உள்ளே மட்டுமில்லை அர்த்தங்கள்- இமையமும் புதியமாதவியும்


இமையத்தின் பணியாரக்காரம்மா

கடந்த உயிர்மையில் இமையம் எழுதியுள்ள பணியாரக்காரம்மா கதையை வாசித்து முடித்தவுடன் இந்தக் கதையின் விவாதம் பிரதிக்கு வெளியே இருப்பதாகத் தோன்றியது. எனக்குத் தோன்றியது போலவே அக்கதையை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும் என்று சொல்வதற்கில்லை. அப்படித் தோன்றாத வகையிலே தனது எழுத்துத் திறனை முழுமையாக இமையம் காட்டியுள்ளார். ஆனாலும் இந்திய மனிதர்களை அவர் எழுதுவதால், அவர்களின் இயங்குதளம் – இந்தியச்சாதி அமைப்பின் இயங்குமுறையின் வீரியத்தால் கதையின் விவாதம் கதைக்கு வெளியே இருப்பதாகத் தோன்றும்படி சில வரிகள் வந்து விழுந்துவிட்டன. 

எழுதுபவர்களுக்கு அவர்களது செய்நேர்த்தியைத் தாண்டி சமூகத்தின் இயங்குமுறைகள் உண்டாக்கும் நெருக்கடிகள் இவை. அப்படியான நெருக்கடியொன்றைச் சந்திக்கும் எழுத்தாளர்கள் கதைக்குள் முன்வைக்கும் முடிவுகள் பல நேரங்களில் அந்தக் கதையைச் சர்ச்சைகளைத் தூண்டிய கதைகளாக ஆக்கிவிடும். தான் முன்வைக்கும் கதை முடிவு சமூகத்தளத்தில் அல்லது விமரிசனத் தளத்தில் பெரும் விவாதமொன்றைக் கிளப்பும் என யூகித்து அதற்கான பதில்களையும்கூடக் கதைக்குள்ளேயே சில எழுத்தாளர்கள் எழுப்பிப் பதில் சொல்வதுமுண்டு. இமையம் தான் எழுதிய ‘ பணியாரக்காரம்மா’ அப்படியொரு விவாதத்தை எழுப்பும் என நினைக்கவில்லை. தான் உருவாக்கிய பணியாரக்காரம்மாவின் முடிவு விவாதத்திற்கு அப்பாற்பட்ட முடிவு என்று அவர் கருதியதால் – அப்படியொரு விவாதம் எழும்பும் என நினைக்காததால் அந்த விவாத்தையும் அதற்கான பதில்களையும் கதைக்குள்ளே வைக்கவுமில்லை. ஆனால் வேறிரண்டு கதைகள் – தேவிபாரதியின் பலி, ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம் – கதைக்குள்ளேயே விவாதங்களையும் வைத்துள்ளன. முதலில் இமையத்தின் கதை.கதை இப்படித் தொடங்குகிறது:

“யார் வீட்டுல?” என்ற குரல்கேட்டு வாசலுக்கு வந்தாள். நாகம்மா. கண்ணன் செட்டியார் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து திகைத்துப் போய் அதிசயம்போல வாயில் கையை வைத்தாள். “என்ன செட்டியாரா?” என்று கேட்பதற்குக் கூட அவளுக்கு மறந்துபோய் விட்டது.

விவாரம் தெரிந்த நாள்முதலாகத் தினசரியும் கடைவீதியில் கண்ணனின் பலசரக்குக் கடையில் அவனைப்பார்ப்பவள். அவனும் அவளைப் பணியாரக்கடையில் பார்ப்பவன். இதுவரை ஒருநாளும் அவளது வீட்டிற்கு வந்ததில்லை. ஆனால் இன்று வந்தவன் அவள் எதிர்பாராத அந்தக் கேள்வியைக் கேட்டுத் திகைக்க வைத்துவிடுகிறான். அவன் கேட்டது கேட்கத் தயங்கும் கேள்வி. “உன்னோட ஒருநாள் நான் இருக்கணும்” இப்படியொரு கேள்வியை அவளிடம் கேட்கலாம்; கேட்டால் ஒத்துக்கொள்வாள் என்று தூண்டியது எது? என்பதற்கான பின்னணிகளையெல்லாம் இமையம் எழுதியுள்ளார். இருவரது திருமண வாழ்வும் இன்பகரமானதாக இல்லாமல் போனநிலையில் அவர்களிருவரும் ஒருவருக்கொருவர் உடைமையானவர்கள் போல நினைத்துக்கொண்ட அந்நியோன்யம் இருந்தது என்றாலும் தங்கள் ஆசையை – விருப்பத்தைக் காட்டிக்கொண்டதே இல்லை. அவ்வப்போது ஒருவரையொருவர் சீண்டிக்கொள்ளும் வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டாலும் வேறு வேறானவர்கள் என்ற எண்ணம் இருந்துகொண்டே தான் இருந்தது. அதையும் தாண்டி எதோவொரு முடிவுடன் அவன் தன்னைத் தேடிவந்து நின்றபோது மறுப்புச் சொல்லாமல் தன்னைத் தரத்தயாராகும் நாகம்மாவின் குதூகலத்தை இமையம் விரிவாகவே எழுதியுள்ளார். அதிலும் குறிப்பாக அவள் குளிப்பதற்குச் செல்லும்போது துடுக்குத்தனமாகக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருக்கும் பேத்திமுறைச் சிறுமியிடம் பேசும் உரையாடல்கள் இமையத்தின் தேர்ந்த உரையாடல்களின் எழுத்தின் வெளிப்பாடுகள். இந்தச் சின்னப்பெண்ணே சந்தேகத்தோடு பார்க்கிறாளே என்றெல்லாம் கவலைப்படாம் நாகம்மா தன்னைக் கண்ணனிடம் முழுமையாகத் தந்துவிடுகிறாள். நீண்டகால ஆசையும் உடைமையை உரியவர்கள் பரிமாறிக்கொண்டதான நிகழ்வும் நடந்தபின்னான உரையாடலில் இமையத்தின் பாத்திரத்திற்குள் இந்தியச் சமூகத்தின் இயங்குவிதி வேலை செய்கிறது.

“நாளையிலிருந்து நான் தேர்முட்டில பணியாரம் விக்க மாட்டேன்.”

“வயித்துக்கு?”

“ செட்டி பாத்த உடம்ப இனி தெருவுல படயல் போட மாட்டேன்” கறாராக நாகம்மா சொன்னதையும் அவளுடைய குரலிலிருந்த அழுத்தத்தையும் கேட்ட கண்ணன் நாகம்மாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். அவளுக்கு எப்படியும் ஐம்பது வயதாவது இருக்கும். ஆனால் அவருடைய கண்ணுக்கு இப்போது வயது பெண்போல தெரிந்தாள்.

“ ஆகாரத்துக்கு வழி?”

“செத்துப்போறன்” அழுத்தம் திருத்தமாக மட்டுமல்ல. சற்று சத்தமாகவும் சொன்னாள்.

“செட்டிச்சி கதவுக்குள்ளாறதான இருக்கணும்?”

இந்த உரையாடலுக்குப் பின் இது நடக்கிறது.

அவளை எடுத்துக்கொண்டதற்கீடாகப் பணத்தையும் தங்க நகைகளையும் கொடுத்துவிட்டுக் காசிக்குப் போகப்போவதாகச் சொன்னபோதுகூட முதலில் தானும் அவனும் வேறுவேறானவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தவள் சட்டென மாறுகிறாள். அந்த மாற்றத்தை இமையம் இப்படி எழுதிக்காட்டுகிறார்:

“நீ செட்டி, அப்பிடித்தான் இருப்ப? மாறி இருந்தாத்தான் அதிசயம்”.

“நீயும் கேட்டதில்ல”

“நான் எதுக்குக் கேட்கணும்? நான் என்னிக்கும் செட்டிக்கிட்ட கடன் கேட்டதில்ல. வெலயத் தள்ளி கொடுன்னும் கேட்டதில்ல. இனியும் கேக்க மாட்டேன்” வீராப்பாகச் சொன்னாள். பிறகு நிதானமான குரலில் “எனக்குத்தான் இந்த பொருளுன்னா எம் பேரச்சொல்லி சாமி உண்டியல்ல போட்டுடு” என்று சொல்லி நகையும் பணமும் இருந்த பையத் திருப்பிக்கொடுத்தாள்.

முதன்முதலாகப் பார்ப்பது போலவும், ஆராய்வது போலவும் நாகம்மாவைப் பார்த்தார் கண்ணன். மறுவார்த்தை பேச தெம்பில்லாதவர்போல பையை வாங்கிக்கொண்டார். பெரிய பாரத்தைச் சுமந்துகொண்டிருக்கிற ஆள் மாதிரி பெருமூச்சு விட்டார். கண்களை மூடிக்கொண்டு சிறிதுநேரம் உட்கார்ந்திருந்தார். தானாகவே ‘சரிதான்’ என்று சொல்லுவதுபோல தலையை ஆட்டினார். ரொம்பவும் நிதானமான குரலில் “ தண்ணி கொடு” என்று கேட்டார். நாகம்மா கொடுத்த தண்ணீரை மிச்சம் வைக்காமல் குடித்தார். தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அடுத்த நிமிஷம் என்றைக்குமில்லாத புதுப்பழக்கமாக நாகம்மா பட்டப்பகலிலியே கதவைச் சாத்திக்கொண்டாள்.

என்று முடிக்கிறார்.

கதையின் தொடக்கத்திலிருந்தே நாகம்மா கண்ணனை ஒரு செட்டியாராகவும், தான் அந்தச் சாதியைச் சேர்ந்தவள் அல்லவென்பதையும் தன்னுணர்வோடு நினைத்துக்கொள்பவளாகவே இமையம் காட்டுகிறார். அதனாலேயே ஒவ்வொரு நாளும் கடை மூடும் இரவு நேரத்தில் அவளுக்காகக் காத்திருந்து பணியாரத்துக்கான சாமான்களைத் தரும் கண்ணனிடம் தனது ஆசையை வெளிப்படுத்த நினைத்ததில்லை. ஆனால் அவன் ஒருநாள் உன்னோடு இருக்கவேண்டுமென்ற தனது ஆசையைச் சொல்லிக் காட்டியபின் கண்ணனிடம் தன்னை – தனது உடலை – தங்குதடையின்றி எடுத்துக்கொள்ளக் கொடுத்தபின் முழுமையாக மாறுகிறாள். இரு உடல்களின் சேர்க்கையில் அவளது சாதி காணாமல் போனதாகவும் தான் ‘ செட்டிச்சி’யாக ஆகிவிட்டதாகவும் நினைக்கிறாள். செட்டியார் வீட்டுப் பெண்கள் பின்பற்றும் வீட்டுக்குள்ளே – கதவுக்குப் பின்னால் இருப்பதைத் தானும் செய்யப் போவதாகச் சொல்கிறாள்.

இந்தியச் சாதியமைப்பை ஏற்கும் மனம், ஒவ்வொரு சாதிக்கும் சிலவகையான குணங்கள் இருக்கிறது. அது எவ்வகையிலும் மாறாது என்றும் நம்புகிறது. அந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாகவே இங்கே கலப்புத் திருமணங்கள் கூட வெற்றியடையாது என்ற வாதங்கள் வைக்கப்படுகின்றன. அதனைச் சாதி ஆதரவாளர்களின் வாதம் என்று ஒதுக்கிவிட்டுப் போய்விடவும் முடியாது. பொருளாதார ரீதியாக எல்லாவற்றையும் கடந்துவிட முடியும் குடும்பங்களில் நடந்த கலப்புத் திருமணங்களில் கூட குறிப்பான சில நாட்களில் சாதி அடையாளம் உயிர்பெறுகின்றது என்ற விவாதங்கள் உள்ளன. பல நேரங்களில் கலப்புத் திருமணங்கள் மேல் நிலையாக்கத்தை வேண்டுகின்றன; நிகழ்த்துகின்றன என்பதையும் பார்க்கமுடிகிறது.

இந்தியக் குடும்ப வாழ்க்கைக்குப் பின்னான சடங்குகள், நம்பிக்கைகள் ஒவ்வொன்றிலும் சாதி, மத அடையாளங்கள் இருப்பதால் அதனை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏதாவதொன்றிற்குள் அடைக்கலமாக வேண்டிய நெருக்கடிகள் இருக்கின்றன. ஆணின் சாதி/ மத அடையாளமே சட்டப்படி செல்லத் தக்கது என்பதால், கலப்புத் திருமணங்களுக்குப் பின்னான இணையர்கள் ஆணின் சாதிக்குரியவர்களாக மடைமாற்றிக்கொண்டு தங்களைச் சமூகத்தின் பகுதியாக நீட்டித்துக் கொள்கிறது. இதுவே இங்கு பெரும்பான்மைப் போக்கு. அந்தப் பெரும்பான்மைப் போக்கை ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஒன்றையே நாகம்மாவாக – பணியாரக்காரம்மாவாக எழுதிக்காட்டியுள்ளார் இமையம். இதுதான் இங்கு நிகழ்கிறது. சாதிய இறுக்கம் கொண்ட இந்தியச் சூழல் நிகழ்த்தும் நடப்பு இது. அந்த வகையில் இமையம் நடப்பை எழுதிய எழுத்தாளராகப் பாராட்டப்படலாம். ஆனால் சாதிக்கொரு குணம் இருக்கிறது என்பதைத் தலித்திய விடுதலையை முன்னெடுக்கும் சிந்தனையைக் கைக்கொண்டவர்கள் ஏற்பதில்லை. அதேபோல் நாகம்மா, நாகம்மை என்னும் ‘செட்டிச்சி’யாக ஆகிவிட்டாள் என்று எழுதுவதைப் பெண்ணியச் சிந்தனையாளர்களும் ஏற்க மாட்டார்கள்.

இரு உடல்களுக்கும் பாலியல் விருப்பங்கள் இருந்தன; அவ்விருப்பங்கள் நீண்ட நாட்களாகத் தங்கியிருந்த விருப்பங்கள். ஒரு ஆணாகவும் பெண்ணாகவும் அருகருகே இருக்க நேர்ந்ததால் – தொடர்ச்சியாகச் சந்திக்க நேர்ந்ததால்- ஒருவரது வாழ்க்கை இன்னொருவருக்குத் தெரியும் என்பதால் உருவான விருப்பங்கள். அந்த விருப்பத்தை ஒருநாள் நிறைவேற்றிக்கொண்டன இருவரது உடல்களும் இணைந்தன. பாலியல் இச்சை சார்ந்த ஒரு நிகழ்வு; அவ்வளவுதான். அதற்குமேல் இன்னொன்றாக விரும்பின; அப்படியே ஆகிவிட்டன என்று எழுதுவது நடப்பியல் அல்ல. இமையம் என்னும் ஆணாதிக்க மனோபாவம் கொண்ட எழுத்தாளரின் விருப்பம் அது. தனது விருப்பத்தை நாகம்மாவின் விருப்பமாக எழுதியிருக்கிறார் எனக்குற்றம் சாட்டவும் முடியும். இப்படியான விவாதங்களை எழுப்பக்கூடிய கதையை எழுதியவர் இமையம் என்று சொல்லி முடிக்கும்போது தேவி பாரதி எழுதிய ‘ பலி’ கதையும், ஜெயகாந்தன் எழுதிய ‘ அக்கினிப் பிரவேசம்’ கதையும் அவற்றை வாசித்தவர்கள் விவாதங்களும், விவாதிக்கப்பட்ட சூழலும் நினைவுக்கு வருகின்றன.

அந்த இரண்டு கதைகளும்கூட பெண் உடல்கள் ஆண்களின் இச்சையைத் தீர்க்கும் ஒன்றாக இருப்பதைப் பற்றிய விவாதத்தை முன்வைத்த கதைகள் தான். தேவி பாரதியில் பலி கதையில் இடம்பெறும் பெண் புதிதாக வேசித் தொழிலுக்கு வந்திருப்பவள். அவளிடம் வருபவன் அந்த விடுதிக்கு அவ்வப்போது வந்து தனது பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்பவன். வழக்கமான வாடிக்கையாளன் என்பதால் புதிதாக வந்த பெண்ணை அவனோடு அனுப்பி வைக்கிறாள் விடுதித் தலைவி. தனியறையில் இருவரின் சந்திப்பும் இணைக்கமில்லாமல் ஆரம்பிக்கிறது. இணக்கம் காட்டாதவள் மேல் கோபம் காட்டுவதற்குப் பதிலாகப் பச்சாதாபம் காட்டி ‘அவளது முன் கதை’யைக் கேட்டான் எனக் கதையை நகர்த்தியதில் தர்க்கப்பிழை இருக்கிறது என்றாலும், ஒரு வித்தியாசமான கதையை எழுதுகிறேன் என்று காட்டுவதற்காகக் கதையை எழுதிய ஆசிரியனே எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்பதாகத் தேவி பாரதியின் கதை கூற்று முறை அமைக்கப்பட்ட கதை அது. 

அவள் தனது முன் கதையைச் சொல்லத் தொடங்கும்போது அவளது ‘ஊர்ப்பெயரை’க் கேட்டவுடன் பதற்றமடைந்துவிடுவான். தொடர்ச்சியாக அவள் ஒரு பிராமணப்பெண் எனவும், தன்னையும் தனது முன்னோர்களையும் சாதியின் பெயரால் தீண்டாமைக்குள்ளாக்கிக் கேவலப்படுத்திய குடும்பத்தைச் சேர்ந்தவள் என்ற தகவலும் சேர்ந்து அவனது பதற்றத்தை அதிகமாக்கி ஆவேசம் கொள்ளச் செய்து பலி வாங்கத்தூண்டுகிறது என்று இன்னொரு கதைசொல்லி சொல்வதாகத் தேவிபாரதி நகர்த்தியிருப்பார். அவனது பலி வாங்கும் செயல் அவளைப் புணரும் ஒவ்வொரு கட்டத்திலும் தான் யார்? என்பதையும் தனது முன்னோர்களின் தொழில் மலம் அள்ளும் தொழில் என்பதையும், தன்னிடம் இப்போது பணம் இருக்கிறது அதை உனக்கு அள்ளித்தருவேன் எனக் குரூரமாகச் சொல்லிக்கொண்டே புணர்வான். அதற்கு அவளது பதில் “ நான் ஒரு வேசி” என்பதாக மட்டுமே இருக்கும். இந்தக் குரூரமான பாலியல் வெளிப்பாடு மட்டுமே எழுதப்பெற்றிந்தால் அது உளவியல் ரீதியான ஆவேசம் எனப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் பலி வாங்கலை வன்மமாக, இந்தியச் சாதிய அமைப்பினால் தண்டிக்கப்பட்ட ஒருவனின் மனம் வாய்ப்பு கிடைத்தால் வன்மத்துடன் பலிவாங்கும் என்பதைச் சொல்ல விரும்பி, அவளது நிர்வாண உடல் எங்கும் கையிலிருக்கும் நெருப்பால் – சிகரெட் நெருப்புத்துண்டுகளால் சுட்டுப்பொசுக்கினான் என்று எழுதியிருந்தார்.. அத்தைகைய வன்மமும் பலிவாங்கலும் நியாயமானது என்று கருதியவர்கள் அந்தக் கதையைப் பாராட்டினார்கள். ஆகக்கூடிய ஒடுக்குமுறையைச் சந்தித்த ஒரு சாதியின் – சாதியிலிருந்து வந்தவனின் வன்மமும் பலிவாங்கலும் இப்படித்தான் இருக்கும்; இது நியாயமான எதிர்வினை. அந்த எதிர்வினையை எழுதியதன் மூலம் நடப்பியலை எழுதியவராகத் தேவிபாரதியைப் பாராட்டப்பட்டார். ஆனால் கதை எழுதப்பெற்ற சூழலில் வேறொரு அர்த்தத்தைத் தந்தது அந்தக் கதை

வெளிவந்த ஆண்டு 1993. தலித்திய விடுதலையை முன்வைத்த போராட்டங்களும் கலை இலக்கிய நிகழ்வுகளும் மேலெழுந்துகொண்டிருந்த 1990 களின் மத்தி. அச்சான இதழ் காலச்சுவடு. அதனால் அந்தக் கதை தலித்தியத்தின் மீது விமரிசனம் வைக்கும் கதையாக வாசிக்கப்பட்டது. இப்போது தலித்தியப் போராட்டங்களையும் தலித் எழுத்தாளர்களையும் போட்டிபோட்டுக்கொண்டு ஆதரிக்கும் பலரும் சில பத்திரிகைகளும் தலித்தியப் போராட்டங்களை எதிர்நிலையிலிருந்துதான் விமரிசித்தன. குறிப்பாகப் பிராமணிய ஆதரவாளர்கள் தங்களைப் பலிவாங்கத் துடித்த திராவிட இயக்கத்தின் இன்னொரு வடிவமாகவே தலித்தியப் போராட்டங்களையும் கலை இலக்கியச் செயல்பாடுகளையும் பார்த்தனர். அதன் வெளிப்பாடாகவே இந்தக் கதையும் இருந்தது.

இவ்விரண்டிலிருந்தும் முற்றிலும் வேறானது ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம். தனது விருப்பமில்லாமல், தன்னை அறியாமல் தன்னை எடுத்துக்கொண்ட – தன்னைப் புணர்ந்துவிட்டவனிடமிருந்து திரும்பி வந்த மகளை எதிர்கொள்ளும் அம்மாவை எழுதிய கதை அது. அம்மாவின் குரல் இதுதான்:

''நீ சுத்தமாயிட்டேடி... உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி... நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே.

நீ பளிங்குடீ, பளிங்கு. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ? அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு. என்னடீ அப்படிப் பாக்கறே? நான் சொல்றது சத்யம். நீ சுத்தமாயிட்டே... ஆமா - தெருவிலே நடந்துவரும்போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம். அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக்கூடப் போறோமே. சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறார். எல்லாம் மனசுதான்டி... மனசு சுத்தமா இருக்கணும்.

ஜெயகாந்தன் தந்த இந்த முடிவு அந்தக் கதை வந்த அடுத்தவாரத்தில் கடும் சர்ச்சைகளை – எதிர்வினைகளை எழுப்பியது. கற்பிழந்த – கெட்டுப்போன- பெண்களை எல்லாம் அம்மாக்கள் குளிக்கவைத்து வீட்டிற்குள் சேர்த்துக்கொண்டால், இந்தியப் பண்பாடு என்னாவது? என்ற கேள்விதான் எதிர்வினைகளின் பின்னணியில் இருந்தன. ஜெயகாந்தன் தந்த முடிவு அன்றைய தேதியில் நடப்பு அல்ல; யதார்த்தம் அல்ல. இன்றைய தேதியிலும்கூட இந்திய சமூகத்தில் நடப்பு அல்ல. ஆனால் ஜெயகாந்தனின் கதை சமூகம் செல்லவேண்டிய – சிந்திக்கவேண்டிய ஒன்றை முன்வைத்த கதை. பெண் உடல் மீது புனையப்படும் கருத்தியல் ரீதியான ஆதிக்கத்தை – அவளை அடிமையாக்குவதற்குத் தோதான காரணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சொன்ன கதையாக அக்கினிப்பிரவேசம் எப்போதும் இருக்கப்போகிறது.
கொசுறாக ஒரு கவிதை
எழுதப்பெற்ற காலத்தில் சர்ச்சைகளை எழுப்பாமல், விவாதங்களை முன்வைத்து எதிர்வினையாற்றாமல் ஒதுக்கப்படும் பிரதிகள் திடீரென்று சர்ச்சைக்குரிய பிரதியாக ஆகிவிடுவதுண்டு. கடந்த ஒருவாரமாக அப்படியொரு பிரதி கவனப்பட்டிருக்கிறது:

அந்த மூன்றுநாட்களில்

கோயிலுக்குள் செல்வது

தீட்டாகவே இருக்கட்டும்..

எந்த மூன்றுநாட்களில்.

பெண் தெய்வங்கள்

கோயிலுக்குள் இருக்காதெனக்

கொஞ்சம் சொல்லுங்களேன்?

========================== க. பொன்ராஜ்

ஐயப்பன் கோயிலுக்குள் செல்லும் உரிமை பெண்களுக்குத் தரப்படவேண்டுமா? வேண்டாமா? என்பதான விவாதத்தில் தொலைக்காட்சி விவாத ஒருங்கிணைப்பாளர் திரு. கார்த்திகேயன் மேற்கோள் காட்டிய கவிதை. அதனால் பெரும் சர்ச்சையை உருவாக்கிய கவிதை. சர்ச்சையை அந்தக் கவிதை உருவாக்கியதா? மேற்கோள் காட்டிய சூழல் உருவாக்கியதா? என்பது இப்போது கேள்வி.

ஆனந்த விகடனின் “சொல்வனம்” பகுதியில் இடம்பெறும் கவிதை திறமான கூறுகள் எவையும் இருப்பதில்லை. ஆனால் ஏதாவது ஒரு கூறு வெளிப்படையாகத் தோன்றுவதன் மூலம் வாசகக் கவனத்தை ஈர்க்கும். குறளடியாக – இரண்டிரண்டு சொற்களாக ஆறு அடியில் எழுதப்பெற்ற இந்தச் சொற்கூட்டத்தில், இரண்டு தடவை வரும்படி செய்யப்பட்ட சொற்கள் “ மூன்றுநாட்கள்” . அந்த மூன்று நாட்கள் பெண்களின் உடலோடு தொடர்புடைய மூன்று நாட்களைக் குறிக்கும் சொற்கள். தீட்டு நாட்களாக க் கருதப்பெற்று வீட்டிற்கு வெளியே – ஒதுக்குப் புறத்தில் ஒதுக்கப்படும் பெண்களின் வலியைச் சுட்டும் நாட்கள். அந்த நாட்களில் இறைவன் இருக்கும் கோயில்களுக்குள் செல்லக்கூடாது என்பது ஐதீகம். அதை மீறுவதற்குப் பெண்களும் விரும்புவதில்லை. ஆனால் அந்த மூன்று நாட்களையும் தாண்டிப் பெண்களே ஒருசில கோயில்களுக்குள் நுழையக்கூடாது என்று பிடிவாதம் பிடிக்கும்போது சட்டப்படியான உரிமையாக மாறுகிறது. ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களும் போவதற்கு உரிமை வேண்டும் என்ற கோரிக்கையாக மாறுகிறது. சட்டம் அனைவருக்கும் அனைத்து வெளிகளுக்கும் ஒன்றுபோல இருக்க வேண்டும் என்பதால் அந்தக் கோரிக்கையை ஏற்கிறது. ஆனால் பிடிவாதம் பிடிக்கும் – சட்டத்தை மதிப்பதாகச் சொல்லிக்கொண்டே மீறும் அடிப்படைவாதிகள் சமய நம்பிக்கையின் பேரால் பெண்களுக்கெதிராக நிற்கின்றனர்,

எப்போதும் இலக்கியம் எழுப்பும் விவாதம் அல்லது அர்த்தம் என்பது பிரதிக்குள்ளேயே உருவாகி முடிந்துபோவதில்லை. பிரதிக்கு வெளியே கூட இருக்கலாம். எழுத்து எழுதப்பெற்ற காலத்திற்குப் பின்னால் மேற்கோள் காட்டப்படும் சூழலில்கூட உருவாகலாம்.
வாசித்த இரண்டு கதைகள்

இமையத்தின் சிக்கலான நகர்வு
 
பாத்திரங்களின் சந்திப்பு மற்றும் விலகலுக்கான வெளியைச் சித்திரிப்பதில் உண்மைக்குப் பக்கத்தில் நிறுத்தும் வர்ணனை அவரது எழுத்து முறைமை. முன்வைக்க நினைக்கும் பாத்திரங்களைப் பற்றிய சில தகவல்களை முதலில் தராமல் அதன் எதிராளியோடு பேசும் உரையாடல்கள் வழி அப்பாத்திரத்தை நகர்த்திக் கொண்டே போகும் வடிவத் தேர்வு. எந்த இடத்தில் எதிர்மறையான தகவல்களைத் தந்தால் வாசிப்பு மனம் ஏற்று நகரும் என்பதைக் கவனத்துடன் செய்யும் நுட்பம் அவரது தீர்க்கமான கதையாடல் உத்தி. எதிரெதிர் நிலையில் நின்று பேசும் கதாபாத்திரங்களின் பேச்சுமொழியிலான உரையாடலை வலிமையாகப் பயன்படுத்துவதிலும் வல்லமை. இந்தச் சிறப்புகளையெல்லாம் கொண்ட எழுத்தாளர் இந்த ஆண்டிற்கான இயல் விருதுபெற்ற இமையம்.

அவர் தொடக்கத்திலிருந்தே தொடர்ச்சியாகப் பெண்களை எழுதிக்கொண்டே இருக்கிறார்.கோவேறு கழுதைகளில் - செடலில் - ஆறுமுகத்தில் பெண்களே அடையாளம் கொண்ட பாத்திரங்கள். அந்நாவல்கள் அல்லாமல் குறிப்பாகக் கிராமத்துப் பின்னணியில் பெண்களை மையமிட்ட கதைகளை எழுதிக் கொண்டே இருக்கிறார்.நாவல் வடிவத்திலும் சிறுகதை வடிவத்திலும் அவர் அளவுக்குப் பெண்களை எழுதும் இன்னொரு எழுத்தாளர் நிகழ்காலத்தில் இல்லை.

கல்விச்சாலைகளுக்குச் சென்று நவீனக் கல்வியறிவைப் பெறாத பெண்களின் உழைப்பையும் முடிவுகள் எடுக்கும் திறனையும் இமையம் எழுதும்போது உடன்பாட்டுத் தன்மையும் ஏற்பு மனநிலையும் வெளிப்படுகிறது. ஆனால் படித்த பெண்களை எழுதும்போது உடன்பாட்டுத் தன்மைக்குப் பதிலாக எதிர்மறை நிலைக்கு நகர்கிறார். படித்த பெண்கள் எடுக்கும் முடிவுகள் - குறிப்பாகக் காதலிப்பது, காதலித்தவனை நம்பி ஓடிப்போவது, ஓடிப்போய்க்கல்யாணம் செய்வது என்ற முடிவுகள் அவர்களைச் சிதைப்பதோடு, குடும்ப அமைப்பையே ஆட்டம் காணச்செய்கிறது என்ற எண்ணம் தோன்றும்படி எழுதி முடிக்கிறார். என் கதெ, செல்லாத பணம் நாவல்களின் மையப்பாத்திரங்களில் வெளிப்பட்ட இந்த எதிர்மறை மனநிலையைச் சிறுகதைகளிலும் வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நகர்வை நடப்பியலை எழுதும் - நிகழ்வை அப்படியே காட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் எழுத்தாளனின் நேர்மையான நிலைபாடாக அவர் நினைக்கலாம். ஆனால் படித்த பெண்களின் எல்லா முடிவுகளும் தவறானதாக இருப்பதில்லை என்பதும், அப்படி முடிவு எடுத்துக் குடும்பத்தை விட்டு வெளியேறியவர்கள் காதலித்த கணவன்மார்களோடு மகிழ்ச்சியாகவும் தன்னடையாளத்தையும் சுதந்திரத்தைத் தக்கவைத்து கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. படித்த பெண்கள் அனைவரும் காதலிப்பதில்லை -காதலித்தவர்களோடு ஓடிப்போவதுமில்லை என்பதும் உண்மை தானே. ஆனால் எழுத்தாளர்களின் தேர்வு அவர்களின் சதவீதம்தான் அதிகம் என்பதுபோலக் காட்டிவிடும். மாற்றம் வேண்டும் என நினைக்கும் மனதை - அறியாமையாகக் காட்டுவதும், உடல் இச்சைக்காகப் போவதாகப் பேசுவதும் காதலை எதிர்மறையாகப் பார்ப்பவர்களின் மன வெளிப்பாடு.

இமையத்தின் கதைகளில் ஓடிப்போகும் பெண்கள் இடைநிலைச் சாதிப் பெண்களாக இருக்க, அவர்களால் காதலிக்கப்பட்ட ஆண்கள் ஒடுக்கப்பட்ட சாதிக்காரர்களாகவே இருக்கிறார்கள். மாட்டுக்கறி, பன்றிக்கறி சாப்பிடும் ஆண்களாக - இருக்கிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. இதுவும்கூட உண்மை நிகழ்வாகவே இருக்கலாம். கதைக்கான இந்தத் தெரிவு ‘நாடகக் காதல்’ என்ற சொல்லாடலின் முன்வைப்பாகவும் மறுபக்கமாகவும் இருக்கிறது.

எனக்கு இந்த நினைப்பு - எண்ணம் - அண்மையில் அவர் எழுதி, தடம் விகடன் இதழில் வந்துள்ள “அம்மாவின் விரதம்” கதையைப் படித்த பின்பு தோன்றிக் கொண்டே இருக்கிறது. ஒருவாரமாக எழுதுவதைத் தள்ளிப்போட முடிந்தது. இனியும் எழுதாமல் தவிர்க்க முடியாது என்று தோன்றியதால் எழுதிவிட்டேன்.

இமையத்தின் இந்த நகர்வு இருப்பை ஏற்றுக்கொள்ளும்- பழைமையைத் தொடர விரும்பும் - மாற்றங்களை மறுக்கும் நகர்வு- மனநிலை.


புதிய மாதவியின் பச்சைக்கிளி

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து போய் மூன்று தசாப்தங்கள் முடிந்தபின்பும் ஈழத்துப் பழக்க வழக்கங்களையும் மன அமைப்பையும் விட முடியாமல் தவிக்கிறார்கள் என்னும் குற்றச்சாட்டு தொனிக்கும் கதைகளையும் கட்டுரைகளையும் சமூக ஊடகப்பதிவுகளையும் வாசிக்க முடிகிறது. இந்தச் சிக்கல் ஈழத்தமிழர்களின் சிக்கல் என நிலவியல் சார்ந்த சிக்கலாகப் பார்க்கமுடியாதது. சாதியடுக்குகளின் மீது விருப்பமும் பெண்ணைத் தனக்குக் கீழான உயிரியாக நினைக்கும் ஆண் மனமும் எனக் கட்டியெழுப்பிய சமய வாழ்க்கையின் மன அமைப்பு சார்ந்தது எனப் புரிந்துகொள்ள வேண்டியது. இதனை நேரடியாகச் சொல்லாமல் ‘பச்சைக்கிளி’ என்னும் சிறுகதையாக எழுதியுள்ளார் எழுத்தாளர் புதிய மாதவி. இந்த மாத அம்ருதாவில் வந்துள்ள அந்தக் கதையின் ஓர் உரையாடலை வாசித்தாலே இது புரியும். உரையாடல் இதோ

*****************
"அந்தச் சந்திப்பு எப்படி இருந்தது? பிடிச்சிருக்காடா?” என்று அம்மா கேட்டாள்.

”முதலில் அவள் ரொம்ப கறுப்பா இருக்காம்மா..”என்றான். அப்புறம், ‘அவ ரொம்ப பேசறாம்மா’ என்றான்.
”போடா.கறுப்பு சிவப்புனுக்கிட்டு.. உங்க அப்பன் நல்ல கலரு. நான் கறுப்புதானேடா.. நீ சிவப்பா பொறக்கல.. உங்க அப்பன் மாதிரி! நல்ல வாயாடிதாண்டா வரணும்.நம்ம குடும்பத்துக்கு அப்போதுதான் உங்க அப்பன் வீட்டு ஆட்கள் அடங்குவாங்க.”
*************
திருமணத்திற்கு நாள் குறித்த அம்மாக்காரியும் பையனும் தேவி சிலையை வணங்குகிறார்கள். நிறபேதமும் ஆதிக்க உணர்வும் கொண்ட இவர்களிடமிருந்து தப்பித்து எங்கே போவேன் எனக் கேட்பது மனிதர்கள் அல்ல. 
“நான் எங்கே போவேன்? தேவியின் கருவறையில் வேர்வைத்துளிகள். பச்சைக்கிளி பரிதவித்தது.
பச்சைக்கிளியின் இருக்கை தேவியின் தோள்பட்டைதானே...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்