தேவிபாரதிக்கு சாகித்ய அகாதெமி விருது

காலை எழுந்தவுடன் முகநூலில் தேவிபாரதிக்கு வாழ்த்துச் சொன்ன ஒரு பதிவு கண்ணில் பட்டது. பொதுவாகச் சாகித்திய அகாதெமி விருது அறிவிப்பு டிசம்பர் கடைசி வாரத்தில்தான் இருக்கும். அந்தச் சந்தேகம் இருந்தது என்றாலும் ஏற்கெனவே விருதுபெற்ற எழுத்தாளர்களும் தேவிபாரதியின் நண்பர்களும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தபோது சரியாக இருக்கும் என்று நினைத்து நானும் எழுதிவிட்டேன். இந்த விளையாட்டைத் தொடங்கியவர்கள் யாரென்று தெரியவில்லை. கூட்டத்தோடு சேர்ந்து போடும் கூச்சலில் ஒன்றாக எனது பதிவும் ஆகிவிட்டது.எனது பதிவு அவரைப்பற்றிய அறிமுகம்தான் என்றாலும் விருதுபெற்ற செய்தியோடு சேர்த்து எழுதியதால் அதைத் திரும்ப எடுத்துக் கொண்டேன். இங்கே பத்திரப்படுத்தியுள்ளேன்; அவருக்கே விருது கிடைக்கும்;கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

விருதுகள் விருதுகள் விருதுகள்
 
எப்போதும் சாகித்ய அகாதெமி என்ற அமைப்புதான் விமரிசனத்திற்குள்ளாகும். அதன் பின்னால் தேர்வுக் . குழுவில் இடம்பெறும் ஆளுமைகள் தங்களை மறைத்துக் கொண்டு நழுவிவிடுவார்கள். இந்தமுறை எல்லாவற்றையும் அபத்தமாக்கியிருக்கிறார்கள். அறிவிப்புக்கு முன்பே முடிவு கசியவிடப்பட்டதின் பின்னணியில் யார் இருப்பார்கள் எனத்தேடி ஒரு புலனாய்வுக் கட்டுரையை ஜூனியர் விகடனோ, நக்கீரனோ வெளியிடலாம். மேற்கு நாடுகள் என்றால் அதை வைத்து ஒரு திரைப்படமோ எடுத்துவிடுவார்கள். விருட்சம் இணைய இதழில் எழுதியதாகச் சோ.தர்மன் எழுதிய உள்நோக்கத்தோடு கூடிய குறிப்பை வாசித்தால் கசியவிட்டவர்களுக்குத் தவறான நோக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது.
இந்திய அரசின் கலை இலக்கிய அகாடெமிகளான சாகித்திய அகாடெமி,சங்கீத் நாடக அகாடெமி, லலித் கலா அகாடெமி போன்றனவற்றில் விருப்பு வெறுப்பு இருக்கக்கூடாது எனத் தொடர்ந்து விமரிசனம் செய்யப்பட்டாலும் ஆளுங்கட்சி, அகாடெமிகளில் இருக்கும் நபர்கள், அவர்களால் நியமிக்கப்படும் தேர்வுக்குழுக்களால் விருப்பு வெறுப்புகளோடுதான் பரிந்துரைகள் நடக்கின்றன. தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் விருதுகள் யாரால் தீர்மானிக்கப்படுகின்றன என்ற கேள்வியே இல்லை. கலைமாமணி விருதுகளும் அப்படித்தான்.

தேவிபாரதியைக் கொண்டாடலாம்

 
நவீனத்தமிழ் எழுத்தாளர்கள் பலரையும் அழைத்து மாணாக்கர்களோடு உரையாடல் செய்யும் வாய்ப்புகளை உருவாக்கிய பல்கலைக்கழகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். இந்த ஆண்டு தனது ' நீர்வழிப்படூஉம் ' நாவலுக்காகச் சாகித்ய அகாதெமி விருதுபெறும் நண்பர் தேவிபாரதியும் அழைக்கபபட்டார்; கட்டுரைகள் வாசித்துள்ளார்; மாணாக்கர்களோடு உரையாடியிருக்கிறார். சாகித்திய அகாதெமிக்கு முன்பே அவரை நிகழ்கலைகளுக்கான ஒன்றிய அரசின் இன்னொரு அகாதெமியான சங்கீத் நாடக அகாதெமி அங்கீகரித்துள்ளது.
 
இளம் இயக்குநர்களை உருவாக்கும் திட்டத்தைத் தொடர்ந்து, இளம்நாடக ஆசிரியர்களை உருவாக்கும் திட்டத்தில் அவரது ‘ மூன்றாவது விலா எலும்பும் விழுதுகளற்ற ஆலமரமும்’ என்ற நாடகம் தேர்வுபெற்று பயிலரங்கத் தயாரிப்பாக மேடையேற்றப்பட்டது. அதற்காக அப்போது நான் பணியாற்றிய புதுவைப்பல்கலைக்கழக நாடகத்துறையில் ஒருமாதம் தங்கியிருந்தார். அந்தச் செலவையெல்லாம் ஏற்றுக்கொண்டதோடு விருதுத்தொகையாக ரூ.15000/ - வழங்கப்பட்டது. 1995 இல் அது நல்ல தொகைதான். அப்பட்டறையைக் குறித்து நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். புதுச்சேரியில் தங்கியிருந்த அனுபவத்தைக் கொண்டு ஒரு நான் லீனியர் கதையொன்றை எழுதினார் தேவிபாரதி. அந்தக் கதையின் தலைப்பு: அ.ராமசாமியின் விலகல் தத்துவம். அக்கதையில் வரும் அ.ராமசாமி புனைவாகவும் நடப்பாகவும் இருக்கிறார். பலருக்கும் பிடித்த கதையாகவும் அது இருந்தது. ( கட்டுரை, கதைகளுக்கான இணைப்புகள் பின்னூட்டத்தில் உள்ளன) புதுச்சேரியில் இருந்த காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிமுகமானவர். காலச்சுவடு ஆசிரியப்பொறுப்பில் இருந்தபோது கேட்டுக்கொண்டதின் பேரில் சில கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன்.

ஐரோப்பிய நவீனத்துவத்தின் இருத்தலியல் பிரச்சினைகளை உள்வாங்கி, இந்திய/தமிழ் வாழ்வியலுக்குள் தவித்த மனிதர்களைப் பாத்திரங்களாக்கி எழுதியவை அவரது புனைகதைகள். வடிவச்செம்மை, சொல்முறைமையில் கவனம், நிகழ்வெளிகளின் தட்பவெப்பம், மனப்போராட்டங்களின் ஆழம் எனத் திட்டமிட்டு எழுதப்பெற்ற எழுத்துக்களை உருவாக்கியவர் தேவி பாரதி. இப்போது விருதுபெற்றுள்ள நீர்வழிப்படூஉம் நாவலை வாசித்ததில்லை. நாவலென்னும் பெருங்களம் என்ற தொடரொன்றைத் தீராநதியில் எழுதியபோது அவரது நிழலின் தனிமை குறித்து எழுதுவதற்கான குறிப்புகளை எடுத்து வைத்திருந்தேன். வார்சாவிலிருந்து எழுதிக் கொண்டிருந்த அந்தத் தொடரை முழுமையாக நிறைவுசெய்யவில்லை. அதனால் எழுதாமலேயே நின்றுபோனது. வாசிக்கும் எல்லாவற்றையும் எழுதுவது இயலாமல் போய்விடுகிறது. புனைகதைகள் அல்லாமல் புனைகதைகளுக்கு நெருக்கமான மொழியில் அரசியல் கட்டுரைகளும் எழுதக்கூடியவர். அவரது பெயரை எண்பதுகளில் வந்த மன ஓசை இதழில் முதன்முதலில் பார்த்த நினைவிருக்கிறது.

தென்மாவட்டங்களின் எழுத்தாளர்கள் சாகித்திய அகாதெமி விருதுபெற்றபோது நான் பணியாற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்குகள் நடத்தியுள்ளோம். பல்கலைக் கழகத்திற்கு அழைத்துப் பாராட்டியுள்ளோம். அந்த மாதிரியைப் பின்பற்றித் தேவிபாரதியின் படைப்புகள் மீது பல்கலைக்கழகம் ஒன்று கருத்தரங்கு நடத்திக் கொண்டாட வேண்டும். அண்மைக்காலங்களில் சாகித்திய விருதுபெற்ற எழுத்தாளர்களின் எழுத்துகள் மீது பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் கவனம் செலுத்துகின்றன. இமையத்திற்குச் சென்னை பல்கலைக்கழகமும் அம்பைக்குப் புதுவைப்பல்கலைக்கழகமும் ஆய்வுக்கருத்தரங்குகள் நடத்தின.
 
தேவிபாரதி ஈரோட்டுக்காரர்; கொங்குமண்டல அடையாளங்கள் அவரது எழுத்துக்குள் இல்லையென்றாலும் அந்தப் பகுதி எழுத்தாளர் என்ற வகையில் அவரது எழுத்துகளைக் கருத்தரங்கப் பொருண்மையாக்கிக் கொண்டாட மூன்று பல்கலைக்கழகங்களுக்கு வாய்ப்பிருக்கிறது. கோவை பாரதியார், சேலம் பெரியார், வேலூர் திருவள்ளுவர் என மூன்றில் ஒன்றோ, மூன்றுமோ கூட அவரைக் கொண்டாட வேண்டும். ஒரு தமிழ் எழுத்தாளர் என்ற வகையில் எந்தப் பல்கலைக்கழகத்து இலக்கியத்துறையும் கொண்டாடலாம். அக்கொண்டாட்டத்தின்போது நான் பார்வையாளனாகவோ பங்கேற்பாளனாகவோ கலந்துகொண்டு நண்பரின் கைகளைப் பற்றிக் குலுக்கவேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்