ஜெயமோகனுக்கு வாழ்த்து
தமிழகத்தின் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆளுமைகளுக்குத் தங்கள் பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டங்களை வழங்குகின்றன. பெரும்பாலும் தொழில் அதிபர்கள், திரைத்துறைப் பிரபலங்களுக்கு வழங்கும் அத்தகைய பட்டங்களின் நோக்கம் அந்நிறுவனங்களின் வணிக நோக்கத்தோடு தொடர்புடையன.
இப்போது தமிழகத்தின் இன்னொரு தனியார் பல்கலைக்கழகமான தட்சசீலா பல்கலைக்கழகம் எழுத்தாளர் ஜெயமோகனுக்குத் தனது கௌரவ முனைவர் பட்டத்தை வழங்கவுள்ளது. கௌரவ முனைவர் பட்டத்துக்கு முழுத்தகுதியும் உடைய எழுத்தாளர்களின் ஜெயமோகன் முன்வரிசையில் இருப்பவர். அவரது சிறுகதைகளை இதழ்களில் வரும்போதே வாசித்திருக்கிறேன்; சிலவற்றைக்குறித்து எழுதவும் செய்துள்ளேன். நாவல்களில் பெரும்பாலானவற்றை வாசித்திருக்கிறேன். சிலப்பதிகாரத்தை மறு ஆக்கம் செய்த கொற்றவை குறித்த விரிவான கட்டுரை எனது வலைப்பக்கத்தில் உள்ளது. அவரது இலக்கியப்பார்வையோடு முழுமையான உடன்பாடும் இருந்தததில்லை. மாறுபட்டும் விவாதித்துள்ளோம்.
தமிழக அரசின் பல்கலைக்கழகங்களே நவீனத்துவத்தை உள்வாங்கிய எழுத்தாளர்களுக்கு இத்தகைய முனைவர் பட்டங்களை வழங்கி அங்கீகரிக்க வேண்டும். அத்தகைய முயற்சிக்காகச் சிலவற்றை பணியாற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் சிலரோடு பேசியிருக்கிறேன். அந்த முயற்சிகள் கைகூடவில்லை. அதேநேரம் பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கருத்தரங்குகள், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் பங்கேற்றுச் சிறப்பான இலக்கிய உரைகளை வழங்கியவர் ஜெயமோகன்.விருதளிக்கும் தட்சசீல பல்கலைக்கழகத்திற்குப் பாராட்டும் ஜெயமோகனுக்கு வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நவீனத் தமிழ் எழுத்துகளும் கல்விப்புலத்துறைகளும்
தட்சசீலா பல்கலைக்கழகம் எழுத்தாளர் தனக்குக் கௌரவ முனைவர் பட்டம் வழங்கவுள்ளது தொடர்பில் விரிவான கட்டுரையொன்றை எழுதியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். கல்விப்புலத்து இலக்கியத்துறையினர், நவீனத் தமிழ் இலக்கியத்தோடு கொண்டுள்ள உறவுநிலை குறித்து விரிவாகப் பேசியுள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தமிழியல் துறையில் பணியாற்றிய என்னையும் குறிப்பிட்டு எழுதியுள்ள அக்கட்டுரையின் மையநோக்கத்தில் எந்தவிதமான மறுப்பில் இல்லை. ஒருவிதத்தில் எம் துறை மற்ற துறைகளிலிருந்து தொடக்கத்திலிருந்தே மற்ற பல்கலைக்கழகத் தமிழியலிருந்து விலகிய ஒன்றாக நினைக்கிறேன்.
அவரது கருத்துகள் முழுவதும் உடன்படத்தக்க கருத்துகளே. முதல் துணைவேந்தர் வசந்திதேவி தொடங்கி நான் ஓய்வுபெற்றபோது இருந்த முனைவர் பாஸ்கரன் வரை துறையின் தலைவர்களின் முன்மொழிவுகளை ஏற்றுக் கொண்டனர் என்றே நினைக்கிறேன். கௌரவ முனைவர் பட்டம் வழங்கும் முயற்சிகள் கைகூடாமல் போனதைத் தவிர.
தொடர்ச்சியாக எனது ஈடுபாடும் ஆர்வமும் நவீன இலக்கியத்தோடும் கல்விப்புலம் தாண்டிய கருத்தரங்குகள், எழுத்தாளர் சந்திப்புகள், இலக்கியக் கூட்டங்கள், படைப்பிலக்கியப்பட்டறைகள் எனக் கவனம் செலுத்தியதால் மரபான தமிழ்க் கல்வியாளர்களிடமும் கல்வி நிறுவனங்களிடமும் போதிய அறிமுகமும் ஏற்பும் இல்லையென்றே சொல்வேன். ஆனால் நவீன இலக்கியத்தைப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் - பாடத்திட்டங்களுக்குள் -வகுப்பறைக்குள் கொண்டுபோவதில் தொடர்ந்து விடாப்பிடியாக நின்று செய்ததை நினைத்து மகிழ்ச்சியே அடைகிறேன். துறையில் மற்ற ஆசிரியர்களும் ஏற்று உடன் பணியாற்றினர்.

கருத்துகள்