தற்காலிக விளையாட்டுகள்
இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது மதிப்பிற்குரிய குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அந்தப் போட்டியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரை வைத்து மூன்றாம் அணியினர் அரங்கேற்றிய நகைச்சுவைக் காட்சிகள் அவ்வளவு தூரம் மறந்து போகக் கூடியன அல்ல. ‘‘என்னையெ வச்சு எதாவது காமெடி கீமடி பண்ணலயே ..’’ என்ற வடிவேலுவின் மிகப்பிரபலமான உரையாடல் ஞாபகம் வந்தால் கொஞ்சம் தள்ளி வைத்து விடுங்கள். நாம் பேசப்போவது ஆழமான சங்கதி. ஆம். இந்திய தேசத்தின் இப்போதைய அரசியல் நிலை எப்படிப் பட்டது என்பதைப் பற்றி. இதுவும் காமெடியான விசயம் தான் என்று நீங்கள் எடுத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்தியாவில் நடப்பது அதிகாரப் பங்கீட்டு அரசியல். பெரும்பாலான மாநிலங்களிலும் கூட இந்த அதிகாரப்பங்கீட்டு அரசியலே நடக்கிறது என்றாலும் தூக்கலாகத் தெரிவது மைய அரசாங்கத்தின் கட்டமைப்பில் மட்டும் தான். மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் அல்லது சாதியில் செல்வாக்குப் பெற்றுள்ள தலைவர் ஒருவர் நான்கு அல்லது ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்து, தேசிய அரசாங்கத்தில் காபினெட் அமைச்சராகவும், துணை அமைச்சராகவும் தனது கட்சியைச் சேர்ந்த ஒருவரை அமைச்சராக ஆக்கிப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம்.. அதன் வழியாக அவரது கட்சியைப் பொருளாதார ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் பலமான கட்சியாகக் காட்ட முடிகிறது. தனியொரு கட்சியாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற முடியாத தேசிய கட்சிகள் மாநிலக் கட்சிகளின் அதிகாரப் பசிக்குத் தீனி போட்டுத் தங்கள் பசியையும் தீர்த்துக் கொள்ளும் இந்த விளையாட்டு தேசிய நலனுக்கு உகந்ததா? என்று கேள்வி எழுப்பினால் பலர் சொல்லும் பதில் ‘‘இல்லை’’ என்பது தான். மாநிலக் கட்சிகளின் தன்னலத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய அரசாங்கம் நடந்து கொண்டால் பெரும் ஆபத்துக்களும் மோசமான விளைவுகளுமே உண்டாகும் எனப்பலர் எச்சரிக்கை செய்யவும் செய்கின்றனர். அப்படிச் சொல்கிறவர்கள் எண்ணிக்கை பெரும்பான்மையானது என்ற போதிலும், மாறுபட்ட பதிலைச் சொல்லக்கூடிய சிறுபான்மையினர் இருக்கத்தான் செய்கின்றனர். இந்திய தேசம் என்பது அடிப்படையில் ஒற்றை தேசம் அல்ல. மொழி, இனம், மதம், பண்பாடு போன்றவற்றால் வேறுபட்ட அடையாளங்களைக் கொண்ட தேசிய இனங்கள் இணைந்து வாழும் ஒரு துணைக்கண்டம் எனவும், அதற்கேற்ற அரசியல் வடிவம் கொண்ட மைய அரசு இப்பொழுதுதான் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர். தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் அதனதன் இருப்பிற்கேற்ப மைய அரசில் அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ள இந்த அமைப்புத்தான் இப்பொழுது சாத்தியம் என்பது அவர்களின் வாதம்.
இந்த வாதங்களை அரசியல் தத்துவம் சார்ந்த அறிஞர்கள் நவீனத்துவ அரசியல் (Modern politics ), பின் நவீனத்துவ அரசியல்(Post Modern politics) என்ற இரண்டு சொற்களால் குறிக்கின்றனர். நவீனத்துவ அரசியல் , பின்-நவீனத்துவ அரசியல் என்று வரிசைப்படுத்தியவுடன் ஒன்று முந்தியது; அடுத்தது அதிலிருந்து சில மாற்றங்களையுடையது என நினைத்து விட வேண்டிய தில்லை. பின் நவீனத்துவ அரசியல் நவீனத்துவ அரசியலிலிருந்து ஏறத்தாழ எதிரானது என்றே சொல்லலாம்.நவீனத்துவ அரசியல் தேச நலன், மக்கள் நலன், பொது அறம், தனிமனித ஒழுக்கம், அரசியல் சட்டத்தைப் பாதுகாத்தல் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டது. நீதிமன்றங் களில் வழங்கப்படும் நீதி நடுநிலை தவறாத நீதியாக இருக்கிறது; இருக்க வேண்டும் என்பதான நம்பிக்கைகளும் இலட்சியங்களும் கொண்டதாக இருக்கும். நீண்டகாலத் திட்டத்தை முன் வைத்தல் , அதைச் செயல் படுத்தும் வழி முறைகளைக் கண்டறிதல் ,முன் எடுக்கும் திட்டம் சாத்திய மானதுதானா ? என்ற கேள்விகளை எழுப்புதல், இல்லை யென்றால் கைவிட்டு விட வேண்டும் என்ற விருப்பம் போன்றனவெல்லாம் நவீனத்துவ அரசியலுக்கு உண்டு.பின் நவீனத்துவ அரசியலுக்கு இவையெல்லாம் இருக்கும் என்று சொல்ல முடியாது.இவையெல்லாம் இருக்கவே கூடாது என்றும் அது சொல்வதில்லை; பின் நவீனத்துவ அரசியல் அடிப்படையில் தற்காலிகத் தன்மையில் அதிகம் பிடிப்புக் கொண்டது. நிரந்தரம் என்ற ஒன்றில் அதிகம் நம்பிக்கை கொள்ளாமல்,இப்போதைக்கு இதைச் செய்வோம்; அதன் விளைவுகள் என்னவாக இருக்கிறதோ அதற்கேற்ப அடுத்த கட்டத்தைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம் என நம்புவதும் பாவனை செய்வதும் தான் பின் நவீனத்துவத்தின் வெளிப்பாடு. உண்மை என்ற ஒன்றே நிரந்தரமானதல்ல என்ற கண்டுபிடிப்புக்குப் பின்னால் , அறம், அன்பு , காதல், தியாகம் என்ற எல்லாமுமே பாவனைகள் தான் என்று பின் நவீனத்துவம் விளக்கிக் காட்டியிருக்கிறது. தனிமனித வாழ்க்கை சார்ந்த இவையெல்லாம் பாவனைகள் என்று ஆன பின்பு நடுநிலைமை, மக்கள் நலன், தேசப்பற்று, தார்மீக நெறி போன்ற அரசியல் சொல்லாடல்களும் பாவனைகள் தான் என்று ஆகி விட்டன.
ஒருவித இரண்டுங்கெட்டான் நிலையில் எல்லாவற்றையும் கணிப்பதும் இயங்குவதும் தான் பின் நவீனத்துவ அரசியலின் தன்மை என்பதால் தான் இந்தியா போன்ற வளர வேண்டிய நாடுகளில் பின் நவீனத்துவ அரசியல் எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கும் என்கின்றனர்.இன்று அதிகாரத்தில் உள்ள மைய அரசு முன் வைக்கும் பொருளாதார திட்டங்களும் வளர்ச்சித்திட்டங்களும் முழு மனத்தோடும் நம்பிக்கையோடும் முன் வைக்கப்படும் திட்டங்கள் அல்ல என்பதை நமது பிரதம மந்திரியும் அவரது சகாக்களான நிதி அமைச்சர், திட்டக்குழுத் தலைவர், பொருளாதார ஆலோசகர் போன்றவர்களின் அமைதியான உரைகளே காட்டுகின்றன. திட்டமான விளைவு களைச் சொல்ல முடியாமல் நழுவும் அந்த உரைகள் அவ்வாறு அமையக் காரணம் முழுமையான நம்பிக்கையுடன் அவை முன் வைக்கப் படவில்லை என்பது தான். பின் நவீனத்துவ அரசியலின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமலேயே மாநில அரசுகள் தற்காலிகச் சலுகைகளை வழங்கும் திட்டங்களை முன் வைத்துத் தங்களைத் தற்காலிகமாகத் தற்காத்துக் கொள்கின்றன.
நவீனத்துவ அரசியலிலிருந்து பின் நவீனத்துவ அரசியலுக்கு இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கும் மதிப்பிற்குரிய அப்துல் கலாமின் பெயரை வைத்து உண்டாக்கப்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். நவீனத்துவ அரசியல் மறைந்து முழுமையாக மறைந்து பின் நவீனத்துவ அரசியல் - ஒட்டுமொத்த இந்தியா விலும் தற்காலிகத்தனத்தை முழுமையாக நம்பும் - எல்லாவற்றையும் சந்தேகத்தோடும் நம்பிக்கையோடும் கவனிக்கும் பாவனை சார்ந்த வெளிப் பாடுகள் பரவிக் கிடக்கின்றன என்பதற்கு அந்த நிகழ்வுகள் சரியான எடுத்துக் காட்டாக ஆகி விட்டது என்பதனால் அதை எடுத்துக் காட்ட வேண்டியதாகி விட்டது.
அப்துல்கலாமின் பெயர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நம்பிக்கையின் வெளிப்பாடு என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அந்தப் பெயரை முன் மொழிந்த பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீது நம்பிக்கையையும் அறம் சார்ந்த மதிப்புகள் மீதும், இலட்சியங்கள் மீதும் , தேசத்தின் மீதும் , தேசநலன் மீதும் நம்பிக்கை கொண்டவர்களின் அரசியல் நடக்கிறது என்ற நம்பிக்கையை உண்டாக்க அந்தப் பெயர் பயன்பட்டது. ஆம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் நேர்மறை விளைவை உண்டாக்கிய அப்துல்கலாம் என்ற பெயர் ஐந்தாண்டுக்குப் பின்னும் அந்த மாயத்தைச் செய்துவிடும் என்ற எதிர்பார்ப்பது ஏன்? பின் நவீனத்துவ நிலை முழுமையாக ஏற்பட்டு விட்ட நிலையில் அந்தப் பெயரும் தற்காலிக உச்சரிப்பாக ஆகி விட்டது. அவரது பெயரை முன் மொழிந்த மூன்றாவது அணியினரும் அந்த முன் மொழிதலைத் தற்காலிகத் தன்மை யுடன் தான் முன் மொழிந்தனர் என்பதும் கூட தெரிந்ததுதான். இடதுசாரி களும் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியும் அப்துல் கலாமின் பெயரை நிராகரித்து விட்டு பிரதிபா பாட்டீல் என்ற பெயரை முன் மொழிந்த பின்பு திரும்பவும் அந்தப் பெயரை முன் மொழிதல் ஒருவித பின் நவீனத்துவ விளையாட்டல்லாமல் வேறல்ல. அதிக பட்சமாக ஒருவாரத்திற்கு மேல் தாக்குப் பிடிக்காத அந்த விளையாட்டை ஊடகங்களும் உற்சாகமாக விளையாண்டன என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஊடகங்களுக்கு இந்த மாதிரி பின் நவீனத்துவ விளையாட்டு புதியது அல்ல. ஏற்கெனவே மாணவர்களும் பொதுமக்களும் இளைஞர்களும் அறிவாளிகளும் அப்துல்கலாம் திரும்பவும் குடியரசுத்தலைவர் ஆவதை விரும்புகிறார்கள் என்று அவை விளையாடத்தொடங்கிப் பல மாதங்கள் ஆகி விட்டன. குடியரசுத்தலைவர் தேர்தல் என்பது பாராளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துத் தேர்வு செய்யும் ஒன்று என்பதை அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் அறியாதவை அல்ல. பொது மக்களின் குரல்களுக்கும் குறுஞ்செய்திகளின் எண்ணிக்கைக்கும் அங்கு வேலையே இல்லை என்று தெரிந்த பின்பும் அந்தத் தற்காலிக விளையாட்டை விளையாடுவதில் அரசியல்வாதிகளோடு ஊடகங்களும் சேர்ந்து விளையாண்டன என்பதை விட மதிப்பிற்குரிய ஏ.பி.ஜே. அப்துல்கலாமும் சேர்ந்து விளையாண்டதுதான் ஆச்சரியம்.
கருத்துகள்