பாசாங்குகள் இல்லாத ஒரு பகிர்வு: அபத்தம் இதழில் ஓர் உரையாடல்

2023, ஜூன் -ஜூலை மாதவாக்கில் ஒருமாதம் கனடாவில் இருந்தேன். மகன் இருக்கும் ஒட்டாவில் இருந்து கொண்டு அருகில் இருக்கும் சிறுநகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பயணம் செய்ததோடு, தலைநகர் டொரண்டோ நகருக்கும் சென்றேன். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்துள்ள கலைஞர்கள், எழுத்தாளர்கள் என நண்பர்கள் பலர் அங்கே இருக்கிறார்கள். இரண்டு நாவல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதோடு நண்பர்களோடும் சந்திப்புகளும் இருந்தன. அப்போது அங்கிருந்து வெளியாகும் அபத்தம் இதழின் ஆசிரியர்கள் ஜார்ஜ், கற்சுறா ஆகியோரோடும் சந்திப்பு நடந்தது. சந்திப்பு நடந்த கற்சுறாவின் உணவுவிடுதிக்கு என்னை அழைத்துச்சென்றவர் நண்பர் சின்னசிவா. முழு உரையாடலிலும் அவர் இருக்கவில்லை. பாதிநேரம் இருந்துவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.  அங்கே நான்குபேரும் பேசிக்கொண்ட உரையாடலைத் தொகுத்துத் தந்துள்ளது அபத்தம் இதழ்.  

கற்சுறா: மேற்கின் மேற்கு என்று அமெரிக்காவிற்குள்ளும் கனடாவிற்குள்ளும் பயணப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறீர்கள்? அதில் நீங்கள் ரொரண்டோவிற்கு வந்து கலந்து கொண்ட இரண்டு இலக்கியக் கூட்டங்களின் அனுபவம் குறித்துச் சொல்லுங்கள்?

அ.ரா: அவை பற்றித்தானே முகநூலில் இப்பொழுது ஓடிக் கொண்டிருக்கிறது.

ஜோர்ஜ்: ஓம். பரதன் நவரத்தினம் அதுபற்றி எழுதியிருந்தார். முதல் நாள் போனது கள்ளர் கூட்டம். நேற்றுப் போனது காடையர் கூட்டம் என்று எழுதியிருந்தார். நட்சத்திரன் செவ்விந்தியனும் தன் பங்கிற்கு ஆ. சி. கந்தராசா பற்றி விபரமாக எழுதியிருந்தார். பார்த்திருக்கிறீர்களா?


அ.ரா: ஆமாம் பார்த்தேன். நட்சத்திரன் செவ்விந்தியன் அவர்கள் நீண்ட நாட்களாக ஆ.சி. கந்தராசா பற்றி எழுதிக் கொண்டேயிருக்கிறார். இந்த நிகழ்வு நடைபெறுவது குறித்தும் தனது கருத்தை எழுதியிருக்கிறார். நேற்றுக் கூட்டத்திலயும் கொஞ்சம் சலசலப்பு. அது தீபச்செல்வனது “பயங்கரவாதி” நாவல் குறித்த நிகழ்வு. நான் எல்லாம் பேசி முடித்து விட்டேன். அந்த நாவலுக்கான தீபச் செல்வனது “றோல்” என்னவென்று பேசினேன். கதையின் பாத்திரங்கள் குறித்து என்ன வரைபு செய்திருக்கிறார் என்று பேசினேன். பல்கலைக் கழகத்தில் நடந்தவை எல்லாம் நேரடியான தகவல். அவரது அனுபவம். மாணவர் இயக்கத்திலையும் இருந்திருக்கிறார். அதையெல்லாம் நல்லாத்தான் எழுதியிருக்கிறார். அதிலையும் விடலைப்பருவத்து மனநிலைகளையும் கொண்டுவந்திருக்கிறார். என்றாலும் நன்றாக இருக்கிறது.

அதன் மையப்பாத்திரமான மாறன் இயக்கம் சார்ந்து காம்பஸ் போய் புலிகள் அனுப்பிப் படிப்பிக்க வைத்தவர் என்றமாதிரி இருக்கிறது. ஆனால் அங்கே நடந்த செயற்பாடுகள் சாதாரணமாக ஒரு மாணவன் போனவுடன் என்ன செய்வானோ அதேமாதிரியான செயற்பாடுகள் உள்ள ஒருவனாகக் கதை சொல்லப்படுகிறது. ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் காதலிப்பான். முத்தம் கொடுக்க வேண்டும் என யோசிப்பான் இப்படித்தான் அது சொல்லப்படுகிறது. ஒரு இயக்கம் சார்ந்து இப்படி இருப்பதற்கான வாய்ப்புக் குறைவு. விதிமுறைகளில் அவன் கவனமாக இருப்பான்.அதனை விட வெளியில ஒரு போராட்டம் நடக்கிறது. அதற்குப் பல்கலைக்கழக மாணவர்களாக அதற்குக் கொடுக்கும் தார்மீக ஆதரவுப் பகுதிகள் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது. அதில அவரிடம் ஒரு உண்மை இருக்கிறது. ஆனால் இயக்கம் நடத்தின போர், அங்கே நடத்தின தமிழீழ அரசாங்கம் என்று அதைப் பற்றியெல்லாம் எந்த விமர்சனமும் இல்லாமல் பாராட்டுகிறார். அங்கேயிருந்த அறிவுச் சோலை( இது செஞ்சோலையா) பொங்கு தமிழ், திலீபன் மருத்துவமனை என்று இந்தமாதிரியான விடயங்கள் எல்லாவற்றையும் சொல்லுகிறார். ஆனால் இவற்றை அவர் சொல்லும் பொழுது பல்கலைக்கழக வாழ்வில் சொல்லப்படும் நேரடி அனுபவம் சார்ந்த பங்கேற்பு மனநிலை இங்கே இல்லாமல் போகிறது.

    ஜோர்ஜ்: செயற்கைத்தனம் என்பது இதனைத்தான்.
அ.ரா: ஆமா. அது நாவலுக்குள்ளேயே இருக்கிறது. அப்படித்தான் எழுதியிருக்கிறார். அப்படித்தான் அவரால் எழுதவும் முடியும்.

ஜோர்ஜ்: ஏனென்றால், இவர்கள் குறிவைக்கும் வாசகர்கள் என்பவர்கள் வேறு. அவர்களைக் குறிவைத்தே இவை எழுதப்படுபவை.

அ.ரா: அப்படி ஒன்றும் இருக்கிறது என்றாலும், இவர்களால் முடியவே முடியாது. எந்த எழுத்தாளனுக்கும் கேட்பதை எப்படி எழுதுவது என ஒன்று இருக்கிறது. கேட்பதை எழுதுவதற்கும் அனுபவித்ததை எழுதுவதற்கும் வேறுபாடு இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த நாவலில் அவர் தான் நம்பின அரசியலுக்கு விசுவாசமாக இருக்கிறார் என்பதை விடவும் அதுகுறித்து ஒரு கிராப்ட் -கலைநுட்பம் -பண்ணியிருக்கிறார். இதில புலிகள் மீதிருக்கும் சில விமர்சனங்களிற்கு, அதவாது சிறுவர் படை, மற்றும் முஸ்லீம்கள் மீதான வெறுப்பு போன்ற விமர்சனங்களுக்கெல்லாம் அவர் நேரடியாப் பதில்சொல்லாமல் அதற்கெனச் சில கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார். முகமாலைப் பிரச்சனைக்குப் பிறகு பல்கலைக்கழகத்திற்கு நேரடியாகப் போகமுடியாது, பொதுவாக கிளிநொச்சியூடாக ஒரு நாளில் பயணிக்கும் பயணத்தை 3 நாட்கள் பயணம் செய்து கப்பலில் போகிறார்கள். திருகோணமலைக் கூடாகச் சுற்றிப் போகும் அந்தப் பயணத்தில் ஒரு முஸ்லீமுடன் நடக்கும் உரையாடலில் அவரும் “எங்காக்களும் கொஞ்சம் தப்புப் பண்ணிட்டாங்க” என்பதுமாதிரி… ஒவ்வொரு விடயத்திற்கும் அந்த நாவலுக்குள்ளேயே பதிலிருக்கிறது.

அதேமாதிரி ஆர்மில சந்திம என்று ஒருவர் இருக்கிறார். அவர் மாறனைப் பல நேரங்களில காப்பாற்றுகிறார். பந்துல என்பவர் பிரிகேடியர். அவனுடன் விவாதித்து விவாதித்து இவன் படிக்க வந்திருக்கிறான். இவன் நல்லவன் என்று இவனைக் காப்பாற்றுகிற நல்ல சிங்களச் சிப்பாயும் அந்தக் கதைக்குள் இருக்கிறான். அவன் யாரென்று பார்க்கும் போதுதான் எனக்குச் சந்தேகம் வந்தது. வெலிக்கடைச் சிறைப் படுகொலை முடிந்து 83க் கலவரம் தொடங்கியபோது கொழும்பில் அடிபட்ட தமிழ் மக்களை மனிதாபிமானத்தோடு காப்பாற்றிய ஒருவரின் மகன்தான் இந்த ஆர்மி. இது ஒரு கிராப்டுதான். இதனைப் பலர் செய்வார்கள்தான். ஒரு வகைமாதிரியான பாத்திரங்களை தமது அரசியலுடன் உருவாக்க வேண்டும் என நினைப்பவர்கள் இதனைத்தான் செய்வார்கள்.

கற்சுறா: நம்முடைய கதை சொல்லி சோபாசக்தியும் இந்த விளையாட்டைப் பின் நாட்களில் எழுதி வந்த அதிக கதைகளில் தமிழ் நாட்டு வாசகர்களுக்காக அதிகம் செய்திருப்பார். கதை சொல்வதை விட இவர்களுக்கு “கிராப்ட்” முக்கியம்.

அ.ரா: ஆமா. அப்படித்தான் இங்கேயும். அதனைவிட முக்கியமாகக் கவனிக்க வேண்டும். இந்த நாவலில் இருக்கின்ற முக்கியமான அடையாளங்கள் எல்லோரும் இயக்கம் சார்ந்த குடும்பத்திலிருந்து வந்தவர்களாக இருப்பார்கள். அதாவது மாறன்- மலரினி என்று அர்களுடைய அடையாளம் மட்டுமல்ல அவர்களது குடும்பப் பின்னணியும் அவ்வாறே சொல்லப்படுகிறது. மற்றவர்களைப் பற்றி அந்த நாவலில் ஒன்றுமே கிடையாது. அந்த சமூகம் எப்படி இருந்தது என்று ஒன்றுமே கிடையாது. இதுதான் எனது விமர்சனமாக இருந்தது. இந்த மாதிரி விடயங்களைச் சொல்லிவிட்டு அவருக்கு புனைவாக – fiction - ஆக்குவதில் போதாமை இருக்கிறது.பல்கலைக்கழக வளாகத்தின் - Real cambus- வாழ்வைச் சொல்லும் இடம் சிறப்பாக இருக்கிறது என்றும் சொல்லிவிட்டேன். கூட்டமும் முடிந்து போய்விட்டது. கருத்துரை வழங்கும் போது ஒரு அம்மா முதலாவதாக கருத்துச் சொல்ல வந்தார்.

ஜோர்ஜ்: யார் அது? என்ன பெயர்?

அ. ரா: சிவவதனி பிரபாகரன் என்று சொன்னார்கள்.

ஜோர்ஜ்: ஐயோ… பாவம்.

அ.ரா: “பேராசிரியர் விமர்சனம் செய்யலாம். ஆனால் இந்த நாவலை அவர் புனைவு என்று சொல்லக் கூடாது. இது அனைத்தும் உண்மைச் சம்பவம்” என்றார் அந்த அம்மா… அப்படியாயின் இதில் வருகின்ற மாறன் என்கிறவர் தீபச்செல்வன் தான் என்றால், மாறன் இறந்து போகிறானே இந்த நாவலில்.எப்படிப் fiction ஆகும் என்ற விடயத்தை யாருமே புரியமாட்டேன் என்கிறார்கள்.

ஜோர்ஜ்: என்னவென்று சொன்னால் இந்த யாழ்ப்பாணத்து ஆக்களுக்கு ஒரு narrative ஒன்றிருக்கிறது. நடந்தது ஒரு புனிதப் போராட்டம். இந்தத் துரோகிகள் தங்களைக் காட்டிக் கொடுத்திருக்காவிட்டால் தாங்கள் ஈழத்தைப் பிடித்திருப்போம் என்று கதை சொல்லுகிறார்கள்.

அ.ரா: ஆமா. இதில எல்லாத்துக்கும் ஒரு கதை இருக்கிறது. அதேபோல் துரோகிகளுக்கும் ஒரு கதாபாத்திரமும் கதையும் வருகிறது. அந்த பாத்திரத்தின் பெயர் நிரோஜன். மாணவர் தலைவராக ஆக முடியாததால், ராணுவத்தோடு சேர்ந்து துரோகம் செய்கிறான். பயன்படுத்திய பின் தூக்கியெறியப்படுகிறான்.

ஜோர்ஜ்: இதுவந்து typical யாழ்ப்பாண story.

கற்சுறா: மன்னிக்கவேண்டும் இதனை இந்த இடத்தில் ஞாபகப்படுத்துவதற்கு. யுத்தம் முடிந்த காலத்தில் கவிஞர் கருணாகரன் அவர்கள் காலச்சுவட்டில் எழுதியதாக ஒரு கட்டுரை திரும்பவும் அண்மைக்காலத்தில் பேசப்பட்டதல்லவா? அந்தக் கட்டுரை குறித்து தீபச்செல்வன் குமுறியெழுந்து கருணாகரன் இப்படித்தான் என்றெல்லாம் பதிவு செய்திருந்ததைக் கவனித்திருப்பீர்கள்தானே? அதற்குக் கருணாகரன் இந்தக் கட்டுரையை எனது கையெழுத்திலிருந்து ரைப் செய்து காலச்சுவட்டிற்கு அனுப்பி வைத்ததே நீதானே என்று கேட்ட போது, வீரரோசம் வீரமானம் எல்லாம் தீபச்செல்வனுக்கு எங்கு போய் ஒழிந்தது என்று தெரியவில்லை.


ஜோர்ஜ்: எங்களுடைய பிரச்சனையெல்லாம் இதுதான் பேராசிரியரே… இவர்கள் எல்லோரும் கூட்டுக் களவாணிகள். இவர்கள் ஒரு narrative ஒன்றை வைத்திருக்கிறார்கள். அது வந்து எங்கேயும் விற்கலாம். ஒன்று யாழ்ப்பாணத்தரிட்டயும் விற்கலாம் தமிழ் நாட்டுக்காரர்களிடமும் விற்கலாம். அதனை வைத்து நடக்கின்ற பிழைப்புத்தான் இந்த விடயம்.

அ.ரா: தமிழ் நாட்டிலயும் கொஞ்சப்பேர் வாங்குவார்கள். தமிழ்நாட்டில் புலிகள் தவறானவர்கள் என்று பேசுபவர்கள் குறைவுதான். புலிகளுக்கு இன்றும் அதிக ஆதரவு உண்டு. ஆனால் அரசியல் ரீதியாக ஆதரவு கிடையாது.

ஜோர்ஜ்: இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் தேசத்திலையும் புலிகள் என்ற பெயர் பிழைப்புக்காகப் பயன்படும் சொல்லே அன்றி அதனை வைத்து அரசியல் செய்யமுடியாது.

அ.ரா: இலங்கையில் இந்த நிலை, வெளிநாட்டை விட அதிகமாகக் குறைந்திருக்கிறது. திரும்பவும் புலிகள் அமைப்பைக் கட்டுவதோ, ஆயுதப்போரைத் தொடங்குவதோ அங்கு நடக்காது; யாரும் தயாராக இருக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். நான் இரண்டு தடவை இலங்கை சென்றிருக்கிறேன். அதன் வழியாக உணர்ந்ததைச் சொல்கிறேன் . அங்கே புலிகள் பற்றிப் பேசுவதற்கு ஆட்கள் தயாராக இல்லை. நான் இரண்டு தடவை சென்ற போதும் நாடகப்பட்டறைகள் நடத்தினேன். ஒவ்வொரு இடத்திலையும் 50 பேர் வரை பையன்களும் பிள்ளைகளும் இருந்தார்கள். அவர்களுக்கு ஒரு நாடக்கரு – theme - கொடுத்துக் கொண்டு இருந்தேன் . அவர்களுடைய பழைய வாழ்க்கையும் இப்போதைய நிலையும் ஞாபகம் வாறதுமாதிரியான நாடகக்கருக்களையே - அவர்களுக்கு விளக்கிச் சொல்லாமல் கொடுத்துக் கொண்டிருந்தேன். “வந்த பாதை தெரிகிறது; போகும் பாதை தெரியவில்லை” என்ற ஐடியாவை வைத்து பண்ணுங்கள் என்று சொல்லி எல்லா இடத்திலையும் கொடுத்தேன். நுவரெலியா, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் என்று நான்கு இடங்களிலும் கொடுத்தேன். அவரவர் அரசியலைத் தொடுவார்கள் என்று பார்த்தால் யாருமே தொடவில்லை. நுவரெலியாவில் மலையகவாழ்வு, இந்தியாவிலிருந்து வருகை என்று அவர்கள் அதனைப் பேசினார்கள். ஈழப் பகுதி மாணவர்கள் அதனை அரசியல் சொல்லாடலாகப் பார்க்கவில்லை. அரசியல் தெரியவில்லை என்பதல்ல; எந்த அரசியலை எப்படி முன்வைப்பது என்று தெரியவில்லை. நீண்டகால அரசியல் போராட்டம்; போர்களைக் கடந்துள்ளவர்களுக்குள் இப்படியொரு நிலை என்பதுதான் வேதனை.

ஜோர்ஜ்: என்னவென்று சொன்னால் இவங்களுக்கு என்ன அரசியல் கற்பிக்கப்பட்டிருக்கிறதோ அது மட்டுந்தான் அரசியல் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அ.ரா. புலம்பெயர் நாடுகளிலிருந்து செல்லும் மிகப்பெரிய பணவருவாயால் அவற்றை நிவர்த்தி செய்ய முடியாதது. அங்கே மிகப்பெரிய கோயில்கள் கட்டுகிறார்கள். உற்பத்திசார்ந்த முதலீடுகள் இல்லை. ஆனால் வன்னியில், கிளிநொச்சி போன்ற இடங்களே மிகப் பெரிய பின் தங்கிய நிலையில்தான் இன்னும் இருக்கிறதது. அதே இந்திய முதலாளிகள் முதலீடு செய்ய வருகிறார்கள் என்பதும் தெரிகிறது.

ஒரு சிறிய இடைவேளையின் பின்னர். பேசத் தொடங்கினோம்.

ஜோர்ஜ்: தமிழ் நாட்டு அரசியல் குறித்துப் பேசும் போது அதற்குள் நிலவும் ஊழல் குறித்து பேசாது தவிர்க்கலாமா?

அ.ரா: தமிழ்நாட்டில் மற்றவர்களுடைய ஊழல்களைச் சொல்லி ஓட்டு வாங்க முடியாது. அங்கே ஊழல் என்பது வழமையானதாக மாறிவிட்டது. இன்று தி.மு.க. காரர்கள் ஊழல் செய்கிறார்கள் என்று சொல்லி, இன்னொருவரை காட்டி ஓட்டுப் போடுங்கள் என்று சொல்ல ஒருவரைக் காட்ட ஆளில்லை. பா.ஜ.க.வின் மாநிலத்தலைவர் ஊழல் பற்றிப் பேசுகிறார். ஆனால் அவர் காட்டப் போவது எடப்பாடி பழனிச்சாமியை. எடப்பாடி பழனிச்சாமியை விட்டுவிட்டல்லவா ஊழலற்ற ஒரு வரைக் காண்பிக்க வேண்டும். அதனால அங்கே ஊழல் என்பது அடிபட்டுப் போய்விடும்.அதே அண்ணாமலை வாரிசு அரசியல் என்று பேசுகிறார். வாரிசு அரசியல் பேசினால் அ.தி.மு.க.விலும் வாரிசு அரசியல் இருக்கிறதே. மாநில அளவில் வாரிசு அரசியல் இல்லாதது போலத்தோன்றலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரிசுகள் தான் கட்சியின் பிரபலங்களாக இருக்கிறார்கள். 

ஜோர்ஜ்: வட இந்தியாவிலும் இருக்கிறதுதானே.

அ.ரா: ஆமா. ஆமா. மேலேயும் இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு வேணுமானால் வாரிசு இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலாவின் வாரிசுகள் தானே இப்போது இருக்கிறார்கள். இப்பொழுது எடப்பாடி பையன் வந்திருக்கிறான். ஓ.பி.எஸ் பையன் வந்திருக்கிறான். பாட்டாளி மக்கள் கட்சியிலும் வாரிசுதான். எப்படி தி.மு.க.-வினை மட்டும் வாரிசு அரசியல் என்று சொல்லமுடியும். இந்த நிலை பிஜேபியிலும் இருக்கிறது. மாநிலங்களில் அதன் தலைவர்கள் வாரிசுகள் என்பதை மறுத்துவிட முடியாது. கருத்தியல் ரீதியாக அதில் எந்த மாற்றமும் இல்லாமல் தானே இவர்களும் வருகிறார்கள்.

கற்சுறா: எப்படி சினிமாவில் வாரிசுக்களை நடிக்கக் கொண்டு வருகிறார்களோ அதோபோல் அரசியலிலும் தொடர்கிறதல்லா?

அ.ரா: இவர்கள் நடிக்கவைத்துக் கொண்டு வருகிறார்கள். அதே போல் மற்றவர்களும் செய்கிறார்கள். முயற்சிக்கிறார்கள். ஆனால் அது முடியல்ல.

ஜோர்ஜ்: மற்றது.Money. எல்லோரிடமும் அளவுகடந்த பணம் இருக்கிறது. அவர்களது பணத்தினை வைத்து எதுவும் செய்யலாம் என்ற நிலை இருக்கிறது.

அ.ரா: பணம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் பணம் சிறிலாங்காவிலும் முதலீடாகியிருக்கிறது. இலங்கையில் இருக்கிற பெரிய மீடியா வந்து தமிழ் நாட்டிலிருக்கிற சன் குரூப்தான். பெரிய அளவில அவங்கள்தான் இன்வஸ்ட் பண்ணியிருக்கிறாங்கள். அப்புறம் பெட்ரோலியம் சார்ந்து இன்வஸ்மென்டை வைத்திருப்பவர், ஆர். எம் வீரப்பன் கூட இருந்திட்டு இப்பே டி.எம்.கேயுடன் இருக்கிறார். ஜெகத்ரட்சகன் என்ற நாடாளுமன்ற உறுப்பினர்

ஜோர்ஜ்: அவருக்கு எத்தனையோ மெடிக்கல் கொலேஜ், என்ஜினியரிங் கொலேஜ் எல்லாம் இருக்கிறதல்லவா?

அ.ரா: அவர் எல்லோருடனும் இருப்பார். எந்தக் காலத்தில் யார் கவர்மெண்டோ அவர்கள் கூட இருப்பார். அப்படி நிறையப் பேர் இருக்கிறாங்கள். இப்ப புதிய தலைமுறை தொலைக்காட்சியின் உரிமையாளர் அப்படிப்பட்டவர். எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் அதிபர் பச்சமுத்து. பேருக்கு ஒரு கட்சி வைத்திருக்கிறார். ஆனால் எந்தக் கட்சி அரசுக்கு வருகிறதோ அவர்களோடு கூட்டுச் சேர்ந்து விடுகிறார். முதலில் காங்கிரசுக்கு சப்போர்ட் பண்ணினார். பின்பு பி.ஜே.பிக்கு சப்போட் பண்ணினார். இங்கு தமிழகத்தில் டி.எம்.கே. இருந்தாலும் சப்போட் பண்ணுவார். எ.டி.எம்.கே. இருந்தாலும் சப்போட் பண்ணுவார்.அப்படி ஒரு ஐந்தாறுபேர் தமிழ்நாட்டில் இருக்கிறாங்கள். இப்படியானவர்களில் பலரும் எம்.ஜி. ஆரினால் உருவாக்கப்பட்டவர்கள்.

எம்.ஜி.ஆர் காலத்தில அவர் கைவசம் இருந்த பணத்தையெல்லாம் தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்காக, நீ முதலீடு பண்ணிக்க என்று சொல்லி நிறைய இடங்களில் கொடுத்து வைத்தார் என்று சொல்வார்கள். அதனுடன் அவர் காலத்தில் தான் காலேஜ் , ஸ்கூல் எல்லாம் தனியார் மயப்படுத்தியதுடன் தனியார் பல்கலைக்கழகங்களும் உருவாக்கப்பட்டன என்பதோடு இணைத்துப் பார்த்தால் இது புரியவரலாம். வேலூரில் வேல் யூனிவேர்சிற்றி ஒன்று இருக்கிறது. அதன் நிறுவனர் விஸ்வநாதன் கூட எம்.ஜி. ஆரின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் தான்.

கற்சுறா: நாங்கள் கவனிக்க வேண்டும், தமிழகத்தில் மாஞ்சோலைப் படுகொலை நடைபெறுகிறதல்லவா, அது தி.மு. க. ஆட்சியில்தான் நடைபெறுகிறது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சி இருந்திருந்தாலும் அதேதான் நடந்திருக்கும் ஏனெனில் பங்கீட்டுப் பிரச்சனைகளில் கட்சிகளுக்குள் பேதமில்லையல்லவா?

அ.ரா: ஆமா… ஆமா… அதில யாரு இருந்தாலும் அப்படித்தான் நடக்கும். அங்கே எந்த முதலாளியை யார் சப்போர்ட் பண்ணுவது என்பதில்தான் இருக்கிறது. அந்த நேரத்தில எம்.ஜி. ஆர் ஆட்சியில் இருந்த நேரத்தில் கல்வித்தந்தைகளாக மாறி சுயநிதிப் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிச்சவர்களில் பலபேர் எம்.ஜி.ஆரோட நலன் விரும்பிகள். அவரது பணத்தை வைத்தே ஆரம்பித்தார்கள் என்று சொல்வார்கள் . சென்னையில் வந்து ஜேப்பியார். கல்வித்தந்தை ஆவதற்கு முன்னால் சாராய வியாபாரத்தோடு அறியப்பட்டவர். அ இ அதிமுகவிற்குள் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். அவர்கள். ராமச்சந்திரன் என்று பெயர் வைத்திருப்பவர்களோடு ஜாயிண்ட் எக்கவுண்ட் வைத்திருப்பார் என்று சொல்வார்கள். இதெ ஏன் சொல்றேன்னா.. தமிழ்நாட்டில லஞ்சம், ஊழல் என்பது ஒரு சிஸ்டமா இருக்குங்கிறதுக்காகத் தான். எம் ஜி ஆர் காலத்தில் முதலீடு செய்வதற்கு அவருக்கும் அவரது கட்சிக்காரர்களுக்கும் தெரிந்த ஒரே வழி கல்வித்துறை. ஒரு அறக்கட்டளை வேண்டும். அதில் ஆகக் குறைந்தது 9 பேர் இருக்க வேண்டும். அந்த 9 பேருக்குள்ள உங்கள் வீட்டில் உள்ளவர்களில் 6 பேரைப் போட்டால் சரி. மற்றவர்களில் ஒரு லோயர்; ஒரு ஆடிட்டர் இருப்பார்கள். நிதியைக் கணக்கு காட்ட அவர்களுக்குத்தானே தெரியும்.

ஜேர்ஜ்: ஓகே…ஓகே… யாருடைய காசு யாருடையது என்று தெரியாது என்பதற்காகத்தானே? இஞ்ச நீங்கள் போய்ப் பர்த்துச் சந்தித்து வந்தவர்கள் முழுப்பேரும் அதுதான். தலைவர் வந்தால் தாறம் என்று சொல்லுற ஆக்கள் தான்.
கற்சுறா: ஆக மொத்தம் ஒரு கனடா இலக்கியத் தோட்டம் என்ற நிறுவனம் செயற்படுவதுமாதிரி என்று சொல்லுகிறீர்கள்.

ஜோர்ஜ்: இது ஒரு அமைப்பு ரீதியான - Systematic corruption - தானே?

அ.ரா. அறக்கட்டளைகளின் பெயரில் அரசாங்கத்திடம் நிலத்தை மானியமாகப் பெறலாம். கலை, கல்வி போன்றவற்றுக்குத் தொண்டாற்றுவதாகச் சொல்லி 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்குப் பெறுவார்கள். இது இப்போதில்லை. காங்கிரஸ் காலத்தில் இருந்த தொடரும் நடைமுறைதான். யாரெல்லாம் அறக்கட்டளைகளின் பெயரில் கல்வி நிறுவனங்கள் நடத்துகிறார்களோ, அங்கெல்லாம் இந்த முறைப்படுத்தப்பட்ட – சிஸ்டமெடிக்கான ஊழல் நடக்கும். புதிதாகக் கல்வி, சமூகத்தொண்டு நிறுவனங்கள் தொடங்குபவர்களும் இப்படித்தான் செயல்படுகிறார்கள். மத்தியில் ஆளுங்கட்சிக்கு உதவும் வகையில் துணை அமைப்புகள் தொடங்கப்பட்டு நன்கொடைகள் பெறப்படுகின்றன. புது வகைச்சாமியார்கள் சாமியார்களாகவும் வியாபாரிகளாகவும் இருக்கிறார்கள். உண்டியல் வருவாயெல்லாம் கணக்கில் வராது.
ஜோர்ஜ்: அதுதானே பிராமணர்கள் தமது நிலங்களைத் திருப்பித் தரவேண்டும் என்று கோசமிடுகிறார்களே?

அ.ரா: நிலங்களை அல்ல; கோவில் சொத்துக்களை… கோவில் அதிகாரம் என்பது அதுதான். ஒவ்வொரு கோயிலுக்கும் நூறு, ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. மன்னர்கள் காலத்தில் எழுதி வைக்கப்பட்ட மானியங்கள். அதனைக் கொண்டு கட்டப்பட்ட சத்திரங்கள், மண்டபங்கள் போன்ற அசையாச் சொத்துகள் இருக்கின்றன. குறைந்த வாடகையில் பலரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

*******

ஜோர்ஜ்: திராவிடம் என்ற பெயருக்குள் இன்று அதிகமானவர்கள் உத்தியோகபூர்வமான தி.மு.க. ஆதரவாளர்களாகத்தானே இருக்கிறார்கள். நமது மனிஷ்ய புத்திரன் மாதிரி?

அ.ரா: மனுஷ்யபுத்திரன் நேரடியாகக் கட்சியில் சேர்ந்து விட்டார். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் கருணாநிதி காலத்திலேயே சேர்ந்துவிட்டார். இன்னும் சில கவிஞர்களும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அதன் ஆதரவாளர்களாகக் காட்டிக்கொள்வார்கள். மற்ற நேரங்களில் வலதுசாரி, இந்துத்துவ அழகியலோடு கவிதைகளையும் கதைகளையும் எழுதிக்கொண்டிருப்பார்கள். திராவிடக் கலையியல், திராவிட இலக்கிய நோக்கு என்பதைப் பற்றிய ஒவ்வாமையோடு இருப்பார்கள். ஆனால் அதிகாரத்துக்கு வந்த திராவிட அரசாங்கத்தை நாடிச் செல்லும் வழியைச் சரியாகச் செய்வார்கள். அதற்கு திமுகவின் இலக்கிய முகங்களான கவி.கனிமொழி, கவி. தமிழச்சி, எழுத்தாளர் இமையம் போன்றவர்கள் பயன்படுகிறார்கள். .

ஜோர்ஜ்: இப்பொழுது பத்ரி அவர்களது பிரச்சனை ஒன்று தோன்றியிருக்கிறதல்லவா? பத்ரி வந்து அம்ருதாவில ஆலாசகராக இருந்தாரா?

அ.ரா: அம்ருதாவில நான் கூடத்தான் ஆலோசகர். திலகவதி ஒரு பத்திரிகை ஆரம்பித்தார். அவர் அப்பொழுது போலீஸ் ஓவ்விசர். அவர் தன்னுடைய பெயரைப் போடமுடியாது. அதனால் அவர் பையன் பெயரினைப் போட்டிருக்கிறார்கள். அதற்குக் கீழே ஆலோசகர் என்று உங்கள் பெயரைப் போடலாமா என்று கேட்பார்கள். இதனாலென்ன யாருக்கும் ஒரு பிரச்சனையுமில்லை. அதுஒரு பெரிய “றோலே” கிடையாது. ஒரு நாடகம் பற்றி ஒரு கட்டுரை அதில் வருகிறதென்றால் அதுகுறித்துக் கூட இன்று வரை என்னிடம் எதுவும் கேட்டது கிடையாது. அப்படித்தான் இருக்கிறது அதிகமான பத்திரிகைகளில் இந்த ஆலோசகர் என்ற கதை.

கற்சுறா: இப்படிப் பேருக்கு இருக்கும்ஆலாசகர் என்ற இடத்திற்கு உங்கள் பெயரைப் பாவிக்க நீங்கள் எவ்வாறு சம்மதிக்க முடியும்?

அ.ரா: அது ஆரம்பிக்கும் போது அது ஒரு இலக்கியப் பத்திரிகைதானே.. இலக்கியப்பத்திரிகையில் பெயர் இருந்தால் பயன்படும் என்று தான் ஒத்துக்கொண்டேன்

கற்சுறா: அது உங்களுடைய அடையாளத்தைச் சீரழிக்குமாயின் நீங்கள் அதனை மறுக்கத்தானே வேண்டும்?
அ.ரா. அம்ருதாவில் ஒரு அரசியலும் பேசுவதில்லை. தனியே இலக்கியத்திற்குள்தான் நிற்கிறார்கள். அதிலும் தளவாய் சுந்தரம் அவர்கள் கேட்டார். அவர் என்னுடைய மாணவன். தன்னைத்தான் அதனைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள். உங்கள் பெயரைப் பாவிக்கிறேன் என்றான். சரி என்றேன். இதில எனக்கு ஒன்றுமேயில்லை. அவர்களே முதல்ல, எம்.ஜி.ஆர். காலத்தில அவரை சப்போர்ட் பண்ணினார்கள். காவல் துறைக்குள் அவருக்கு வால்டர் தேவாரம் ஆசான். அதெல்லாம் எனக்குப் பின்னால்தான் தெரியும். அதையெல்லாம் விட அம்ருதா எல்லாம் ஒரு பெரிதாக ஒன்றுமில்லை என்பதால் அதில் பெயர் இருப்பதைப் பொருட்படுத்தவில்லை.

ஜோர்ஜ்: நான் முன்பே விகடனிலேயோ குமுதத்திலேயோ வாசித்தேன் அதுபற்றி.

கற்சுறா: இதுவந்து எப்படியிருக்கிறதென்றால் காலம் பத்திரிகையில் மற்றும் இலக்கியத் தோட்டத்தில் கவிஞர் செழியன் அவர்களை ஆலாசகராகவும் உறுப்பினராகவும் வைத்திருந்த கோமாளித்தனம் போலத்தானே!

ஜோர்ஜ்: ஒப்புக்குச் சப்பாணிக் கதைதான். அதுசரி… நீங்கள் முத்துலிங்கம் அவர்களைச் சந்திக்கவில்லையா?
அ.ரா: நான் இதுவரை அவரைப் பார்த்ததில்லை. 2016 இல் நான் முதல் வந்தபோதும் அவரைப் பார்க்கவில்லை. பார்க்க விரும்பினேன். அப்போதும் இப்போதும் டொரண்டோவில் இல்லை என்று தெரிந்தது. இந்த முறை ஆ.சி.கந்தராசா நாவல் வெளியீட்டில் பார்க்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் வரவில்லை. அவரது வாழ்த்துரையாக - ஆசிக் கட்டுரையாக ஒன்று வாசித்தார்கள். அவர் எப்பொழுதும் ஒரு நழுவல் போக்குடையவர். ஒரு கருத்துச் சொல்ல வரும் பொழுது நழுவுவார். எதையும் நேரடியாகப் பேசமாட்டார் என்பது அதில் வெளிப்பட்டது.

ஜோர்ஜ்: அவருடைய பயண இலக்கியங்கள் பற்றிய உங்கள் கணிப்பீடு சரியானது எனத்தான் நான் நினைக்கிறேன். அது யாரோடு பேசியபோது சொன்னதாகச் சொன்னீர்கள்?

அ.ரா: முத்துலிங்கம் யாரென்றே தெரியாத அவரது கையெழுத்துப் பிரதி ஒன்றை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் பாண்டிச்சேரியில் இருந்தேன். அவருடைய ஏதோ ஒரு நாவல் கி.ரா அவர்களிடம் வந்திருந்தது. ஒரு கையெழுத்துப் பிரதி அது. கி.ரா. அவர்கள். அவருக்கு முன்னுரை எழுத, கருத்துச் சொல்ல வரும் பிரதிகளைப் பொதுவாக என்னிடம் கொடுப்பார். கொடுத்துப் படிக்கச் சொல்லிவிட்டு, படித்து ஏதாவது சொல்லுப்பா என்று சொல்லுவார். நான் அதனைப் படித்துவிட்டு இப்படித்தான் இருக்கிறது எனச்சொன்னேன். அப்போதுதான் முத்துலிங்கம் ஒன்றொருவர் இருக்கிறார். அவ் பல்வேறு நாடுகளில் வேலை செய்திருக்கிறார். அவற்றைப் பதிவு செய்கிறார் என்றார் கி.ராஜநாராயணன். ஒருவிதமான பயணக்கட்டுரைக்குள் தன்னை ஒரு பாத்திரமாக்கிப் புனைவாகத் தருகிறார் . அதை நாவலென்றோ சிறுகதையென்றோ சொல்லமுடியாதே என்றேன். “ தமிழில் அப்படி ஒன்று இருப்பது தப்பில்லையே” என்றார். ‘ஆமா இருந்துவிட்டுப் போகட்டும் தப்பில்லை’ என்றேன். அவருடைய சிறுகதைகள் கூட அப்படித்தானே இருக்கிறது.

ஜோர்ஜ்: எல்லாமே பயணக்கட்டுரைகள். இதயம் பேசுகிறது மணியம் மாதிரித்தான்.

அ.ரா: கட்டுரையை எங்கேயாவது ஒரு இடத்தில fiction ஆக மாத்துவார். அதுதான் அவர் செய்யும் வேலை.

கற்சுறா: இவர்களுடைய இலக்கியத் தோட்டம் என்ற விருது விழாவில் இந்தமுறை தமிழ் நாட்டிலிருந்து அழைக்கப்பட்ட சாம்ராஜ் என்பவரை நான் நினைக்கிறேன் முத்துலிங்கம் அவர்கள் அறிந்திருக்க மாட்டார்.

அ.ரா: ஆமாம். அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஜெயமோகன் இணையதளத்தில் அவரைப்பற்றி எழுதியிருப்பதால் அறிந்திருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் நிச்சயம் செல்வத்துக்குத் தெரியும். நீங்கள் கவனியுங்கள் முத்துலிங்கத்திற்கும் செல்வத்திற்கும் இந்த இலக்கியப்பரப்பில் கிடைத்த இடத்தை அவர்கள் தொடர்ந்து தக்க வைப்பதற்காகத்தான் இதனைச் செய்கிறார்கள் என்பதனை விட அதில் ஒன்றுமேயில்லை. தம்மைத் தொடர்ந்து அதேபோல் கொண்டு செல்வதற்கு யாரெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து பயன்படுவார்கள் என்று பார்க்கிறார்கள்.அவர்களை அழைத்து விருதுகளைக் கொடுக்கிறார்கள். அவ்வளவுதான். அதிலையும் யாருக்குக் கொடுக்க வேண்டும் அல்லது கொடுக்கக் கூடாது என்று அவர்களுக்குப் பெரிய விளக்கம் எல்லாம் கிடையாது.

இதனைவிடவும் தமிழ்நாட்டிலிருந்து பரிந்துரைகள் இருக்கும் என்றே நினைக்கிறேன். அதையும் ஒரே இடத்திலிருந்து பெறுகிறார்கள் என்று கூடச் சொல்ல முடியாது வெவ்வேறு வருசத்தில வெவ்வேறு ஆட்கள் சொல்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதனால சிலருக்கு இந்த வருசம் மற்றவர்களுக்கு அடுத்தவருசம், அதுதான். ஆனா அங்கயிருந்து ரெக்கமண்டேசன் பண்ணுபவர்கள், ஒன்று ஜெயமோகன் பக்கம் மற்றது காலச்சுவடு பக்கம். காலச்சுவட்டில் கண்ணன் என்றால் கண்ணனே சொல்கிறார் என்றில்லை. காலச்சுவடு குழுவில் இருக்கும் வெங்கடாசலபதி ,சுகுமாரன் என்று பேசி அவர்கள் தமக்கானவர்களைத் தெரிவிப்பார்கள்.ஜெயமோகன் தனக்கு வேண்டியவர்களைத் தெரிவிப்பார். இந்த ஆண்டு வந்துபோன சாம்ராஜ் , தமிழ்நாட்டிலேயே அதிகம் அறியப்படாத ஒருவர் தான். ஒரே ஒரு கவிதை மூலம் பரவலான அறிமுகம் பெற்றவர். அந்தக் கவிதை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்ததைப் பற்றிய கவிதை. அந்தக் கவிதைதான் இப்படியொராள் இருக்கிறார் என்று பலருக்கும் தெரியச் செய்தது. முகநூலில் அதிகம் பெயர் அடிபட்டது. நானே அதற்கு முன் அவரை நினைவில் வைத்துக்கொள்ளும்படி வாசித்திருக்கவில்லை. அதன் பிறகுதான் அவரை வாசிக்க ஆரம்பித்தேன்.. அதன்பின் தான் கோணங்கியின் கல்குதிரையிலெல்லாம் எல்லாம் எழுதியிருக்கிறார் என்பது தெரியவந்தது. ஆனால் ஜெயமோகனுக்கு வேண்டப்பட்டவர்.விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்.தமிழில் –தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் இப்படித்தான் – இலக்கியச் செயல்பாடுகள் இருக்கின்றன.

ஜோர்ஜ்: அது சரி கோணங்கி விவகாரம் தமிழ் நாட்டில் என்ன நிலையில் உள்ளது, அப்படியே அடங்கி விட்டதா?

அ.ரா: ஒரு தனிப்பட்ட விடயம் என்றே கருதுகிறேன். பாலியல் அத்துமீறல் என்றால் வெறுமனே நீங்கள் முகநூலில் எழுதுவதால் எதுவுமே நடந்து விடாது. பொலீசில் தக்கபடி முறையிட வேண்டும். இப்போ வைரமுத்து பற்றி பல ஆண்டுகளாகப் பேசிக் கொண்டிரக்கிறார்கள். ஆனால் இன்று வரை பொலீசில் முறையீடு செய்யவில்லை. பேஸ்புக்கில பேசுறார்கள். யூரியூப்பில் பேசுகிறார்கள். ஆனால் பொலீசில் கம்பிளைன்ட் இன்று வரை யாரும் கொடுக்கவில்லை. கொடுத்தால் தானே தெரியும் அரசு அதற்கு என்ன செய்யும் என்று?

ஜோர்ஜ்: இப்பொழுது பத்ரிக்கு நடந்திருக்கிறதுதானே?

அ.ரா: அதேதான்.. அப்படித்தான் நடக்கும். பத்ரியோ அல்லது இந்த பிஜே.பி காரர்களோ திமுகவுக்கு எதிராக நிறையப் பேசியபடி இருக்கிறார்கள். தமிழுக்கு எதிராகவும்பேசியபடி இருக்கிறார்கள். அவர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது? யாராவது சொல்லவேண்டும். இந்த இந்த விடயங்களுக்கு எதிராக – அவதூறாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். பொலீசிற்குப் போனால் F.I.R. போடவேண்டுமே. இப்போ சரியாக முறையீடு வந்து பத்ரியைப் பிடித்திருக்கிறார்கள். அதுமாதிரி கோணங்கி மீது புகார் செய்ய வேண்டும். ஆனால் கோணங்கியின் விடயம் குறித்து என்ன ஆதாரம் இருக்கிறது? ஆதாரம் இல்லை என்றால் கூட “நான் பாதிக்கப்பட்டேன்” என்று போய்ச் சொல்ல வேண்டும். இப்பொழுது புதிதாக ஒரு சட்டம் அப்படி வந்திருக்கிறது. பாலியல் ரீதியாகப் பதிக்கப்பட்டவர்கள், எதுவும் ஆதாரம் காட்ட வேண்டிய தேவை இல்ல. “நான் பாதிக்கப்பட்டேன்” என்று ஒருவர் சொன்னால் அதனை எடுத்தக் கொள்ள வேண்டும். சிறுவனாக இருந்தாலும் சிறுமியாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும் அல்லது மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும், பொதுவாக யாராக இருந்தாலும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய புகாருக்கு ஆதராம் காட்ட வேண்டியதில்லை. நான் பாதிக்கப்பட்டேன் என்ற ஒரு சொல் மட்டும் போதும். முகநூலில் எழுதுபவர்கள் போலீசில் போய்ச் சொல்ல வேண்டும். அங்கே போய்ச் சொன்னால்த்தான் அவர்களால் நடவடிக்கை எடுக்கமுடியும். ஆனால் அவர்கள் அதனை இன்றுவரை செய்யவில்லை. அதற்கெதிரான கையெழுத்துக் கேட்டுக் கொண்டு என்னிடம் அனுப்பப்பட்டது. கோணங்கியின் எழுத்துகள் மீதான விமர்சனங்களை நான் முன்பே வைத்திருக்கிறேன். முருகபூபதியின் நாடகங்களில் கோணங்கியின் எழுத்து என்ன செய்திருக்கிறது என்று சொல்லி விமரிசனம் பண்ணியிருக்கிறேன். அதை வைத்துக் கொண்டு எனது கையெழுத்தைக் கேட்டார்கள். அந்தக் கையெழுத்தை வைத்து என்ன செய்யப் போகிறார்கள்? நீங்கள் பொலீசில் முறைப்பாடு செய்யுங்கள். அதுவே சரியானது. இந்த ராமசாமியின் கையெழுத்து அல்லது இன்னும் பத்துப் பேருடைய கையெழுத்தை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? ஒன்றுமே செய்ய முடியாது என்று சொல்லி, நான் ஆதரவு கொடுக்கவில்லை. அவரது அண்ணன் தமிழ்ச் செல்வன் ஆரம்பத்தில் பேசினார். ஆரம்பத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம் என்றவர் பின்பு எதுவும் பேசவில்லை. முகநூலில் எழுதுவதைப் பரபரப்பு நோக்கம் தாண்டி எடுத்துச் செல்லவேண்டும். அந்தப் பரபரப்பை வாசித்துக் கடந்துகொண்டிருக்கிறது தமிழ் வாசிப்பு உலகம். அதனைத் தாண்டி எதுவுமே நடக்காது. முகநூலில் உருவாக்கப்படும் பரபரப்பு மாதிரி கொஞ்ச நாளில் மறந்து போய்விடுவார்கள் என நினைத்துத் தான் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கமும், தமிழ்ச் செல்வனும் பின்னர் மவுனமாக ஆகிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

ஜோர்ஜ்: அவர்களுக்கு எல்லாம் தெரிந்துதானே நடந்திருக்கிறது.

அ.ரா: ஆமா. எல்லோருக்கும் தெரியும்.முருகபூபதியின் மணல் மகுடி நாடகக்குழுவில் இதுபோன்ற பிரச்சினைகளும் சாதிரீதியான வேறுபாடுகளும் இருக்கின்றன என்பதை அங்கு நடிக்கப்போய்விட்டு, வெளியே வந்த நடிகர்கள் சொல்லியிருக்கிறார்கள். தொடர்ந்து நடிக்கப்போனவர்கள் அடுத்த நாடகத்திற்கு ஏன் போகவில்லை என்று கேட்டபோது சொன்னவை அந்தத் தகவல்கள். பாண்டிச்சேரியிலிருந்தும் மதுரையிலிருந்தும் போய்விட்டு வந்து சொன்னவர்கள் எல்லாம் ஒதுங்கிக் கொண்டார்கள்.

பாண்டிச்சேரியில முருகபூபதி எனது மாணவர். அவருக்கெனத் தனித்த நாடகக் கோட்பாடு இருந்தது என்று உரையாடல்கள் வழியாக அறியமுடியாது. அப்படி உரையாடல் செய்யக்கூடியவர் அல்ல. அவரது மாணவப் பருவத்திலேயே அங்கே கோணங்கியும் வருவார். அப்போதிருந்தே முருகபூபதியின் நாடகங்களில் ஒருவித அரூபமான சொல்முறை இருக்கும். தேர்வுக்கான நாடகப் புரஜெகட்டிற்கு நாடகம் எழுதிக் கொடுத்தது எஸ்.ராமகிருஷ்ணன். தஸ்தாவஸ்கியினுடைய மரணவீட்டின் குறிப்புக்களை வைத்து நாடகம் எழுதிக் கொடுத்தார். துறையில் அந்த மாதிரியான பிரதிகளை எல்லாம் அனுமதிப்பதில்லை. துறையில் ஆசிரியர்கள் கொடுக்கும் சில மாதிரிகளிலிருந்தே அவர்கள் தெரிவு செய்ய வேண்டும். மாணவர்களின் தெரிவை அனுமதிக்கும் வேலை ஆசிரியர்களுடையது. அப்போது நடந்த விவாதத்தில் நான் அந்த நாடகத்தை அனுமதிக்கலாம் என்றேன். எஸ் ராமகிருஸ்ணன் என்கிறதாலயும், அந்தந்த நேரத்தில சில புதிய விடயங்கள் நடக்கட்டும் என்று ஆதரித்துப் பேசியதாலும் அனுமதிக்கப்பட்டது. அத்தோடு நாடகப்பள்ளியில் கட்டுப்பாடுகள் தீவிரமாக இருக்கக்கூடாது என்று நம்புகிறவர்களே ஆசிரியர்களாக இருந்தார்கள். அதன்பிறகு அவர் போட்ட நாடகங்கள் எல்லாவற்றிலுமே கோணங்கியின் பிக்ஸ்சன நாடகமாக்கியே போட்டார். “நாடக உரையாடலாக இல்லை; கவிதையின் சொல்முறையாக இருக்கிறது” என்று அப்போழுதே நான் விமர்சனம் பண்ணியிருந்தேன். “ கோணங்கியின் நாவலைப் படிக்கிறதற்கே ஆளில்லை. அதனை நாடகமாகப் போட்டால் அதில் நாடகத் தன்மையே இருக்காது” என்றும் எழுதியிருக்கிறேன். அந்த விமரிசனங்களைத் தாண்டி இந்தப் பாலியல் விவகாரத்தில் நான் ஈடுபாடு காட்டவில்லை.

ஜோர்ஜ்: இங்கே இலக்கிய உலகத்தில் இருக்கும் சிக்கலே இதுதான். நீங்கள் என்னமாதிரியான விமர்சனங்களை முன்வைத்தாலும் அதனை மவுனமாக இருந்து கடந்து போகப் பார்க்கிறார்கள். பதில் சொல்லப் போனால் தம்மைப் பற்றிய பிரச்சனை பெருகும் என்ற பயம் ஒன்றுதான் அவர்களை மவுனமாகக் கடந்து செல்லப்பண்ணுகிறது.


ஜோர்ஜ்: அது சரி, தமிழ் நாட்டில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களது அடையாளம் சார்ந்து கேட்கிறேன். ஒரு தனிமனிதனாக எப்படி இவ்வளவு பேரையும் வைத்து ஆட்டிக் கொண்டிருக்கமுடியும்? அவர் சுயமாக தன்னியல்பிலேயே செய்கிறாரா? அவ்வது வேறு ஒரு “அஜண்டா” விற்கு வேலை செய்கிறாரா?


அ.ரா: “அஜண்டா” இருக்கலாம். ஆனால் அது எங்க இருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்க முடியாது. ஏனென்றால் அஜண்டாவுடன் இருந்தவர்களுடன் அவருக்கு சில நேரங்களில் தொடர்பு இருந்திருக்கிறது. சிலநேரங்களில் தனக்குத் தொடர்பு இல்லை என்றும் காட்டுகிறார். ஒருவேளை அந்தத் தொடர்புகளுடன் பயணித்து, இப்போ தானே சுயமாக அதனைத் தொடருவதாகப் பயணிக்கலாம். அல்லது அவர்களின் நிதியுதவி தொடர்ந்தும் கிடைக்கலாம். அந்த நிதியுதவி கூட வெவ்வேறு விதமாக நடக்கும். நேரடியா இருக்காது. அவருக்கு மட்டுமல்ல; தன்னார்வ நிறுவனங்கள் வழியாகப் பலருக்கும் அப்படி கிடைக்கும். தன்னார்வ நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாக மட்டுமே இருக்கும் என்றில்லை. உள்நாட்டில் இயங்கும் அமைப்புகளாகவும் தனிநபர்களாகவும் கூட இருக்கலாம். அங்கிருந்தெல்லாம் கிடைக்கும் நிதியை/ உதவியைக் கொண்டு அவர் நினைக்கும் ஒரு அமைப்பை உருவாக்கிச் செயல்படுகிறார். நண்பர்களின் உதவியில் தான் விஷ்ணுபுரம் அமைப்பு செயல்படுகிறது என்பதை அவர் மறைப்பதில்லை.

இப்ப பார்த்தீர்களென்றால் சினிமாவில் அவரைவிட எழுதக் கூடியவர்கள் பலர் இருந்தாலும் அவருக்குத்தான் வாய்ப்புக்கள் போகின்றன. பொன்னியின் செல்வன் “புரொஜெக்ட்” இருக்கிறது அல்லவா? அது அவரிடம் போகவேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஏற்கனவே பொன்னியின் செல்வனை நாடகமாக்கியது குமரவேல். குமரவேல் யாரென்றால் பாண்டிச் சேரியில் எங்களிடம் கல்விகற்ற முதல் செட் மாணவன்.

சிவா: அந்தப்படத்தில் குமரவேல் என்பவர் பெயர் வருகிறது.

அ.ரா: ஆமா… அவன் படிக்கிற காலத்திலேயே அவனுடைய எக்ஸாம் புரொடெக்ஸனுக்கு நான் வழிகாட்டியாக இருந்துள்ளேன். படிப்பு முடிந்தவுடன் ஒரு குழு ஆரம்பித்து தயாரிக்க நினைத்தபோது நாடகம் எழுதிக் கொடுத்தேன். அது மகாபாரதத்தை வைத்து “சதி பர்வம்” என்றபெயருடன் வந்தது. வசனம் குறைவான நாடகம். கண்ணன் எப்படி சதி செய்து அந்தப் போரை நிகழ்த்தினான் என்பதாகச் சொல்லும் நாடகம். குமரவேல் தயாரிக்க, ஷிபு எஸ்.கொட்டாரம் என்ற கேரளத்து மாணவர் இயக்கினார். சென்னையிலும் மதுரையிலும் மேடையேறிப் பார்வையாளர்களால் பாராட்டப்பட்ட நாடகம். அப்பொழுதே அவன் சொன்னான்,” சேர் என்னுடைய பெரிய கனவே பொன்னியின் செல்வனை நாடகமாகப் பண்ணவேண்டும் என்பதுதான்” . அப்பொழுது நான் பொன்னியின் செல்வன் படித்ததில்லை என்று அவனுக்குச் சொன்னேன். இன்று வரை நான் பொன்னியின் செல்வனைப் படித்ததில்லை. நான் என்ன சொல்லமுடியும் அவனுக்கு? “நீ நாடகமாக்கிக் கொடு. அது நாடகமாக வந்திருக்கிறதா இல்லையா என்று நான் பார்த்துச் சொல்லுகிறேன்” என்றேன். அவன் தன்னுடைய படிப்பை முடித்துப் போன பின்பு அதனைச் செய்து சென்னையில் “மேஜிக் லாண்ட்ன்” என்ற குழுவின் வழியாகப் பிரமாண்டமாகத் தயாரித்தான். டிக்கெட் வைத்து மேடையேற்றிய நாடகம் அது. அதில் திரைப்பட நடிகர் நாசர் நடித்தார். அப்போது நாடகத்தில் மட்டும் நடித்த பசுபதி, மு.ராமசாமி போன்றவர்கள் அதில் நடித்தார்கள். அது சென்னையில் மட்டுமல்ல தமிழ் நாட்டின் பல்வேறு நகரங்களில் மேடையேற்றப்பட்டது. அது 3 மணிநேர நாடகம். திரைப்படத்தில் மனோகர் போடுவார்தானே பிரமாண்டமான செட். அதுமாதிரிப் போட்டு மேடையேற்றப்ட்டது. இந்தப் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத் திரைக் கதையும் அந்த நாடகப்பனுவலில் இருந்து தோன்றியதுதான்.


குமாரவேல் நன்றாக நடிக்கக் கூடியவர். நடிக்கும் காலத்தில் ரியலிஸ்டிக் நடிப்பை விரும்பிப் பயிற்சி செய்த மாணவன். அதனால் சினிமாவிலும் நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. மொழி, அபியும் நானும் போன்ற படங்களை இயக்கிய ராதாமோகனுடைய படங்களில் குறிப்பிடத் தக்க பாத்திரங்கள் செய்தவர். அவர் இயக்கும் படங்களில் இப்போதும் இருப்பான். குமரவேலை விடவும் அந்தக் கதைக்கு ஒரு பிரபலமான ஆளைப் போடவேண்டுமென யோசிக்கிறார்கள். எழுத்தாளராக ஜெயமோகனுக்கு இருக்கும் பிரபலம் அதற்குப் பயன்படுகிறது.

ஏற்கனவே ஜெயமோகன் அவர்கள் மணிரத்தினம் காம்பில இருக்கிறவர்தான். அதனால் அவரை வைத்து சில அரசியல் சொல்லாடல்கள் திரைப்படத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, ஆழ்வாருக்கு அடியான் என்கிற கதாபாத்திரத்திற்கு ஒரு பிராமணச் சாயல் சேர்க்கப்பட்டது. ஏனெனில் தமிழ் நாட்டில் பிராமணரைக் கிண்டல் செய்தால் வெகுமக்களுக்குப் பிடிக்கும். அந்தப் படத்தில் ஜெயராம் வருகிற கதாபாத்திரத்துக்கான வசனங்களை எழுதினது ஜெயமோகனாக இருக்கவே வாய்ப்பு அதிகம். அதேமாதிரி பாட்டெழுதுவதற்காக இளங்கோ கிருஷ்ணனையும் “ரெக்கமண்ட்” பண்ணி இவரே உள்ளே கொண்டு வந்திருக்கிறார். வைரமுத்துவைத் தவிர்க்கும் முடிவில் இதெல்லாம் நடக்கிறது.

பொன்னியின் செல்வனின் 2வது பகுதியில சில ரொமாண்டிக் பகுதிகள் இருக்கின்றன. மனசுக்குள் ஒன்றை வைத்துக் கொண்டு காதலை வெளிப்படுத்துவது போன்று நந்தினியின் கதாபாத்திரம் இருப்பதனைப் பார்த்திருப்பீர்கள். இப்படியான சிறுகதைகளை ஜெயமோகன் அவர்கள் எழுதியிருக்கிறார். அதையெல்லாம் இதற்குள் கொண்டு வந்திருக்கிறார். இதெல்லாம் வெற்றிப்படமாக ஆகத் தேவையான சரக்குகள். அதனை அவர் செய்திருக்கிறார். அத்தோடு அவருக்கு இருக்கும் பிரபல இருப்பு இதற்குப் பயன்பட்டிருக்கிறது. ஆனபடியால் கடந்த நாலைந்து வருடமாக ஜெயமோகன் அவர்களுக்குச் சினிமா வழியாகவும் வருமானம் வருகிறது. அதற்கு முன்னால் பார்த்தோமானால் இந்தியாவிற்கு வெளியே இருக்கும் பெரிய நட்பு வட்டமும் அவரது இலக்கியச் செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கிறார்கள். அமெரிக்காவில் அவருக்கு- அவரது விஷ்ணுபுரம் அமைப்புக்கு உதவும் பெரிய “நெற்வேர்க்” இருக்கிறது.

ஜோர்ஜ்: அவரது தமிழ் விக்கி புறோகிறாம் எல்லாம் அதற்குள்ளால்தானே நடக்கிறது?

அ.ரா: அது அதுமட்டுமில்லை. அமெரிக்காவில் நல்ல வருமானம் உள்ளவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவருடைய எழுத்துக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் வருகிற செப்படம்பர் மாதம் கூட வருகிறார். வந்து ஒரு மாதம் அவர்களுடன் இருக்கப் போகிறார். இந்தமுறை பெட்னா நிகழ்வுக்கு வந்த பவா செல்லத்துரை அமெரிக்காவின் பத்துப் பன்னிரண்டு நகரங்களுக்குச் சென்று கதை சொல்லியிருக்கிறார். அதே இடங்களுக்கு ஜெயமோகனும் செல்லக்கூடும். பவாசெல்லத்துரையும் ஜெயமோகனும் ஏறத்தாள இலக்கியத்தைப் பரவலாக்க வேண்டும் என்பதில் ஒத்துப்போகக் கூடியவர்கள். அது ஒருவிதமான கூட்டணி. பவா செல்லத்துரை இடதுசாரியாக இருந்து மெல்லமெல்ல மாறி வந்தவர். ஆனால் சிற்றிதழ் மரபில் இந்தப் பார்வை கிடையாது. எழுத்து மரபை ஆதரித்து பேச்சு மரபை எதிர்த்த மரபு சிற்றிதழ் மரபு. அப்போது பேச்சு மரபை திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைத்து கலை கலைக்காக எனச் செயல்பட்டவர்களும், கலை மக்களுக்காக எனப் பேசிய இட துசாரிகளும் விமரிசனம் செய்தார்கள். இப்போது அதனை மறுத்து பாப்புலராக ஆவதின் பலனை அறிந்து நகர்கிறார்கள். கதைசொல்லியாக பவா செல்லத்துரை மாறியதை வரவேற்கும் ஆளுமையாக இருக்கிறார் ஜெயமோகன். அவரே இப்போது தமிழ்நாட்டில்/ இந்தியாவில் இலக்கிய உரைகளைத் தாண்டி வாழ்வியல் உரைகளை நிகழ்த்தும் உரையாளராக மாறியிருக்கிறார்.

அமெரிக்காவிலும் இப்போது அத்தகைய உரைகள் நடக்கும். முன்னர் இலக்கியத்திற்காக வந்திருக்கிறார். இப்போது ரஜனீஸ், சத்குரு போன்றவர்கள் மாதிரி வாழ்க்கைக் கல்வி பேசுவது போல், தத்துவம் பேசுவது போல், ஆன்மீகம் பேசுவதும் போல் வருகிறார். இவரை அழைப்பவர்கள் அதற்குப் பணம் கொடுப்பார்கள். எழுத்தாளராக அவருக்குத் தேவையே இல்லை எனச் சொல்லலாம். ஆனால் இலக்கியச் செயல்பாட்டாளராக அது அவருக்கும் தேவையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படும் குழுக்களைப் போல அமெரிக்காவில் பெரியதொரு குழுவாக இருக்கிறது என்பதை எனது பயணத்தில் கேட்டிருக்கிறேன். அதேபோல் பல ஊர்களில் இருக்கும் தமிழ்ச் சங்கங்களில் திராவிட இயக்கத்து ஆதரவு ஆட்களும் இருக்கிறார்கள். அவர்கள் திராவிட இயக்கப் பரப்புரைப் பேச்சாளர்களை- கவிகளை அழைக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக இருப்பவர்கள் இயல்பாகவே பி.ஜே.பியின் விடயங்களோடு ஒத்துப் போகிறவர்களாக இருக்கவே செய்வார்கள். அவரும் திராவிட அரசியலை – இலக்கியங்களைத் தொடர்ந்து மறுப்பது- அவதூறு பண்ணுவதுபோல் செயல்படுகிறவர் தானே?

ஜோர்ஜ்: ஜெயமோகன் அவர்களது கெட்டித்தனமே தன்னை எதிர்ப்பவர்களை வாசிக்கப்பண்ணுவதுதான்.

அ.ரா: அதுதான் உண்மை. இப்பொழுது அண்மையில் கோயம்புத்தூரில் பேசியது. அது ஒரு கெட்டிக்காரத்தனமான பேச்சுக் கூடக் கிடையாது.

சிவா: அவர் எழுதுவதோடு நிறுத்தலாம்.

அ.ரா.: இல்லையே. எழுதுவதைவிடப் பேச்சுக்குத் தானே பாப்புலாரிட்டி அதிகம். அவர் பேசுவதற்கூடாகத்தானே பணம் பெறுகிறார். இப்போது தமிழ் நாட்டில் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை – குறிப்பிட்ட கால இடைவெளியில் பேச்சரங்குகள்- காம்ப் நடத்துகிறார்கள்.

ஜோர்ஜ்: யேசு வருகிறார் என்பது போல்.

அ.ரா: அப்படிச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அவரது பேச்சை. ரிக்கற் புக் செய்து கேட்க வருகிறார்கள். சினிமாவிற்கு ரிக்கற் விற்பனையாவதுபோல் விற்பனையாகிறது. ஜெயமோகன் பேசுகிறார் என விளம்பரம் செய்கிறார்கள். 500 பேருக்குக் குறையாமல் போய்ப் பார்க்கிறார்கள்.
ஜோர்ஜ்: இதே கதையை அவர் கேரளாவில் சென்று பேச முடியுமா?

அ.ரா: சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். இன்றுவரை சொல்லவில்லை. ஆனால் இங்கே அவர் பேச்சைக் கேட்பதற்கான ஒரு பார்வையாளர்களைத் தயார் செய்து உருவாக்கியிருக்கிறார்கள். அதாவது திராவிட இயக்கத்தின் அரசியல், திராவிட இயக்கத்தின் கலைப் பார்வை போன்றவற்றை விரும்பாத நடுத்தரவர்க்கக் கூட்டம் இருக்கிறது. அவர்கள்தான் இவரது வாசகர்களும் கேட்பவர்களும். ஆனால் தேர்தலில் அவர்கள்கூட தி.மு.க.விற்குத்தான் வாக்களிப்பார்கள். இவரது பேச்சைக் கேட்பார்கள். ஆனால் தி.மு.க.விற்குத்தான் வாக்களிப்பார்கள்.

ஜோர்ஜ்: ஆன்மீக சொற்பொழிவைக் கேட்பதுபோல், வாரியார் சொற்பொழிவுமாதிரி?

அ.ரா: ஆமா. ஜெயமோகனே அதைச் சொல்லியிருக்கிறார். இங்குவரும் பலபேர் தி.மு.க.வை எதிர்க்கிறோம் என்கிறார்கள். ஆனால் என் கூட்டத்திற்குவருபவர்கள் பலர் தி.மு.க.விலேயே இருக்கிறார்கள். அவர்கள் குடும்பமே தி.மு.க.வில் இருக்கின்றனர் என்கிறார். அவர் மட்டுமல்ல, நாஞ்சில் நாடனுக்கும் கருணாநிதிமேல கடுங்கோபம் இருக்கிறது. கல்லூரிப்படிப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த தன்னைப் போன்றவர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே போய் வேலை பார்க்க வேண்டிய நெருக்கடியை திராவிட இயக்கமும் இட ஒதுக்கீடும் உண்டாக்கியதாக அவர்கள் நினைக்கிறார்கள். நான் சொல்வது1970 களின் கதை. தி.மு.கவின் கொள்கைகளால் தான் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்பது அவரது கோபம். இங்கே அவர்களெல்லாம் போய் ஜெயமோகனுடன் சேருகிறார்கள். இதே மாதிரியான எண்ணவோட்டம் உள்ளவர்கள் அவருக்கு சேரும் கூட்டத்தில் கணிசமானவர்கள். . இதனை விளங்கித்தான் அவரின் பின்னால் உள்ள கூட்டம் குறித்து நோக்க வேண்டும்.

ஜோர்ஜ்: சரி நாங்கள் சாருநிவேதிதா குறித்துக் கொஞ்சம் பேசுவோம்.

அ.ரா: எதைக் குறித்து உரையாட வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என்பது எனக்கு விளங்குகிறது. அவரை –அவரது எழுத்துகளை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேட்கவிரும்புவதாக நான் புரிந்து கொள்கிறேன். இது தொடர்பில் நான் சொல்ல விரும்புவது இதுதான்: “எனக்கு ஓர் அரசியல், சமூகப்பார்வை இருக்கிறது. அதனை உள்வாங்கிய எழுத்துகளை – எழுத்தாளர்களை மட்டுமே ஏற்று வாசித்து முன்வைப்பேன்” என நினைப்பது கல்விப்புலப் பார்வையல்ல. இங்கே விமரிசகர்களாக அறியப்படுகிறவர்களின் பார்வை அது. நான் அடிப்படையில் கல்விப்புலத்து ஆள். அவர்கள் இப்படி நினைக்கக்கூடாது. ஒரு மொழியின் இலக்கியங்களைக் கற்பிக்கும் ஒரு பேராசிரியர் அம்மொழியின் அனைத்துப் போக்குகளையும் அதனதன் இருப்பில் மாணாக்கர்களுக்குச் சொல்ல வேண்டும். இதைத்தான் நான் நம்புகிறேன்; பின்பற்றுகிறேன். அதே நேரம் எனது இலக்கிய/ அரசியல் பார்வையையும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதனோடு ஒத்துப்போகும் பனுவல்களை மட்டுமே வாசித்து விமரிசிக்க நினைப்பதில்லை. இலங்கை/புலம்பெயர் எழுத்துகளிலும் அப்படித்தான். தமிழ்நாட்டு எழுத்தாளர்களைப் பேசும்போதும் அப்படித்தான்.

எனது பயணத்தின்போது டொரண்டோவில் இரண்டு நாவல்கள் –பயங்கரவாதி, ஓர் அகதியின் பெர்ளின் வாசலில் – வெளியீட்டு விழாவில் பேசினேன். அவை பேசும் அரசியல், நோக்கங்கள் எனக்குத் தெரியும். அதனோடு முழுமையாக உடன்படுவேன் என்றில்லை. ஆனால் அவை இரண்டும் நாவலாக எழுதப்பட்டிருக்கிறது; இதற்கு முந்திய பனுவல்களைப் போல இல்லாமல் புதிய பரப்புக்குள்ளும் புதிய செய்முறையிலும் இருக்கிறது என்பதைச் சொல்ல நினைக்கிறேன். அதைச் செய்கிறேன்.

என்னுடைய வாசிப்பும் என்னுடைய எழுத்தும் எப்படி இருக்கும் என்றால், நான் என்னை முதலில் ஒரு கல்வித்துறை சார்ந்த பேராசிரியர் -academical professor -என நினைப்பேன். ஒரு அகடெமிக் புரபசர் -academical professor- றோல் வந்து வெளியில் இருக்கிற ஒரு திறனாய்வாளன்/ விமரிசகன் போல் இருக்க முடியாது என்று நினைக்கிறேன் இங்கே விமரிசகர்களாக இருப்பவர்கள் தாங்கள் நம்பும் இலக்கியத்தை –கலைக்கோட்டை நிலைநாட்டுவதற்காக வாசிப்பவர்கள்; விமரிசிப்பவர்கள். 

ஒரு கல்விப்புலப்பேராசிரியர் அப்படியல்ல. அவர்களுக்கு மாணவர்களுக்குப் பலவற்றையும் அறிமுகப்படுத்துவது முதல் நோக்கம். அத்தோடு அவர்களது பார்வையையும் சொல்லவேண்டும் என்று நினைப்பேன்.
 அதற்குக் கைலாசபதிபோல் இருக்கவேண்டும்; அவர் தான் எனக்கு முன்மாதிரி. கைலாசபதி கல்கியையும் வாசிக்கிறார். அதனை வாசித்து அது எங்கேயிருந்து வருகிறது என்றும் காட்டுகிறார். எங்கேயிருந்து வருகிறது என்று சொல்வதற்கு அதனைப் படிக்கத்தானே வேண்டும். படித்தால்தானே சொல்லமுடியும். ஆக இந்தமாதிரியான விடயங்களை மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும். அந்த அடிப்படையில் தான் நான் எல்லாவற்றையும் வாசிப்பேன். சாருவையும் வாசிப்பேன். எழுதுவேன். அதே நேரம் சாருவை மொத்தமாக நிராகரிக்க முடியாது என்பதையும் அறிந்திருக்கிறேன். அவர் மாதிரி மொழியை லாவகமாகப் பயன்படுத்தும் எழுத்தாளர் இப்பொழுது இல்லை. அவர் நம்பும் விடயங்களை நன்றாக எழுதுவார். ஒரு மோசமான விடயம் என்று அவருக்குத் தெரிந்தாலும் தான் நம்புவதால் அதனை நன்றாக எழுதுவார்.அதனால்தான் அவருக்கு ஒரு இடம் இருக்கிறது என்கிறேன். அதேபோல் சாரு அவரை நம்பியவர்கள் பலபேரை ஏமாற்றியிருக்கிறார் என்று சொல்கிறார்கள். அவரால் ஏதாவது நடக்கும் என்றுதானே அவரோடு நெருக்கமாக இருந்திருப்பார்கள். அதாவது ஏமாந்ததாகச் சொல்கிறவர்கள் ஏமாறத் தயாராக இருந்ததால் தானே நடந்தது. அவர் லத்தீன் அமெரிக்க, பிரெஞ்சு எழுத்தாளர்கள் பற்றி நிறையப் பெயர்கள் உச்சரிப்பார் அது உண்மையா பொய்யா என்றும் தெரியாது. அப்படி அவர் உச்சரித்து விட்டார் என்பதற்காகவும் அதனை நிரூபிப்பதற்காகவும் அவர் அதனைப் படிப்பார். அதற்காக வாதாடுவார். தமிழில் அப்படி ஒருவர் இருக்கிறார் எனச் சொல்வது அவசியம் தானே.

இதே நிலை தான் இலங்கை/ ஈழ/ புலம்பெயர் எழுத்துகளை வாசித்துப் பேசுவதிலும் இருக்கிறது.இலங்கைக்குள் நடந்த ஈழப்போராட்ட ஆதரவு நிலையிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு வந்தவனல்ல நான். அதற்கு முன்பே வாசிக்கத் தொடங்கியவன் தான். மாணவனாக இருந்த காலத்திலேயே,அப்பொழுது ஈழம் என்பதல்ல இலங்கை. இலங்கை எழுத்துக்களை வாசிப்பேன். தமிழ்நாட்டில் எங்களுக்கு முதலில் அறிமுகமான பெயர்கள் கைலாசபதியும் சிவத்தம்பியும் நுஃமானுந்தான். எனக்கு மட்டுமல்ல அப்பொழுது தமிழ் நாட்டிற்கே இலங்கை பற்றிய விடயங்கள் இவர்கள் மூலமாகத்தான் வந்தன. அவர்கள் கல்விப் புலத்திற்குள்ளால் வருகிறார்கள். கல்விப் புலத்திலிருந்து இடதுசாரிகளிடம் செல்கிறார்கள். அப்பொழுது அவர்கள் கூட டொமினிக் ஜீவா வருகிறார். அதன்பின் ஒரு காலகட்டத்தில் டானியல் அங்கேயே வந்து இருக்கிறார். 

அவர்கள் அங்கு வந்த காலகட்டத்தில் மிகப்பெரும் போர் நடைபெறுகிறது. அதே நேரம் வெகுமக்கள் தளத்தில் ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகையின் வாசகர்களுக்கு ஈழப்போராட்டம் அறிமுகமாகிறது. ஈழ ஆதரவுப் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் தமிழ்நாட்டிலும் நடக்கின்றன ஈழத்திற்கு ஆதரவான எழுத்துக்கள் அந்தப் பத்திரிகைகளில் வந்து கொண்டிருந்தன. இப்படித்தான் தமிழர்கள் அந்தப் பக்கத்தைப் பார்க்கக் கிடைத்தது.. என்னனைப் போன்றவர்கள் அப்படியல்ல. எங்களுக்குக் கொஞ்சம் இடதுசாரிச் சார்புநிலை இருந்தது. அங்கு நடப்பதை விவாதிக்கும் நோக்கம் இருந்தது. நான் மாணவனாக இருந்தபொழுது கவிதா நிகழ்வு ஒன்றை முயற்சி செய்தோம். பொதியவெற்பன் அவர்கள் தான் அதற்கு முன் செய்திருந்தார். அவர்தான் இப்படிக் கவிதா நிழ்வு ஒன்றை இலங்கையில் செய்கிறார்கள் நாங்களும் முயற்சி செய்வோம் என முன்நின்று கும்பகோணத்தில் ஆரம்பித்தவர். அதன்பின் இரண்டு மாதத்தில் நாங்கள் மதுரையில் நடத்தினோம். அதில் நவீன கவிதைகளைத் தெரிதலில் அந்தக் காலத்தில் வெளிவந்த அத்தனை தொகுப்புக்களையும் எடுத்து வைக்கிறோம். அதில் சேரனுடைய ஜெயபாலனுடைய கவிதைகள் வந்து சேர்ந்தன. அவ்வாறுதான் நாங்கள் இவற்றை அடையாளம் காண நேர்ந்தது. இப்படி வரும்போது எல்லாவற்றையும் நாம் வாசிக்கிறோம்; விவாதிக்கிறோம். அதனால் எல்லாவற்றையும் ஆதரிக்கிறோம் என்பதல்ல நிலைபாடு


ஜோர்ஜ்: சாரு சொல்லிவிட்டார் என்பதற்காக யாராவது லத்தீன் அமெரிக்க எழுத்துகளைத் தேடிப் படிக்கிறார்களா?

அ.ரா: யாரும் படிப்பதில்லை என்றும் சொல்லமுடியாது. சிலர் படித்து விவாதம் புரிகிறார்கள். இலங்கை ஆட்களுக்கும் அவர் மீது கோபம் அவர் தங்களை ஏமாற்றிவிட்டார் என்பது. அவர் நிறையப் பேரை ஏமாத்தியிருக்கிறார் என்று சொல்கிறார்கள். தமிழ் நாட்டிலும் அவர் அதனை வேண்டுமென்றே செய்கிறார் என்று கூடச்சொல்லலாம். எனக்கு ஒரு அனுபவமிருக்கிறது. தி டிராமா ரெவ்யூ ( TDR) என்றொரு பத்திரிகை. அமெரிக்காவின் சீகல் பதிப்பகம் வெளியிடும் அரங்கியல் சார்ந்த இதழ். பாண்டிச் சேரிப் பல்கலைக் கழகத்தின் நாடகத்துறை மாணவர்களுக்காகப் பணம் கட்டி வரவைத்தோம். ஒரு இதழில் இன்விசிபிள் தியேட்டர் என்பதை முன்வைத்த அகஸ்டோபாவால் குறித்த விரிவான கட்டுரைகளும் நேர்காணல்களும் வந்திருந்தன. அந்த இதழ் வந்த சில நாளில் நூலகத்திலிருந்து காணாமல் போய்விட்டது. ஆனால் சாரு நிவேதிதா அவற்றை அடிப்படையாக வைத்து அகஸ்டோபாவாலைத் தமிழுக்கு அறிமுகம் செய்து எழுதினார். அதன் பிறகுதான் அவர் எடுத்துக் கொண்டு போய்விட்டார் என்பது தெரிந்தது. 

துறையில் நான் மட்டுமே அவருக்குத் தெரிந்தவர் என்றில்லை; கே ஏ குணசேகரனும் கூட அவருக்கு நண்பர் தான். அது காணாமல் போனதால் எங்களுக்குப் பல்கலைக்கழகத்தினால் கேள்வி கேட்கப்படும் சிக்கல் இருப்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார். குணசேகரன் அதைச் சொல்லவும் செய்தார். அதெல்லாம் உங்கள் பொறுப்பு என்று பதில் சொன்னார் என நினைக்கிறேன். இதனை அமைப்புகளைப் பயன்படுத்துவது; அமைப்புகளுக்கு எதிரான செயல் போன்ற கருத்துகளால் நியாயப்படுத்தவும் செய்வார். அவரது ஸீரோ டிகிரியை பிரேம் – ரமேஷ் எழுதியதாக ஒரு செய்தி உலவியது. ஏன் எழுதிக் கொடுக்க வேண்டும்? என்ன ஆதாரம் இருக்கிறது. இப்படியான தகவல்களுக்கெல்லாம் என்ன பதில்கள் இருக்கின்றன?


கற்சுறா: இல்லை. அப்படியில்லை. வெறும் சிறு கடிதங்களுடனும் குறிப்புக்களுடனும் கொண்டுவந்து பிரதியாக்க முனைந்தபோது அதனை ஒருநாவலாக, அதுவும் அப்பொழுது உரையாடலுக்குள் இருந்த நொன் லீனியர் பிரதியாக அதனைச் செப்பனிட்டுக் கொடுத்தது பிறேம் ரமேஸ் என்ற இரட்டையர்களே என்ற விவாதம் புதிதல்ல. காலச்சுவட்டில் கூட இவை உரையாடப்பட்டன அல்லவா?


அ.ரா. ஆமாம். வாசித்த ஞாபகம் இருக்கிறது. இதனை ஒரு விவாதமாகச் சொல்லவில்லை. சொந்த ஊரை விட்டுவிட்டுச் சென்னையில் இலக்கியத்திற்காகப் போய்த் தங்குவார்கள். அவர்களுக்கு எந்த வேலையும் அங்கு இருக்காது. ஆனால் இலக்கியத்தை நம்பித்தான் இருப்பார்கள். அவர்கள் எந்தக் கதைகளையோ தொடர்களையோ எழுதுபவர்களாகவும் இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு நிரந்தர வருமானம் எப்படி வரும் என்று நினைக்கிறீர்கள்?

ஜோர்ஜ்: பலருடைய எழுத்துகளை இவர்கள் எழுதுவார்கள். பிசாசு எழுத்துகள் - ghost writings.

அ.ரா: அப்படிப் பலபேர் இருக்கிறார்கள். நாவல் எழுதிக் கொடுப்பார்கள்.. கவிதை எழுதிக் கொடுப்பார்கள். புத்தகம் போட்டுத் தருவார்கள். முன்னுரை எழுதிக் கொடுப்பார்கள். இவையெல்லாம் புதுமையில்லை. எப்போதும் நடக்கும் ஒரு தொழில் தான். அதுவும் இலக்கியல் செயல்பாடு என்றே நம்பப்படுகிறது

கற்சுறா: இதன் பின்னால் பல கதைகள் இருக்கிறன்றன. அவை குறித்து என்னை வெளிப்படையாகச் சொல்லத் தூண்டக் கூடாது. ஈழத்தில் வெளிவந்த பல கவிதைத் தொகுப்புக்களுக்குப் பின்னால் இந்தக் கதை இருக்கிறது. சஞ்சிகைக்குப் பின்னால் இந்தக் கதை இருக்கிறது.

ஜோர்ஜ்: தமிழ்நாட்டில் இப்படியிருக்கிறது என அறிய ஆச்சரியமாக இருக்கிறது.

அ.ரா: தமிழ்நாட்டிலும் நடைபெறுகிறது. பெயர்களைச் சொல்ல வேண்டியதில்லை. மொழிபெயர்ப்பு செய்து கொடுத்துவிட்டுப் பணம் பெற்றுக் கொள்ளும் எழுத்தாளர்கள் உண்டு. அந்த மொழிபெயர்ப்புகள் அறியப்பட்டவர்கள் பெயரில் வரும். எழுதிய கதைகள். ஆங்கிலத்தில் எழுதியதைத் தமிழ்ப்படுத்தியும் கொடுப்பார்கள். பல்கலைக்கழகங்களில் ஆய்வாளர்கள் திரட்டித்தரும் தகவல்களைக் கொண்டு வழிகாட்டிகள் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதைப் போலப் படைப்பிலக்கியத்திலும் நடக்கவே செய்கிறது. பணம் இருப்பவர்களுக்குப் புகழ் தேவைப்படும். புகழ் அடைவதற்குப் பயன்படும் எழுத்தை எழுதிக் கொடுப்பவர்களுக்குப் பணம் தருவார்கள். வேலை செய்பவர்கள் சும்மா செய்யமுடியாது அல்லவா? அவர்களும் வாழவேண்டும்; சாப்பிடவேண்டும் தானே? (சிரித்துக்கொண்டோம்)

ஜோர்ஜ்: இங்கேயொரு கேள்வி எனக்கெழுகிறது. அந்த எழுத்துக் குறித்த உரையாடல் நிகழும் போது, ஒருவர், இன்னொருவர் எழுதியதற்கு எப்படி நியாயம் கற்பிப்பது? அவரிடம் கேட்டுத்தானே விளக்கம் சொல்ல முடியும்?

அ.ரா: அப்படி நுட்பமாக விவாதங்கள் நடப்பதில்லையே. எழுதியவர்கள் நான் தான் எழுதினேன் என முன்வராதபோது எதுவும் நடக்காது. எல்லாவற்றையும் பிசாசு எழுத்து -ghost writing – ஆகப் பார்க்க வேண்டியதில்லை. நண்பர்களோடு விவாதித்து செம்மைப்படுத்துவதாகவும் பார்க்கலாம். நண்பர்களாக இருக்கும் வரை அப்படித்தான் புரிந்துகொள்ளப்படும். அவர்களிடையே நட்பு முறியும் போது திருட்டு என்பதாக ஆகிவிடும். இப்பொழுது சாரு ஆர்த்தோ வாழ்வை மையப்படுத்தி ஒரு நாடகம் எழுதியிருக்கிறார். நான் பணியாற்றிய பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகப் பாடத்திட்டத்தில் ஆர்த்தோவின் நாடகமுறை பற்றிய அறிமுகம் இருக்கிறது. அவரது வலைப்பக்கத்தில் எழுதியதை வாசித்துவிட்டு, ஆர்த்தோ பற்றி நான் கருத்து சொன்னபோது அவர் எழுதிய இந்த நாடகத்தை எனக்கு அனுப்பி வைத்தார். அதனால் அந்த நாடகம் பற்றி விரிவாக எழுதினேன். அதில் ஒரு இடத்தில் 1938இல் என்று தொடங்குகிறது. நாடகத்தில் இப்படி ஆண்டு குறிப்பிட்டு எழுதும் போது அது நாடகத்தன்மை இழந்து அது வரலாறாகி விடுகிறது என்று விளங்கப்படுத்தினேன். அதெல்லாம் சரி பண்ணி அனுப்பியிருக்கிறேன் பாருங்கள் எனத் திரும்பவும் அனுப்பினார். இதனை வைத்துக் கொண்டு நானும் அதில் பங்களிப்பு செய்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது. சாருவிடம் நல்ல அம்சங்கள் இருக்கும். ஆனால் திடீரென மேடையில் வந்து திட்டவும் செய்வார். தமிழ் தவிர ராமசாமிக்கு என்ன தெரியும் என்று திட்டுவார். திட்டினால் சரியென்று ஒத்துக்கொண்டு போய்விடுவேன். ஆனால் தமிழ்ச் சூழலில் அவருக்கு ஒரு அடையாளம் இருக்கிறது. குடும்பம் சார்ந்து பாலியல் சார்ந்து தைரியமாகப் பேச வேண்டும் என்று நினைத்த ஒராள் அவர். அந்த மாதிரிப் பேசுவதற்கான ஒரு சிறியகூட்டத்தைத் தயார் பண்ணியிருக்கிறார் அவர். உலக இலக்கியப்பரப்பில் அப்படியொரு சிந்தனைப்போக்கு இருக்கும்போது தமிழிலும் இருப்பதில் என்ன தவறு. அவருக்கும் வாசிப்புக் கூட்டம் இருக்கிறது.

கற்சுறா: அவருக்கு வாசிப்புக் கூட்டம் இருக்கிறது சரி. அவர் மற்றவர்கள் எழுதாத பாலியல் கதைகளை எழுதுகிறார் சரி. சாதாரணமாக சமூகநீதிக்கான சிந்தனையுள்ளவனாக அவர் இருக்கிறாரா? அவர் எப்பொழுதும் தனது இருப்பிற்கான தனது வாழ்விற்கான நியாங்களையே தமது எழுத்துக்களினூடாக நியாயம் கற்பிக்க முனைகிறார். கிட்டத்தட்ட நமது சூழலில் சோபா சக்தி போல். சாருவோ தனக்குத் துணையாக ஜோன் ஜெனேயை அடையாளம் காட்டுவார். ஜெனே தன்னுடைய வாழ்விலிருந்து எழுத்தைக் கண்டெடுத்தார். ஆனால் சாருவோ தன்னடையாளத்திற்காக ஜெனேயைக் காட்டுகிறார். தனது அயோக்கியத் தனத்திற்கு ஜெனேயின் வாழ்வை அடையாளம் காட்டுவது தர்க்கமல்ல. இலக்கியத்தின் முடிச்சவிக்கித் தனந்தானே? வாழ்வில் தன்வாழ்வு சார்ந்த அறம் கூட அவரிடம் இல்லை.


அ.ரா: அது முழுமையாக இல்லையென்று நீங்கள் சொல்லலாம் தான். நமது வாழ்க்கையோடு ஒத்துப் பார்த்துச் சொல்ல நமக்கு உரிமை இருக்கிறது. ஆனால் ஒருவருக்கு இருக்கும் அறம் இன்னொருவருக்கு வேறாக இருக்கிறது. அவர் தன்னுடைய அறத்தின்படி வாழ்கிறார் எழுதுகிறார். தான் நம்புவதை எழுதுகிறார்.

கற்சுறா: இல்லை. அவர் பணத்திற்காக எதையும் எழுதக் கூடியவர். அதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

அ.ரா: ஆமா. அவர் பணத்திற்காக எதையும் செய்வார். நித்தியானந்தா தொடர்பில் அவர் மாறுபட்டுப் பேசினார் என்பதும் தெரிந்ததுதான். அவர் மட்டுமல்ல. இங்கே பலருந்தான் அப்படி இருக்கிறார்கள். தமிழ்நாட்டுச் சூழலில் எதுவும் நடக்கும். ஒருவருக்குக் கிடைக்கிற வருமானம் போதாத போது என்கிறபோது எதுவேண்டும் என்றாலும் செய்வார்கள்.பல நேரங்களில் நியாயப்படுத்தவும் செய்வார்கள். விருதுகள் உருவாக்குவது; கொடுப்பது; சிபாரிசு செய்வது; அதனைக் கொண்டாடுவது என எல்லாவற்றிலும் அறம் தாண்டிய போக்கு இருக்கவே செய்கிறது. வெளியே தெரியாதவரை அறம் மாறாதவர்கள்.

ஜோர்ஜ்: அந்தச் சூழலை நினைத்துத்தான் இங்கிருந்து செல்பவர்கள் எல்லோரும் சேட்டை செய்கிறார்கள். அவர்களுக்குப் பணத்தையும் பொருளையும் கொடுத்துத் தங்களுக்குரியவர்களாக மாற்றுகிறார்கள். அதன்மூலம் இலக்கியவாதியாகிறார்கள்.

அ.ரா: இங்கிருந்து செல்பவர்கள் பலரும் இதனைச் செய்கிறார்கள்? இதனைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அது குறித்து எனக்கும் கொஞ்சம் தெரியும். ஆனால் அதனைப் பேசுவது வதந்திப் பேச்சாக ஆகிவிடும். அல்லது கிசுகிசு போலப் பேசவேண்டியதாக மாறிவிடும்.

ஜோர்ஜ்: பிரபலமானவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் என்று பொதுவாக ஒரு பழக்கம் இருக்கிறது. தமிழ்ச்சினிமாக் கதாநாயகர்களைப் பார்ப்பது போலான சிந்தனை அது.

அ.ரா: ஆமா. அது ஒரு நம்பிக்கை. அவர்கள் நடிக்கும் கதாபாத்திரங்களைப் போலவேயிருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். சினிமாவைப் பார்ப்பதுபோல் அதனை இலக்கியச் சூழலிலும் பொருத்திப் பார்க்கும் கூட்டம் இருக்கிறது.


****

கற்சுறா: தமிழ் நாட்டிலுள்ள பதிப்பகங்கள் பற்றிப் பேசுவோம். அது குறித்து எங்களிடம் அதிகமான அனுபவங்கள் உள்ளன. நீங்கள் அவை குறித்து என்ன சொல்வீர்கள்?

ஜோர்ஜ்: ஏன் இதுவரையும் எங்களால் ஒரு நேர்மையான பதிப்பகத்தையும் அடையாளம் காணமுடியாது இருக்கிறது?

அ.ரா: (மிகப்பெரிய சிரிப்பு.) அங்கே யாருமே அதற்குரிய விடயங்களைச் சரியாச் செய்யவில்லை. தொழில் சார்ந்த நேர்மை ஒருவருக்கும் இல்லை. இதுவரை விடியல், காவ்யா, உயிர்மை, காலச்சுவடு, நியுசெஞ்சுரி புக் ஹவுஸ், நற்றிணை, அம்ருதா, டிஸ்கவரி புக்பேலஸ் என எட்டு பதிப்பகங்கள் வழியாக என்னுடைய நூல்களை வெளியிட்டுள்ளேன். 26 நூல்கள் அச்சிட்டு விற்றிருக்கிறார்கள். பல்கலைக்கழக வெளியீடுகளும் செய்துள்ளேன். இதில் எந்தவொரு பதிப்பகமாவது அடிப்படைத் தொழில் சுத்தத்துடன் செயல்படும் பதிப்பகமாக ஒன்றையும் சுட்டமுடியாது. இப்போது இன்னொரு பதிப்பகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்

ஜோர்ஜ்: கிழக்குப் பதிப்பகம் குறித்து ஒரு பதிவினை15 வருடங்களுக்கு முன்பு ஒரு ஆங்கில சஞ்சிகையின் அறிவிப்பில் தான் பார்த்தேன். ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்து புதிதாகப் பதிப்பகம் ஒன்றைத் தொடங்கி முதலீடு செய்கிறார். றோயல்ரி கொடுக்கப் போறார் என்பதாக வாசித்தேன்.

அ.ரா: பத்ரி சேஷாத்ரி. அவரது கிழக்கு பதிப்பகத்தோடு நேரடித் தொடர்பு எனக்கு இல்லை. வணிக ரீதியாக அதனை வெற்றிகரமாகச் செய்யவில்லை என்றே நண்பர்கள் சொல்கிறார்கள். அவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு அங்கேயே வேலை பார்த்தவர். அவர் கிழக்கு தொடங்கியபோது பதிப்புத்துறையில் நம்பிக்கையூட்டினார். மிகப்பெரிய சம்பளத் திட்டத்துடன் பலரை வேலைக்கு அமர்த்தினார். ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்பிடையில்தான். ஒருவருட வேலை அதன்பின் அவர்களது திறமையின் அடிப்படையில் நீடிக்கப்படும் என்ற பேச்சில் வேலைக்கு அமர்த்தினார். தொகுப்பு,திரட்டுதல், மொழிபெயர்ப்பு எனஎந்தத் தளம் வேண்டுமானாலும் அனைவரும் வேலை செய்யலாம். பதிப்பகத் துறைக்கு என அரசியல், இலக்கியப் பார்வையென எந்தக் கொள்கையும் இல்லாது எல்லாத்துறைப் புத்தகங்களையும் பதிப்புக்கும் நிலைப்பாடு இருந்தது. அப்பொழுதுதான் வியாபாரம் நடக்கும் என்று நினைத்தத் தொடங்கிய பதிப்பகந்தான் கிழக்குப் பதிப்பகம். நிறைய எழுத்தாளர்களை அழைத்து வேலை தந்தார். ஆனால் ஒப்பந்த அடிப்படையில் வேலையில் சேர்ந்த பலரும் பின்னர் வேலை இழந்தனர். அதனால் அங்கு வேலைக்குச் சேர்ந்ததின் பின் விளைவுகள் அவர்களை வருத்தத்தில் தள்ளியது. ஆனால் ஒப்பந்தப்படியே எல்லாம் நடந்தது என்பதால் ஒருவரும் முணுமுணுப்புகூடக்காட்டவில்லை.

ஜோர்ஜ் – இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார் அல்லவா?

அ,ரா. ; அவர் பதிப்பாளராகக் கைது செய்யப்படவில்லை. அவரது அரசியல் கருத்தொன்றுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதையே ஊடகங்கள் செய்தியாகச் சொல்கின்றன. ஆனால் அந்த அரசியல் கருத்து கிழக்கு என்று பெயர் வைத்ததோடு தொடர்புடையது என்பதைச் சொல்லமுடியும். இது அவரது செயற்பாட்டசைவோடு தொடர்புடையது. இது ஒன்றும் தற்செயலானது அல்ல. அவர் வெளியிலிருந்து வந்து கிழக்கு என்று ஆரம்பிக்கிறார்.

சிவா: சூரியன் உதிக்கும் திசையைக் குறிப்பதாக கிழக்கு எனப் பெயர் வைத்திருக்கலாம் அல்லவா?

அ.ரா: அப்படியாயின் அது திராவிடமாயிரும் அல்லவா? உதயசூரியன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சின்னம். அப்படியில்லை. அவர்கள் பேசும் பேச்சும் சிந்தனையும் அதுவல்ல. அது கிழக்கு எதிர் மேற்கு என்பதோடு தொடர்புடையது. “கிழக்கு” என்றால் என்ன? அது ஒரு பொலிட்டிக்கல் கலைச்சொல். அதாவது மேற்கிற்கு எதிரானது கிழக்கு. இப்பொழுது பி.ஜே.பி என்ன பேசுகிறது ஆண்டி பிறிட்டிஷ் தானே. வெஸ்டன் ஐடியோலஜி, வெஸ்டன் கல்ச்சர், வெஸ்டன் பொலிட்டிக்ஸ் போன்றவற்றிற்கு எதிராக இந்தியப் பண்பாடு, இந்திய அரசியல் என்று சிந்தித்து வைக்கப்பட்ட பெயர் அது. அதனை முன்வைத்து இந்தியன் என்று வைப்பதற்குப் பதிலாகப் பெரிய பரப்பில் கீழ்த்திசை - ஈஸ்ட் என்று வைத்திருக்கிறார். அந்தக்காலத்திலலேயே புலோசபியில்- வெஸ்டன் புலோசபிx ஈஸ்டன் புலோசபி என்று எதிரெதிர் நிலை இருக்கிறது; நீண்ட காலமாகப் பேசிவந்திருக்கிறார்கள். அதன் வேருக்குள்ளே போய் ஒரு பெயர் எடுக்கிறார் பத்ரி. இது மிகத் திட்டமிட்டு ஆழமாகச் சிந்தித்து எடுக்கப்பட்ட பெயர்.

இதற்குப் பின்னால் பெருங்கூட்டம் இருக்கிறது. ஜெயமோகன் கூட ஆர்.எஸ்.எஸ். இல் இருந்தவர் தான். அவர் விஜயபாரதத்தில் எழுதியவர் . அதனை அவர் மறுக்கவேயில்லை. அங்கே எழுதிக் கொண்டு இருந்து விட்டு தபால்த் துறைக்கு வேலைக்கு வருகிறார். அவர் எப்படி கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்குகிற தொழிற்சங்கத்தில் எப்படிச் சேர்ந்தார்; செயல்பட்டார் என்பதுதான் ஆச்சரியம்?

ஜோர்ஜ்: அப்ப அது ஊடுருவல்.

அ.ரா: ஆமா. இந்தியாவில் வலதுசாரிகள் பலதளங்களில் ஊடுருவல் செய்திருக்கிறார்கள். எனது மாணவப்பருவத்தில் நடந்த நிகழ்வு இது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் எமர்ஜன்சியை –இந்திரா காந்தியை எதிர்த்தார். அவரோடு சேர்ந்து பி.யூ.சி.எல். என்ற அமைப்பினரும் வெளிப்படையாக எதிர்த்தனர். அதில் தார்குண்டே, அருண்ஷோரி, அருண் ஜேட்லி போன்றவர்கள் இருந்தார்கள். அதனுடைய தமிழ் நாட்டுப் பிரதிநிதி யார் என்றால், சோ. ராமசாமி. ஆனால் பின்னால் பிஜேபி உருவாகி ஆட்சிக்கு வந்தபோது இவர்கள் அதன் தீவிர ஆதரவாளர்களாக மாறினார்கள். அதே நேரம் அதில் இடதுசாரிகள் அதிகம் இருந்தார்கள். அதற்கு இடதுசாரி முகம் இருந்தது. அந்த இடதுசாரித்தன்மை கொண்ட அமைப்புக்குள் வலதுசாரிகள் ஊடுருவினார்கள் என்பது அருண்ஷோரி மத்திய அமைச்சரான பின்பு தான் தெரியவந்தது. அவசரநிலைக்காலத்தில் – இந்திரா காந்தியை எதிர்த்து தீவிரமான இடதுசாரி போல எழுதினார். அரசின் தவறுகளை அம்பலப்படுத்தினார்.

ஜோர்ஜ்: இது ஒரு நீண்ட காலத்திட்டமாக இருக்கிறதல்லவா?

அ.ரா: ஆமா. இது நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதிதான். கோல்வால்கருடைய திட்டந்தான். எப்பொழுதாவது ஒரு நாள் இந்தியாவை இந்து நாடாக மாற்றுவோம் என்பது அவரது திட்டம். அந்தத் திட்டத்திற்காக அவர்கள் தீவிரமாக வேலை செய்கிறார்கள். எதிர்ப்பவர்களின் நடைமுறையையே பின்பற்றுவார்கள். இப்பொழுது தமிழ்நாட்டில் பார்த்தீர்கள் என்றால் கிறிஸ்தவ பாடசாலைகளில் என்ன ஒழுங்கின்படி இயங்கியதோ அதன்படி இவர்களும் இயங்குகிறார்கள். இப்பொழுது தொடங்கப்பட்டுள்ள வித்யாஷ்மரங்கள், வித்யாலாயாக்கள் அப்படித்தான் இயங்குகின்றன. கிறிஸ்தவ பாடசாலைகளில் ஜெபம் பண்ணுவதுபோல் தங்களது வித்தியாலயாக்களை வழிபாடு நடத்துகிறார்கள். கடந்த இருபது வருஷங்களில் ஞானலாயாக்கள், சங்கரவித்யாலயாக்கள் என்று எத்தனையோ பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. அங்கே சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. வேதம் சொல்லிக் கொடுக்கிறார்கள். டான்ஸ் சொல்லிக் கொடுக்கிறார்கள். யோகா சொல்லிக் கொடுக்கிறார்கள். இவையெல்லாம் ஒரு நடுத்தரவர்கக்த்திற்கு ஈடுபாடான விடயங்கள். வேதம் படிப்பதும் அவர்கள் பரவாயில்லை என்று நினைப்பார்கள். ஆக ஒட்டுமொத்தத்தில் கல்வியை தம் வசப்படுத்த மிக நீண்ட திட்டத்தை அவர்கள் கொண்டு இயங்குகிறார்கள். கிறித்தவம் சமயப்பரப்பலைக் கல்வி வழியாக நிகழ்த்துகிறது என்ற புரிதலில் அந்தத்திட்டம் நடக்கிறது. ஆனால் கிறித்தவ மத எதிர்ப்பு என்பதைத் தாண்டி, இந்தியர்களைப் பின்னோக்கித் திருப்புவது அதில் நடக்கிறது. இந்த நீண்ட காலத் திட்டத்தில் அமைப்புகள் ரீதியான நடைமுறைகளைக் கொண்டு இயங்குவது ஒரு பாதை. இன்னொன்று அவற்றுக்குரிய தனிமனித அறிவாளிகளின் செயற்பாடுகளை உருவாக்குவது. அந்தவகையில் தான் கிழக்கு, விஷ்ணுபுரம் போன்ற பெயர்களைப் பார்க்கிறேன். தனது உரைகளில், இலக்கியக் கோட்பாட்டில் ஜெயமோகன் முன்வைக்கும் இந்திய மரபு, இந்தியப்பார்வை போன்றவற்றையும் கணிக்கிறேன். இலக்கியத்தில் ஜெயமோகனின் செயல்பாடுகளை ஒத்ததாகவே பத்ரி சேஷாத்ரியின் கிழக்கும் அப்படிப்பட்ட சிந்தனையின் வெளிப்பாடுதான். ஒருவர் தான் நம்பும் கருத்தியலுக்காக எழுதுவதும் செயல்படுவதும் தவறானது என்றாகாதுதானே. நாம் அதை விமரிசிக்கலாம். அப்படிச் செய்யக்கூடாது என்று சொல்லமுடியுமா?
பத்ரியின் கிழக்கு அப்படியொன்றும் சந்தையை – புத்தக மார்க்கெட்டை உருவாக்கிப் பலனடையவில்லை என்றே தோன்றுகிறது. அதன் சாயலில் – பாதையில் இந்துத்துவ நோக்கத்தோடு இன்னும் சில பதிப்பகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதுதான் அதன் வளர்ச்சி.

எனது புரிதலில் இன்றும் மிகப்பெரிய நெட்வேர்க்ககோடு இருக்கும் ஒரு பதிப்பகம் என்றால் நியூ செஞ்சரி புக் கவுஸ்தான். அதற்குத் தமிழ்நாடு முழுக்கப் புத்தக விற்பனை நிலையங்கள் இருக்கின்றன. இருக்கும் கடையைத் தாண்டித் தற்காலிகக் கடைகளையும் போடுவார்கள். அது முன்புபோல அரசியல் சார்பு நூல்களை மட்டும் பதிப்பது; விற்பது என்றில்லாமல் அரசியல் நீக்கம் பெற்ற நூல்களின் நிலையமாக மாறியிருக்கிறது. வெகுமக்களின் தேவைக்கான நூல்களைத் துணைப்பதிப்பகங்கள் மூலம் வெளியிட்டு விற்கிறது. காலச்சுவடு முதலில் பதிப்பகம் என இருந்தது. பின்னர் பிறைவேட் லிமிட்டெட். அதில் 51 வீதப் பங்கு கண்ணனிடம் இருக்கலாம். அதன் எழுத்தாளர்கள் பலரும் அங்கு பங்குதார்களே. பங்குதாரர்களின் நூல்கள் அதிகமாக தொடர்ந்து வெளியிடப்படும் . மற்றவர்களின் நூல்கள் குறைவாகவே வெளியிடப்படும். பங்குதாரர்களுக்கு பங்காகவும் லாபமாகவும் பணம் வரும் வாய்ப்புண்டு..

ஜோர்ஜ்: புத்தகம் எழுதி விற்று நல்ல வசதியாக இருக்கிறார்கள் என்று நீங்கள் ஒருமுறை எழுதியிருந்தீர்கள். எனக்கு நம்பமுடியாமல் இருக்கிறது. புத்தகம் எழுதி விற்றபணத்தில் மகளுக்குக் கலியாணம் செய்து வைத்தார் என்று எழுதியிருந்தீர்கள். தமிழ்நாட்டில் அப்படி இருக்கிறதா?

அ.ரா: ஆமா. அது உண்மைதான். அது தோப்பில் முகம்மது மீரானே ஒரு முறை பெருமையாகச் சொன்னார். புத்தக விற்பனையில் எல்லாருக்கும் எல்லாம் தெரிவதில்லை. பொதுவாகத்தெரிவது ஒருவகை . அதாவது புத்தகக் கண்காட்சியில் விற்கப்படுவதுதான் நமக்குத் தெரியும். ஆனால் ஒரு புத்தகம் கல்வித் துறைக்குள்ளே போனால் அதன் நிலை வேறு. நன்றாக விற்கும். படிக்கிறார்களோ இல்லையோ, புத்தகங்கள் வாங்கப்படும். அதனையும் விடப் பாடசாலை நூலகங்கள், அரச நூலகங்கள் என்று அதன் விற்பனை பலமடங்கு இருக்கும். பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் ஒரு நாவல் இடம்பெற்றால் மூன்றாண்டுகளில் குறைந்து 50 ஆயிரம் விற்கும் வாய்ப்பு முன்பு இருந்தது. இப்போது நிறைய பல்கலைக்கழகங்களும் தன்னாட்சிக் கல்லூரிகளும் வந்துவிட்டன. அதனால் சில 100 பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அதனால் முன்புபோல் ஒரு புத்தகத்திற்குப் பெரிய சந்தை இல்லாமல் போனது. இப்போது திரும்பவும் ஒருங்கிணைந்த பாடத்திட்டம் – தமிழ்நாட்டளவில் வரப்போகிறது. அப்போது விற்பனை நிலை என்பது மதிப்பிட முடியாதது.எனக்குத் தெரிந்து தோப்பில் அவர்களது புத்தகம் ஒரே நேரத்தில் இரண்டு பல்கலைக்கழகத்தில் பாடமாக இருந்தது. மூன்று வருடத்தில் 56.000 புத்தகங்கள் விற்றன என்றார். அறவாணன் அவர்களை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஜோர்ஜ்: ஓம் தெரியும். அங்கே தமிழாராட்சி மாநாட்டிற்கு வந்த நேரம் எமது பாடசலைக்கு வந்து உரையாற்றியவர்.

அ.ரா: அவர் நன்றாக உரையாற்றுவார். அவரெல்லாம் புத்தகம் விற்று அதிகம் சம்பாதித்தவர். உரையாற்றும் இடங்களில் அவரது புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கும். அதே உத்தியை இப்போது நவீனக் கதைசொல்லிகளும் எழுத்தாளர்களும் பின்பற்றுகிறார்கள். தங்கள் உரையைச் சந்தைப்படுத்துதலோடு இணைக்கிறார்கள். தங்களுக்கான பதிப்பகங்களைத் தொடங்கி நடத்தவும் செய்கிறார்கள்.

பேராசிரியர் அறவாணன் வருடத்திற்கு இரண்டுக்கும் குறையாமல் நூல்கள் எழுதுவார். அவரது மனைவி ஒரு புத்தகம் எழுதுவார். கல்விப்புலத்திற்கேற்ற நூல்கள் அவை. பொங்கல் வாழ்த்தோடு நூல்பட்டியல் அனுப்புவார் அவர்களது நூல்களை அவர்களே அச்சிட்டு விற்பனை செய்ய ஏற்பாடு செய்வார்கள். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் என்ற தகுதி புத்தக விற்பனையில் ஒரு கருவியாக இருக்கும் என்பதை அறிந்தவர்கள் அதைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.சந்தைப்படுத்தும் உத்தியாக அதைச் செய்வதற்குத் தயங்கவேண்டியதில்லை என்றும் சொல்லியிருக்கிறார். பண்டைத்தமிழ் இலக்கண, இலக்கியங்களை அச்சிடும் பதிப்பகங்கள் அவர்களின் பெயர்களைப் பதிப்பாசிரியர்கள் என்று பெயரைத்தந்து விற்பனை செய்கின்றன. புத்தக விற்பனையில் நூலக ஆணை பெறுவது, பாடத்திட்டத்தில் சேர்ப்பது போன்றவற்றில் குறுக்கு வழிகளும் இருக்கின்றன.

பொது நூலகத்துறை அதிகாரிகளோடு சேர்ந்து பழைய நூல்களை அச்சிட்டு நூலகங்களில் நிரப்பும் வேலையும் நடக்கிறது. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் அப்படியான விற்பனைப் பண்டங்களாக மாறியிருக்கின்றன. நாட்டுடைமையாக்குவது வாசிப்பவர்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்கவேண்டும் என்பதற்கு என்பதை மாற்றிப் பதிப்பகங்கள் அச்சிட்டு லாபம் பார்க்கின்றன. அண்மையில் எல்லாப் பதிப்பகங்களும் அச்சிடும் நூல்களாக எங்கள் துறையின் தலைவராக இருந்த தொ.பரமசிவனின் நூல்கள் இருக்கின்றன. பதிப்பித்தல், அச்சிடல் ஒழுங்குகளைப் பின்பற்றாமல் வெளியிடப்படும் இந்நூல்களை ஆய்வுத்தரவாகப் பயன்படுத்தக்கூட முடியாது. பதிப்பகத் துறை பற்றிப் பேச அதிக விடயங்கள் இருக்கின்றன. அது பலரும் நினைப்பதுபோல ஓர் அறிவுச்செயல்பாட்டோடு தொடர்புடையனவாக இல்லை.விதிகளைப் பின்பற்றி நடக்கும் சட்டப்படியான வியாபாரமாகவும் இல்லை.

ஜோர்ஜ்: ஏன் எங்களுக்கென்று ஒரு சரியான நல்ல பதிப்பகத்தை எங்களால் அடையாளம் காணமுடியாமல் இருக்கிறது?

ஒரு தொழில் முறைத் திட்டமிடல் இருக்கவேண்டும். அது அதிகமானவர்களிடம் இல்லை. காலச்சுவடு ஆரம்பத்தில் கொண்டிருந்தது. இப்போது இல்லை. அவங்கள் இப்பொழுது பிறைவேட் லிமிட்டட் ஆகிவிட்டார்கள். இப்பொழுது ஸீரோடிகிரிப் பதிப்பகம் அதனைச் செய்வதாகச் சொல்கிறார்கள். எழுத்தாளர்களுக்கு ராயல்டிக் கணக்குக் கொடுக்கிறார்கள். அதிலே செயற்படும் காயத்திரியும் ராம்ஜியும் முக்கியமானவர்கள். காயத்திரி ஒரு ஆங்கிலப் பேராசிரியர். ராம்ஜி சினிமா வினியோகஸ்தர். அவர்களுக்கு புத்தகங்கள் ஒரு பேரார்வம் உடைய விடயம். என்னிடம் கூடப் பேசியிருக்கிறார்கள். அவர்களுக்கு இதிலிருந்து பணம் பெரிய லாபமாக வரவேண்டும் என்பதில்லை. அதே நேரம் நஷ்டத்திற்காகச் செய்யவும் கூடாது என நினைக்கிறார்கள் அதனால் பதிப்பகத் துறையை நல்லபடி செய்வார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கு இதனை ஒரு நல்லதொரு முன்மாதிரியாகச் செய்து காட்டவேண்டும் என்றுஆசையிருக்கிறது. நினைக்கிறார்கள். ஆனால் கிழக்குப் பதிப்பகமும் இப்படித்தான் என்று சொல்லித் தொடங்கியதுதான்.  இவர்கள் யாருக்குமே கல்வித்துறை சார்ந்து செயற்படத் தெரியவில்லை. ஆனால் ராம்ஜி அதனைத் தெரிந்து வைத்திருக்கிறார். அவர் என்னிடம் கேட்டார். ஆனால் நான் சொன்னேன், எனது புத்தகங்கள் அதிகமாக கல்வியியல் சார்ந்தவர்கள்தான் வாங்குவார்கள் என்று. பரவாயில்லை அதுக்குமான புத்தகங்கள் நமக்குத் தேவைதானே என்று சொல்கிறார். இதற்கு முதல் காலச்சுவட்டில் பேசும்போது அவர்களுக்கு ஈடுபாடில்லை. உயிர்மைக்கு அதனை விளங்கிக் கொள்ளும் பக்குவமேயில்லை. அதற்குக் கிட்டவே போக முடியவில்லை. மனுஷ்யபுத்திரனும் என் மாணவர்தான். அவருக்கு நேரடியாகவே சொன்னேன். தொழில் முறைப்படி ஒரு பதிப்பகம் செயல்பட்டு லாபம் கண்டு எழுத்தாளர்களுக்கு ராயல்டி கொடுப்பது தொடங்கினால் மற்றவர்களும் மாறும் வாய்ப்புண்டு. நடக்குமா என்று தெரியவில்லை. பார்ப்போம்..

இப்போது ரொரண்டோ நகரம் தமிழ்ப்புத்தகங்களுக்குப் பெரிய சந்தை. இது யாருக்குத் தெரியும்? நேற்றுத்தான் பார்த்தேன். முதல் நாள் ஆ.சி. கந்தராசாவின் உறவினர்கள் தான் இந்தமாதிரி மொய் எழுதுகிறார்கள் என்று நினைத்திருந்தேன். நேற்று தீபச் செல்வன் புத்தக வெளியீட்டிலும் எல்லோரும் வாங்கினார்கள்.

ஜோர்ஜ்: இதில வந்து ஒரு விடயம் முக்கியமானது. புலிமனநிலை என்பது மிக முக்கியமானது.
அ.ரா: உண்மை. இதில் இவர்களுக்கு ஒரு குற்றவுணர்வு இருக்கிறது. அங்குள்ளவர்களுக்கு தாம் ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான் அது.
 
ஜோர்ஜ்: அதுவொரு விசுவாச மனநிலை. இப்பவும் ஒரு மாவீர நிகழ்வு போன்று எதையாவது செய்தால், உடனேயே ஒரு மத நிகழ்வு போல் வந்து குவிவார்கள். அப்படித்தான் பழக்கப்பட்டிருக்கிறது இந்த சமூகம். அதனை நடத்துபவன் ஒரு அயோக்கியனாக இருந்தாலும் இவர்கள் போவர்கள். போய்க் காசை எடுத்துக் கொடுத்து ஒரு பூவை வாங்கிக் சட்டையில் குத்தி வாழும் கூட்டம் ஒன்று எங்களுக்குள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. 

அ.ரா. முதல் நாள் ஆ.சி. கந்தராசாவின் வெளியீட்டில் அதிக பட்சமாக ஒரு இருபது டொலர் கொடுத்திருப்பார்கள். ஆனால் நேற்றுப் பயங்கரவாதி நாவல் வெளியீட்டில் என்னைத்தான் புத்தகத்தைக் கொடுக்கச் சொன்னார்கள். வந்தவர்கள் அனைவரும் 50 டொருக்கும் குறையாமல் கொடுத்தார்கள். நான் பணத்தை கையால் வாங்கவில்லை. மேசையில் அப்படியே வையுங்கள் என்றேன். ஆனால் பெருமளவு பணம் அது.

ஜோர்ஜ்: இந்தப் புத்தகங்கள் எல்லாம் வாங்கப்படுவது வாசிப்பதற்காகவல்ல.

அ.ரா: இருக்கட்டுமே. இந்தப்பணத்தை இங்கே கொடுக்காது விட்டால் வேறு எதற்கோ கொடுக்கப் போகிறார்கள். இதற்குக் கொடுக்கட்டுமே. அவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ புத்தகங்கள் அடுத்தடுத்து வருந்தானே.

*******



ஜோர்ஜ்: அங்கே தலித்தியச் சிந்தனைகளின் இன்றைய நிலை என்ன? சாதியம் சார்ந்து இயங்கும் அமைப்புக்கள் கூட தமது சுயசாதிப் பெருமை பேசும் அமைப்புக்களாகத்தானே இயங்குகின்றன. தலித் விடுதலை என்பது அல்லது சமூக நீதி என்பது குறித்த கரிசனை என்னவாக இன்று இருக்கிறது அங்கு?


அ.ரா: சுயசாதிப் பெருமை இருக்கத்தான் செய்யும். சாதியின் கட்டமைப்பே அதுதானே. அவரவருடைய சாதியின் அடையாளங்களைத் தவறவிடக் கூடாது என்பதுதானே அதனுடைய தன்மையாக இருக்கிறது. அதனதனுடைய அடையாளத்தை நீ காப்பாற்ற வேண்டும். அதைத்தானே சொல்கிறது சாதியமைப்பு. அதற்குள் சமவுரிமை என்பது இருக்கவே இருக்காது. சமவுரிமை இல்லை என்பதுதான் சாதி.

சமவுரிமை என்பது மக்களாட்சிக்காலத்தின் –ஜனநாயகத்தின் எண்ணம். சாதி அதற்கு எதிரானது. அதனை விடவும் தலித் என்பது ஒரு யூனியிட்டியாகச் சில குழுக்கள் சேர்ந்தத. சில சாதிகளுக்குள்ளான ஒருகூட்டு அது. தொடக்கத்தில் சாதி ஒழிப்பு சார்ந்த இயக்கமாகத் தோன்றி, இப்போது சாதியின் வழியாக அதிகாரம் நோக்கி நகரும் இயக்கமாக மாறியிருக்கிறது. மற்ற சாதிகள் அதனை முன்பே செய்யத்தொடங்கிவிடன. வன்னியர் சமூகம் என்று ஒன்றிருக்கிறது தமிழ் நாட்டில் அவர்கள் எல்லொரும் ஒரு சாதி என்று சொல்கிறார்கள். ஆனால் அது எங்கேயிருக்கிறது என்றால் அவர்களின் பிறப்புப் பத்திரத்தில் இருக்கிறது. அவர்கள் யாருமே தம்மை வன்னியர் என்று எழுதுவதில்லை. பா.ம.க. தலைவர் ராமதாஸ் வன்னியர் என்று எழுதுவதில்லை; அன்புமணி வன்னியர் என்று எழுதுவதில்லை. படையாச்சி என்று எழுதுவார்கள். வன்னியர் அடையாளத்துக்குள் நாயகர் என்று ஒரு குழு இருக்கிறது. அதனைப்போல் நாலு சமூகம் சேர்ந்ததுதான் வன்னியர் சமூகம். தேவர் என்று ஒரு சமூகம் சான்றிதழ்களில் கிடையாது. தேவர் என்ற பெயரே தமிழ் நாட்டில் கிடையாது. அது கள்ளர் மறவர் அகமுடையார் என்றுதான் இருக்கும். முக்குலத்தோர் என்றும் கிடையாது. இவையெல்லாம் அரசியல் அடையாளங்கள். முக்குலத்தோர் என்று மூன்றை ஒன்றாகக் காட்டும் அரசியல் அடையாளம் அது.

ஜோர்ஜ்: அவர்கள் தங்களுக்குள்ளாவது திருமணம் செய்வார்களா?

அ.ரா: செய்யமாட்டார்கள். அதனைவிடுங்கள் திருநெல்வேலிக் கள்ளர்களும் மதுரைக் கள்ளர்களும் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள். அவர்களுக்குள் வித்தியாசம் இருக்கிறது. மதுரை மாவட்டத்திலேயே மேலூர் கள்ளர்கள் இருக்கிறார்கள். ஊசிலம்பட்டிக் கள்ளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் மேலூர் கள்ளர்கள் நிலம் வைத்திருப்பவர்கள். விவசாயம் செய்பவர்கள். ஊசிலம்பட்டிக் கள்ளர்கள் நிலமற்றவர்கள்; கள்ளர் என்பதைத் திருட்டுத் தொழிலோடு சேர்த்து அடையாளம் காணப்பட்டவர்கள் அவர்கள் பிரிட்டானிய ஆட்சிக்காலத்தில் குற்றப்பரம்பரைக்குக் கீழே அடையாளப்படுத்தி வைத்திருந்தார்காள். ஆனால் இப்போது அப்படி இல்லை. அதனால் இந்திய சாதி அமைப்பு என்பது நமக்கு வெளியில் தெரிவது போல் இருப்பதில்லை. ஒவ்வொரு சாதியும் பல்வேறு பிரிவுகளடங்கிய சாதிகட்டமைப்புடையது. பறையர் சாதிக்குள்ளும் பல பிரிவுகள் உண்டு. பின்னாளில் ஜனநாயகப் பண்பாடு தோன்றிய பின், வேலை வாய்ப்புக்கள் தோன்றிய பின் சாதிமாறிய திருமணங்கள் நடை பெறுகின்றன. அவை கலப்புத் திருமணங்கள். சாதி மறுப்புத் திருமணங்களல்ல. சாதி மறுப்பு என்பது வேறு. இவை கலப்புத் திருமணங்கள் என்பன வேறுதானே. பிராமணர்களுக்குள்ளும் கலப்புத்திருமணங்கள் நடைபெறுகின்றன. மற்ற சாதிகளுக்குள்ளும் நடைபெறுகின்றன. இப்படித்தான் இப்போது இருக்கிறது. இதனை எவ்வாறு கொண்டு நகர்த்துவது என்று எந்த தலித் அமைப்புக்களுக்கும் எந்தத் திட்டமும் இல்லை. பெரியார் கூட, இப்படித்தான் இருக்குது என்று சொல்லித்தான் தொடர்ந்து தாக்கினார் . மாற்ற வேணும் மாற்ற வேணும் என்று பேசினார். அவரும் கூட அதனை எப்படிச் செய்ய வேண்டும் என்று சொன்னதாகத் தெரியவில்லை.

இந்தத் தலித் அமைப்பாக்கம் என்பது, அதனை கட்டும் போதே யார் அதற்குத் தலைமை தாங்குகிறார்களோ அவர்களது சாதியின் அடையாளமாக அது மாறிவிடுகிறது. இப்போது திருமாவளவன் வெளித்தெரியத் தொடங்கியபோது அது பறையர்களது அடையாளமாகக் கணிக்கப்பட்டு, பள்ளர்கள் எல்லோரும் தாம் அதற்குள் போகமுடியாது என ஒதுங்குகிறார்கள். இட ஒதுக்கீட்டினை முதன் முதலில் கொண்டுவந்த மாநிலம் சென்னை மாநிலம்- அதாவது மட்ராஸ் பிரசிடென்சி. பிறிட்டிஸ் காலத்திலேயே உருவாக்கப்பட்டது. பொதுவாக பிறிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கித் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் மூலம் அதிகாரப் பதவிகளை அதிகம் பெற்றவர்கள் பறையர் சமூகத்தினர். அதனால் அரசுப்பதவிகளுக்குள் - அதன் நிர்வாகத்திற்குள் மேலே போனவர்கள் பறையர்கள். அதன் பிற்பாடு தி.மு.க. ஆட்சியில் வரும்போது, பள்ளர்களில் படித்தவர்கள் வருகிறார்கள். அவர்கள் அதிகாரிகளாக மாறுகிறார்கள். அதிமுகவில் அதிகமாகப் பள்ளர்கள் இருப்பார்கள். பறையர்கள் இருக்கமாட்டார்கள். ஏனென்றால் பறையர்கள் தமிழ் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள பெருஞ்சாதி. முன்பு காங்கிரஸ் ஆதரவு சக்தியாக இருந்தனர். வன்னியர்கள் திமுகவின் பக்கம் இருந்தார்கள். பாட்டாளி மக்கள் கட்சி தோன்றி வன்னியர்கள் திரளாக அங்கே போனபோது, பறையர்கள் திமுக ஆதரவாளர்களாக மாறினார்கள். பா.ம.க.வைப்போல விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனிக்கட்சியாக வடிவம் எடுத்துவிட்ட து. தமிழ்நாட்டின் கூட்டணி அரசியலில் இரண்டு தரப்பும் ஒரே அணியில் இருக்க முடியாமல் போய்விட்டது. தமிழ்நாட்டின் தெற்கில் தேவர்களுக்கும் பள்ளர்களுக்கும் பகை முரண்பாடு உருவாக்கப்பட்டதும் ஆங்கிலேயர்கள் காலத்திலேயே நடந்தது. காங்கிரஸ் காலத்தில் பள்ளர்கள் அதன் ஆதரவு சக்தியாக இருந்தனர். இடைநிலை சாதிகளாக முக்குலத்தோர் திராவிட இயக்கத்தினராக – திமுகவிலும் அதிமுகவிலும் திரண்டனர். ஆனால் முத்துராமலிங்கத்தேவர் பார்வர்ட் பிளாக் மாதிரியில் பள்ளர்களுக்கு எனத் தனிக்கட்சி ஒன்று தேவைப்பட்டது. அங்கே டாக்டர் கிருஷ்ணசாமி புதிய தமிழகத்தை உருவாக்கினார். எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் இந்த சாதிகளுக்கு இடையே ஒருவிதச் சமநிலையை உருவாக்கினார். தேவர்களுக்கு ஒரு மந்திரி பதவி பள்ளர்களுக்கு ஒரு மந்திரி பதவி கொடுப்பார். ஏனெனில் அங்கே முக்குலத்தோர்களையும் பள்ளர்களையும் சமநிலைப் படுத்த வேண்டும். அதற்காக அப்படிச் செய்வார். அவர் மாதிரி மற்றவர்கள் சமநிலைப்படுத்து அரசியலைச் செய்வது குறைவு. அவருக்கு அரசியல் தெரியாது என்று பலர் சொல்வார்கள். உதாரணமாகத் திருநெல்வேலி மாவட்டத்தில எண்ணிக்கையில் ஆதிக்க சமூகம் என்றால் பள்ளர் நாடார் தேவர் என்ற மூன்று சமூகங்கள் தான். இந்த மூன்று சமூகத்தினரையும் மந்திரிப் பதவி கொடுப்பது, கட்சிப்பணி கொடுப்பது என சமநிலைப்படுத்தியபடியே இருப்பார். ஒரு காலத்தில் மாவட்டச் செயலாளராக நாடார் இருக்கிறார் என்றால் ஒரு மூன்று வருடத்தில் அவரைத் தூக்கிவிட்டு மற்ற சமூகத்தவரை அமர்த்தவார். ஜெயலலிதா கூட அதனைத் தொடரவே செய்வார். கவலையே படாமற் செய்வார்கள். ஆனால் தி.மு.க. அதனைச் செய்வதில்லை . திமுகவில் ஏன் திரும்பத் திரும்ப வாரிசு அரசியல் வருகிறதென்றால் மாவட்ட அளவிலேயே அதே குடும்பங்கள் தான் வந்துகொண்டிக்கின்றன. ஒரு இடத்தில் இன்று ஒருவர் மாவட்டச் செயலாளராக இருக்கிறார் என்றால். அவரது அப்பா அவனுக்கு முன்னால் அங்கே மாவட்டச் செயலாளராக இருந்திருப்பார்.


ஜோர்ஜ்: அது என்னவென்றால், அவர்களிடந்தான் சேர்க்கப்பட்ட சொத்து இருக்கிறது.



அ.ராமசாமி: உண்மை. சொத்து அவர்களிடம் இருக்கிறது என்பதே அதற்கான காரணம். திருச்சியில் கே.என். நேரு குடும்பம் பலம் பொருந்தியவர்களாக இருக்கிறார்கள். அங்கே ஸ்ராலின் கூட அவரிடம் கேட்காமல் அங்கே எதுவும் பண்ண முடியாது என்று சொல்வார்கள். அங்கே திருச்சி சிவா பெரிய இன்டர்லெக்சவல். ஆனால் அவரால் அங்கே ஒன்றும் பண்ணமுடியாது. ஏனெனில் பணம் நேருவிடம் இருக்கிறது.


ஜோர்ஜ்: திருச்சி சிவாவின் மகனுக்கு என்ன நடந்தது?


அ.ரா. அவர் பி.ஜே.பியில் இருந்தார் என்றும் இப்பொழுது பிரச்சனைப்பட்டு வெளியில் வந்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். பி.ஜே.பி மற்றக்கட்சிக்குள் ஊடுருவுவதுபோல் இவர்களும் ஏதாவது முயற்சி செய்திருப்பார்கள், அது தப்பாகப் போய்விட்டது என எண்ணுகிறேன்.


ஜோர்ஜ்: இவற்றையெல்லாம் கடந்து நமது இலக்கியச் சூழலில் தலித்தியத்தின் இன்றைய பங்கு என்னவாக இருக்கிறது?

அ.ரா.: இப்பொழுதும் நான் பரவலாக பலரையும் வாசிக்கிறேன். ஆனால் ஒரு பத்து வருடமாக தலித் பக்கமிருந்து புதிதாக யாருமே இலக்கியத்திற்குள் வரவில்லை. தொன்னூறுகளில் நாங்கள் பேசினவையெல்லாமே தலித் எழுத்தாளர்கள் குறித்துத்தான். தொன்னூறுகளில் வெளிவந்த சிறு பத்திரிகைகள் –இலக்கிய இடைநிலை இதழ்கள் என்று எதை நோக்கினாலும் தலித் அரசியல் குறித்து பேசாத பத்திரிகைகள்- சஞ்சிகைகள் வந்தது கிடையாது. இன்று அப்படி இல்லை. இன்று ஒன்றுமேயில்லை. இன்று சினிமாவில் ரஞ்சித் படம் வந்தால் மட்டும் பேசப்படுகிறது? அறியப்பட்ட தலித் எழுத்தாளர்களே தாங்கள் தலித் எழுத்தாளர் இல்லை என்று சொல்லுபடியான நிலைதான் உருவாகியிருக்கிறது. இப்ப இமையம் நான் தலித் எழுத்தாளன் இல்லை என்கிறார். தர்மன் நான் தலித் எழுத்தாளர் இல்லை என்கிறார். எங்களை யாருமே தலித் எழுத்தாளர் என்று சொல்ல வேண்டாம் என்கிறார்கள். அந்த அடையாளம் வேண்டாம் என நினைக்கிறார்கள்.2010க்குப் பின் யாராவது தலித் எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் பதில் இருக்கிறது. இப்பொழுது இணைய இதழ்களே பத்துப் பதினைந்து இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் கூட எந்தத் தலித் எழுத்தாளர்களையும் நாம் அடையாளம் காணமுடிவதில்லை. இல்லை இது ஒரு தலித் எழுத்து என எந்த இதழ்களும் அடையாளம் காட்டிப் பதிவு செய்வதும் இல்லை.

அனோஜனது அகழ் இணைய இதழ், மலேசியாவிலிருந்து நவீன் கொண்டுவரும் வல்லினம் இதழ் கோகுல் பிரசாத்தினுடைய தமிழினி என்று எனக்குத் தெரிந்த இந்தமாதிரியான இதழ்களில் எழுதும் எழுத்தாளர்களில் யாராவது தலித் எழுத்தாளர்கள் என்று வருகிறதா எனக் கேட்டால் இல்லை என்பதுதான் பதில்.

ஜோர்ஜ்: நான் தலித் என்று அடையாளப்படுத்தும் படியான எழுத்துக்கள் இல்லை. சோபாசக்தியைத் தவிர? (மிகப்பெரிய சிரிப்பு)


அ.ரா : ஆமா… இது ஒரு தலித் எழுத்து என்று சஞ்சிகைகள் கூட அடையாளம் காட்டும் பதிவுகளும் இல்லை.

கற்சுறா: இன்று சுகிர்தராணி மற்றும் மதி மணிவண்ணனது எழுத்துக்கள் குறித்து ஈழத்துச் சூழல் அதிகம் கவனிக்கிறது என்பதனை அறிந்திருப்பீர்கள். அவர்களது இடம் குறித்து நாம் பேச வேண்டும் என்றே நினைக்கிறேன்.

சுகிர்த ராணியின் இலக்கியப்பங்களிப்புகளும் களப்பணிகளும் தனித்த ஒன்றுதான். தன்னை பெண்ணாகவும் தலித்தாகவும் முன்வைப்பதில் தயக்கம் காட்டாமல் எழுதுவதை அவரது கவிதைகள் காட்டுகின்றன. மைய நீரோட்டத்தில் கலந்துவிடுவதற்காகத் தனது தலித் அடையாளத்தைக் கைவிட்டாக வேண்டும் என்று அவர் நினைப்பதில்லை. அதேபோல் கல்வி, மனித உரிமை, அரசெதிர்ப்புப் போராட்டங்கள் போன்றவற்றிலும் தொடர்ந்து ஈடுபாடு காட்டுகிறார். ஓர் அரசுப்பள்ளி ஆசிரியர் என்ற நிலையிலும் கூடப் பின்வாங்காத போராட்ட குணத்தைக் கொண்டவராகத் தொடர்ந்து நிற்கிறார். அறியப்பட்ட தலித் கட்சிகளின் சார்பாக இல்லாமல், தலித் என்னும் கருத்தியலை – சாதி இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் கருத்தியலை உள்வாங்கி வெளிப்படும் கவிதைகள் அவரது கவிதைகள்.

மதிவண்ணனின் ஆரம்ப எழுத்துகள் கவிதைகளாக வெளிப்பட்டன. தொடர்ந்து கவிதைகள், புனைவுகள் என்ற நிலையிலிருந்து விலகிக் கருத்துருவாக்கத்தை முன்வைக்கும் கட்டுரை எழுத்தை நோக்கி நகர்ந்துள்ளார். தலித் அடையாளத்திற்குள் தனது சாதியான சக்கிலியர் அல்லது அருந்ததியர் இல்லை என்பதைச் சொல்கிறார். ஆனால் பள்ளர்கள் என அழைக்கப்படும் தேவேந்திர குல வேளாளர் தலைவர்கள் அல்லது கருத்தாளர்கள் சொல்வதுபோலச் சொல்வதில்லை. தொடர்ந்து சக்கிலியர் வரலாற்றை எழுதுவதற்கான களப்பணி, தொன்மங்களைக் கட்டுடைத்தல், வரலாற்றுக்குறிப்புகளைத் தொகுத்தல் எனச் செயல்படுகிறார். 1990 களின் கடைசியில் வெளிப்பட்ட இவ்விருவரும் அந்நிலையிலேயே தொடர்ந்து பயணிக்கின்றனர் என்ற நிலையில் கவனிக்கப்பட வேண்டியவர்கள்

கற்சுறா: இன்னுமொன்றையும் நாங்கள் மிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். புலம்பெயர்ந்த பரப்பில் இருந்தும் ஈழத்துப் பரப்பிலிருந்தும் ஒரு சூழல் உருவாகியது என்னவென்றால், வெறுமனே தமிழ்நாட்டு வாசகர்களுக்காக மட்டும் குறி வைத்து எழுதப்பட்டதாக இருக்கும் எழுத்துக்களின் நிலை. இதனை இன்றைய காலத்தில் ஆரம்பித்து வைத்தவர் சோபாசக்தி அவர்கள் தான். அவர் எழுதிய பல கதைகளை நான் அதற்கு உதாரணம் காட்டி எழுதியிருந்தேன். அவர் தமிழ் நாட்டில் மைக் முன் பேசும் மொழி வேறு புலம்பெயர் சூழலில் மைக்கின் முன் பேசும் மொழி வேறு. இதனை நீங்கள் அவரின் உரைகளைக் கேட்டால் புரிந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டுத் தேசிய உணர்வாளர்கள் சீமானைப் புரிந்து கொள்ளும் ஒரு கெட்ட நிலையைப் போலத்தான் தமிழ்நாட்டு இலக்கியச் சூழலும் சோபாசக்தியைப் புரிந்து கொண்டிருக்கிறது என்பதனை அண்மைய பதிவுகளும் எமக்கு வெளிப்படுத்துகின்றன. அவரை நம்பியிருக்கும் பதிப்பகங்களுக்கும் சஞ்சிகைகளுக்கும் அவரைத் தாண்டி ஒரு புதிய கருத்தைத் தேட வக்கற்றுப் போயிருக்கிறது என்பதுவும் கவலையான விடயம் தானே?



அ.ரா.: இன்று தமிழ் நாட்டில் அவருக்கு என்னமாதிரியான அடையாளம் இருக்கிறது என்றால், அவர் ஒரு நல்ல கதை சொல்லி என்ற அடையாளந்தான். கதை சொல்லும் நுட்பம் அவரிடம் இருக்கிறது எனப் பார்க்கிறார்கள். அதனை விடவும் இலங்கையின் பரப்புக்குள் - கதைப் பகுதிக்குள் சொல்லப்படாத பல விடயங்களைக் கண்டு பிடித்து அவர் சொல்கிறார். ஒரு கிறாப்ட் லெவலில்தான் அவருக்கு ஒரு மதிப்பிருக்கிறது. முன்னாடி புலிகளுடைய எதிர்ப்பாளர் என்பதற்காக அவருக்கு மதிப்பிருந்தது. எப்படிப் புலி ஆதரவாளர்களுக்கு ஒரு மதிப்பிருந்ததோ அதே போல் புலி எதிர்ப்பாளராக அவருக்கு ஒரு மதிப்பிருந்தது. இன்று அவர் கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறார்; புலி எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டார் என்று கூடச் சொல்லலாம். நாவல்களை ஒருவித நிகழ்த்துப் பனுவல்களாகப் பரப்பிக் காட்டுகிறார். அதனைவிடவும், சிறுகதைகளில் புதுவகைத் தொன்மங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்.

ஜோர்ஜ்: அவர் மெல்லம் மெல்லமாகத் தமிழ்த் தேசியம் நோக்கி நகர்ந்து விட்டார்.


அ.ரா : ஆமா. இப்பொழுது ஏறத்தாழ அந்த நிலைதான். ஆனால் நகர்ந்திருக்கிறார் எனச் சொல்லவும் முடியாது. அதனை அவர் கொஞ்சம் மென்மையாக அணுகிகுறார் தற்போது.

ஜோர்ஜ்: அவருடைய பல கருத்துக்கள் யாழ்ப்பாணிய மனோநிலைக் கருத்துக்களாகவே இருக்கின்றன.

கற்சுறா: கருத்துக்களாய் இருப்பது ஒன்றும் சிக்கலில்லை. ஆனால் அவர் தன்னுடைய வாசகர்களை யார் என்று தெரிந்து அவர்களுக்குக் கதை சொல்ல முனைவதும், இன்று ஈழ விடுதலைக் கதைகளிற்குத் தமிழ்நாட்டில் எவ்வகைப் புரிதல் இருக்கிறது என அறிந்து அதற்கேற்றால் போல் கதை சொல்லத் தொடங்கியிருக்கிறார். தமிழ் நாட்டவர்களும் தங்கள் கைகளுக்குக் கிடைக்கும் கதைகளை விட வேறு கதைகளைத் தேடுவதேயில்லை. தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. அந்த நிலையை அவர் நன்றாக விளங்கி வைத்திருக்கிறார்.

அ.ராமசாமி: ஆமா. இப்பொழுது அவர் எழுதியிருக்கும் திலீபன் பற்றிய கதை குறித்துச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். அண்மையில் வந்து கருங்குயில் தொகுப்பில் ஒவ்வொரு கதையும் ஒருவிதத் தொன்மமாக்கத்தைச் செய்திருக்கிறது. எல்லாமே நவீனத்தொன்மங்கள் என்ற அளவில் வாசிப்பவர்களுக்குப் பெரும் ரகசியத்தை திறக்கின்றன. ஏற்கனவே பிரபலமான நிலையிலிருக்கும் பெயர்களான ஈழத்தில் திலீபன். சிலியில் நெருடா போன்றவர்கள் பற்றிய விம்பங்களின் செய்திகள் இருக்கின்றன. ஆனால் அந்த விம்பங்களுக்குள்ளான செய்திகளுக்குள் ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதையை வடிவமைப்பவராகத்தான் நான் பார்க்கிறேன்.

ஜோர்ஜ்: நான் இதனைப் பற்றி விபரமாக எழுத வேண்டும் என்று யோசிக்கிறேன். இந்தத் திலீபனைப் பற்றிய கதை முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டு வாசகர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கதை. திலீபன் என்னுடைய கிராமத்தைச் சேர்ந்தவர். அவரைச் சிறு வயது முதல் நான் நன்கு அறிவேன். திலீபன் ஊரெழுவில் பிறந்தவர் என்று சொல்லப்படும் போது மற்றய விபரணைகள் தவறாகத்தானே இருக்கின்றன.


அ.ரா. : அதனைத்தான் நான் கேட்கிறேன். ஏன் அது சரியாக இருக்க வேண்டும்? இது திலீபன் பற்றிய வரலாறல்ல. வரலாறை எடுத்து அவர் கதையாக்குகிறார். அவ்வளவுதான். ஒரு கதாபாத்திரத்தை அவருடைய மரணத்தையும் மரணத்திற்கு பின்பும் இயக்கம் எப்படிப் பயன்படுத்தியது என்பதுதானே கதை?

கற்சுறா: சரி. இதைப் போன்ற செயலைத்தானே மணிரத்தினமும் தமிழ்ச்சினிமாவில் செய்து கொண்டிருக்கிறார்? “பம்பாய்” திரைப்படம் குறித்து நாம் பேசுவது அதைத் தான். ஒரு வரலாறை, உண்மையாக நடந்த நிகழ்வைத் தனக்குரியதாக மாற்றி ஈழச் சமூக விம்பத்தின் இன்னொரு முகத்தைத் தமிழ் நாட்டவர்களுக்குத் தருவது அற்பத்தனந்தானே? அதன் பின்னிருக்கும் சிந்தனை குறித்த உரையாடலில் தமிழ்நாட்டவர்கள் இணைய வேண்டும். ஆனால் அது நடைபெறுவதில்லைத்தானே?

ஜோர்ஜ்: அதனைவிடவும் ஒரு உண்மைக் கதையைச் சொல்லத் தொடங்கும் பொழுது நிலவியல் அடையாளங்கள் சரியாக இருக்க வேண்டாமா?

அ.ராமசாமி: ஜியோக்கிரபிக்கல் லொக்கேசனப் ஃபிக்சன் ஆக்குறதுதான் நல்லதென்று சொல்வார்கள். ஏனெனில் அவ்வாறு எழுதிச் சட்டச்சிக்கல்களை எதிர் கொண்டவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். இப்போது உதாரணத்திற்கு ஒரு அலுவலகக் கதையை எழுதும் போது அந்தச் சிக்கல் இருக்கிறது.அது சிக்கல்தான். ஆனால் ஒரு அலுவலகக் கதையை எழுதுவது மாதிரியல்ல இது. இதனால் ஒரு நபர் அடையாளம் காணப்படுவார் என்றோ, அல்லது அதனால் சட்டச் சிக்கலை எதிர் கொள்வார் என்றோ இங்கே இல்லை.  இப்போது ஒருவர் வயல்மாதா என்று எழுதியிருக்கிறார் அல்லவா? அவருக்கு ஃபிக்சன் பண்ணத் தெரியவில்லை. அதுதான் பிரச்சனை.

கற்சுறா: இந்தப் புலம் பெயர் சூழலில் இன்று இருக்கிற பரிதாபம் என்னவென்றால், இங்கிருக்கின்ற வீதிகளின் பெயர்களையும் வேலையிடத்து விடயங்களையும் அல்லது தாம் சுற்றித்திரியும் நாடுகளின் சம்பவங்களையும் எழுதிவிட்டால் தமிழ் நாட்டில் இருக்கும் வாசகன் வாயைப் பிளந்து கொண்டு வாசிப்பான் என்ற மனோபாவம் வந்திருக்கிறது. இதுதான் மிகப்பெரிய நோய். ஆனாலும் இந்தப் பேர்வழிகளைப் போலானவரல்ல சோபா. ஆனால் அவரும் அந்த நிலையை அடைந்திருப்பதுவே எனது வருத்தம். அது குறித்து நான் தொடர்ந்து சொல்கிறேன். ஈழ அரசியலில் புலிகளின் பங்கு அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவர் கதை சொல்ல விளைவதும் அந்தக் கதையைக் கையேந்தி விற்பதும் தமிழ் நாட்டிற்கு என்பதால் அவரறிந்த பலதிற்கு தங்கமுலாம் பூச வேண்டியிருக்கிறது. அந்த நிலைக்கு அவர் தரம் இறங்கியிருக்கக் கூடாது என்பதே எனது கோபம்.


அ.ரா.: நான் நேற்று நடந்த ஆ.சி. கந்தராசாவின் நூல் வெளியீட்டில் கூடப் பேசினேன். பொதுவாக ஈழம் புலம்பெயர் எழுத்தாளர்கள் எதிர் கொள்ள விளையும் வாசகர் வட்டம் என்பது தனித்த ஆட்கள் கிடையாது. அது ஒரு பெரிய அளவிலானது. அவர்களின் இலக்கு என்பது தமிழ் நாடுதான். அது குணா கவியழகனாக இருக்கட்டும்; தீபச் செல்வனாக இருக்கட்டும்; சயந்தனாக இருக்கட்டும் அவர்களுடைய இலக்கு என்பது தமிழ் நாடுதான். பிறகு புலம் பெயர் நாடுகள். அதற்குப் பிறகுதான் ஈழ வாசகர்கள். அந்த இடத்தில் தான் நான் சொல்கிறேன். இதனைத் தாண்டி இன்னொரு இலக்கு வையுங்கள். இவற்றை ஆங்கிலத்திலோ அல்லது பிற மொழியிலோ மொழி பெயர்த்தால் நிற்குமா? என்பதுதான் அது. அப்படி மொழி பெயர்க்ககும் போது இந்த உலக இலக்கியத்திற்குள் அதற்கு ஒரு அடையாளம் இருக்கிறதா? தீபச் செல்வன் அவர்களின் நாவலை அவர் சிங்களத்திற்குப் போக வேண்டும் என்பதனை மனதில் வைத்தே எழுதுகிறார். நடுகல் ஏற்கனவே சிங்களத்திற்குப் போய்விட்டது. இந்தப் பயங்கரவாதி நாவலும் சிங்களத்திற்குப் போனால் ஒரு சந்தை வாய்ப்பு இருக்கும். அதற்காகவே நாவலக்குள் சில பதிவுகளை வைத்திருக்கிறார். சிங்களச் சிப்பாய்க்கும் மனிதாபிமானம் இருப்பதாக ஒரு உத்தியை வைத்திருப்பார்.

கற்சுறா: இப்ப நான் கேட்கிறேன் என்னவென்றால், ஒரு கதை சொல்லிக்கு அதாவது ஒரு சிறுகதையாளனுக்கோ அல்லது நாவல் ஆசிரியனுக்கோ வாசகனின் இலக்கு இருக்க வேண்டும் என்று என்ன தேவை? வாசகனை அடையாளம் கண்டு தனது எழுத்தின் வடிவத்தை மாற்றமுனைபவன் வியாபாரிதானே? ஒரு வாசகன் கொண்டாடப்படக் கூடிய மனநிலையில் மட்டும் கதைகளைச் சொல்லத் துணிபவனை நாங்கள் எதற்குக் கொண்டாட வேண்டும்?

அ.ரா : இந்த மனநிலை எல்லாக்காலத்திலும் இருந்துள்ளது. இப்போது ஜெயகாந்தன் கதைகளை எடுத்துக் கொள்வோம். அவருடைய வாசகர்கள் யாரென்றால் இந்தக் குடும்ப அமைப்புக்குள் இருப்பவர்களும் அதற்குள் சமத்துவத்தை நோக்கிப் பயணிப்பவர்களுந்தான் பெரும்பான்மையான வாசகர்கள். ஆனந்த விகடனையோ குமுதத்தையோ வாசிப்பவர்கள் அனைவரும் அவரது வாசகர்கள் கிடையாது. அவரை விவாதத்திற்கு எடுப்பவர்கள்தான் வாசகர்களாக இருக்கிறார்கள். அதேபோலத்தான் இந்தப் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களும். இவர்களை விவாதத்திற்கு எடுப்பவர்கள் தமிழ்நாட்டவர்களாக இருக்கிறார்கள். அதனால்த் தான் அவர்களை நம்பிப் பதிப்பகங்களும் செயற்படுகின்றன. சினிமா எடுக்கிறவனும் அப்படித்தானே எடுக்கிறான். இப்பொழுது பா. ரஞ்சித்தோ அல்லது மாரி செல்வராஜ் அவர்களோ தைரியமாக படம் எடுக்கிறார்கள். ஏனென்றால் இன்றுள்ள தமிழ் நாட்டில் தியேட்டருக்குப் போய் சினிமா பார்க்கிற கூட்டம் விளிம்புநிலையினர்/தலித் சமூகத்தினர் தான். மற்றவர்கள் எல்லோரும் ஓ.ரி.ரியில் பார்க்கிற கூட்டமாக மாறிவிட்டார்கள். ஏனென்றால் மாமன்னன் படம் பற்றி இப்போதுதான் விவாதிக்கிறார்கள். இப்போதுதான் ஓரிரியில் படம் பார்த்தபிறகு விவாதம் ஆரம்பிக்கிறது. சிலர் தான் விவாதிப்பதற்காகத் தியேட்டர் போகிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து காசு கொடுத்துத் தியேட்டருக்குப் போய்ப் படம் பார்ப்பவர்கள் அதிகமாகத் தலித் மக்கள் தான். அதனால் மார்க்கெட்/ சந்தையைக் குறிவைத்தல் என்பது எல்லாக் கலைகளுக்கும் இருக்கதான் செய்யும். யார் படிக்கிறார்கள் யார் பார்க்கிறார்கள் என்பது முக்கியம்.

ஜோர்ஜ்: மார்க்கெட் இருக்கவேண்டும் என்பது சரி. ஆனால் நான் எழுத வேண்டும் என்பதை வாசகர்களின் விருப்பத்திற்காகச் சமரசம் செய்யும் நிலை தேவையா?

அ.ராமசாமி: சமரசம் என்று நாங்கள் சொல்கிறோம். ஆனால் யார் விவாதிப்பார்களோ அவர்களை நோக்கி எழுதுகிறேன் என்கிறார்கள் அவர்கள்.

ஜோர்ஜ்: இப்பொழுது தமிழ்நதி எழுதிய பார்த்தனீயம் போல் பல எழுத்து முறைமைகள் வருகின்றன. அது ஈஸியான எழுத்து முறை. அது ஈழத்திலும் விற்பனையாகும் புலம்பெயர் சூழலிலும் விற்பனையாகும். தமிழ் நாட்டிலும் விற்பனையாகும். இதே தீபச்செல்வன் தனது நாவலில் புலிகளும் சில தவறு செய்திருக்கிறார்கள் என்று சொல்லிப் போயிருந்தால் உங்களோடு விவாதம் செய்த சிவவதனி என்ற அந்தப் பெண் தீபச் செல்வனை அடித்தே கொன்றிருப்பார். முகநூலில் கூட அந்தப் பெண்ணின் துன்பம் தாங்கமுடியாது.


ஜோர்ஜ்: அதே நேரம் தமிழினிக்கு நடந்ததை யோசித்தீர்களா?

அ.ரா : தமிழினிக்கு இருந்ததெல்லாம் நடந்ததை தான் எழுதிவிட வேண்டும் என்ற விருப்பந்தான்.

ஜோர்ஜ்: அவை இலக்கியமா? இல்லையா என்ற விவாதத்தை விடுவோம். ஆனால் அதிலிருக்கிற உண்மைத் தன்மைகளை ஏற்றுக் கொள்ள இங்கே யாருமே தயார் இல்லை. யுத்தகாலத்திலிருந்த தமிழினி சொல்கிற கதைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் சம்பந்தமேயில்லாமல் ஓடிவந்த தீபச்செல்வனின் கதைகளை ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஏனென்றால் இவர் சொல்வது கதை. தமிழினி சொல்வது உண்மை.

அ.ரா : ஏற்கனவே இருக்கிற நம்பிக்கைகளுக்கு இன்னும் உறுதியை வழங்கும் போது பாராட்டத்தான் செய்வார்கள். அதனால்தான் இன்னும் கடவுள் வாழந்து கொண்டிருக்கிறார். எல்லோருக்குள்ளும் இருக்கும் கடவுள் பற்றி ஒரு போதகர் சொல்லும் பொழுது நன்றாக ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் பெரியார் வந்து எங்கேயிருக்கிறார் கடவுள் என்று கேள்வி கேட்டால் யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்?

கற்சுறா: இப்போது நமக்குப் பெரியார் முக்கியமா போதகர் முக்கியமா?

அ.ராமசாமி: இப்போதுள்ள சுமையும் வலியும் மாறாதா? என்று ஏங்கும் மனிதர்களுக்குப் பெரியாரும் போதகரும் வெவ்வேறு நிலையில் முக்கியமாக இருக்கிறார்கள். அந்த நேரத்தில் முதுகைத் தடவிக்கொடுத்து, கண்டுக்காமல் போய்க்கிட்டே இரு என்று சொல்லி அனுப்பும் போதகர் தற்காலிகத்தேவை. பரபரக்கும் கையை வைத்து மதிலையும் கதவையும் தட்டிக் கூச்சல் போடும் மனிதனுக்குப் பெரியார் முக்கியம்.

ஜோர்ஜ்: எங்களுடைய எழுத்துக்களுக்கும் தமிழ்நாட்டு எழுத்துக்களுக்கும் இடையில் இருக்கும் பாரிய வித்தியாசம் என்னவென்றால், எங்களுடைய இலக்கிய முயற்சிகள் உயிர்ப்பயம் சார்ந்தவை. வாழ்க்கையே உயிரைத் தற்காத்துக் கொள்ளும் போராட்டமாகத் தான் இருந்தது. அது புலிகளை ஆதரித்தாலும் சரி அல்லது எதிர்த்திருந்தாலும் சரி. இராணுவத்தாலும் புலிகளாலும் துரத்தப்பட்டாலும் அப்படித்தானிருந்தது. அந்த உயிர்ப்பயத்தால் தோன்றும் இலக்கியத்தில் உண்மை இருக்கவேண்டும் என்றுதான் நாங்கள் யோசிக்கிறோம். தமிழ்நாட்டில் உங்களுக்கு இலக்கியம் ஒரு “லக்ஸறி” விடயம். நீங்கள் வேறு அலுவல்கள் எல்லாம் பார்த்துக் கொண்டு மிகுதி நேரத்தில் இலக்கியம் படைப்பவர்கள். எங்களுடைய வாழ்வு அப்படியில்லை. நாங்கள் உயிரைத் தக்கவைக்க இங்கு வந்து கதை சொல்கிறோம். அகதிக் கோரிக்கைக்காகப் பொய் சொல்கிறோம். அப்படி எங்களின் உயிரைக் காப்பதற்காகத்தான் வாழ்வே ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்குள் எழுகின்ற இலக்கியத்தில் உண்மை இருக்க வேண்டும்.


அ.ரா : அதுசரிதான் , ஆனால் அந்த உண்மை எது? என்பதனைத் தான் அவர்கள் கேட்பார்கள்.

ஜோர்ஜ்: இல்லையில்லை. இங்கே எது உண்மை என்பது தீபச்செல்வனுக்கும் தெரியும். நேற்று உங்களுடன் உரையாடிய சிவவதனி என்கிற அந்தப் பெண்ணுக்கும் தெரியும். ஆனால் அவர்களுக்கு அதனைப் பகிரங்கமாகப் பேசக்கூடாது என்பதுதான். அதுதான் எங்களுடைய சிக்கல். ஒரு 30,35 வருடங்களுக்கு மேலாக பகிரங்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம், ஏனென்றால் உண்மை தெரியவேண்டும் என்பதற்காகத்தான். நாங்களும் பொய்யைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். முத்துலிங்கம் மாதிரி, செல்வம் மாதிரி இவை எதுவுமே நடவாதது போல் நோகாத இலக்கியம் செய்து கொண்டிருக்கலாம். பப்லோ நெருடாவைப்பற்றிக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கலாம். யாருக்கும் எந்தச் சிக்கலும் இல்லை. சிக்கல் என்னவென்றால் நம்மவர்களினது வாழ்க்கையும் உயிரும் சம்பந்தப்பட்ட விடயங்கள் இவை. அதனைவிடவும் முக்கியமானது நமது சமூகத்தின் எதிர்காலம் பற்றியது. இன்றைக்குக் கூட இலங்கை அரசியலில் எந்தத் தீர்வுக்கும் வரமுடியாமல் இருப்பதற்கு ஒரே காரணம் இந்தப் புலி ஆதரவாளர்கள்தான். எந்தத் தீர்வு வந்தாலும் ஒரு சமஷ்டியோ அல்லது மாகாண சபையோ எது வந்தாலும் உடன வந்து “எங்கட பொடியள் உயிரைக் கொடுத்தது இதுக்குத்தானோ” என்று சொல்லுவாங்கள். ஏனென்றால் இது இவங்களுக்குப் பிழைப்பு. இப்ப தீபச் செல்வன் வந்து கருணாகரனது கட்டுரையைத் தானே ரைப் செய்து வெளியிட்டுவிட்ட பின்னால் கூட பகிரங்கமாக கருணாகரனைப் பார்த்துத் திட்ட முடிகிறதுதானே? இதுதான் சிக்கல். இவங்களிடம் யாழ்ப்பாணத்து நரேற்றிவ் ஒன்றிருக்கிறது. அதற்கு முரண்படாமல் இனிக்கக் கதை பேசிக்கொண்டு போகலாம் . இதைத் தான் சோபாசக்தி செய்கிறார். இதைத்தான் தீபச்செல்வன் செய்கிறார். இதை நோக்கித்தான் நாங்கள் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கிறோம்.

அ.ரா : இதையெல்லாம் தமிழ் நாட்டிலிருக்கும் நாங்கள் எல்லாம் சொல்லமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.

கற்சுறா: அப்படியில்லை. தமிழ்நாட்டிலிருப்பவர்கள் என்னமாதிரி நினைக்கிறார்கள் என்றால் இங்கிருந்து வந்து அங்கே கதை சொல்பவர்களை மட்டுமே நம்பிவிடுகிறார்கள். அதுதான் உண்மை என்று அதிகமானவர்கள் நம்புகிறார்கள். உங்களைப் போன்ற சிலர் இப்பொழுது பல விடயங்களைப் புரியத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் கடந்த காலம் அப்படியிருக்கவில்லை. அண்மையில் நடந்த அண்ணா100 புத்தகக் கண்காட்சியில் புலம்பெயர்ந்த சூழலிலருந்து பேச அழைக்கப்பட்ட சோபாசக்தியும் செல்வமும் தெய்வீகனும் என்ன பேசினார்கள் என்பதனைக் கவனித்தீர்கள் தானே? இதுதான் கடந்த காலம் முழுவதும் நிகழந்தது. இந்த வகைத் தற்குறிகளையே தமிழ் நாட்டவர்கள் நம்பினார்கள். ஆரம்பத்தில் சேரனும் ஜெயபாலனும் மெல்ல மெல்லச் செய்த விடயங்களை இவர்கள் வேகமாகச் செய்கிறார்கள். இந்தப் பாதிப்பினை நிவர்த்தி செய்ய தமிழ் நாட்டவர்களுக்கு இன்னும் நீண்ட காலம் தேவை. அங்கேயுள்ள பதிப்பகத்தைச் சேர்ந்தவர்கள், தமக்கு இவர்கள் தரும் வியாபாரத்திற்காக இவர்களை முன்வைத்துப் படம் காட்டுகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை என்று அறிந்து கொள்ளத் தமிழ் நாட்டவர்கள் அவர்களைத் தாண்டிப் போக வேண்டும். ஆனால் அதுவும் தமிழ் நாட்டில் நடைபெறுவதில்லை.நாங்கள் இவர்கள் மீது கோபப்படுகிறோம் என்றால் இந்த விதத் தற்குறித்தனச் செயற்பாட்டிற்காகவே மட்டுந்தான்.மற்றப்படி இவர்கள் மீது எமக்கு எந்தத் தனிப்பட்ட முரண்பாடும் கிடையாது.

அ.ரா : அது புரிகிறது எனக்கு.



ஜோர்ஜ்: இலங்கைத் தமிழர்களின் வாசிப்பு பெரும்பாலும் தமிழ்நாட்டு வணிக வார இதழ்கள் சார்ந்தது தான். நாங்களும் அதற்குள்ளால் தான் வந்தோம். அவற்றில் எழுதியவர்களை வாசித்ததன் மூலமாகத் தான் இலக்கியம் பற்றிய எங்கள் பார்வை விரிவடைந்தது. அதைப் பற்றிய தேடல் தான் எங்களை சிற்றிதழ்களையும், பொதுவெளிக்கு அப்பாற்பட்ட எழுத்துக்களையும் வாசிக்க வைத்தது. தமிழ்நாட்டு நடிகைகளைக் கூட்டி வந்து கலை வளர்த்து பணம் சம்பாதித்த வெளிநாடுகளில் தங்கள் பணத்தைச் செலவழித்து சாரு நிவேதிதாவைக் கூட்டி வந்து அல்லல்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
அந்த சிற்றிதழ்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவர்கள், எழுதியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். எனக்குக் கூட புதிய கலாசாரம், புதிய கோடாங்கி எல்லாம் முன்பு தாயகம் வெளியிட்ட காலங்களில் அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், சாதாரண தமிழ்நாட்டு வாசகர்களை விடுவோம். இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்கள் இலங்கை இலக்கியம் பற்றிக் கொண்டிருக்கிற எண்ணப்பாடு என்ன? இது முழுக்க முழுக்க தங்கள் முன்னால் கடை விரிக்கப்பட்டவற்றை மட்டும் தெரிந்து கொண்டதாகத் தானே இருக்கிறது? எவருக்கும் தேடல் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.
ஒரு காலத்தில் கைலாசபதி, சிவத்தம்பி, டானியல், எஸ்.பொ, டொமினிக் ஜீவா என்று அறிந்தவர்கள் எல்லாம் யுத்தம் முடிந்த பின்னால் தான் ஈழ இலக்கியம், புலன் பெயர் இலக்கியம் என்று அறிந்தார்களே அன்றி, யுத்தம் காரணமாக வெளியேறியவர்கள் யுத்தம் நடந்து கொண்டிருந்த இடைப்பட்ட காலத்தில் புலன் பெயர் நாடுகளில் நடத்திய இலக்கிய இயக்கம் பற்றி அறிந்தவர்களாகத் தெரியவில்லை.
இந்த நாடுகளில் நடந்த இலக்கியச் சந்திப்புகள், வெளிவந்த சிற்றிதழ்கள் பற்றி தமிழ்நாட்டில் எங்கும் பேசப்பட்டதாக நான் காணவில்லை.
இப்படி, தமிழ்நாட்டார் அறிந்தவைகள் கூட தேடலால் வந்ததாக இல்லாமல், தமிழ்நாட்டு அங்கீகாரத்தைத் தேடி, விஸ்கி, விருது மாதிரி இலவச இணைப்புகளோடு வந்து தரப்பட்டதை அறிந்ததால் தான் வந்திருக்கிறது.

ஜெயமோகனுக்குக் கூட, மேற்சொன்ன இடதுசாரிகளின் எதிர்ப்புறத்தில் இருந்த தளையசிங்கம் போன்றவர்களை மட்டும் தான் தெரிந்திருக்கிறது. இவரைப் போல, தங்களுக்குத் தரப்படும் தானங்களை வைத்துத்தான் அங்குள்ளவர்களுக்கு ஈழ, புலன் பெயர் இலக்கியம் பற்றிய மதிப்பீடு இருக்கிறது.
புனித யுத்தம் என்று இவர்கள் கொண்டாடிய அதே யுத்தம் ஏற்படுத்திய அழிப்பையும் இழப்பையும் சொல்லி அழுது புலம்பி, பெயர் வாங்க முனைவோரை ஈழ இலக்கியத்தின் அடையாளமாகக் கொண்டாடுகிறவர்கள், புலிகள் நடத்திய இந்த யுத்தத்திற்கு எதிராகவும், அது ஏற்படுத்தப் போகிற அழிவையும் எதிர்வு கூறிய குரல்களை அடையாளம் காண முடியாமல் போனதற்கான காரணம் என்ன?
இதை எல்லாம் நான் கேள்வியாக இல்லாமல், குற்றச்சாட்டாகத் தான் சொல்கிறேன்.இப்போது நீங்கள் செய்கிற அளவுக்கு யாரும் செய்வதில்லைத் தான். ஆனாலும் குறை நினைக்கக் கூடாது. உங்களையும் நான் குற்றம் சாட்ட வேண்டியிருக்கிறது. அ.முத்துலிங்கத்தை மூத்த புலம் பெயர் எழுத்தாளர் என்று வகைப்படுத்துவது குறித்து. கிரிதரன் அ.முத்துலிங்கம் எப்போது வெளிநாடுகளில் இருந்து எழுதத் தொடங்கினார் என்பது பற்றி உங்கள் பதிவு குறித்து ஒரு பதிவு போட்டிருந்தார்.
தமிழ்நாட்டில் ஈழ, புலன் பெயர் இலக்கியம் என்றால், 'எல்லாம் நாங்கள் தான்' என்ற இந்த மூத்த முன்னோடிகள் ஓடி வந்து சொன்னதை மட்டும் வைத்துக் கொண்டு சொல்கிற, இந்தத் தேடல் இல்லாத முடிவுகளுக்கு என்ன நியாயத்தைச் சொல்லப் போகிறீர்கள்?


அ.ராமசாமி: ஈழத்தமிழ் இலக்கியவாதிகளுக்கும் தமிழ் இலக்கியவாதிகளுக்குமான உறவும் ஊடாட்டமும் பற்றிப் பேசும் அளவுக்கு விரிவான தரவுகள் என்னிடம் இருப்பதாக நினைக்கவில்லை. ஆனால் மாணவப்பருவம் தொடங்கி எனது வாசிப்புக்குள் – கவனத்துக்குள் வந்த தரவுகளைக் கொண்டே சிலவற்றைச் சொல்கிறேன். ஈழம், இன்னொரு நாட்டுக்குள் இருக்கும் பரப்பு என்றாலும், பண்பாட்டு நிலையிலும் தமிழ் வியாபாரத்திற்கான நுகர்வு நிலையிலும் வேறு ஒரு பரப்பாக இருக்கவில்லை. தமிழ்நாட்டுக்குள் இருக்கும் ஒரு பகுதி போலவே கருதப்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் வெவ்வேறு அடையாளங்கள் கொண்ட மண்டலங்கள் இருப்பது போல ஈழமும் ஒரு மண்டலம் என்றே நினைத்திருக்கிறார்கள். காவிரிக்கரை, தாமிரபரணிக்கரை, வைகைக்கரை, நொய்யல் ஆற்றுப் பகுதி என ஆற்றங்கரை அடையாளத்தோடு அம்மண்டலங்கள் இருந்துள்ளன. இம்மண்டல அடையாளங்களுக்குள்ளும் தனி அடையாளப்பகுதி இருப்பதாக நினைத்தபோது வட்டார இலக்கியத்தின் அடையாளங்களாக மாறியிருக்கின்றன.

தனிநாடு கோரிக்கைக்கு முன்பு ஈழத் தமிழ் இலக்கியங்களோடு தமிழ்நாட்டுக்கு நான்குவிதமான தொடர்புகள் இருந்துள்ளன. தமிழ்நாட்டுச் சைவ மடங்களோடு, ஈழத்தமிழ்ச் சைவப்புலவர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் தொடர்புகள் இருந்துள்ளன. சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தின் வழியாக வந்த நூல்களில் – தொகை நூல்களில் பங்கேற்ற புலவர்களில் ஈழத்தமிழர்களும் கல்வியாளர்களும் இருந்திருக்கிறார்கள். அதற்கிணையாகவும் கூடுதலாகவும் வணிக எழுத்தைப் பரப்பும் நோக்கம் கொண்ட ஆனந்தவிகடன், கலைமகள், கல்கி இதழ்கள் ஈழத்தையும் உள்ளடக்கிய தமிழ்நிலத்தைத் தங்களின் வியாபாரப்பரப்பாகவே கருதின. அவ்வப்போது பயணக்கட்டுரைகள், கோயில்களை அடையாளப்படுத்தும் பக்திக் கட்டுரைகள், ஆளுமைகள் என ஈழத்தமிழ்ப்பரப்புக்கு இடமளித்துள்ளன. இதே தன்மையைத் தமிழ் வணிக சினிமாவின் வியாபாரத்திலும் பார்க்க முடியும். தமிழ்நாட்டில் வெளியாகும் சினிமாக்கள் அங்கும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பரவலாக அறிமுகம் பெற்ற நாயக நடிகர்களும் நடிகைகளும் திரைப்பாடல்கள் சார்ந்து இசையமைப்பாளர்களும் பாடகர்களும் அதிக அளவு எண்ணிக்கையில் ரசிகர்களோடு இருந்திருக்கிறார்கள்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் உருவான சிற்றிதழ் மரபும், இட துசாரி இலக்கிய மரபும் தமிழ்நாட்டில் உருவாக்கிய அதே பார்வைகளோடும் இலக்கிய நோக்கத்தோடு ஈழத்திலும் தாக்கம் செய்துள்ளன.

இட துசாரி இலக்கியமரபு கல்விப்புல ஆய்வாளர்களின் வழி தமிழ்நாட்டில் உருவாக்கிய தாக்கம் பெருந்தாக்கம். மேற்கத்தியப் பகுப்பாய்வையும் அணுகுமுறைகள் சார்ந்த கலை இலக்கியப்பார்வையையும் தமிழ்க் கல்விப்புலத்திற்கு அறிமுகம் செய்தவர்கள் ஈழத்தின் பேராசிரியர்கள். அவர்களின் நூல்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டுப் பதிப்பகங்கல் வழியாகவே அச்சாகின. அவற்றிற்குக் கல்விப்புலத்தில் -குறிப்பாகச் சமூகவியல் பார்வையில் கலை, இலக்கியங்களை ஆய்வு செய்யவேண்டுமென நினைத்த ஆய்வாளர்களுக்கு -வழிகாட்டும் நூல்களாக இருந்தன. ரஷ்யச் சார்புப்பார்வை, சீனச்சார்புப் போக்கு என வேறுபாடுகள் இருந்தபோதிலும் கலை, இலக்கியப்பார்வையில் ஒருவிதமான இணைவுப்பார்வையை இலங்கையின் விமரிசகர்கள் வெளிப்படுத்தினார்கள். தமிழ்நாட்டில் சீனச்சார்புப்பார்வை கொண்டவர்கள் கல்விப்புலத்தில் குறைவு. எனது மாணவப்பருவத்தில் தாமரை, ஆராய்ச்சி, செம்மலர் போன்ற இதழ்களில் வாசித்த ஈழ எழுத்துகளைக் கொண்டு இதனைச் சொல்கிறேன். இந்தியாவில் சீனச்சார்பு கட்சியாக அறியப்பட்ட இட து கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியும் அதன் கலை, இலக்கியவாதிகளும் ஈழத்தோடு தொடர்புகள் இல்லாதவர்களாகவே இருந்தார்கள். அதன் தொடர்ச்சியைப் போராட்ட காலத்தில் – போர்க்காலத்தில் வெளிப்பட்ட ஒவ்வாமைத்தன்மையோடு இணைத்துப் பார்க்கமுடியும். அவர்கள் தேடிப்படிக்கவும் இல்லை; தங்கள் இதழ்களில் எழுதும் வாய்ப்புகளையும் உருவாக்கவில்லை. அதற்கு மாறாக வலது கம்யூனிஸ்ட் கட்சியின் இதழ்கள் இலங்கைத் தமிழ் எழுத்துகளுக்கு இடமளித்துள்ளன. தாமரையில் கதைகளும் கட்டுரைகளும் வந்துள்ளதைக் கவனித்திருக்கிறேன். குறிப்பாக ஈழத்தமிழ்ப் பகுதிக்கிணையாக மலையக எழுத்துகளுக்கு வாய்ப்பளித்துள்ளன. இலங்கையிலிருந்து வரும் திறனாய்வாளர்களை -எழுத்தாளர்களை வரவேற்று கூட்டம் நடத்தி, உரையாடி அனுப்பிவைத்த பதிவுகளை வாசித்திருக்கிறேன்.

இட துசாரிப்பார்வைக்கு எதிராக இருந்தவர்களுக்குத் தமிழ்நாட்டில் நண்பராக -சந்திக்கக் கூடியவராக இருந்தவர் சுந்தரராமசாமி.மு. தளையசிங்கம் போன்றவர்கள் சு.ரா. வழியாகவே தமிழ்நாட்டில் விவாதிக்கப்படுகிறவர்களாக ஆனார்கள். சுந்தர ராமசாமியை ஆசானாக நினைக்கும் தமிழ் நாட்டுத் தமிழ் எழுத்தாளர்கள் -ஜெயமோகன் வகையறாக்கள் அவரது பரிந்துரை எழுத்துகளையே முன்னர் வாசித்தார்கள். இதற்கிடையில் பத்மநாப அய்யர் ஈழத்தின் அனைத்துத்தரப்பையும் தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் பயணம் செய்தார்; எழுத்தாளர்களைச் சந்தித்தார்; பதிப்பகங்களை நாடினார் என்பதைக் கவனித்திருக்கிறேன். எனது ஆசிரியர்களான தி.சு.நடராசன், சி.கனகசபாபதி போன்றவர்களைச் சந்திக்க மதுரைப் பல்கலைக்கழகம் வந்தவரை நானும் சந்தித்திருக்கிறேன். அவரது முயற்சியால் முதலில் க்ரியாவும் பின்னர் காலச்சுவடுவும் ஈழத்தமிழ் இலக்கியங்களை அச்சிட்டுத் தமிழ்நாட்டுக்குள் அறிமுகம் செய்தன. அதே காலகட்ட த்தில் சென்னை புக்ஹவுஸ் வெளியீடுகளில் இலங்கைத் தமிழ் எழுத்துகளும் இருந்தன.

தீவிர எழுத்துக்களுக்கான இத்தொடர்புகளைத் தலைகீழாகப் புரட்டிப்போட்ட நிகழ்வாக வெலிக்கடைச் சிறைத் தாக்குதல் இருந்தது. அத்தாக்குதல் பரபரப்பு நிகழ்வாக – செய்தியாகத் தமிழ்நாட்டுத்தினசரிகளுக்கும் வார இதழ்களுக்கும் மாறின. குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் போன்ற பெயர்கள் வழியாக ஆயுதப்போராட்டம் என்பது தமிழ்நாட்டுக்கு அறிமுகம் ஆயின. அதன் பின்பு ஈழம், ஈழத்தமிழர், ஈழத்தமிழ் இலக்கியங்கள் என்பன போர்க்களப்பகுதியாக – போராளிகளாக -போர்க்களக் கவிதைகளாக, கதைகளாக மாறிப்போயின. தமிழர்களுக்கென ஒரு தனிநாடு என்ற லட்சியத்தைக் கனவைப் பெரும்பத்திரிகைகள் வியாபாரப்பண்டமாக மாற்றித் தமிழ் வாசகப்பரப்புக்குள் ஊதிப்பெருக்கின. ஆயுதப்போராட்டம், கொரில்லா போர்முறை, தேசிய இனப்பிரச்சினை எனப் போராளிகளுக்கான நூல்களை உருவாக்கித் தரும் நோக்கத்தோடு தமிழ்நாட்டில் சில பதிப்பகங்கள் உருவாகின; அச்சகங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றிற்கெல்லாம் இலங்கையின் போராளிக்குழுக்கள் நிதியுதவி செய்தார்கள் என்பது கேள்விப்பட்ட செய்திகள். திராவிட இயக்க ஆதரவாளர்களாகவும் இட துசாரி ஆதரவாளர்களாகவும் இருந்த சில பதிப்பகங்கள் ஈழம் சார்ந்த எழுத்துகளை அச்சிட்டு விற்பனை செய்தன. ஈழப்போர்க்காலத்தில் – 1983-2009 காலகட்ட த்தில் தமிழ்நாட்டில் அச்சிடப்பெற்ற நூல்களைத் தொகுத்துப் பார்த்தால் போர்க்கால இலக்கியங்கள் பெற்றிருந்த செல்வாக்கை சொல்ல முடியும். அவையெல்லாம் தொகுக்கப்பட வேண்டும். அப்படித் தொகுத்து வைத்திருக்கும் நூலகம் ஒன்றும் தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் தனிநபர்கள் வசம் இப்போதும் இருக்கும்.

போர்க்கால இலக்கியங்களையும், போருக்குப் பிந்திய இலக்கியங்களையும் தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்து எழுதியவர்களாகச் சிலரது பெயர்களைச் சொல்லமுடியும். எழுத்தாக இல்லாமல் பேச்சாக அறிமுகம் செய்தவர்களாக அறிவுமதி, இன்குலாப் போன்ற கவிஞர்களின் பேச்சுகளில் ஈழத்தமிழ்க் கவிதைகள் இடம்பெற்றுக்கொண்டே இருந்ததைக் கேட்டிருக்கிறேன். கோவை ஞானியின் நிகழ் இதழும் வெளியீடுகளும் சிலவகையானவற்றை அறிமுகம் செய்தன. சுந்தர ராமசாமி இருந்தவரை அவரது இலக்கியப்பார்வைக்கேற்ப அறிமுகக்குறிப்புகளையும் நேர்ப்பேச்சு உரையாடல்களையும் செய்து அறிமுகப்படுத்தினார். அவர் வழியாகவே ஜெயமோகனுக்குப் பல தொடர்புகள் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் தலித் இலக்கியம் தனி அடையாளம் பெற்ற நிலையில் முன்பே அறிமுகம் பெற்றிருந்த கே.டேனியல் திரும்பவும் அச்சில் கொண்டுவரப்பட்டார். பெரும்பாலான எழுத்துகளை அச்சிடும் தூண்டுதலை அ.மார்க்ஸ் மேற்கொண்டார். நான் பாண்டிச்சேரியில் இருந்தபோது நேரில் பார்த்த -கேட்ட வேலைகள் இவை.

1997 இல் புதுச்சேரி நாடகப்பள்ளியில் பார்த்த நிகழ்கலைப்பள்ளி விரிவுரையாளர் என்ற பணியை விட்டுவிட்டுத் தமிழ் இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியராகத் திருநெல்வேலிக்கு வந்தபோது, முழுவதும் சமகால இலக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு இருந்தேன். எல்லாத்தரப்பு எழுத்துகளையும் வாசித்து மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கம் இருந்த து. நெல்லைக்கு வந்தவுடன் இரண்டாவது மாதத்தில் நான் நடத்திய கருத்தரங்கம் பின்னை நவீனத்துவம். தொடர்ந்து பெண்ணியம் குறித்து நடத்தினேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கெனத் தயாரிக்கப்பட்ட பாடத் திட்ட த்தில் ஒவ்வொரு பருவத்திலும் ஒரு சமகால இலக்கியத்தாள்களை உருவாக்கினேன். கவிதை, நாடகம், நாவல்கள், சிறுகதைகள் எனச் சமகால இலக்கியவகைகள் கற்பிக்கப்பட்டன. இந்த நான்கு தாள்களிலும் ஐந்தில் ஒரு அலகாக ஈழத்தமிழ் இலக்கியங்கள் இடம் பெற்றன. பெண்ணியத்தைத் தொடர்ந்து தலித்தியம், போரிலக்கியம் போன்றன குறித்துக் கருத்தரங்குகள் நட த்திட த்திட்டமிட்டிருந்தேன். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொ.பரமசிவன் தலைவர் ஆன தால் அவரது விருப்பங்கள் சார்ந்து கருத்தரங்குகள் திசைமாறின. திரும்பவும் எனது தலைமை ஏற்பட்ட போது ஈழத்தமிழ் இலக்கியங்கள், புலம்பெயர் இலக்கியங்கள் துறைக்குள் விவாதப்பொருள்களாக்கப்பட்டன. கனடாவில் யார்க் பல்கலைக்கழக க்கருத்தரங்களில் வாசிக்கப்பட்ட விரிவான கட்டுரைக்குப் பிறகு துறையின் ஆய்வுப்பொருண்மைகளில் போர்க்கால -புலம்பெயர் இலக்கியங்கள் மையமாக்கப்பட்டன.

முதலில் ஓராண்டு ஆய்வுப்படிப்பான எம்பில் பட்ட த்திற்குத் தனி ஆசிரியர்களின் எழுத்துகளை ஆய்வுப்பொருளாக்கினேன். ஷோபாசக்தி, சயந்தன், குணா கவியழகன், தமிழ்நதி போன்றவர்களை ஆய்வுக்கு எடுத்தார்கள். முத்துலிங்கம், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் வ.ந.கிரிதரன் போன்றவர்களை வாசித்திருந்தாலும் அவர்களை ஆய்வுக்குரிய எழுத்துகளை எழுதியவர்களாக நான் நினைக்கவில்லை. அதே நேரம் புலம்பெயர் எழுத்துக்களைத் தனியாக் ஆய்வு செய்ய விரும்பிய மாணவர்களுக்கு வாசிக்க வேண்டியோர் பட்டியலில் இவர்களோடு கருணாகரமூர்த்தி, இளங்கோ, காலம் செல்வம் போன்றவர்களையும் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். துறையிலேயே இரண்டு பேர் முனைவர் பட்டங்களுக்கு ஈழத்தமிழ் – புலம்பெயர் எழுத்துகளை மையமிட்ட தலைப்புகளை எடுத்தார்கள். எனது கவனமும் வாசிப்பும் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியரின் ஆர்வம் தான். சமகாலத்தமிழ் இலக்கியம் தமிழ்நாட்டைத் தாண்டி இலங்கையிலும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் எழுதப்படுகின்றன என்று நம்புபவன் நான். அதனைச் சொல்வதற்காகவே 2019 இல் உலகத்தமிழ் இலக்கிய வரைபடம் என்ற கருத்தரங்கினை – பன்னாட்டுக் கருத்தரங்கினை நட த்தினேன். அதில் பங்கேற்க இலங்கை, சிங்கப்பூர், மலேசியப் பல்கலைக்கழகங்களிலிருந்து ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் வந்தார்கள்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தமிழ்த்துறையைப் போலவே சென்னையில் அரசு தலைமையில் தமிழ் இலக்கியத்துறையும், தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் அயலகத் தமிழ்த்துறையும் பங்களிப்பு செய்திருக்கின்றன. பொதுவாக ஒன்றை அறிமுகம் செய்வதிலும் விவாதப்படுத்துவதிலும் அவரவர் அரசியல் பார்வைகளும் சமூக நோக்கும் மட்டுமே இருக்கும்; இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் தனிநபர்களுக்குத் தனக்கு என்ன கிடைக்கும் என்ற ஆதாயம் தேடும் நோக்கம் வந்துவிடும்போது குழப்பங்களும் வந்துவிடும்.

இலங்கைத் தமிழ் எழுத்துகளைத் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்த பதிப்பகங்கள்/ தனிநபர்கள் முழுமையும் தங்களின் கருத்தியல் நோக்கத்தோடு செயல்பட்டார்கள் என்று சொல்ல முடியாது. தமிழ்நாட்டு எழுத்துகளைப் பற்றிக் கறாராக விமரிசனம் செய்தவர்கள் பிறவற்றைப் பேசும்போது நீக்குப்போக்காகவே விமரிசிக்கிறார்கள். 11 ஈழத்துக்கவிஞர்கள் தொகுப்பிலுள்ள கவிதைகளைத் தமிழ்நாட்டுக்கவிஞர்களிலிருந்து தொகுத்துத் தந்தால் அப்போதைய க்ரியா வெளியிட்டிருக்காது என்பது எனது கணிப்பு. காலச்சுவடு பதிப்பகமும் இதழும் வெளியிடும் புலம்பெயர் எழுத்துகளை ஒத்த தமிழ்நாட்டு எழுத்துகளை அச்சிடுவார்கள்/ புத்தகமாக்குவார்கள் என்று சொல்லமுடியாது. ஜெயமோகனின் கறரான முன்வைப்புகளும் அப்படித்தான் இருக்கின்றன. தமிழ்நாட்டு இலக்கியத்துக்கு ஒரு இலக்கியப்பார்வை; அயல் தமிழ் எழுத்துகளுக்கு இன்னொரு பார்வை என்பது இருக்கவே செய்கிறது.

இதே நிலையை வெளியிலிருந்து வருகிறவர்களும் மேற்கொள்ளவே செய்கிறார்கள். எந்தப் பதிப்பகம் வழியாக – எந்த இலக்கியக்குழு வழியாகத் தமிழ்நாட்டுக்குள் அறிமுகம் ஆகவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள். புலம்பெயர் எழுத்தாளர்கள் மட்டுமல்ல; மலேசிய எழுத்தாளர்கள், சிங்கப்பூர் எழுத்தாளர்கள் என அவரவர் எழுத்துகளுக்கான அங்கீகாரம்/ சந்தை போன்றவற்றில் கவனத்துடனேயே இருக்கிறார்கள். கொடுப்பதும் பெறுவதும் கருத்தாகவும் இலக்கியப்பார்வையாகவும் மட்டுமே இருக்கிறதா? பண்டமாக – விருதுகளாக – பொருளாக – பயணத்திட்டங்களாக இருக்கிறதா என்பதையெல்லாம் பேசிக் கொள்ளலாம். ஆனால் தடுத்து நிறுத்திவிட முடியாது என்றே நினைக்கிறேன்.

IV

கற்சுறா

நீங்கள் பிரபல எழுத்தாளர்களும் பல கல்வியாளர்களும் புத்தக விற்பனையால் போதிய அளவு பணம் சம்பாதிப்பதாக கூறுகிறீர்கள். அதற்கு அவர்களுக்கு இருக்கும் சரியான தொடர்புகளும் காரணம் என்றுதான் விளங்கிக் கொள்கிறேன்.

ஆனால், இலக்கியப் பொதுவெளியில் தங்கள் புத்தகங்கள் விற்பனை ஆகாமல் இருப்பது பற்றி பிரபலங்கள் முதல் அறிமுக எழுத்தாளர்கள் வரைக்கும் குறைப்படுகிறார்கள். அதற்குப் பல காரணங்களைச் சொல்கிறார்கள். அதில் பெரும்பாலும் வாசிப்புக் குறைந்த சமூகம் பற்றிய குற்றசாட்டுகள் தான் அதிகமாக இருக்கும்.

அச்சகங்கள், பதிப்பாளர்களின் நேர்மை குறித்த பகிரங்கமான குற்றச்சாட்டுக்கள் மிகவும் அபூர்வம். இதனால் பணம் சம்பாதிப்பதை விட, இழப்பு அதிகம் என்று தெரிந்த பின்னாலும் வெளியிடுவதிலான ஆர்வம் குறையவில்லைத் தானே?

யமுனா ராஜேந்திரன் கூட அடிக்கடி பேஸ்புக்கில் தனது வெளிவர இருக்கும் புத்தகப் பட்டியலைப் போட்டுக் கொண்டே இருக்கிறார்.

ஏற்கனவே புத்தகம் வெளியிட்டவர் தொடர்ந்தும் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார். வேலைக்கு போகாமல் முழுநேர எழுதுவினைஞர் ஆக இருக்க முடிகிறது என்றால், அதற்குள் ஏதோ ஒரு economic sense  இருக்கத் தானே வேண்டும்?

இல்லையேல் இதெல்லாம் தங்களைச் சிந்தனையாளர்கள், படைப்பாளிகள், இலக்கியவாதிகள் என்று முன்னிலைப்படுத்த முனைகிற, சொந்தச் செலவில் சூனியம் வைக்கிற வெறும் ஆர்வக் கோளாறுகள் தானா?

அல்லது முன்னால் அன்னாசிப்பழம் கொண்டுபோனவருக்கு நடந்தது தெரியாமல் பலாப்பழத்தோடு வரிசையில் நிற்கிற கதையா?

 

பொதுவான போக்கிலிருந்து விலகுதல் என்பது தன்முனைப்பின் அடையாளம் தானே. ஒவ்வொருவரும் அவரவர் அளவில் பொதுமனிதர்களாக இருப்பதிலிருந்து விலகவே நினைக்கிறார்கள். விலகல் நடக்கும்போது கவனிக்கப்படுகிறோம் என்று உணர்ந்துகொண்டால் அதனைத் தொடர்கிறார்கள். இளம்பருவத்திலிருக்கும்போது வரையப்பட்ட ஓவியம், எழுதப்பெற்ற கவிதை, பேசிய உரை கவனிக்கப்பட்டுப் பாராட்டும் கிடைத்தால் அது தொடர்ந்துவிடும்.  அதே நேரம் கலை, இலக்கிய ஈடுபாடு என்பதில் உறுதியான ஏற்புநிலை கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. சிலபேருக்கு வித்தியாசமாய் இருப்பதில் தொடங்கும் ஆர்வம், பின்னர் அதன்மீதான நோய்மையாக மாறித் தொற்றிக்கொள்ளும். அதனைக் கைவிட முடியாமல் தொடர்வார்கள். கல்விப்புலங்களில் முன்வைக்கப்படும் சிலவகை முன்வைப்புகள் மீது ஏற்படும் நம்பிக்கைகளும் கலை இலக்கிய ஈடுபாட்டை உண்டாக்குகின்றன. அவரவர் எல்லைக்குள் கிடைத்த முன்மாதிரிகளும் இத்தகைய ஈடுபாட்டுக்குக் காரணமாக இருக்கிறார்கள்.

நூல்கள் எழுதுவதும் வெளியிடுவதும் கவனிக்கப்படுவதில் கிடைக்கும் மனத்திருப்தியோடு தொடர்புடையது. தனித்திறன்களோடு – நுட்பமான பார்வையோடு – சமூக மாற்றத்தில் பங்கெடுக்கிறோம் என்ற நம்பிக்கைகளோடு தொடர்புபடுத்திக்கொண்டு ஒவ்வொருவரும் நூல்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதில் கிடைக்கும் புகழ்வெளிச்சம் தாண்டி, வருமானமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. முழுநேர எழுத்தாளர் என்ற நிலையைத் தேர்வு செய்பவர்கள் அதற்காகத் தொடர்ந்து உழைக்கிறார்கள். எனது காலத்தில் அப்படித் தேர்வுசெய்தவர்களாகவே எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா,கோணங்கி போன்றவர்களைப் பார்க்கிறேன். எஸ்.ரா. ஆரம்பத்திலேயே அப்படியொரு முடிவை எடுத்தவர். கோணங்கியும் கூட. ஜெயமோகனும் சாருவும் பார்த்துக்கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு எழுத்துக்குள் நின்றவர்கள்.   இவர்கள் ஓரளவு அவர்களின் எல்லைகளைத் தொட்டவர்கள். அப்படியான இலக்குகள் -எல்லைகளைத் தொடமுடியாமல் தோற்றவர்களையும் எனக்குத்தெரியும். அவர்களின் பெயர்களைச் சொல்லிக்காட்டி எச்சரிக்கை செய்யலாம் தான். ஆனால் அப்படியானவர்கள் வரட்டும் என்றே நினைக்கிறேன். தோற்றவர்களின் பெயர்களைச் சொல்வது கலை இலக்கிய விமரிசனப்பார்வைகளுக்குள் புதியவர்கள் வருவதைத் தடுத்துவிடும். 

எழுத்து, நூலாக்க விருப்பம், தன்னை முன்வைத்தல் என்பதில் நவீனத்து நிலை முடிந்து பின் நவீனத்துவ நிலைக்குள் தமிழ்ப்பரப்பு நுழைந்துவிட்டதாகவே நினைக்கிறேன். நான் இருக்கிறேன்; நாங்கள் குழுவாகச் செயல்படுகிறோம் என்ற இருப்புநிலையைத் தாண்டிய போக்கு தமிழ்ப்பரப்பில் உருவாகிவிட்டது. தனிமனிதர்களாகவும் குழுக்களாகவும் அலையும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒருவிதக் குற்றவுணர்வு உந்துதல் இதில் ஈடுபடச்செய்கிறது. அடித்தள மக்களின் வாழ்க்கையைவிடக் கூடுதல் வசதிகள் கிடைத்துள்ள நடுத்தரவர்க்க வாழ்க்கை உருவாக்கும் குற்ற உணர்வு இங்கே -தமிழில் நிறைய எழுத்தாளர்களை உருவாக்குகிறது. புலம்பெயர்ந்தவர்களுக்குத் தப்பிவிட்டோம் என்பதால் உருவாகும் குற்றவுணர்வு துரத்துகிறது. தோற்றுக்கொண்டிருக்கும் தத்துவங்கள் மீதும் கோட்பாடுகள் மீதும் வைத்துள்ள நம்பிக்கைகளைக் கைவிட முடியாத குற்றவுணர்வு பலருக்கு.

வணிகரீதியான வெற்றி கிடைத்தவர்களுக்கு இந்தக் குற்றவுணர்வுகள் எதுவும் கிடையாது; அதனை மனம் ஒப்பிய தொழிலாகச் செய்துகொண்டே இருப்பார்கள்.   பதிப்பகங்களும் வியாபாரமாகவும் வியாபாரம் அல்லாத குற்றவுணர்வுகளோடும் இயங்குகின்றன.   

  

 ஜார்ஜ்: 

இந்த இலக்கிய உலகத்தினருக்கு தமிழ்சினிமாவோடு இருக்கிற love hate relationship பற்றிக் கேட்க வேண்டும்.

ஒருபுறத்தில் அதில் இலக்கியத்தனம் இல்லை என்று குப்பையாக முற்றாகக் கூட்டி ஒதுக்குவது. மறுபுறத்தில் அதனால் கிடைக்கக் கூடிய பணமும் புகழும் குறித்து, நடிகையாக நினைக்கிற ஒரு கிராமத்துப் பெண்ணுக்கோ, இயக்குநராக நினைக்கும் சிறுநகர இளைஞனுக்கோ இருக்கிற அதே கனவை ஒரு secret crush  மாதிரி உள்ளூர வைத்துக் கொள்வது.

ஜெயமோகன் பகிரங்கமாக பல்டி அடித்ததை விமர்சிக்கிறவர்களுக்கு பின்புறமாக பல்டி அடிக்கும் அளவுக்கு அந்தக் கனவு இருக்கிறது என்று நினைக்கிறேன். அல்லது அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும், நான் கைக்கொள்ளும் அறம் அதை அனுமதிக்காது என்று பகிரங்கமாகச் சொல்ல முடியாமல் இருக்கிறது.

இந்த இடைவெளிக்குள் தமிழ்சினிமாவில் இருக்கிற இலக்கியத்தை மூழ்கி முத்தெடுக்க விமர்சகர்களும் இருக்கிறார்கள். யமுனா ராஜேந்திரன் மாதிரி!

இவர்கள் காட்டுகிற இந்த இலக்கிய முகங்களுக்கும் அப்பால், ஒரு புதுப்படம் வருகிற போது இவர்களுக்கு ஏற்படுகிற excitement க்கும் கட்டவுட்டுக்கு பால் ஊற்றுகிறவர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை.

நான் காணக்கூடிய வித்தியாசம் இவர்கள்  அந்த ரசிகர்கள் மாதிரி இல்லாமல், ஒரே ஹீரோவை வழிபடாமல் வஞ்சகம் இல்லாமல் எல்லாரையும் வழிபடுகிறவர்கள் என்பது தான்.

பேஸ்புக்கில் பார்த்தால் சகல உலக சினிமாக்களையும் பார்த்த பிரமிப்பும் பெருமையுமாகத் தான் பலரின் பதிவுகள் இருக்கின்றன. அதே எதிர்பார்ப்புகளுடனும், திருப்தியுடனும் தான் இவர்களின் மசாலாத் தமிழ்ப் பட விமர்சனங்களும் இருக்கின்றன. முதல்நாள் முதல் ஷோ செல்பி என்பது ஒரு சமூக அந்தஸ்து மாதிரியான நிலைக்கு வந்தது போலக் காணப்படுகிறது.

இந்த முரண்பாடுகளை எல்லாம் எப்படி விளங்கிக் கொள்வது?  

 நவீனத்துவம் கடந்த  நிலை ஒன்றை ஐரோப்பிய வாழ்க்கையை முன்வைத்து அதன்  சிந்தனாவாதிகள்  அரைநூற்றாண்டுக்கு முன்னால் பேசத்தொடங்கினார்கள்.   எல்லா அடையாளங்களும் அழிக்கப்படுவதாக அந்தப் பேச்சுகள் முன்வைத்தன. தனி அடையாளங்கள் நீக்கப்பட்டுப்பொது அடையாளங்களுக்குள் காணாமல் போவது தவிர்க்கமுடியாதது என்று நினைத்தார்கள். அமைப்பியல் கட்டமைப்புகளாகப் பேசப்பட்ட அடையாளங்கள் கரைந்து காணாமல் போய்க்கொண்டிருந்த காலகட்டம். அந்தக் காலகட்ட த்தில் கீழைத்தேயங்கள் அடையாளங்களைத் தேடும் பயணத்தில் இருந்தன. காலனியத்திற்குப் பின்னான நகர்வுகளுள் முதன்மையானது அடையாளங்களைத் தேடுதல் தான். அதன் வெளிப்பாடுகளே   பொதுப்புத்திக்கு எதிராகத் தீவிர மனநிலை எனவும், வணிக எழுத்துக்கு மாற்றாக இலக்கிய எழுத்து என்பதாகவும் நவீனக்கலைப்பார்வைகள் என்பதாகவும் உருவாக்கப்பட்ட சொல்லாடல்கள். அப்படிப்பேசியதை கைவிட்டுவிட்டு எல்லாமும் இருக்கும்; ஒன்றோடொன்று விலகியும் கலந்தும் ஊடாடும்; பரவும் என்ற சொல்லாடல்களுக்குள் இப்போதுதான் தமிழ் அறிவுலகம் சந்தித்துக் கடக்க முயல்கிறது.தனியர்களாக – தனித்துவம் கொண்டவர்களாகத் தங்களை முன்வைத்த நவீன எழுத்தாளர்கள் பொது நீரோட்டத்தில் கலந்து விடுவதில் இருந்த தயக்கங்களைக் கைவிட்டுவிட்டு நகர்கிறார்கள்.   

 சிறுகதையாடல்களும் பெருங்கதையாடல்களும் கலப்பதைக் காட்சிப்படுத்தும் வெளியாகவே இந்த நகர்வுகள் இருக்கின்றன. இலக்கியவாதிகளின் சினிமா நகர்வுகளும், பெரும்பத்திரிகைகளில் இடம்பிடிப்பதையும்  முன்பு பேசிய அறங்களிலிருந்து – நம்பிக்கைகளிலிருந்து விலகிச் சமரசம் செய்கிறார்கள் எனக் குற்றம் சாட்டலாம்; ஆனால்  ஆகப்போகும் விளைவுகள் குறித்து தீர்மானம் எதுவும் இல்லாதபோது நகர்வதே உத்தமம் என்றாகிறது. இது ஒருவித பரமபதவிளையாட்டுதான். தீர்மானிக்கப்பட்ட இலக்குகள் தள்ளித்தள்ளிப் போகும்போது இன்னொரு இலக்கை – எதிர்த்திசைப்பயணமாகத் தோன்றினாலும் தேர்வு செய்யவே தோன்றும். ஆனால் அதையும் நியாயப்படுத்தும் வாதங்களை வைக்கும்போதுதான் அவர்களின் மீது கோபமும் எரிச்சலும் உண்டாகிறது. எப்போதும்போலவே அறங்களைப் பேசிக்கொண்டு பின் தொடர்பவர்களை மடைமாற்றக்கூடாது என்று விமரிசனம் எழும். ஆனால் அத்தகைய விமரிசனத்தை வெளிப்படுத்தும் மேடைகள்/ பத்திரிகைகளிலும் இப்போது குறைந்துவிட்டன. ஏனென்றால் ஒவ்வொரு துறையிலும் இப்படி நடக்கிறதே.

 

தீவிர இலக்கியத்திலிருந்து திரைப்பட த்திற்குள் நகர்வது -சிற்றிதழ் எழுத்தாளர்கள் பெரும்பத்திரிகைகளில் பங்கேற்பது மட்டுமல்ல இன்னும் சில நகர்வுகளையும் காண்கிறேன். திராவிட அரசியல் கட்சிகள், இட துசாரிக் கட்சிகளிலிருந்தும் அவற்றின் கலை, இலக்கிய அமைப்புகளிலிருந்தும் வெளியேறித் தங்களின் தனி அடையாளத்தைப் பேணப்போவதாக வெளியேறியவர்கள் எல்லாம் இப்போது  அந்தக் கட்சிகளின் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்த போட்டி போடுகிறார்கள். வாய்ப்புக்கிடைத்தால் பாரதிய ஜனதாவின் – ஆர் எஸ் எஸ் அமைப்பின் கலை இலக்கியங்களையும் பயன்படுத்தவே செய்கிறார்கள். அந்த அமைப்புகளும் விருதுகள் வழங்கி மரியாதை செய்கின்றன. ஆலோசனைக்குழுக்களின் இடம் தருகின்றன. ஊடும் பாவுமான பயணக்கோடுகள் உருவாவதும் அழிவதும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

தமிழ்நாட்டுக் கலை இலக்கியவாதிகளின் இந்த நகர்வுகளில் ஈழநாட்டுக்கோரிக்கைக்கான யுத்தமும் போராட்டங்களும் பெரும் பங்கு வகித்துள்ளன. ஈழப்போராட்டம் தமிழ்நாட்டு அறிவுஜீவிகளை – எழுத்தாளர்களைப் பொதுப்புத்தியாளர்களாகவே மாற்றிக்கட்டமைத்து விட்டது என்றே சொல்வேன். ஒரு காந்தியவாதியும், பெருந்தேசிய ஆதரவு பேசும் இடதுசாரி எழுத்தாளனும் கூட விடுதலைப்புலிகள் மீது விமரிசனம் செய்யமுடியாமல் தவித்ததைப் பார்த்திருக்கிறோம். அதே மனநிலையையே இப்போது உலகமயமான பொருளாதார நகர்வுகளும் நுகர்வியமும் உருவாக்கி வருகின்றன. நுகர்வியம் உருவாக்கித்தரும் சமூக ஊடகப்பரப்பிற்குள் ஒவ்வொருவரின் இருப்பும் அவர்களின் தன்னிலையை மறக்கச் செய்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் வரிசைகட்டும் காட்சிக்கோர்வைகளும் தன்படங்களும் இயக்கத்தைத் திசைதிருப்புகின்றன. அங்கீகாரங்களைத் தேடியலையும் மனிதர்களாகவே எல்லாரும் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். தப்புதல் யார்க்கும் எளிதன்று என்றாகிவிட்ட து. சிந்திப்பவர்களும் எழுத்தாளர்களும் அவர்களை அறியாமலேயே பகுதிநேர எழுத்தாளர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் இருக்க நேரிடுகிறது. நூறு சதவீதத் தன்னிலை இருப்பு தொலைந்துவிட்ட து. விதம் விதமான நகர்வுகளைச் செய்து பார்க்கிறார்கள். எண்ணிக்கையில் அதிக பக்கங்களைக் கொண்ட நூல்கள் விற்பதில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் அதே வேளையில் பாரதக் கதையினைப் பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட தொடர் தொகுப்புகளாக வெளியிட்டு விற்றுக்காட்டுகிறார். மூத்த எழுத்தாளர்களின் பெருந்தொகைக் கவிதை நூல்களும் சிறுகதை நூல்களும் வந்து விற்கவே செய்கின்றன. புதுபுதுப்பதிப்பகங்களும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.

  யார் வாங்குகிறார்கள்? எப்படிப் படிக்கப்படுகிறது என்பதற்கான அடையாளங்கள் வெளிப்படுவதில்லை. சாகித்திய அகாதெமி விருதுக்காகப் போட்ட சண்டைகள் குறைந்து விட்டன. அவ்விருதுத் தொகைக்கும் அதிகமான தொகையைத் தரும் விருதுகள் இருபதுக்கும் மேல் இருக்கின்றன.  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இலக்கியச் சந்திப்புகளும் விருதுவிழாக்களும் நடந்துகொண்டிருப்பதாக சமூக ஊடகத் தகவல்கள் காட்டுகின்றன. அவரவருக்கான இடங்களை -விருதுகளை -நகர்வுகளை அவர்களே உருவாக்கிக்கொள்கிறார்கள். அவர்களை உள்ளடக்கிய அமைப்புகள், குழுக்கள் உருவாக்கித் தக்கவைக்கின்றன. இந்தக் குழப்பம் தான் பின் நவீனத்துவக்குழப்பம் அல்லது தெளிவு.

 

கற்சுறா

 பொதுசன வணிகப் பத்திரிகைகள் குறித்தும் இவர்களுக்கு இதே எண்ணப்பாடு தான் இருக்கிறது. அதில் இல்லாத இலக்கியம் பற்றிய விமர்சனங்கள் இருக்கும். அத்தோடு கிசுகிசு முதல் சகலத்தையும் இவர்கள் ஆர்வத்தோடு வாசிக்கவும் செய்வார்கள்.

மறுபுறத்தில் அவற்றில் தங்கள் நேர்காணல்களும், தங்கள் நூல்களைப் பற்றிய பெட்டிச் செய்திகளும் வரவேண்டும் என்பதில் அக்கறையும், அவற்றில் எழுதுவதற்கான சந்தர்ப்பங்கள் பற்றிய கனவும் இருப்பதாகத்தான் அவதானிக்கிறேன்.

பல சிற்றிதழ் எழுத்தாளர்கள் வணிக வார இதழ்களில் எழுதியபின் தான் பொதுவெளிக்குள் பெரும்புகழ் பெற்றார்கள், அதில் கிடைக்கக் கூடிய பணவருவாய் என்பதும் அதற்கான காரணங்கள்.

இலக்கிய உலகத்திற்குள்ளே இப்படி இந்தகைய முரண்பாடுகளைக் கொண்ட சிந்தனைத் தேக்கம் இருக்கும்போது, ஒரு சமூகத்திற்குள் ஒரு சிந்தனை மாற்றத்தை இந்தப் படைப்பாளிகள் உலகம் ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா?

நீங்கள் சொன்னதுதான். சினிமாவுக்குள் நகர்வது தொடங்குவதற்கு முன்பே பெரும்பத்திரிகைக்கனவு ஆரம்பித்துவிடுகிறது. பத்துப்பேருக்குத் தெரிந்தவர் என்பதைத் தாண்டி நூறு, ஆயிரம், லட்சம் என அறிந்தவர்கள் எண்ணிக்கை கூட வேண்டும் என நினைக்கிறார்கள். அந்த எண்ணிக்கை பணப்பலனைத் தரும் ஒன்றாக மாறும் வாய்ப்பை உருவாக்கித்தருகிறது.

சிறுபத்திகை – பெரும்பத்திரிகைக் கோடுகள் அழிப்பு வணிகப்பத்திரிகைகளிடமிருந்தே  தொடங்கியது. ஆனந்தவிகடன், குமுதம் போன்ற இதழ்கள் நட த்திய போட்டிகளிலும் விருதளிப்புகளிலும் இரண்டுதரப்பையும் தேர்ந்தெடுத்ததின் மூலம் அதனைச் செய்தார்கள். குறிப்பாக சுஜாதா, மாலன், வாசந்தி போன்றவர்கள் பெரும்பத்திரிகைகளின் ஆசிரியத்துவத்தில் அமர்ந்தபோது இப்படி நட ந்தன. விருதுகள் வெளிநாட்டுப்பயணங்கள் கிடைத்தபோது மறுக்காமல் ஏற்றுக்கொண்டதின் வழியாகப் பெரும்பத்திரிகைக்குள் சிறுபத்திரிகை மனோபாவம் நுழைந்து தன்னடையாளத்தைக் கைவிட்ட து. இடைநிலை இதழ்களின் முன்னோடியாக க்கருதப்படும் கோமலின் சுபமங்களாவின் வெற்றியும் இதிலொரு பங்கு வகித்த து. அதன் தொடர்ச்சியில் குங்குமம் , விகடன் குழும இதழ்களுக்குள் சிறுபத்திரிகையாளர்கள் ஆசிரியர் குழுவினராகப் பங்கேற்றனர். தரப்படும் விருதுகள் சிறுபத்திரிகை எழுத்துக்கான அங்கீகாரம் என்ற நினைத்த எழுத்தாளர்கள் அதன் தொடர்ச்சியில் அங்கேயே தங்க ஆரம்பித்துவிட்டனர்.

இதன் தொடர்ச்சியில் சிந்தனை மாற்றம் நடக்குமா என்று கேட்டால் இந்தக் காலகட்ட த்துக்கான சிந்தனையைத் தேடும் ஒரு பயணம் என்றுதான் இதனை வருணிப்பேன். நவீனத்துவக் காலகட்டத்தின் சிந்தனையில் ஏதோவொரு போதாமை இருக்கிறது; அதனை இட்டு நிரப்பும் சிந்தனைகளைத் தேடும் பயணமாக இந்தக் கலப்பை – குழப்பைச் சொல்ல லாம். பிறகு தெளிவு பிறக்கலாம். கிடைக்காமலும் போகலாம்.

 

ஜார்ஜ் 


இரண்டாயிரம் ஆண்டின் பின்னால், சமூக வலைத்தளங்களின் வருகை, அதற்கு சற்று முந்திய இணைய வருகை என்பன எழுத்தை அச்சிலிருந்து திரைக்கு மாற்றி விட்டன. இலக்கிப் பிரசுரங்களுக்கான வாயிற்காப்போர்களுக்கான தேவை இல்லாமல் நேரடியாகவே வாசகர்களை அணுகக் கூடிய வசதிகள் வந்து, விலை கொடுத்து வாங்கி வாசிக்க வேண்டிய தேவை இல்லாமல், வாசகப் பரப்பும் அதிகரித்திருக்கிறது.

 

இலக்கிய வெளி ஒரு குறிப்பிட்டவர்களின் கைகளுக்குள் இருந்த நிலைமை மாறி, niche என்கிற குறுகிய எண்ணிக்கையைக் கொண்ட ஆர்வலர் தொகுதிக்குள் திருப்தியடைகிற வழியைக் கொண்டு வந்திருக்கிறது.

 

இப்போது அதையும் கடந்து அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறோம். செயற்கை நுண்ணறிவு திரைக்கதை வசனங்களை எழுதுகிறது. ஒரு எழுத்தாளரின் எழுத்து நடையைக் கற்றுக் கொண்டு அந்த நடையில் இன்னொரு படைப்பை வெறும் அறிவுறுத்தல்களோடு மட்டும் படைக்கும் அளவுக்கு வந்திருக்கிறது.

எதிர்காலத்தை எதிர்வு கூறுவது சாத்தியமில்லை என்கிற அளவுக்கு கண்ணுக்கு முன்னாலேயே மாற்றங்கள் நிகழ்ந்தபடி இருக்கின்றன. தலைமுறை மாற்றங்கள் அதை விட வேகமாக நிகழ்கின்றன.

தமிழினி 2100 எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? கருத்துப் பரிமாற்றங்கள், சமூகத்தின் சிந்தனை மாற்றங்கள் எவ்வாறானதாக இருக்கக் கூடும் என்று ஊகிக்கிறீர்கள்? எனக்கென்னவோ, அப்போதும் அங்கீகாரம், விருது பற்றிய ஏக்கங்கள், பொருமல்கள், பொறாமை, அவதூறு என்று இலக்கிய உலகம் வழமையானதாகத் தான் இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறது.

 

அப்போதும் இதே சிந்தனைக்குள்ளேயே சிறைப்பட்டிருக்கும் என்று நினைக்கிறீர்களா? அல்லது இதையெல்லாம் மீறி சிந்தனை வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா

முந்தைய இரண்டு கேள்விகளின் தொடர்ச்சியாகவே இதனைப் பார்க்கிறேன். அவற்றுக்குச் சொன்ன பதில்களின் தொடர்ச்சியாகச் சிலவற்றைச் சொல்கிறேன். தமிழினி 2000 இல் ஓரளவு ஏற்புத்தன்மையுடம் முரண்பட்டவர்களும் மேடையேறினார்கள்.  ஆனால் தமிழினி 2100 என்றொரு பேருரு நிகழ்ச்சிக்கு வாய்ப்பில்லை. என்னென்ன முரண்பாடுகள் உள்ளன என்பதைக் கணிக்க முடியாத நிலையில் எப்படியான மேடையைக் கட்டியெழுப்புவது என்பதைத் தீர்மானிக்க முடியாது. தேசக்கோடுகள் அழிந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்ட த்தின் நீட்சியாக ஆங்காங்கே சின்னச்சின்ன 2100 கள் நடக்கும். அதன் சாராம்சத்தை, ஊடாட்ட த்தை ஏதாவது கொள்கையற்ற அமைப்பொன்று தொகுத்து வைக்கும்.  பேரலகுகளின் மிதப்பாக – காட்சிகளாக – வண்ணக்கோலங்களாக அமையும் 2100 களைப் பார்க்க நாம் இருக்கப்போவதில்லை. நீங்கள் சொன்னது போல, அப்போதும் அங்கீகாரம், விருது பற்றிய ஏக்கங்கள், பொருமல்கள், பொறாமை, அவதூறு என்று இலக்கிய உலகம் வழமையானதாகத் தான் இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறது. அதன் உணர்ச்சி வெளிப்பாடுகளின் இயல்பு இப்படி இருக்காது என்று மட்டும் என்னால் சொல்லமுடியும். இப்படிச் சொன்ன எல்லாவற்றிலும் நானும் இருக்கிறேன். நான் இதற்கு வெளியே இருப்பவனாக நினைப்பதில்லை.

 

கற்சுறா: ரொரண்டோவிலிருந்து வெளிவரும் காலம் பத்திரிகையை வெட்டிவேலு என்ற ஒருவர் தனது கலாநிதிப் பட்டம் பெறுவதற்காக  பி.எச்.டி ஆய்விற்கு எடுத்துச் செய்திருப்பதாகக் குறிபிட்டீர்கள்அந்தத் தெரிவு எப்படி நடந்தது? ஆய்வின் முடிவுவரை நீங்களும் இணைந்திருக்கிறீர்கள். மேலே நீங்கள் உரையாடியது போல் “gose writer” இன் வழி வரும் ஒரு  சஞ்சிகை அது என்பதே என் கணிப்பு. வெட்டிவேல் அவர்களுக்கு புலம்பெயர் சஞ்சிகைகளின் தொடக்கங்களும் அதன்  செயற்பாடுகளும் தெரிந்திருந்ததா? இதற்குப் பின்னால் என்னதான் புரிதல் இருந்தது?

 

வெட்டிவேலுவின் ஆய்வுக்காலம் முழுவதும் நான் இருந்தேன் என்று சொல்ல முடியாது. ஆரம்பத்தில் உதவி செய்தவனாக இருந்தேன். ஆய்வைத் தொடங்குவதற்கு உதவினேன். உலகம் முழுவதும் ஆய்வுப்பட்டங்கள் செய்வதற்குப் பல்கலைக்கழகங்களில் கறாரான விதிகள் இருக்கின்றன. அதே நேரம் விதிவிலக்குகளும் அளிக்கப்படுகின்றன. அடிப்படைத் தகுதி உள்ள அவருக்கு விதிவிலக்களித்து ஆய்வு செய்ய உதவினேன்.  அறுபதைத்தாண்டிய இலங்கைத் தமிழர் ஒருவருக்கு  எங்கள் பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துறையில்  பகுதி நேர ஆய்வாளராக முனைவர் பட்டம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்ட து. அவர் பெறும் பட்டத்தை வேலை வாய்ப்புக்குரியதாகப் பயன்படுத்தக்கூடாது; மதிப்புக்குரிய பட்டமாக வைத்துக்கொள்ளலாம் என்ற கட்டுப்பாட்டுடன் அந்த விதிவிலக்கு அளிக்கப்பட்ட து. அதே நிலையைச் சொல்லி வெட்டிவேலுவுக்கும் அனுமதி பெற்றேன். இப்படி அனுமதிப்பதைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பார்வையாகவும்,  வருமானம் பெறும் ஒன்றாகவும் கருதி அனுமதிப்பார்கள். வெளிநாட்டு மாணவர்கள் செலுத்தும் கட்டணம் உள்நாட்டு மாணவர்களின் கட்டணம்போல் பலமடங்கு அதிகம். அத்தோடு வெளிநாட்டு மாணவர்களுக்கும் கல்வி தருகிறோம் என்று காட்டிக்கொள்ளலாம். அதையே நிர்வாகத்திடம் சொன்னேன்.   இலங்கைத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டுத்தமிழ் மனம் காட்டும் இரக்கப்பார்வையும் அதில் சேர்ந்திருந்தது.

இந்தியப்பல்கலைக்கழகங்களின் நடைமுறைகளையும் விதிகளையும் விதிவிலக்குகளையும் சொன்னேன் நடைமுறைகளை விளக்கிச் சொன்னேன். திரும்பிப்போனார். திரும்பவும் வந்தபோது நண்பரும்  ‘கவியுமான சேரன் அவருக்கு உதவினால் மகிழ்ச்சி’ என்றார். காலம் செல்வமும் அவரது ஆர்வம் பற்றிசொன்னார். வந்தவருடன் ஆய்வு நோக்கில் உரையாடியபோது கல்விப்புலத்தைச் சேர்ந்தவரல்ல என்று தெரிந்தது. ஆனால் ஈழத்தமிழ் இலக்கியத்தின் போக்குகளை வாசித்திருந்தார்; குறிப்பாகக்  கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்களின் நூல்களை வாசித்தவராக – பார்வைகளைப் புரிந்தவராக அறிய முடிந்தது. அத்தோடு நண்பர்கள் சேரனும் செல்வமும் சொன்னதும் சேர்ந்துகொண்டது.  அவர்கள் சொன்ன பிறகுதான் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறும் அலுவல்ரீதியான வேலைகளைச் செய்தேன்.

 அனுமதிக்கலாம் என்ற நிலையில் ஆய்வுப்பட்டம் சேர்வதற்குச் செய்யவேண்டிய விண்ணப்பித்தல், தடையில்லாச்சான்று பெறுதல், பட்டங்களை இணை நிறுத்தும் சான்றுகளைப் பெறுதல், நுழைவுத்தேர்வு எழுதுதல் என வேகம் காட்டினார். 70 வயதை நெருங்கும் ஒருவரிடம் வெளிப்பட்ட அந்த ஆர்வம் பிடித்திருந்தது. எல்லாம் முடிந்து வரும்போது எனக்கு 59 வயதைத் தாண்டிவிட்ட து. கடைசி ஆண்டில் புதிதாக ஒருவரை முனைவர் பட்ட ஆய்வாளராகப் பதிவுசெய்துகொள்ள முடியாது என்பதால் எனக்கடுத்துத் துறையின் தலைவராக வர இருந்த பேரா.ஞா.ஸ்டீபனிடம் இணைத்துக்கொள்ளச் சொன்னேன். அவரும் ஏற்றுக்கொண்டார். அவர்களின் உரையாடல்  வழிதான் ‘காலம்’ இதழ் குறித்து ஆய்வு செய்யும் முடிவு எட்டப்பட்டது. ஆனாலும் என்னோடும் பேசுவார். ஆனால் எப்படி அந்த ஆய்வேடு உருவாக்கப்பட்ட து; பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்ட து; பெறப்பட்ட து என்பதில் எனக்குப் பங்கில்லை.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்