துள்ளிவரும் மல்லல் பேரியாறு

 தொடர்ச்சியாக ஒரு புலத்தில் சோதனைகளையும் புத்தாக்கங்களையும் செய்துகொண்டே இருப்பதின் மூலம் ஒருவரது அடையாளம் உருவாகிறது. அந்தப் புலத்தில் மரபுத்தொடர்ச்சியை உருவாக்கி இற்றைப் படுத்திக்கொண்டே இருப்பதின் மூலம் அவரது இருப்பும் இயக்கமும் உறுதிப்படுத்தப்படும்.

நடனத்தேர்ச்சி, அதில் தொடர்ச்சியான கற்றல், கற்பித்தல் வழியாகத் தனது அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் கவிதாலட்சுமி(நார்வே), நடனத்தின் வழியாகத் தமிழ்க்கவிதையைப் பார்வைக்கலையாக - நிகழ்த்துக்கலையாக முன்வைத்துக்கொண்டே இருப்பவர். நீண்ட தமிழ்க் கவிதை மரபில் அவர் தெரிவு செய்யும் கவிதைகள் பெரும்பாலும் அறியப்பட்ட கவிதைகளே.
‘யாதும் ஊரே யாவருங்கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனின் கவிதையை நிகழ்த்துக்கலையாக வெளிப்படுத்தும் இக்காட்சிப்படுத்தலில் கவிதையின் உரிப்பொருளுக்கேற்ப நாடு, இனம், மொழி கடந்து இசையும் கருவிகளும் மனித உடல்களும் அசைவுகளும் பிசைந்து தரப்பட்டுள்ளன. முழுமையும் துள்ளல் என்ற தன்மையில் அமைந்துள்ள காட்சிப்படுத்தலில் ஆர்ப்பரிக்கும் மல்லல் பேரியாற்றின் ஏற்ற இறக்கங்களையும் நீரோட்டத்தைக் காட்சியாகக் காணமுடிகிறது. ஆனால், ஆர்கலித்தோடும் துள்ளல் மட்டுமல்லாமல், அசையாது நகரும் நதியின் சலசலப்பும் அக்கவிதைக்குள் இருக்கிறது. அசைவற்ற நிலைத்தன்மைகளையும் கணியன் பூங்குன்றன் எழுதிக்காட்டியுள்ளார். அதனைக் கவிதாவின் காட்சிப்படுத்தல் தவறவிட்டுள்ளது. ஒரு சமதளத்தில் நீர்வழிப்படூஉம் புனையை அசையச் செய்யும் படிமத்தைக் காணமுடியவில்லை இந்நிகழ்வின் பகுதியாக ஆக்கியிருக்கவேண்டும். அதன் தொடர்ச்சியாகவே பெரியோரை வியத்தலும் இலமோ; சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே என்பது கவனம் பெற்றிருக்கும்.
எழுத்து - வாசிப்பு - புலப்பாட்டு நெறி - வாழ்க்கை மீதான விசாரணை என இயங்கும் கவிதைகள் எப்போதும் தீவிரத் தளத்தினருக்காக உரியனவாகக் கருதப்படுகின்றன. நிகழ்த்துக்கலை சார்ந்து பலதள வெளிப்பாட்டு முறைமைகளைக் கலவையாக்கித் தருவதின் மூலம் அக்கவிதைகளை வெகுமக்கள் தளத்திற்குக் கொண்டுபோக முடியும். அதனைத் தொடர்ந்து செய்துவருபவர் கவிதா. இதற்காக நான் அவரது செயல்பாடுகளைத் தொடர்ச்சியாகக் கவனித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

மொழிபெயர்ப்பும் புதுச்சந்தையும்

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்