வேதாகமத்தின் வாசனை வீசும் கவிச்சொற்கள்


தமிழ்க்கவிதை மரபில் செவ்வியல் அகக்கவிதைகளுக்கு நீண்ட தொடர்ச்சியும் நீட்சியும் உண்டு. அத்தொடர்ச்சியை உரிப்பொருள் சார்ந்த நீட்சி எனவும், வடிவம் சார்ந்த நீட்சி என்றும் அடையாளப்படுத்தலாம். அன்பின் ஐந்திணைகளான முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என்பனவற்றின் உரிப்பொருட்களான இருத்தல், ஊடல், புணர்ச்சி, இரங்கல், பிரிவு என்பனவற்றிற்கு அதிகம் தொடர்ச்சி உண்டு. அதனை இங்கே விரிவாகச் சொல்ல வேண்டியதில்லை. ஏனென்றால் அந்த நீட்சியை மைக்கல் கொலினின், “இவனைச் சிலுவையில் அறையுங்கள்” எனத் தலைப்பிட்ட கவிதைத் தொகுதியில் காணமுடியவில்லை. அதற்கு மாறாக அகக்கவிதையின் வடிவத் தொடர்ச்சியின் நீட்சியாக அவரது கவிதைகள் அமைந்துள்ளன. அப்படியான ஒரு தொனி ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கும்போது என்னை வந்து மோதுவதை உணர்ந்துகொண்டே இருக்க முடிந்தது.

அகக்கவிதைக்குள் கவிதையின் சொல்லியாக உருவாக்கப்படும் தோழி, செவிலி, பாங்கன், தாய், கண்டோர் போன்ற துணைப் பாத்திரங்கள் முதன்மைப் பாத்திரங்களான தலைவனை நோக்கியும் தலைவியை நோக்கியும் உரையாடுவார்கள். அப்படி உரையாடும்போது கேட்கும் இடத்தில் இருக்கும் முதன்மைப் பாத்திரங்களைக் கடிந்துரைக்காமல்,  “சூழலைப் புரிந்துகொண்டு முடிவெடுங்கள்; இதுதான் நல்லது; இதற்கு மாறாகச் செயல்பட்டால் பிழைகள் வந்துவிடும்; ஊர் அலர் தூற்றல் நிகழலாம்; எதிர்காலம் சிக்கலாகலாம்” போன்ற ஆலோசனைகளை முன்வைப்பர். அதனைக் கேட்டுத் தலைவனும் தலைவியும் நல்ல முடிவுகளை எடுப்பார்கள். இந்தக் கோரிக்கையும் முடிவெடுப்பதுமான உரையாடல் வடிவமே அகக்கவிதையின் எளிமையான வடிவம். இந்த எளிய வடிவத்தைப் பக்திக் கவிதைகள் தனதாக்கிக் கொண்டன. பக்தனின் நிலையில் தங்களை வைத்துக்கொண்டு, தங்களுக்கு அருள் செய்யவேண்டிய இட த்தில் இருக்கும் இறையிடம் தங்களின் நிலையை – இயலாமை, துயரம், இன்னல், வறுமை, பிணி, குற்றநிலை, அறியாமை போன்றனவற்றை முன்வைத்து வேண்டுவார்கள். அப்படி வேண்டுவதின் நோக்கம், அதனைப் பொறுத்து அருளவேண்டும்; தங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என இறைஞ்சுவதுதான்.

பைபிள் என்னும் வேதாகமத்தின் சொல்லாடல்களில் முக்கியமானவை அன்பு, எதிர்பார்ப்பு, நம்பிக்கை, இரக்கம் போன்றனவாக வெளிப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக இறைப்பற்று என்பது எளிய மனிதர்களின் மீதான பற்றும் சேவைகளுமே இரக்கமும் பிணிநீக்கமும் என்பனவும் வெளிப்பட்டுள்ளன. இவற்றை வலியுறுத்த எதிர்மறைச் சொல்லாடல்களாக பாவம், குற்றம், சாபம், தண்டனை போன்றனவற்றையும்  விரிவாகப் பேசுகிறது வேதாகமம்.  முன்னிலை நோக்கிப் பேசும் உரையாடல்களாகவும் உருவகங்களாகவும் எழுதப்பெற்ற வேதாகமத்தைப் பள்ளிக்காலத்தின் விடுதி வாழ்க்கையில் கேட்டு வளர்ந்தவன். அந்தக் கதைகளும் கவிதைத் தன்மைகளும் எனது தன்னிலையை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவை என்றுகூடச் சொல்லலாம்.

இறையைத் தலைமைப் பாத்திரமாக முன்னிறுத்திப் பக்தியைச் செலுத்தும் மானுடர்களை இரங்கலுக்குரியவர்களாக ஆக்கிக்கொண்டு  தங்களை முன்வைக்கும் தமிழ்ப் பக்திக்கவிதையின் வடிவத்தை உலகின் பக்திக் கவிதை வடிவமாகவே சொல்லலாம். ஒருவிதத்தில் இது மன்றாட்டு நிலை. இந்த மன்றாட்டு நிலையை குர்ரானிலும் வாசிக்கமுடியும்; வேதாகமத்திலும் காணமுடியும். தேவகுமாரனின் செயல்களையும் வாழ்க்கையையும் உருவகக்கதைகள் வழியாகவும், நேரடி உரைகள் வழியாகவும் பேசும் மத்தேயு, யோவான், லூகாஸ், பேதுரு போன்ற  இறைத்தூதர்களின் எழுத்துகளைத் தாண்டி சங்கீதம், கொரிந்தியர் போன்றன தன்னிலையை முன்வைத்து இறைஞ்சும் கவிதை வடிவம் கொண்டவை. அவ்வடிவத்தைத் தனது கவிதைக்கான வடிவமாக ஆக்கியிருக்கிறார் மைக்கல் கொலின். ஆனால் அதனை அப்படியே உள்வாங்கிக் கொள்ளாமல் நிகழ்காலத்துக்கேற்ற மாற்றுகளோடு வெளிப்பட்டுத் தனது அடையாளத்தை உருவாக்கியுள்ளார் கவி மைக்கல்.

அந்த மாற்றம் நிகழ்கால மனிதர்களைக் கண்டு – அவர்களின் தன்னலம், ஆசை, குற்றச்செயல், நம்பிக்கையின்மை, அந்தரங்கமான தீவினைகள், தெரிந்தே செய்யும் தவறுகள் போன்றனவற்றைக் கண்டு அடையும் எரிச்சலும் கோபமாக வெளிப்பட்டுள்ளன. நம்பிக்கைத் துரோகம், காட்டிக்கொடுத்தல், பேராசை, இரக்கமின்மை போன்றவற்றைத் தனிநபர்களாகவும் அமைப்பின் வழியாகவும் செய்யும் சூழலைக் கடுமையான சொற்களால் முன்வைக்காமல் கவி மைக்கல் கொலின், வேதாகமத்தின் சொல்லாடல்களைப் போலவே முன்வைக்கின்றார்.

வேதாகத்தின் தொனியை உள்வாங்கிக் கொண்டு அதில் இடம்பெற்ற பல உவமைக் கதைகளையும் உருவகங்களையும் நமது காலத்திற்கேற்ப மறுவிளக்கமும் மறுவாசிப்பும் செய்துள்ள வகையில் இந்தக் கவிதைகள் நவீனத்துவக் கவிதைகளாக வெளிப்பட்டுள்ளன. இந்தக் கவிதைகளை  வாசிக்கும்போது ஒவ்வொரு பக்கத்திலும் வேதாகமத்தின் மொழியின் ஓசை நுட்பத்தையும் முன்மொழிவுத் தாள லயங்களையும் உணர்ந்துகொண்டே வாசிக்க முடிந்தது. இந்தக் கூற்றுகளை விளக்குவதற்காக க் கவிதைப்பரப்பில் சில கவிதைகளை எடுத்துக்காட்டிப்பேசலாம். அதைவிடவும் அந்த வாசிப்பையும் புரிதலையும் வாசிப்பின்பத்தையும் உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.

கவி மைக்கல் கொலினுக்கு வாழ்த்துகள்

 

  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்