மிதக்கும் வெளிகளை எழுதுதல்: நவீன கவிதையின் இரண்டு புதுமுகங்கள்

இலக்கிய உருவாக்கம் பற்றிப் பேசும் இலக்கியவியல் நூல்கள் முன்வைக்கும் அடிப்படை விதிகள் சில உள்ளன. காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றையும் இலக்கியத்திற்குரிய பொதுக்கூறுகளாக முன்வைக்கின்றன. அம்மூன்றையும் ஓர்மைப்படுத்தி இணைப்பதின் வழியாக இலக்கிய வடிவங்கள் பொதுத்தன்மையோடு உருவாகின்றன. அவ்விலக்கிய வடிவங்களின் வெளிப்பாட்டுப் பாங்கும் அதன் வழி உருவாகும்/உருவாக்கும் மனநிலை சார்ந்து வடிவங்களின் சிறப்புநிலைகள் கவனம் பெறுகின்றன.
அடிப்படைக்கூறுகள் மூன்றையும் ஒவ்வொரு இலக்கிய வடிவமும் கொண்டிருக்க வேண்டும் என்பதும் இல்லை. அதிலும் கவிதை இம்மூன்றையும் கைவிட்டுவிட்டு உணர்வலைகளை மட்டும் உருவாக்கித் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் இலக்கிய வடிவம். எப்போதும் கவிதைக்குள் அலையும் பாத்திரங்களின உணர்வுகளென்னும் மெய்ப்பாடுகளை வாசிப்பவர்களுக்குக் கடத்திவிடுவதின் மூலம் கவிதையின் வகைமைகள் பிரிக்கப்படுகின்றன.

வெளியையும் காலத்தையும் முதன்மையாக அடையாளப்படுத்திய திணைக்கவிதைகளைத் தமிழ்க்கவிதையின் பெருமரமரபாகவும் அடையாளமாகவும் இலக்கியவரலாறுகளும் திறனாய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர். அதிலிருந்து அவ்வப்போது விலகல்கள் நடந்துள்ளன. அவ்விலகல்களுக்குப் பெரும் அமைப்புகளும் சிற்றமைப்புகளும் காரணங்களாக இருந்துள்ளன. அமைப்பல்லாத தனிநபர்களும் காரணங்களாக இருந்திருக்க வாய்ப்புண்டு. அது குறித்து உறுதியான வரலாற்றுத்தரவுகள் நமக்கு இல்லை. எல்லாவகையான மாற்றங்களையும் குறிப்பிட்ட அமைப்புகளின் பின்னணியிலேயே இலக்கிய வரலாறுகள் விவரிக்கின்றன.

விவரிக்கப்பெற்ற வரலாற்றில் பெரும் விலகலைச் செய்த போக்காக சித்தர்களின் கவிதைப்போக்கைச் சொல்லவேண்டும். சித்தர்களின் கவிதைகளுக்குக் குறிப்பான வெளி, காலம், பாத்திரம் போன்றவற்றைச் சுட்டிக்காட்ட முடியாது. எழுதுபவர் அல்லது கவிதை சொல்லியின் ஒற்றை அடையாளத்தின் வழியாக முன்வைக்கும் காட்சிப் படிமங்களும் கருத்தியல் முன்வைப்புகளுமே அவற்றைத் தனித்துவமான போக்காக அடையாளப்படுத்தின. இந்தப் போக்கு பெரும்போக்குக்கு இணையான மாற்றுப்போக்காகப் பல காலகட்டங்களில் தொடர்ந்தும் வெளிப்பட்டுள்ளது; தொடர்பற்றும் வெளிப்பட்டுள்ளது.

*****

நவீனத்துவத்தின் வருகையைக் கட்டியம் சொன்ன பாரதியிடம் சித்தர் மரபின் சில அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளன. அவரது காலத்திற்கு முன்பே குணங்குடி மஸ்தான் சாகிபு, தக்கலை பீர்முகம்மது அப்பா போன்றோர் சித்தர் மரபை அதிகமும் முன்னெடுத்தவர்களாக வெளிப்பட்டுள்ளனர். அந்த வெளிப்பாட்டுக்கு இசுலாமியச் சமய மரபின் இறைநம்பிக்கையும், தத்துவச்சொல்லாடல்களும் காரணங்கள் என்பது விரிவான ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டவை.

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய நவீனக் கவிதைகளின் முதன்மையான அடையாளமும் காலத்தையும் வெளியையும் மறைத்துக் கருத்தியல்களுக்கும், கருத்துக்களை வெளிப்படுத்தும் படிமங்களுக்கும் முதன்மை கொடுப்பனவாகவே இருந்ததைத் திறனாய்வுகள் பல நிலைகளில் விளக்கியுள்ளன. குறிப்பாக எழுத்து மரபில் வந்த பெரும்பாலான கவிகள் இவ்விரண்டையும் அழித்துத் தனிமனிதத் தன்னிலைகளை முன்வைப்பதையே கவிதையின் முதன்மையான அடையாளமாகக் கருதினார்கள். அந்தப்போக்கு இலங்கைப் பரப்பிற்குள் ஒற்றைத்தளத்தில் வெளிப்படவில்லை. அங்கு வாழும் தமிழ்பேசும் மனிதர்களிடையே உருவாகியுள்ள நவீனத் தமிழ்க்கவிதைக்குள் பொதுநிலைத் தமிழ் அடையாளமாகவும் சிறப்புநிலைத் தமிழ் அடையாளமாகவும் வெளிப்பட்டுள்ளன.

1980 களில் தொடங்கி யாழ்ப்பாண மையத்தையும், ஈழப்போராட்டப் பின்னணியையும் கொண்ட நவீனக் கவிதைகள் காலப்பின்னணியையும் வெளியடையாளங்களையும் தொலைக்காமல், திணைக்கவிதைகளின் நீட்சியாக வெளிப்பட்டுள்ளன. இந்தப் போக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்ட போக்கைக் கிழக்கிலங்கைப் பகுதியிலிருந்து எழுதும் இசுலாமியக் கவிகள் கொண்டிருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் எனது வாசிப்புக்குக் கிடைத்த தொகுதிகளிலிருந்து இந்த அவதானிப்பைச் சொல்கிறேன். அதன் நீட்சியில் புதிதாக எழுத வரும் இசுலாமியக் கவிகளும் இணைகின்றார்கள் என்பதற்கு அண்மையில் நான் வாசித்த இந்த இரண்டு கவிதைத்தொகுதிகளும் சான்றாக நிற்கின்றன. யசோதரையின் வீடு என்ற தலைப்பில் வந்துள்ள ரியலாஸின் கவிதைத்தொகுதியும் நாங்கூழ் என்ற தலைப்பில் வந்துள்ள மின்ஹாவின் கவிதைத்தொகுதியும் அவர்களின் முதல் கவிதைத் தொகுதிகள் என்ற நிலையிலேயே ‘வெளி தொலைத்த மரபில்’ இணைகிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. அத்தொகுப்பிலிருந்து சில கவிதைகளை வாசித்து இதனை விளக்கலாம்.


முதலில் ரியலாஸின் தொகுப்பில் உள்ளும் வெளியும் என்ற தலைப்பிட்ட கவிதையை வாசிக்கலாம்:

நான் பேசிக்கொண்டிருந்தேன்/ அவள் மௌனமாக இருந்தாள்

ஆயினும் /குளத்தில் கல்லெறியவில்லை /

மர இலைகளைப் பறித்து/ இருகூறாக்கி வீசவில்லை

நான் பேசிக்கொண்டிருந்தேன்/ அவள் மௌனமாக இருந்தாள்

வேறு வழியில்லை/ திராட்சை ரசத்திலிருந்து நரி விலகியது போல்

உரையாடல் கலைந்தது

உங்களைப் போலவே அவளும்/ எனக்குச் சொல்ல நினைத்திருப்பாள்

தனியொருவன் கதைப்பதை/ எவ்வாறு உரையாடலென அழைக்கலாமென்று

அவள், அவன் எனப் பாலடையாளங்களின் வழி உருவாக்கப்படும் காதல் சந்திப்பு என்னும் நிகழ்வில் ஆணின் ஆர்வமிகுதியையும், பெண்ணின் நிதானத்தையும் முன்வைக்கும் கவிதைக்குள் குறிப்பான காலமோ, வெளியோ உருவாக்கப்படவில்லை. காதல், தவிப்பு, மனவோட்டம் போன்றவற்றை எழுதும் கவிதைகளில் வெளியும் காலமும் முக்கியத்துவம் அற்ற கூறுகள் என்பதை உணர்ந்த நிலையில் காட்சிப்படுத்தப்படும் நிகழ்வு வழியாக வாசிக்கும் ஒவ்வொருவரும் அவரவர் அனுபவங்கள் சார்ந்து வெளியையும் காலத்தையும் உருவாக்கிக் கொள்ள வாய்ப்பளிக்கிறது இக்கவிதை. இதேபோன்றதொரு காட்சிப்படுத்தலின் அரூபத்தை மற்றொரு கவிதையிலும் செய்கிறார் ரியலாஸ். அக்கவிதையின் தலைப்பு: கனவு காண்பவனின் காட்சியறை

ஓர் இரவு/ தூக்கத்தைத் தொலைத்து/

தெருவில் அலைந்துகொண்டிருந்தது /சூரியன்

மறுநாள், ஒரு பகல்வேளை,

தூக்கத்தைத் தொலைத்து / அதே தெருவில் /

அலைந்துகொண்டிருந்தது நிலவு

நிலவினையும், சூரியனையும் தன்னையும்/

ஒரு படுக்கை விரிப்பில்/ தூங்க வைக்கும் ஏற்பாடுகளில்/

இரவு அறை / யன்னல்களைத் திறந்து/

தூக்கம் தொலைந்து/ தெருவில் அலைந்துகொண்டிருந்தான் /

வீடற்ற யாசகன்.

வீடற்ற யாசகனின் அலைதலில் இருக்கும் வலியையும் துயரத்தையும் காட்சிப்படுத்தும் இக்கவிதை நடப்பை முரண்பாடாக்கிக் காட்டுவதின் வழியாகவே நிகழ்த்திக் காட்டுகிறது. பகலுக்குரிய சூரியனை இரவுக்குரியதாகவும், நிலவைப் பகலுக்குரியதாகவும் ஆக்குவதன் வழியாக நிதானப்படுத்தும் கவிதைச் செயல் யாசகனையும் அதனோடு ஒரு படுக்கை விரிப்பில் இணைத்துவிடுவதன் மூலம் படிமங்களைக் கட்டமைத்துள்ளது.

யசோதரையின் வீடு தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையிலும் உருவாக்கும் படிமங்கள் கவிதைக்குள் அலையும் பாத்திரங்களின் மனவுணர்வைக் கடத்தும் வேலையைச் செய்கின்றன. ஓர் உயிருள்ள வெப்பம் என்று கவிதைக்குத் தலைப்பிடுவதின் மூலமே படிமக்காட்சியின் தகிப்பை உணர்த்தும் திறன் கொண்டவராக வெளிப்பட்டுள்ள கவி, இன்னொரு கவிதையில். “யாருமற்ற பெருவெளியில்/ தாகித்தலைந்திருந்த வெயிலுக்கு/ வியர்த்துக்கொட்டியது” எனத்தொடங்கி “இப்படித்தான்/ பாலைவனம் இல்லாத ஊரில் பிறந்த/ ஒரு வெயிலின் கதை/ நாடற்ற அகதியாய்/ அலைந்துகொண்டிருந்தது” என முடிக்கும்போது வாசிக்கப்பட்ட கவிதை உருவாக்கும் உணர்வலைகள் வெயிலின் தகிப்போடு வாசக மனத்திற்குள் அலைவதாக மாற்றம் பெறுகிறது. அந்த மாற்றம் அனைத்துவகையான அகதி நிலையின் அலைவாகக் கவிதைக்குள் நகர்கிறது. இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கவிதைக்குள் உருவாக்கப்பட்டுள்ள படிமங்களும் அவற்றின் வழியே மிதக்கும் உணர்வுகளும் காலவெளிகளைத் தாண்டியவை; கவிதை அழகியலை உள்வாங்கியவை என்பதை வாசிப்பவர்கள் உணரமுடியும்.

இன்னொரு தொகுப்பான மின்ஹாவின் நாங்கூழ் தொகுப்புக்கவிதைகள் பெண் தன்னிலை வெளிப்பாட்டை முதன்மையாகக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் காலத்தை உருவாக்குவதைத் தவறவிட்டுள்ளன. அந்த இடைவெளியைக் குறிப்பான படிமங்களை அடுக்குவதின் மூலம் வாசிப்புக் கவனத்தைக் குவிக்கும் உத்தியைக் கைக்கொண்டுள்ளது. தொடக்க வரியொன்றின் மூலம் புத்தகங்கள் நிரம்பிய அறைக்குள் அழைத்து வாசிப்பவர்களை அழைத்துச் செல்லும் மின்ஹா, மனித மையச் சிந்தனையால் இந்த உலகம் சந்திக்கும் சிக்கல்களை முன்வைக்கிறார்; ஒரு கவிதையின் குறிப்பான உரிப்பொருளாக்குகிறார்.

புத்தகங்களால் அலங்கரிக்கப்பட்ட/ அறையொன்றினுள்/ பொழுதுகளைத்/

தின்றுகொண்டிருக்கும்/ கண்களாய் மட்டும் இருந்துவிடுதல்/

கனவுக்குறிப்பில் கத்தரிக்கப்பட்ட/ இரண்டாவது குறிப்பு

கீழே செல்லரித்துக்/ கொண்டிருக்கும்/ முதலாவது குறிப்பு:

மனிதர்களை விட்டும்/ தொலைதல்

ஓ கரையான்களே/ மனிதர்களை/ விட்டுவிடுங்கள்/ அவர்கள்/ அவர்களையே/ தின்றுகொள்கிறார்கள்.

என விரிக்கின்றது. நிர்மலம் கருத்தது என்று தலைப்பிட்ட கவிதையில் சமகால வாழ்க்கைச் சூழல்,மனிதர்களின் அறவுணர்வுகளை இல்லாமல் ஆக்கும் நிலையை, சாதாரண வாக்கியங்களால் அடுக்கிக்காட்டியுள்ளார். கவிதைக் காட்சியை உணர்ச்சிகளற்ற சாதாரணச் சொற்களாலும் சொற்றொடர்களாலும் விவரிக்கும் போது இரைஞ்சுதல், எச்சரித்தல், ஐயறுதல், வேண்டுதல் போன்றன உருவாகாமல், இருப்பை இருப்பாக மட்டும் சொல்லும் தொனி உருவாகிவிடும். அப்படியொரு தொனியில் விரியும் இந்தக் கவிதையை வாசித்துப்பார்க்கலாம்:

நீதியின்/ கண்கள் /மூடியிருந்தன.

குற்றம்/ பழகுகிறது/ தண்டனை

தண்டனை / என்றால் என்ன

துவர்ப்பைப் /பின் தொடர்கிறது/ பிஞ்சுப்பாகல்

மெல்ல சுவைக்கிறது/ கடினம் / பழகுகிறது

அது /இருளின்/ தீர்ந்துபோன /குடுவைக்குள் /வெளிச்சமாகிறது

அது பகட்டானது/ உள்ளே இருளை/ யார் ஒட்டி வைத்தது

அருகிலோ /தொலைவிலோ/ தேடிப்பாருங்கள்/ உங்களிலும்/ அப்பியிருக்கலாம்

அதிகரித்து/ அதிகரித்து/ குற்றம் மட்டுமே/ எஞ்சுகிறது

யாரெங்கே/ அபகரித்துச்/ செல்வது

நீதியின்/ கண்களைக் / காணவில்லை/ அது குற்றத்தை/ முறையிடுவது

குற்றம் / வெளிச்சத்தில்/ இன்னும்/ பிரகாசமாக/ அலைகிறது/ தென்படாத/ வடிவில்

தனிமனிதர்களாகவும் சமூகத்தின் உறுப்பினர்களாகவும் வாழவேண்டிய நிலையில் குற்றம், தண்டனை, அனுசரித்துப்போதல், நீதிமுறைமை போன்றனவற்றிற்குப் பழக்கப் படுத்திக்கொள்ள வேண்டியது தேவையான ஒன்று. ஆனால் மனிதர்கள் மந்தைகளாக மாறி இவற்றிலிருந்து விலகிச் செல்வதை விடாப்பிடியாகக் கொண்டிருக்கின்றனர்; இதன் பின்னணியில் பொருளியல் தேடலும் தன்முனைப்பும் இருக்கின்றன எனக் கொஞ்சம் உயர்ந்த கவிதைக்குரல் சொல்கிறது. இந்த அளவுக்குக்கூட குரலை உயர்த்தாமல் விரியும் இன்னொரு கவிதையில் வனமென்னும் வெளியையை அரூபமாக்கி நெருப்பு, ஒலி என்னும் குறிப்பான குறியீடுகளால் கவிதையின் அர்த்தத்தளத்தை மாற்றுகிறார்,

வனாந்தரத்தின் கைகள்/ விழுதுகளின் பெருவிருட்சம்

சருகாகிவிடும் இலைகள்/ இளவேனிற்கால/ இலையுதிர் மழை

ஒரு சப்தம் கேட்டுக்கொண்டிருக்கும்/ அடியொற்றிய நகர்வு/

அரவங்களின் நெளிவு/ ஆசுவாசம்

ஒரு வரியில் உயிர் கரிக்கும்/ தீயின் இறுதி மூச்சுகள் சொட்டும்/

சாம்பல் இரத்தம்/ எரித்ததாகவோ/ எரியேற்றியதாகவோ/

ஒரு இசையின் இறுதிச்சுவடு/ ஒலித்துக்கொண்டிருக்கையில்/

சருகை நுகர்ந்த/ தீக்குச்சி மரணம்

வெளியையையும் காலத்தையும் குறிப்பாகக் காட்டாத கவிதைகள் பொதுவாக வாசிப்பவர்களுக்கு தடைகளை ஏற்படுத்தும்; சில நேரங்களில் உள்ளே நுழைய விடாமல் வெளியேற்றிவிடும் வேலையையும் செய்யக்கூடியன. ஆனால் புதிதாய் எழுத வந்துள்ள ரயலாஸும் மின்ஹாவும் அந்தத்தடைகளை உடைக்கும் விவரிப்புகளையும் முரண்நிலைச் சொற்களையும் பயன்படுத்துவதன் வழியாக்க கவிதையியலின் அழகியல் கூறுகளைச் சரியாகப் பயன்படுத்தி வெளிப்பட்டுள்ளனர். இந்த வெளிப்பாடு திணைசார் மரபில் வராத மாற்றுமரபின் தொடர்ச்சியும் நீட்சியும். ஏற்கெனவே முன்வைத்தது போல இடைக்கால மாற்றுப்போக்கான சித்தர் கவிதைகளின் போக்கோடு இணையக்கூடியன. அந்தவகையில் இவ்விரு தொகுப்பும் இலங்கைத் தமிழ்க் கவிதைப்பரப்பில் கவனிக்கத்தக்க தொகுதிகளாக வந்துள்ளன.

=================================================



மின்ஹா/ நாங்கூழ்/ கருப்புப்பிரதிகள்/ சென்னை/2020



றியலாஸ்/ யசோதரையின் வீடு புதுப்புனைவு இலக்கியவட்டம்/மருதமுனை /2020



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்