எஸ்.ரா.வின் ஞாபகக்கல்: நல்லதொரு உருவகக்கதை
எஸ்.ராமகிருஷ்ணனின் ஞாபகக்கல், பெண்ணென்னும் பொதுப்பெயருக்குரியவளாக இருக்கும் வரை அவளுக்குள்ளிருக்கும் விருப்பங்கள், ஆசைகள், கனவுகள் எல்லாம் குடும்பத்தின் பாத்திரம் ஒன்றைத் தாங்கும்போது தொலைந்துபோகும் மாயத்தை உருவகமாக முன்வைத்துள்ளது. ஆண் முதன்மைக்குடும்ப அமைப்பில் பெண்களின் விருப்பங்களைத் தொலைத்துக்கட்டும் பாத்திரங்களாக மனைவி, அம்மா போன்ற பாத்திரங்கள் இருப்பதைக் கதை விவரிப்பின் மூலம் உணர்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். குறிப்பாக இந்தியக் குடும்ப அமைப்பின் மீது நேரடியான விமரிசனத்தைக் கதை முன்வைக்கிறது.
தனக்கு மனைவியாக வரப்போகிற பெண்ணின் முன்னிருப்பை அறிந்துகொள்வதில் ஆர்வமற்ற கணவனால் நல்ல மனைவியாக அங்கீகாரம் கிடைத்தால் போதும் என்பதில் ஆர்வமாகி விடுகிறார்கள். அல்லது அப்படி ஆகும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதனால் தங்களின் இளமைக்கால விருப்பங்களையும் ஆசைகளையும் மறைவாகச் செய்து பார்த்துக்கொள்ளும் ஒன்றாகக் கருதிக்கொண்டு ரகசியம் பேணத் தொடங்குகிறார்கள் . அத்தகைய செயலில் ஈடுபடுவது கணவனுக்குத் தெரியக்கூடாது என்ற நினைப்பில் அவையெல்லாம் ரகசியமாக மாறிவிடுகின்றன. நல்ல மனைவி பாத்திரம், ‘நல்ல தாய்’ என்ற நிலைக்கு நகரும்போது சொந்த விருப்பங்கள் தொலைந்துபோவதைப் பற்றிய நினைப்புகள் கூடத் தோன்றாமல் போய்விடும் வாய்ப்புகளே இங்கு அதிகம்.
திருமணத்திற்கு முன்பு அறிவியல் ஆர்வத்தோடு, புதியன செய்து பார்க்கும் விஞ்ஞானியாக ஆக நினைத்த ஒரு பெண் தன்னையே பறக்கும் கல்லாக உருவகித்துக்கொண்டு எழுதி வைத்த குறிப்புகளை வாசிக்க நேரும் மகனின் விவரிப்பாகச் சொல்லப்படும் கதைக்குள் இந்தியத்தந்தைமையும் தாய்மையும் எதிரும் புதிருமாக நிறுத்தப்படுகின்றன. தனது மனைவியின் விருப்பங்களையும் செயல்பாடுகளையும் தெரிந்திருந்த நிலையிலும் அவளுக்கான வெளிகளையும் வாய்ப்புகளையும் உருவாக்கித்தராமல் கைவிட்ட அப்பாவின் மீது கோபத்தைக் காட்டவில்லை கதைசொல்லியான மகன். ஆனால் அவர் செய்திருக்க வேண்டியன என்னென்ன? என்ற புரிதலைத் தனது தேடுதல் மூலம் காட்டுகிறான் . அம்மாவுக்கு உதவிய வின்செண்ட் பாதிரியார், அவர் வழியாக அறியவரும் அம்மாவின் போட்டோகிராபி ஆர்வம் போன்றனவற்றைத் தேடிப்பயணிக்கிறான். தனக்கெனச் செய்து பார்க்க ஒரு தொழில் இருந்ததைக் கைவிட்ட நிலையில், தன்னை ஒரு ‘விஞ்ஞானி’யாகக் கருதிக்கொண்டு கல்லைப் பறக்கச்செய்யும் சோதனைகளைச் செய்து பார்த்த இன்னொரு பக்கத்தை மகன் அறிகிறான். அதையும் கூட அவனே நேரடியாக அறியவில்லை. அவனது தமக்கையின் வரவுதான் அறியத்தருகிறது.
தனது அம்மாவிற்குக் கிடைத்த மனைவி, தாய் போன்ற பாத்திரங்கள் அவளின் ஒருபக்கத்தை மட்டுமே காட்டியிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அவளின் ஆர்வங்களும் விருப்பங்களுமாக இருந்த -தொலைந்துபோன இன்னொரு பக்கத்தைத் தேடிச்செல்கிறான். போட்டோகிராபராக வேலை செய்திருந்த அம்மாவிற்கு விஞ்ஞானியாகும் விருப்பம் இருந்துள்ளது என்பதை அறிகின்றான். இந்தப் பக்கத்தை மூடி மறைத்து வைக்கும் நெருக்கடி கொடுத்தது அவனது அப்பாவின் கட்டுப்பாடுகளே என்பதும் புரிகிறது. எல்லா நேரமும் அடுப்படியே அவளின் வெளியாக இருக்கும்படி பார்த்துக்கொண்ட கணவன் என்ற பாத்திரம் உருவாக்கும் நெருக்கடி அது.
அறிவியல் பார்வைக்கும் அறிவியல் புனைவுக்கும் முதன்மையளிக்கும் அரூ இணைய இதழில் வந்துள்ள இந்தக் கதைக்குள் வெளிப்படும் ’விஞ்ஞானி விருப்பம்’ என்பதும் கூட ஒரு உருவகம் தான். அதைப் போலவே கலை ஆர்வம், சேவைகள், அலுவலக ஈடுபாடுகள் என பொதுவெளி நுழைவுகள் மறுக்கப்பட்டு அடுப்படியே பெண்களின் வாழ்வெளியாக ஆக்கப்படுவதைக் கதையின் தொடக்கம் விவரித்துள்ளது. வாசிப்பின்பம் அளிக்கும் நல்லதொரு கதை
-------------------------------------------------------
https://aroo.space/2022/10/09/nyabaga-kal/
கருத்துகள்