ஈரோடு தமிழன்பனை நினைத்துக் கொள்கிறேன்
இலக்கிய மாணவனாகக் கல்வித்திட்டத்திலும் பாடத்திட்டத்திலும் கற்கவேண்டிய கவிதைப்போக்குகள், அவற்றில் முதன்மையான கவி ஆளுமைகள், அவர்களின் கருத்துலகம், அதனை வெளிப்படுத்தும் வெளிப்பாட்டு முறை சார்ந்த வடிவங்கள், சொல்முறைமைகள், இலக்கிய வரலாற்றிலும் வாசிப்புத்தளத்திலும் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் எனச் சில அடிப்படைகள் உண்டு. இலக்கியக்கல்வியைத் தேர்வு செய்த நான் , மாணவப்பருவத்திலேயே இந்த அடிப்படைகளைப் புரிந்துகொண்டவனாக இருந்தேன். அதன் தொடர்ச்சியில் இலக்கியங்களைக் குறிப்பாகச் சமகால இலக்கியங்களைக் கற்பிப்பவனாக இருந்தவன் என்பதால் கூடுதலாக மதிப்பீடுகளையும் உருவாக்கிக் கொண்டிருந்தேன்.
ஈரோடு தமிழன்பன் என்ற பெயரையும் கவிதைகளையும் வகுப்பறைக்கல்வியில் அதிகம் அறியவில்லை. ஆனால் சிற்றிதழ் மரபில் நெருக்கம் இருந்ததால், அவரது கவிதைகளையும் அதன் பின் இயங்கும் உரிப்பொருள் கூறுகளையும் கவனித்ததின் மூலம் எனக்குள் ஒரு மதிப்பீடு உருவாகி வந்தது. தமிழின் புதுக்கவிதை மரபில் இருபெரும் எதிர்நிலைகளான எழுத்துமரபிலிருந்து விலகிய வானம்பாடி மரபில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது. வானம்பாடி மரபு என்பது இடதுசாரி மரபு என்று தொடக்கத்தில் புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால் அந்த மரபில் -குறிப்பாக வெளிச்சங்கள் தொகுப்பில் இடம்பெற்ற கவிகளின் முந்திய கவிதைகளை வாசித்தபோது அவர்களின் இடதுசாரி மரபு தொடக்கத்திலிருந்தே இல்லை என்பதை உணரலாம்.
தமிழன்பன் கவிதைகளைப் பின்னோக்கி வாசித்தபோது அவரது இலக்கியப் பார்வைக்குள் இடதுசாரிப்பார்வை உருவாவதற்கு முன்பு திராவிட இயக்கப் பார்வையும் தனித்தமிழ் இயக்கத்தின் தேவையை உணர்ந்த எண்ணங்களும் இருந்ததைப் புரிந்துகொள்ள முடிந்தது. வானம்பாடிக் கவிகள் தமிழ் இலக்கிய மாணவர்களாக இருந்து ஆசிரியர்களாகவும் கவிகளாகவும் ஆன பலரிடமும் இந்தக் கருத்தியல் தொடர்ச்சியைக் காணலாம்.
பாரதிதாசன் மரபுக்கவிகள் எனவும் நவீனச்செவ்வியல் போக்கு எனவும், மறுமலர்ச்சிக்காலச் சமூகப்பார்வைகளை உள்வாங்கியவர்கள் எனவும் அவர்களை அடையாளப்படுத்தலாம். அவர்களுக்குக் கவிதை எழுதுவதற்கான தருணம் என ஒன்று திரண்டு வரவேண்டும் என்பதெல்லாம் இல்லை. ஒரு தலைப்பு கொடுத்தால் தங்களின் புலமையின் மூலம் அது குறித்தொரு கவிதையைப் புனைந்து தரமுடியும். அந்தக் கவிதையைப் பேச்சுத்தொனியில் பெரும் கூட்டத்திடம் வாசித்துக் காட்டிக் கைதட்டல் பெற முடியும். அதற்குத் தேவையான கவிதைத் தொனியாக - உத்தியாக உள்முரணும் வெளிமுரணுமான தன்மையை உருவாக்கிக் காட்டுவார்கள். சொல்லாட்சி, ஓசைக்கூறு, உருவாக்கப்பட்ட படிமம் அல்லது உருவகத்தை எளிமையாக ஆக்குவதின் மூலம் இதனைச் செய்தார்கள். ஈரோடு தமிழன்பனை- அவரது கவிதைகளை இப்படித்தான் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
தமிழன்பனோடு நேரடிப்பழக்கம் இல்லை. வானம்பாடி குழுவைச் சேர்ந்த பாலாவின் வழியாக அவரது அறிமுகம் உண்டு என்றாலும் விரிவான உரையாடல்கள் குறைவு. மதுரையிலும் புதுவையில் அவர் பேசிய பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன். நீண்டகாலம் தமிழ்க்கவிதைக்குள் ஒரு தனது அடையாளத்தைத் தக்கவைத்தவர்; சாகித்ய அகாடெமியின் விருதையும் தமிழக அரசு தரும் விருதுகளையும் தனியார் அமைப்புகள் தரும் விருதுகளையும் பெற்ற ஆளுமையாக வலம்வந்த கவியின் மறைவு நினைக்கப்பட வேண்டிய ஒன்று.
மூன்று கவிதைகள் வாசிக்கத்தருகிறேன்( நன்றி. எழுத்து.காம்.)
1.ஒரு சிறகைத் தலையில் சூடி
ஒரு சிறகைத் தலையில் சூடி
அரசரானார்கள் நம் முன்னோர்கள்
நாமோ
தங்கத்தை மகுடமாய் சூடி
அதற்கு அடிமையானோம். ...!
2.காம்புக்கு வேறென்ன கவுரவம் வேண்டும்
காம்புக்கு வேறென்ன
கவுரவம் வேண்டும்
தாங்கிக் கொண்டிருக்க
ஒரு ரோஜாப்பூ இருந்தால் போதாதா?
3.மானத்தை என்கிருந்து பூட்டுவது
மானத்தை என்கிருந்து பூட்டுவது ?
உள்ளே இருந்தா?
வெளியே இருந்தா ?
என்று கேட்டான் மாணவன்
ஆசான் சொன்னார்
பூட்டுவது நீ என்று
நினைத்துக் கொண்டு
எங்கிருந்து பூட்டினாலும் பயனில்லை.

கருத்துகள்