மழையும் மழைசார்ந்தனவும் -9


இந்தப்பத்தில் (81-90) நரன்,கடற்கரய், மீனாமயில், வண்ணநிலவன், எஸ்.வைத்தீஸ்வரன், லீனா மணிமேகலை, பாலகணேசன், யோகி, கி.பி அரவிந்தன், பாரதியார் எனப் பத்துப்பேரின் மழைக்கவிதைகள்.
81/மழை
 
மழை பெய்துகொண்டிருக்கு
தி.நகரிலிருந்து
மழை இல்லாத அபிராமபுரத்திற்குப்
போனேன்.
ஈர உடையோடு வந்திருந்தவனைப்
பார்த்து உறவினர் கேட்டார்
எங்கிருந்து வருகிறீர்கள்?

மழையிலிருந்து.

==================================
நரன்/ உப்புநீர் முதலை/ உயிர்மை/ ப.63



82/தற்காலிகக்கடல்
 
குட்டியூண்டு மழையில்
தோன்ற ஆரம்பிக்கும்
தற்காலிகக் கடலை
மேம்பாலத்தின் மேல்நின்று
இரு திமிலர்கள்
வியக்க ஆரம்பிக்கிறார்கள்.

அவர்களுக்குத் தெரியும்
இக்கடல்
நாளை
மறையுமென்று
பிறகு,
ஈரம்தேடி
சகல ஜீவன்களும்
மழைமேகம் மாதிரி
ஆளுக்கொரு திசையாகக்
கரைந்துவிட வேண்டும் என்று
ஒரு மழைநாளில், மனம்
வெயிலை விரும்புவதைப் போல்
வெயிலை, வெயிலில் நின்று விரும்புவது
எவ்வாறு.
==================================================
கடற்கரய்/ கண்ணாடிக்கிணறு/ காலச்சுவடு/ப. 79

83
 
பருகவொரு நதியிருந்த பொழுதினில்
புறாக்களோடு விருந்துண்டு அவற்றோடே பறந்துகொண்டிருந்தேன்
துயருறு தருணங்களில் விசையற்றதோர் படகைப்போல்
நீரோடு நகர்ந்தது நிச்சலமான மனம் அதன் போக்கில்
அறைக்குள் வீசாத காற்றுக்காக தவமிருப்பதில்லை
நானொரு தனிமனுஷி
மரணம் நோக்கிய பயணமே இல்வாழ்வெனும்
தத்துவம் தரும் மிரட்டலுக்கொப்பாத உடலெனது
வலியையும் நோயையும் சோழிகளாக்கி
பல்லாங்குழியாடுமென் கைகள்
காற்றை தொடுவதையும்
நீரை அலைவதையும் விரும்பும்
பயணம் நெடிது பாதைகளும் பல
கால்களுக்கு தெரிகிறது தூரத்தின் தொடுவானம்
எழுதாத பழுப்பு நிறத் தாளைப் போல
மனதை வரிந்து ஓரங்களை நீவிவிடும்போது
விழும் மழைத்துளிகள் கறுப்பு மசியாக
நானொரு கவிதையாவேன்.

கனவுகளில் குளித்து
நட்சத்திரம் ஒன்று
தாவி விழுகிறது
விழியெனும்
வெற்று பள்ளத்தில்

சமுத்திரங்களை
குடித்தும்
தாகமடங்கா குருவி
சிறகுகளில் நீட்டுகிறது
வெறுத்துத் தள்ளிய
ஓவியங்களை

ஆற்றுப்படுகையும்
ஆலமரமும் ஏந்தித் தந்த
நாரைகளை முதுகிலேற்றி
கிழியாத வானத்தை
தீண்டியபோது
காளான்கள் முளைக்கின்றன
நேற்று பெய்த மழையின்
மிச்சங்களாய்..

வழக்கத்துக்கு மாறாக
ஓவியங்களை பேசுகின்றன
கவிதைகளோ
மௌனம் காக்கின்றன.
===========================
மீனா மயில் கவிதைகள்/ பானுபாரதி, தமயந்தி தொகுத்த உயிர்மெய் 2009-2010/பக். 51-52

84
 
கண்ணா இது
இன்னொரு மழைக்காலம்

விண்ணிலிருந்து மழை ஊசிகள்
இழையறாமல் கொட்டுகின்றன.
கொட்டும் மழையில்
கழுத்து மணியசைய
காளைகள் வண்டியிழுத்துப் போகின்றன.
தாழங் குடைப் பிடித்து
அதோ உன் அபிதா போகிறாள்.
ஆயிரங்கால் மண்டபத்தில்
ஆடிக்கொண்டிருந்த
கண்ணாமூச்சி ஆட்டத்தை
அரைகுறையாய் விட்டுவிட்டு
மின்னற்பொழுதே தூரம்
சென்று வருகிறேன் என்றாய்.
நீயின்றி வஸந்தம் சரத்தென்று
புருவங்கள் உதிர்கின்றன.
யுகங்கள் ஊர்கின்றன.
===================================
வண்ணநிலவன்/ விருட்சம் கவிதைகள்/ ப.122


85/விரல் மீட்டிய மழை
 
ஆகாயப் பாதை வழி
ஏதோதோ ஊர் கடந்து
எங்கள் ஊர்தலைப்பார்த்து
ஊற்றுது இன்று மழை

தலைகால் புரியாமல்
தனைமறைந்து நனையச் சொல்லுது
மனக்குழந்தை

காற்றை அலங்கரிக்கும்
காக்காய்ப் பொன் துகள்கள்..
ஊர்நடுவில் தொடங்கி
தோப்பு வயல் தாண்டி
அடிவாரம் தொட்டு
ஆரவாரமாய்க்கொட்டுகிறது.

மணித்துளிக் கைகள்
பல்லாயிரம் பிணைந்து
ஈரச்சங்கிலிகள் வெளியில்
வானுக்கும் ஊருக்குமாய்.

விலைமீறிப்போன நிலவரத்தால்
காகிதத்தைக் கப்பலாக்கிக் கவிழ்க்க
கைகளுக்கு மனசில்லை

தவிர,
இந்நாள் வீதிவெளிகள்
கப்பலோட்டப் பொருத்தமாயும்
நெளிவதில்லை.

கொட்டிய மழையும் துள்ளிக்
கள்ளமற்ற குழந்தைகளென
ஓடக்காணோம்.

நசநசவென்று ஓரத்துக்
கழிவு நீரோடு கைகோர்த்து
நாகரீகக் கசடாய் தேய்கிறது
நகரவாசனை கலந்து.
மழையை அந்தரத்திலேயே
வழிமறித்து மரங்களும், கொடிகளும்
பச்சையாய்க் குளிக்கையில்
அந்தஸ்து தேய்ந்த
அழுக்கு மாளிகை சில
மேலும் நனைந்து
உள்ளுக்குள் ஒட்டாமல் அழுகின்றன
இறந்துபோன பாஷையில்.

அவ்வப்போது
அரசாங்கத்தின் சிவந்த கரங்கள்
மைக்கில் பேர் கூவி
மழைக்கோட்டு
கொடுத்த பின்னும்
வண்டியிழுக்கிற உடம்புகள்
வாடிக்கையாய் நனைந்து
ஒடுங்கித் தான் ஒட்டுகின்றன
காலத்தை
எதுவும் எதையும் மறைக்க
முடியாதது போல்!

மழைவரும் போகும்
கவிதைகள் போல்
ஊர்விட்டு ஊர்கொட்டும்
கூத்துக்காரன் கூடாரம் போல்
இந்த மழையை
விரல் தொட்டு எழுத ஆசை
இயற்கையின் ஈரம் சொட்ட
எனினும்,
தொட்டவிரல் மேகத்தில்
ஒட்டிக்கொண்டு விடுகிறது
ஓரங்கமாக
மேகம் இட்ட கையெழுத்தோவென
கவிதை காட்சிகொள்ள
==========================================================
எஸ். வைத்தீஸ்வரன்(1996) / திலகவதி தொகுத்த காலத்தின் கண்ணாடி,2008/ ப.43-44



86/ இந்தக் கவிதையில் ஸ்டிக்கர் ஓட்டப்படவில்லை
 
நான் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவள்
அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களில்
இடம்பெறாத பிணம்
எண் 202 என் புதிய அடையாளம்
கொடுமழைக்குத் தப்பிய கொன்றைமரக் கிளையில் கிடந்த
என் பெயர் தாங்கிய வாக்காளர் அட்டையை
ஆணைக்கிணங்க மெல்லப் படகுகளில் வந்த
சீருடைப்படைகள் மீட்டெடுத்தன.
பட்டத்துராணி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சோற்றுப்பொட்டலம் இத்யாதிகள்
அதற்காக ஒதுக்கப்பட்டு புகைப்படங்களும் களம் கண்டன
தெருப்பெருக்கெடுத்த கழிவு நீர்ச் சுழியில் மிதந்த
மஞ்சள்நிறக் குடும்ப அட்டை சரிபார்க்கப்பட்டு
என்னை என் குடும்பத்தோடு இணைத்தனர்
குப்பைமேடாய்ப் போன குடிசையையும் உடைமைகளையும்
கொளுத்துவதற்கும் எரிபொருள் இல்லாமல் திண்டாடியிருந்த தாய்
பள்ளிக்கூடத்தை முகாம் ஆக்கியிருந்ததால்
என் வகுப்பிற்கு முதன்முறையாய் வருகை தந்திருந்த தந்தை
சுடிதார் போட்டிருந்த ஒவ்வொரு முகத்தையும் திரும்பிப் பார்த்து
என்னைத் தேடிக் கொண்டிருந்த தனயன்
வெள்ளத்திற்கு நாங்கள் சாட்சியாகி
எங்களுக்கு வெள்ளம் சாட்சியாகி
நிவாரணத்திற்காக வரிசையில் நிற்க வைக்கப்பட்டோம்
நீந்தத் தெரிந்த எங்கள் நாய்க்குட்டி வீரா மட்டும் கொள்ளை போனதுபோல
தூரத்தில் பறந்த ஹெலிகாப்டரை நோக்கி
குரைத்துக் கொண்டிருந்தது
===============================================
லீனா மணிமேகலை/ ஆனந்த விகடன்/23-12-15/

87 அந்த நாளில்
 
நான் தனித்திருந்த
அந்த நாளில்
மழை
பெய்து கொண்டிருந்தது
நான்
ரசித்துக்கொண்டிருந்தேன்
மழையோடு
பேசிக்கொண்டிருந்தேன்
மழையோடு
விளையாடிக்கொண்டிருந்தேன்
மழையில்
குளித்துக்கொண்டிருந்தேன்
மழை
என்னை தழுவிக்கொண்டிருந்தது

நான் தனித்திருக்கும்
இந்த நாளிலும்
மழை
பெய்துக்கொண்டிருக்கிறது
நான் கதவடைத்து
அந்த நாளை
நினைத்துக்கொண்டிருக்கிறேன் -
==============================
யோகி/மலேசியா/2010/ மௌனம் /



88/கோடி முகங்கள் காற்றுக்கு
 
மழைக்காற்று
சாளரங்களுக்கருகே வந்து அழுகின்றதா?
சிரிக்கின்றதா?
கோபித்துக்கொண்டு நிற்கின்றதா?

காளி போலும் நிற்கின்றது.
யன்னலைப் பெயர்த்து வந்திருக்கும்
ஆனால் அது அப்படி வரவில்லை.

குளிரின் உபாதையால்தான்
காற்றை உள்வரவேற்க
அச்சமாய் இருக்கின்றேன்.
காற்று குமுறிக்கொண்டே
நிற்கின்றது.
காற்றுக்கா
வழி தெரியாது!

கடல் மார்க்கமாய்
வான் வழியாய்
கட்டிடக் காட்டிடை வந்து
சிறையுண்ட இனமும்
பதைப்பும் அதற்கு
தெருப்பாடகன் ஒருவனின்
சோகத்தோடு
பாட்டும் பாடியது.

‘சடலத்தைத் தொட்டெழுப்ப வந்தேன்
சாளரத்தைத் திறவடா மனுசா!
கல் மனதைக் கரைக்க வந்தேன்
கதவைத் திறவடா மனுசா!’

பொல்லாக் கோபக்
காற்றில் படாது
இறுகமூடிப் போர்த்தேன்
மூச்சுக் காற்றுள்
எப்படி நுழைந்தது?

இந்த மாயக்காற்று
கக்களம் கொட்டிச் சிரித்தது.

சிரிக்காதே
பயமாயிருக்கிறது என்றேன்.

இறுகச் சாற்றிய
யன்னலின் அருகே
போர்க்குரல் சன்னமாய்த்
தெறிக்க நின்று பேசியது.

ஊற்றான உணர்வை
உணர்வான ஊற்றை
வேற்றான வாழ்வை
காற்றான காற்றுப் பேசியது.

கண்களை இறுக மூடினேன்
காதையும்தான்.

என்முன்னே நின்று
குதித்து எழுந்தது
உள் நுழைந்து
சுவாசக் காற்றுள்ளும்
ஓடி வந்தது.

வேரிழந்து
வீழ்ந்து கிடக்கின்றாய்
ஊரிழந்து உழன்று தொலைகின்றாய்

நாடிழந்து
நலிந்து போகின்றாய்
முகமிழந்து தொலைகின்ற
மானுடனே எழுக நீயும் என்றது

எப்படித் தெரிந்திருக்கும்
இதெல்லாம் காற்றுக்கு
எழும்பிக் குந்தி
காற்றுக்கு முகம் திருப்பினேன்

அம்மா அப்பா
ஆசைத்தம்பி
அண்ணா அக்கா
மாமா மாமி
மச்சான்
காளி கனகாம்பிகை
வடிவுக்கரசி
வானம் தேவதை
அகதி மனிதர்
மண்
மாவீரர்
கோடி முகங்கள் காற்றுக்கு
கோடி முகங்களும்
கோடிக்குரல்களும் இந்தக்காற்றில்

=========================================================
பாலகணேசன்/ பத்மநாப ஐயர் தொகுத்த யுகம் மாறும் தொகுப்பு,1999/ ப.197

89.

நகரம் குறண்டிப்போய்
எரிவிளக்கும் நனைந்தபடி
ஒளியுறிஞ்சும் புகாரில்
போர்வையாகும் நீர்மை.

உசும்பும் காற்றில்
இலையுதிர்க்கும் மரங்கள்
பரிதவிக்கும் எனைப்போல்

வானம் பூமியுடன்
பணரும் தருணம்போலும்
விந்தென கசிந்து வழிந்து
பொழிகின்றது மழையாய்

நனையாத ஆடையுள்
மறைந்து திரியும் மனிதருள்
இந்த மழையை
ஏன்தான் நான் நோக்குகிறேன்.

கானல் நீர் தேடி
பாலையாகிறவன் நான்.
அழகுறுமோ மழைநாள
எனக்கு.

அடிபிய்ந்த என் சப்பாத்துள்
சளசளப்பாய்
நாசமாய்ப் போன மழை
குதித்தோடும்
மழை நாள் ஊரில்.

வெறுங்கால் வெறும்மேல்
சில்லிடப் பூக்கும்
நிலம்.

அந்த மழை எப்போது விடும்
என்னை.
===================================
கி.பி.அரவிந்தன்/1994/கனவின் மீதி/30


90/மழை
 

திக்குக்கள் எட்டுஞ் சிதறி தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்துவெள்ளம்
பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் அண்டம்
சாயுது சாயுது சாயுது பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்றுதக்கத தாம்தரிகிட
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

வெட்டி யடிக்குது மின்னல், கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்; கூ கூவென்று
விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய மழை
எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!

அண்டம் குலுங்குது, தம்பி!தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல
மிண்டிக் குதித்திடு கின்றான்; திசை
வெற்புக் குதிக்குது; வானத்துத் தேவர
செண்டு புடைத்திடு கின்றார்; என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்!
கண்டோம், கண்டோம், கண்டோம் இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!
===============================================
கவி பாரதியார்/




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்