திரைப்படைப்புகளின் கூர் முனைகளும் மழுங்கு முனைகளும் -மதியழகன்


மனிதர்கள் தங்கள் எஞ்சிய பொழுதைக் கழிக்க தேரும் ஒரேயொரு விஷயமாக திரைப்படங்கள் அல்லது அதன் துண்டுக் காட்சிகள் விளங்கி வருகின்றன. திரைப்படங்களைத் தாண்டி வேறு பொழுதுபோக்கில்லை. சுகிசுக்கவும், விவாதிக்கவும், முரண்படவும் இறுதியாகக் கொண்டாடவும் முதன்மையாக இருப்பன திரைப்படங்கள் மட்டும்தான்.

திரைப்படக்கலையின் பல்லாயிரம் முனைகளின் ஏதாவது ஏதாவதொரு முனை குறித்து மணி கணக்கில் பேசிட அடித்தட்டு மக்கள் வரைக்கும் தகவல்களும் வியப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. இப்படி எல்லாத் தட்டு மக்களும் அறிந்திருக்கும் சினிமாக்கலையின் கூர்முனைகளையும் மழுங்கு முனைகளையும் ஆய்ந்து பதிவுசெய்ய வேண்டிய அவசியம் அறிஞர்களுக்கு இருக்கிறது. இந்நூலில் ஆழமாகவும் தெளிவாகவும் அக்கரையுடனும் பன்முனைப் பார்வைகளும் சீரியப் பார்வைகளும் என சிறப்பாய் ஆய்ந்துதுள்ளார் அ. ராமசாமி அவர்கள்.

வகைவகையான வடிவத் திரைகளில் ஓடி முடியும் திரைப்படங்களின் அடிப்படை நோக்கம் அப்படைப்பின் உள்ளர்த்தங்களும், வீச்சும், வீர்யமும் பார்வையாளர்களிடம் உண்டாக்கும் அதிர்வுகளாகக் கொள்ளலாம். காட்சி முடிந்ததும் கடந்து போவோர் மத்தியில் படைப்பின் நுணுக்கங்களைப் பதிவதன் மூலம் படைப்பை அணுகும் முறையையும் பதிவு செய்ய வேண்டியது கடமையாகிறது. இந்நூலில் கண்ணியத்தோடு கடமை ஆற்றப்பட்டிருக்கிறது.

குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படங்களை பார்த்த பின்னர் இக்கட்டுரைகளை வாசிக்கையில் ஒருவித புரிதலையும், கட்டுரைகளை வாசித்தப்பின்னர் திரைப்படங்களைப் பார்க்கையில் வேறுவித புரிதலையும் கொடுக்கின்றன. அ.ராமசாமி அவர்களின் ஆழமான அறிவின் வழியாக, அனுபவங்களின் வழியாகத் திரைப்படைப்புகளை விளங்கிக் கொள்ள காட்டப்பட்டிருக்கும் வழிமுறைகளும் வெகுச் சிறப்பான கற்பித்தல் முறையெனக் கொள்ளலாம்.

வணிகச் சினிமா – இடைநிலை சினிமா – பெண்களின் சினிமா என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுக் காண்போர் வாசிப்பெனக் கட்டுரைகள் நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளன. திரைப்படைப்புகளை காணும் முன் வாசிக்க – கண்டபின் வாசிக்க என்ற அடிப்படை நிலைகளைத் தாண்டியும் இதில் வாசித்து தெளிய நிறைய இருக்கின்றன. காண்போருக்கு மட்டுமல்ல படைப்பாளருக்கும் படைப்பை அணுகுவோருக்கும் இக்கட்டுரைகள் சுருக்கக் கையேடுகள்.

வணிக சினிமா என்ற வகைப்பாட்டிலுள்ள கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படங்கள் குறித்த ஆழமானப் பார்வைகள் சினிமா கற்போருக்கும் சினிமாவில் இயங்குவோருக்கும் பாடமாக இருக்கும். இவ்வகை சினிமாக்கள் வான் தொடாமல் போகும் காரணங்களையும் பொதுபுத்தியில் சில மணி நேர தற்காலிக கிளர்ச்சியையும் கொடுத்து ஏற்றுக் கொள்ள இயலாமலும் தவிர்க்க இயலாமலும் தவிப்பை உண்டாக்கும் தன்மையைத் தெளிவாக விளக்கியுள்ளார்.

குறுவெளிப்படங்களின் தாக்கத்தினால் உருவாக்கப்படும் திரைப்படங்கள் அடுத்த கட்டத்திற்கு நகராமலும் பார்வையாளர்களை நகர்த்தாமலும் இருக்கும் காரணங்களை விளக்குவதோடு விருமன் போன்ற திரைப்படங்கள் குறித்து பதிவு செய்திருப்பது அவசியமான ஆவணம்.

சினிமாவின் முதல் நிலையாக அதன் ஓரிலை கதை நிலையிலிருந்து பலவகையான திரைகளில் இறுதி வடிவமாக காணும் படங்களில் உருவாக்கிச் சிதைக்கும் உத்திகள் குறித்த பார்வை தனிச் சிறப்பெனலாம். அ.ராமசாமி அவர்களின் பண்முகப் பார்வைத் திறன் வியக்கத்தான் வைக்கிறது.

நடிகர் விஜய் போன்ற உட்ச நட்சத்திரமும் அவர் போன்றோரை வைத்து இயக்கப்படும் சர்க்கார் போன்ற வகைப்பாட்டு திரைப்படங்கள் கதை திரைக்கதை நிலையில் துவங்கி தேவைக்கு அதிகமாக எழுதப்பட்டு படப்பிடிப்பும் செய்யப்பட்டு படத்தொகுப்பு நிலையில் எப்படி படம் கோர்க்கப் படுகிறது என்பதன் நுணுக்கப் பார்வை அழகு. இவ்வகையான படங்கள் சூத்திர வகைப்பாட்டைச் சேர்ந்தவையாக இருந்தாலும் அதன் உருவாக்கத்தின் பின்னால் இருக்கும் மெல்லிய அரசியலை அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார். மிக அவசியமானதும் கூட.

கைவிடப்பட வேண்டிய கலைக்கோட்பாடுகள் யாவை என்பதை சொல்லச் சொல்ல தெளிவும் புரிதலும் கூடுகிறது. இயங்கும் சமூகப் பண்பாட்டை மீறி சினிமாவில் கட்டமைக்கப்படும் கலைப் பண்பாடுகள் கோட்பாடுகளாக மாறிப் பின்பற்றப்பட்டு வருவதையும் கவனித்து பதிவு செய்திருக்கிறார் கட்டுரையாசிரியர்.

இயக்குனர் சங்கர் உருவாக்கி வளர்த்து வரும் வன்முறைமோகப் பிரிவின் கீழ் பட்டியலாய் நீளும் திரைப்படங்கள், அடுத்த தலைமுறை இயக்குனர்களை நிகழ் அரசியலின் தெளிவில்லாமல் படைப்புகளை உருவாக்க உசுப்பி விட்டதை அந்நியன், முதல்வன் போன்ற படங்களின் வழி பதிவு செய்திருப்பது நன்று.

வணிக சினிமாவின் திருமுகமாக ரஜினிகாந்த் உருவாகி வளர்ந்து நிற்பதும் அவரைத் தொடர்ந்து சினிமாத்துறையில் முதல் அடியை எடுத்து வைக்கும் ஒவ்வொரு நடிகரும் இந்த ரஜினியாக மாறுவதே கனவாக மாறி இருப்பதும் ஏன் என்பதன் விபரம் உணர்த்துகிறார். இயக்குனர் மகேந்திரன் ஒரு நடிகரின் ஆழ நடிப்பையும் சிறப்புகளையும் தன் படைப்பின் வழியாக நிறுவ எடுத்துக் கொண்ட சிரத்தை ஒரு உச்ச நடிகரின் வளர்ச்சி எனலாம். இதற்கு இயக்குனர் நடிகர் என்ற பிணைப்பும் ஆழமும் அவசியம் என்பது சிறப்புப் பார்வை.

மென் உணர்வுகளையும் நுண் வன்முறையையும் நாணயத்தின் இரண்டு பக்கங்களாகக் கொண்டு உருவாக்கப்படும் சினிமாப் படைப்புகளின் செய்நேர்த்தியும் அதன் வெற்றியும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை. சண்டைக்கோழி மற்றும் தவமாய் தவமிருந்து திரைப்படங்களின் உருவாக்க முறையும் பார்வையாளனிடம் அவை உண்டாக்கிய அனுபவத்தைப் பற்றியும் சொல்லி இது போன்ற படங்களை பட்டியலிட்டு நம்மை புரிந்துணரப் பழக்கி விடுகிறார்.

விரைந்தோடும் வியாபாரச் சினிமாவும் இவைகளுக்கு இடையில் குறுக்கும்நெடுக்குமாய் ஓடும் மாற்று சினிமாக்கள் குறித்தப் பதிவுகளும் ஆகச் சிறப்பு. காட்சி இன்பத்தின் பொருளாதாரம் சமூகத்தில் எத்தகைய நுகர்வு மணப்பான்மையை உருவாக்கி இருக்கிறது என்பதையும் பதிவு செய்யத் தவறவில்லை.

இடைநிலை சினிமாக்கள் குறித்த பிரிவின் கீழுள்ள கட்டுரைகள் அனைத்தும் கூர்மையும் ஆழமும் கொண்டவை. நடிகர் கமலஹாசன் எழுதி நடித்த மூன்று திரைப்படங்கள் குறித்தப் பார்வை அவசியமானது. வன்முறையை மறுத்துக் சொல்ல அரிவாளால் ஓங்கி வெட்டி வன்முறை நிரப்பிக் கதை சொல்லப்பட்டு வருவதை விளக்கியிருப்பதும், திரைப்படத்தை உருவாக்குபவர்களுக்கு இது ஏன் அவசியமாக இருக்கிறது என்பது குறித்த பார்வையும் கவனிக்கத்தக்கது.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் என்ற அறிவிப்போடு துவங்கும் ஜெய்பீம் மற்றும் காதல் போன்ற திரைப்படங்கள் மக்களிடம் குற்ற உணர்வை எங்ஙனம் தூண்டுகின்றன என்பதும் சமூகத்தின் இயல் நிகழ்வுகளை திரைக்காட்சிகளாக ஆக்கி இரக்கத்தையும் ஈடுபாட்டையும் உண்டாக்கச் செய்து படைப்பை கொண்டுச் சேர்க்கும் யுக்திகள் குறித்து பதிந்திருப்பதற்கு நன்றி சொல்லலாம்.

படைப்பின் ருசி உணர்தலும் உணர்த்துதலும் எத்தனை அவசியமென்பது உணரச் செய்திருக்கிறார். திரைப்படங்களின் வெகுஜன ரசனையானது ருசியாக பார்வையாளனின் ஐம்புலன்களுக்குத் தீனி போடுவதோடு அல்லாமல் அவரது ஆறாவது அறிவுக்கும் தீனி போடும் படைப்புகளின் சிறப்புகளை இக்கட்டுரைகளின் வழியாக கற்றுத் தேர்வது கடமை எனலாம்.

நாவல்களின் நீட்சியாக இலக்கியப் பிரதியொன்று காட்சி ஊடகத்தில் பதிவு செய்யப் படும் விதமும் சினிமாவின் கலைக்கருவிகள் எழுத்தை எங்ஙனம் காட்சிகளாக பதிவு செய்கின்றன; அவை ஏற்றம் பெரும் இடங்கள் சருக்கும் இடங்கள் குறித்துப் பூமணியின் வெக்கை நாவல் அசுரன் திரைப்படமான விதம் பற்றிய பதிவு கச்சிதம். மேலும் வெற்றிமாறன் போன்ற இயக்குனர் இலக்கியப் பிரதியை மற்றும் சமூக வெளியின் நிகழ்வுகளைப் படைப்புக்குள் கொண்டு வருவது குறித்தவைகள் வாசித்து தெளிய வேண்டிய விஷயம்.

திரைத்துறை குறித்து சுவையாக உருவாக்கப்பட்ட ஜிகர்தண்டாவும் கதைத் திரைக்கதை வசனம் போன்ற மெல்லிய சோதனை வகைச் சினிமாவும் இடைநிலை சினிமா வெளியில் எவ்வகையான மாற்றத்தையும் இருப்பையும் செய்கின்றன என்ற குறிப்புகள் அவசியமானவை.

இந்திய அளவில் பெருங்கவனத்திற்கு உள்ளாகி இருக்கும் பெல்லிசேரியின் இரண்டு படங்கள் குறித்தப் பதிவு மிக முக்கியமானவை. தத்துவார்த்தங்களை புனைவு வழியாக காட்சிப்படுத்தும் வித்தைகளை விட்டு விலகும் போக்கு தீவிரமாக இருக்கும் சூழலில் அழுத்தமான காட்சிகளால் தன் படைப்புகளைப் பதிந்து வரும் பெல்லிசேரியின் அத்தனை திரைப்படங்கள் குறித்தும் தனி நூலாக எழுதும்படி வேண்டிக் கொள்ளலாம்.

இலங்கையின் இயக்குனர் பிரசந்ந விதநயகே அவர்களின் படங்களைப் பார்க்க வாய்க்கவில்லை என்றாலும் இரண்டு திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் வழி பிரசந்ந விரித்துக் காட்டும் வாழ்வு வெளியைப் புரிந்து கொள்ளவும் விளங்கிக் கொள்ளவும் முடிகிறது.

இறுதியாகப் பெண் சினிமா என்னும் தலைப்பின் கீழுள்ள மூன்று கட்டுரைகளும் ஆகச் சிறப்பு. பெண்ணியப் பார்வையில் சொல்லப்படும் கதைகள் சிறப்புக் கவனம் பெற்றாலும் உலக அளவில் பெண் படைப்பாளிகள் குறைவாகவே உள்ளனர் என்ற நிலை உள்ளது. தமயந்தியின் காயல், லீனா மணிமேகலையின் மாடத்தி மற்றும் சுமதியின் நியோகா ஆகிய படங்களில் ஆண்மையச் சிந்தனையிலிருந்து விலகி நிகழ்ந்தவைகள் எப்படி காட்சியாக்கப்பட்டுள்ளன என்பதை கவனித்து பதிந்திருப்பது மிகச் சிறப்பு. இந்தப் பட்டியலில் கூடுதல் கட்டுரைகள் அவசியம் எனப் பட்டது.

திரைக்கலைப்படைப்புகள் குறித்த மீள் பார்வைகளும் ஆழப் பார்வைகளும் காண்போர் மட்டுமல்லாது படைப்பாளிகளும் கவனிக்க வேண்டியவை என்பதற்கு இந்நூலின் கட்டுரைகள் ஆகச் சிறந்த உதாரணம். புரிதலையும் தெளிவையும் படைப்பில் நேரடியாக மறைமுகமாக வெளிப்படும் அரசியல்களையும் அறியச் செய்கிறது.

அ.ராமசாமி அவர்களின் உரைமொழியும், வாக்கிய அமைப்பும் வியப்பளிப்பவை. திரைப்படைப்பின் இறுக்கமான பகுதிகளையும் கட்டுரைகளில் எளிமையாக விளக்கிக் காட்டியிருப்பது ஒவ்வொரு திரைப்படங்களிலும் வெளிப்பட்டிருக்க வேண்டிய, வெளிப்பட வேண்டிய பக்குவம்.

காண்போர் மட்டுமல்லாது காட்சி மொழியால் திரைப்படைப்புகளை உருவாக்குபவர்களையும் தாண்டி எல்லோரும் வாசிக்க வேண்டிய அவசியமான நூல்.

===================================================

மதியழகன் சுப்பையா, திரைப்பட இயக்குனர்





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்