நெடுமுடிவேணு : நினைவில் இருப்பார்
இந்திய அளவில் தொடங்கிய நடப்பியல் அலை ஒவ்வொரு இந்திய மொழிகளிலும் ஒவ்வொரு விதமாகத் தாக்கத்தையும் பங்களிப்பையும் உருவாக்கியது. மலையாளத்தில் குறிப்பான சூழலில் நிகழும் நிகழ்ச்சிகளையும் அவற்றில் பங்கேற்ற வகைமாதிரிப் பாத்திரங்களையும் உருவாக்கிய பங்களிப்பாக வெளிப்பட்டது. மரபான மலையாள சமூகத்தில் உடைப்புகளை ஏற்படுத்தும்போது உண்டாகும் முரண்பாடுகள் அத்தகைய படங்களின் உரிப்பொருட்களாக வெளிப்பட்டன. அந்த வெளிப்பாட்டுக் காட்சிகளில் மாற மறுக்கும் முந்தைய சமூகத்துப் பிரதிநிதிகளின் வகைமாதிரிப் பாத்திரங்கள் பல உருவாக்கப்பட்டன.
மலையாள நாடக இயக்கங்களிலிருந்து சினிமாவுக்குள் நுழைந்த கோபியும் வேணுவும் ஏற்று நடித்த பாத்திரங்களின் பொதுக்கட்டமைப்பு பற்றிப் பேரா.சே.ராமானுஜம் ஒரு பயிலரங்கில் பேசிய உரையும் படங்களின் காட்சித் துணுக்குகளும் இப்போதும் நினைவில் இருக்கின்றன. பெருமையோடு இருந்து வீழ்ச்சியடையும் துன்பியல் பாத்திரம் என்பது அப்பாத்திரங்களின் கட்டமைப்பு. தனிமனிதத் தன்னிலையின் வீழ்ச்சிக்குள், சமூக உளவியலின் தாக்கம் கொண்ட நுட்பங்களும் இருக்கும். நுட்பங்களோடு கூடிய உடலசைவுகளையும் முக உணர்வுகளையும் உள்வாங்கி வெளிப்படுத்தக் கூடிய நடிகர்களாகச் சிலர் இருந்தனர். அவர்களில் கோபியும் திலகனும் முன்பே மறைந்துவிட்ட நிலையில் வேணுமட்டுமே அந்த இடத்தை நிரப்பிக்கொண்டிருந்தார். இந்திய சினிமா முழுமையும் வணிக நோக்கம் கொண்டதாக மாறிய காலகட்டத்தில் வணிக சினிமாவின் புனைவில் நம்பகத்தன்மையை உண்டாக்க நினைத்த இயக்குநர்கள் நடப்பியல் நிகழ்வுகளையும் அவற்றில் நடிக்க வேணுவையும் பயன்படுத்தினார்கள். தமிழிலும் அத்தகைய காட்சிகளில் நெடுமுடிவேணு விதம்விதமாகத் தோன்றியிருக்கிறார். இந்திய சினிமாவில் வகைமாதிரிப் பாத்திரங்களை ஏற்ற நடிகரின் மரணம் நினைத்துக்கொள்ளக்கூடிய ஒன்று..
கருத்துகள்