மணிரத்னம் : கருத்தியல்களைக் கலையாக்கும் படைப்பாளி
மணிரத்னம் தமிழ்ச் சினிமாவில் தனித்துவத்தை நிலைநாட்டிக் கொண்டுள்ள இயக்குநர்களில் ஒருவர். 1983 தொடங்கி 2007 வரையுள்ள 24 வருடங்களில் 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார் . பல்லவி அனுபல்லவி (1983) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, 1987- எடுத்த நாயகன் படத்தின் மூலம் இந்திய இயக்குநராக உருமாற்றம் அடைந்தவர். 1994- இல் கனடா நாட்டின் டொரண்டோ நகரில் அவரது இயக்கத்தில் வந்த படங்களின் தொகுப்பு பார்வையாளர் களுக்குக் காட்டப்பட்டது மூலம் உலகத் திரைப்பட இயக்குநர்களுள் ஒருவர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றவர். இந்தக் கட்டுரை மணிரத்னத்தின் கருத்தியல் சார்ந்த பயணத்தைக் கோடிட்டுக் காட்டுவதோடு, கடைசியாக வந்த குரு படத்தின் வழி அவரது கலைக் கோட்பாடு எத்தகையது என விவாதிக்கிறது
குழப்பமான தொடக்கமும்
அடையாளத்தை உருவாக்கிய ஆரம்பமும் மணிரத்னத்தின் இயக்கத்தில் வந்¢துள்ள படங்களை வரிசையாகப் பார்க்கக் கூடிய ஒருவர், அவற்றின் வளர்ச்சிப் போக்கில் ஓர் இயக்குநர் அடைந்துள்ள மாற்றங்களையும் அவதானிக்க முடியும். வணிக ரீதியாக லாபத்தையும் தராமல், கவனிக்கத் தக்க படம் என்ற பெயரையும் பெறாமல் முதல் படமான பல்லவி அனுபல்லவி ஒதுங்கிக் கொண்டது. அதனால் அப்படம் , வெளியான 1983-க்குப் பிறகு உடனடியாக படம் இயக்கும் முயற்சியில் மணிரத்னம் இறங்கவில்லை. ஆனால் 1985 இல் மூன்று படங்கள் வெளி வந்தன. உணரு( மலையாளம்), பகல் நிலவு, இதயக் கோவில் ஆகிய மூன்று படங்களும் கூடத் தனித்துவம் எதனையும் வெளிப்படுத்திய படங்கள் இல்லை. பெரும் லாபத்தையோ குறிப்பிடத் தக்க கவனத்தையோ பெறாமல் வந்து போகும் பல படங்களில் ஒன்றாக அவை வந்து போயின. ஆனால் 1986 - வெளியான மௌனராகம் படத்தையோ,அதனைத் தொடர்ந்து வெளியான அக்னி நட்சத் திரம் (1988), கீதாஞ்சலி (1989), அஞ்சலி (1990) போன்ற படங்களை அப்படிச் சொல்ல முடியாது.
சமூகக் கட்டமைப்பின் நுண் அலகான குடும்பம் என்ற அமைப்பினைப் படைப்பு வெளியாகக் கொண்ட இயக்குநராக மணிரத்னத்தை அடையாளப் படுத்திய படங்கள் அவை.தொழில் நுட்ப ரீதியான கவனத்தை வெளிப் படுத்திய தோடு உள்ளடக்க ரீதியாகச் சில பொதுத் தன்மைகளையும் கொண்டிருந்தன. குடும்ப வெளிக்குள் ஆணுக்குச் சமமாகப் பெண்ணுக்கும் இடமளித்த அப்படங்கள் ஆண்களைப் போலவே பெண்களும் சொந்த விருப் பங்கள் கொண்டவர்களாகவும் நுண் உணர்வு நிரம்பியவர்களாகவும் இருக் கிறார்கள் என்பதைக் காட்டியதோடு அவற்றை மதிக்கும் ஆண்களின் துணை அவர்களுக்குத் தேவைப்படுகின்றன எனச் சொல்ல முயன்றன அப்படங்கள். இந்திய சமூகம் மாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது ; அதனால் அதன் அடிப்படைக் கட்டமைப்பான குடும்ப அமைப்பிற்குள் இருக்கும் பாத்திரங் களான தந்தை,கணவன், மனைவி, பிள்ளைகள் என்ற பாத்திரங்களின் வரையறைகளும் கூட மாறிக் கொண்டிருக்கின்றன என்றும் அவை காட்டின. மையப்பாத்திரங்களின் வழி மரபான குடும்ப அமைப்பின் மேல் விமரி சனங்களை முன் மொழிதல் என்ற பொதுப்போக்கின் வழியே,மரபான மனைவியிலிருந்து விலகிய ஒருத்தியை மௌனராகத்தில் காட்டியதின் மூலம் கவனிக்கத் தக்க படைப்பாளியாகத் தன்னை அடையாளப்படுத்தினார் மணிரத்தினம், அக்னி நட்சத்திரத்தில் இரண்டு மகன்களுக்கிடையில் ஒரு தந்தையை நிறுத்திக் காட்டினார். அந்த இருமகன்களில் ஒருவன் அதிகார பூர்வமனைவியின் மகன். இன்னொருவன் வைப்பாட்டியின் மகன் என்ற வேறுபாட்டின் பின்னணியால் கவனிக்கத் தக்க படமாகவும் பேசப்பட்ட படமாகவும் ஆனது அக்னி நட்சத்திரம். மாறிவரும் சமூகப் போக்கில் காதலன் -காதலி (இதயக் கோயில், கீதாஞ்சலி), கணவன் - மனைவி (மௌனராகம்) பெற்றோர்-பிள்ளைகள் ( அக்னிநட்சத்திரம், அஞ்சலி) போன்ற உறவுநிலைச் சிக்கல்களை மையப்படுத்தி நுட்பமான பாத்திரங்களைப் படைத்துக் காட்டிய இயக்குநராக மணிரத்னத்தை அப்படங்கள் அடையாளப்படுத்தின.இவ்வைந்து படங்களுக்குள், மணிரத்னத் திற்குப் படைப்புப் பார்வையும் தனித்து வத்தை அடையும் இலக்கும் இருப்பதை உணர்த்திய படங்கள் என மௌனராகத்தையும் அக்னி நட்சத்திரத் தையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
1987-இல் வெளிவந்த நாயகனும், 1991-இல் வந்த தளபதியும் பாத்திரங்களை முன்னிறுத்திய இயக்குநர் என்ற அடையாளத்திலிருந்து விலக்கி, நிறுவனங்களுடன் மோதும் தனிமனிதர்கள் வழியாகச் சமூகம் நம்பும் கருத்தியல் மீது கேள்விகளை எழுப்பும் இயக்குநர் என்ற அடையாளத்திற்குள் மணிரத்னத்தை நகர்த்தின. அந்த அடையாளத் திற்குள் நுழைய அவருக்குத் தமிழ் எழுத்தாளர்கள் சிலரும் உதவியுள்ளனர். ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதையும் செய்யலாம்’ என்ற தனிமனித நியாயத்தை நாயகன் மையப்படுத்திப் பேசியது. அரசாங்கமும் அதன் சட்ட விதிகளும் குற்றவாளி எனச் சொல்லும் ஒருவனைப் பொதுமக்கள் நாயகன் எனக் கருதிப் பாதுகாக்கின்றனர் என்பதைப் படம்பிடித்துக் காட்டினார் மணிரத்னம். நாயகன் படத்தின் மையப் பாத்திரமான வேலுநாயக்கரின் நிஜமாக இருந்தவர் வரதா என அழைக்கப்பட்ட வரதராஜ முதலியார். மாராட்டிய மாநில அரசின் தாதாக்களின் பட்டியலில் வரதாவின் பெயர் இருந்தது என்றாலும் பம்பாய் நகரத்துச் சேரிகளிலும் புறநகர்களிலும் பிழைப்புத் தேடிப் போய்க் குடியேறியிருந்த தமிழர்களின் பாதுகாவலர் (God Father ) அவர்தான். வரதா என்ற நிஜத்தை வேலுநாயக்கர் என்ற புனைவாக மாற்றிக் கமல்ஹாசனை நடிக்க வைத்து நாயகன் எனப் பெயர்சூட்டிய மணிரத்னம், அப்படத்தின் வழியாகத் திரைக்கதை அமைப்பின் நுட்பங்களை முழுமையாக்கினார் என்று சொல்லலாம். நடிப்பிற்காகக் கமல் ஹாசனுக்கு உயரிய விருதை அந்தப் படம் பெற்றுத் தந்தது. மலையூர் மம்பட்டியான், கரிமேடு கருவாயன் போன்ற தமிழ் சினிமாக்களின் ஒருவரிக் கதைகளும் கூட இதே அடிப்படைகளைக் கொண்டன தான் என்றாலும் அவை பேசப் படவும் பாராட்டப்படவும் இல்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
ஒரு நிஜத்தைப் புனைவாக மாற்றும் படைப்பாளியின் பணிகளைச் செய்யாமல் அவர்களின் வரலாற்றை மட்டுமே அந்தப் படங்களின் இயக்குநர்கள் சொல்லிவிட்டுப் போனார்கள். ஆனால் மணிரத்னம் செய்வது நிஜங்களைக் காட்டுவது அல்ல;நிஜங்களின் சாயலைக் கொண்ட புனைவுகளை முன்னிறுத்துவது அப்படி முன்னிறுத்தும் போது படைப்பாளி யின் கோணத்தை அந்தப் புனைவுப் பாத்திரங்களின் வழியே முன் வைக்கும் சாத்தியங்கள் உண்டு.நாயகனைப் போலவே அரசதிகாரத்தோடு மோதும் இன்னொருவகைக் குற்றவாளியைத் தளபதி படத்தில் காட்டினார்.ஒரு பெண்ணின் திருமணத்திற்கு முந்திய கர்ப்பத்தில் பிறந்து அனாதையாகத் தன்னை நினைத்துக் கொண்ட ஒரு பாத்திரத்தின் நியாயங்களாக விரியும் அந்தப் படத்தின் முடிச்சுகளும் காட்சிகளும், பாரதக் கதையில் வரும் கர்ணன் கிளைக் கதையை (Episode) ) நினைவூட்டக் கூடியன. அடையாளமற்ற அனாதை யான தனக்கு ஒரு அடையாளத்தைத் தந்தவனுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராகும் ஒருவனாக- சட்டவிரோதக் காரியங்களைச் செய்யும் தேவராஜின்¢(மம்முட்டி) தளபதியாக மாறும் சூர்யா கதாபாத்திரத்தில் ரஜ்னிகாந்தை நடிக்க வைத்தார் மணிரத்னம்.இந்தப் படமும் கூட திரைக்கதை அமைப்பில் சில வகைப் பாடங்களை முன்னிறுத்திய படம் தான். பாத்திரங்களின் மோதல் என்பதற்குப் பதிலாக உணர்வுகளின் மோதலும், உச்சமும், விடுவிப்பும் என்பதாக அதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இளையராஜாவின் இசைக் கோலங்களால் நிரப்பப்பட்ட இந்தப் படமும் வசூல் வெற்றியோடு, பாராட்டுக்களையும் பரிசுகளையும் பெற்ற படம் தான்.அரசாங்க நிறுவனங் களை அமைப்பு ரீதியாக எதிர்க்கும் இயக்கங்களைத் தடை செய்வது;தண்டிப்பது எனத் தனது முகத்தைக் காட்டும் நமது அரசுகள், னிநபர்களை முன்னிறுத்தி அதே வேலையைச் செய்யும் மணிரத்னத்தின் படங்களுக்குப் பரிசுகளும் பட்டங்களும் வழங்கின என்பது ஒருவகை நகை முரண் தான்.
புதிய வெளிகள்- புதிய கோணங்கள்-புதிய இலக்குகள்
நவீன வாழ்க்கைக்குள் நுழையும் இந்திய சமூகத்தில்,பழைய மனிதர்களின் நம்பிக்கைகள் விசாரணைக் குள்ளாகின்றன; புதுவகை மனிதர்கள், புதுவகை உறவுகளோடு தோன்றுகின்றனர் என்பதைக் குடும்ப வெளிக்குள் நிறுத்திச் சொன்ன மணிரத்னத்தின் முதல் கட்ட பாணிப் படங்கள் , அவரது முதல் பத்தாண்டு திரையுலகப் பயணத்தோடு விலகிக் கொண்டன. அடுத்து வந்த படங்களின் விசாரணை நோக்கம் முற்றிலும் மாறானது. அந்த விசாரணை மாற்றத்தைப் படங்களின் கதைப் பின்னலை மாற்றாமல், அவற்றின் காலப் பின்னணிகளையும் நிகழிடப் பின்னணிகளை யும் மாற்றியதன் மூலம் நிகழ்த்திக் காட்டினார் . இந்த மாற்றம் தான் அவரைத் தமிழ்ப் பட இயக்குநர் என்ற நிலையிலிருந்து இந்தியப் பட இயக்குநர் என்ற அடையாளத்துக்குள் நகர்த்தியது .
ரோஜா தொடங்கி குரு வரையுள்ள ஒன்பது படங்களில் திருடா.. திருடா என்ற கற்பனைப் புனைவுப் [ Fantacy] படத்தையும், நடைமுறையைப் புரிந்து கொள்ளாமல் காதலைக் கல்யாணத்தில் முடித்துத் தவித்த காதலர்கள் நிலையைச் சொன்ன அலைபாயுதே என்ற படத்தையும் தவிர்த்து மற்ற ஏழு படங்களிலும் ஒரு பொதுத்தன்மை உண்டு. மணிரத்னத்தின் எல்லாப் படங் களையும் போலவே இப்படங்களிலும் குடும்ப நிகழ்வுகளே கதைப் பின்னல்களாக இருந்தன என்றாலும்,அப்படங்களில் நிகழிடப் பின்னணிகள் வேறுபட்டவை.காலப் பின்னணிகளும் வேறுபட்டவை. நிகழிடங்கள் பொத்தாம் பொதுவாக இல்லாமல் குறிப்பான வெளிகளாக ஆக்கப்பட்டன.
ஒரு நடுத்தர வர்க்கத்துக் குடும்பக் கதையைத் தேசத்து அரசியலின் பின்னணியில் நிறுத்தியதன் மூலம் ரோஜா (1992)படத்தில் அந்தப் பாணியைத் தொடங் கினார். இந்திய தேசத்தின் நிகழ்கால அரசியல் காலப் பின்னணியாக ஆக்கப் பட்டது. காஷ்மீரில் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் தீவிரவாதி களைப் போராட்டக்காரர்கள் என மதிப்பதும், அவர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதும் , அந்தப் போக்கிலும் கூடக் கடைப்பிடிக்கப்படும் சாதாரண மனிதர்கள் -அரசியல்வாதிகள் என்ற வேறுபாட்டைக் கடுமையாக விமரிசனம் செய்தார். கணவனின் போன உயிரைத் திரும்பக் கொண்டு வரப் போராடிய புராணக் கதாபாத்திர மான சதிஅனுசூயாவின் சாயல் கொண்ட ரோஜா பாத்திரத்தைத் திருநெல்வேலி மாவட்டத்துக் கிராமத்தி லிருந்து காஷ்மீருக்கு நகர்த்திக் கொண்டுபோனதன் மூலம் இதனைச் செய்தார்.
தொடர்ந்து கடைப் பிடிக்கப் பட்ட அந்தப் பாணி,பம்பாய் படத்தில் ,பம்பாய்க் கலவரங்களைப் பின்னணியாக்கியது. உயிரே, படம் வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் போராட்டத்தைப் பின்னணியாக்கிக் கொண்டது. கன்னத்தில் முத்தமிட்டால் , படத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தால் இந்தியாவிற்குள் நுழையும் அகதி களின் வாழ்க்கையையும், ஈழப் போராட்டத்தையும் பின்னணி யாக்கியது. இருவர் படத்தில், திராவிட இயக்கத் தலைவர்களின் தனிமனித வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கையைப் பின்னணியாக்கி யதைத் தொடர்ந்து, திராவிட இயக்கத்தின் வளர்ச்சியால் தமிழகத்தில் நிரம்பி வழியும் பொறுக்கி அரசியல் என்பதான பின்னணியைக் கொண்ட ஆயுத எழுத்து படத்தை எடுக்கத் தூண்டியதும் கூட அந்தப் பாணியின் மீது அவருக்குள்ள அழுத்தமான நம்பிக்கைதான் எனலாம்.
இந்தப் பாணி மணிரத்னத்திற்கு வணிக ரீதியாகச் சில வெற்றிப் படங்களையும் சில தோல்விப் படங்களையும் தந்தது என்றாலும், சமகால இந்திய அரசியல் பற்றிய கருத்துடைய இயக்குநர் என்ற பிம்பத்தை அவருக்கு உண்டாக்கின என்பதும் உண்மை. ஆனால் அவரது நேர்காணல் களிலோ, பேச்சுக்களிலோ அந்தப் பிம்பத்தை மணிரத்னம் உறுதி செய்வ தில்லை என்பது தனியாக விவாதிக்கத் தக்க ஒன்று. தேசவெளியையும் அரசியல் பின்னணிகளையும் கதாபாத்திரங்களையும் கொண்ட இந்தப் படங்கள் அதிகாரத்தைக் கேள்விக் குள்ளாக்கும் விவாதங் களை முன்னெடுப் பனவாக ஒரு தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தியதன் காரணமாகக் கவனிக்கத் தக்க படங்களாக மாறின. பொதுப்புத்தியின் கருத்திய லோடு ஒத்துப்போகும் சொல்லாடல்களைக் கதைப்பின்னலாக ஆக்கிய இந்த படங்கள் அதன் காரணமாக பெரும்பான்மை வாதத்திற்குள் இயல்பாகவே நுழைந்து கொண்டன. இந்திய தேச எல்லைக்குள் பெரும்பான்மை ஆதரவு வாதம் என்பது இந்துத்துவச் சாயல் கொண்டது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. சமீபத்தில் வந்துள்ள குரு படமும் கூட அந்த எல்லைக்குள் தான் நிற்கிறது என்றாலும், இதில் மற்றொரு தளத்திற்குள் நுழைந்துள்ளது. குடும்ப வெளியை அரசியல் வெளியாக மாற்றியதற்கு மாறாகக் குரு, அதே குடும்ப வெளியைப் பொருளாதார வெளியாக மாற்றிக் கட்டமைத்துள்ளது. அப்படத்தை விரிவாகப் பேசுவதன் மூலம் விளக்கலாம்.
குருபடத்தின் கருத்தியல்
இந்தியத் திரைப்படங்களில் பெரும்பாலானவை உதாரண மனிதர்களின் கதையைச் சொல்பவை. அதைக் கலை இலக்கியங் களின் பொதுப் போக்கு என்று கூடச் சொல்லலாம். உதாரண மனிதர்களில் இரண்டு வகையினர் உண்டு. ஒரு வகை மனிதர்கள் வாழ்ந்து கெட்டவர்கள் ; மரபுகளுக்குக் கட்டுப் பட்டு வாழ்வதில் அக்கறை காட்டும் அவர்களின் கதை சோக நிகழ்வுகளால் பின்னப்பட்டு துன்பியல் முடிவுகளோடு முடியும். இன்னொரு வகை மனிதர்கள் வாழ்ந்து காட்டியவர்கள். இவர்களின் கதை சாதாரணத்தில் தொடங்கி,எதிர்பாராத திருப்பங்களால் பின்னப் பட்டு , அவர்களே நினைத்துப் பார்த்திராத உச்சத்தை அடைவதாக முடியும். மணிரத்னத்தின் சமீபத்திய வரவான குரு வாழ்ந்து காட்டும் ஒரு மனிதனின் கதைதான் . குரு எனச் சுருக்கமாகத் தன்னை அழைத்துக் கொள்ளும் குருநாத் ஞான தேசிகன் கடந்த காலத்தில் வாழ்ந்து முடிந்து போன உதாரண மனிதன் அல்ல; நிகழ்காலச் சமூகத்தில் வாழ்ந்து காட்டியபடி இருக்கும் உதாரண புருஷன். ஆம் குரு நிகழ்காலத்தைப் பற்றிய திரைப்படம்.
திருநெல்வேலி மாவட்டம் இலஞ்சிக் கிராமத்தில் பள்ளிப் படிப்பில் தோல்வி யுற்றதால் அப்பாவிடம் திட்டு வாங்கி உதவாக் கரைகளின் பட்டியலில் சேர இருந்தவன் குரு [அபிஷேக் பச்சன்]. அப்பாவின் கோபத்தி லிருந்து தப்பிப் பதற்காக அவன் எடுத்த முதல் முடிவு அயல் நாட்டில் -துருக்கியில் கொண்டு போய்ச் சேர்க்கிறது. உறவினர் ஒருவருடன் தங்கிக் கடுமையான உழைப்பில் ஈடுபடு கிறான். அதே நேரத்தில் உரிய நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவுகள் பற்றிய புத்திசாலித்தனம் நிரம்பியவன் என்பதையும் காட்டுகிறான். அவனது புத்தி சாலித்தனத்தாலும் உழைப்பாலும் லாபம் அடைந்த கம்பெனி முதலாளி சில ஆண்டுகளுக்குப் பின் தர வேண்டிய பதவி உயர்வை முன்கூட்டியே தருகிறார். பதவி உயர்வு மூலம் கிடைக்கப் போகும் அதிகப்படியான சம்ப ளத்தில் வசதியான வாழ்க்கையை அவன் வாழ்ந்திருக்கலாம். அந்த வாழ்க்கை, கணக்கு வாத்தியாரான அவனது தந்தை வாழ்ந்த வாழ்க்கையை விடக் கூடுதல் வசதிகளுடன் இருந்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அவன் விரும்பவில்லை. அதனை ஏற்றுக் கொள்ளாமல் வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்குத் திரும்புவது என முடிவு எடுக்கிறான்.
எல்லா மனிதர்களும் எடுக்கத் தயங்கும் அந்த முடிவை குருநாத் எடுக்கிறான். அப்படி எடுப்பதற்குக் காரணமாக இருப்பது துருக்கியில் வாழ்ந்த காலத்தில் கற்றுத் தேர்ந்த வியாபாரத்தைப் பற்றிய பாடம் எனலாம். முதலீடு, உழைப்பு, லாபம் என்பதான வியாபாரத்தின் நேர்கோட்டு விதிகளோடு, அதன் நௌவு சுழிவு களையும் கூட அங்கு கற்றுத் தேர்ந்தவனாக நாடு திரும்புகிறான். நாடு திரும்பிய குரு தனது உழைப்பின் மேலும், தைரியத்தின் மேலும் கொண்ட நம்பிக்கையை முதலீடாகக் கொண்டு வியாபாரத்தின் ஒரே குறிக் கோள் லாபம் ஈட்டுவது மட்டுமே எனச் செயல்பட்டு இந்தியாவின் முதல் வரிசைப் பணக்காரனாக ஆனான் என முடிகிறது திரைப்படம் . இந்தப் படத்தின் மூலம் பொருளாதாரவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு செய்தியைப் பார்வையாளர்களுக்குச் சொல்ல விரும்பியுள்ளார் இயக்குநர்.எண்பதுகளின் இறுதி வரை இருந்த‘‘கட்டுப்பாடுகள் நிறைந்த அரசுத் துறை மற்றும் பொதுத் துறைகள் தான் இந்திய நாட்டின் வளர்சிக்குத் தடைகளாக இருந்தன. தொண்ணூறுகளுக்குப் பிந்திய தனியார் மயமாக்கல் மற்றும் தாராளமயப் பொருளாதாரம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் நடத்திக் கொண்டிருக்கிறது ’’ என்பது இயக்குநர் மணிரத்னம் நம்பும் கருத்து . அந்தக் கருத்து. சாதாரணப் பார்வையாளனுக்கும் புரியும்படி நேர்த்தியான கதையாகச் சொல்லப் பட்டிருக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பும் முக்கியத் துவமும் ஆகும்.
நேர்த்திமிக்க நாடகபாணி
குரு, வியாபாரத்தில் வெற்றி யடைந்த ஒருவனின் கதை மட்டுமே என்பதாகக் காட்ட விரும்பிய மணி ரத்னம், அவனது கோணத்திலிருந்தே காட்சிகளை அமைத்துள்ளார். வியாபார உலகத்தில் பழைமையான கருத்துக் களுக்கும் மரபான நம்பிக்கைகளுக்கும் இடமில்லை எனச் சொல்ல விரும்பியதால் , குருவின் திருமணம் மரபுகளி லிருந்து விலகியது எனக் காட்டுவதிலிருந்து அந்தக் கோணம் அழுத்தமாகத் தொடங்குகிறது. தன்னைவிட வயதில் மூத்த வளும், இன்னொரு வனைக் காதலித்ததால் வீட்டை விட்டு ஓடிப் போய் திரும்பி வந்தவளுமான சுஜாதாவை[ ஐஸ்வர்யாராய்], அவளது அப்பா தரப் போகும் 15 ஆயிரம் வரதட் சணைக்காகத் திருமணம் செய்கிறான்.[காதலித் தவன், காதலித்தவளைக் கரம் பிடிக்கத் திராணியற்ற ஒரு கம்யூனிஸ்ட் என்ற விமரிசனம் பொருட்படுத்தத் தக்கதா? என்பதைப் படம் பார்த்தவர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும்.]
துருக்கியில் வேலை பார்த்துச் சேர்த்த பணத்துடன், வரதட்சணைப் பணம் பதினைந்தாயிரத்தையும் மனைவியின் தம்பியையும் சேர்த்துக் கொண்டு மும்பைக்குச் செல்கிறான் குரு.மும்பையின் ஒப்பந்த (காண்டராக்ட்) வியாபாரத்தில் நுழைய முயன்றவன். எதிர்கொண்டவற்றில் ஒன்று வியா பாரிகள் சங்கத் தலைவரின் [க்ளப்]முட்டுக் கட்டை. இனி ஊர் திரும்ப வேண்டி யது ஒன்றே வழி என்றிருந்தவனுக்கு எதிர்பாராத உதவி சுதந்திர மணி பத்திரிகை ஆசிரியர் நானாஜி [மிதுன் சக்கரவர்த்தி] மூலம் கிடைக்கிறது. இதழியல் துறையின் தார்மீகக் கோட்பாடுகளைச் சரியாகக் கடைப்பிடிக்கும் அவர், பணக்கார வியாபாரிகளுக்கு எதிராகக் கோபத்தை வெளிப்படுத்திய அவனது போக்குப் பிடித்துப் போக அவனுக்கு உதவுகிறார். பத்திரிகை ஆசிரியர் என்ற எல்லையைத் தாண்டிய அவரது உதவிகள், ஒரு தந்தையின் உதவி போல அமைய, அதற்கீடான பாசத்தை அவளது நடக்க முடியாத மகள் மீனா [வித்தியாபாலன்] மீது காட்டுகிறான் குரு. சுதந்திர மணியின் கட்டுரை, வணிக சங்கத் தலைவரை ராஜினாமா செய்ய வைக்கிறது. அந்த ராஜினாமா வின் பின்னணியில் குருவின் துணிச்சல் இருந்ததால் வியாபாரிகள் அவனை ஏற்றுக் கொள்கின்றனர்.அவன் நினைத்த பட்டுத் துணி வியா பாரத்தில் ஈடுபட்டு லாபம் சம்பாதிக்கும் வியாபாரியாகிறான்.
குரு துணிச்சல் உள்ள வியாபாரி என்பதைக் காட்ட இன்னொரு காட்சியை அமைக்கிறார் மணிரத்னம். அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய தீர்வை யைச் செலுத் தாதற்காகக் கடையை மூடிச் சீல் வைத்த அதிகாரியின் வீட்டில் கடைச் சரக்குகளை கொண்டு போய் நிரப்புகிறான். கடன் கொடுத் தவன் பணத்தை அடைக்க முடியாத விவசாயிகளின் ஆடுமாடுகளை ஓட்டிச் சென்றுவிடும் ‘கிராமீய வட்டிக் கடை நியாயம்’ பேசி அதிகாரியைத் திக்கு முக்காடச் செய்து ,அவரது கெடுபிடியிலிருந்து பின்வாங்கச் செய்கிறான். இந்த உத்தி மற்ற வியாபாரிகளிடம் அவனது இடத்தை மரியாதைக்குரிய ஒன்றாக உயர்த்துகிறது . ஒப்பந்த வியாபாரிகளுள் ஒருவனாக, சீமைப்பட்டு வியாபாரம் செய்தவன் அங்கிருந்து மேலேறி மும்பையின் பங்கு மார்க்கெட் வியாபாரத்தில் நுழைந்து, பங்குதாரர்களுக்கு அதிகமான லாபம் தரும் நிறுவனத்தை நடத்துபவன் என்ற பெயர் வாங்குகிறான், தொடர்ந்து பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்தும் பொதுப் பங்கு வெளியீடு, சுதேசித் துணியின் மூலப் பொருட்களான பருத்தியை ஓரங்கட்டிய பாலியெஸ்டர் துணிகளைத் தயாரிக்கும் சக்திக் குழுமங்களின் தொழிற்சாலைகளின் முதலாளி என வளர்கிறான்.
இந்த வளர்ச்சி, வியாபாரத்தின் அசலான விதிகளுக்குள் செயல் படும் ஒரு வியாபாரியால் அடைய முடியாத வளர்ச்சி. அரசாங்க விதிகளுக்குள் இருக்கும் ஓட்டை விதிகளைப் பயன்படுத்தியும்,சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்படும் அதிகாரிகளுக்கு நடத்த வேண்டிய விருந்துகளை நடத்தியும், பணம், பொருள்,மது எனத் தரவேண்டியதைத் தந்தும், சட்ட மன்றத்திலும், பாராளுமன்றத்திலும் கொண்டு வரப்படும் சட்டங்களை முன்னரே தெரிந்து கொண்டு அதற்கேற்பத் திட்ட மிட்டும், தனது வியாபாரத்திற்கேற்ற விதி களுடன் கூடிய புதிய சட்டங்களைக் கொண்டு வரச் செய்தும் தனது சக்தி குழுமத்தை, இந்தியாவின் முன்னணி வியாபார நிறுவனமாக மாற்றுகிறான் குரு.
சாதாரண குருநாத், குருபாய் ஞான தேசிகனாக மாற்றம் அடைவதில் ஏற்பட்ட அரசுத்துறை மற்றும் வியாபார உலகம் சார்ந்த தடைக் கற்களைச் சாதுரியமாகப் பணத்தாலும் தனது புத்திசாலித்தனத்தாலும் சமாளித்த குருவிற்கு சமாளிக்க முடியாத எதிர்ப்பாக சுதந்திர மணி பத்திரிகையின் கட்டுரைகள் அமைகின்றன. தன்னை வளர்த்துவிட்ட நானாஜியே தனக்கு எதிராக நிற்பதால் கொஞ்சம் ஆடிப்போகிறான். தனது வளர்ச்சிக்கு அடித்தளம் போட்ட நானாஜியுடன் புதிதாகப் பத்திரிகைத் துறையில் நுழைந்த ஷ்யாம் சரவணன் [மாதவன்] என்ற இளைஞனும் சேர்ந்து இவனது வியாபார மோசடி களை அம்பலப் படுத்துகின்றனர். துருக்கியில் வேலை பார்த்த காலத்தி லிருந்து உடன் இருந்த உறவினரின் அல்ப -புகைப்படங்கள் பத்திரிகையில் வரும் என்ற -ஆசையால் அவனது சக்தி குழுமம், அரசாங்கத்தின் அனுமதி வழங்கும் துறை, வணிக வரித்துறை, சேவை வரித்துறை, வருமான வரித்துறை எனப் பல்வேறு துறைகளை ஏமாற்றிய மோசடிகள் நாட்டு மக்களுக்குத் தெரிய வருகிறது. அவனது நிறுவனத்தில் பங்குகளை வாங்கி யிருந்த பங்குதாரர்களின் நம்பிக்கையை இழக்கிறான். அந்த அதிர்ச்சியில் ஏற்பட்ட பக்கவாதம் பேச்சுத் திறனையும் நடமாடும் சக்தியையும் பறிக்கிறது. அரசாங்கம் விசாரணைக் கமிசன் ஒன்றை அமைக்கிறது.
எல்லாக் குற்றச் சாட்டுகளும் ஏறத்தாழ உண்மை என நிரூபணம் ஆகும் நிலை, எல்லாத் திசைகளிலும் தாக்கப்பட்டு மனத் தளர்ச்சி அடைந்த நிலையிலும்¢, பக்கவாதத்தால் மருத்துவ மனையில் படுத்துவிட்ட போதிலும், வியாபாரத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையைத் தளர விடவில்லை குரு. அவனது வாழ்க்கையில் பாதியாகிவிட்ட மனைவியைக் கம்பெனியின் முதலாளியாக அறிவித்து விசாரணைக் கமிசனை எதிர்கொள்கிறான்.அவனது தரப்பு நியாயங் களைச் சொல்ல அளிக்கப் பட்ட வாய்ப்பைக் கூடப் பயன்படுத்த முடிய வில்லை. தண்டிக்கப்படப் போகிறான் என்ற நிலை.ஆனால் அந்த ஆச்சரியம் நடந்து விடுகிறது.பேசும் சக்தி திரும்பவும் வந்து விடுகிறது.பேசத் தொடங்கு கிறான்.
‘‘கனவு காணுங்கள்;நீங்கள் கனவு காணத் தயாராக இல்லை யென்றால்,சொந்தக் கிராமத்திலேயே உங்கள் கதை முடிந்து போகும்’’என்பதைத் தாரக மந்திரமாகப் பின்பற்றி வாழ்க்கையை நடத்தும் குருநாத்தின் அந்தப் பேச்சு படத்தில் அமைக்கப்பட்டுள்ள விதமும் இடமும் கவனிக்கப்பட வேண்டியவை.‘‘சட்டம் ஒரே நாளில் உருவாக்கப் படுகிறது உண்மையென்றால்,அந்தச் சட்டத்தை ஒரே நாளில் மாற்றவும் முடியும்’’என்ற நம்பிக்கையின் படி செயல்பட்ட குரு, அரசுத் தரப்பு வாதங்களுக் கெதிராக தனது தரப்பு நியாயங்களைச் சொல்ல வாய்ப்புக் கேட்கிறான்.அவனுக்குத் தரப்பட்ட ஐந்து நிமிட நேரத்தில் ,‘‘சுதந்திரமான வியாபாரத்திற்குத் தடை களாக இருக்கும் அனுமதிகள், கட்டுப் பாடுகள்,தீர்வைகள் என பலவற்றையும் சுட்டிக் காட்டி வளர்ச்சிஎன்பது இவைகள் இருக்கும் வரை சாத்தியமில்லை’’
என்று வாதிடுகிறான். ‘‘தான் வியாபாரத்தைத் தொடங்கும் போது இவை எதையும் தெரிந்து கொண்டு வியாபாரத்தைத் தொடங்க வில்லை ; இன்னும் கூட இவற்றிற்குப் பொருள் தெரியாது; தெரியாத ஒன்றை நான் மீறினேன் என்று சொல்வது எப்படிச் சரியாகும்?’’என்று கேட்கிறான்.‘‘எனது நிறுவனத்தின் லாபத்தில் பலன் அடைந்த குடும்பங்கள் பல லட்சம்; நான் பொதுமக்களைக் கண்டு பயப்பட வேண்டியவன் அல்ல; ஏனென்றால் நானே பொதுமக்களில் ஒருவன் தான்’’ எனப் பேசி முடித்து விட்டு , ‘‘தனக்குத் தரப்பட்ட ஐந்து நிமிடங்களில் இன்னும் முப்பது வினாடிகள் இருக்கிறது; அதற்குப் பெயர் நேரமல்ல; வியாபார உலகத்தில் லாபம்’’ என்று முடிக்கிறான். விசாரணைக் கமிசன் உறுப்பினர்கள் அவனது வாதத்தின் தர்க்கங்களுக்குக் கட்டுப்பட்டு 27 வழக்குகளில் இரண்டு மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளன; அவ் விரண்டும் கூடத் தண்டிக்கத் தக்கன அல்ல; அபராதம் விதிக்கத் தக்கவையே எனத் தீர்ப்பை மாற்றிச் சொல் கின்றனர். இந்தியத் தொழில் நிறுவனங்களில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என அவன் கண்ட கனவு பலித்துவிட்ட நிலையில் குருபாய் ஞான தேசிகன் உலகத் தொழில் நிறுவனங்களுள் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற கனவுடன் பயணம் செய்கிறான். படத்தைப் பார்த்தவர்கள் அவனது வாதத்திறமைக்குக் கைகளைத் தட்டி விட்டுக் களைந்து போகின்றனர்.
தொண்ணூறுகளுக்கு முந்திய இந்தியாவில் பின்பற்றப்பட்ட பொருளாதாரக் கோட்பாட்டைக் கடுமையான விமரிசனங்களுக்கு உட்படுத்தி , அரசு அமைப்பு களை வாயடைக்கச் செய்து வெற்றி கண்ட குரு, புதிய பொருளாதாரக் கொள்கைகளின் மூலம் பன்னாட்டு மூலதனங்களைக் கைப்பற்றப் போகும் முதலாளியாகப் பயணத்தைத் தொடங்கினான் என வாழ்த்துப் பா பாடி படத்தை முடித்துள்ளார் மணிரத்னம். மணிரத்னத்தின் குரு , கற்பனையான குருபாய் ஞான தேசிகனின் கதை அல்ல; ஏறத்தாழ திருபாய் அம்பானியின் உண்மைக் கதை தான் என்று தேசியப் பத்திரிகைகளும் ஊடகச் செய்திகளும் கிசுகிசுக்கின்றன. இந்தக் கதை உண்மைக் கதையாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் இந்தியாவில் கடந்த நூற்றாண்டின் கடைசி இருபதாண்டுகளில் நடந்த கதையும், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் கதையும் தான் என்பதை மறுக்க முடியாது.படைப்பாளியின் சார்பு வெளிப்பாடும் நேர்மையும்தேசியமயமாக்கலை முன்மொழிந்த பழைய பொருளாதாரக் கட்டமைப்பின் மீது விமரிசனம் வைப்பதற்கும் அதன் தொடர்ச்சியாகத் தனியார் மயம், தாராளமயம் , உலக மயம் என மாறிவரும் பொருளாதாரச் சூழலை வரவேற்பதற்கும், ஆதரித்துப் படம் எடுப்பதற்கும் ஓர் இயக்குநருக்கு உரிமை உண்டு. மக்கள் சக்தியின் வலிமையைச் சொல்லும் படங்களை எடுப்பதற்கும், சுரண்டப் பட்ட மக்களின் கோபத்தால் ஆதிக்க சக்தி களும் ஏமாற்றுக்காரர்களும் ஒழிக்கப் பட்டதைக் கலை இலக்கியப் படைப்பு களாக ஆக்குவதற்கும் இடதுசாரிப் படைப்பாளிகளுக்கு உரிமை இருப்பது போலத் திறமையான ஒரு கூட்டம் ஆதிக்க சக்தியாக இருப்பதற்கான நியாயங்களும், காரணங்களும் இருக்கத் தான் செய்கின்றன என்று ஒரு படைப்பாளி வாதிடுவதைத் தவறு என எப்படிச் சொல்ல முடியும்? தனிநபர் களின் ஆதிக்கத்தை ஆதரிப்பதும்,உடல் உழைப்பில் ஈடுபடாத சிறு கூட்டத்தின் தந்திரோபாயங்களைப் புத்திசாலித்தனம் எனப் பாராட்டுவதும் மனிதாபிமானமற்ற மனிதர்களின் வெளிப்பாடு என்ற குற்றச் சாட்டுகளைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை அறிந்தே அந்த வாதத்தை முன் னெடுக்கும் ஒருவரை யார் தடுத்து நிறுத்த முடியும்? தான் முன்னெடுக்கும் வாதம் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது என்ற போதிலும், பாதிக்கப் பட்டோரின் பக்கம் கலை இலக்கியவாதிகள் நிற்க வேண்டும் ; அவர்களின் நலனுக்காக- அவர்களின் அடிப்படைப் பிரச்சினை களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் - அதில் தான் படைப்பாளியின் தார்மீக அடையாளம் வெளிப்படும் என்ற கலைக் கோட்பாட்டிற்கு எதிரானது எனத் தெரிந்த போதிலும் , தந்திரக்காரர்களின் பக்கம்- ஆதிக்கவாதிகளின் பக்கம் தான் நிற்பேன் எனச் சொல்பவரை யார் தடுத்து நிறுத்த முடியும்.? மணிரத்னம் இந்த படத்தில் அதைத் தான் செய்துள்ளார்.
இந்தப் படத்தில் வெளிப்படையாக எடுத்துள்ள அந்த நிலைபாட்டை இதற்கு முந்திய படங் களிலும் கூட மறைமுகமாக எடுக்கத்தான் செய்தார். மணிரத்னத்தின் அரசியல், பொருளாதார நிலைபாட்டை ஒரு குறையாகச்¢ சொல்லும் அதே நேரத்தில் ஆய்வுக் கட்டுரையாக எழுதப்பட வேண்டிய ஒரு கருத்தை, நேர்த்தியான சினிமாவாக எடுத்துள்ள அவரது திறமை பாராட்டிற் குரியது என்பதும் சொல்லப் பட வேண்டியதாகும். வறட்சியான பொரு ளாதாரக் கருத்தைப் படத்தின் செய்தியாக மறைத்துக் கொண்டு எளிமை யான நேர்கோட்டுக் கதையைப் பின்னியுள்ளார் குரு படத்தில்.கதை சொல் வதிலும் காட்சிகளை அமைப்பதிலும் உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்கு நர்கள் பின்பற்றிய நினைவோடை உத்தி (அலைபாயுதே), இடத்தை மையப் படுத்திப் பிரியும் காட்சிகளின் விவரிப்பான பல்நோக்கு உத்தி (ஆயுத எழுத்து), பின்னோக்கு உத்திகளின் தொகுப்பு (மௌனராகம், நாயகன், இருவர், கன்னத்தில் முத்தமிட்டால்,) எனப் பலவிதமான உத்திகளைப் பயன்படுத்திய வந்த மணிரத்னம், இந்தப் படத்தில் அவற்றையெல்லாம் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு நேரடியாகக் கதை சொல்லும் முறையையும், காட்சிக் கோர் வைகளையும் அமைத்துள்ளார். தொடக்கம், முரண், முரண் வளர்ச்சி, சிக்கல் விடுவிப்பு, திரும்பவும் ஒரு முரண் ,அதன் வளர்ச்சி, அதற்கு ஒரு விடுவிப்பு, என அமைத்து எளிமையாகப் படத்துடன் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறார். இப்படியான தேர்வில் அவரது நோக்கம் இருக்கிறது. இந்த வடிவத்தை நாடகக்கலை, நல்திறக் கட்டமைப்பு நாடகவடிவம் [Wellmade play] எனக் கூறும்.படிப்பில் தோற்றுப் போனவன், பொய்யான காரணத்துடன் வெளி நாட்டிற்குப் போய் வெற்றி பெற்றான் என்பது படத்தின் முதல் முடிச்சும் அவிழ்ப்பும் ஆகும் .இரண்டாவது முடிச்சு வணிகர் சங்கத் தலைவர் போட்டது;அதைச் சுதந்திரமணி ஆசிரியரின் உதவியுடன் அவிழ்த்துக் காட்டு கிறான். மூன்றாவது முடிச்சு பொதுப் பங்கு விநியோகத் தொடக்கத்தில் ஏற்படுகிறது. உச்ச நிலைக்காட்சி வரை நீளும் இந்த முடிச்சு, பல திருப்பங் களைக் கொண்டது. மனைவியின் அண்ணன் கோபித்துக் கொண்டு வெளி யேறுதல், சுதந்திரமணி பத்திரிகையுடன் மோதல், பங்குச் சந்தையில் வீழ்ச்சி, பக்க வாதத்தின் தாக்குதல், அரசாங்கத்தின் விசாரணைக் கமிசன் என எல்லாத் திருப்பங்களுக்கும் அவிழ்ப்பாக இருப்பது கடைசியில் குருநாத் ஆற்றும் உரை தான். இப்படியான கதை சொல்லல் முறையை எளிய கதைக் கூற்று முறை ( Simple narration) அல்லது நேர்கோட்டுக் கதை சொல்லல் (Linear narration ) என்று சொல்லுவர். இந்த நேர் கோட்டு முறை, சொல்ல வந்த செய்தியை- முன் நிறுத்த வேண்டிய கதாபாத்திரத்தை அதன் வாதங்களோடு சரியாகப் பார்வை யாளர்களிடம் கொண்டு சேர்க்கும் முறையாகும் .அதனைச் சரியாகப் புரிந்து வைத்துள்ள மணிரத்னம் , அதனை வலிமையுடன் செய்ய வேண்டும் என்பதற்காகப் படத்தின் உச்சநிலை(climax)க் காட்சியில் இன்னொரு உத்தியையும் பயன் படுத்தியுள்ளார்.
பெரும்பாலான இந்திய சினிமாக்களின் உச்சநிலைக் காட்சிகள் பரபரப்பான காட்சிகளாகவே அமையும். இரண்டு கதாபாத்திரங்கள் மோதிக் கொள்ளும் சண்டைக் காட்சிகளாகவோ, வில்லனின் கூட்டத்தை எதிர் கொள்ளும் நாயகனின் சாகசமாகவோ, நல்லவனால் விரட்டப்படும் கொடியவனின் விரட்டல், வாதங்களை முன் வைத்துப் பேசும் நீதிமன்றத் தன்மை கொண்ட உரையாடல் என்பதான சூத்திரங்களுக்குள் அமைவன. மணிரத்னமே கூட அத்தகைய உச்சநிலைக் காட்சிகளைத் தனது முந்திய படங்களில் (அக்னி நட்சத்திரம், நாயகன், தளபதி, உயிரே) வைத்துள்ளார். ஆனால் குருவில் அத்தகைய உச்சநிலைக் காட்சி களைத் தவிர்த்து விட்டு நாயகன் ஆற்றும் நீண்ட உரையை அந்த இடத்தில் வைத்திருப்பது கவனிக்கத் தக்க ஒன்று.சேக்ஸ்பியரின் புகழ் பெற்ற துன்பியல் நாடகங்களின்¢ (மாக்பெத், ஹேம்லட், ஜூலியர் சீசர், கிங் லியர், மெர்ச்செண்ட் ஆப் வெனிஸ் ) உச்சநிலைக் காட்சியில் மையக் கதாபாத் திரங்கள் ஆற்றும் சொற்பொழிவுத் தன்மைகொண்ட உரைகளைப் போன்றதொரு உரை அது.
தனிமனிதர்களாக நின்று தனது செயல்பாடு களுக்கும், மனநிலைகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் காரணங்களைக் கண்டுபிடித்து உரையாற்றும் சேக்ஸ்பியரின் பாத்திரங்கள் தன்னிலையைத் தானே கேள்வி கேட்டுக் கொள்ளும் தன்மையுடையன. தனது செயல்பாடுகளாலும் முடிவுகளாலும் ஏற்பட்ட நிகழ்வுகளுக்காக வருந்திய மனநிலையில் , குற்றவுணர்வுடன் பேசும் அந்தப் பாத்திரங்களின் உரைகள் கழிவிரக்கத்தைத் தூண்டும் தன்மையில் அமைந்திருக்கும். அதனால் அந்த உரைகளுக்குப் பின் பார்வை யாளர்களின் கோபம் குறைந்து அந்த பாத்திரங்களின் மீது அனுதாபம் கூடி விடும். பார்வையாளனின் மனத்தைத் தன்வசப்படுத்தும் சக்தி கொண்ட அந்த உத்தியை மணிரத்னம் குரு படத்தில் நேர் எதிராகப் பயன்படுத்துகிறார் என்பதுதான் அவரது சாதுர்யம். குற்றவுணர்வுடன் அல்லாமல் எல்லாக் குற்றங்களையும் நியாயப்படுத்தும் நோக்கத்தில் அமைந்துள்ளது அந்த உரை. எல்லாக் குற்றச் சாட்டுகளையும் ஒத்துக் கொண்டாலும், அவற்றையெல்லாம் நாட்டின் வளர்ச்சிக்கான முயற்சிகள் என்பதாக ஏற்றுக் கொண்டு அரசு விலகி நிற்க வேண்டும் என மறைமுகமாக வலியுறுத்தும் குரு, தனது உரையில் அதனை நிறைவேற்றிக் கொள்ள வேறு சில வாதங்களையும் வைக்கிறான். அரசு அமைத்த விசாரணைக் கமிசன் குருவின் மீது சாட்டியுள்ள 29 குற்றச் சாட்டுகளையும் மறந்து விடச் செய்யும் விதமாக அவன் வைக்கும் வாதங்களில் முக்கியமானது அவன் ஒரு அப்பாவி என்ற பாவனை தான்.
தனிமனிதர்களாக நின்று தனது செயல்பாடு களுக்கும், மனநிலைகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் காரணங்களைக் கண்டுபிடித்து உரையாற்றும் சேக்ஸ்பியரின் பாத்திரங்கள் தன்னிலையைத் தானே கேள்வி கேட்டுக் கொள்ளும் தன்மையுடையன. தனது செயல்பாடுகளாலும் முடிவுகளாலும் ஏற்பட்ட நிகழ்வுகளுக்காக வருந்திய மனநிலையில் , குற்றவுணர்வுடன் பேசும் அந்தப் பாத்திரங்களின் உரைகள் கழிவிரக்கத்தைத் தூண்டும் தன்மையில் அமைந்திருக்கும். அதனால் அந்த உரைகளுக்குப் பின் பார்வை யாளர்களின் கோபம் குறைந்து அந்த பாத்திரங்களின் மீது அனுதாபம் கூடி விடும். பார்வையாளனின் மனத்தைத் தன்வசப்படுத்தும் சக்தி கொண்ட அந்த உத்தியை மணிரத்னம் குரு படத்தில் நேர் எதிராகப் பயன்படுத்துகிறார் என்பதுதான் அவரது சாதுர்யம். குற்றவுணர்வுடன் அல்லாமல் எல்லாக் குற்றங்களையும் நியாயப்படுத்தும் நோக்கத்தில் அமைந்துள்ளது அந்த உரை. எல்லாக் குற்றச் சாட்டுகளையும் ஒத்துக் கொண்டாலும், அவற்றையெல்லாம் நாட்டின் வளர்ச்சிக்கான முயற்சிகள் என்பதாக ஏற்றுக் கொண்டு அரசு விலகி நிற்க வேண்டும் என மறைமுகமாக வலியுறுத்தும் குரு, தனது உரையில் அதனை நிறைவேற்றிக் கொள்ள வேறு சில வாதங்களையும் வைக்கிறான். அரசு அமைத்த விசாரணைக் கமிசன் குருவின் மீது சாட்டியுள்ள 29 குற்றச் சாட்டுகளையும் மறந்து விடச் செய்யும் விதமாக அவன் வைக்கும் வாதங்களில் முக்கியமானது அவன் ஒரு அப்பாவி என்ற பாவனை தான்.
அதிகம் படிப்பறிவு இல்லாத கிராமத்தான் ; ஆங்கிலத்தில் பேசினால் புரிந்து கொள்ளும் ஆற்றல் தனக்கோ, தனது மனைவிக்கோ இல்லை என்பதாகப் பேசுவதோடு, தான் வியாபாரத்தைத் தொடங்கிய போது அரசாங்கம் என்ன வகையான சட்டங்களை இயற்றியிருந்தது; என்னென்ன வகையான வரி களைப் போட்டது ; என்னென்ன தொழில்களுக்கு எப்படிப் பட்ட அனுமதிகள் வாங்க வேண்டும் என்ற விவரங்களையெல்லாம் தெரிந்து கொண்டு தொழில் தொடங்கவில்லை என்று வாதிடுகிறான். ‘எல்லாவகை மோசடிகளையும் செய்தவன் தெரியாமல் செய்தான்’என்பதை விசாரணைக் கமிசன் உறுப் பினர்கள் வேண்டுமானால் ஏற்றுக் கொண்டு தண்டனை வழங்காமல் அபராதத்தோடு நிறுத்திக் கொள்ளலாம். ஆனால் பார்வையாளர்களும் அதை ஒத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது.
படம் முழுக்கக் குருநாத் பேசும் வசனங்கள் அவனுக்கே உரியன என்ற நிலையில் முரண்பாடுகளையெல்லாம் பார்வையாளர்கள் மறந்து விட மாட்டார்கள். ‘தான் ஒரு அப்பாவி ’ என்று கமிசன் முன் சொல்லும் அவன் தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது , ‘குரு; எல்லாம் தெரிந் தவன். குருநாத் ஞானதேசிகன்’ ( இந்த எல்லாம் என்பதற்கு வியாபாரம் -அதில் லாபம் என்பதுதான் பொருள் போலும்) எனச் சொல்லியவன். அதேபோல், ‘பொதுமக்களைக் கண்டு நான் பயப்படப் போவதில்லை; ஏனென்றால் நானே பொது மக்களில் ஒருவன் தான்’ எனக் கமிசன் முன்னால் வாதிடும் அவன் , ‘என்னைப் போல ஒருவன் தான் இருக்க வேண்டும்; அவன் குருவாக இருக்க வேண்டும்’ என்ற சொன்னவனும் கூட. அகங்காரங் கொப்பளிக்கும் இத்தகைய (பாசிசத் தன்மையுடைய) கருத்துடையவர்கள் தான் இந்திய முதலாளிகள். அவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள ‘அப்பாவி; பாமரன்’ என்ற பொய் களையும் கூட அவிழ்த்து விடக் கூடியவர்கள் என்று உண்மையைசொல்லி விட்டதற்காக (தவறுதலாகத் தான்) வசனம் எழுதிய சுஹாசினி மணி ரத்னத்தைப் பாராட்டலாம். ஆனால் இயக்குநர் மணிரத்னம் தவறியும் கூட உண்மைகளைச் சொல்லாதவர் என்பதைப் படத்தின் காட்சிகள் நமக்குச் சொல்கின்றன. இல்லையென்றால் குருபாயின் அடுத்த கட்டப் பயணத்தைக் கோடிகாட்டியவர்,சுதந்திரமணியின் அடுத்த கட்டத் தாக்குதலையும் அடை யாளப்படுத்தியிருப்பார் அல்லவா..? அப்படிக் காட்டியிருந்தால் அவருக்கு நடுநிலைப் படைப்பாளி என்ற பிம்பமாவது கிடைத்திருக்கும். அந்தப் பிம்பம் அவருக்குத் தேவை இல்லை. ஏனென்றால் அவர் நம்பும் கருத்தியலை முழுமையாக ஆதரிப்பவர் என்பதோடு, அதற்காக வாதாடவும் செய்பவர். நலவாழ்வுப் பொருளாதாரத்திற்கு மாறாக தனியார் மேலாண்மையை வலியுறுத்தும் மேலாண்மைக் கல்வியைப் பெற்ற பட்டதாரியும் கூட. அத்தோடு இந்திய ரசிகர்களையும் சந்தையையும் மட்டும் இலக்காக வைத்து படம் எடுக்காமல், சர்வதேசச் சந்தைக்கும், பார்வையாளர்களுக்கும், படவிழாக் களுக்கும் படம் எடுப்பவர் என்ற உண்மையும் கூட அதன் பின்னணியில் உள்ளது.
நிறைவாக இப்படிச் சொல்லலாம்; இந்தியப் பெருமுதலாளிகளில் ஒருவன் எவ்வாறு உருவானான் என்பதை படம் எடுத்த மணிரத்னம், பன்னாட்டு முதலாளியாக ஆவது எப்படி என்ற ஆலோசனைகளைச் சொல்லும் பாடங்களைக் கூட அடுத்து வரும் திரைப்படமாக எடுக்கக் கூடும். அத்தகைய படத்தை மிகச் சிறந்த படம் , பார்த்தே ஆக வேண்டிய படம், தக்க நேரத்தில் எடுக்கப் பட்ட படம் என்று சர்வதேச அலைவரிசைகளும் பத்திரிகைகளும் பாராட்டலாம். ஆனால் இந்தியப் பாமரர்கள் அதையும் ஒரு பொழுதுபோக்குக் கதையாகப் பார்த்துவிட்டுப் போய்விடுவார்கள் ,அல்லது தங்களின் அறிவெல் லைக்கு வெளியே இருக்கும் -தொடர்பில்லாத ஒன்று என ஒதுக்கி விடுவார்கள் என்பதையும் அவர் மறந்து விடக்கூடாது. தமிழில் வந்துள்ள குரு படம் பெற்ற வரவேற்பு இதைத் தான் உறுதி செய்கிறது.
============= 2007,பிப்ரவரி, 10.11 தேதிகளில் புதிய காற்று மாத இதழ் , மதுரையில் நடத்தும் தமிழ் சினிமா; அகமும் புறமும் என்ற கருத்தரங்கில் வாசிப்பதற்கு எழுதப்பட்ட கட்டுரை.
அம்ருதா இதழில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அச்சானது --------------------------------------------------------------------- மணிரத்னத்தின் [ 1956, ஜூன் ,2] படங்கள்
1] 1983- பல்லவி அனுபல்லவி
2] 1985- உணரு
3] 1985- பகல் நிலவு
4]1985- இதயக்கோவில்
5]1986- மௌனராகம்
6]1987- நாயகன்
7]1988- அக்னி நட்சத்திரம்
8] 1989- கீதாஞ்சலி
9]1990- அஞ்சலி
10]1991- தளபதி
11]1992- ரோஜா
12] 1993- திருடா திருடா
13]1995- பம்பாய்
14] 1997- இருவர்
15]1998- உயிரே
16] 2000-அலைபாயுதே
17] 2002-கன்னத்தில் முத்தமிட்டால்
18]2004- ஆயுத எழுத்து
19]2007-குரு
கருத்துகள்