின் பெண்/413

******

6: கடற்புறம்
 
காலமகள் மணலெடுத்துக்
கோலமிட்ட கடற்புரத்தில்
ஏழை மகள் ஒருத்தி.
முன்னே கடல் விரியும்
முதுகடலின் பின்னாடி
விண்ணோ தொடரும்
விண்ணுக்கும் அப்பாலே
வழி தொடர நிற்கின்றால்.

தாழை மரவேலி
தள்ளி ஒரு சிறுகுடிசை;
சிறுகுடிசைக்குள்ளே
தூங்கும் சிறுகுழந்தை
ஆழக்கடலில்
ஆடுகின்ற தோணியிலே
தாழம்பூவாசம்
தரைக்காற்றுச் சுமந்துவரும்
காற்றுப் பெருங்காற்று
காற்றோடு கும்மிருட்டு.
கும்மிருட்டே குலைநடுங்க
கோஷமிட்ட கடற்பெருக்கு
கல்லுவைத்த கோவிலெல்லாம்
கைகூப்பி வரம் இரந்த
அந்த இரவு
அதற்குள் மறக்காது.

திரைக்கடலை வென்று வந்தும்
திரவியங்கள் கொண்டு வந்தும்
இந்தச் சிறுகுடிசை
இரண்டு பிடி சோறு
தோணி உடையான்
தரும் பிச்சை என்கின்ற
கோணல் நினைப்பு
பெருமூச்சு.

தானாய் விடிவெள்ளி
தோன்றுகின்ற சங்கதிகள்
வானத்தில் மட்டும்தான்
வாழ்வில் இருள் தொடரும்.
===========================================================
வ.ஐ.ச. ஜெயபாலன் கவிதைகள்/ பெருந்தொகை/ 221-222

******

7: வடு
 
மழை
மண்ணைக் கரைத்துக் கரைத்து
நிறமாக ஓடுகிறது
வெள்ளத்திற்குக் கரைகளில்லை
அலைகளுமில்லை.
தெரு, பாலம், வாசல், முற்றம்,
பூமரம், வேலி, தோட்டம் எல்லாவற்றையும்
அடித்துப் புரட்டி
மூடி நிற்கிறது வெள்ளம்
அச்சத்தை மூட்டும் வெள்ளம்
இம்சைப்படுத்துகிறது
எல்லாவற்றையும் தன் வசமாக்கிவிட்டதாக
பெருகிக் கிடக்கிறது
வானம்கூட அதற்குள்
நட்சத்திரம், சூரியன், சந்திரன் முதல்
மரங்கள், பறவைகள்
எல்லாம் வெள்ளத்துள் பிரதிபலிக்கின்றன.
*
வெள்ளம் பெருகப்பெருக
உடைப்பு நிகழ்ந்தது
மண்ணைக்கரைந்து
நிறமாகி
எங்கோ ஓடித் தொலைய
நிலம் உறிஞ்சியது எஞ்சியதையும்
*
வெள்ளம்
வந்து நின்று அழிந்த சுவடு கிடைக்கிறது
அழியாமல்
============  கருணாகரன்

******

 8/ மழை பெய்த நாள்.

 
மழைபெய்த நாளொன்றில்
சூரியனை முத்தமிட ஆசைப்பட்டது
கதிர்நாவாய்ப்பூச்சி

ஆசையை இலைகளிடம் சொல்ல,
இலைகள் காதோடு கிளைகளுக்குச் சொல்லி
சந்தோசப்பட்டன.

பிய்த்துக்கொண்டு போயிற்று
காற்று கதைபரப்ப
நெடுந்தூரம் பறக்க
சிறகுகளைப் பிய்த்துக் கொடுத்தன
தூக்கணாம் குருவிகள்

பெருமழையில் பாரங்களுடன் பறப்பது கடினமென்று
துயரங்களை வாங்கிக் கொண்டன
மர அட்டைகள்

புதிதாய்ப் பூத்த பூசனிப்பூக்களில்
தேனெடுத்துக் கொடுத்தன
தேனீக்கள்.

நிலத்தோடு முட்டி மண்ணை
வாரிக்கொண்டு வந்த கடல்
நீரில் மூழ்கி முத்தெடுத்துக் கொடுத்தது
நீர்க்குதிரை

முகம் சிவந்து தலை கவிழ
மகரந்தத்தின் மணியெடுத்து
அழகாய் கவிதையெழுதிக் கொடுத்தன
வண்ணத்துப்பூச்சிகள்

மழை பெய்து வழிந்த நாள்.

பெருமழை முழுதுமாய் கொட்டி
கன்னத்தில் நனைந்து வழிய,
சூரியனை
தழுவி, இழுத்துவந்து
வயல்வெளியில் கிடத்தி
முத்தமிட்டு மகிழ்ந்தது கதிர்நாவாய்ப்பூச்சி.
=======================================
செழியன்/ குழந்தைகளிடம் பொய்களைக்கூறாதீர்கள்.

******

 9/பதற்றம்
==================================
வெறும் மழை பெய்துகொண்டிருப்பதற்கே
வெறுத்துப் போகிறது வாழ்க்கை.

மணிலா- பிலிப்பைன்சில் சூறாவளி
288 பேர் பலி
இவர்களில் காணாமல் போனவர்கள் வேறு
7700 வீடுகள் முழுவதுமாகச் சேதம்.
2,80,000 பேர்
வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
செய்திகளைப் படிக்கும்போதே
சிந்தை குலைகிறது.

செத்தவர்களில் ஒருவன் நான்
சிதைந்த வீடு, என் வீடு,
வீட்டைவிட்டு வெளியேறுவது
தற்காலிகச் சாவு

வெள்ளத்துக்கும் தீக்கும் அஞ்சுவது
விவரிக்க முடியாத அவலம்
ஏரி உடைந்துவிடும் என்று
மண்வெட்டிகளோடு ஓடியவர்களையும்
அடுத்த வீட்டுக்கும் தீப்பற்றும் என்று
கூரை மீது குடங்களோடு நின்றவர்களையும்
பார்த்திருக்கிறேன் நான்

பதற்றம் தருபவை
==============================
பழமலய்/ புறநகர் வீடு/ 12

******

10/ மழையின் அழுகை

 
மழை அழுவதைக் கேட்டதுண்டா நீங்கள்?
அதன் கதறல் உங்கள் நெஞ்சை அறுத்ததிருக்கிறதா?
எல்லோரும் கைவிட்ட நிலையில்
ஒவ்வொருவரிடமுமாக ஓடித் தனது நியாயத்தை
எடுத்துச்சொல்ல முயலும்
ஒரு பெண்ணைப் போல அது அரற்றி மன்றாடுவதை?
தரையில்மோதி மோதி திசைகளை
சபிப்பதைக் கேட்டதில்லையா நீங்கள்.

யாசித்துக் கை நீட்டும் குழந்தைகளைக்
கடந்து சென்று
கல்லாகிவிட்டது உங்கள் இதயம்
எனினும் முயன்று பாருங்கள்
விழிகளும் கூட கேட்கும் சில நேரம்
======================================
ரவிக்குமார்/ அவிழும் சொற்கள்/29/



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்