மழையும் மழைசார்ந்தனவும்-5


மழை என்பது மழை மட்டுமல்ல. மழை சாரலாகவும் தூறலாகவும் பொழிவாகவும் அழிவாகவும் மாறிக்கொண்டே இருக்கிறது. மழை மனதிற்குள்  ஈரமாகவும் நேசமாகவும் காதலாகவும் காமமாகவும் மாறுகிறது. வெக்கையை உருவாக்கிப் பிரிவைப் பரிசளிக்கிறது. ஐந்தாம் பத்தில் நீலகண்டன், பரமேசுவரி, தூரன் குணா, சாய் இந்து, அலறி, கல்பனா, பெண்ணியா, காலபைரவன், த.அரவிந்தன்  எனப் பத்துப்பேரின் கவிதைகள்

41/ நிலவளம்
 
சாமை அறுவடைக்குப் பிறகு
நாம் சந்திப்பதை நிறுத்திவிட்டோம்.
பல ஆண்டுகள் கழித்து
மழை பெய்திருக்கிறது.
மேட்டு நிலமெங்கும்
விதைப்பின் குரல்கள்
உன்குரல் ஒலிக்காத நிலத்தில்
துவரை சால்விடுகிறேன்
என் விரல்களினூடாக
முத்தாக உருள்கிறாய்
மாளாத நிலம்
எதிரே விரிகிறது.
==========================================
நீலகண்டன்/அவியம்/ப.42/ புது எழுத்து,2011/
=========================================

49
==

மின்விசிறியைப் பிடித்தபடி
தொங்கிக்கொண்டிருந்தார் தேவகுமாரன்
திருப்பாற்கடலில் அறிதுயிலாழ்ந்த
பெருமாளுக்குப் பிரச்சனையில்லை
கள்ளச்சிரிப்புடன் ஏசுவைப்
பார்த்துக் கொண்டிருந்தார்
தாளமுடியாத சாக்கடை நாற்றத்தில்
திருமகள் நெளிய
ஊழிநடனமாடாமலே நிகழ்ந்த
செயற்கைப் பெருவெள்ளத்தால்
வாய்பிளந்தார் சிவபெருமான்
தன்னிச்சையாய் பார்வதியின் கை
கண்டத்தை நெரித்தது
சிவனின் முக்கலுக்கு எட்டிப் பார்த்த கங்கைக்கோ
ஆயிரம் சந்தேகம்
நீரில் மூழ்கி இசையிழந்திருந்தது
சரசுவதியின் வீணை
எங்கு தேடியும் கிடைக்காத அல்லாவை
பிணக்கிடங்கில் தேட
பிரம்மா கிளம்பியபோது
வெள்ளம் வடியத் தொடங்கியிருந்தது.
====================================
பரமேசுவரி/ முகநூல்/19/12/15

 


48/மழைநாளில் நினைவுகள்

===========================
மழைநாளில் நினைவுகள்
தீப்பற்றி எரிகின்றன.
கருமேகங்கள் நெய் வார்க்க
கொழுந்து விட்டெரியும்
அவை அழியாமல்
புடம் கொள்கின்றன
சாம்பலாய் உதிர்ந்து
காற்றில் பறந்து
கலைந்துவிடுமென்றால்
விடுதலையென்று சொல்லிவிடலாம்
அப்போது இருதயம்
சுமைகள் களைந்து
மலரைப்போல் மெல்லியதாகிவிடும்
ஆனால் எரிந்தெரிந்து
பசுமை நிலமாகும்
நினைவுகளை
செய்வதற்கு ஒன்றுமில்லை
மேலும் அதற்கு கருணையுமில்லை
காலத்தின்
தேர்ந்தெடுத்த கணங்களால்
செய்யப்பட்ட நினைவின் ஆயுதம்
தன் கூர்மையால் வதைக்கின்றது
எப்போதும் இறந்தகாலத்தில்
வாழுமொரு உயிருக்கு
எரியும் நினைவுகளே
நிகழ்காலமாக இருக்க
நினைவுகள்
தீப்பற்றி
எரிகின்றன
மழைநாளில்
----------------------------------------------------------------------------
கடல் நினைவு-தூரன் குணா/தக்கை/2012


 

47/ அழகூரில் பூத்தவனும் இறுதி நிர்வாணமும்
 
ஒரு மழை நாளுக்கென சேமிப்பில்
இருப்பதாய் சொல்கிறாய்
எனக்கென பிரத்யேகமான
கதகதப்பு அணைப்பினை
ஒரு கோடை வெய்யிலுக்கென
குளிரூட்டி கிடப்பில்
இருப்பதாய் சொல்கிறாய்
கைப்பற்றி நடக்கப் போகும்
கடற்கரைப் பொழுதுகளை
என் பாதங்களுக்கான முத்தங்களை
பாதுகாப்பாக பூட்டி வைப்பதாகவும்
தர வேண்டி வாங்கிய
ரோஜாவின் வாடிய இதழ்களை
இல்லத்தில் எங்கோ
மறைத்து வைப்பதாகவும்
முதல் முத்தம் நெற்றிக்கெனவும்
அதன்பின் தொடர்வதை எண்ணி
விநாடிகள் விரயம் வேண்டாம் என்கிறாய்
விஷம புன்னகையோடு
என் இறுதி நிர்வாணத்திற்கான
கோடி துணியோடு வா
ஒரு மாலை,
முதல் முத்தம்
பெற்றபின்
திருப்பி தர
என்னிடம் இருக்கப் போவது
அதொன்றுதான்
அழகூரில் பூத்தவனே
---------------------------------------
சாய் இந்து/ மே, 9. 2015



46/தப்பிக்க முடியாத மழை

--------------------------------------------
I
நேற்று நிலவழிந்த பின்னிரவு
சப்தமிட்டு பெய்த பெருமழை
இடியுடன் கூட முழக்கத்தை
சுருட்டிச் சென்ற போதும்
பெருகியோடும் வெள்ளத்தில்
விட்டுச் சென்றிருக்கிறது
தன்குரலை

II
நேற்று பின்னிரவும் அதிகாலையும்
காற்றைப் பிளந்து
கடலில் பெய்த பெருமழை
அலையின் பொறிக்குள் சிக்கி
தத்தளித்துக் கொண்டிருக்கிறது
கரைசேர முடியாமல்
============================== ===========
அலறி/ மழையை மொழிதல்/ 28/ காலச்சுவடு



45/சாலை மண் மழை
 

கணங்கள் தோறும்
வெவ்வேறு முகங்கள்
வெவ்வேறு வாகனங்கள்

வெவ்வேறு மேகங்கள்

தேயத்தேய நீண்டுறங்கும்
புழுதியையும் சேற்றையும்
மாறிமாறி அணிந்து சிரிக்கும்

“ குழந்தை அழுவானே எனக்காக”

காப்பகத்தை நினைத்த
இளம்தாயின் தவிப்பு மட்டும்

“அம்மா இந்த சாக்லேட்
சீக்கிரமாய்க் கரைந்து விடுகிறதே”

குழந்தையின் ஏக்கம் மட்டும்

“பூச்சி ஏதாவது கடிச்சிடுச்சா
எத்தனை வீக்கம்!”

கணவனின் வீங்கிய கையை வருடும்
பெண்ணின் கரிசனம் மட்டும்.

“நீங்க நல்லா இருக்கணும்”
இருபது பைசாவுக்கான
பிச்சைக்காரியின் நிறைவுமட்டும்

“ஏம்புள்ள விரட்டிப்புட்டான்
தெருத்தெருவா அல்லாடறேன்
எதுனா கொடும்மா”

காதைச் சுரண்டும்
பெரியவரின் குரல் மட்டும்..

வெடித்து உடைகிறது சாலை
கரைந்து உருகுகிறது மண்.

மழைக்காலங்களில் மட்டும்.
============================================================
கல்பனா/ பார்வையிலிருந்து சொல்லுக்கு .ப. /44/ காலக்குறி/ 1988

 

43/மழை
 
எந்த ஒரு உரையாடலும்
இல்லாத இடைவெளி
நிசப்தத்தில் உடைகிறது
இடத்தில் இருந்தவாறே
உணர்வெழும்பி
வேறு இடம் துளாவுகிறது.
வெற்று இடைவெளியில்
எதுவும் இல்லாதபடியால்
உரிய உருவம் ஒன்றினை
அங்கு நிரப்பிக்கொள்ளுதல்
காற்றுக்கு சாத்தியமானது

அந்தரங்கம் பேணத்தெரியா
இரவிலிருந்து
பகல் ஒளியைத் தேடிக்கொள்வது
பிரகாசம் நிறைந்த சூரியனுக்கு
சாத்தியம் ஆனதே.

குளிர்ந்த உடலைத் தழுவியபடி
எனக்கே உரிய மழை
என்னையே வந்து சேரும்
என் பாதங்களைக் கழுவ
என்னைத் தழுவிக்கொள்ள
நான் நடக்கின்ற வீதியெங்கும்
சிதறிக்கிடக்க
 
மழை
போதுமானது எனக்கு

-----------------------------------------------------------
2006 மார்ச்/ பெண்ணியா கவிதைகள். 13

 
42/ஞாபகத்தில் தேங்கிய வீடு
 
தன் வீட்டைக் கட்டிமுடித்த
திருப்தியில் உங்களைச் சிறுபுன்னகையோடு திரும்பிப்
பார்க்கிறாள்
சிறுமி சைதன்யா.

சுவர் கோணலாக இருப்பதாகக் கூறி நீங்கள் சிரிக்க
அவள் வாயிற்கதவைத் திறந்துவிட்டதாகக் கூறுகிறாள்.
கைநுழைய முடியாத நுழைவாயிலைக் கொண்டு
என்ன செய்துவிட முடியும் என்கிறீர்கள்.
உள்ளே நுழைந்து ஒளியேற்றிவிட்டேன் என்கிறாள்
ஒளிவெள்ளம் பெருகும் வீட்டை
தைமாத வெள்ளாமை கொண்டு நிரப்புவேனென்று
அவள் சூளுரைத்தபோது
ஈசானத் திக்கில் மேகம் திரண்டு மழை வலுக்கிறது.
உங்கள் குற்றச்சாட்டுகள் பெருகிக்கொண்டே இருக்க
வீடுகளாகக் கட்டிக்கொண்டே இருக்கிறாள் அவள்
பின் அவளின் வேகம் உங்களை மௌனமாக்குகிறது
சடுதியில் எல்லா வீட்டிற்குள்ளும் நுழைந்து
திரும்புமவள் உங்களை பார்க்கிறாள்.
பின் தலையுயர்த்தி ஈசானத்திக்கைப் பார்க்கிறாள்
குளிர்காற்றெடுக்க மின்னலும் இடியும் வலுக்கின்றன.
என்ன நினைத்தாலோ தெரியவில்லை
தான் கட்டிய ஒவ்வொரு வீட்டையும்
வேகத்தோடு இடித்துத் தரைமட்டமாக்கி
தன் பாவாடையை உதறிக்கொண்டு கிளம்புகையில்
காற்றும் மழையும் சுழன்றடிக்கின்றன.
இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது வெளிச்சம்
இடிபாடுகளுக்கிடையில்
வீடுகளிலிருந்த இடத்தை வெறித்துப்
பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்.
------------------------------------------------------------------------------------------------

காலபைரவன்/ஆதிராவின் அம்மாவை ஏன் தான் நான் காதலித்தேனோ?/ கே.கே.புக்ஸ்
 

41/பாலை, மழை, காளான்

=====================
பார்த்துப் பார்த்து
கால் நகங்களின் அழுக்கு நீங்கத் தேய்ந்து
சிலீரிட நன்றாய்க் குளிக்க
எதிர்படுகிறவர்களிடமெல்லாம்
தாராளமாய்ச் சொற்களைக் கொடுத்து வைக்க
வெறிப்பற்களால் குதறிக்கொண்டு
நாய்கள் போடும் ச்ண்டையெதையும்
அலுவலகக் கோப்புகளில் பார்க்காமல் கடக்க;
துயரைப் பின்னால் நிறுத்திக்கொண்டு வராத
மகிழ்ச்சியை விரல் பிடித்து நடக்க;
சென்றும் செல்லாமலும்
நிலைகொண்ட காட்சியோடு
வெறித்து, பிதுங்கிக் கிடக்கும்
விபத்துக் கண்களெதையும் வழிகளில் காணாமல் வீடு திரும்ப;
அருவியில் குளிக்க வைக்கும் புத்தக வரியிலிருந்து
அப்படியே நெட்டித்தள்ளி பாறையில் சிதறவிடும்
இடையூறற்று வாசித்துக்குளிர;
புகார்கள், கோரிக்கைகளால்
புடைத்திருக்காத அவள் புருவங்களைக் காண;
அவசரமின்றி பதற்றமின்றி
நெடுநேரம் நொறுங்கிப் புணர;
நினைவு வௌவாலெதுவும் கொத்தி எழுப்பாது
பற்றாக்குறையற்று தூங்க;
வாயில் வழுக்கியோடும் அல்வா துண்டுபோல
புதுச்சூரியனுக்குள் கால்பதித்துப் போக-
என்றாவது வாய்க்கும்
அந்த மழைநாள்களின் வெள்ளத்தில்
எல்லாப் பாலைநாள்கலும்
அடித்துப்போய்
காளான்களாய் முளைக்கின்றன.
==============================
த.அரவிந்தன்/ குழிவண்டு அரண்மனைகள்/ ப.57/அருந்தகை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்