அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

ஹார்வர்டு பல்கலைக்கழகம் உலகத்தின் பெருமைமிகு பல்கலைக் கழகங்களில் ஒன்று. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் அமைந்துள்ள அப்பல்கலைக்கழகம் உலகின் தலைசிறந்த அறிவாளிகளையும் நோபல் விருதாளர்களையும் உருவாக்கித் தந்த பல்கலைக்கழகம். அந்தப் பல்கலைக் கழகத்தில் செம்மொழியான தமிழ்மொழிக்கொரு இருக்கை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறுவது தமிழர்களுக்கும் தமிழுக்கும் பெருமையே. அது தந்த உற்சாகத்தில் அதே வகையான பெருமைகளை உருவாக்கும் முயற்சிகள் இப்போது பல இடங்களில் தொடங்கியுள்ளன.
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று அமைக்கும் முயற்சி 2015 வாக்கில் தொடங்கியது. அமெரிக்காவிற்குச் சென்று அங்கேயே குடியுரிமை பெற்றுத் தங்கிவிட்ட இந்தியத் தமிழர்களின் மொழி ஆர்வம் அதன் பின்னால் இருந்தது. மொழிபெயர்ப்பாளர் வைதேஹி ஹெர்பெட்டுடன் மருத்துவர்கள் சம்பந்தனும் ஜானகிராமனும் நடத்திய உரையாடலின் தொடர்ச்சியிலேயே அம்முயற்சி கருக்கொண்டது. வைப்பு நிதியாக 6 ஆயிரம் அமெரிக்க டாலரைப் பல்கலைக் கழகத்திற்கு வழங்கும் நிலையில் தமிழ் இருக்கை அமைக்க முடியும் என்ற நடைமுறையை அறிந்து கொண்டு, தங்கள் பங்காக இரு மருத்துவர்களும் 1000 டாலர்களை நன்கொடையாக வழங்கினர்.

இந்தியத் தமிழர்களின் முயற்சிகளுக்கு இணையாகவே கனடாவில் வாழும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கமும் முயற்சி செய்தார். அவரது முன்னெடுப்பிற்குப் பின் கலை இலக்கிய அமைப்புகள், இந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் போன்றோரும் அதுகுறித்துப் பேசத்தொடங்கினர். 2017 இல் தமிழக அரசு 10 கோடி ரூபாயை அந்த இருக்கைக்காக ஒதுக்கித் தர முன் வந்தது. அப்பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே ஓர் அமெரிக்கர் தமிழ்ப் பிரிவுக்கான ஆசிரியராக உள்ளார் என்றாலும் பேராசிரியர் பதவி நிலையில் ஒருவர் பொறுப்பேற்கும்போதே தமிழ் இருக்கை அமைப்பு முழுமை அடையும். கற்பித்தலும் ஆய்வுகளும் வேகம் பெறும். அது நிறைவேறும் காலம் அருகில் வந்துவிட்டது.

குறிப்பாக ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பிரித்தானியாவிலும், பிரான்சிலும் ஜெர்மனியிலும் தமிழ் இருக்கைகள் தொடங்கும் முயற்சியில் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. நார்வே, சுவிட்சர்லாந்து நாட்டிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்களும் அங்கொரு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை தொடங்க நினைக்கலாம். தொடர்ந்து கீழ்த்திசை நாடான ஆஸ்திரேலியத் தமிழர்களும் முயற்சி செய்யக்கூடும். இவை எல்லாம் தேவையான ஒன்று என்று கூடத் தோன்றலாம்.

தமிழ் மொழிக் கல்வியை அந்தந்த நாடுகளில் வளர்த்தெடுக்கும் பணிகளை இந்த இருக்கைகள் செய்யும் என்ற நம்பிக்கையும் பின்னணியில் இருக்கக் கூடும். புலம்பெயர் தமிழர்களின் தேவை கருதி உருவாக்கப்பட்ட தமிழ்த் துறைகளாகக் கனடாவில்  றொரண்டோ, யார்க் பல்கலைக்கழகங்களின் தமிழ்த் துறைகள் ஏற்கெனவே செயல்படுகின்றன.   இவை கனடாவிற்குப் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகளிடம் தாய்மொழிப்பற்றும், பண்பாட்டு இருப்பும் உறுதிபட அவை முயற்சி எடுக்கின்றன. அந்த முயற்சியில் அங்கு தொடங்கப்படும் இருக்கைகள் எவ்வளவு தூரம் பங்களிப்பு செய்யும் என்பது கேள்விக்குறி. ஏனென்றால் இதற்கு முன்பு உலகப்பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் தொடங்கப்பட்ட தமிழ் இருக்கைகள் அத்தகைய பணிகளைச் செய்யவில்லை.

சொந்த அனுபவமாக ஒன்றைக் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன். 2011 அக்டோபர் தொடங்கி, 2013 இல் முடிவடைந்த இரண்டு கல்வி ஆண்டுகளில் போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைப் பேராசிரியராக இருந்தேன். அந்த இருக்கை 1973 இல் இந்திய அரசால் நிறுவப்பெற்ற தமிழ் இருக்கை. 40 வது ஆண்டு விழாவைக் கொண்டாடிவிட்டுத் தமிழகம் திரும்பினேன். அதுவரை அவ்விருக்கை போலந்து நாட்டு மாணவர்களுக்குத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் பணியை மட்டுமே மேற்கொண்டது. என்னைப்போல இந்தியாவிலிருந்து போன இருக்கைப் பேராசிரியர்கள் பேச்சுத்தமிழைக் கற்பித்துவிட்டுத் திரும்பினார்கள். மிகக் குறைவான மொழிபெயர்ப்புகளும் அகராதி உருவாக்கமும் மட்டுமே நடந்துள்ளன. போலந்து நாட்டு மாணாக்கர்களுக்குத் தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம், இந்தி கற்பிப்பதற்காக வார்சா பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட இந்தியவியல் துறையைப் போல அந்நாட்டின் க்ராக்கோ பல்கலைக்கழகத்திலும் இந்தியவியல் துறையும் உண்டு. அதற்கும் தமிழ் இருக்கை இருக்கைப் பேராசிரியர் இங்கிருந்து அனுப்பப்படுகிறார். போலந்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்கப்பல நாடுகளில் அந்தந்த நாட்டு மாணாக்கர்களுக்கு அந்நிய மொழியாகத் தமிழைக் கற்பிக்கப் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் இருந்தன; இருக்கின்றன.

காலனியாதிக்க காலத்திலிருந்தே இத்தகைய துறைகளும் இருக்கைகளும் தொடங்கப்பட்டன. பிரான்ஸ், ஜெர்மனி, செக், இங்கிலாந்து, ரஷ்யா போன்ற ஐரோப்பிய நாடுகளில் தொடங்கப்பட்ட தமிழ்த்துறைகள் பல மூடப்பட்டு வருகின்றன. அதே நேரம் புதிய தொழில் மற்றும் வணிக வாய்ப்புகள் கொண்ட சீனா, ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகள் அந்தந்த அரசுகளின் உதவியாலும் தனியார் நிறுவனங்களின் தேவைக்காகவும் புதிதாகத் தமிழ்த் துறைகள் தொடங்கப்பட்டு அந்தந்த நாட்டு மாணாக்கர்களுக்குத் தமிழ்க்கல்வி வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் இந்த நாடுகளின் வணிக நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் பெற்று தமிழ் பேசும் நாடுகளுக்குப் பொறுப்பேற்றுப் போகும்போது தொடர்புகொள்ள அந்த மொழிப் பயிற்சி பயன்படும் என்ற பின்னணிக் காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இதே பின்னணிக்காரணங்களை உணர்ந்து ஐரோப்பிய நாடுகளின் அரசுகளும் கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அரசுகளும் தங்கள் நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களைத் தங்கள் நாட்டுக்குடிமக்களாகக் கருதி அங்கு தொடங்கப்படும் தமிழ்த்துறைகளுக்கு நிதியுதவியை வழங்கிட வேண்டும். அவ்வாறில்லாமல் தமிழ்பேசும் மக்கள் அதிகம் வாழும் இந்திய/ தமிழக, இலங்கை அரசுகளின் உதவியோடு தமிழ் இருக்கைகள்/ துறைகள் செயல்படவேண்டும் என எதிர்பார்ப்பதைக் கைவிட வேண்டும். ஏனென்றால் இந்த அரசுகள் சொந்த நாட்டில் செயல்படும் தமிழ்த்துறைகள், தமிழ் ஆய்வு மையங்கள், தமிழ் மாணாக்கர்களின் மொழிக்கல்வி மேம்பாடு போன்றவற்றைக் கைவிட்டுவிட்டு அயல்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகளுக்கு உதவுவதைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டு திசைதிருப்பும் அரசியலை மேற்கொள்ளவே அது உதவும். தமிழ்நாட்டில் அப்படி நடந்த தைப் பார்த்திருக்கிறேன். இங்குள்ள பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகளும் தமிழாய்வு நிறுவனங்களும் இலக்குகளின்றியே இயங்குகின்றன. அதற்கான வழிகாட்டி முறைகள் கூட இங்கு உருவாக்கப்படவில்லை.

அயல்தேசங்களில் இருக்கும் தமிழ்ப்படிப்பை உள்ளடக்கிய இந்தியவியல் துறைகள் பெரும்பாலும் தென்னாசியவில் படிப்பு (SOUTH ASIAN STUDIES) அல்லது தென்கிழக்காசியவியல் படிப்பு (SOUTH EAST ASIAN STUDIES)என்ற பிரிவின் கீழ் செயல்படுகின்றன. அங்குக் கற்பிக்கப்படும் படிப்பு வெறும் மொழிக்கல்வி மட்டும் அல்ல என்பதை முதலில் சொல்ல வேண்டும். இந்தியவியல் துறையில் சேரும் ஒரு மாணவிக்கு அல்லது மாணவனுக்கு இந்தியப் பொதுமனத்தைப் புரிந்து கொள்ள உதவும் அரசியல், சமுதாய, பண்பாட்டு வரலாறுகள் அடங்கிய இந்திய வரலாற்றைக் கற்றுத் தருகிறார்கள். அதே போல் இந்திய மதங்களைப் பற்றியும் இந்திய தத்துவ மரபு பற்றியும் தாள்கள் உள்ளன. இவற்றுக்கப்பால் தான் மொழிக்கல்வியும் இலக்கியக் கல்வியும் கற்பிக்கப்படுகிறது.அதனூடாக நிகழ்காலத்தில் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள் அடைந்து கொண்டிருக்கும் மாற்றங்களை ஓரளவு கற்றுக் கொள்கிறார்கள். கற்றுக் கொள்ள வேண்டும் என மிகுந்த ஆர்வத்தைக் காட்டும் மாணாக்கர்கள் முழுமையாகக் கற்றுத் தேர்கிறார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், அப்படியான நோக்கம் அந்தப் பாடத்திட்டங்களிலும், கற்பிக்கும் முறையிலும் இருக்கின்றன. ஆனால் அப்படிக் கற்றுத்தேரும் மாணாக்கர்களுக்கு வேலை வாய்ப்புகள் மிகக் குறைவு. தொடராய்வு செய்யத் தேவையான உயராய்வு நிறுவனங்கள் உலக அளவில் இல்லை. கேரளம் மற்றும் புதுவையில் செயல்பட்ட திராவிட மொழிகளுக்கான பண்பாட்டு நிறுவனங்களும் முன்புபோல முனைப்பாகச் செயல்படவில்லை. தமிழ்நாட்டில் இயங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் போன்றவற்றில் மேலாய்வு வாய்ப்புகளை ஏற்படுத்தாமல் பட்டவகுப்புகளைத் தொடங்கிக் கீழிறக்கம் செய்யும் பணிகளே நடக்கின்றன. நெடிய போர்க் காலத்தைச் சந்தித்த இலங்கையின் பல்கலைக்கழகங்களிலும் இதே நிலைமைதான் நீடிக்கின்றன.

இந்தப்பின்னணியில் புலம்பெயர் தேசங்களின் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளைத் தொடங்குவதற்குப் பதிலாகத் தமிழை ஒரு மொழிப்பாடமாக் கற்பிக்கும் கல்வி நிலையங்களின் தேவையை உணரவேண்டும். அந்தந்த நாட்டுக் கல்வித்திட்டத்திற்குள் – பாடத்திட்டத்திற்குள் தமிழும் ஒரு பாடமாக – விருப்பப் பாடமாகப் படிக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதனைக் கற்றுக்கொண்டு மேல்படிப்பு படிக்க நினைப்பவர்கள் தமிழ்மொழிப் பகுதிகளான தமிழ்நாடு அல்லது இலங்கையின் தமிழ்ப்பகுதி பல்கலைக் கழகங்களுக்கு வரும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். 

அப்படி வருபவர்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்கிடலாம். எல்லாவற்றையும் தாண்டித் தமிழியலின் உயராய்வுகள் நடக்க வேண்டிய நிறுவனங்களை தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் தொடங்கிப் பன்னாட்டு ஆய்வு உறவுகளை உண்டாக்கவேண்டும். மலேசியாவிலும் புலம்பெயர் நாடுகள் ஒன்றிலும் தொடங்கிட முயற்சி செய்யலாம். இவற்றில் சேர்வதற்குக் கடும் போட்டி நிலவும் வகையில் உதவித் தொகைகளை வழங்க வேண்டும். அதற்கான நிதியாதாரங்களை அரசுகள் உருவாக்கித் தரவேண்டும். 

தனியார் மயம் தலைதூக்கியுள்ள இக்கால கட்டத்தில் தனியார் நிறுவனங்களும் தங்களின் பங்களிப்பைச் செய்யலாம். அவற்றில் பணியாற்றத் தேவையான ஆசிரியர்களை உருவாக்கவேண்டும். அத்தோடு உலகெங்கும் உள்ள இந்தியவியல் துறைகளிலிருந்து அதிகச் சம்பளம் கொடுத்துக் கடன் வாங்கியாக வேண்டும். நிரந்தரமாகவும் குறுகிய காலத்திற்கும் ஆசிரியர்களைக் கடன் பெற்றே அந்த மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ளும் பிறநாட்டு மாணவர்களுக்கு நாம் உதவிசெய்வதுபோலவே, நமது தமிழ்மாணவர்கள் பிறநாட்டு மொழிகளைக் கற்றுத்தேர்ந்தவர்களாக்கவும் உதவி செய்யவேண்டும். அந்நிலையில்தான் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழுக்கு வரும். தமிழர் அறிவும் புலமையும் இலக்கியப்பாரம்பரியமும் பிறமொழிகளுக்குள் செல்லும் .

******************

2016 இல் பாஸ்டன் நகரில் இரண்டு மாதம் தங்கி இருந்தேன். மகன் அங்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றினார். பாஸ்டனில்  இருக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் போய்வந்தேன். அப்போது எழுதியது.

தமிழுக்கு இருக்கை ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையோடு நிதிதிரட்டும் பணியில் இரண்டு இந்திய- அமெரிக்க மருத்துவர்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற தகவலின்பேரில் இந்தப் பல்கலைக்கழகம் தமிழர்களின் வாயிலும் மூளையிலும் பதிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 400 ஆவது ஆண்டுவிழாவைக்கொண்டாட இன்னும் 20 ஆண்டுகள் உள்ளன. 1636 இல் தொடங்கப்பட்ட மசுசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரான் பாஸ்டன் நகரில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இருக்கும் பகுதியின் பெயர் கேம்பிரிட்ஜ். இப்பல்கலைக்கழகம் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பழையது.

ஜான் ஹார்வர்ட் என்ற புரவலர் தனது நூலகத்தையும் பல்கலைக் கழகத்திற்காகத் தனது எஸ்டேட்டில் பாதியையும் தந்ததால் அவரது பெயரையே பல்கலைக்கழகத்திற்குச் சூட்டியிருக்கிறார்கள். பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கி இரண்டாண்டுகள் கழித்து 1638 இல் அவர் மரணம் அடைந்திருக்கிறார். அவரது மிகப்பிரமாண்ட சிலை பல்கலைக்கழகத்தில் முக்கிய வளாகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வரும் மாணவர்களும் பார்வையாளர்களும் அவரது காலடிகளைத் தொட்டு நின்று படம் எடுத்துக்கொள்வதால் பாதப்பகுதியின் கறுப்புவண்ணமே தேய்ந்திருக்கிறது. நானும் ஒரு படம் எடுத்துக்கொண்டேன்.

அச்சிலையிலிருந்து இடதுபுறம் போனால் பிரமாண்டமான நூலகம் இருக்கிறது. பின்னே இருப்பது தேவாலயம். தத்துவத்துறையும் அருகில் தான் இருக்கிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிக்காட்ட ஒருமணிநேரத்திற்கொரு வாகனம் கிளம்புகிறது. முன்பதிவுசெய்து வாகனத்திலிருந்தபடி பார்த்துவரலாம்.

9 மாணவர்களோடும் ஒரேயொரு ஆசிரியரோடும் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 20,000.பட்டம் வழங்கும் 12 புலங்களின் கீழ் ஏராளமான துறைகள் செயல்படுகின்றன. பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, முனைவர் பட்ட ஆய்வுகள், தொழில்துறைப் படிப்புகள் என அனைத்தும் வழங்கும் புலங்கள் கொண்ட உலகத்தரப்பல்கலைக்கழகத்தில் படித்த அதன் முன்னாள் மாணவர்கள் அமெரிக்காவைத் தவிர்த்து 190 நாடுகளில் இருக்கிறார்கள். 3,60,000 முன்னாள் மாணவர்கள் இப்போதும் உயிருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என அதன் வலைத்தளம் சொல்கிறது.

தரம் பேணுவதில் கவனமாயிருக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கான நிதியை வழங்கும் அறக்கட்டளைகள் 1300 இருப்பதாகத் தெரிகிறது. பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வுகள், வாய்மொழித்தேர்வுகள், விவாதங்களில் கலந்துகொண்டு தேர்வுபெற்றுவிட்டால், படிப்பு உதவுகள் தர அந்த அறக்கட்டளை நிதிகள் காத்திருக்கின்றன. ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள அறக்கட்டளை நிதியும் பெருந்தொகையோடு செயல்படுகிறது. இந்தியப்பல்கலைக்கழகங்களில் இப்படியொரு நிதியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அமெரிக்கப்பல்கலைக்கழகங்களில் மிகப்பழைமையானதும் உலகத்தரப் பல்கலைக்கழகங்களில் முதலிடத்தில் இருப்பதுமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே தமிழ்ப்படிப்பு இருக்கிறது. தென்னாசியவில் துறையின் பகுதியாக இருக்கும் அத்துறையில் ஒருவிரிவுரையாளர் தமிழ் கற்றுத்தருகிறார். சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் நார்மனிடம் பயின்ற ஜோனாதன் ரிப்ளேயைச் சந்திக்க முடியவில்லை. விடுமுறைக்காலம் என்பது ஒருகாரணம். இத்துறையைத் தாண்டித் தமிழுக்கென ஓர் இருக்கையை ஆரம்பிக்க வேண்டுமென்றால் ஒருபேராசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்குப் பெரும்பணம் வைப்புநிதியாக வைக்கவேண்டும்.

உலகத்தின் மற்ற செவ்வியல் மொழிகளான லத்தீன், கிரீக்,சம்ஸ்க்ருதம், ஹீப்ரு, பெர்சியன், சீனம் ஆகியனவற்றோடு ஹார்வர்ட்டில் இணைத்துவைத்துத் தமிழையும் நிலைநிறுத்தவேண்டும் என்ற ஆர்வம் கொண்டு செயல்படும் மருத்துவர்கள் சம்பந்தனும் ஜானகிராமனும் ( Dr. S.T. Sambandam , Dr.V. Janakiraman) தங்கள் பங்காக ஒருமில்லியன் டாலரைக்கட்டி இருக்கையை உறுதிசெய்திருக்கிறார்கள். இன்னும் கட்டவேண்டிய பணம் 5 மில்லியன் டாலர்கள். அவர்களோடு அமெரிக்காவில் இருக்கும் செவ்வியல் இலக்கிய மொழிபெயர்ப்பாளர் வைதேஹி ஹெர்பர்ட், கனடா வாழ் தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் போன்றோர் இணைந்திருக்கிறார்கள்.
6 மில்லியன் அமெரிக்க டாலர் ( இந்தியப் பணத்தில் 40 கோடி ரூபாய்) வைப்புநிதியாக வைத்து உருவாக்கப்போகும் இந்தத் தமிழ் இருக்கை என்னசெய்யப்போகிறது என்ற பார்க்கும்போது தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களைக் கற்றுத்தரும்/ ஆய்வுசெய்யும் இருக்கையாக அமையும் எனக் குறிப்புகள் கூறுகின்றன. இதே நோக்கத்தில் இயங்கும் தமிழ்ச்செம்மொழி நிறுவனம் தனது நிதியை வழங்கிச் செவ்வியல் தமிழ் இருக்கையை உறுதிசெய்யலாம். தமிழுக்கு ஓரு உயரிய அங்கீகாரம் கிடைக்கும் நிலையை இப்போதிருக்கும் மைய அரசு உறுதிசெய்யும் என்று எனக்குத் தோன்றவில்லை. தனியார் நிதிநல்கைகளோடு நிறுவப்படும் ஹார்வர்ட் தமிழ் இருக்கைத் தமிழை உலகவரைபடத்தில் நிலைக்கச்செய்யும் என்ற வகையில் இம்முயற்சி வரவேற்கத்தக்கது.

இந்த இடத்தில் இன்னொன்றையும் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. இதுபோல் உலகப்பல்கலைக்கழகங்கள் பலவற்றில் தமிழ் இருக்கைகள் இருக்கின்றன. நான் பணியாற்றிய போலந்து நாட்டில் வார்சா பல்கலைக்கழகத்திலும் க்ராக்கோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கைகள் உள்ளன. அவற்றிற்குத் தமிழ்ப்பேராசிரியர்களை வருகைதருபேராசிரியர்களாக அனுப்புவதில் இருந்த தாராளத்தன்மை குறைந்து புதியநெருக்கடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

9 மாதம் மட்டுமே என்ற காலக்குறைப்பின் காரணமாக போக நினைப்பவர்களும் தடுமாறுகிறார்கள். போனாலும் அங்கிருக்கும் மாணாக்கர்களுக்குப் பயன்படும் விதமாகப் பாடத்திட்டத்தில் பங்கெடுக்க முடியாத நிலை உருவாகிவிட்டது. பிரான்சு, ஜெர்மனி, செக், இங்கிலாந்து, பின்லாந்து, ரஷ்யா போன்ற ஐரோப்பிய நாடுகளில் தொடங்கப்பட்ட தமிழ்த்துறைகள் மூடப்பட்டு வருகின்றன. சீனா, ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகளில் அந்தந்த அரசுகளின் உதவியாலும் ஆர்வத்தாலும் மட்டுமே தமிழ்ப் பேராசிரியர்கள் நீடிக்கிறார்கள். கனடா, ஆஸ்திரேலியா போன்ற புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்கள் தங்கள் முயற்சியால் தமிழ்த்துறைகளைத் தொடங்கியிருக்கிறார்கள். இவைகள் எல்லாவற்றையும் தமிழர்களும் தமிழ் அரசுகளும், தமிழர்களைத் தம் குடிகளாகக் கருதும் பேரரசுகளும் கவனிக்கவேண்டும்; நிதி வழங்கவேண்டும். மனது இருந்தால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளோடு பரிவர்த்தனைத் திட்டங்களின் அடிப்படையில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பரிமாறிக்கொள்ளலாம்.

அயல்நாடுகளில் தமிழ்வளர்ச்சிக்கு உதவும் அதேநேரத்தில் உள்நாட்டில் தமிழ் வளர்ப்பதற்காகத் தொடங்கப்பட்ட தமிழியல் நிறுவனங்களான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம், செம்மொழி நிறுவனம், உலகத்தமிழ்ச்சங்கம், பல்கலைக்கழகத் தமிழியல் துறைகள் போன்றவற்றிற்கும் நிதியுதவி வழங்கி ஆய்வுகளை ஒருங்கிணைப்புச் செய்யும் பொறுப்பை அரசுகள் மேற்கொள்ளவேண்டும். தமிழ் செம்மொழியாக மட்டுமல்லாமல், வாழும் மொழியாகவும் வளரும் மொழியாகவும் ஆகவேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுஜாதா - நினைவுகளில் நிற்பார்

திறந்தநிலைப் பொருளாதாரம்: தேசிய,திராவிட இயக்கங்கள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்