ஆசிரியரும் மாணவர்களும்
என் குருவும் நானும்- நீண்ட நாள் மாணவி
சாராள் தக்கர் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் படித்த நான், 2001 ஜூன் மாதம் நான் முதுநிலை தமிழ் சேருவதற்காக என் தந்தையுடன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சென்றேன்.. சான்றிதழ்களை நகல் எடுக்க அந்த செராக்ஸ் கடைக்கு முன்னால் காத்திருந்தேன். அதன் பக்கத்தில் தான் தமிழ்த்துறை அலுவலகம்.
அன்று அட்மிஷன் போடத் துறைத்தலைவர் வரவில்லையாம் அதனால் நான்தான் அட்மிஷன் போட போகிறேன் என்றார். வகுப்பு தொடங்கியாச்சு உங்களோட கோட்டா மட்டும் இருந்தது. அதான் நீங்க வருவீங்களானு போன்பண்ணி கேட்டோம் என்றார். சிரித்துக் கொண்டே இங்கே ஹாஸ்டல் இருக்கா? என்று என் அப்பா கேட்டார், இல்லை நீங்கள் வீட்டில் இருந்து அனுப்பி விடுங்கள் என்றார்.அவர், “அம்மன் பட வில்லன் ராமிரெட்டியை” ஞாபகப்படுத்தும் தோற்றத்துடன் இருந்தார். எனக்கு சற்றுப் பயமாக இருந்தது. அவர்தான் என் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடிய என் “குரு” என்பது அப்போது எனக்கு தெரியாது.
காலையில் எழு மணிக்கு பஸ் பிடிச்சு பல்கலைக்கழகம் வர பத்து மணியாகி விட்டது. என் குருவின் முதல் வகுப்பு மாணவர்கள் வரவை எதிர்பார்த்து வகுப்பறையில் காத்துக் கொண்டிருக்கும் ஆசான் இவர். கையில் சாக்பீஸூடன் உட்கார்ந்திருக்கும் இவர் நாற்காலியின் வலது பக்கத்தில் இருக்கும் அந்த சதுர வடிவம் கொண்ட கட்டையில் எதையாவது எழுதிக்கொண்டிருப்பார் அல்லது படம் வரைந்து கொண்டிருப்பார்.
இக்கால இலக்கியம்தான் அவர் முதல் வகுப்பு அதில் சிறுகதைப் பற்றி பாடம் நடத்தினார். இவர் சொல்லிக் கொடுத்த பாடமுறை புதிதாக இருந்தது. அதுவரை அப்படியொருவரும் நடத்தியதில்லை. ஒரு மணிநேரம் போனதே தெரியவில்லை. வகுப்பின் இறுதியில் எல்லா மாணவர்களின் கையிலும் ஒரு சதுரவடிவ அட்டையை கொடுத்து கதையை எப்படி பிரித்து எழுத வேண்டும் என்றார். முதலில் தருபவர்களுக்கு முதல் மதிப்பெண் என்றார். குறிப்பிட்ட தேதிக்குள் கொடுத்து விடவேண்டும் எனக் கூறினார்.
அந்த முதல் மாணவி நானாகத் தான் இருக்கவேண்டும் என எண்ணினேன். செயல்பட்டேன். அவர் கொடுத்த வார்த்தையை தவறவில்லை. நாள்கள் செல்ல செல்ல என் குரு மனதில் அடையாளம் கொள்ளும் மாணவியாக நான் உயர்ந்தேன். அவருடைய எல்லாத் தேர்வுகளிலும் நானே முதல் மதிப்பெண். இன்றும் எனக்கு மறக்க முடியாது. எண்பத்தி எட்டு மதிப்பெண் எடுத்த இக்கால இலக்கியத் தாளை, “கல்லாக இருந்த என்னை கல்வி என்ற உளியால் முனைவர் வ.மாலிக்” என்ற சிற்பத்தை செதுக்கிய என் குரு என் குடும்ப வாழ்வில் பிரிக்க முடியாது தலைமை இடத்தை வகித்தார்.
ஒரு நாள் “அம்மா உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்களா” என்று கேட்டார். பல்கலைக்கழகத்தில் நிறையப் பேர் உன்னை பொண்ணு கேட்கிறார்கள் என்று சிரித்துக் கொண்டே கூறினார். “போங்க சார் நானே போராடி படிக்கிறேன். என்னைப் படிக்க வைக்க கூடிய மாப்பிள்ளையாக இருந்தால் கல்யாணம் செய்கிறேன்” என்றேன். இது எப்போதோ சொன்னது. இதை நினைவில் வைத்துக் கொண்டே என் குரு. நான் கூறியது போலவே என்னைத் தொடர்ந்து படிக்க வைக்கும் மாப்பிள்ளையை கொண்டு வந்தார்.
முதுகலை இரண்டாம் ஆண்டு இறுதியில் மார்ச் 30.3.2003 எனக்கு திருமணம் நடந்தது. ஒருவருடத்தில் குழந்தையும் பெற்று விட்டேன்.
மெல்ல, மெல்ல படிப்பை மறக்கத் தொடங்கினேன். எனது ஜூனியர் நிஷா – ஹைருன்னிஷா -திருமணத்தில் குருவிடம் நீண்ட நேரம் பேச வாய்ப்பு கிடைத்தது. கல்வி சம்பந்தமான நிறைய விசயங்களை என் கணவரிடம் பேசிக் கொண்டேயிருந்த என் குரு. “ஆய்வியல் நிறைஞர் – எம் ஃபில் – பட்டத்த இந்த வருஷத்தோட கரஸ்லே இருந்து எடுக்கப்போறாங்க் , “மாலிக்கே சேர்த்துவிடுங்கே. அவள் படிக்கட்டும்” என்றார். நீண்ட நேரம் யோசித்த என் கணவரிடம் “ நானும் வகுப்பு எடுக்கப் போறேன்; பார்த்துக்கிறேன்” என்றார். அதைக்கேட்டவுடன் என் கணவர், ‘ அப்போ இவளை சேர்த்துவிடுகிறேன்’ என்றார். 2006-2007ல் எம்.ஃபில் முடிச்சேன் நான். அதில் வழங்க வேண்டிய ஆய்வேட்டுக்கும் நெறியாளராக என் குருவே இருந்தார். தலைப்பு: உமாமகேஸ்வரியின் படைப்புலகம். ஒரு ஆய்வேட்டை எப்படி எழுத வேண்டும் என்பதை பகுத்து தந்தது இன்றும் எனக்கு நினைவில் உள்ளது. இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் கரஸ்ல – தொலைநெறிக்கல்வி- முறையில் படிக்கிற யாருக்கும் என் குரு நெறியாளராக இருந்தது இல்லை. அதில் நான் தான் முதல் மாணவி.
அடுத்து இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது மூன்றாண்டுகள் கழித்து என் குருவை சந்தித்தேன் கடைசி நேர இரயிலை பிடித்த ஒரு சந்தோஷம் அன்று எனக்கு கிடைத்தது.
சார் நான் முனைவர் பட்டம் பெற விரும்புகிறேன். உங்களிடம் சேரலாம் என எண்ணுகிறேன் என்றேன். அதற்கு என் குரு, ‘நான் வெளிநாடு சென்று வரயிருக்கிறேன் அதற்கு பின்பு யோசிப்போம்’ என்று கூறி வெளிநாடு சென்று விட்டார்.படிப்பைத் தொடர இயலாத நிலையில் புலம்பிக் கொண்டிருந்தேன். என் புலம்பல் தாங்க முடியாத என் கணவர் பக்கத்தில் இருக்கக்கூடிய “பெண்கள் கல்லூரியில் ஒரு ஆசிரியையிடம் முழுநேரம் ஆராய்ச்சி மாணவியாக என்னைச் சேர்த்துவிட்டார்” என்னால் அங்கு ஒழுங்காக ஆராய்ச்சியைத் தொடர இயலவில்லை. அதற்குள் என் குரு வெளிநாடு சென்று திரும்பி விட்டார்.
நான் முனைவர் பட்ட ஆய்வை தொடங்கி இரண்டு வருடம் ஆன போதும் அது தொடர்பாக எதுவுமே செய்யவில்லை. பிடிக்காத எதையோ கட்டாயப்படுத்தி செய்யச் சொல்வது போன்ற ஒரு உணர்வு என்னுள்ளே இருந்தது.
இதற்கு இடையில் எனக்கு கல்லூரியில் வேலை கிடைத்தது. அப்போது என் குருவிடம் வேலையில் சேரலாமா? ஆய்வைத் தொடரலாமா? என ஆலோசனை கேட்டேன் “ஓடிப் போய் சேர்த்துக் கொள்” என்றார்”. மேலும் உனக்கு சரியான இடம் இதுதான்;இது உங்கள் கல்லூரி என்றார்”. அவரின் ஆலோசனைப்படி தான் இன்று பணிபுரியும் கல்லூரியில் சேர்ந்து கொண்டேன். இதனால் முழுநேர ஆராய்ச்சி படிப்பை தொடர இயலாத நிலை. அதைப் பகுதி நேர ஆராய்ச்சியாக மாற்றியதுடன், என் ஆராய்ச்சியை என் குருவிடம் தொடர விரும்புவதாக அப்போது நெறியாளராக இருந்த ஆசிரியையிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் ஒப்புதல் அளித்தார்கள். அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன். ஏற்கெனவே ஆய்வுக்கான காலம் முடிவடையும் நிலை நெருங்கிக் கொண்டிருந்ததால் விரைவாக முடிக்க வேண்டும் என்றார். எழுத்தாளர் திலகவதியின் நாவல்களில் பணிக்குச் செல்லும் பெண்கள் என்ற தலைப்பிற்குத் தேவையான இயல்களைப் பிரித்துக் கொடுத்து என்னென்ன தரவுகளைச் சேகரிக்க வேண்டும் என்று முறைப்படுத்தினார். அதுவரை வழி தெரியாத பயணத்தில் இருந்த எனக்கு ஒரு ஒளி தெரிந்தது.
என் குரு எனக்கு ஒரு தந்தையாக இருந்தார் “நன்னூலில் பவனந்தி கூறியது போல் ஒரு ஆசான் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு என் குருதான் நல்ல உதாரணம் என்பதை எந்த காலத்திலும் நான் கூறுவேன். முதுகலை படித்த காலத்திலும் ஆய்வுப்பட்டப் படிப்பு காலத்திலும் அவரிடமிருந்து கற்றுக் கொண்டது நிறைய.
மாணவர்களை தரம் பிரித்து அவர்களின் மன ஓட்டத்திற்கேற்ப வழிகாட்டுவார். “ஆசிரியருக்கு மாணவர்களின் மன ஓட்டம் நன்கு புலப்பட்டால் மட்டுமே” அந்த மாணவன் சிறந்த விளக்குவார்கள் என்ற கூற்றிற்கிணங்க என் குரு மாணவர்களின் மனதோடு பேசுவார். “ எந்த மாணவர்களையும் யார்கிட்டையும் விட்டுக் கொடுத்தே பேசமாட்டார். குறிப்பாக மாணவர்களைவிட மாணவிகளிடம் அதிக பாசம் கொண்டவர் ஒரு அப்பாவை போல. வேலை, திருமணம் காதல் என எல்லாவற்றிற்கும் ஆலோசனை கூறத் தயங்க மாட்டார். “என் குரு எப்போதும் கூறுவார். மற்றவர்களை விட நாம் தனித்து நிற்க வேண்டும்” என்று. ஏன் என்று நான் கேள்வி கேட்டால் ‘ உன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்பதற்காகத்தான் என்பார்.
இது இன்று உண்மையே. இடைவெளிகளுடன் கூடியது எனது படிப்பு. 2001 இல் தொடங்கி 17 ஆண்டுகள் நீடித்தது. இப்போது என் ஆராய்ச்சியை என் குருவிடம் முடித்து விட்டேன். 6.11.2017 அன்று எனது முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு நடைபெற்றது. அப்போதும் நான் கர்ப்பிணியாக இருந்தேன். ஒவ்வொரு பட்டம் பெறும்போதும் ஒவ்வொரு குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பாக்கியசாலி நான். இதற்காகவே என் குரு என் மீது இரக்கம் காட்டுவார். வாய்மொழித் தேர்வை மூச்சு முட்ட, நடுங்கிய குரலோடு முடித்துவிட்டேன்.
வாய்மொழித் தேர்வின் இறுதியில் நன்றியுரையில் என் குருவுக்கு பதினேழுவருடம் மாணவியாக இருந்தது. “நான் மட்டும் தான்” என்பதை அதிகாரத்துடன் கூறினேன். என் குரு சிரித்துவிட்டார் இறைவன் என்னிடம் வரம் கேட்டால் “இதே குருவுக்கு நான் மாணவியாகத்தான்” இருக்க வேண்டும் என கேட்பேன்.
அவருக்கு பணிநிறைவு என்பதெல்லாம் கிடையாது. அதெல்லாம் வெறும் பொய். எப்போதுமே அவர் பணியிலே இருப்பார் என்பது மட்டுமே நிஜம்.
முனைவர் வ.மாலிக், உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை (சுயநிதி பிரிவு)
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,
திருநெல்வேலி - 627 011.
ஆசிரிய நண்பர் அ.ராமசாமி
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய தாவரங்களின் உரையாடல் எங்களுக்குப் பாடமாக இருந்தது, அதில் ராமசாமிகளினின் ஜீவிய சரித்திரம் என்று ஒரு கதை உண்டு அந்தக்கதையில் அ.ராமசாமி சார் பெயர் இல்லையே என்று எங்களுக்கு வருத்தம். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பொற்காலம் என்பது வசந்திதேவி அவர்கள் அப்பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த காலம் ஆகும். அதற்கு நிறைய சாட்சிகள் இருந்தாலும் சிறந்த சாட்சி அவர் ஆசிரியப்பணிக்குத் தேர்ந்தெடுத்த பேராசிரியர்கள். தமிழ்த்துறையில், தொ.ப., அ.ராமசாமி வரலாற்றுத்துறையில் ஆ.இரா.வேங்கடாசலபதி. ஆங்கிலத்துறையில் தில்லைநாயகம். கணிதத் துறையில் சோமசுந்தரம் இன்னும் பலர். இப்படி எல்லா துறைகளிலும் அத்துறையில் துறைபோகியவர்களைத் தேர்ந்தெடுத்தார். மேலும் வசந்திதேவி வெளிப்படுத்திய ஜனநாயகப்பண்பு எல்லா துறைகளிலும் மிளிர்ந்தது.
நான் பட்டப்படிப்பு படித்தது பொன்னமராவதி அருகில் உள்ள மேலைச்சிவபுரி ஊரில் உள்ள கணேசர் செந்தமிழ்க்கல்லூரி. பண்டிதமணி கதிரேசனார் தொடங்கிய புலவர் கல்லூரி. அது ஒரு குருகுலம் போன்றது. அந்த ஊரில் உள்ள நாட்டுக்கோட்டை செட்டியார் வீடுகளை விட சிறிய கட்டடம்தான் கணேசர் செந்தமிழ்க்கல்லூரி. அங்கு மனப்பாடக்கல்வி முக்கியமானது. மாணவர்கள் மாணவிகளிடம் பேசக்கூடாது. இது எழுதப்படாத சட்டம்.
பி.லிட் முடித்து பல்கலைக்கல்வி பெறுவதற்கு நெல்லை வந்தேன். அப்போது தமிழ்த்துறை பாளையங்கோட்டை சாப்டர் ஹாலில் இயங்கிவந்தது. பல்கலைக்கழகம் சென்று விண்ணப்பம் வாங்கி பணம் கட்டிச் சேர்ந்தபிறகு தமிழ்த்துறைக்கு வந்தேன். பல்கலைக்கழகம் என்றால் பெரிய கட்டடங்கள், பென்னம்பெரிய நூலகம், நிறைய மாணவர்கள் என்று கற்பனையில் இருந்த எனக்கு ஏமாற்றமாக இருந்தது. காரணம் சாப்டர் ஹால் என்ற அந்தச் சிறு கட்டடம். எனது கற்பனையில் இருந்த பல்கலைக்கழகமும் பெரிய நூலகமும் எட்டாத தொலைவில் இருந்தது. எதோ தொலைதூரக்கல்வி பயில்வது போல சோர்வாக இருந்தது. அந்தச் சோர்வைப் போக்கி, தமிழ்த்துறையைப் பல்கலைக்கழகக்கட்டடத்திற்குக் கொண்டு சென்றதில் அ.ரா வின் பங்கு முக்கியமானது.
தொ.ப, அ.ரா என்ற இரண்டு ஆளுமைகள் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் தூண்களாக இருந்தார்கள். தொ.ப மரபிலக்கியம், திராவிட அரசியல், பெரியார் சிந்தனை, ….
அ.ரா நவீன இலக்கியங்கள், பின் நவீனம், பெண்ணியம், தலித்தியம், கட்டுடைப்பு, தமிழின் புது வரவுகள்….
ஞா..ஸ்டீபன் நாட்டார் வழக்காற்றியல், பின் அமைப்பியல், கதைகள், லக்கான், பிரேசர்…
எங்கள் வகுப்புகள் எங்களைச் செதுக்கின. ஆசிரியர்கள் பாடம் நடத்தினார்களா அல்லது அன்றைய அரசியலை, வாழ்வை படிப்பித்தார்களா? சொல்லிவிடமுடியாது.
சதுரங்களை வட்டமாக்கியவர் அ.ரா.
வகுப்புகள் சதுரமாகவோ செவ்வகமாகவோ இருக்கும். முன்னால் மேடையில் ஆசிரியர் அல்லது தலைமை. இதுதானே வகுப்பறை, நாடக அரங்கு, பஞ்சாயத்து, தர்பார் எல்லாம். அ.ரா. இந்த அதிகாரச் சதுரத்தை உடைத்தார். வகுப்புகளை வட்டமாக்கினார். அந்த வட்டத்தின் ஒரு கண்ணியாக அவர். அப்போது எங்களுக்கெல்லாம் தலைகொள்ளா மகிழ்ச்சி. பிற துறை மாணவர்கள் ஏக்கத்தோடு பார்த்துச்செல்வர். இப்படித்தான் வகுப்புகள் நடக்கும். யாரும் பேசலாம். படித்துவிட்டுதான் பேச வேண்டும் என்றில்லை. பேசுவதற்கு வாய் போதும்..புத்தகம் தேவையில்லை.
தமிழ்ப்பாடம் என்பது வெறும் கதைகள் காப்பியங்களின் வரும் சம்பவங்களையும் பெயர்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது என்ற எண்ணம் தான் எல்லா மாணவர்களுக்கும் உண்டு. அதை மாற்றியதில் அவருடைய வகுப்புகளுக்கு முக்கிய பங்குண்டு. வட்டமாக அமைந்த வகுப்பில் ஒரு மாணவர் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட கதையைப் படிப்பதும் மற்றவர்கள் அக்கதை மீதாக கருத்துரைப்பதும் ஒரு வகுப்பின் நோக்கமாக இருக்கும். ஆனால் எல்லா மாணவர்களும் அக்கலந்துரையாடலில் பங்கேற்பது அசாத்தியம். பேசிய மாணவர்களே திரும்பத் திரும்ப பேசுவர். பேசாதவர்கள் பேசுவதே இல்லை. அவர்களெல்லாம் ஆர்வம் குறைவானவர்கள் என்று ஒதுக்கிவிடும் வேலை ஆசிரியருக்கு மிக்ச்சுலபம். ஆனால் அவர்களையும் விவாதத்துக்குள் இழுப்பதும் பேசாத அவர்களின் பேச்சை மையப்புள்ளியாக்கி விவாதத்தை கொண்டுசெல்வதும் அ.ரா வுக்கே உரிய கலை. அவர் வகுப்பில் பேசுவதற்கு பல நூல்களைப் படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. சுயமாகச் சிந்திக்க வேண்டும் அவ்வளவுதான். ஏற்கனெவே நூலில் உள்ளகருத்துக்களைச் சொல்வதை ஊக்குவிக்கமாட்டார். இலக்கியத்திற்கும் அன்றாட வாழ்விற்கும் உள்ள தொடர்பை அவர் வகுப்புகளின் வழி மாணவர்கள் உணர்வார்கள்.
விவாதப்பொருளை வகுப்பின் கதாநாயகனாக்கி விடுவதில் அவர் தனித்திறமை கொண்டவர். ஒரு கதை அல்லது நாவல் மீது அவர் சொல்கிற கருத்தை முற்றாக மறுக்கிற சுதந்திரம் மாணவர்களுக்கு உண்டு. நான் மாணவராக அங்குச் சேர்ந்தபோது எனக்கு ஓரளவு வாசிப்பு அனுபவமும் ஆர்வமும் இருந்தது. எனினும் அ.ரா வகுப்பில் அது பயன்படாது. நீங்க சொன்னது ஏற்கனெவே சொன்னதுதானே…உங்க கருத்து என்ன? என்று கிண்டுவார். நூலகம் பக்கமே செல்லாத ஒரு மாணவி அந்த கதையை கேட்ட மாத்திரத்தில் சொன்னகருத்தை ஏற்றுகொள்வார். வகுப்பில் பல நேரங்களில் அவரது கருத்துடன் முரண்பட்டிருக்கிறேன். விவாதங்களை சில நேரங்களில் சண்டையாகக் கூட முடித்திருக்கிறேன். அதற்கு அடுத்த வகுப்பில் நான் அமைதியாக இருந்தாலும், இலக்குவன், உன் கருத்து என்ன? என்று விவாதத்திற்கான ஜன்னலை ஈகோ இன்றி திறப்பார். அன்று எனக்கு அது பெரிய விசயமாகத் தெரியவில்லை. மெத்தப்படித்தவர், பல இலக்கிய ஆளுமைகளுடன் இருப்பவர்; இந்த ஜனநாயகப்பண்போடு இருப்பதில் என்ன வியப்பு என்று நினைத்தேன். இன்று ஒரு ஆசிரியராக எனது அனுபவத்தில் அவ்வாறு நடப்பதற்கான பக்குவம் உள்மனம் சார்ந்ததே ஒழிய ஏட்டறிவு சார்ந்ததல்ல என்று மனதார உணர்கிறேன்.
விவாதத்தில் தன்னை முன்னிறுத்தாமல் விவாதப்பொருளை முன்னிறுத்தி அதை அரங்கின் போக்கில் நீந்தவிடுவது அவர் அடிப்படையில் ஒரு நாடகக்காரர் என்பதால் அவருக்கு எளிமையாக வாய்த்தது என்று நினைக்கிறேன். அவர் வகுப்பறையை அரங்காகப் பாவித்து நிகழ்த்திய புதுமைகள் பற்றி நிறைய பேசலாம்
அவரது இடைவிடாத வாசிப்புப்பழக்கத்தையும் எழுத்துக்கும் வாசிப்புக்கும் அவர் செலுத்திய சோர்வற்ற உழைப்பையும் அவரது மாணவர்களாகிய நாங்கள் பின்பற்றுதல் அவருக்குச் செய்யும் நன்றிக்கடன் என்று நினைக்கிறேன்.
பேராசிரியர் அ.ராமசாமி அவர்களின் ஓய்வுக்காலமும் நூல்களோடும் நூலோர்களோடும் தொடர வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.
இரா.இலக்குவன், ம திதா இந்துக்கல்லூரி
ஆசிரியரைக் கண்டடைதல்
இளங்கலை தமிழ் வகுப்பு முடிவுபெற்று 1998 ஆம் ஆண்டு முதுகலை தமிழ் வகுப்பிற்காக மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழத்தில்; முதல் மாணவியாக இணைகிறேன். அந்த ஆண்டு முதல்தான் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலை வகுப்பு துவங்குகிறது. அப்போது பல்கலைக்கழகத்தில் இடம் இல்லாததால் தூய யோவான் கல்லூரி அருகில் சாப்டர் வளாகத்தில் முதுகலை வகுப்பு துவங்கப்பட்டது. மொத்தம் 6 மாணவியர் 1 மாணவர். ஐயாவின் வகுப்பறை வித்தியாசமானது. அனைவரும் வட்ட வடிவில் அமர்ந்திருப்போம். ஐயாவும் எங்களோடு அமர்ந்திருப்பார்.
ஏட்டுச் சுரைக்காய் கல்வியை கற்றிருந்த நாங்கள் ஒரு அகன்ற பூமியை காணத் துவங்கினோம். புத்தகத்தை எவ்வாறு அணுகுவது அதை எவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதை கற்றுத்தந்தார்கள். புத்தக வாசிப்பு வெறுப்பாக இருந்த காலம் போய் புத்தக வாசிப்பு சொர்க்கமாக மாறியது. அவர்கள் அறையில் உள்ள புத்தகங்கள் எங்களுக்கு சொந்தமாகியது.
நாங்கள் எந்தவிதமான புத்தகங்களைத் தேர்வு செய்து படிக்கிறோமோ அதை சார்ந்த தலைப்புகளையே எங்கள் ஆய்விற்கு தேர்வு செய்வார்கள். நான் கவிதையில் ஆர்வம் கொண்டிருந்தேன். அதிலும் பெண் கவிதைகளில் ஆர்வம் கொண்டிருந்தேன். அதை புரிந்து கொண்டு இளம் முனைவர் பட்டத்திற்கு எனக்கு வழங்கிய தலைப்பு “பெண்ணிய நோக்கில் ஈழத்துப் பெண் கவிதைகள்”.
பொதுவாக நெறியாளர் எந்தத்துறையில் ஆர்வமாக இருக்கிறார்களோ அந்தத் துறையில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு தலைப்பு வழங்குவார்கள். ஆனால் ஐயாவின் மேற்பார்வையில் ஆய்வு செய்தவர்களின் தலைப்புகளை உற்று நோக்கினால் திறனாய்வு, நாடகம், கவிதை, நாவல், சிறுகதை, சங்க இலக்கியம், தலித்தியம், பெண்ணியம், பின்னை அமைப்பியல் என தமிழின் அனைத்துத் துறைகளையும் தொட்டிருப்பார்கள். இது ஆய்வு மாணவர்களுக்கும் ஐயாவுக்கும் ஆன உறவை இன்னும் பலப்படுத்தும். அது மட்டும் இல்லாமல் மாணவர்களுக்குப் பிடித்த துறையில் தலைப்பை தேர்வு செய்வதோடு அதில் யாரும் இதுவரை செய்யாத ஆய்வை மேற்கொள்ள வைப்பார்கள். “ஆய்வு என்பது வட்டத்தை போட்டுவிட்டு மையப்புள்ளியை தேடுவது அல்ல. மையப்புள்ளியை வைத்து விட்டு அதைச் சுற்றிய தேடலாக இருக்க வேண்டும் என்பது அ.ராவின் கருத்து. கவிதையை உணர்வு ரீதியாக மட்டும் நான் பார்த்துக் கொண்டிருந்த போது அது எவ்வாறு சூழல் சார்ந்து இயங்கும் என்பதை புரிய வைத்தார்கள். ஈழம் சார்ந்த பெண் கவிதை என்பதால் ஈழத்தின் அரசியல், பெண்களின் பொறுப்புகள் சார்ந்த வாசிப்பு தேவை என்பதை உணர்த்தினார்கள். நானும் ஈழத்திலிருந்து வெளிவரும் பெண் இதழ்கள் போன்றவற்றை வாசித்தேன்.
குறிஞ்சி என்றால் கூடல் கூடல் நிமித்தம் என்று உரிப்பொருளை கண்ணை மூடிக் கொண்டு கூறுவோம். ஏன் அங்கே ஊடல் வராதா? ஆற்றியிருத்தல் வராதா? என்று கேள்வி கேட்டபோது குறிஞ்சி மலைப்பிரதேசம் இங்கு ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ்ந்தால் மட்டுமே. அந்த சூழலை எதிர்கொள்ள முடியும். அங்கும் ஊடல் உண்டு, ஆற்றியிருத்தல் உண்டு. ஆனால் குறிஞ்சி என்ற மலைநிலத்தில் கூடல் என்ற உணர்வே மேலோங்கி இருப்பதால் அந்த உணர்வை உரிப்பொருளாக்கி இருக்கிறார்கள் என்பதை புரிய வைத்தார்கள். இதன் மூலம் ஒரு நாட்டின் சூழல் அங்கு எழுதப்படும் கவிதையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை புரிந்து கொண்டேன். எனவே ஈழம் சார்ந்த சூழலை வாசிக்க ஆரம்பித்தேன்.
பெண் கவிதைகள் என்ற போது, ஆண் எழுத்தை கற்பனையாகப் பார்க்கும் இந்த சமுதாயம் பெண் எழுத்தை அவள் உணர்வாகவே பார்க்கிறது என்பதைத் தொடர் வாசிப்பு மூலமும் கவிதாயினி அனுபவிக்கும் பிரச்சனைகள் மூலம் புரிந்து கொண்டேன். அந்த வகையில் பெண் படைப்பாளிகளின் வெளிப்பாடு எவ்வாறு உள்ளது என்பதை என் ஆய்வில் புதிவு செய்ய வைத்தார்கள்.
இளம் முனைவர் பட்ட ஆய்வாக இருந்தாலும் இன்றும் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள எனது ஆய்வேடு பல்வேறு ஆய்வுகளுக்கு துணை ஆதாரமாக இருக்கிறது என்பதற்கு என் நெறியாளரே காரணம்.
நான் முனைவர் பட்டத்திற்கு ஐயாவை அணுகிய போது அவர்களிடம் இடம் இல்லை மேலும் போலந்து பல்கலைகழகத்திற்கு செல்வதாக இருந்ததார்கள். எனவே பேராசிரியர்; சு.அழகேசன் ஐயாவிடம் என்னை முனைவா; பட்ட மாணவியாக இணைய அறிவுரை கூறினார்கள்.
ஆனால் என் விருப்பத்திற்கு ஏற்றபடி “தலித்திய கவிதைகளில் உணர்வு வெளிப்பாடு” என்ற தலைப்பை எனக்குத் தேர்வு செய்ய உதவியதோடு என் ஆய்விற்கு பல்வேறு உதவிகளை செய்தார்கள். இன்றைய ஆய்வுகள் புத்தகத்தை பார்த்து எழுதுவதாக இருக்கிறது. ஆனால் உங்கள் ஆய்வோ புத்தகமாக மாறும் ஆய்வாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்கள்.
வாசிப்பு என்பதற்கும் மறு வாசிப்பு என்பதற்கும் உள்ள வேற்றுமைகளை ஐயா மூலம் அறிந்து கொண்டேன். புதுமைப்பித்தனின் பொன்னகரமும் அகலிகையும் மறுவாசிப்பில் கேள்விகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தது. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ பெண்ணின் உளவியலை வெளிப்படுத்தியது மறு வாசிப்பில்தான்.
அகலிகை, தண்ணீர் போன்ற நாடகங்களில் நடித்திருக்கிறேன். அதற்காக அவா;கள் வழங்கிய பயிற்சியை இன்றும் மறக்க முடியாது.
இன்று நுழைவுத் தேர்வில் உதவிபேராசிரியர்கள் தேர்வு பெற்றிருக்க வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது. ஆனால் 1999 இல் என்னை இந்த தேர்வை எழுத வைத்து வெற்றி பெற வைத்தார்கள். அப்படி ஒரு தேர்வு நடைபெறுவதே அப்போது யாருக்கும் தெரியாது.
இளம் முனைவர் பட்ட மேற்படிப்பில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஆய்வேட்டை சமர்ப்பிப்பது ஐயாவின் வழக்கம் அதையே நானும் செய்தேன். மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தாலும் என் தோழி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஆய்வேட்டை சமர்ப்பிக்காததால் இளம் முனைவார் பட்ட மேற்படிப்பில் ‘தங்கப்பதக்கம்’ பெற்றேன். அ.ராவின் மாணவி என்று கூறுவதையே வாழ்நாளின் பெருமையாக எண்ணுகிறேன்.
பெண்கள் என்றால் கல்வி முடிந்ததும் பத்திரிக்கை வாசிப்பது இல்லை அரசியல் பேசுவதில்லை திருமணத்திற்கு பிறகு உடல் நலத்தில் அக்கறை கொள்வதில்லை என்ற வருத்தம் ஐயாவிற்கு உண்டு.
உங்கள் மாணவிகளாகிய நாங்கள் இதை நிச்சயம் மாற்றுவோம். நீங்கள் காண விரும்பும் கண்ணம்மாவாக நிச்சயம் வாழ்ந்து காட்டுவோம்.
எங்கள் ஆய்வேடு எல்லாம் புத்தக வடிவம் பெற வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உண்டு. அதையும் நாங்கள் செய்து காட்டுவோம். புறம் நடத்தும் போது மற்போர் வீரனாகவும், கம்பராமாயணம் நடத்தும் போது இராவணனாகவும், அகம் நடத்தும் போது கபிலராகவும் நாடகம் கற்றுத்தரும் போது அ.ராமசாமியாகவும் அவதாரம் எடுத்த என் குருவிற்கு, வாழ்க்கையை நேசிக்க கற்றுக் கொடுத்த என் ஆசிரியருக்கு என் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
முனைவா; செ.ஷப்ரின் முனீர்;
தமிழ்த்துறைத்தலைவர்,அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி
மேலப்பாளையம், திருநெல்வேலி 627005
கருத்துகள்