தலைவி : இரக்கங்களையும் ஏற்புகளையும் நோக்கி.....


நம்முன்னே நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்த்து விளங்கிக் கொள்ளவேண்டும். அதனதன் சூழலில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த அடிப்படையிலேயே நிகழ்வில் இடம்பெறும் பாத்திரங்களுக்கு / மனிதர்களுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலையை வழங்க வேண்டும் என்று சொல்வது நிதானமான பார்வை. வளர்ந்த சமூகத்து மனிதர்கள் அப்படியே நடந்துகொள்கிறார்கள். ஆனால் தமிழர்கள் அப்படி நடந்துகொள்வதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இப்படிக் குற்றம் சாட்டுபவர்கள் அப்படி இருக்கிறார்களா? என்பதைத் தனியாகக் கேட்டுக்கொள்ளலாம்.
நிதான மனிதர்களின் பார்வைப்படியான மனநிலைக்கு வந்துவிட்டால் ஒரு சமூகத்தில் நிலவும் வெறுப்பும் வன்மமும் காணாமல் போய்விடும். ஆனால் நமது காலத் தமிழ்ச்சமூகம் அப்படியொரு இலக்கை நோக்கி ஓரடி எடுத்துவைக்கக் கூடத் தயாராக இல்லை. இதற்கான காரணங்கள் தமிழ்ச் சமூகத்தின் உள்ளோட்டமாக இருக்கிறது என்பதை இங்கே நடக்கும் மிகச்சிறிய நிகழ்வுகளும் ஆகப்பெரும் நிகழ்வுகளும் உறுதிசெய்கின்றன. நிகழ்வுகளை மட்டும் தனியாகக் கவனித்து நிலைப்பாடெடுத்து நகர்வதற்குத் தமிழ்ச் சமூகம் தயாராக இல்லாமல் போனதற்குப் பலவற்றைக் காரணமாகச் சொல்லலாம். சமகாலப்பார்வையற்ற கல்விச்சூழலும் அரசியல் கட்சிகளின் இயக்கமும் முதன்மைக் காரணங்கள் என்றாலும் அறிவுவர்க்கத்தின் ஒதுங்கிய மனநிலையும் அவற்றிற்கிணையான காரணமாகவே இருக்கின்றன. தமிழ்நாட்டின் பொதுப் புத்தியையும் மையநீரோட்டப் போக்கையும் உருவாக்குபவர்கள் வெகுமக்கள் அல்ல; சிறுபான்மைக் குழுக்களே. அவர்கள் இயங்கும் கல்விச்சாலைகள், ஊடக நிறுவனங்கள், சமூக இயக்கங்கள் ஆகியன குறித்து மறுபரிசீலனை தேவைப்படுகின்றன என்பதைக்கூட அவை கவனத்தில் கொள்ளவில்லை.

ஒரு சிறுநிகழ்வையும் பெரும் திரைப்படம் ஒன்றையும் இங்கே விவாதிக்கலாம். வங்கியொன்றில் வீடுகட்டுவதற்காக வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாமல் ‘இரக்கம் வேண்டும்; அவமானமாகிவிடும்’ எனக்கேட்டு அசையும் மதுவந்தியின் உடலை மையமிட்டு இங்கே எழுந்த விவாதங்களின் போக்கைக் கவனித்துப் பாருங்கள்.

மதுவந்தியின் கடந்தகால ஆணவப்பேச்சையும், அரசதிகாரத்தைப் பயன்படுத்திப் பலன் அடைந்த நிலையையும் மறந்துவிட்டுப் “பெண்ணாகப் பாருங்கள்; தனியொரு மனுசியாகப் பார்த்து இரக்கம் கொள்ளுங்கள்” என்ற போதித்தல் மொழி நிகழ்வைப் பெரிய திசைதிருப்பலுக்குள் நகர்த்த முயன்றது. அது முழுமையாக நிறைவேறிடவில்லை.

பொதுவாகப் பொதுப்பரப்பில் இயங்கும் ஆளுமைகளும் ஆளுமைகளாகக் காட்டிக் கொள்பவர்களும் அந்தரங்கத்தைப் பொதுப்பரப்பில் விரிப்பதில்லை. விரிக்கப்படும் நிகழ்வுகளும் கூட நேர்மறைப் பிம்ப உருவாக்கத்திற்குப் பயன்படும் காட்சிகளாகவே இருக்கும். அவர்களின் அறியப்பட்ட கடந்த காலத்து நிகழ்வுகளையும் கூடக் கவனமாக மறந்துவிட்டு நிகழ்காலத்தில் தன்னை நிறுத்தி வெகுமக்களிடம்- மக்கள் திரளிடம் புதிய அடையாளங்களை முன்வைக்கப்பார்க்கிறார்கள். ஆனால் கூட்டமாக்கப்படும் நிலையில் அதுமட்டுமே நிகழும் என்பதில்லை. சமூக ஊடகங்கள் செல்வாக்குச் செலுத்தும் இந்தப் பின் நவீனக் காலத்தின் விளைவுகள் உறுதியான ஒன்றாக இருப்பதில்லை; சிதறலாகவே வெளிப்படும்.சிதறல்களின் தாக்கத்தால் முன்வைக்கப்படும் காட்சிகளும் நிகழ்வுகளும் எதிர்நிலை அர்த்தங்களை உண்டாக்கி விடுவது சூழலின் வலிமை. மதிவந்தியின் கடந்த காலப் பேச்சுகளும் உடல் மொழியும் தமிழ்ப் பொதுப்புத்தியில் ஏற்கப்பட்டவை அல்ல; அவருக்கெதிரான பிம்பத்தையே உருவாக்கித் தந்துள்ளன என்பதை இந்த நிகழ்வுக்குப் பின் எழும் கேலிகளும் எள்ளல்களும் அதன் வழியாக உருவாகும் கருத்துரைகளும் காட்டுகின்றன.

மதுவந்தி தொடர்பான நிகழ்வுக்குச் சமூக ஊடகத்தில் எழுந்த வினைகளும் எதிர்வினைகளும் போலவே இன்னொரு பெரும் முன்வைப்பிலும் நடக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தலைவி என்றொரு புனைவுப் படமாக முன்வைக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். எம்.ஜி.ஆர் என்று ஒலிக்கும் பெயரை எம்.ஜே.ஆராக்கி விடுவதின் மூலமும் வலம்புரிஜானை, ஜான் என அரைப்பெயராக்குவது போலப் பல பெயர்களைப் பாதியாக்கி ஒலிக்கச் செய்வதின் மூலமும் கடந்த கால்நூற்றாண்டுத் தமிழ் அரசியலைக் கட்டுக்குள் வைத்தவரின் உண்மைக் கதையை அரைகுறைப் புனைவாக்கிப் பிம்பக் கட்டுமானம் செய்ய முயன்றுள்ளார் இயக்குநர். போதாமையோடு கூடிய புனைவு காணாமல் போய் ஊடகங்களில் மிதந்த வாழ்க்கை வரலாறே சினிமாவாக ஆகியிருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை என்பது எம்ஜிஆர் -ஜெ.ஜெயலலிதா -ஆர் எம் வீரப்பன் என்ற முக்கோண முரண்பாட்டின் நகர்வுகளால் மட்டும் தீர்மானிக்கப்பட்டதல்ல. பின்னணியில் தமிழர்களின் பொதுப்புத்தி உருவாக்கமும் மையநீரோட்டத்தைக் கட்டுக்குள் வைக்க நினைத்த அறிவுவர்க்கத்தின் சாய்வுகளும் சாதிகளின் திரட்சியும் அடையாள அரசியலின் எழுச்சிகளும் இருந்தன. அவற்றையெல்லாம் பேசுவதைக் கைவிட்டுவிட்டு வெற்றிப்படச் சூத்திரமாக முக்கோணக்கதையொன்றை உருவாக்கித்தந்துள்ளார். அதிகார ஆண்களின் உலகத்தில் தனது திடமான முடிவுகளாலும் புத்திசாலித்தனத்தாலும் சொந்த வாழ்க்கை சார்ந்த இழப்பாலும் தியாகத்தாலும் மேலெழும்பி வந்த தலைவி என்ற பிம்பத்தோடு படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.

பக்குவமற்ற வயதில் நுழைந்த திரைப்பட உலகமும், அரசியல் நகர்வுகளும் சொந்த வாழ்க்கை சார்ந்தும் சிறு வட்டத்தில் உருவான ஆண்களின் மீதான வன்மமும் வெறுப்பும் ஆண்களற்ற உலகம் ஒன்றை அவருக்கு உருவாக்கித் தந்ததைப் படம் வலுவாக முன்வைக்கவில்லை. தமிழ்ச் சினிமாவின் பார்வையாளத்திரளால் ரசிக்கப்பட்ட அந்தப் பெண்ணுடலுக்குள் புகுந்த ரகசியங்கள் நிறைந்த மனம், ஆண்களின் மீது செலுத்திய அதிகாரம், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் எப்படிப் பாதித்தது; அந்தப் பாதிப்பு நேர்மறையானவையா? சீரழிவுப் பாதையா? என்பதைப் புனைவாகப் பேசும் வாய்ப்பை அந்த இயக்குநர் உருவாக்கிக் கொள்ளப்போவதில்லை. தலைவியென்னும் பெருமதிப்புப் பிம்பத்தை உருவாக்குவதே அவரது நோக்கம். அந்த நோக்கம் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி இப்போது பேசமுடியாது. ஏனென்றால் அதன் பலனை அனுபவிக்கப்போகும் ஆளுமையும் அரசியல் இயக்கமும் கண்ணுக்குத் தெரியவில்லை.

ஏ. எல். விஜய் தலைவி ஒன்றின் தொடர்ச்சியாக இரண்டு, மூன்று என இன்னும் சில திரைப்படங்களை எடுக்கலாம். அவரின் ஆவி ஒன்று அலைந்து கொண்டிருக்கிறது என்று கற்பனைசெய்து பேய்ப்படங்களைத் தொடர்படங்களாகக் கூட படங்களும் எடுக்கலாம். ஆனால் அவற்றைப் புனைவாக்கிச் சொல்லப் போதிய ஆதாரங்களை -வரலாற்றுத் தரவுகளைத் திரட்டுவது அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் தனது சபதம் போலத் திரும்பவும் இந்தச் சட்டசபைக்குள் முதல்வராகவே நுழைவேன் என்பது நிறைவேறியபின் அவரது தனிப்பட்ட வாழ்க்கை முழுவதும் ரகசியங்களாகிவிட்டன. பெரும் அரண்மனையையொத்த போயஸ்தொட்டத்து ரகசியங்களை துப்பறியும் இதழியல்கள் திருப்பங்கள் கொண்ட புனைவுகளாக மட்டுமே தந்துள்ளன. அவற்றைத் தாண்டிய வாழ்க்கைப் புனைவை உருவாக்கும் திரைப்பட இயக்குநராக ஏ எல் விஜய் வெளிப்பட வாய்ப்புகள் குறைவு.

தலைவி என்பதைத் தமிழின் வரலாற்றுப் பின்னணியில் பார்க்காமல் தனியொரு புனைவுப்படமாகப் பார்த்தாலும் அப்படத்தில் எம் ஜி ராமச்சந்திரன் என்ற ஆளுமையின் பிம்பமே குற்றம் குறையில்லாத ஆளுமையாகக் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு அப்பாத்திரத்தை ஏற்று நடித்த அரவிந்த்சாமியின் ஈடுபாடும் எம்ஜிஆரின் உடல் மொழியையும் மனவெளிப்பாடுகளையும் கச்சிதமாகத் திரையில் கொண்டுவந்ததும் காரணம் எனலாம். தலைவியாக நடித்த கொங்கனாவின் ஈடுபாடு அவ்வப்போது ஜெ.ஜெயல லிதாவின் இயல்போடும் நடவடிக்கைகளோடும் பொருந்தி நின்ற போதிலும் பல நேரங்களில் விலகியே இருக்கிறது. மும்முனையில் மூன்றாவது முனையாக உருவாக்கப்பட்ட ஆர் எம் வீரப்பன் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ள சமுத்திரக்கனியின் பாத்திரப்பொருத்தமும் ஏற்புடையதாக இருக்கின்றன. திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் கருணாநிதியின் பாத்திரத்தை ஏற்ற நாசர் அவரது குரலை மட்டுமே கொண்டுவந்தால் போதும் என்று நம்பியிருக்கிறார். அவரைத்தாண்டி எம். ஆர். ராதாவாக வரும் ராதாரவி பொருந்திநிற்கிறார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்