நெறியாளரும் ஆய்வாளரும்

எனது நெறியாளர் 
2003-இல் நான் பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் எம்ஃபில் படித்துக் கொண்டிருந்தபோது, ஆய்வுக்காக நாடகம் தொடர்பான குறிப்புகளைத் தேடிக்கொண்டிருந்தேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இருந்த ராமசாமி சாரைப் பற்றிக் கேள்விப்பட்டு, கே.டி.சி. நகரிலுள்ள அவர் வீட்டிற்குச் சென்றேன். நாடகம் தொடர்பான பரந்த அறிவைப் பெற வேண்டுமென்று ‘வெளி’ பிரதிகளைத் தந்தார். நாடகத்திற்காக வந்த இதழ் ‘வெளி’. 


‘வெளி’ பிரதிகளைப் படித்த பிறகுதான், நாடகத்தைப் பற்றிய புரிதல் கொஞ்சம் விரிவானது. இந்திய நாடகாசிரியர்களைப் பற்றித் தெரிந்துகொண்டது அதிலிருந்துதான். நாடகங்கள் பற்றி, தேசிய நாடகப் பள்ளி NSD (National School of Drama, Delhi) பற்றி அ.ராமசாமி சார் நிறைய தகவல்களைத் தருவார். அதற்கு முன்பு, நாடகங்களைப் பற்றிய பொதுவான புரிதலே இருந்தது. 2002-இல் எம்.ஏ. படிக்கும்பொழுது ஆய்விற்காக, எதை ஆய்வு செய்யலாம் என்று தடுமாறிக் கொண்டிருந்த காலகட்டம். எல்லோரும் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்பொழுது, எனக்கு வழக்கமான அந்த ஆய்வுலகம் பிடிக்கவில்லை. வித்தியாசமாக, கடின உழைப்போடு கூடிய, அறிஞர்களின் தரத்திற்கேற்ப ஆய்வு செய்ய வேண்டும் என்ற தாகம் இருந்த காலகட்டம் அது. அப்பொழுது, ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற ஒரு குறளை மட்டும் ஆய்வு செய்கிறேன் என்று எம்.ஏ. நெறியாளராக இருந்த திரு.சிவசு சாரிடம் கேட்டேன். ‘ஒரு குறளை மட்டுமா? முடியுமா?’ என்று கேட்டுவிட்டு, கிரிஷ் கர்னாட்டின் ‘அக்னியும் மழையும்’ நாடகத்தைத் தந்தார். ‘இதைப் படித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் இதில் செய்யலாம்’ என்றார். கிரிஷ் கர்னாட்டை அறிமுகப்படுத்தியவர் சிவசு சார்தான். இருத்தலியல் தத்துவத்தின் மீதிருந்த ஈர்ப்பும், அந்நாடகத்தில் ஏற்பட்ட ஈர்ப்புமே முனைவர் பட்ட ஆய்வு வரை இழுத்து வந்தது. 

பள்ளி நாட்களில் (தூய சவேரியார் பள்ளி) நாடகங்களில் நடித்திருக்கிறேன். கிரிஷ் கர்னாட்டின் பிற நாடகங்களைப் படித்தபிறகு, நாடகத்தின்பால் அதீத ஆர்வமும் ஏற்பட்டது. அவரது நாடகங்கள் கற்பனை வளத்துடன், புதிய பரிசோதனை முயற்சிகளுடன் இருந்ததும் அதற்குக் காரணம். இயல்பாகவே திரைப்படங்களின் மீதிருந்த ஆர்வத்தாலும், நாடகங்களைப் பற்றியும், நாடகாசிரியர்களைப் பற்றியும் கவனிக்க ஆரம்பித்தேன். என்.எஸ்.டி -இல் சேர விருப்பம் தெரிவித்தபோது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறையைச் சேர்ந்த மு.ராமசாமி சார் ‘இக்கால கட்டத்தில் நாங்களே நாடகம் போடுவதை நிறுத்திக் கொண்டிருக்கிறோம். வருமானத்திற்கு நல்ல வழியை ஏற்படுத்திவிட்டு, அதன்பிறகு, நீங்கள் இருக்கிற இடத்திலேயே நாடகம் போடலாம். நாடகத்தை நம்பியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டாம்’ என்று அறிவுரை கூறியதனால், என்.எஸ்.டி (NSD) -இல் சேரும் எண்ணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, எம்.ஃபில். ஆய்வைத் தொடர்ந்தேன்.

கிரிஷ் கர்னாட்டின் நாடகங்களில் இருத்தலியல் (துக்ளக், நாகமண்டலம்) - எம்.ஃபில். ஆய்வுத் தலைப்பு. நாகமண்டலத்தைத் தமிழில் மொழிபெயர்த்த பாவண்ணன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். கிட்டத்தட்ட, ‘நெறியாளர்’ போலவே இருந்தார். நான் அப்போது அவருடைய ஆய்வு மாணவராக இல்லாவிட்டாலும், என்னை நெறிப்படுத்தியவர். ஆய்விற்கு ஊக்கம் தந்தவர். 

எம்.ஃபில். முடித்துவிட்டு, காங்கயம் கல்லூரியில் தமிழ் உதவிப்பேராசிரியராக இருந்துகொண்டே, பகுதிநேரமாக பிஹெச்.டி. சேர முயற்சித்துக் கொண்டிருந்தேன். சந்திப்பில் ஒருமுறை, ‘கிரிஷ் கர்னாட்டின் சில நாடகங்கள் தமிழில் இல்லை சார்’ என்றேன். சற்று உற்றுப்பார்த்துவிட்டு, ‘நீங்களே மொழிபெயர்க்கலாமே’ என்றார். எனக்குள் மொழிபெயர்க்கும் விதையை ஊன்றினார். சார் கொடுத்த நம்பிக்கையில் ஹயவதனாவை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தேன். ‘கிரிஷ் கர்னாட் நாடகங்களில் இருத்தலியல்’ என்று முனைவர் பட்டத்திற்கான ஆய்வுத் தலைப்பை முடிவுசெய்து விட்டேன். ஆனாலும் வேறு சில பல்கலைக்கழகங்களிலும் முயற்சி செய்தும், முனைவர் பட்ட ஆய்வில் சேர முடியவில்லை. பின்பு 14.11.2008-இல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், அ.ராமசாமி சாரிடமே முனைவர் பட்ட ஆய்விற்குப் பதிவுசெய்தேன்.

‘தலைப்பில் இந்திரா பார்த்தசாரதியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்றார். இ.பா.வைச் சேர்த்துக் கொள்வதில் ஆய்வாளராகிய எனக்கு விருப்பமில்லை. கிரிஷ் கர்னாட்டின் மீதிருந்த பற்று அப்படி. ஆனாலும் சார் நியாயமான காரணங்களை அறிவுறுத்தினார். ‘தமிழில் முனைவர் பட்ட ஆய்வு செய்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கிறோம். தமிழ் எழுத்தாளரை ஆய்வு செய்வதே நல்லது. அவரோடு பிறமொழி எழுத்தாளரை ஒப்பிட்டு ஆய்வு செய்யலாம்’ என்றார். கிரிஷ் கர்னாட் கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளர். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதக் கூடியவர். அப்படிப்பட்ட எழுத்தாளரை முதன்மையாகக் கொண்டு, தமிழில் முனைவர் பட்டம் ஆய்வு மேற்கொள்வது சரியாக இருக்காது என்று ஆய்வுத் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதில் சரியான வழிகாட்டியாக இருந்தார். ‘மொழிபெயர்ப்புகளின் வழியாகவே கிரிஷ் கர்னாட்டை நாம் பெறுகிறோம். அதனால் இணை-நெறியாளர் (Co-Guide) என்று ஆங்கிலப் பேராசிரியர் ஒருவரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் தமிழ் ஆய்வுலகம் இந்தத் தலைப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல் போக வாய்ப்புண்டு’ என்று நல்வழி காட்டினார். 

நெறியாளரின் வீட்டிற்குச் சென்று, ஆய்வுத் தலைப்பையும், ஆய்வு இயல்களையும், உட்தலைப்புகளையும் இறுதி செய்தேன். ‘கிரிஷ் கர்னாட், இ.பா. நாடகங்களில் இருத்தலியல் ஒப்பாய்வு’ என்று தலைப்பை எழுதியிருந்தேன். அதனை ‘இ.பா., கிரிஷ் கர்னாட்….’ என்று மாற்றினார். தமிழ் எழுத்தாளருக்கே முதன்மையளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஆய்வை 5 இயல்களாகப் பிரித்திருந்தேன். 4ஆவது இயலிலேயே ஆய்வு முடிந்து விட்டது (ஆய்வுத் தலைப்பின்படி) என்று சொல்லி, 5ஆவது இயலை முதல் இயலோடு சேர்த்து ஒன்றாக்கி, நெறியாள்கை செய்தார். இருவரது நாடகங்களுக்கான பொதுமூலம், சமூக வரலாற்றுப் பின்னணி, இருவரது படைப்பில் உள்ள இணைநிலைக் கதாபாத்திரங்கள், மரபை மீறுதல், மீட்டுருவாக்கம், இந்திய அரங்கு ஆகியனவற்றை முதல் இயலிலேயே விளக்கும்படி அறிவுறுத்தினார். அடிக்கருத்தியல் கோட்பாடு, தாக்கக் கோட்பாடு, இணைநிலை ஒப்பாய்வு ஆகியவற்றை விளக்கி, இருவரது நாடகங்களையும் இணைநிலை ஒப்பாய்வு முறையில் முதல் இயலை எழுதும்படி அறிவுறுத்தினார்.

நல்ல நெறியாளரிடம் சேர வேண்டும் என்ற கனவு நனவாகியிருந்தது. வில்லங்கமான பல நெறியாளர்களையும், ஆய்வாளர்கள் படும்பாட்டையும் அறிந்திருந்ததனால், நல்ல நெறியாளரிடம் சேர வேண்டுமே என்கிற பயம் இருந்தது. முனைவர் பட்ட ஆய்வுக்காக வேறு சில நெறியாளர்களை அணுகியபோது, யாரும் தலைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. சில நெறியாளர்கள் கிரிஷ் கர்னாட் பற்றி அறிந்திருக்கவில்லை. சிலருக்கு நாடகத்தில் ஆய்வு செய்ய விருப்பமில்லை. இன்னும் சிலருக்கு இருத்தலியல் தத்துவம் புரியவில்லை. ஆகையினால் தலைப்பை மாற்றிக் கொள்ளும்படி கூறினார்கள். ஒரு ஆய்வாளராக எனக்கு நெறியாளர் ‘கிரிஷ் கர்னாட்டை மாற்றாதவராக இருக்க வேண்டும். இருத்தலியலை ஒத்துக்கொள்ள வேண்டும். எனக்கு முழு சுதந்திரத்தை அளிக்க வேண்டும். சிறிதளவும் மனம் நோகச் செய்யாதிருக்க வேண்டும்’ என்ற எதிர்பார்ப்பு நெறியாளரிடம் இருந்தது. அது அத்தனையும் என்னுடைய நெறியாளர் அ.ராமசாமி சாரிடம் எனக்கு அமைந்தது. 

நானும் நெறியாளரைத் தொந்தரவு செய்வதில்லை. நெறியாளரும் எனக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. அ.ராமசாமி சார் மற்ற ஆசிரியர்களைப் போலல்லாமல், இலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்குபவர், கட்டுரைகள் எழுதக் கூடியவர் என்பதனால், சாரை அடிக்கடி தொந்தரவு செய்யக்கூடாது என்று எண்ணினேன். 6 மாதத்திற்கு ஒருமுறை அலைபேசியில் தொடர்பு கொள்வேன். படித்துக் கொண்டிருக்கிற நூல்களைச் சொல்லிவிட்டு, உடனேயே வைத்துவிடுவேன். அவரோடு பேச, பயம்; பதற்றம் எல்லாம் வந்துசேர்ந்து விடும். அதே பயம், பதற்றம் இப்போதும் இருக்கிறது. 
ஆய்வில் சேர்ந்த ஆர்வத்தில், கிரிஷ் கர்னாட்டின் மற்ற நாடகங்களை மொழிபெயர்க்க ஆரம்பித்திருந்தேன். யயாதி, பலி:காணிக்கை நாடகங்களை மொழிபெயர்த்தேன். 6 மாதம் கழித்து, சாரிடம் பேசியபொழுது, ‘மொழிபெயர்ப்பதை நிறுத்திவிட்டு, ஆய்வைத் தொடங்குங்கள்’ என்று வழிப்படுத்தினார். 

முதலில் 2ஆவது இயலை (இருத்தலியல்) எழுதினேன். இருத்தலியல் தத்துவம் இந்தியத் தத்துவத்திலும், இந்திய இலக்கியத்திலும், தமிழ் இலக்கியத்திலும் இடம் பெற்றிருக்கிற தன்மையை ஆராயும்படி அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, 3ஆவது இயலை (இந்தியத் தத்துவத்தில் இருத்தலியல்) எழுதினேன். 
இந்தியத் தத்துவத்தோடு இருத்தலியல் கருத்துக்கள் பொருந்துகின்றன என்று ஆய்வு முடிவை விளக்கினேன். துயரம், நிலையாமை, நான் யார்?, தேடல் ஆகிய தன்மைகள் இரு தத்துவப் போக்கிற்கும் பொதுவானவை. ஹைடெக்கரின் ‘இறை’ பற்றிய கருத்தும், இந்தியத் தத்துவத்தின் ‘இறை’ பற்றிய கருத்தும் ஒன்றுதான். பிரம்மம், பேரிறைமை, முழுமுதல்கருத்து, எல்லையற்ற பெருவெளி, காந்தப் பெருவெளி, சுத்தவெளி, வெட்டவெளி ஆகியன பற்றி இரு தத்துவங்களும் ஒரே மாதிரியான சிந்தனைப்போக்கைக் கொண்டுள்ளன. நீட்ஷேவின் மறுபிறப்புக் கொள்கை இந்தியத் தத்துவத்தில் கூறப்பட்டுள்ளதாகும். துயரம், நிலையாமை என்பனவற்றைப் பேசுகிற வகையில் பௌத்தமும் இருத்தலியலும் நெருங்கி வருகின்றன. 


நீட்ஷேவின் அதிமனிதன், சித்தர் தத்துவத்தின் தனிமனிதன் ஆகியனவும் ஒரே தன்மையைக் கொண்டுள்ளன. மேலும், ஓஷோவின் கிளர்ச்சியாளன், பெரியாரின் கலகக்காரன் ஆகியோரிடத்திலும் இருத்தலியல் மனிதனை இனம் காண முடியும். தமிழில் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’, என்பதும், ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்பதும் இருத்தலியல் கருத்துக்கள்தாம். துயரம், விரக்தி மனப்பான்மை, மரணம், தற்கொலை, லட்சியமற்ற தன்மை, அர்த்தமின்மை, தனிமை, பாலுணர்வு, தேடல் மனநிலை, மாற்றும் செயல் ஆகியன இருத்தலியல் கருப்பொருட்களாக விளக்கப்பட்டுள்ளன. 

சாரிடமிருந்து ஒரு அழைப்பு. அப்போது முனைவர் பட்ட முன் அளிப்பு (2011), (Pre-Presentation Ph.D.) உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று, பல்கலைக் கழகத்திலிருந்து அறிவிப்பு வந்திருக்கிறது என்று சொன்னார். கால அவகாசம் இல்லை. பல்கலைக்கழகத்தில் ரூ.15,000 கட்டணம் கட்ட வேண்டும். நான் பொள்ளாச்சியில் இருந்ததால், அ.ராமசாமி சாரே தன்னுடைய சொந்தப் பணத்தைக் கொடுத்து, ஆய்வாளர் ஹேமா அவர்களின் உதவியுடன் எனக்குரிய கட்டணத்தைக் கட்டினார். ‘நீங்கள் வரும்பொழுது, திருப்பிக் கொடுத்தால் போதும்’ என்று சொன்னார். 

ஆய்வாளர்கள் பணம் கொடுத்து ஆய்வேட்டை விலைக்கு வாங்குவதையும், நெறியாளர்கள் சொந்தச் செலவிற்காக, ஆய்வாளர்களிடம் பணம் கேட்பதையும், இதர சலுகைகளை எதிர்பார்ப்பதையும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், என்னுடைய நெறியாளர் எனக்குச் செய்த உதவியை மறக்க இயலாது. முனைவர் பட்ட முன் அளிப்பு (Pre-Presentation Ph.D.)-க்கான எல்லா ஏற்பாடுகளையும் அவரே செய்து முடித்தார். நான் பகுதிநேர ஆய்வாளராகவும், வெளியூரில் பணி செய்வதாலும், நேரடியாக, நிகழ்ச்சிக்கு மட்டுமே வருவேன். என் நெறியாளர் எனக்கு அவ்வளவு வசதிகளைச் செய்து கொடுத்தார்.

பிறகொருமுறை, சாரிடமிருந்து மற்றொரு அழைப்பு. கருத்தரங்குகளில் உரையாற்ற, சார் கோவை வருவதாகவும், மாலை கோவை ரெயில்வே ஸ்டேஷனில் சந்திப்பதாகவும் சொன்னார். அதற்குள் 4ஆவது இயலை எழுதி முடித்திருந்தேன். அதை எடுத்துக் கொண்டு, கோவை ரயில் நிலையத்திற்குச் சென்றேன். 1 மணி நேரம் முன்னதாகவே வந்த என் நெறியாளர், ரயில் நிலையத்தின் நடைமேடை பெஞ்சில் அமர்ந்தவாறே என் 4ஆவது இயலைத் திருத்தினார். நான் அவருக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன், அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும். எல்லோரும் பரபரப்பாகச் சுற்றிக் கொண்டிருக்க, அந்த ரயில் நிலையத்தில் நடைமேடையில், பெஞ்சில் என் நெறியாளர் ஆய்வேட்டை வாசித்துக் கொண்டிருந்தார். இப்படி ஒரு பெருந்தன்மையான நெறியாளர் இருக்க முடியுமா என்று மனம் மகிழ்ந்தேன். ரயில் வந்தும், ரயில் புறப்படும்வரை ஆய்வேட்டைத் தொடர்ந்தார். இ.பா.வையும், கிரிஷ் கர்னாட்டையும் ஒப்பிட்டு எழுதப்பட்டிருந்த இயல் அது. ‘கொஞ்சம் காரமாக இருக்கிறது. குறைத்துக் கொள்ளுங்கள். மற்றபடி சரி’ என்றார். அதாவது இ.பா.வை விட கிரிஷ் கர்னாட் சிறந்தவர் என்கிற ரீதியில் ஆய்வு மொழிநடை அமைந்திருந்தது. அவர் அறிவுறுத்தலின்படி, மொழிநடையில் இருபெரும் எழுத்தாளர்களுக்கும், சமநிலை கொண்டு வந்தேன்.

இ.பா., இருத்தலியல்வாதிகளின் பெயர்களையும், இருத்தலியல் புத்தகங்களையும் நாடகங்களில் வெளிப்படையாகப் பயன்படுத்தியுள்ளார். கிரிஷ் கர்னாட் அவ்வாறு வெளிப்படையாகப் பயன்படுத்துவதில்லை. கதாபாத்திரங்களிடத்தில் இருத்தலியல் மனநிலையை உருவாக்குவதில் இ.பா.வை விட, கிரிஷ் கர்னாட் பெருவெற்றி பெறுகிறார். இ.பா.வின் நாடகங்களை இருத்தலியல் வெற்றி, இருத்தலியல் முயற்சி என்றிரு வகையில் அடக்கலாம். கிரிஷ் கர்னாட்டின் நாடகங்கள் அனைத்துமே இருத்தலியல் வெற்றி என்ற வகையில் அடங்கியுள்ளது. 

இரு படைப்பாளர்களுமே தனிமை அவலம், விரக்தி, சலிப்பு, தேடல், தற்கொலை, மாற்றும் செயல், நிகழ்காலம் ஆகிய தன்மைகளைக் கொண்டு நாடகங்ளைப் படைத்துள்ளனர். இ.பா.வின் நாடகங்களைவிட, கிரிஷ் கர்னாட்டின் நாடகங்கள் ஈர்ப்புத் தன்மை அதிகம் நிரம்பியதாக உள்ளது என்று ஆய்வு முடிவை விளக்கினேன்.

இரண்டரை ஆண்டுகள் கடந்திருந்தன. அவரிடமிருந்து மற்றொரு அழைப்பு. அவர் வார்ஸாவுக்குச் செல்ல இருப்பதாகக் கூறினார். இணைநிலைக் கோட்பாடு, தாக்கக் கோட்பாடு பற்றி விளக்கியிருந்தார். விரைவாக முதல் இயலையும் முடிக்கும்படி கூறினார். இணைநிலைக் கோட்பாடு, தாக்கக் கோட்பாடு அடிப்படையில் முதல் இயலை எழுதி எடுத்துக்கொண்டு சென்றேன். 

துக்ளக் நாடகம் நேருவின் ஆட்சிமுறையைப் பிரதிபலித்தது போல, ஒளரங்கசீப் நாடகம் இந்திராகாந்தியின் ஆட்சிமுறையைப் பிரதிபலிக்கிறது. கிரிஷ் கர்னாட் பசவண்ணரை வைத்து நாடகம் எழுத, இ.பா, நந்தனாரையும், இராமானுஜரையும் வைத்து நாடகம் எழுதியுள்ளார். பசவண்ணர் அனைவரையும் ‘சரணர்களாக்க’ முயற்சித்ததுபோல, ராமாநுஜர் அனைவரையும் ‘வைணவர்களாக்க’ முயற்சிக்கிறார். பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கான பிறகு, இந்து-முஸ்லீம் ஒற்றுமையை நிலைநிறுத்த ‘ராமாநுஜர்’ நாடகம் எழுதப்பட்டுள்ளது. 

இரு நாடகாசிரியர்களும் மரபை மீறுதல் என்கிற வகையிலும் நாடகங்களை எழுதியுள்ளனர். குறிப்பாக இவர்களது பெண் கதாபாத்திரங்கள் மரபை மீறுகிற தன்மையைக் கொண்டுள்ளனன. இவர்களது நாடகங்கள் தொன்மம், இதிகாசம், புராணம், வரலாறு, நாட்டுப்புறம் ஆகிய தன்மைகளிலிருந்து மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவர்களது அனைத்து நாடகங்களும் ‘இந்திய அரங்கு’ என்கிற தன்மையில் எழுதப்பட்டுள்ளன. இ.பாவின் நாடகங்களில் கற்பனை வளம் சிறிதளவே பயன்படுத்தப்பட்டுள்ளது. கிரிஷ் கர்னாட்டின் நாடகங்களில் கற்பனை வளம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற முதல் இயலில் எழுதியிருந்தேன். 
 
பல்கலைக்கழகத்திலிருந்து விடுப்பு பெறுகின்ற கடைசி நாள் (3.10.2011), எனக்கு ஆய்வேட்டின் நெறியாளர் பக்கங்களில் கையெழுத்திட்டார். பைண்டிங் செய்யும்பொழுது, ஆய்வேட்டின் உள்ளே வைத்து பைண்டிங் செய்துவிடுங்கள் என்றார். ஆய்வேட்டைத் தயார் செய்துகொண்டு, நெறியாளரிடம் கடைசிக் கையெழுத்து வாங்க அலைகின்ற, உழல்கின்ற எத்தனையோ ஆய்வாளர்களைப் பணியாற்றும் கல்லூரிகளில் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
ஆய்வேட்டைச் சமர்ப்பிக்கும்பொழுது, வாய்மொழித் தேர்வு(Viva) நடைபெறும்பொழுது, ஒரு நெறியாளர் இருந்து செய்ய வேண்டிய அத்தனை ஏற்பாடுகளையும், வார்ஸாவிற்குப் புறப்படும் முன்னரே, மிகச் சரியாகத் திட்டமிட்டுச் செய்து முடித்தார். துறைத்தலைவராக இருந்த முனைவர் அழகேசன் சாருக்குக் கடிதமும், பல்கலைக்கழகத்திற்குக் கடிதமும் கொடுத்துவிட்டுச் சென்றார். சார் வார்ஸாவிற்குச் சென்ற இரண்டு மாதங்கள் கழித்து, (30.11.2011) ஆய்வேட்டைச் சமர்ப்பித்தேன். நெறியாளர் இல்லாமலேயே சமர்ப்பித்தேன். நெறியாளர் இல்லாமலேயே Viva -வும் நடந்தது. ஆனால், வார்ஸாவில் இருந்தபடியே அத்தனை பணிகளையும் மேற்பார்வை செய்தார். Viva நடக்கிற நாளில் (அக்.,2012), அலைபேசியில் பேசி, அறிவுரை கூறினார். புறநிலைத் தேர்வாளராக, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் ஜெயராமன் அவர்கள் வந்திருந்தார். முனைவர் பட்டம் பெற்றேன். 
அத்தனை நன்றிகளும் மதிப்புமிக்க என் நெறியாளருக்கே உரித்தானது. 

இருத்தலியல் தத்துவத்தைப் பற்றி விரிவாகப் பதிவு செய்த ஆய்வாகவும், கிரிஷ் கர்னாட்டைத் தமிழுலகிற்கு அறிமுகம் செய்த ஆய்வாகவும் இவ்வாய்வேடு கவனம் பெற்றது. ஆய்வேட்டை நூலாக்குங்கள் என்று நெறியாளர் அடிக்கடி வலியுறுத்திக் கொண்டேயிருந்தார். அதன்படி, 2017-இல் ஆய்வேடு ‘மேலும்’ பதிப்பகத்தின் வழியாக நூலாகவும் வெளியிடப்பட்டது.

ஆய்வாளர்களை அலையவிடும் காலத்தில்; ஆய்வாளர்களைப் புண்படப் பேசும் காலத்தில் அப்படியெதுவுமில்லாமல் அற்புதமான குணங்களைக் கொண்டமைந்தவர் என் நெறியாளர். ஆய்வாளரையும் மரியாதையாக நடத்தும் பண்புள்ளவர். ஆய்வாளரைச் சரியாக வழிநடத்தக்கூடியவர். தலைப்பிலிருந்து, இயல்களிலிருந்து, கருத்துக்களைச் சீரமைத்து, மொழிநடையைக் கவனித்து, ஆய்வின் போக்கை முறைப்படுத்தி, ஆய்வைப் பற்றி மட்டுமே பேசி நெறியாள்கை செய்தவர் என் நெறியாளர். ஆய்வாளரிடமிருந்து சிறு அன்பளிப்பையும் எதிர்பார்க்காதவர் என் அன்பு நெறியாளர்!

ஆய்வாளருக்குத் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதிலும், தலைப்பை இறுதி செய்வதிலும் சரியான வழிகாட்டியாக அமைந்தவர். குறிப்பிட்ட காலத்திற்குள் ஆய்வை முடிக்கச் செய்வதில் நெறியாளராகச் சிறப்பாகச் செயல்பட்டவர். காலம் தாழ்த்துகிற ஆய்வாளருக்கு, தக்க சமயத்தில் அறிவுறுத்தி, அவர்கள் ஆய்வில் கவனம் செலுத்த உறுதுணையாக இருந்தவர். 

ஜிதேந்திரன், அரசு கல்லூரி, மூணார், கேரளா

===================================
ஆய்வாளரை உருவாக்குவது எப்படி?


என் எண்ணம் எதனால் ஈடேறியது?. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்குள் கால் பதித்த அன்று திறமைசாலியாக உருவாகி வெளிவர வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்தேனோ அதே இலக்கை 2013 முதல் 2018குள் அதை அடைந்து முடித்து வெளியேறி விட்டேன். இளங்கலை, முதுகலைப் பட்டங்களைக் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் முடித்தவள் நான். முதுநிலைக் கல்லூரிக் கால வாழ்க்கையில் எனது பேராசிரியர்கள் சொல்லும் ஒரு வாசகம், ‘குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டாதே!’ என்பதுதான். அந்த வாக்கைப் மெய்யாக்கிடத்தான் நான் பல்கலைக்கழகத்திற்குள் அடியெடுத்து வைத்தேன்.

2013 மே மாதம் என் பெற்றோரின் எதிர்ப்பையும், கல்லூரிப் பேராசிரியர்களின் விருப்பத்தையும் மீறிப் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் படிப்பிற்கு விண்ணப்பம் செய்தேன். வேறு எந்தக் கல்லூரியிலும் நான் விண்ணப்பிக்க மாட்டேன் எனப் பிடிவாதமாய் இருந்து விட்டேன். என்னையெல்லாம் தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை என்றாலும் நிச்சயம் நமக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தேன். ஆகாஷ் அகாதெமியில் பயிற்சி வகுப்பு முடித்து பேருந்தில் செல்லும்போது, வனத்துரை என்ற அலுவலர் அலைபேசியில் அழைத்து, ‘நீங்கள் எம்.ஃபில் படிப்பதற்கு தகுதி பெற்றிருக்கிறீர்கள்’ என்று சொன்ன தருணம் இன்றும் என் மனதில் பசுமையாய் நிறைந்திருக்கிறது.

என்னுடைய அசல் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு பல்கலைக்கழகத்திற்கு வந்தேன். வந்தவுடன் அறிவிப்பு பலகையில், ‘எம்ஃபில் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் தேர்வு பெற்ற முதல் பெயரில், மு.ரா.மஜிதா பர்வின்’ என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தது. அந்த தருணத்தின் மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியாது. நுழைவுத் தேர்வு எழுத வந்தபோது, பிருந்தா, சகுந்தலா என்ற இருவர் எனக்கு தோழிகளாகக் கிடைத்தார்கள். ’நுழைவுத் தேர்வெல்லாம் பெரிய விஷயமா? சும்மா கதையடிச்சு வச்சேன்’ என்று அவர்கள் இலகுவாகச் சொன்ன வார்த்தையில் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனது நினைவுக்கு வந்தது.

எம்ஃபில் சேர்க்கை அன்று தமிழ்த்துறைத் தலைவர் அறையில் பேரா.அ.ராமசாமி அவர்களை முதன் முதலில் பார்த்தேன். பார்த்த உடன் பயமாக இருந்தது. என் தாய்மாமாவைப் போலவே இருந்தார். வழுக்கைத் தலையைப் பார்க்கும்போதெல்லாம் சிந்தனையில் மாமாவின் முகமும் வந்து போகும். வகுப்பு ஆரம்பித்த முதல் நாள் அறிமுக விழா நடத்தினார்கள். பொதுவான விதிமுறைகள் சொல்லப்பட்டது. மாணவிகளும் தங்கள் கருத்தை பதிவு செய்தனர். அப்போது நானும் பேசினேன். ‘குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டாதே!’ என்று எனது பேராசிரியர்கள் சொல்வார்கள். நான் குண்டுச் சட்டியைத் தாண்டி நிறைய கற்றுக்கொள்வதற்காக வந்திருக்கிறேன் என்று கூறினேன். அங்கிருந்த எல்லோரும் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்கள் பேராசிரியர்கள் உட்பட.

பத்துநாட்கள் கடந்திருக்கும் பேரா.அ.ராமசாமி அவர்கள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, உனக்கு நான் பி.எச்.டி சேர வாய்ப்புத் தருகிறேன். எம்ஃபில் –யை பாதியில் நிறுத்தி விட்டுக் கூட பி.எச்.டியில் சேரலாம். இல்லையென்றால் எம்ஃபில் முடித்த பின்பு என்னிடமே பி.எச்.டியில் சேரலாம் என்று கூறினார். அது என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. என்னிடம் என்ன திறமையைக் கண்டார்? ஏன் அவ்வாறு கூறினார்? உண்மையில் நாம் அறிவாளிதானா? என்ற பல கேள்விகளை எழுப்பியது. அன்று சொன்ன வார்த்தை அசரீரி போல் அப்படியே நடந்தது.

தேடல்… தேடல்… தேடல்… என்பது தான் அவர் எனக்குக் கற்றுத் தந்த பாடம். “அறிவுத் தேடல் வாழ்க்கையை வளப்படுத்தும்” என்ற வரியின் கூற்றிற்கேற்ப, நான் முதன் முதலாக எழுதிய தேசியத் தகுத்தேர்வில்( NET )2013-டிசம்பரில் - தமிழ்த்துறையில் தேர்ச்சி பெற்ற ஒரே நபர் நான் மட்டும்தான். பயிற்சி வகுப்பு நடத்தும்போது நடத்தப்பட்ட தேர்வில் ஆங்கிலத்தில் நான் குறைவான மதிப்பெண் பெற்றதால் பேரா. அ.ராமசாமி அவர்கள் நான் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம்தான் என்று கூறினார். அதைப் பொய்யாக்கி வெற்றி பெற வேண்டும் என உழைத்தேன். வெற்றி அடைந்தேன்.

வழிகாட்டுதல் பலவிதமாக நிகழலாம். கை பிடித்து நீருக்குள் அழைத்துச் செல்வது. கைகளின் மேல் படுக்க வைத்து நீந்தச் சொல்வது. தானே நீந்தக் கற்றுக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பது. இந்த மூன்று வகையில் அவர் என்னை வழிகாட்டியிருக்கிறார். எனக்கு நாவல்கள் மீது பெரிதும் ஆர்வமுண்டு. என்னுடைய எம்.ஏ ஆய்வேடு நாவல் இலக்கியத்தில்தான் செய்திருந்தேன். எம்ஃபில் ஆய்விற்கு பேரா.அ.ராமசாமி அவர்களுக்கு நான், ஜாய்ஸ்,சுப்புலெட்சுமி ஆய்வாளர்களாக இருந்தோம். இமையத்தின் நாவல்கள் குறித்து ஜாய்ஸும், இமையத்தின் சிறுகதைகள் குறித்து சுப்புலெட்சுமிக்கும் தலைப்பு கொடுக்கப்பட்டது. எனக்கு ‘சங்கப் பெண்கவி ஔவையின் தனித் தன்மைகள்’ என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது. எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், சாரின் விருப்பத்தைச் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று கஷ்டப்பட்டுச் சிறப்பாக முடித்தேன்.

2013 ஆகஸ்ட் முதம் 2014 செப்டம்பர் மாதம் முடிந்தது. அதன் பின்பு பிஎச்.டி- க்கு நுழைவுத் தேர்வு எழுதினேன். அதில் நான் தேர்வாகவில்லை. எனது தோழி சகுந்தலா தேர்வாகிப் பேரா.ராமசாமியிடம் முனைவர் பட்ட ஆய்வாளராக சேர்ந்தாள். என்னுடைய குடும்பச் சூழல் அப்போது சரியில்லை. எனது பாட்டியின் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இரண்டு மாதமாக நோயோடு போராடி ஜனவரி மாதம் இறந்து விட்டார். அதனால் 2015 பிப்ரவரி மாதம் முடியும் வரை நான் பேராசிரியரைச் சந்திக்கச் செல்லவில்லை. மார்ச் மாதம் அவரைத் தொடர்பு கொண்டு பேசினேன். நேரில் வருமாறு கூறினார்.

என்ன தலைப்பில் ஆய்வினை மேற்கொள்வது என்று பலவாறு சிந்தித்தோம். அப்போது, அவர் சொன்னார், ஒரு தலைப்பு என்பது ஆய்வாளருக்கு நன்கு தெரிந்த தளமாக இருக்க வேண்டும். அல்லது நெறியாளருக்கு நன்கு தெரிந்த தளமாக இருக்க வேண்டும். அல்லது ஆய்வாளரும் நெறியாளரும் இணைந்து உழைப்பை செலுத்தி கண்டறியக்கூடிய தளமாக இருக்க வேண்டும். இந்த மூன்று வகையினில்தான் ஒருவர் தலைப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தத் தலைப்பானது புதுமையானதாக இதுவரை யாரும் செய்யாத ஆய்வாக இருக்க வேண்டும். அல்லது ஒருவரால் செய்யப்பட்ட ஆய்வின் தொடர்ச்சியாக இருக்கலாம். இம்முறை அறிவியலுக்கு மிகவும் பொருந்தும். அல்லது மிகவும் எளிமையான ஓர் தலைப்பில் ஆய்வினை மேற்கொள்ளலாம் என்று கூறினார்.

அவருடைய கருத்துகள் என்னை ஆழமாக சிந்திக்கச் செய்தது. என் மனம் முழுவதும் என்னுடைய ஆய்வு புதுமையாகவும் ஏதேனும் ஒன்றை கண்டறிந்து ஆய்வின் வழியாக நிரூபித்துகாட்ட வேண்டும் என்ற அவா என்னுள் எழுந்தது. நெறியாளரின் வழிகாட்டுதலில், “தொல்காப்பியப் பொருள் கோட்பாடும் சிலப்பதிகாரமும்” என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்து ஆய்வு முன் வரைவுத் திட்டம் தயார் செய்து விண்ணப்பித்தேன். 8.5.2015 அன்று 5000 ரூபாய் கட்டணம் செலுத்தி பி.எச்.டியில் சேர்ந்தேன்.

எனக்கு எப்போதுமே தடையாக இருந்தது பணம் மட்டும்தான். ஏழ்மையான நிலையிலும் எனது பெற்றோர் எனது படிப்பை நிறுத்தியதில்லை. பெண் பிள்ளையை இவ்வளவு தூரம் படிக்க வைக்க வேண்டாம் என்று நினைத்ததில்லை. ரேஷன் கடை அரிசியை சமைத்துச் சாப்பிட்டுச் சேமித்த பணத்தில்தான் நான் கல்லூரி கற்க முடிந்தது. எம்ஃபில் படிப்பில் சேர்வதற்கு கழுத்தில் கிடந்த மாலையை அடகு வைத்து 12000 ரூபாய் கட்டணம் செலுத்திப் படித்தேன். ஒவ்வொரு முறையும் பணம் தேவையின் யாரிடமாவது கடன் வாங்கி கட்டியதுண்டு. சில வேளைகளில் சாரிடமும் பணம் கடன் வாங்கி விடுதிக் கட்டணம் கல்லூரிக் கட்டணம் செலுத்தியிருக்கிறேன்.

என் ஆய்வு தொடர்பான புத்தகங்களை நூலகங்களில் தேடினேன். சிலப்பதிகாரம் குறித்து பல அறிஞர்களிடம் பேசினேன். குறிப்பாக துரை.சீனிச்சாமி அவர்களிடம் என் ஆய்வுப் போக்கு குறித்துப் பேசினேன். சிலப்பதிகாரம் ஓர் காப்பியம் அல்ல. அது ஒரு தொடர்நிலைச் செய்யுள்தான். பின்னாளில் உருவாக்கப்பட்டதுதான் காப்பியம் என்னும் கோட்பாடு. எனவே காப்பியக் கோட்பாட்டிற்குள் சிலப்பதிகாரம் அடங்காது என்ற உண்மையை ஆய்வேட்டின் வழியாக நிரூபிக்க உள்ளேன் என்று கூறினேன். அதற்கு அவர் நிதானமாக, ’உன்னுடைய ஆர்வமும் ஆவலும் கண்டு மகிழ்கிறேன். நீ எடுத்துக்கொண்ட தலைப்பு மிகவும் கடினமானது. சாதாரணமாக இவ்வாய்வினை முடித்துவிட முடியாது. உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கொள்கையை இல்லையென நீங்கள் மறுப்பீர்களானால் அனைவரின் கருத்தையும் ஆராய்ந்து ஒப்பீடு செய்து, அதற்கான காரணத்தை சான்றுடன் நிரூபணம் செய்ய வேண்டும் அது அவ்வளவு எளிதான காரியமன்று’ என்று சொன்னார்.

பின்னர் க.பஞ்சாங்கம், ச.வே.சுப்பிரமணியன் போன்றோரை சந்தித்துப் பேசினேன். தொடர்ந்து என்னுடைய ஆய்வுத் தலைப்பின் மீது குழப்பமும் பயமும் அதிகமானது. ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டேனோ என்று பயந்தேன். எனக்கு இலக்கணத்தின் மீது பேரார்வம் இருந்தது அதனால் தான் இந்தத் தலைப்பிற்கு சம்மதம் சொன்னேன்.

சிந்தித்துக்கொண்டே இருந்தேன். தெளிவு பிறக்கவில்லை. நெறியாளரிடம் என் மன ஓட்டத்தை எடுத்துரைத்தேன். அவர் ‘நீ ரொம்ப குழம்பிப் போய் இருக்கிறாய்’ பயப்படத் தேவையில்லை என்று ஆறுதல் வார்த்தைகள் கூறியும் என் மனம் ஒப்புக் கொள்ளவில்லை. நான் வேறு தலைப்பில் பண்ணலாமா? என்று ஆலோசனை செய்தேன். அப்போதுதான் இந்தத் தலைப்பு சார் மனதில் உதித்தது. திருநெல்வேலி என்ற நிலப்பரப்பைப் பேசும் நாவல்கள் பல உள்ளன. மேலைநாட்டுக் கோட்பாடுகளில் ஒன்றான பண்பாட்டு நிலவியலும் இலக்கியமும் (Literature and Cultural Geographyl) என்னும் கோட்பாடு அங்கு பெரிய அளவில் ஆராய்ச்சி முறையாகக் கையாளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இம்முறையினை யாரும் இதுவரை கையாளவில்லை. நீ வேண்டுமானால் இம்முறையைப் பின்பற்றி ஆய்வு செய். புதுமையாக இருக்கும். நீ ஒரு முன்னோடியாகவும் திகழ்வாய் என்று பேரா.அ.ராமசாமி சொன்னார். அந்த தலைப்பு எனக்கு மிகவும் பிடித்து விட்டதால் நான் அதற்கான பணியில் இறங்கினேன். 

நிலவியல் என்றால் என்ன? பண்பாடு என்றால் என்ன? என்பதை சொல்லிக்கொடுத்தார். அதற்கடுத்ததாக நாவல் இலக்கியம் தோன்றிய காலகட்டத்திலிருந்து 2015 வரை வெளிவந்த நாவல்களின் பட்டியலை தயார் செய்தோம். அந்த நாவல்களின் கதைக்களம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்டு வருகிறதா என்பதைக் கண்டறிந்து நாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. குறிப்பாக நிலத்தை மையமிட்டு பேசும் நாவல்களாக இருபத்தியிரண்டு நாவல்கள் தேர்வு செய்யப்பட்டது. என்னுடைய ஆய்வின் தலைப்பு “நிலவியல் பின்னணியில் தமிழ் நாவல்கள் (திருநெல்வேலி மாவட்டம்)” என்பது.

நாவல்களைத் தேடிப் போகையில்தான் எழுத்தாளர் கழனியூரன், ஏக்நாத், காவ்யா சண்முக சுந்தரம் போன்றோரின் அறிமுகம் கிடைத்தது. இவர்களைத் தொடர்பு கொள்ளச் சொல்லி என்னைப் பேச வைத்து என்னுடைய தொடர்பு வட்டத்தை விசாலமாக்கியவர் எனது நெறியாளர் மட்டுமே.

ஒரு நாவலை எப்படிப் படிக்க வேண்டும்? காலம், இடம், கதைக்களம், மொழி இவற்றை எப்படிப் பார்க்க வேண்டும்? என்பதைக் கற்றுக் கொடுத்தவர் அவர்தான். தேவைக்கு அதிகமாக எதையும் பேசமாட்டார். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் (நன்னூல்) என்ற பாணியைக் கையாள்பவர். நிதானத்தை அவரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். எதற்காகவும் யாருக்காகவும் தன் இயல்பிலிருந்து மாறமாட்டார். இருந்த இடத்திலிருந்தே எங்களை இயக்கக் கூடிய ஆற்றல் கொண்டவர். அறிவுரையோ ஆலோசனையோ தன்னை நாடி வந்தால் செய்து கொடுப்பார். மாணவர்களுக்குப் பொறுப்புகளைக் கொடுத்து வேலை வாங்கும் திறன் பெற்றவர்.

கலை இலக்கியம் இரண்டிலும் தொடர்ந்து வாசித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டும் இருப்பவர். ஓய்வு பெறும் நிலையிலும் இயங்கிக் கொண்டேயிருப்பவர். தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருப்பவர். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடந்து செல்லுதல், பேருந்து, ரயில், விமானம் என ஏதோவொன்றில் பயணம் செய்து கொண்டிருப்பது அவருக்குப் பிடிக்கும். இதை அவர் பொழுது போக்கிற்காகவோ, கேளிக்கைகளுக்காகவோ செய்வதில்லை. இந்தச் சுற்றுப் பயணத்தின் மூலம் கலாச்சாரப் பண்பாட்டு மாற்றங்களையும் பழக்க வழக்கங்களையும், சமூக மாற்றத்தையும் கண்டறிவதே அதன் அடிப்படையாகும். மேலைநாட்டுக் கலாச்சாரத்தின் மீது பெரிதும் விருப்பம் கொண்டவர். ஆனால் தமிழர்களின் மரபை மீறி இயங்கியது கிடையாது. மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பார். வகுப்பறையில் மாணவர்கள் பாலின வேறுபாடு குறித்து பேசுவார். மேலை நாடுகளில் அதற்கான -பாலியல் கல்விப் பாடத்திட்டம் அமைத்து வகுப்பு நடைபெறுகிறது என்றும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அக்கல்வி முறை நடைமுறையில் இல்லை என்றும் கூறுவார். ஆனால் கோவில்களில் அத்தகைய கல்வி முன்னோர்களால் போதிக்கப் பட்டிருக்கிறது. அதற்கான சான்றுதான் கோவில்களில் காணப்படும் சிற்பங்கள் ஓவியங்கள் என்று சொல்வார். அந்த உரையாடலும் விவாதமும்தான் என்னை கூச்சத்திலிருந்து விடுபடச் செய்தது. எந்த வார்த்தையையும் கூச்சமின்றி எந்த சொல்லையும் வெட்கமின்றி எந்த ஆணையும் நேருக்கு நேர் நின்று பார்த்துப் பேசும் தைரியம் எனக்கு வந்தது.

பெரும்பாலும் அவருடைய பேச்சு நம் சிந்தனையைத் தூண்டும் வகையில் தான் எப்போதும் அமைந்திருக்கும். ஆய்வு என்றால் என்ன? ஒரு ஆய்விற்கு தலைப்பு எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும்? ஆய்விற்கு அடிப்படையானவை எவை? இயல்கள் பகுக்கும் முறை, கருதுகோள், முன் ஆய்வு மதிப்பீடு என ஒவ்வொன்றையும் விளக்குவார். அவரின் வழிகாட்டுதலில் இன்று நான் சிறந்த முறையில் கற்றுக் கொடுக்கிறேன் எனது மாணவர்களுக்கு. என்னிடம் பல ஆசிரியர்கள் ஆய்வு முறையியலை கேட்டுக் கற்றுக்கொண்ட பின்னர் என்னை மிகவும் பாராட்டியுள்ளனர். அந்தப் பெருமை எனது ஆசானையே சாரும்.

‘ஆய்வேடு’ உருவாவது என்பது ஒரு குழந்தையை பெற்றெடுப்பதற்குச் சமம். என்னுடைய ஆய்வேட்டைப் பொருத்தவரையில், நெறியாளர் ஆய்வேட்டின் அமைப்பை வடிவமைத்துக் கொடுத்தது மட்டும்தான் அவருடைய பணியாக இருந்தது. மற்ற பேராசிரியர்களைப் போல ஆய்வேடு எழுதிக் கொடுப்பதோ வேறு உதவிகள் செய்வதோ இல்லை. ஆய்வாளரை முழுமையாக வேலை வாங்குவார். படித்துவிட்டு வா… நீ படித்த நாவலில் இருக்கும் சிறப்பு என்ன? குறைபாடு என்ன? என்பதை சொல் என்று கூறுவார். இப்படி ஒரு நாவலை எவ்வாறு விமர்சனம் செய்வது என்பதையும் கற்றுக்கொடுத்ததோடு அதை ஆய்வு நிலையில் எப்படி எழுத வேண்டும் என்றும் சொல்லுவார். என்னைப் பொறுத்தவரை எனது நெறியாளரை சிரமப்படுத்தாமல் என்னுடைய ஆய்வுப் பணியை முடித்திருக்கிறேன் என்பதுதான் எனக்குப் பெருமை. அதுதான் கற்றுக் கொடுத்த எனது ஆசானுக்கும் பெருமை.

அவரிடம் ஒரு பழக்கம் உண்டு. கேன்டீனுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று தேநீர் வாங்கிக் கொடுப்பது. சமூக வலைத்தளமான முகநூலில்(facebook) நான் இணைவதற்குக் காரணமும் அவர்தான். ‘என்னப்பா.. நீங்க ஊடகத்தை பயன்படுத்திக்கொள்ளவே மாட்டேங்கிறீங்க. பயன்படுத்துங்கப்பா… அப்போதான் நல்லது எது கெட்டது எது என்று தெரியும்’ என்பார். அவரின் உந்துதலால் 2012 டிசம்பர் மாதம் முகநூல் கணக்குத் துவங்கி இன்றுவரை மிகச் சரியாக அந்தக் கணக்கை பயன்படுத்தி வருகிறேன். எனக்கு கணினியில் தமிழில் தட்டச்சு செய்யும் முறையைக் கற்றுக் கொடுத்ததும் அவர்தான். அதன் விளைவாக எனது எம்ஃபில் மற்றும் பி.எச்.டி ஆய்வேட்டையும், ஆய்வுக் கட்டுரைகளையும் நானே தட்டச்சு செய்தேன். ஒரு ஆசிரியர் எல்லா சூழ்நிலையிலும் மாணவர்களுக்கு ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

என்னுடைய செயல்பாடுகளில், வகுப்பு எடுப்பது, மாணவர்களுக்கு வழிகாட்டும் முறை, ஏதேனும் ஒன்றை எடுத்துரைக்கும் பாணி என்பதோடு எதற்காகவும் யாருக்காகவும் சமரசம் செய்து கொள்ளாமல் உண்மையை மட்டுமே பேசும் பண்பு என அனைத்திலும் அவரின் தாக்கம் இருக்கிறது. புதிது புதிதாக மாணவர்களுக்கு தகவல்களைக் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்பார். மாணவர்களுக்கு புத்தகங்களைக் கொடுத்து வாசிக்கச் சொல்வார். அந்த புத்தகம் குறித்து வகுப்பறையில் பேசவும் சொல்வார். பலருக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். எழுத்தாளர்களின் பெயர்கள் அவர்கள் எழுதிய நூல்களையாவது நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பார்.

இன்றையச் சூழலில் ஆய்வு என்பது ஆய்வாளரால் எழுதப்படுவதில்லை. விலை கொடுத்து வாங்கப்படுகிறது என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. ஆய்வின் தரமும் வெகுவாக குறைந்துவிட்டது. ‘நான் பி.எச்.டி வாங்கிட்டேன்’ என்ற வாக்கியத்தை பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். இந்தச் சூழலில் ஆய்வாளரை வேலை வாங்கி ஆய்வு முறையியல்படி எழுத வைப்பது என்பது சவாலான காரியம். அந்த சவாலான காரியத்தை தன்னுடைய பணிக் காலத்தில் செய்து காட்டியவர் பேராசிரியர்.அ.ராமசாமி.

2018 ஏப்ரல்-30 அன்று எனதுஆய்வேட்டை சமர்ப்பித்தேன். டிசம்பர் -7 இல் எனது ஆய்வேட்டின் மீதான வாய்மொழித்தேர்வு (VIVA) நடைபெற்றது. புறத்தேர்வாளராக பேரா.ஆர்.ஜெயராமன் அவர்கள் வந்திருந்தார்கள். என்னுடைய ஆய்வேட்டின் சுருக்கத்தை சொல்லி முடித்து அமர்ந்த பின்பு, எனது ஆய்வேட்டின் மீதான அவருடைய கருத்தை முன் வைத்தார். ‘ஆய்வாளர் மு.ரா.மஜிதா பர்வின் அவர்களின் ஆய்வேடு மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது. அதற்காக அவரின் உழைப்பும் பிரயத்தனமும் தெரிகிறது. 1898 முதல் 2016 வரை திருநெல்வேலியின் நிலப்பரப்பை, பண்பாட்டை மொழியை காலச்சூழலை மிகத் தெளிவாக தனது ஆய்வேட்டின் வழியாக சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு இயல்களின் தலைப்புகள் மட்டுமே தனித்த ஆய்வாக செய்யக் கூடிய அளவில் இருந்தது. இந்த ஆய்வேட்டின் அடிப்படையில் அவர், இஸ்லாமிய இலக்கிய வரலாறு, திருநெல்வேலி வட்டார வரலாறு என பல நூல்களை எழுத முடியும். அதற்கான வழிகளும் தகுதியும் அவரிடம் இருக்கிறது’ என்று கூறினார். இத்துனை பெரிய வார்த்தைகளை ஆசீர்வாதத்தை நான் பெறுவதற்குக் காரணம் என்னை நெறிப்படுத்தி வழிகாட்டி சரியான பாதையில் அழைத்துச் சென்றதுதான்.

கல்வி காரையில கற்பவர் நாள் சில;

மெல்ல நினைக்கின் பிணி பல; தெள்ளிதின்

ஆராய்ந்த அமைவுடைய கற்பவே நீரொழிய

பாலுண் குருகின் தெரிந்து. (நாலடியார்-1)

கல்வி குறித்தான நாலடியாரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப என்னுடைய கல்விமுறையை நான் வடிவமைத்திருக்கிறேன். நல்ல நல்ல நூற்களை வாசித்துக் கொண்டும் கற்றுக் கொண்டும் இருக்கிறேன். இன்னும் நிறைய இலக்குகளை வைத்திருக்கிறேன். எனது பேராசிரியரைப் போல் நானும் இலக்கியவாதியாக, விமர்சகராக பேச்சாளராக, எழுத்தாளராக உருவாக வேண்டும் என்பதே. அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை ஈன்றெடுத்து வளர்த்தெடுத்த தாய் தந்தையருக்குப் பின் கல்வியாளராக என்னை உருவாக்கி வளர்த்தெடுத்தது எனது ஆசான், நெறியாளர், வழிகாட்டி, கல்வித் தந்தை பேரா.அ.ராமசாமி அவர்கள் 14.2.1997-30.6.2019 வரை 22 ஆண்டுகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார். அவருடைய கடைசிக் காலத்தில் மாணவியாக, ஆய்வாளராக நான் இருந்ததில் அகம் நெகிழ்ந்த மகிழ்ச்சி. இலக்கிய உலகில் கலை இலக்கிய விமர்சகராக அடையாளப்படுத்தப்படுபவர். ஆணுக்கு நிகராக பெண்களை நடத்துபவர். தேடல் தான் அவரின் பலம். சிந்தனைகளைத் தூண்டிவிட்டுக் கொண்டேயிருப்பவர். ‘ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்பனும் தேக்கு விற்பான்’ என்ற பழமொழிக்கு ஏற்ப மாணவர்களை ஊக்குவித்துக் கொண்டேயிருப்பவர். இனியும் அவரின் கல்விப்பணி தொடர வாழ்த்துகள்…

எனது ஆய்வுப் பயணம்

முனைவர் மு.ரா.மஜிதா பர்வின்

தமிழ்த்துறை, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி,

பாளையங்கோட்டை

============================================================

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்