பிரமிளா பிரதீபன் கதைகள் -ஒரு வாசிப்புக்குறிப்பு
கடந்த கால் நூற்றாண்டுக்கால இலங்கைத் தமிழ் இலக்கியத்தைப் போரின் பின்னணியிலேயே வாசித்துப் புரிந்து கொண்டிருக்கிறது தமிழக வாசகப்பரப்பு. ஆனால் எனது வாசிப்பின் தொடக்கம் அப்படியானதல்ல. காத்திறமான இலக்கிய வரலாற்றுப்பார்வைக்காகவும் இலக்கியத் திறனாய்வுக்காகவும் இலங்கையின் ஆளுமைகளை வாசித்த தொடக்கம் என்னுடையது. அத்தோடு கே.டானியலின் புனைகதைகளும் ஜீவாவின் மல்லிகையும் எனது தொடக்கநிலை வாசிப்புக்குள் இருந்தன.
1990-களில் அதில் பெருமாற்றம். மொழிச்சிறுபான்மையின்
அச்சமாகவும் இன ஒதுக்கலை உணர்தலின் வெளிப்பாடாகவும் கொண்ட கவிதைகளின் வரவால் இலங்கை
எழுத்தென்பது, ஈழப்போராட்டத்தின் எழுத்துகளாக மாற்றம் பெற்றன. போராட்டங்கள், போர்களாக மாறிய நிலையில் போர்க்கள
எழுத்துகளைப் போர்க்கால எழுத்துகளாக வாசித்துக்கொண்டிருந்தேன். மலையகம், கிழக்கிலங்கைப்
பகுதி எழுத்துகள் தமிழ்நாட்டிற்குள் வந்துசேரும் வழியில்லாத நிலையில் ஈழப்போர்ப் பின்னணியைக் கொண்ட புனைகதைகள் தமிழ்நாட்டின்
பதிப்பகங்களிடம் வரவேற்புப் பெற்றன. ஆனந்தவிகடன் போன்ற பெரும்பத்திரிகைகளிலும் காலச்சுவடு,
உயிர்மை, தீராநதி, அம்ருதா போன்ற இடைநிலை இதழ்களிலும் கிடைத்த தனித்தனிச் சிறுகதைகளோடு,
பெரும்நாவல்களும் வாசிக்கக் கிடைத்தன. அந்த
வாசிப்பு, போர்க்கால முரண்பாடுகள், சிதைவுகள், அவலங்கள் ஆகியனவற்றோடு புலப்பெயர்வின் வலிகளையும் அலைவுகளையும் எனக்குள் கொண்டுவந்து
சேர்த்தது.
இத்தொடர்ச்சியில் இன்னொரு மாற்றமாக
அமைந்தது எனது முதல் இலங்கைப் பயணம். 2016 செப்டம்பரில் 15 நாட்கள் இலங்கைத் தமிழ்ப்
பகுதிகளுக்குள் தங்கியிருந்தேன். அதிகமாக ஒருவாரம் மட்டக்களப்பில் இருந்தேன். அந்தப்
பயணத்தின்போது இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பின் வேறு சில தளங்களை அடையாளப்படுத்தும்
பனுவல்கள் வாசிக்கக் கிடைத்தன. கிழக்கிலங்கையின் இசுலாமியத் தமிழ் எழுத்துகள் அதிகமும்
கவிதைகளாக வெளிப்பட்டிருக்க, மலையகத்தின் பாடுகள் பாடல்களாகவும் கதைகளாகவும் கிடைத்தன.
மலையக
எழுத்தாளர்களின் பெயர்களைச் சொன்ன நண்பர் ஒருவர் இலங்கை அரசின் விருதொன்றிற்கான பட்டியலில்
இடம்பெற்ற ‘கட்டுபொல்’ என்ற பெயரைக் குறிப்பிட்டார். அந்தப் பெயரோடு தான் பிரமிளா பிரதீபன்
என்ற பெயர் அறிமுகமானது.
ஐரோப்பியக் காலனித்துவ நாடுகளான இந்தியா,
இலங்கை, மலேசியா போன்ற நாடுகளின் மலையகத்துத் தோட்டப்பயிராக இருந்தவை தேயிலையும் ரப்பர்
மரங்களும். காலனியாட்சியின் முடிவுக்குப் பின்னர் மலேசியாவிலும் இலங்கையிலும் செம்பனை
மரங்கள் தோட்டப்பயிர்களாக மாறின. செம்பனைகளின் வரவின் பின்னால் மலையக மக்களின் வாழ்க்கையின்
பாடுகளும் மனித உறவுகளும் எத்தகைய துயரங்களைக் கடந்து கொண்டிருக்கின்றன என்பதை விவரித்த
கட்டுபொல் நாவலை ‘பிடிஎப்’ வடிவமாகப் பெற்று வாசித்ததின் தொடர்ச்சியாகவே
பிரமிளாவின் எழுத்துகளைத் தொடர்ச்சியாக வாசிப்பவனாக மாறினேன்.
இணையத்தள இதழ்களின் வளர்ச்சிக்குப்பின்
புலம்பெயர் எழுத்துகளும் இலங்கைத் தமிழ்ப்புனைவுகளும் கிடைப்பது எளிதானது. பிரமிளாவின்
சிறுகதைகளை வெளியிட்ட ஜீவநதி போன்ற அச்சிதழ்களும் எனக்கு இணையம் வழியாகவே கிடைத்த நிலையில்
அவரது சிறுகதைகள் ஒவ்வொன்றையும் அதன் வெளியீட்டுக்காலங்களிலேயே வாசித்திருக்கிறேன்.
இப்போது இத்தொகுப்புக்கு எழுதும் வாசிப்புக்குறிப்புக்காகவும் (Reader’s Note) திரும்பவும்
வாசித்தேன். அவரது சிறுகதைகள் அதிகமான நிகழ்வுகளை எழுதிக்காட்டியன அல்ல; பெரும்பாலும்
ஒற்றை நிகழ்வை முன்வைத்துக் கொண்டு அதில் இடம்பெறும் ஒரு பாத்திரத்தின் மனவோட்டங்களை
எழுதிக்காட்டும் வடிவத்தைத் தெரிவுசெய்பவை.
நிகழ்வை முன்வைப்பதற்காக கதை நிகழும்
இடத்தை விவரிப்பதில் தொடங்கி, அதற்குள் நுழையும் பாத்திரத்தின் அசைவுகள் முன்வைத்துவிட்டு
மனத்தின் குரலை உரையாடல்களாக மாற்றிவிடும் உத்தியை அவரது கதைகளில் வாசிக்கலாம். உரையாடலிலும்
கூட இரண்டு பேர் கொண்ட உரையாடலை அதிகம் பயன்படுத்தாமல் ஒரே பாத்திரம் தனக்குள்ளே கேள்விகளை
எழுப்பிக் கொண்டு பயணிக்கும் முறையில் அமையும் உரையாடல்களாக அமைக்கப்பட்டிருக்கும்.இந்த
உத்திப் பாத்திரங்களின் உளவியல் நிலைப்பாடுகளையும் அலைவுகளையும் எழுதிக்காட்டுவதற்கேற்ற
ஒரு உத்தி. அலைவுகளை எழுதும்போது பிரமிளாவின் பாத்திரங்கள் பெரும்பாலும் பயணங்களை மேற்கொள்கின்றன.
ஓரிட த்தில் அமர்ந்து மனதை மட்டும் அலையவிடும் பாத்திரங்களாக இல்லாமல், மன அலைவுகளை
அசைபோட்டபடிப் பயணிக்கும் பாத்திரங்களாக இருக்கின்றன. ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெருவிற்கோ,
ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கோ பயணிக்கும் அப்பாத்திரங்கள் பெரும்பாலும் கால்நடையாகவே
அதிகம் பயணிக்கின்றன. மலைப்பிரதேசத்திலும் காட்டு வழியிலும் பயணித்துக்கொண்டே நினைவலைகளையும்
பரவவிட்டுக் கொண்டே நகரும் அப்பாத்திரங்கள் வாசிப்பவர்களையும் பயணிகளாக மாற்றிவிடும்
லாவகத்தைக் கொண்டிருக்கின்றன.
எழுதப்படும் வெளியில் என்னவெல்லாம்
இருக்கின்றன என்பதை விவரிக்கும் மொழிக்குப் பதிலாக ஒவ்வொன்றையும் உணர்த்தும் மொழியைக்
கொண்டு வாசகர்களைப் பாத்திரத்தோடு இணைந்து பயணிக்கச் செய்யும் பிரமிளா, தான் முன்வைக்கும்
மையப்பாத்திரங்களின் எண்ணங்களையும் விவாதங்களையும் முடிவுகளையும் வாசிப்பவர்களிடம்
கடத்தி ஏற்கச் செய்யும் உத்தியாக அதனைக் கையாண்டுள்ளார்.
வடிவச் செழுமையும் மொழிப்பயன்பாடும்
கைபிடித்துக்காட்டும் காட்சிச் சித்திரங்களும் கொண்ட பிரமிளாவின் கதைகள் வாசிப்புத்திளைப்பைத்
தரும் வல்லமையுடைய கதைகள் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும். தொகுப்பிலுள்ள ஒவ்வொரு
கதையும் ஒவ்வொரு விதமானவை. வடிவரீதியாகவும் பேசுபொருள் நிலையிலும் முந்திய கதைகளை நினைவூட்டாத
கதைகள். ஜில் பிராட்லி, நீலி போன்ற கதைகள் புதிய சோதனைகளை முயற்சித்துள்ள கதைகள். ஆனால்
எழுதுபவரின் வாழ்க்கைப் பார்வை குறித்த ஓர்மைகொண்ட கதைகள். அவரது கதைகளின் மையப்பாத்திரங்கள்
பெரும்பாலும் பெண்களே. குறிப்பான சூழலில் தன்னை நிறுத்திக்கொண்டு அச்சூழல் தரும் நெருக்கடியிலிருந்து
தங்களை மீட்டுக்கொள்ளும் பெண்களை – உடல் வலிமையை விடவும் புத்திக்கூர்மையைப் பயன்படுத்தும்
பெண்களைக் கதைக்குள் உயிர்ப்பித்துக் காட்டியுள்ளார். இந்த முன்வைப்புகளெல்லாம் எந்தெந்தக்
கதையில் வெளிப்பட்டுள்ளன என்று எடுத்துக்காட்டி விளக்கப்போவதில்லை. அதனை வாசிப்பவர்களுக்கு
விட்டுவிடுகிறேன்.
கருத்துகள்